Tuesday, 2 August 2022

அல் கெய்தா தலைவர் அல் ஜவஹிரியை கொன்றது அமெரிக்கா

 அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தில் இருந்து வீசப்பட்ட இரண்டு ஏவுகணைகளால் அல் கெய்தாவின் தலைவர் ஐமன் அல் ஜவஹிரி கொல்லப்பட்டார்.  ஆப்கான் தலைநகர் காபுலில் அவர் மறைந்திருந்த வீடு ஒன்றின் மீது 2022 ஜூலை 31-ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ செய்த படை நடவடிக்கையால் ஐமன் அல் ஜவஹிரி கொல்லப்பட்டார். 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் செய்யப்பட்ட இரட்டைக் கோபுரத்தாக்குதலைச் செயற்படுத்துவதில் அல் கெய்தா தலைவர் பின் லாடனுடன் அல் ஜவஹிரியும் இணைந்து செயற்பட்டார் என்பதால் அதற்கான நீதி வழங்கப்பட்டதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அத்தாக்குதலில் 2977பேர் கொல்லப்பட்டனர். கென்யா தன்சானியா ஆகிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவரகங்களில் அல் கெய்தா தாக்குதல் நடத்தி 244 அமெரிக்கர்களை கொன்றதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. 

25மில்லியன் டொலர் கொலை

அல் ஜவஹிரியின் தலைக்கு அமெரிக்கா 25மில்லியன் டொலர் பரிசுத்தொகையையும் அறிவித்திருந்தது.  ஜவஹிரியின் இருப்பிடத்தை உறுதி செய்தபின்னர் அவரைக் கொல்ல தான் அனுமதி வழங்கியதாக அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். 2011-ம் ஆண்டு பின் லாடனை பாக்கிஸ்த்தானில் வைத்துக் கொலை செய்தபின்னர் அல் கெய்தாவின் தலைமைப் பொறுப்பை தற்போது 71 வயதான எகிப்த்திய கண் அறுவை மருத்துவரான ஐமன் அல் ஜவஹிரி ஏற்றிருந்தார். எத்தனை காலமானாலும் எங்கு மறைந்திருந்தாலும் அமெரிக்காவிற்கு எதிரான பயங்கரவாதிகளை நாம் அழிப்போம் என அமெரிக்கா மார் தட்டியுள்ளது. அத்துடன் ஆப்கானிஸ்த்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக அனுமதிக்க மாட்டோம் எனவும் அறிவித்திருந்தது. ஆப்கானிஸ்த்தானில் அதிகாரத்தில் உள்ள தலிபான்கள் தாக்குதலை உறுதி செய்தது ஆனால் கொல்லப்பட்டவர் யார் என்பதைக் கூறவில்லை. 

கண் அறுவை மருத்துவர் (Eye Surgeon)

இளவயதில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பில் இணைந்து செயற்பட்ட ஐமன் அல் ஜவஹிரி 15வது வயதில் எகிப்திய அரசால் கைது செய்யப்பட்டார். மருத்துவரான பின்னர் பாக்கிஸ்த்தான் சென்று சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக போராடிய ஆப்கானிஸ்த்தான் போராளிகளுக்கு பாக்கிஸ்த்தானில் வைத்து மருத்துவ உதவிகளை செய்துவந்தார். 1998-ம் ஆண்டு கென்யாவிலும் தன்சானியாவிலும் அமெரிக்க தூதுவரகங்களில் செய்யப் பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவால் மிகவும் தேடப்படும் ஒருவராக அவர் இருந்தார். திட்டமிட்டு தாக்குதல்கள் செய்வதில் அவர் வல்லவராக கருதப்படுகின்றார். அவர் கொல்லப்படும் போது அவர் மட்டும் வீட்டில் இருந்தார் எனவும் அவரது குடும்பத்தினர் வேறு இடங்களில் இருந்தனர் எனவும் நம்பப்படுகின்றது. 

AGM-114 Hellfire ஏவுகணைகள்

Air to Ground Missiles 114 Hellfire என்னும் வானில் இருந்து தரைக்கு ஏவப்படும் ஏவுகணைகள் இரண்டால் ஜவஹிரி கொல்லப்பட்டார். 45கிலோ எடையுள்ள துல்லியத் தாக்குதல் செய்யக் கூடிய இந்த ஏவுகணைகளை பெறுமதி மிக்க இலக்குகள் மீது தாக்குதல் செய்ய அமெரிக்கப்படையினர் பாவித்ஹ்டு வருகின்றனர். 2004-ம் ஆண்டு அவற்றைப் பாவித்து ஹமாஸ் தளபதியை இஸ்ரேலியர் கொலை செய்தனர். அமெரிக்காவில் பிறந்து பின்னர் அல் கெய்தாவில் இணைந்த இஸ்லாமிய போதகரான அனவர் அல் அவ்லாக்கியின் கொலைக்கும் அவ் ஏவுகணைகள் பாவிக்கப்பட்டன. அல் ஷஹாப் தலைவர் அகமட் அப்டி கொடானே சோமாலியாவி வைத்து Air to Ground Missiles 114 Hellfire ஏவுகணையால் கொல்லப்பட்டார். 

சிஐஏயின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்

ஒரு பயங்கரவாத அமைப்பாக பலரும் கருதும் அமெரிக்க உளவு  நிறுவனமான சிஐஏ பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் ஒரு படைத்துறைப் பிரிவை உருவாக்கியது. அதன் படையணிகள் வெளிநாடுகளில் செய்யும் கொலைகள் அமெரிக்காவின் சட்டங்களுக்குள் உட்பட்டதல்ல அமெரிக்க அரசுக்கோ மக்களுக்கோ பொறுப்புக் கூற வேண்டிய நிலையிலும் அவை இல்லை. பல நாடுகளில் சிஐஏயின் படையினர்  தளம் அமைத்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாடுகளில் அந்த நாடுகளுக்கு தெரியாமலே அவர்களின் படைத்தளம் அமைந்துள்ளது. பாக்கிஸ்த்தானில் சிஐஏயின் படைத்தளம் அமைக்க இம்ரான் கான் ஒத்துக் கொள்ளவில்லை. அவர் அதன் பின்னர் ஆட்சியை இழந்தார். 2022-ம் ஆண்டு ஏப்ர மாதத்தில் அல் ஜவஹிரி ஆப்கானிஸ்த்தானில் மறைந்திருக்கும் இடத்தை சிஐஏ அறிந்து கொண்டது. அவர் தனது வீட்டின் உப்பரிகையில் நிற்பதையும் சிஐஏ (Balcony) அவதானித்தது. அதன் பின்னர் அவர் தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு அவரது அடையாளம் நடமாடும் விதம் உறுதி செய்யப்பட்டது. ஆப்கானிஸ்த்தானில் இப்போது திறமையாக சிஐஏயால் உளவுத் தாக்குதல் செய்ய முடியும் என்பது நிருபணமாகியுள்ளது. 

2020-ம் ஆண்டு அமெரிக்காவும் தலிபானும் செய்து கொண்ட உடன்பாட்டின் படி அல் கெய்தா ஆப்கானிஸ்த்தானில் செயற்பட தலிபான் அனுமதிக்காது என ஒத்துக் கொள்ளப்பட்டிருந்தது. தலிபான் உடன்பாட்டை மீறியது எனச் சொல்லி இனி அமெரிக்காவும் உடன்பாட்டை மீறலாம். 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...