Thursday, 14 July 2022

இலங்கையில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படுமா?

 அரசியலமைப்பு நெருக்கடி: அரசியலில் ஏற்படும் முதன்மையான நெருக்கடிகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தினிற்குள் அல்லது கடந்த கால முன்மாதிரிகளை வைத்துக் கொண்டோ தெளிவான தீர்வு கொண்டுவர முடியாத நிலையை அரசியலமைப்பு நெருக்கடி என்பார்கள். அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படும் போது அரசு செயற்பட முடியாத நிலை உருவாகும்.

அரசியலமைப்பு நெருக்கடி உருவாகும் சூழல்கள்:

1, ஒரு நெருக்கடிக்கான தீர்வு அரசியலமைப்பில் இல்லாதபோது

2. அரசியலமைப்பின் வாசகங்களுக்கான வியாக்கியாங்களில் முரண்பாடு நீதித்துறையில் ஏற்படும்போது.

3. அரசியலமைப்பில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்படும்போது.

4. அரச நிறுவனங்கள் செயற்பட முடியாத போது. உதாரணமாக அரசமைப்பின் படி தேர்தல் நடத்த வேண்டிய நேரத்தில் அதை நடத்த முடியாத நிலை ஏற்படுதல்.

அரசியலமைப்பு நெருக்கடிக்கான உதாரணங்கள்

1. உலக அரசியல் வரலாற்றில் பல அரசியலமைப்பு நெருக்கடிகள் ஏற்பட்டதுண்டு. தென் ஆபிரிக்காவில் கறுப்பின மக்கள் வாக்களிக்க முடியாமல் அதன் அரசியலமைப்பு தடை செய்திருந்தது. கலப்பின மக்களும் வாக்களிக்க முடியாது என 1950இல் சட்டம் மாற்றப்பட்டதை உச்சநீதி மன்றம் நிராகரித்தது. அதை அரசு ஏற்க மறுத்த போது அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டது.

2. 1975இல் ஒஸ்ரேலியாவின் தொழிற்கட்சி தலைமை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டபோது ஆளுநர் நாயகம் தாராண்மைவாதக் கட்சியைச் சேர்ந்தவரை தலைமை அமைச்சராக நியமித்தார். அதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிளர்ந்த போது அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டது.

3. ஐக்கிய அமெரிக்காவில் நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக குடியரசுத் தலைவர் செயற்படும் போது அரசியலமைப்பு நெருக்கடி அடிக்கடி ஏற்படுவது உண்டு.  

4. 2007-ம் ஆண்டு உக்ரேனிய நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் கலைத்தமையை நாடாளுமன்றம் ஏற்க மறுத்த போது பிணக்கை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்காமல் விட்ட போது அரசியலமைப்பு நெருக்கடி ஏற்ப்பட்டது.

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல்

குடியரசுத் தலைவராக 2019இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபாய ராஜபக்ச 2022 ஜூலை 9-ம் திகதி நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து நாட்டில் இருந்து வெளியேறி விட்டார். தனது வாயால் தான் பதவி விலகுவதாக அவர் பகிரங்கமாக அறிவிக்கவில்லை. அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளிப்பார் என முதலில் அறிவித்த இலங்கை நாடாளுமன்ற அவைத்தலைவர் (சபாநாயகர்) மஹிந்த யாப்பா அபேவர்த்தன பின்னர் அவர் கடிதத்தில் கையொப்பமிட்டார் என்றார். ஆனால் 2022 ஜூலை 14ம் திகதை காலை 10 மணியளவில் வெளிவந்த செய்திகளின் படி குடியரசுத் தலைவர் அவைத்தலைவரிடம் பதவி விலகல் கடிதத்தை கையளிக்கவில்லை. பொதுவாக குடியரசுத் தலைவர் வெளிநாடு செல்லும் போது தலைமை அமைச்சர் தற்காலிக குடியரசுத் தலைவராக பதவி ஏற்கலாம். குடியரசுத் தலைவர் வெளிநாடு சென்றார் என்பது கூடிய முறைப்படி அறிவிக்காத நிலையில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவசரகாலச் சட்டத்தை அறிவித்தார். பின்னர் குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் அவரது ஐக்கிய மக்கள் சக்திக் கட்சியின் இன்னொரு உறுப்பினரான பீல்ட் மாஷல் சரத் பொன்சேக்காவும் ரணிலின் பதவி ஏற்றல் செல்லுபடியற்றது என்கின்றனர். மக்கள் விடுதலை முன்னணியின் அனுர குமார திசாநாயக்கவும் ரணிலை குடியரசுத் தலைவராக ஏற்கவில்லை. இவர்கள் பாதுகாப்புத்துறையினர், காவற்துறையினர் உட்பட அரசைச் சேர்ந்தவரகள் ரணிலின் உத்தரவிற்கு இணங்க செயற்படக்கூடாது எனப் பகிரங்க அறிக்கை விட்டுள்ளனர். கோத்தபாய ராஜபக்சவின் ஆளும் மக்கள் முன்னணியின் கணிசமான நாடாளுமன்ற உறுப்பினரகள் ரணிலை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் இலங்கை சுதந்திரக் கட்சி (மைத்திரிபால சிரிசேன), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவையும் ரணிலுக்கு ஆதரவாக இல்லை. இத்தனை பிரச்சனைகளினதும் நடுவண் புள்ளியாகிய மக்கள் எழுச்சியை செய்தவர்களில் முதன்மையானவர்களாகிய அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் அமைப்பு ரணில் பதவி ஏற்பை கடுமையாக எதிர்த்ததுடன் அந்த அமைப்பும் மற்ற கிளர்ச்சிக்காரர்களும் தலைமை அமைச்சரின் அரச வதிவிடமான அலரி மாளிகையை தங்கள் வசமாக்கியுள்ளனர்.

கோத்தபாய ராஜபக்ச தான் இருக்கும் போது உள்ள குழப்பத்திலும் பார்க்க தான் போன பின்னால் அதிக குழப்பம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்பட்டிருக்கலாம். தனது பதவிலகல் கடிதத்தை சமர்ப்பிக்காமல் விட்டால் தான் தனது பதவிக் காலம் முடியமுன்னர் நாடு திரும்பி மீண்டும் பதவி ஏற்கலாம் என்ற எண்ணத்துடனும் அவர் செயற்ப்பட்டிருக்கலாம். 

2022 ஜூலை 14-ம் திகதி பிற்பகல் மூன்று மணிக்கு (பிரித்தானிய நேரம்) கோத்தபாய மின்னஞ்சல் மூலம் தன் பதவி விலகல் கடிதத்தை அனுப்பியதாக செய்தி வந்தது. அங்கும் ஒரு குழப்பம். மின்னஞ்சல் மூலமான பதவி விலகல் கடிதம் அரசியலமைப்பில் இல்லை. அதற்கான முன்மாதிரியும் இல்லை. அவர் வெளிநாட்டில் இருந்தால் அந்த நாட்டில் உள்ள இலங்கையின் தூதுவரகத்தில் பதவி விலகல் கடிதத்தை வழங்குவது ஏற்புடையதாக இருக்கலாம். பிரித்தானிய நேரம் 16:47இற்கு பிரித்தானிய கார்டியன் பத்திரிகையின் இணையச் செய்தியின் படி சிங்கப்பூரில் இருந்து பதவி விலகல் கடிதம் விமான மூலம் அவைத் தலைவருக்கு போய்ச் சேர்ந்ததாகவும் அதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்த பின்னர் ஜூலை 15-ம் திகதி அவைத்தலைவர் பதவி விலகல் பற்றி அறிவிப்பார் என அறியக் கூடியதாக உள்ளது. 

அரசியலமைப்பு நெருக்கடி மட்டுமல்ல இரத்தக்களரி

கோத்தபாய ராஜபக்ச குடியரசுத் தலைவராக இருக்கும் வரை அவருக்கான அரசுறவியல் கவசம் (Diplomatic Immunity) பல நாடுகளில் கிடைக்கும். அதனால் அவர் தனக்கும் தனது உடன்பிறப்புக்கள் உள்ளிட்ட குடும்பத்தினர்க்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் வரை பதவி விலகல் கடிதம் சம்ர்ப்பிக்க மாட்டர் என்றே தோன்றுகின்றது. நாடாளுமன்ற அவைத்தலைவர் அபேவர்த்தன பதில் குடியரசுத் தலைவர் பதவி ஏற்ற நிலையில் மக்களால் தெரிந்து எடுக்கப்பட்ட அதிபர் பதவி விலகியுள்ளார் என்பதற்கான கடிதம் இல்லாத சூழலில் அவர் பதவி விலகியுள்ளார் என்பதற்கான சட்ட ஆதாரங்களைத் தான் தேடுவதாக அறிவித்துள்ளார். பதவி விலகல் கடிதம் இல்லாமல் அவர் பதவி விலகினார் என்பதை அபேகுணவர்த்தனவோ அல்லது சட்ட மா அதிபரோ உறுதிப்படுத்தாவிடில் இலங்கையில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட வாய்ப்புண்டு. அதை “போராட்டம்” (அரகலய) என்னும் பெயரில் கிளர்ச்சி செய்பவர்களை மேலும் சினப்படுத்தலாம். வெளிநாடுகளின் ஆதரவுடன் ரணிலை பதவியில் தக்க வைக்க படையினர் முயன்றால் இரத்தக் களரி ஏற்பட வாய்ப்புண்டு.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...