அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன் தைவான் சீனாவின் ஒரு பகுதி அல்ல என்றார். இது அமெரிக்காவின் நிலைப்பாடல்ல என்றார் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலைவன். அமெரிக்கா தைவான் தொடர்பாக வெளியில் சொல்வது வேறு அதன் செயற்பாடு வேறு. சீன ஆட்சியாளர்கள் தைவான் சீனாவின் ஒரு மாகாணம் என தொடர்ச்சியாக சொல்லி வருகின்றனர். ஆனால் தைவான் எல்லா வகையிலும் ஒரு தனிநாடாகவே செயற்படுகின்றது.
சீனாவின் ஐநா உறுப்புரிமை தைவானிடம்
1945
ஒக்டோபரில் ஐக்கியநாடுகள் சபை உருவான போது சீனாவும் அதில் ஓர் உறுப்பு நாடாகியது. அது
பொதுவுடமை சீனா உருவாக முன்னர் இருந்த மக்கள் சீனக் குடியரசாகும். அதன் ஒரு பகுதியாக
தைவானும் இருந்தது. 1949 ஒக்டோபரில் பொதுவுடமைவாதிகள் மாவோ தலைமையில் மக்கள் சீனக்
குடியரசை உருவாக்கிய போது தைவான் ஒரு தனிநாடாகியது. அமெரிக்கா தைவானில் ஆட்சியில் இருப்பவர்கள்
தான் உண்மையான சீன ஆட்சியாளர்கள் என்றும் தைவான் அரசுதான் சீனக் குடியரசு என்றும் அந்தக்
குடியரசு தான் ஐக்கிய நாடுகள் சபையில் முழுச் சீனாவிற்குமான உறுப்புரிமை உடையது என்றும்
அடம் பிடித்தது. 1943-ம் ஆண்டு எகிப்தில் நடந்த முதலாவது கெய்ரோ மாநாட்டில் உலகப் போரின்
பின்னரான ஆசிய அரசுகள் பற்றி முடிவு செய்த போது ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்து
விடுபட்ட தைவான சீனக் குடியரசின் ஒரு பகுதியாக ஒத்துக்கொள்ளப்பட்டது. அது பொதுவுடமைப்
புரட்சிக்கு முன்னரான நிலைப்பாடு.
கேந்திரோபாயத் தெளிவின்மையா
(Strategic Ambiguity) கேந்திரோபாய பொய்யா?
தைவான்
தொடர்பான நிலைப்பாட்டை “கேந்திரோபாயத் தெளிவின்மை” (Strategic Ambiguity) என்னும் பெயரிட்டு
குழப்பமான ஒன்றாக அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் முன்னெடுக்கின்றார்கள். 1972-ம் ஆண்டு
அமெரிக்க குடியரசுத் தலைவர் ரிச்சர்ட் நிக்சனும் சீனத் தலைவர் மாவோ சே துங்கும் சந்திக்கும்
வரை தைவான் சீனக் குடியரசு எனவும் சீனா மக்கள் சீனக் குடியரசு எனவும் அழைக்கப்பட்டன.
1979இல் சீன அமெரிக்க உறவைப் புதுப்பித்தல் (Détente)செய்த போது சீனாவிற்கு அமெரிக்கா
காட்டிய இரட்டை முகத்தில் இருந்து கேந்திரோபாய தெளிவின்மை செயற்படுத்தப்படுகின்றது.
அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன் தைவான் சீனாவின் ஒரு பகுதி
என்பதை விருப்பமின்றி ஒத்துக் கொண்டார். நிக்சன் எதை ஒத்துக் கொண்டார் என்பதற்கும்
அப்போதைய சீன ஆட்சியாளர்கள் அதை எப்படி புரிந்து கொண்டார் என்பதற்கும் வித்தியாசம்
உண்டு என 2000-ம் ஆண்டிலிருந்து அமெரிக்கர் சொல்லி வருகின்றார்கள். நிக்சனும் மாவோவும்
பேச்சு வார்த்தை நத்திக் கொண்டிருக்கையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தைவான் பாதுகாப்புச்
சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதுவரை தைவானை சீனக் குடியரசு என அழைத்து வந்த அமெரிக்க
தைவான் பாதுகாப்புச் சட்டத்தில் “தைவானை ஆளும் அதிகாரப்பட்டயங்கள் (Governing Authorities
of Taiwan) எனக் குறிப்பிட்டது. 1979இல் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக சீனாவை தன்
நட்பு நாடாக்குவதற்காக அமெரிக்கா சொன்ன பொய் “ஒரே சீனா”. அந்த ஒரே சீனாவில் தைவான்
இருக்கின்றதா இல்லையா என்ற கேள்விக்கான பதில்தான் “கேந்திரோபாயத் தெளிவின்மை”
இரு விமானம் தாங்கி கப்பல்களுக்கு அஞ்சிய
சீனா!
பொதுவுடமைச்(?)
சீனாவின் சிற்பியாகிய மாவோ சே துங்கின் குறிக்கோள் ஹொங் கொங்கும் தைவானும் சீனாவின்
பிரிக்க முடியாத பகுதிகள் என்பதாகும். ஆனால் இன்றுவரை சீனாவால் அதை நடைமுறைப்படுத்த
முடியவில்லை. சீனா ஒரு போர் மூலம் தைவானைக் கைப்பற்ற முயன்றால் அமெரிக்கா சீனாவிற்கு
எதிராக போர் செய்யும் என்பது போல அமெரிக்காவில் இருந்து கருத்து வெளியிடப்படுவது ஆண்டு
தோறும் வலுவடைந்து கொண்டு போகின்றது. 1996-ம் ஆண்டு தைவானை ஆக்கிரமிக்க சீனா தயார்
செய்த போது அப்போதைய அதிபராக இருந்த பில் கிளிண்டன் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை
சீனாவிற்கும் தைவானிற்கும் இடையிலான தைவான் நீரிணக்கு அனுப்பியவுடன் சீனா தனது முயற்ச்சியைக்
கைவிட்டது. பதினைந்து ஆழ்கடல் துறைமுகங்களைக் கொண்ட தைவானை சீனா கைப்பற்றினால் அதன்
கடற்படை வலிமை மிகவும் அதிகமாகும்.
தைவான் வேறு சீனா வேறு என்கின்றது அமெரிக்கா
The
American Enterprise Institute என்ற அமெரிக்க வலதுசாரிக் கருத்துக் கலம் வரலாற்று ஆய்வு
ஒன்றைச் செய்து தைவான் சீனாவின் பகுதியாக இருந்ததில்லை என ஒரு நூலை வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த நூல் சீனா தைவானை ஆட்சி செய்த காலத்திலும் பார்க்க நீண்ட காலம் மேற்கு
ஐரோப்பிய நாடுகள் ஆசிய மற்றும் ஆபிரிக்காவில் உள்ள நாடுகளை ஆட்சி செய்தன என்கின்றது.
கிங் கோமரபு (Qing Dynasty) தைவானை இரண்டு நூற்றாண்டுகளுக்கு (1683 – 1895) மேல் ஆட்சி
செய்தது. கிங் கோமரபின் பிடியில் இருந்த சீனாவுடன் ஜப்பானியர்கள் 1894இல் போரை ஆரம்பித்தனர்.
1895இல் முடிந்த முதலாம் சீன-ஜப்பான் போரில் ஜப்பான் தைவானையும் சீனாவின் காற்பங்கு
நிலப்பரப்பையும் கைப்பற்றியது. கிங் கோமரபு ஆட்சியாளர்கள் உண்மையான ஹன் சீனர்கள் அல்ல
அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களே என அமெரிக்க ஆய்வு நிறுவனம் சொல்கின்றது. கிங் கோமரபிற்கு
முன்னர் தைவானை டச்சுக்காரர்களும் போர்த்துக்கேயர்களும் ஆண்டனர். பொதுவுடமை சீனாவைப்
பற்றி பல நூல்களை எழுதிய Edgar Snow என்பவருக்கு மாவோ சே துங் 1936இல் வழங்கிய பேட்டியில்
மாவோ தைவானை சீனாவின் ஒரு பகுதியாக குறிப்பிடவில்லை என்கின்றது The American
Enterprise Institute.
சீனாவால் தைவானைக் கைப்பற்ற முடியாதாம்
சிலர்
தைவான் தீவைக் கைப்பற்றக் கூடிய வலிமையான கடற்படை ஒரு போதும் சீனர்களிடம் இருந்ததில்லை
என்கின்றனர். 23.6 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தைவானைக் கைப்பற்ற போர் அனுபவம்
இல்லாத சீனப்படையினர் எத்தனை பேர் தேவைப்படுவார்கள் என்ற கேள்விக்கு நூறு தைவானியர்களுக்கு
ஒரு சீனப் படை வீரர் என்ற கணக்குப் படி பார்த்தால் 240,000 சீனப் படையினர் தேவைப்படுவார்கள்.
அவர்களையும் அவர்களுக்கு தேவையான போர்த்தாங்கிகள், ஆட்டிலெறிகள், துப்பாக்கிகள், சுடுகலன்கள்,
உணவுகள் போன்றவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு நூறு மைல்கள் தூரம் கடலைக் கடந்து செல்ல
வேண்டும். அதற்கு தேவையான தரையிறக்க கப்பல்கள் (Landing Vessels) சீனாவிடம் இல்லை என்ற
விவாதத்தை சில மேற்கு நாட்டு ஆய்வாளர்கள் முன்வைக்கின்றார்கள். சீனாவிடம் உள்ள எட்டு
தரையிறக்க கப்பல்கள் மூலம் ஐம்பதினாயிரம் படையினரையும் ஆயிரம் போர்த்தாங்கிகளை மட்டும்
தரையிறக்க முடியும் என்பது அவர்களது கருத்து. பகுதி பகுதியாக படையினரை இறக்கினால் மிகப்பெரும்
அழிவை சீனப் படையினர் சந்திக்க வேண்டிவரும். சீனா தனது தரை, வான், கடல் நிலைகளில் இருந்து
குண்டுகளை வீசி தைவானை தரைமட்டமாக்கிய பின்னர் படையெடுத்தால் சீனா தைவானின் தொழில்நுட்பத்தையும்
பொருளாதாரத்தையும் கைப்பற்றும் நோக்கம் நிறைவேறாது. தைவானியர்களின் கரந்தடிப் போரை
சீனா எதிர் கொள்ள வேண்டிவரும். தைவானைப் பாதுகாக்க அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா,
பிரித்தானியா ஆகிய நாடுகள் களமிறங்கினால் நிலைமை மோசமாக இருக்கும். இவை உண்மையாயின்
சீனா தொடர்ந்தும் தைவான் சீனாவின் ஒரு மாகாணம் என வாயளவில் (பொய்) சொல்லிக் கொண்டே
இருக்க வேண்டும். இரசியா உக்ரேன் மீது படையெடுக்கும் போது சீனாவும் தைவான் மீது படை
எடுக்கும் என எதிர்பார்த்ததும் நடக்கவில்லை.
முள்ளம் பன்றிக் கோட்பாடு
ஒரு முள்ளம்பன்றி
சிறிதாக இருந்தாலும் அதன் எதிரிகள் அதைத் தொட்டால் அதன் முள்ளுகள் குத்தும்.
அப்படியாக இருக்கக் கூடிய மாதிரி தைவானை வைத்திருக்கும் திட்டத்தை 2008-ம் ஆண்டு
அமெரிக்கா உருவாக்கியது. அத்திட்டத்தின் படி அமெரிக்கா போர் விமானங்கள் மற்றும்
படைத்தாக்குதல் செய்யக் கூடிய ஆளில்லாப் போர் விமானங்கள்,
கணினியால் இயங்கும் கண்ணி வெடிகள் போன்றவற்றை
தைவானிற்கு வழங்கியது. உக்ரேன் போரில் பெற்ற அனுபவங்களை அடிப்படையாக
வைத்து தைவானின் படையினரை மாற்றி அமைக்க அமெரிக்கா முயல்கின்றது. அத்துடன் தைவானிற்கு
மேலதிக படைக்கலன்களை விற்று பணம் சம்பாதிக்கவும் அமெரிக்கா முயல்கின்றது. சமச்சீரற்ற
போர் முறைப் பயிற்ச்சியையும் அதற்குரிய படைக்கலன்களையும் தைவான் பெற வேண்டும் என அமெரிக்கப்
படைத்துறை நிபுணர்கள் கருதுகின்றனர். 1979 தைவான் உறவுச் சட்டம் அமெரிக்கா தைவானிற்கு
தற்காப்பு படைக்கலன்களை வழங்க வேண்டும் என்கின்றது. தாக்குதற் படைக்கலன்கள் இல்லாமல்
சீனாவை தைவானியர்கள் எதிர் கொள்ள வேண்டும்.
தற்காப்பு படைக்கலன்களைப் பெற்றுக் கொண்டு
உக்ரேனியர்கள் படும் பாட்டை தைவானியர்கள் அவதானித்துக் கொண்டு இருக்கும் வேளையில் இரசியாவின்
இழப்புக்களை சீனர்களும் அவதானித்துக் கொண்டு இருக்கின்றனர்.
No comments:
Post a Comment