Tuesday, 10 May 2022

இரசிய நாணயம் ரூபிளின் பெறுமதி உயர்ந்தது எப்படி?

  


2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியப் படைகளை விளடிமீர் புட்டீன் உக்ரேனுக்கு அனுப்பியதால் மேற்கு நாடுகள் இரசியாவிற்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. அதனால் இரசிய நாணயமான ரூபிளின் பெறுமதி நாற்பது விழுக்காட்டால வீழ்ச்சியடைந்து 2022 மார்ச் 7-ம் திகதி ஒரு அமெரிக்க டொலருக்கு 139 ரூபிள் என ஆனது. பின்னர் ரூபிளின் பெறுமதி முன்பு இருந்த நிலைக்கு மீளவும் உயர்ந்து 2022 மார்ச் மாதம் உலகில் சிறந்த பெறுமதி வளர்ச்சி அடைந்த நாணயமாக அடையாளமிடப்பட்டது.

இறந்த பூனையா பதுங்கிய புலியா

நிதிச் சந்தையில் ஒரு நாணயத்தின் அல்லது பங்கின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து பின்னர் ஒரு குறுகிய காலத்திற்கு மீளவும் சற்று உயர்ந்து அதைத் தொடர்ந்தும் வீழ்ச்சியடைவதுண்டு. அந்த இடைக்கால மீள் உயர்ச்சியை இறந்த பூனையில் விழிப்பு என்பர். ஆனால் இரசிய ரூபிள் புலி போலச் சற்று பதுங்கிப் பாய்ந்துள்ளது. 2022 மே மாதம் 9-ம் திகதி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் இரண்டாம் உலகப் போர் வெற்றி நினைவு நாளில் உரையாற்றுகையில் ரூபிளின் பெறுமதி எழுச்சியடைந்தது. அமெரிகாவின் Wall Street Journal 2022 மார்ச்சில் இந்த ஆண்டு ரூபிளின் பெறுமதி தாழ்ந்த நிலையில் இருக்கும் என எதிர்வு கூறியிருந்தது. இரசியப் பொருளாதார நிபுணர்கள் பிரித்தானிய Economist சஞ்சிகையின் BigMac Index முறைமையை ஆதரமாக வைத்து ஒரு அமெரிக்க டொலர் 23 இரசிய டொலருக்கு ஈடானது என்கின்றார். 2022 மே மாதம் 68 ரூபிளாக இருக்கின்றது. அதன் படி ரூபிளின் பெறுமது உண்மையான பெறுமதியிலும் பார்க்க குறைந்த மதிப்பில் உள்ளது. ரூபிளின் பெறுமதி தாக்குப் பிடிப்பதால் வட்டி விழுக்காடு 14% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

இரசிய எரிவாயுவிற்கு உடனடி மாற்றீடு இல்லை

இரசியா மீது விதிக்கப் பட்ட பொருளாதாரத் தடைகளில் பெரும்பான்மையானவை இரசியா டொலர், யூரோ போன்ற நாணயங்கள் பெற்முடியாமல் இருக்கவே செய்யப்பட்டிருந்தன. இரசியாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையால் உலகச் சந்தையில் எரிபொருள் விலை பெரிய அளவில் அதிகரித்தது. உலகின் முன்னணி எரிபொருள் கொள்வனவு நாடுகளான சீனாவும் இந்தியாவும் இரசியாவில் இருந்து தமது எரிபொருள் கொள்வனவை அதிகரித்தன. இந்த இரண்டு காரணிகளாலும் இரசியாவின் எரிபொருள் ஏற்றுமதி வருமானம் அதிகரித்தது. அதன் மூலம் இரசியாவிற்கு தேவையான வெளிநாட்டுச் செலவாணி தங்கு தடையின்றிக் கிடைத்தது. பல ஐரோப்பிய நாடுகள் இரசியாவில் இருந்து எரிவாயுவை தொடர்ந்தும் வாங்கிக் கொண்டே இருக்கின்றன. பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் எரிபொருள் கையிருப்பை அதிகரிக்க வழமையிலும் பார்க்க அதிக எரிபொருளை வாங்கின.

ரூபிளில் மட்டும் எரிவாயு வங்கலாம்

ரூபிளின் பெறுமதியை தக்க வைக்க இரசியா எடுத்த அதிரடி நடவடிக்கைகளில் முக்கியமானது. இரசியாவில் இருந்து வாங்கும் எரிபொருளுக்கு இரசிய ரூபிளில் கொடுப்பனவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டமையே. அதற்கு முன்னர் பெரும்பாலும் அக்கொடுப்பனவுகள் யூரோவிலும் டொலரிலும் செய்யப்பட்டன. இந்த உத்தரவால் எரிபொருள் இறக்குமதியாளர்கள் டொலர், யூரோ போன்றவற்றை விற்று ரூபிள் வாங்க வேண்டிய நிலை உருவானது. ரூபிளை பலர் பெருமளவில் வாங்கியதால் அதன் பெறுமதி அதிகரித்தது. 2018-ம் ஆண்டு அப்போதிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜெர்மனி தன் எரிபொருள் தேவைக்கு இரசியாவில் பெருமளவு தங்கியிருப்பது அதன் பாதுகாப்பிற்கு பாதகமானது எனச் சொன்ன போது ஜெர்மனியர் சிரித்தார்கள்.

வட்டி அதிகரிப்பு

எந்த ஒரு நாடும் தன் நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடியாமல் இருக்க அதன் வட்டி விழுக்காட்டை அதிகரிக்கும். அதை இரசியா தாராளமாகச் செய்தது. இரசிய வட்டி விழுக்காடு 20ஆக அதிகரிக்கப்பட்டது. அது ரூபிளை கையிருப்பில் வைத்திருப்பவர்கள் அதை விற்பனை செய்யாமல் தடுத்தது. அதனால் ரூபிளின் பெறுமதி மீள் எழுச்சியடைந்தது.

அதிரடியான உத்தரவு

வெளிநாடுகளில் இருந்து வருமானம் ஈட்டும் இரசியர்கள் தங்கள் வருவாயில் எண்பது விழுக்காட்டை ரூபிளுக்கு மாற்ற வேண்டும் என்ற உத்தரவு இரசியாவில் பிறப்பிக்கப்பட்டது. இதனால் பன்னாட்டு வர்த்தகம் புரியும் இரசிய நிறுவனங்கள் தங்கள் டொலர் மற்றும் யூரோ போன்ற நாணயங்களை விற்று ரூபிளை வாங்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டது. இதனால் ரூபிளின் பெறுமதி அதிரித்தது.

தடுக்கப்பட்ட விற்பனை

பல வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் இரசியாவின் அரச கடன் முறிகளிலும் இரசியப் பங்குச் சந்தைகளிலும் முதலீடு செய்திருந்தனர். அவர்களின் கடன்முறிகளையும் பங்குகளையும் விற்பனை செய்வதை இரசியா தடை செய்தது. இதனால் அவர்கள் ரூபிளில் இருக்கும் சொத்துக்களை விற்று டொலை வாங்குவது தடுக்கப்பட்டது. உக்ரேன் போர் தொடங்கியவுடன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தம் முதலீட்டை விற்பனை செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அது நடக்காமல் தடுத்தமை ரூபிளின் வீழ்ச்சியைத் தடுத்தது.

சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை

என்ற வள்ளுவன் வக்கு மகளிருக்கு மட்டுமல்ல நாணயத்திற்கும் பொருந்தும். இரசியாவின் நாணயத்தின் பெறுமதி அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியால் பாதுகாக்கப்படும் போதே து நிறைவானதும் நிரந்தரமானதுமான பெறுமதியாக இருக்கும். இரசிய அரசு எடுத்த பல நடவடிக்கைகள் செயற்கையாக ரூபிளிற்கு உலகச் சந்தையில் வாங்கப்படுவதை அதிகரித்தும் விற்கப்படுவதை குறைப்பதாகவும் உள்ளன. உக்ரேன் போருக்கு முடிவு கொண்டு வந்து இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் விரைவில் நீக்கப்பட்டால் இரசிய நாணயத்தின் பெறுமதி தொடர்ந்து நிலைத்து நிற்கும். பொருளாதாரத் தடை தொடர்ந்தால் இரசியா ஒரு நாளுக்கு $900மில்லியன்களைத் தொடர்ந்து செலவு செய்து கொண்டிருந்தால் இரசியப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். ஐரோப்பிய நாடுகள் தமது எரிபொருள் தேவையை வேறு நாடுகளில் இருந்து பெற்ற்றுக் கொள்ளும். உலகெங்கும் எரிபொருள் உற்பத்தி அதிகரிக்கப்படுவதுடன் மாற்று எரிபொருள்களும் உருவாக்கப்படும். அதனால் ரூபிளின் பெறுமதியை செயற்கையாக உயர்ந்த நிலையில் பேண முடியாமல் போவதுடன் ஒரு கட்டத்தில் ரூபிளின் மதிப்பு பெருமளவு வீழ்ச்சியடைந்து இரசியாவில் பணவீக்கம் அதிகரிக்கலாம். 14% வட்டியும் வெளி நாட்டு முதலீட்டு தடையும் உள்நாட்டில் முதலீட்டைக் குறைக்கும். 14% வட்டி தொடர்ந்து பேண முடியாது.ச் அது பொருளாதார வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. இரசியாவில் இளையோர் தொகை மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளதுடன் பல இளையோர் நாட்டை விட்டு வெளியேறுகின்றார்கள். அது இரசியப் பொருளாதாரத்திற்கு உகந்தது அல்ல. இரசியா தனது பொருளாதாரத்தை உறுதியான வளர்ச்சி நிலையில் வைத்திருக்க வேண்டும். 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...