Monday, 24 January 2022

13என்னும் முடமான திருநங்கைதான் மணமகளா?


 ஈழத்தமிழன் என்னும் இளைஞன் தமிழீழம் என்னும் பெண்ணைக் காதலித்தான் அவர்களின் காதல் திருமணம் நோக்கி முன்னேறுவதைப் பொறுக்காத வில்லன் சிங்களவன் இந்தியா என்னும் அடியாளைத் தன் கைக்கூலியாக்கினான். ஈழத்தமிழன் காதல் திருமணம் செய்தால் தனது மகன்களும் காதல் திருமணம் செய்வார்கள். அதனால் வரதட்சணை கிடைக்காமல் தனது பிழைப்பு நாறிப்போகும் என உணர்ந்த இந்தியா எனும் அடியாள் ஈழத்தமிழனே உனக்கு மணமகள் தமிழீழம் அல்ல பதின்மூன்றே உனக்குரியவள் அவளையே நீ திருமணம் செய்ய வேண்டும் என மிரட்டினான். பதின்மூன்று ஒரு முடமான திருநங்கை என்பதால் அவளைத் திருமணம் செய்ய மாட்டேன் என ஈழத்தமிழன் மறுத்து விட்டான். ஆனாலும் இந்தியா என்ற அடியாளும் சிங்களவன் என்ற வில்லனும் மணமக்கள் சம்மதம் இல்லாமலே தட்டுக்களை மாற்றி திருமண நிச்சயம் செய்து கொண்டனர். ஆனால் ஈழத்தமிழன் தமிழீழம் என்னும் காதலியை உறுதியாக காதலித்தான் அவனது காதல் கைக்கூடும் வேளையிலே இந்தியா என்னும் கூலி அடியாள் ஈழத்தமிழனை மறைந்திருந்து தாக்கி அவனது சொத்துக்களை எல்லாம் அழித்து அவனை ஒரு பிச்சைக்காரன் என்ற நிலைக்கு தள்ளினான். பின்னர் பிச்சைக்காரனான உனக்கு இனி எவனும் பெண் கொடுக்க மாட்டான் நீ பதின்மூன்றையே திருமணம் செய் என்றான். எல்லாம் இழந்த ஈழத் தமிழன் தன் காதலை மட்டும் இழக்கவில்லை. 

தமிழீழத்தின் மீதான காதலில் ஈழத்தமிழன் உறுதியாக இருப்பதால் சினமடைந்த இந்தியா என்னும் கூலி அடியாள் ஈழத்தமிழனின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு Quarterஉம் Side dishஉம் கொடுத்து தன் பக்கம் இழுத்து நீங்கள் எல்லோரும் ஈழத்தமிழனை நிர்ப்பந்தித்து அவனை பதின்மூன்றைத் திருமணம் செய்து வைக்கும்படி என்னை மன்றாடும்படி செய்யுங்கள் என்றான். அது முடியாமல் போனதால் Quarterஇற்கும் Side dishஇற்கும் விலை போனவர்கள் எல்லோரும் கூடி இந்தியா என்னும் அடியாளிற்கு ஈழத்தமிழனை பதின்மூன்று என்னும் முடமான திருநங்கையை திருமணம் செய்து வைக்கும் படி கடிதம் எழுதினார்கள். 

சிங்களத்தின் அடியாளாகிய இந்தியா ஊரில் உள்ள எல்லாக் திருமணத்தரகர்களிடமும் ஈழத்தமிழனுக்கு பதின்மூன்று தான் நிச்சயிக்கப்பட்ட மணமகள் அதை விட அவனுக்கு வேறு பெண் இல்லை என நம்ப வைத்துள்ளான். சிங்களவன் என்னும் வில்லனின் நிலத்தில் எப்போதும் கண் வைத்திருந்த அமெரிக்கா என்னும் கட்டப் பஞ்சாயத்துக்காரன் இந்தியா என்னும் அடியாளுடன் இணைந்து செயற்படுகின்றான். தமிழீழத்தை ஈழத்தமிழனுக்கு திருமணம் செய்து வைத்தால் சிங்களவன் என்னும் வில்லன் கதை முடிந்து விடும் என இருவரும் மிரண்ட்டி அவன் காணிகளை அபகரிக்கின்றார்கள்.

இத்தால் சகலரும் அறிய வேண்டியது:

1. இந்தியாதான் ஈழத்தமிழனின் முதலாம் எதிரி

2. Quarterஇற்கும் Side dishஇற்கும் விலை போனவர்கள் ஈழத்தமிழனின் இரண்டாம் எதிரிகள்

3. சிங்களவன் ஈழத்தமிழனின் மூன்றாம் எதிரி

4. அடியாள் இந்தியாவின் அசிங்க முகத்தை எல்லா திருமணத் தரகர்கள் மத்தியிலும் ஈழத்தமிழன் அம்பலப்படுத்த வேண்டும்.

5. சிங்களவனின் அடியாள் இந்தியாவின் எதிரிகளை ஈழத்தமிழன் தேடிச்சென்று நண்பர்களாக்கி அவர்களை தனக்கும் தமிழீழத்திற்கும் திருமணம் செய்ய உதவ வைக்க வேண்டும். 

மாற்றுத்திறனாளிகளும் திருநங்கைகளும் என்னை மன்னிப்பார்களாக

Thursday, 20 January 2022

சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல் வலிமையற்றதா?

  


அமெரிக்க கடற்படைத் தளபதி ரோய் கிச்சினர் 2022 ஜனவரி 11-ம் திகதி நடந்த கடற்படையினரின் மாநாடு ஒன்றில் வெளியிட்ட தகவல் சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்களின் வலிமையைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. சீனாவிடம் லியோனிங், ஷண்டோங் என்னும் இரு விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. விமானம் தாங்கிக் கப்பலின் வலிமை 1. அது தாங்கிச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை 2. அவ்விமானங்களின் வலிமை, 3. படைக்கலன்களின் அளவு 4. கப்பலின் இயங்கு வலிமை 5. அதை சுற்றிவரும் பரிவாரக் கப்பல்கள் போன்றவற்றில் தங்கியுள்ளன.

விமானம் தாங்கி - சிங்கிளாக வராத சிங்கம்

விமானம் தாங்கிக் கப்பல்கள் தனித்துப் பயணிப்பதில்லை. அவற்றை சுற்றி ஒரு பெரும் பரிவாரம் எப்போதும் இருக்கும். அவை விமானம் தாங்கிக் கப்பலுக்கு பல வட்டப் பாதுகாப்பை வழங்கும். விமானந்தாங்கிக் கப்பல்கள் நீருக்குக் கீழ், நீர் மேற்பரப்பு, வான்வெளி ஆகியவற்றில் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இவற்றைத் தடுக்க பல நாசகாரிக் கப்பல்கள் ஈடுபடுத்தப்படும். அத்துடன் குறைந்தது ஒரு frigate கப்பலாவது இருக்கும். மொத்தக் கப்பல்களையும் Carrier Battle Group என அழைப்பர். விமானம் தாங்கிக் கப்பலை எதிரியின் விமானங்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க ஒரு Guided Missile Cruiser  என்னும் வழிகாட்டல் ஏவுகணை தாங்கிக் கப்பல் அந்தப் பரிவாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும். Light Airborne Multi-Purpose System என்னும் முறைமை கொண்ட கப்பல் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் கடற்கப்பல்களில் இருந்தும் பாதுகாக்கும். பல உலங்கு வானூர்திகள் விமானந்தாங்கிக் கப்பல்களுக்குச் சுற்றவர உள்ள கடற்பரப்பின் கீழ் உள்ள பகுதிகளை இலத்திரனியல் கருவிகளால் பார்வையிட்டுக் கொண்டே இருக்கும்.

நீலத் தண்ணீர் கடற்படை

1980களின் ஆரம்பத்தில் இருந்து பொருளாதாரத்தில் மிகப்பாரிய வளர்ச்சியை ஆரம்பித்த சீனாவின் பொருளாதாரம் ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கின்றது. ஏற்றுமதி செய்யவும் ஏற்றுமதிக்கான உற்பத்திக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்யவும் சீனாவும் தனது கடற்போக்குவரத்தின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றது. அதற்கு ஏற்ப சீனா தனது கடற்படையை தற்போது எண்ணிக்கை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கடற்படையாக உயர்த்தியுள்ளது. வெறும் எண்ணிக்கை மட்டும் வலிமையை முடிவு செய்ய மாட்டாது. கடற்படையின் தொழில்நுட்ப மேம்பாடும் மிக அவசியமானதாகும். 1990களின் சீனாவின் கடற்படை பழுப்புப் தண்ணீர் கடற்படை என்ற நிலையில் இருந்து நீலத் தண்ணீர் கடற்படை என்ற நிலைக்கு தற்போது உயர்ந்தது. நாட்டின் உட்புறத்தில் உள்ள கடல் மற்றும் ஆறு போன்ற நீர்நிலைகளில் செயற்படும் கடற்படையை பழுப்புப் தண்ணீர் கடற்படை (Brown Water Navy) எனவும் நாட்டின் கடல் எல்லைகளை பாதுகாக்கவும் ஆதிக்கம் செலுத்தவும் கூடிய கடற்படையை பசுமைத் தண்ணீர் கடற்படை (Green Water Navy) எனவும் உலகெங்கும் உள்ள ஆழக்கடல்கள் எல்லாவற்றிற்கும் சென்று ஆதிக்கம் செலுத்தக் கூடிய கடற்படையை நீலத் தண்ணீர் கடற்படை (Blue Water Navy) எனவும் அழைப்பர்.

அமெரிக்க சீன விமானம் தாங்கி கப்பல்கள்

சீனாவின் விமானம் தாங்கிக் கப்பலான லியோனிங் வெறும் பயிற்ச்சிக் கப்பல் மட்டுமே என கிண்டல் செய்வோரும் உண்டு. லியோனிங் தாங்கிச் செல்லும் Shenjang J-15 போர்விமானங்களால் ஆகக் கூடியது 4000இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களை மட்டுமே தாங்கிச் செல்ல முடியும். ஆனால் அமெரிக்காவின் விமானம் தாங்கிகளில் பாவிக்கப்பட்ட F/A-18 போர்விமானங்களால் 12,000இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களைத் தாங்கிச் செல்ல முடியும். அமெரிக்காவின் நிமிட்ஸ் வகையைச் சேர்ந்த விமானம் தாங்கிக் கப்பலில் 64 F/A-18 விமானங்களைத் தாங்கிச் செல்ல முடியும். லியோனிங்கில் 26 Shenjang J-15 போர்விமானங்களை மட்டுமே தாங்கிச் செல்ல முடியும். சீனாவின் இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலான ஷாண்டோங்கால் 44 Shenjang J-15 போர்விமானங்களைத் தாங்கிச் செல்ல முடியும். கடற்போரில் பயிற்ச்சியும் நேரடி அனுபவமும் பெற்ற ஒரு அட்மிரலின் தலைமையில்தான் விமானம் தாங்கிக் கப்பலும் அதன் பரிவாரக் கப்பல்களும் இயங்கும். எந்த ஒரு கடற்போர் அனுபவமும் இல்லாத சீனக் கடற்படையில் எவரையும் அட்மிரல் என அழைக்க முடியாது என சீனாவை சில படைத்துறை ஆய்வாளர்கள் கிண்டலடிப்பதும் உண்டு.

Close Encounter

2021 ஏப்ரல் மாதம் தென்சீனக் கடலில் சீனாவின் விமானம் தாங்கிக் கப்பலான லியோனிங்கிற்கு கண்ணால் பார்க்கக் கூடிய வகையில் அண்மையாகச் சென்ற அமெரிக்காவின் நாசகாரிக் கப்பலான USS Mustin லியோனிங்கின் செயற்படு திறன் மட்டுப்படுத்தப் பட்ட அளவில் உள்ளது எனக் கண்டறிந்துள்ளதாக அமெரிக்க கடற்படை அறிவித்தது. அமெரிக்க நாசகாரி லியோனிங்கை சாதரண ஒளிபடப் பதிவுக் கருவியால் படம் பிடித்துள்ளது. ஒரு வலிமை மிக்க விமானம் தாங்கியைச் சுற்றியுள்ள நாசகாரிக் கப்பல்கள் எதிரியின் கப்பல்களை விமானம் தாங்கிக்கு அண்மையில் செல்லாமல் தடுத்துவிடும். ஒரு தனி நாசகாரி எதியின் விமானம் தாங்கிக்கு அண்மையில் செல்வது அந்த விமானம் தாங்கியில் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 2021இன் ஆரம்பத்தில் லியோனிங்கை கண்காணிக்கும் பணியில் அமெரிக்க கடற்படையினர் தமது USS Mustin என்னும் பற்பணி நாசகாரிக்கப்பலை ஈடுபடுத்தினர். USS Mustin என்பது Arleigh Burke-Class guided missile destroyer ஆகும். இந்த வகுப்பைச் சேர்ந்த நாசகாரிகள் Aegis Combat System என்னும் வலிமை மிக்க கணினிகளாலும் உயர் உணர் திறன் கொண்ட கதுவிகளாலும் (ரடார்கள்) இயங்கும் ஏவுகணைகளைக் கொண்டவை. அவ் ஏவுகணைகள் எதிரியின் இலக்குகளை துல்லியமாக தாக்கக் கூடியவை.

கப்பல்களில் இருந்து விமானங்களைச் செலுத்தும் முறைமைகள்

இதுவரை மூன்று முறைகள் மூலம் விமானங்களில் இருந்து கப்பல்கள் பறந்து செல்லும். முதலாவது பொதுவாக விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து விமானங்கள் கிளம்பும் போது சிறு தூரம் ஓடிப் பறக்க ஆரம்பித்தல். இரண்டாவது  நீராவிக் கவண் அதாவது steam catapult என்னும் தொழில் நுட்பம். ஆடு மேய்ப்பவர்கள் V வடிவத் தடியில் இறப்பர் கட்டி செய்யும் கவணில் இருந்து கல் வீசுவது போல விமானங்கள் பறக்கச் செய்யப்படும். மூன்றாவது EMALS முறைமை. இதில் விமானம் தாங்கிக் கப்பலில் அணுவலுவால் மின்காந்த தொழில் நுட்பம் மூலம் விமானத்தைப் பறக்கச் செய்யப்படும். இதனால் இரண்டு முதல் நாற்பது தொன் வரையான எடையுள்ள ஒரு விமானம் ஒரு சில நொடிகளில் மணிக்கு இருநூற்றி இருபது கிலோ மிட்டர் வேகத்தைப் பெறும். நீராவிக் கவண் தொழில் நுட்பப்படி ஆகக் கூடியது பதினெட்டுத் தொன் எடையுள்ள விமானங்களை மட்டுமே செலுத்த முடியும். சீனா உருவாக்கிக் கொண்டிருக்கும் மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பலில் EMALS முறைமை இணைக்கப் படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தனியே வந்த ஒரு நாசகாரிக் கப்பல்களை எதிர் கொள்ள முடியாத சீனாவின் விமானம் தாங்கி கப்பல் Carrier Battle Group என அழைக்கப்படும் பல கப்பல்கள் சூழ ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களுடன் வரும் அமெரிக்கா, பிரித்தானியா போன்றவற்றின் விமானம் தாங்கி கப்பல்களை எப்படி எதிர் கொள்ளப்போகின்றது? சீனா இன்னும் ஒரு நீலத்தண்ணீர் கடற்படையாக உருவெடுக்கவில்லையா? சீனா விமானம் தாங்கி உற்பத்தித் துறை இப்போது தவழும் நிலையில்தான் இருக்கின்றதா?

Tuesday, 18 January 2022

இலங்கையில் சீனா மறைமுக படைத்தளம் அமைக்குமா?

  


சீனாவின் அரசுறவியல்(Diplomatic) நகர்வுகள் எப்போதும் தொலைநோக்கமும் உள்நோக்கமும் கொண்டவையாகவும் நீண்ட கால அடிப்படையில் செய்யப்படுபவையாகவும் இருக்கும். இலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளாக சீனா செய்யும் நகர்வுகள் ஐயத்திற்கு இடமானவையாக இருக்கின்றன. சிறிது சிறிதாக இலங்கையை தனது முழுமையான பிடிக்குள் சீனா கொண்டுவர முயல்வது போன்ற தோற்றப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கையை இந்தியாவின் பிராந்தியமாக அமெரிக்கா ஏற்றுக் கொண்டது போல் செயற்பட்டாலும் இலங்கையை இந்தியா தனித்து கையாள முடியாது என்பதாலும் இலங்கையை இந்தியாவை தனித்து கையாள்வதை அமெரிக்கா விரும்புவதில்லை என்றபடியாலும் அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றுபட்டு இலங்கையை சீனாவின் பிடிக்குள் செல்வதற்கு எதிரான நகர்வுகளைச் செய்கின்றன. இருந்தும் இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றை ஒன்று நம்பும் நிலையில் இன்னும் இல்லை.

இலங்கை சீன உறவு

SWRD பண்டாரநாயக்கவின் ஆட்சியின் போது 1957 பெப்ரவரியில் இலங்கையில் சீனத் தூதுவரகம் திறக்கப்பட்டது. அதில் இருந்து இரு நாடுகளுக்குமிடையில் ஒரு முறைசார் உறவு ஆரம்பமானது. இரு தரப்பு வர்த்தகங்கள் அப்போது முக்கிய பங்கு வகித்தது. சீனாவிற்கு இலங்கையில் இருந்து இரப்பரும் இலங்கைக்கு சீனாவில் இருந்து அரிசியும் விற்பனை செய்யப்பட்டன. இலங்கையில் சீனா தனது பொதுவுடமைவாதத்தை பரப்ப காத்திரமான முயற்ச்சி எடுத்ததில்லை. ரொஹண விஜயவீர தலைமையில் இலங்கையில் செய்த பொதுவுடமைப் புரட்சிக்கு சீனா உதவி செய்யவில்லை. அது உதவி செய்திருந்தால் விஜயவீரா தலைமையில் நடந்த புரட்சியின் முடிவு வேறு விதமாக அமைந்திருந்திருக்கலாம். தோழர் சண்முகதாசனின் சீன சார்பு பொதுவுடமைக் கட்சியில் ஒரு முண்னணி உறுப்பினராக தோழர் விஜயவீர இருந்திருந்தார். சிங்களவர்கள் இலங்கையின் எல்லாச்சூழலில் நட்பாக இருக்கும் நாடாக சீனாவைப் பார்க்கின்றனர். 1983இல் இருந்து 2009வரை இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் இலங்கைக்கு சீனா பேருதவி செய்தது. அதன் பின்னர் உலக அரங்கில் குறிப்பாக மனித உரிமைகள் தொடர்பாக இலங்கைக்கு ஏற்படும் நெருக்கடிகளை எதிர் கொள்ள சீனாவைப் போல் வேறு எந்த நாடும் நேரடியாக உதவி செய்வதில்லை. 2019-ம் ஆண்டு இலங்கைக்கான சீனத் தூதுவர் இலங்கையை எந்த ஒரு நாடும் மிரட்ட நாம் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

ஆரம்பப்புள்ளியாக அம்பாந்தோட்டை?

சீனா இலங்கை மீது செய்த கேந்திரோபாய நகர்வு அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அது செய்த முதலீடு ஆகும். அமெரிக்காவின் கடற்படை வலிமையை தனது நீர்மூழ்கிக் கப்பல் படை மூலம் எதிர் கொள்ளும் சீனாவின் கேந்திரோபாயத்திற்கு அமைய அம்பாந்தோட்டை துறைமுகம் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு ஏற்றவகையில் உருவாக்கப்பட்டது. சீனா மியன்மாரின் சிட்வே, பங்களா தேசத்தின் சிட்ட கொங், இலங்கையின் அம்பாந்தோட்டை, பாக்கிஸ்த்தானின் குவாடர் ஆகிய துறைமுகங்களில் சீனா செய்த முதலீடு முத்துமாலைத் திட்டம் என அழைக்கப்படுகின்றது. அவற்றின் பூகோள அமைப்பைப் பார்த்த போது அது இந்தியாவின் கடற்பாதுகாப்பின் கழுத்துக்கான சுருக்குக் கயிறு போல் தோற்றமளித்தது. சீனா அம்பாந்தோட்டை துறைமுகம் இரு தரப்பிற்கும் நன்மையளிக்கக் கூடிய வர்த்தக நோக்கங்களைக் கொண்டது என தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டே இருக்கின்றது.

இந்தியாவிற்கு மிக அருகில் சீனா

கொழும்புத் துறைமுகத்தின் அதிக இலாபகரமான Colombo International Container Terminal (CICT) என்னும் தெற்கு முனையம் சீனாவின் China Merchant Holding நிறுவனத்திற்கு 2011இல் விற்பனை செய்யப்பட்டது. முதலில் சீன நிறுவனத்திற்கு 50%, Aiken Spence நிறுவனத்திற்கு 35% எனவும், கொழும்பு துறைமுக அதிகார சபைக்கு 15% எனவும் பன்னாட்டு முனையத்தின் உரிமை பகிரப்பட்டது. பின்னர் சீன நிறுவனம் Aiken Spence இடமிருந்து 35% உரிமத்தையும் பெற்றுக் கொண்து. சீனா அங்கு இலத்திரனியல் முறைமையிலான கப்பல் மற்றும் கொள்கலன் கையாளலை அறிமுகம் செய்தது. தெற்காசியாவில் உள்ள ஒரே ஓர் ஆழ்கடல் துறைமுகமாக Colombo International Container Terminal இருக்கின்றது. இந்திய வர்த்தக கொள்கலன் போக்குவரத்தில் 70% கொழும்பு துறைமுகத்தினூடாக நடக்கின்றது. சீனா உருவாக்கிய செயற்கைதீவாகிய கொழும்பு துறைமுக நகரமும் அதில் அமைந்துள்ள தாமரைக் கோபுரமும் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. அதிலிருந்து உளவு நடவடிக்கைகளையும் மற்றும் உளவு எதிர்ப்பு நடவடிக்கைகளையும் சீனாவால் இந்தியாவிற்கு எதிராக செய்ய முடியும். கூடாங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து புது டில்லி வரை தாமரைக் கோபுரத்தில் உச்சியின் நின்று அவதானிக்க முடியும். சீனாவால் யாழ் குடாநாட்டுக் கரையோரத்திலும் ஒரு சிறிய செயற்கைத் தீவை அமைக்க முடியும். அதிலும் ஒரு உயர்ந்த கோபுரம் அமைக்கப்பட்டால் அது இந்தியாவிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையலாம். அப்படி ஒரு தீவு அமைவதை இந்தியா கடுமையாக எதிர்க்கும்.

இந்தியாவிற்கு தொல்லை கொடுக்க வழி தேடும் சீனா

சீனா தன் அயல் நாடுகளின் வான்பரப்புக்களுள் அடிக்கடி தன் விமானங்களை அனுப்பி அந்த நாடுகளின் வான் பாதுகாப்பு வலிமையையும் பொறுமையையும் சோதிப்பதுண்டு. அதே போல அயல் நாட்டுக் கடற்பரப்புக்குள் தனது கடற்படைக்கலன்களையும் மீன்பிடிப்படகுகளையும் சீனா அடிக்கடி அனுப்புவதுண்டு. இந்தியாவிற்கு அதனுடனான எல்லையில் பல சிறு ஆக்கிரமிப்புக்களை சீனா செய்வதுண்டு, இந்தியாவிற்கு சொந்தமான பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா கைப்பற்றியுள்ளதாக கருதப்படுகின்றது. இந்தியாவிற்கு வான்பரப்பில் சீனா தொல்லை கொடுப்பது குறைவு. இந்திய சீன எல்லை கடல் மட்டத்தில் இருந்து பத்தாயிரம் அடிகளுக்கும் அதிகமான உயரத்தில் இருப்பதால் அங்கு விமானங்களுக்கு இடர்மிகு சூழல் நிலவுவதால் சீனா அங்கு தொல்லை கொடுப்பதை தவிர்க்கலாம். இந்தியாவிற்கு கடல் மூலம் தொல்லை கொடுக்க சீனாவிற்கு சிறந்த இடம் இலங்கை தான். ஆனால் இலங்கையில் சீனா ஒரு பகிரங்க படைத்தளத்தை அமைப்பது ஆபத்தானது. அப்படிப்பட்ட தளங்கள் இருந்தால் அவற்றின் மீது இந்தியாவின் எப்பாகத்தில் இருந்தும் தாக்குதல் நடத்தலாம். கடல், வான், தரை ஆகிய நிலைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தலாம். 2021 டிசம்பரில் சீனா மியன்மாரிற்கு (பர்மா) இரண்டு மிங் வகை நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கியிருந்தது. சீனா ஏற்கனவே பாவித்த அந்த நீர்மூழ்கிகள் டீசலில் இயங்குபவை. இந்த வகை நீர்மூழிகளை ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு வழங்கியது அதுவே முதற்தடவை. 2017-ம் ஆண்டு பங்களாதேசம் இரண்டு நீமூழ்கிகளை சீனாவிடமிருந்து $203மில்லியன்களுக்கு வாங்கியது. 2021 நவம்பரில் சீனா PNS Turghril என்னும் இரண்டு உயர்தரப் போர்க்கப்பல்களை பாக்கிஸ்த்தானிற்கு வழங்கியது. ஏற்கனவே சீனாவிடமிருந்து பாக்கிஸ்த்தான் எட்டு நீர்மூழ்கிகளை வாங்கியிருந்தது. பாக்கிஸ்த்தான் எட்டு Frigate கப்பல்கள் ஐந்து Corvette கப்பல்கள் எட்டு நீர்முழ்கிக் கப்பல்களை ஒரு குறுகிய காலப்பகுதியில் தனது கடற்படையை பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையில் வாங்கியமை உலகத்தை வியக்க வைத்தது.

இரகசியப் படைத்தளஙகள்

ஒரு வல்லரசு நாடு இன்னொரு நாட்டில் படைத்தளத்தை பகிரங்கமாக அமைக்கலாம். யாருக்கும் தெரியாமல் இரகசிய படைத்தளங்களையும் அமைக்கலாம். மறைமுகப் படைத்தளங்களை அமைக்கலாம். சீனாவின் வசமுள்ள அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்புத்துறைமுகம், கொழும்பு துறைமுக நகர் ஆகியவற்றில் இரகசியமாக படைக்கலன்களை சீனாவால் வைத்திருக்க முடியும். பெரிய கொள்கலன்கள் உள்ளே ஏவுகணைச் செலுத்திகளையும் ஆளிலிப் போர் விமானங்களையும் மறைத்து வைத்திருக்கலாம். தேவை ஏற்படின் துரிதமாக பொருத்தக் கூடிய பல பெரிய படைக்கலன்களையும் சீனாவால் இலங்கையில் வைத்திருக்க முடியும். இந்தியாவின் உளவுத்துறை சிறப்பாகச் செயற்பட்டால் மட்டுமே இவற்றை இனம் கண்டு அவற்றிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

மறைமுகப் படைத்தளங்கள்

இலங்கையில் சீனா மறைமுகமான படைத்தளத்தை அமைக்க செய்யக் கூடியவை:

1.இலங்கைக்கு பலவிதமான படைக்கலன்களை சீனா விற்பனை செய்தோ அல்லது உதவியாக வழங்கியோ இலங்கையின் பல்வேறு இடங்களில் நிறுத்தலாம். நாசகாரிக் கப்பல்கள், சேமக்கப்பல்கள் (corvette), நீர்முழ்கிக் கப்பல்கள் வேவு மற்றும் கண்காணிப்பு விமானங்கள், இலத்திரனியல் போர் விமானங்கள் போன்றவை இவற்றில் அடக்கப்படலாம்.

2. மேற்படி கப்பல்களையும் விமானங்களையும் இயக்குவதற்கு இலங்கைப் படையினருக்கு பயிற்ச்சி வழங்குவதற்கும் மற்றும் அவற்றைப் பராமரிப்பதற்கும் தேவையான ஆளணிகள் என்னும் போர்வையில் சீனப்படையினர் இலங்கையில் தங்கலாம்.

3. இந்தியாவுடனான போர் என்று வரும் போது மேற்படி கப்பல்களும் விமானங்களும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு எதிராக திடீர்த்தாக்குதல்களை மேற்கொள்ளலாம்.

இலங்கையில் சீனா பகிரங்க படைத்தளங்களை அமைப்பதிலும் பார்க்க இரகசிய மற்றும் மறைமுக படைத்தளங்களை அமைப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம்.

Thursday, 13 January 2022

"இந்தியாவே வெளியேறு” இயக்கம் மாலைதீவில் தீவிரமாகின்றது

 

 

முன்னாள் மாலைதீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் அவர்கள் “இந்தியாவே வெளியேறு” இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பது அந்த இயக்கத்திற்கு பெரும் வலுவைச் சேர்த்துள்ளது. மாலை தீவு இலங்கை நகர் கொழும்பில் இருந்து தென் மேற்காக 843 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து 914 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கின்ற ஒரு சிறிய தீவுக் கூட்டமாகும். இந்து மாக்கடல் பிரதேசத்தில் அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தீவிரமாகப் போட்டி போடும் நிலையில் மாலை தீவும் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கின்றது.

மாலைதீவின் வரலாறு

கிமு 300இற்கு முன்பு இருந்தே தமிழர்கள் மாலைதீவில் வாழ்ந்தார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழர்களால் ஆளப்பட்ட மாலை தீவு 12-ம் நூற்றாண்டில் இஸ்லாமிய நாடாக்கப்பட்து. மாலைதீவை 16-ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரும், 17-ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களும் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரும் கைப்பற்றி ஆட்சி செய்தனர். 1953-ம் ஆண்டில் பொதுநலவாய நாடுகளின் கீழ் ஒரு குடியரசாகியது. 1965-இல் மாலைதீவு முழுமையான சுதந்திர நாடாகியது. சிறிய நாடக இருந்த போதிலும் உலக அரங்கில் அது தனது செயற்பாட்டில் அதிக அக்கறை காட்டியது. பொதுநலவாயம், சார்க், கூட்டுச்சேரா அமைப்பு போன்றவற்றில் உறுப்புரிமையும் பெற்றது. 1980இல் இருந்து அது உல்லாசப் பயணிகளைக் கவரும் நாடாக மாறியது. அதன் பொருளாதாரம் மீன்வளத்திலும் உல்லாசப் பயணத்திலும் தங்கியுள்ளது. 150 தீவுகளைக் கொண்ட மாலைதீவின் நிலப்பரப்பு 90,000 சதுர கிலோ மீட்டராகும். அங்கு 540,000 மக்கள் வசிக்கின்றனர். மாலை போன்ற தோற்றம் கொண்ட தீவுக் கூட்டம் என்பதால் மாலை என்னும் தமிழ்ச்சொல்லில் இருந்தே அது மாலைதீவு என்ற பெயர் பெற்றது என்றும் சொல்லப்படுகின்றது. அதேவேளை மஹால் என்ற அரபுச் சொல்லில் இருந்து திரிபடைந்து மாலைதீவு என்னும் பெயர் வந்தது என்றும் சொல்லப்படுகின்றது. மாலைதீவின் அதிபராக அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் 2013-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை இருந்தார். 2018இல் நடந்த தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டார்.

சீன மாலைதீவு நட்புறவுப் பாலம்

மாலைதீவின் அதிபராக அப்துல்லா யாமீன் அப்துல் இருந்த போது மாலைதீவின் இரண்டு முக்கிய தீவுகளான மாலேயையும் ஹுல்ஹூலேயையும் இணைக்கும் நீண்ட நான்வழிச் சாலைகளைக் கொண்ட பாலம் ஒன்று சீனக் கடனில் கட்டப்பட்டது. அந்தப் பாலத்திற்கு சீன-மாலைதீவு நட்புறவுப் பாலம் என்ற பெயர் சூட்டப்பட்டது. இது 1972-ம் ஆண்டு உருவான சீன மாலைதீவு நட்புறவில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. சீனாவின் Belt & Road Initiative திட்டத்தின் கீழ்க் கட்டப்பட்ட இந்தப் பாலம் மாலைதீவு மக்களுக்கு பல வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது. அப்துல்லா யாமீன் அப்துல் சீனாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டியபடியால் அமெரிக்காவும் இந்தியாவும் அவரை ஆட்சியில் இருந்து அகற்றும் முயற்ச்சியில் இறங்கின. மாலைதீவின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய பல நூறு மில்லியன் டொலர் பெறுமதியான் கடனை சீனாவிடமிருந்து அப்துல்லா யாமீன் அப்துல் பெற்றுக் கொண்டார். அவர் மீது பல மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டன. நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் சென்று கொண்டிருந்த அப்துல்லா யாமீன் அப்துல் 2018 செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் யாரும் எதிர்பார்த்திருக்காத வகையில் தோல்வியடைந்தார். இந்தியாவிற்கு சார்ப்பான மாலைதீவு மக்களாட்சிக் கட்சியின் இப்ராஹிம் சொலி வெற்றியடைந்து நாட்டின் அதிபரானார்.

சீனக் கடன்

அஹமட் சியாம் என்ற மாலைதீவுத் தொழிலதிபருக்கு மாலைதீவு அரசின் உறுதியின் பேரில் 127.5மில்லியன் டொலர் கடனை சீனாவின் எக்ஸிம் வங்கி ஓர் ஆடம்பர உல்லாச விடுதி கட்டுவதற்கு வழங்கியிருந்தது. தனக்கு வேண்டிய ஆட்சியாளர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதால் விசனமடைந்த சீனா 2020இல் கடனை அஹமட் சியாம் அல்லது மாலைதீவு அரசு திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை செய்தது. 2020இல் கொவிட்-19 தொற்று நோயால் மாலைதீவின் உல்லாசப் பயணத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. தனியார் கடனுக்கு அரசு உறுதி வழங்குவது எங்கும் எப்போதும் இல்லாத ஒன்றாகும். சீனக் கடன் பொறி என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. கடன் வாங்கிய தொழிலதிபர் அஹமட் சியாமின் கட்சியும் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீர் அப்துல்லின் கட்சியும் கூட்டணியாக இயங்கின. இதனால் அரசு வழங்கிய உறுதி ஓர் ஊழலாகக் கருதப்பட்டது. மாலைதீவு அரசுக்கு சீனா வழங்கிய கடன் 1.5 பில்லியன் டொலர். மொத்த தேசிய உற்பத்தியாக 3.9 பில்லியன் டொலரைக் கொண்ட மாலைதீவுக்கு இது ஒரு பாரிய கடன் சுமையாகும். அரசின் உறுதி மொழியில் தனியாருக்கு வழங்கப்பட்ட கடன் எவ்வளவு என்பது பற்றி சரியான தகவல் இல்லை.

இந்தியா முதன்மையானது இந்தியாவே வெளியேறு என மாறியது

2018-ம் ஆண்டு சீன சார்பு அதிபர் யாமீர் அப்துல்லைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த இந்திய மற்றும் அமெரிக்க சார்பு இப்ராஹிம் மொஹமட் சொலியின் முதல் வெளிநாட்டுப்பயணம் இந்தியாவிற்கானதே. அவரது கொள்கையும் “இந்தியா முதன்மையானது” என அழைக்கப்பட்டது. இந்தியா அவருக்கு 1.4 பில்லியன் டொலர் கடனை வழங்கியதுடன் மாலைதீவின் கடற்படைத் துறைமுகத்தை அபிவிருத்து செய்யும் பொறுப்பையும் இந்தியா பெற்றுக் கொண்டது. புதிய இந்திய சார்பு அதிபர் பழைய சீன சார்பு அதிபரை 2018-ம் ஆண்டு பணச்சலவைக் குற்றச்சாட்டில் கைது செய்து சிறையிலடைத்தது. 2021 நவம்பர் மாதம் அந்த சீன சார்பு அதிபர் யாமீர் அப்துல்லாவை மாலைதீவு நீதிமன்றம் விடுதலை செய்தது. 2018-ம் ஆண்டு இந்திய சார்பு அதிபர் மொஹமட் சொலி தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து மாலைதீவில் இந்தியாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கு அவ்வப்போது சீன சார்புக் கட்சியான மாலைதீவு முற்போக்குக் கட்சியின் ஏற்பாட்டில் நடந்து வந்தன. அது பின்னர் “இந்தியாவே வெளியேறு” என்ற இயக்கமாக வளர்ச்சி பெற்றது. மாலைதீவுக் கடற்படைத்தளத்தில் இந்தியக் கடற்படையினர் அபிவிருத்தி என்ற போர்வையில் வந்து நிலை கொண்டிருப்பதாக மாலைதீவில் மக்கள் விசனமடைந்துள்ளனர்.

“இந்தியாவே வெளியேறு” இயக்கத்தை மாலைதீவில் சிறையில் இருந்து விடுதலையான முன்னாள் அதிபர் யாமீன் அப்துல் தீவிரப்படுத்தியுள்ளார். அவருக்கு சீனா மறைமுகமாக உதவி செய்தால் அவரால் இதை ஆட்சிக்கவிழ்ப்பு வரைக்கும் இட்டுச் செல்ல முடியுமா?. 2018இல் மாலைதீவில் செய்யப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு இந்தியாவிற்கு அமெரிக்காவும் உறுதுணையாக இருந்தது. அந்த ஆட்சி மாற்றத்தை பாதுகாக்கவும் அமெரிக்காவின் உதவி அவசியம். இந்தியாவிடம் அதன் சுற்றவுள்ள நாடுகளைக் கையாளும் திறன் இல்லை.

Tuesday, 11 January 2022

மேதகு மோடிக்கு கீழ்தகு தமிழ் அரசியல்வாதிகளின் கடிதம்





ஏழு தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து இந்திய தலைமை அமைச்சர் திரு மோடி அவர்களுக்கு 2022-01-11-ம் திகதி அனுப்பிய கடிதத்தினை கொழும்பில் இருந்து வெளிவரும் Daily Mirror நாளிதழ் அனுப்ப முதலே அம்பலப் படுத்தியுள்ளது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் திரு சம்பந்தர், தமிழரசுக் கட்சியின் சார்பில் திரு மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் நீதியரசர் சி வி விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலைக் கழகம் சார்பில் திரு செல்வம் அடைக்கலநாதன், மக்களாட்சி மக்கள் விடுதலை முன்னணி சார்பில் திரு த சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் சார்பில் சிறிகாந்தா ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். கடிதம் பகிரங்கப்படுத்தப் பட்டமை தமிழ் அரசியல்வாதிகளிடையே காட்டிக் கொடுப்போர் உள்ளனர் என்பதையும் அவர்களது கீழான நிலையையும் அம்பலப்படுத்துகின்றது.

இந்திய உத்தரவின் படி இந்தியாவிடம் கோரிக்கை

1987-ம் ஆண்டு செய்யப்பட்ட இலங்கை இந்திய அமைதி உடன்பாட்டின் படி இலங்கை அரசியலமைப்பு யாப்பிற்கான 13வது திருத்தத்தையும் மாகாணசபைச் சட்டத்தையும் அப்போது எல்லா தமிழ் அரசியல் கட்சிகளும் போராளி அமைப்புக்களும் அவை தமிழர்களின் பிரச்சனைக்கான தீர்வு அல்ல என நிராகரித்திருந்தன. அதை ஓரளவிற்காகவது நடைமுறைப்படுத்த 26 ஆண்டுகள் எடுத்தன. வடக்கிலும் கிழக்கிலும் மாகாண சபை முதல்வராக இருந்தவர்கள் அதனால் தமிழர்களுக்கு பயனில்லை எனக் கூறியிருந்தனர். ஒற்றையாட்சி அரசியலமைப்பு யாப்பின் கீழ் 13ஐ முழுமையாக நிறைவேற்றும் சாத்தியம் இல்லை என்பதை இரண்டு தட்வைகள் இலங்கை உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கள் சுட்டிக் காட்டியுள்ளன. இந்தச் சூழலில் 13ஐ முழுமையாக நிறைவேற்றும் படி இந்தியா விடுத்த உத்தரவின் படி இந்தியாவுடம் கோரிக்கை வைப்பது எழு தமிழ் கட்சிகளின் கீழான நிலையை எடுத்தியம்புகின்றது.

தும்புக்கட்டால் தொடமாட்டேன் என்றவருக்கு Suitcase?

தமிழ் கட்சிகளை கடந்த இரு ஆண்டுகளாக சந்தித்த இந்திய அரசுறவியலாளர்களும் (Diplomats) இந்திய அரசியல்வாதிகளும் எல்லா ஈழத் தமிழ்கட்சிகளும் ஒன்று பட்டு 13-ம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற இந்தியா ஆவன செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியாவிடம் முன் வைக்க வேண்டும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் உத்தரவிட்டிருந்தனர். நேற்று வரை தமிழ்த்தேசியக் கூட்டமைபின் தலைவர் திரு சம்பந்தன் 13வது திருத்தத்தை தும்புக்கட்டால் (துடைப்பக்கட்டை) கூட தொட மாட்டென் எனச் சொல்லிக் கொண்டிருந்தார். 2021 டிசம்பரில் இருந்து ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் இந்தியாவிற்கு எல்லாக் கட்சிகளும் இணைந்து ஒரு கடிதம் அனுப்ப வேண்டும் என்ற முயற்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டது. அவர்களுடன் இணைய தமிழரசுக் கட்சி மறுத்து வந்தது. ரெலோ முன்னடுப்பதால் அதன் தலைமையில் செயற்பட தமிழரசுக் கட்சி செயற்பட மறுப்பதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. திரு சுமந்திரன் அமெரிக்கா சென்று உரையாடல் நடத்தியமைக்கு போட்டியாக ரெலோ அமைப்பினர் ஒரு நாடகம் அரங்கேற்றி தங்களை மக்களிடையே பிரபலப்படுத்த முயற்ச்சிக்கின்றார்கள் எனவும் சிலர் கருத்து வெளியிட்டிருந்தனர்.

சட்ட அறிவும் பட்டறிவும் உள்ள விக்கி ஐயா

மாகாண சபையின் அதிகாரங்களைப் பற்றி புரிந்து கொள்ளக் கூடிய சட்ட அறிவும் அதில் முதலமைச்சராக இருந்த படியால்  நடைமுறையில் அதற்கு இருக்கும் சிக்கல்கள் பற்றியும் பட்டறிவும் உள்ளவர் விக்கினேஸ்வரன் ஐயா. அவர் மேதகு மோடியைச் சந்தித்த போது பதின்மூன்றாக திருத்தம் தீர்வாகாது என எடுத்து உரைத்தவர் அவர். அவரும் அத்திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றும் படி கோருக் கடிதத்தில் கையொப்பமிட்டமை ஆச்சரியம்ம் அளிக்கின்றது. 2007-2009இல் இனக்கொலை நடந்த போது உறக்க நிலையில் இருந்த விக்கி ஐயா அரசியலுக்கு வந்தவுடன் அவர் குங்குமப் பொட்டு இட்டிருப்பதாலும் சித்தார் வாசிக்கக்கூடியவராக இருப்பதாலும் அவர் நம்மவர் என ஒரு வட இந்திய ஊடகம் எழுதி இருந்தது. அதன் தாற்பரியம் இப்போது புரிகின்றது. சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழுந்தீர் ஐயா!

கடிதத்தில் உள்ளவற்றில் கவனிக்கப்பட வேண்டியவை:

1. இந்தியா 40 ஆண்டுகளாக தமிழர்களின் பிரச்சனைக்கு நீதியானதும் நிரந்தரமானதுமான தீர்வுகாண சுறுறுப்பாக செயற்பட்டு வருகின்றது. – பந்தி-2

2. 13வது திருத்தம் ஒற்றையாட்சியின் கீழ் அறிமுகப்படுத்தப் பட்டமையினால் அதிகாரப்பரவலாக்கம் செய்யப்படவில்லை. மாறாக பணிப்பரவலாக்கம்தான் செய்யப்பட்டது. – பந்தி-3

3. இணைப்பாட்சி கட்டமைப்பை நோக்கி நகரும் முயற்ச்சிகள் முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டன – பந்தி 4

இவற்றைத் தொடர்ந்து 13இலும் அதிக அதிகாரம் கொண்ட தீர்வுக்கு எடுத்த முயற்ச்சிகள் கடிதத்தில் அடுக்கிச் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் இந்தியா அவ்வப்போது வெளிவிட்ட கருத்துக்களும் அடங்கியுள்ளன.

கடிதத்தில் 13-03-2015இல் இலங்கை நாடாளுமன்றத்தில் திரு மோடி உரையாற்றும் போது சொன்ன பச்சைப் பொய்யும் உள்ளது:

·         இன்று இந்திய (மாநில) அரசுகளை வலிமையாக்குதல் எனது உயர் முன்னுரிமையாக இருக்கின்றது. நான் கூட்டுறவு இணைப்பாட்சியில் உறுதியான நம்பிக்கை உள்ளவன். நாம் (மாநில) அரசுகளை தேசிய முடிவெடுக்கும் செயற்பாட்டில் முறைசார் பங்காளிகளாக ஆக்குகின்றோம்.

திரு மோடி தொடர்ச்சியாக மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறித்துக் கொண்டிருக்கின்றார். முக்கியமாக இந்தியக் குடியரசின் அரசியலமைப்பு யாப்பின் 370து பிரிவினை அவரது அரசி நீக்கி கஷ்மீர் மக்கள் 70 ஆண்டுகளாக வைத்திருந்த அதிகாரத்தைப் பறித்துள்ளார். அவர் மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் முடிவுகளை எடுப்பவர்.

பல வரலாற்று நிகழ்வுகளை அடுக்கிச் சொல்லுதல் தமிழ் அரசியல்வாதிகள் வழமையாக வைக்கும் ஒப்பாரியாகும். அந்த ஒப்பாரியை திரு மோடிக்கு எழுதிய கடிதத்திலும் உள்ளடக்கியுள்ளனர். அவர்கள் மோடியிடம் வைக்கும் ஒட்டு மொத்தக் கோரிக்கையும் ஒரு பந்தியில் அடங்கியுள்ளது:

 

·         fully implement the provisions of the Thirteenth Amendment to the Constitution 

·         implement the clear commitments made by all sections of government from 1987 onwards and enable the Tamil speaking peoples to live with dignity, self-respect, peace and security in the areas of their historic habitation, exercising their right to self-determination within the framework of a united, undivided country. 

 

இத்தகைய சூழலில் இலங்கை அரசிடம் அதன் வாக்குறுதிகளை காப்பாற்றும் படி வலியுறுத்துமாறு மேதகு தங்களைக் கோருகின்றோம்:

தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட்ட பிரிக்கப்பட முடியாத நாட்டில் தன்மானத்துடனும், தன்-மரியாதையுடனும், அமைதியாகவும் பதுகாப்பாகவும் தங்கள் வரலாற்று அடிப்படையிலான வாழ்விடத்தில் வாழ்வதற்கும் தங்கள் உரிமைகளையும் தன்-முடிபுகளையும் (சுயநிர்ணய உரிமை) செயற்படுத்துவதற்கு 1987இல் இருந்து எல்லா அரசின் பிரிவினரும் செய்த வாக்குறுதிகளின்படி 13-ம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்தவும்.

கடிதத்தின் பின்னிணைப்பாக அவசரமாக கருத்தில் கொள்ள வேண்டிய ஏழு அம்சக் கோரிக்கை உள்ளடக்கப்பட்டுள்ளன:

1 13திருத்தமும் மாகாண சபையும்

2. மொழி உரிமையும் 16-ம் திருத்தமும்

3. குடிப்பரம்பல், காணி அபகரிப்பு, எல்லை மாற்றம்

4. குடியுரிமையும் சமத்துவமும்

5. பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைதியாகவுள்ளோர்

6. தேர்தல் சீர் திருத்தம்

7. ஒரு நாடு ஒரு சட்டம் என்னும் எண்ணக்கரு

உண்மையில் பார்க்கப் போனால் கடிதத்தில் உள்ளவற்றிலும் பார்க்க பின்னிணைப்பில் உள்ளவைதான் தமிழ் மக்களுக்கு அவசியம் தேவைப்படுகின்றது. ஒற்றையாட்சிக்குள் இவை எதுவும் நிறைவேற்றப் பட முடியாது. இலங்கை அரசியலமைப்பு யாப்பின் 20-திருத்தம் 13வது திருத்தத்தையும் மாகாணசபைச் சட்டத்தையும் வழுவிழக்கச் செய்து விட்டது. 2003-ம் ஆண்டு மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் இல்லை எனவும் 2006-ம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்தவை செல்லுபடியற்றது என்றும் இலங்கை உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு 13-ம் திருத்தத்தை செல்லாக் காசாக்கிவிட்டது.

கடிதத்தில் விடுபட்டவை.

1. 2009-ம் ஆண்டு முடிவடைந்த இனவழிப்பு போரிற்கு சிங்களத்திற்கு சார்பான இந்தியாவின் பங்களிப்பு தமிழர்களை விரக்தியடைய வைத்துள்ளது.

2. 2009-ம் ஆண்டு போர் முடிந்த பின்னர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கழகத்தில் ஐரோப்பிய ஒன்றியம் போரின் போது இலங்கைப் படையினர் மனித உரிமைகள் மீறியமையைக் கண்டிக்க கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கையை பாராட்டும் தீர்மானமாக இந்தியா மாற்றியமை தமிழர்களை விரக்தியடைய வைத்துள்ளது.  

3. இலங்கை அரசு தமிழர்கள் தொடர்பாக இந்தியாவிடம் கொடுத்த வாக்குறுதிகளை தொடர்ச்சியாக மீறுகின்ற போதிலும் இலங்கையுடன் இந்தியா நல்ல உறவை வளர்ப்பதாக இந்தியா சொல்லிக் கொண்டிருப்பது தமிழர்களை விரக்தியடைய வைத்துள்ளது.

4. இலங்கைப் போர்க்குற்றவாளிகளை/இனக்கொலையாளிகளை பன்னாட்டு சட்டங்கள் முன்னிறுத்தி தண்டிப்பதற்கு இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு தடையாக இருப்பது தமிழர்களை விரக்தியடைய வைத்துள்ளது

தமிழர்களிடையே உள்ள இந்த விரக்திகளை சீனர்கள் தமக்கு சாதகமாக்கி தமிழர்களை இந்தியாவிற்கு எதிராகத் திருப்பி தமிழர் நிலங்களில் சீனாவின் கேந்திரோபாய நிலைகளை அமைக்கும் அபாயம் உள்ளது.

இவற்றை மேற்கூறிய ஏழு கட்சியினரும் தமது கடிதத்தில் உள்ளடக்கத் தவறியமை அவர்களது அரசுறவியில் அறிவின்மையைச் சுட்டிக் காட்டுகின்றது. அவர்கள் இந்தியாவிடம் ஒரு மண்டியிடுகின்ற நிலையிலேயே தம் கடிதத்தை வரைந்துள்ளனர். 

கடிதத்தில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு ஒரே ஒரு வழி நாட்டைப் பிரிப்பதுதான்.

கடிதத்தை இந்த இணைப்பில் பார்க்கலாம்:

 https://www.dailymirror.lk/recomended-news/Seven-Tamil-Parties-Seek-Modis-Help-for-Implementing-13-A-in-Full/277-228622

Monday, 10 January 2022

சீனாவிற்கு அச்சுறுத்தலாகும் ஜப்பான் ஒஸ்ரேலிய ஒப்பந்தம்

  

பெல்ஜியம், நெதர்லாந்து, போலாந்து, ஆர்ஜெண்டீனா, கனடா, பிரேசில், மெக்சிக்கோ, ஜப்பான், ஒஸ்ரேலியா, இந்தியா ஆகிய நாடுகளை நடு-வலிமை நாடுகள் எனச் சொல்லலாம். இந்த நாடுகள் தமக்கு இசைவான வல்லரசு நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பைச் செய்கின்றன. அவ்வப்போது நடு-வலிமை நாடுகள் தமக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்வதுண்டு. இந்தியாவும் ஒஸ்ரேலியாவும் இருபுற அனுமதி ஒப்பந்தங்களை (Reciprocal Access Agreements) 2020-ம் ஆண்டு செய்தன. அதன் படி இரண்டு நாடுகளும் ஒன்றின் தளங்களை மற்றது தனது படைத்துறையின் வான்கலன்களை, கடற்கலன்களை பழுதுபார்க்கவும், பராமரிக்கவும், மீள்நிரப்பல் செய்யவும் பாவிக்க முடியும். இந்தியா இதே போன்ற ஒப்பந்தங்களை அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் செய்திருந்தது. 2022 ஜனவரி 6-ம் திகதி ஜப்பானும் ஒஸ்ரேலியாவும் இருபுற அனுமதி ஒப்பந்தந்தத்தைச் செய்துள்ளன.

ஒஸ்ரேலிய – ஜப்பானிய உறவு

ஒஸ்ரேலியர்களும் ஜப்பானியர்களும் ஒருவரை ஒருவர் வெறுப்பதில்லை. ஜப்பான் கிழக்கில் உள்ள ஒரு மேற்கு நாடாக கருதப்படுகின்றது. ஒஸ்ரேலியா மேற்கு நாட்டவர் குடியேறி ஆட்சி செய்யும் கிழக்கு நாடு. 2017-ம் ஆண்டில் இருந்தே ஒஸ்ரேலியாவும் ஜப்பானும் இருபுற அனுமதி ஒப்பந்தந்தத்தை செய்யும் பேச்சு வார்த்தையை செய்து வந்தன. ஆனால் 2020-ம் ஆண்டு அந்தப் பேச்சு வார்த்தை ஜப்பானில் உள்ள இறப்புத் தண்டனைச் சட்டத்தால் தேக்க நிலையை அடைந்திருந்தது. ஆனால் அதிகரித்து வரும் சீன அச்சுறுத்தலால் இரு நாடுகளும் நெருங்கி ஒத்துழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஒஸ்ரேலியாவும் ஜப்பானும் தமக்கிடையிலேயான பாதுகாப்பு ஒத்துழைப்பில் இன்னும் ஒரு மைல் கல்லைத் தாண்டியுள்ளன.

கேந்திரோபாய பங்காண்மை நிலைக்கு உயற்ச்சி

நாடுகளுக்கிடையிலேயான உறவுகளின் உச்ச நிலையை கூட்டு (Alliance) எனவும் அதற்கு அடுதத நிலையை கேந்திரோபாய பங்காண்மை (Strategic Partnership) எனவும். அதனிலும் கீழான நிலையின் உள்ள உறவை பங்காண்மை எனவும். மிகக் குறைந்த உறவை நட்பு நாடு எனவும் வகைப்படுத்தலாம். கூட்டு நாடுகள் எச்சூழலிலும் ஒரு நாட்டுக்கு மற்ற நாடு உதவும். கூட்டு நாடுகளின் வெளியுறவுக் கொள்கை பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கும். எல்லா படைத்துறைத் தொழில்நுட்பத்தையும், உளவுத்தகவல்களையும் அவை தடையின்றிப் பகிர்ந்து கொள்ளும். உதாரணமாக அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் உள்ள உறவு கூட்டு உறவாகும். ஆனால் அமெரிக்கா F-22 போர் விமானத்தை பிரித்தானியாவிற்கு விற்பனை செய்யவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கேந்திரோபாய பங்காண்மையில் பல வகையில் இரு நாடுகள் ஒன்றிற்கு ஒன்று உதவியாக இருக்கும். உதாரணம கட்டார் – அமெரிக்க உறவு. அவை பயங்கரவாதத்திற்கு எதிராகவும் பிராந்திய அமைதி தொடர்பாகவும் ஒத்துழைக்கின்றன. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு கேந்திரோபாய பங்காணமையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றது. பங்காண்மையில் இருக்கும் நாடுகள் குறித்த சில வகைகளில் ஒன்றிற்கு ஒன்று உதவியாக இருக்கும். நட்பு நாடுகள் ஒன்றிற்கு ஒன்று உலக அரங்கில் அனுசரணையாக நடந்து கொள்ளும். ஒஸ்ரேலிய ஜப்பானிய உறவு இருபுற அனுமதி ஒப்பந்தம் செய்த பின்னர் கேந்திரோபாய பங்காண்மை நிலைக்கு உயர்ந்துள்ளது.

வலிமை மிக்க கடற்படைகள்

எடை அடிப்படையில் ஒஸ்ரேலியாவின் கடற்படை உலகின் 16வது பெரிய கடற்படையாக இருக்கின்ற போதிலும் புதிய படைக்கலன்கள் உபகரணங்கள் அடிப்படையிலும் கடற்போர் அனுபவத்திலும் ஒஸ்ரேலியக் கடற்படை உலகின் முன்னணிக் கடற்படையாகும். தற்பாதுகாப்பு படையான ஜப்பானின் கடற்படை Kaga, Izumo என்னும் இரண்டு உலங்கு வானுர்திக் கப்பல்களையும் கொண்டுள்ளது. இந்த இரண்டு கப்பல்களாலும் பன்னிரண்டுக்கு மேற்பட்ட அமெரிக்காவின் முன்னணி போர்விமானமான F-35-Bகளைக் காவிச் செல்ல முடியும். 114 கடற்கலன்களைக் கொண்டது ஜப்பானியக் கடற்படை. ஜப்பானின் நாசகாரிக் கப்பல்களினதும் தரைசார் கப்பல்களினதும் மொத்த எண்ணிக்கை பிரித்தானியாவினதும் பிரான்ஸினதும் மொத்த எண்ணிக்கையிலும் அதிகமானது. தாக்குதிறனின் ஜப்பானியக் கடற்படை சீனாவை விஞ்சக் கூடியது எனக் கருதப்படுகின்றது. ஜப்பானிடம் சிறந்த கப்பல் கட்டுமான வசதிகள் உண்டு. ஜப்பானின் கடற்போக்குவரத்திற்கு எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லாத வகையில் காப்பாற்றும் வலிமை ஜப்பானுக்கு உண்டு எனச் சொல்லப்படுகின்றது. 2011-ம் ஆண்டு ஜப்பானில் நடந்த புவி அதிர்ச்சியின் போது ஜப்பானியக் கடற்படையின் துரித செயற்பாடு உலகத்தை வியப்பில் ஆழ்த்தியது. ஜப்பானிய ஒஸ்ரேலியக் கடற்படை ஒத்துழைப்பு கடற்போர் அனுபவமில்லாத சீனாவிற்கு பெரும் சவாலாக அமையும்.

குவாட் படைத்துறை ஒத்துழைப்பை ஆரம்பிக்கவில்லை

2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் திகதி வெள்ளை மாளிகையில் அமெரிக்கா, ஒஸ்ரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய குவாட் உரையாடல் நாடுகளின் அரச தலைவர்கள் ஒரு கலந்தாலோசனையை நடத்தினர். அந்த ஒன்று கூடலின் முடிவில் அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் படைத்துறை ஒத்துழைப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை. குவாட் உரையாடல் நாடுகளின் அமைச்சர்கள் அரசுறவியலாளர்கள் கலந்துரையாடுவாரக்ள் எனக் குறிப்பிடப்படடிருந்தது. ஆனால் படைத்துறையைச் சேர்ந்தவர்கள் கலந்துரையாடுவார்கள் என்று குறிப்பிடப்படவில்லை. அதனால் குவாட் ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக இன்னும் உருவெடுக்கவில்லை என்பது உறுதியாகின்றது. அது மட்டுமல்ல ஒஸ்ரேலியா அமெரிக்காவுடனும் பிரித்தானியாவுடனும் ஓக்கஸ் என்னும் ஒரு பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டை 2021 செப்டம்பரில் செய்துள்ளது. இந்த நிலையில் ஜப்பான் தன்னுடைய பாதுகாப்பை உறுதி செய்ய பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஓரு பகுதியாக ஒஸ்ரேலியாவுடன் இருபுற அனுமதி ஒப்பந்தத்தை (Reciprocal Access Agreement) செய்துள்ளது.

கொதிக்குக் கடலில் குதிக்கும் நட்பு

கிழக்குச் சீனக் கடலில் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் ஒரு முறுகல் நிலை நீண்ட காலமாக இருந்து வருகின்றது. 2013 நவம்பரில் கிழக்குச் சீனக் கடலில் சீனா பத்து இலட்சம் சதுர மைல்களைக் கொண்ட கிழக்குச் சீனக் கடலுக்கு மேலான வான் பரப்பை தன்னுடைய வான் பாதுகாப்பு பிராந்தியமாகப் பிரகடனப் படுத்தியது. அதை அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் ஏற்க மறுத்ததுடன் தமது போர் விமானங்களை தொடர்ச்சியாக அங்கு பறக்க விட்டு தம் ஆட்சேபனையைத் தெரிவித்தன. சீனாவின் இது போன்ற அச்சுறுத்தலால் ஜப்பான் தற்பாதுகாப்பு படையை மட்டும் வைத்திருக்க முடியும் என்ற அதனது அரசியலமைப்பு யாப்பிற்கு புதிய வியாக்கியானங்களைக் கொடுத்து தன் படைவலிமையைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றது. ஒஸ்ரேலிய ஜப்பானிய நட்பு கிழக்குச் சீனக் கடலில் சீனாவிற்கு பாதகமாக அமையலாம்.

ஆழக் கடல் ஆளப் போகும் ஒஸ்ரேலியா

ஒஸ்ரேலியா அமெரிக்காவிடமிருந்து பெறவுள்ள அணு வலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒஸ்ரேலியாவில் இருந்து புறப்பட்டு பசுபிக்கடல், தென் சீனக் கடல், கிழக்குச் சீனக் கடல், ஜப்பானியக் கடல் ஆகியவற்றினூடாக ஆர்க்டிக் வலயம் வரை தொடர்ச்சியா தங்குமிடமின்றிப் பயணிக்கக் கூடியவை. அவற்றால் ஜப்பானிய துறைமுகங்களைப் பாவிக்க முடியும். பல தீவுகளைக் கொண்ட ஜப்பானுடனான ஒப்பந்தம் ஒஸ்ரேலியாவின் கடற்கலன்கள் மேற்கூடிய ஐந்து கடல்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் வலிமையை ஏற்படுத்தும்.

மலாக்காவில் சீனா மல்லாக்காக விழுத்தப்படுமா?

சீனாவின் கடற்பாதையில் முக்கிய திருகுப் புள்ளியாகிய மலாக்கா நீரிணைக்கு அண்மையாக உள்ள இந்தியாவிற்கு சொந்தமான அந்தமான் மற்றும் நிக்கோபா தீவுகளை இப்போது இந்தியாவுடன் அமெரிக்கா, ஒஸ்ரேலியா போன்ற நாடுகள் பாவிக்கலாம். அதற்கு அண்மையாக உள்ள ஒஸ்ரேலியாவிற்கு சொந்தமான கொக்கோஸ் மற்றும் கிறிஸ்மஸ் தீவுகளை ஒஸ்ரேலியாவுடன் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் படையினர் பாவிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் சீனாவிற்கு எதிரான போர் என்று வரும்போது இந்த நான்கு நாடுகளும் இணைந்து மலாக்கா நீர்ணையூடாக சீனாவின் போக்கு வரத்தை துண்டிக்கலாம் என்ற அச்சுறுத்தல் சீனாவிற்கு ஏற்பட்டுள்ளது. சீனாவின் மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகள் இலக்குத் தப்பாமல் தாக்குமா?

Friday, 7 January 2022

மக்கள் எழுச்சி கஜக்ஸ்த்தானை ஒரு புவிசார் அரசியல் போட்டிக் களமக்குமா?

 


கஜக்ஸ்த்தானில் உருவாகியுள்ள மக்கள் எழுச்சியை அடக்க இரசியா, ஆர்மீனியா, பெலரஸ், கிர்கிஸ்த்தான் ஆகிய நாடுகளில் இருந்து படையினர் அங்கு 2021 ஜனவரி 6-ம் திகதி சென்றுள்ளனர். எரிபொருள் மற்றும் கனிம வளங்கள் நிறைந்த கஜக்ஸ்த்தானில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையால் உலகச் சந்தையில் யுரேனியத்தின் விலை எட்டு விழுக்காட்டால் அதிகரித்துள்ளது. எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளது. உலக யுரேனிய உற்பத்தியில் 40% கஜக்ஸ்த்தானில் செய்யப்படுகின்றது. உலக எரிபொருள் உற்பத்தியில் சவுதி அரேபியா செய்யும் ஆதிக்கத்திலும் பார்க்க நான்கு மடங்கு ஆதிக்கத்தை கஜக்ஸ்த்தான் செய்கின்றது. 140 நாடுகளைக் கொண்ட படைவலிமைப் பட்டியலில் கஜக்ஸ்த்தான் 61-ம் இடத்தில் இருக்கின்றது. தொழில்நுட்ப வளர்ச்சியில் பின் தங்கியுள்ள கஜக்ஸ்த்தான் அதை முன்னேற்ற பெரும் முயற்ச்சி எடுக்கின்றது. 

பூகோள அமைப்பும் வரலாறும்

உலகிலேயெ தரையால் சூழப்பட்ட நாடுகளில் கஜக்ஸ்த்தான் நிலப்பரப்பில் மிகப் பெரிய நாடாகும். இந்த மத்திய ஆசிய நாடு கிழக்கில் ஆசிய நாடாகிய சீனாவையும் மேற்கில் கிழக்கு ஐரோப்பாவின் கஸ்பியன் கடலையும் இரசியாவையும் வடக்கில் இரசியாவையும் தெற்கில் தேர்க்மெனிஸ்த்தான், உஸ்பெக்கிஸ்த்தான், கிரிகிஸ்த்தான் ஆகியவற்றையும் தன் எல்லைகளாகக் கொண்டுள்ளது. பத்தொன்பது மில்லியன் மக்களைக் கொண்ட கஜக்ஸ்த்தானில் 3.5மில்லியன் இரசியர்கள் வாழ்கின்றனர். எட்டாம் நூற்றாண்டில் பக்தாத் கலிஃபாவின் படையெடுப்பின் பின்னர் அது ஓர் இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட நாடாக மாற்றப்பட்டது. 13-ம் நூற்றாண்டில் நடந்த மங்கோலியப் படையெடுப்பின் பின்னர் தேர்கிக் இனக்குழுமம் அங்கு குடியேறியது. அது பின்னர் கஜக் என்னும் இனக்குழுமமாக மாற்றம் பெற்றது.

இரசிய ஆக்கிரமிப்பு

19-ம் நூற்றாண்டில் இரசியர்கள் மொங்கோலிய ஆட்சியை அகற்றி கஜக்ஸ்த்தானை ஆக்கிரமித்துக் கொண்டனர். பின்பு அங்கு பல இரசியர்களும் உக்ரேனியர்களும் குடியேறினர். ஏனைய நடுவண் ஆசிய நாடுகளில் 90%இற்கும் மேற்பட்டவரகள் இஸ்லாமியர்களாக இருக்கின்ற வேளையில் கஜக்ஸ்த்தானில் 70% இஸ்லாமியர்கள் மட்டுமே வாழ்கின்றனர். 23.1% கிருத்தவர்கள் அங்கு வாழ்கின்றனர். 1920இல் கஜக்ஸ்த்தான் சோவியத் ஒன்றியத்தில் இணைக்கப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் நூற்றுக் கணக்கான அணுக்குண்டு பரிசோதனை கஜக்ஸ்த்தானில் செய்யப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் ஏவூர்தி (ராக்கெட்) தளமும் அங்கு அமைக்கப்பட்டது. விண்வெளிக்கு முதலில் சோவியத் ஒன்றியம் மனிதனை அனுப்பிய ஏவூர்தி கஜக்ஸ்த்தானில் இருந்து ஏவப்பட்டது. 1986இல் சோவியத் அதிபர் மிக்காயில் கோர்பச்சேவ் கஜக்ஸ்த்தானின் பொதுவுடமைக் கட்சியின் தலைவராக இருந்த கஜக்ஸ்த்தானியரை பதவி நீக்கம் செய்துவிட்டு அந்த ஓர் இரசியரை பதவிக்கு அமர்த்திய போது அங்கு மக்கள் சோவியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சோவியத் வீழ்ச்சியும் தனி நாடாகிய கஜக்ஸ்த்தான்

1991இல் சோவியத் ஒன்றியம் உடைந்த போது கஜக்ஸ்த்தான் ஒரு தனி நாடாகியது. இரசியாவின் படைத்தளம், ஏவூர்தித் தளம் போன்றவை அங்கு இன்றுவரை உள்ளன. கஜக்ஸ்த்தானின் முதலாவது அதிபராக நர்சுல்த்தான் நாசர்பாயேவ் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரசியா தலைமையிலான சுதந்திர நாடுகளின் பொதுநலவாயத்தில் கஜக்ஸ்த்தானும் இணைந்து கொண்டது. 2004-ம் ஆண்டு உருவான இரசியா தலைமையிலான கூட்டு பாதுகப்பு ஒப்பந்த அமைப்பிலும் கஜக்ஸ்த்தான் இணைந்து கொண்டது. 2001-ம் ஆண்டு ஷங்காய் ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பிலும் அது இணைந்து கொண்டது. கஜக்ஸ்த்தானின் மசகு எண்ணெய் இருப்பு உலகில் 11வது இடத்தில் இருக்கின்றது. 80ரில்லியன் கன அடி அளவு கொண்ட எரிவாயுவும் அங்கு இருக்கின்றது. அத்துடன் குரோமைட், செப்பு, வொல்ஃப்ராம் (Wolfram), ஈயம், துத்த நாகம், யுரேனியம் ஆகியவை உட்பட பல கனிம வளங்களும் நிறைய உள்ளன. அதனால் அங்கு தன் ஆதிக்கத்தை செலுத்த சீனா இரகசியமாக பல நகர்வுகளைச் செய்துவருகின்றது. சீனாவின் தரைவழிப் பட்டுப்பாதைத் திட்டத்தில் கஜக்ஸ்த்தானிற்கு முக்கிய இடமுண்டு. சீனாவின் இஸ்லாமியர்கள் வாழும் மாகாணமான சிஞ்சியாங்கில் உள்ள பிரச்சனையால் கஜக்ஸ்த்தான் சீனாவிற்கு முக்கியத்துவம் பெறுகின்றது.

இரசிய எதிர்ப்பு

சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்த பின்னர் கஜக்ஸ்த்தான் இரசியாவுடன் நல்ல நட்புறவைப் பேணுகின்ற வேளையில் தமது நாட்டில் இரசிய ஆதிக்கத்தை அகற்றிக் கொண்டிருக்கின்றது. கஜக்ஸ்த்தானில் இருக்கும் இரசிய ஏவூர்தி தளத்தினால் அங்கு சூழல் மாசுபடுவதாக எதிர்ப்புக் காட்டப்படுகின்றது. துருக்கி, ஈரான், இரசியா ஆகிய நாடுகள் கலந்து கொள்ளும் சிரிய அமைதிப் பேச்சு வார்த்தை கஜக்ஸ்த்தான் தலைநகர் நுர் சுல்த்தானில் (அஸ்டானா) நடக்கின்றது. கஜக்ஸ்த்தான் ஒர் இஸ்லாமிய அரசைக் கொண்ட நாடாக இருக்க வேண்டும் என Hizb ut Tahrir என்னும் ஒரு மதவாத அமைப்பு போராட்டம் நடத்துகின்றது.

எரிபொருள் விலை ஏற்றம்

கஜக்ஸ்த்தான் மக்களின் தனிநபர் வருமானம் $24,380 ஆக இருக்கின்றது. இதை இந்தியாவின் தனிநபர் வருமானமான $6,390 உடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறப்பாக இருக்கின்ற போதிலும் வருமான சமபக்கீட்டின்மை கஜக்ஸ்த்தானிலும் மோசமாகவே இருக்கின்றது. எரிபொருள் வளம் நிறைந்த கஜக்ஸ்த்தானில் 2022 ஜனவரி 2-ம் திகதி எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக தீவிரமான போராட்டத்தை மக்கள் ஆரம்பித்தனர். பல அரச சொத்துக்கள் தீயிடப்பட்டன. காவற்றுறயினருக்கு சொந்தமான பல வண்டிகள் தீக்கிரையாகின. ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகரிலுள்ள விமானநிலையத்தைக் கைப்பற்றினர். ஆர்ப்பாட்டம் வெறும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிரானதாக மட்டுமாக அமையாமல் நாட்டின் எதிர்காலம், சிறந்த மக்களாட்சி ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது. பிராந்திய தலைவர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பதை விடுத்து தேர்தல் மூலம் மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகின்றது.

இரசியாவிற்கு கஜக்ஸ்த்தான் முக்கியம்

நர்சுல்த்தான் நாசர்பாயேவ் தொடரிந்து 28 ஆண்டுகள் கஜக்ஸ்த்தான் அதிபராக இருந்து 2009இல் பதவி விலகிய போதும் நாட்டின் பாதுகாப்புச் சபையின் தலைவராக இருந்து ஆட்சியில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தி வந்தார். 2022 ஜனவரி 5-ம் திகதி நாட்டில் மக்கள் எழுச்சி நடந்து கொண்டிருக்கும் போது அவரை அப்பதவியில் இருந்து அகற்றிய பின்னர் தற்போதைய அதிபர் காசிம் ஜொமாட் தொக்கயேவ் பாதுகாப்புச் சபைத் தலைவரானார். முழு அமைச்சரவையையும் அவர் பதவி நீக்கம் செய்தார். பாதுகாப்புச் சபைத் தலைவராக அவர் செய்த முதல் நகர்வு மக்கள் எழுச்சியை அகற்ற இரசியப் படையினரை நாட்டுக்கு அழைத்தமையே. அழைப்பை மிகத்துரிதமாக ஏற்றுக் கொண்டு புட்டீன் செய்த நகர்வைப் பார்க்கும் போது அது ஏற்கனவே திட்டமிட்டுச் செய்தது போல் இருக்கின்றது. கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த நாடுகள் அமைப்பு படையினர் என்ற முகமூடியுடன் ஆர்மேனியா, பெலரஸ், கிரிகிஸ்த்தான், தஜிகிஸ்த்தான் ஆகிய நாட்டுப் படைகளுடன் இரசியப் படையினர் கஜிக்ஸ்த்தான் கிளர்ச்சியை அடக்கச் சென்றுள்ளனர். கஜக்ஸ்த்தானில் உள்ள பைக்கொனூரில் உள்ள ஏவூர்தித் தளத்தையும் பல்வேறு படைத்தளஙக்ளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இரசியாவிற்கு உண்டு. இரசியத் தேசியவாதிகள் கஜக்ஸ்த்தானின் வட பகுதியை இரசியாவுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். கஜக்ஸ்த்தானின் எரிபொருள் வளத்தில் 40% அதன் வட பிராந்தியத்தில் இருக்கின்றது. கஜக்ஸ்த்தான் ஆட்சியாளர்கள் இரசிய ஆதரவு உள்ளவர்களாக இருப்பதால் அதற்கான அவசியம் ஏற்படவில்லை என்பதால் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் அதைச் செய்யவில்லை. இரசியாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் உக்ரேனையும் ஜோர்ஜியாவையும் அடக்கும் முயற்ச்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

நிறப்புரட்சியா?

மேற்கு நாடுகளுக்கு எதிரான ஆட்சியாளர்கள் இருக்கும் நாடுகளில் மேற்கு நாடுகளின் ஆதரவுடன் நடக்கும் புரட்சியை நிறப்புரட்சி என இரசியா, சீனா போன்ற நாடுகள் அழைப்பதுண்டு. ஜோர்ஜியாவில் நடந்ததை ரோஸ் புரட்சி எனவும், உக்ரேனில் நடந்ததை ஒரேஞ் (ஆரேஞ்) புரட்சி எனவும் அழைக்கப்பட்டது. தற்போது கஜக்ஸ்த்தானில் நடப்பதையும் ஒரு நிறப்புரட்சி என்கின்றனர். பெலரஸ்ஸில் 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இரசிய ஆதரவு ஆட்சியாளர் முறைகேடாக வெற்றி பெற்றார் எனச் செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக மேற்கு நாடுகள் செயற்பட்டன. இரசியாவில் இருந்து சென்ற தனியார் படை (கூலிப்படைக்கான கௌரவர் பெயர்) பெலரஸ் சென்று கிளர்ச்சியை அடக்கியதாக குற்றம் சாட்டப்படுகின்றது. கஜக்ஸ்த்தானில் நடக்கும் எழுச்சியும் அடக்கப்படலாம். ஆனால் இலகுவனதாக இருக்காது. தீவிரவான அடக்குமுறை பாவிக்கப்படும் போது கஜக்ஸ்த்தானியர்கள் நடுவே இரசியாமீதான வெறுப்பு அதிகமாகும். 

பனிப்போர்-2?

பனிப்போரில் கிடைத்த வெற்றியை உறுதி செய்ய நேட்டோ நாடுகள் தொடர்ந்து முயற்ச்சி செய்து கொண்டிருக்கின்றன. பனிப்போரில் ஏற்பட்ட தோல்வியை ஈடு செய்து இரண்டாம் சோவியத் ஒன்றியத்தை உருவாக்கும் புட்டீனின் முயற்ச்சிக்கு கஜக்ஸ்த்தானில் ஆப்பு வைக்கப்படுவதை அவர் அனுமதிக்க மாட்டார். கஜக்ஸ்த்தான் மக்கள் எழுச்சி எப்படி தீவிரமடைகின்றது எப்படித் திசை திருப்பப்படப் போகின்றது, எப்படி அடக்கப்படப் போகின்றது என்பதில் கஜக்ஸ்த்தானின் எதிர்காலமும் அதை ஒட்டி நிகழும் புவிசார் அரசியல் போட்டியும் அமையப்போகின்றது. பனிப்போர்-2 இரண்டின் ஆரம்பப் புள்ளிகளாக உக்ரேனும் கஜக்ஸ்த்தானும் அமையலாம். கஜக்ஸ்த்தானின் எதிர்க்கட்சிகள் இரசியாவின் ஆதிக்கத்தில் இருந்து தமது நாட்டை மீட்க மேற்கு நாடுகள் உதவ வேண்டும் எனக் கோரியுள்ளனர். 

துருக்கி தற்போது கஜக்ஸ்த்தான் ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்து எதையும் வெளிவிடவில்லை. துருக்கி இரசியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால் கஜக்ஸ்த்தான் ஒரு புவிசார் போட்டிக் களமாக மாறும். உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தால் கஜக்ஸ்த்தானை இரசியாவிற்கு எதிராக மாற்றும் முயற்ச்சியில் துருக்கியுடன் மேற்கு நாடுகள் இணையலாம்.

மத்திய ஆசிய நாடுகள் பற்றிய முன்னைய பதிவு:

https://www.veltharma.com/search/label/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...