Thursday, 13 January 2022

"இந்தியாவே வெளியேறு” இயக்கம் மாலைதீவில் தீவிரமாகின்றது

 

 

முன்னாள் மாலைதீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் அவர்கள் “இந்தியாவே வெளியேறு” இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பது அந்த இயக்கத்திற்கு பெரும் வலுவைச் சேர்த்துள்ளது. மாலை தீவு இலங்கை நகர் கொழும்பில் இருந்து தென் மேற்காக 843 கிலோ மீட்டர் தொலைவிலும் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து 914 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கின்ற ஒரு சிறிய தீவுக் கூட்டமாகும். இந்து மாக்கடல் பிரதேசத்தில் அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தீவிரமாகப் போட்டி போடும் நிலையில் மாலை தீவும் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கின்றது.

மாலைதீவின் வரலாறு

கிமு 300இற்கு முன்பு இருந்தே தமிழர்கள் மாலைதீவில் வாழ்ந்தார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழர்களால் ஆளப்பட்ட மாலை தீவு 12-ம் நூற்றாண்டில் இஸ்லாமிய நாடாக்கப்பட்து. மாலைதீவை 16-ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரும், 17-ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களும் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரும் கைப்பற்றி ஆட்சி செய்தனர். 1953-ம் ஆண்டில் பொதுநலவாய நாடுகளின் கீழ் ஒரு குடியரசாகியது. 1965-இல் மாலைதீவு முழுமையான சுதந்திர நாடாகியது. சிறிய நாடக இருந்த போதிலும் உலக அரங்கில் அது தனது செயற்பாட்டில் அதிக அக்கறை காட்டியது. பொதுநலவாயம், சார்க், கூட்டுச்சேரா அமைப்பு போன்றவற்றில் உறுப்புரிமையும் பெற்றது. 1980இல் இருந்து அது உல்லாசப் பயணிகளைக் கவரும் நாடாக மாறியது. அதன் பொருளாதாரம் மீன்வளத்திலும் உல்லாசப் பயணத்திலும் தங்கியுள்ளது. 150 தீவுகளைக் கொண்ட மாலைதீவின் நிலப்பரப்பு 90,000 சதுர கிலோ மீட்டராகும். அங்கு 540,000 மக்கள் வசிக்கின்றனர். மாலை போன்ற தோற்றம் கொண்ட தீவுக் கூட்டம் என்பதால் மாலை என்னும் தமிழ்ச்சொல்லில் இருந்தே அது மாலைதீவு என்ற பெயர் பெற்றது என்றும் சொல்லப்படுகின்றது. அதேவேளை மஹால் என்ற அரபுச் சொல்லில் இருந்து திரிபடைந்து மாலைதீவு என்னும் பெயர் வந்தது என்றும் சொல்லப்படுகின்றது. மாலைதீவின் அதிபராக அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் 2013-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை இருந்தார். 2018இல் நடந்த தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டார்.

சீன மாலைதீவு நட்புறவுப் பாலம்

மாலைதீவின் அதிபராக அப்துல்லா யாமீன் அப்துல் இருந்த போது மாலைதீவின் இரண்டு முக்கிய தீவுகளான மாலேயையும் ஹுல்ஹூலேயையும் இணைக்கும் நீண்ட நான்வழிச் சாலைகளைக் கொண்ட பாலம் ஒன்று சீனக் கடனில் கட்டப்பட்டது. அந்தப் பாலத்திற்கு சீன-மாலைதீவு நட்புறவுப் பாலம் என்ற பெயர் சூட்டப்பட்டது. இது 1972-ம் ஆண்டு உருவான சீன மாலைதீவு நட்புறவில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. சீனாவின் Belt & Road Initiative திட்டத்தின் கீழ்க் கட்டப்பட்ட இந்தப் பாலம் மாலைதீவு மக்களுக்கு பல வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது. அப்துல்லா யாமீன் அப்துல் சீனாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டியபடியால் அமெரிக்காவும் இந்தியாவும் அவரை ஆட்சியில் இருந்து அகற்றும் முயற்ச்சியில் இறங்கின. மாலைதீவின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய பல நூறு மில்லியன் டொலர் பெறுமதியான் கடனை சீனாவிடமிருந்து அப்துல்லா யாமீன் அப்துல் பெற்றுக் கொண்டார். அவர் மீது பல மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டன. நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் சென்று கொண்டிருந்த அப்துல்லா யாமீன் அப்துல் 2018 செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் யாரும் எதிர்பார்த்திருக்காத வகையில் தோல்வியடைந்தார். இந்தியாவிற்கு சார்ப்பான மாலைதீவு மக்களாட்சிக் கட்சியின் இப்ராஹிம் சொலி வெற்றியடைந்து நாட்டின் அதிபரானார்.

சீனக் கடன்

அஹமட் சியாம் என்ற மாலைதீவுத் தொழிலதிபருக்கு மாலைதீவு அரசின் உறுதியின் பேரில் 127.5மில்லியன் டொலர் கடனை சீனாவின் எக்ஸிம் வங்கி ஓர் ஆடம்பர உல்லாச விடுதி கட்டுவதற்கு வழங்கியிருந்தது. தனக்கு வேண்டிய ஆட்சியாளர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதால் விசனமடைந்த சீனா 2020இல் கடனை அஹமட் சியாம் அல்லது மாலைதீவு அரசு திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை செய்தது. 2020இல் கொவிட்-19 தொற்று நோயால் மாலைதீவின் உல்லாசப் பயணத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. தனியார் கடனுக்கு அரசு உறுதி வழங்குவது எங்கும் எப்போதும் இல்லாத ஒன்றாகும். சீனக் கடன் பொறி என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. கடன் வாங்கிய தொழிலதிபர் அஹமட் சியாமின் கட்சியும் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீர் அப்துல்லின் கட்சியும் கூட்டணியாக இயங்கின. இதனால் அரசு வழங்கிய உறுதி ஓர் ஊழலாகக் கருதப்பட்டது. மாலைதீவு அரசுக்கு சீனா வழங்கிய கடன் 1.5 பில்லியன் டொலர். மொத்த தேசிய உற்பத்தியாக 3.9 பில்லியன் டொலரைக் கொண்ட மாலைதீவுக்கு இது ஒரு பாரிய கடன் சுமையாகும். அரசின் உறுதி மொழியில் தனியாருக்கு வழங்கப்பட்ட கடன் எவ்வளவு என்பது பற்றி சரியான தகவல் இல்லை.

இந்தியா முதன்மையானது இந்தியாவே வெளியேறு என மாறியது

2018-ம் ஆண்டு சீன சார்பு அதிபர் யாமீர் அப்துல்லைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த இந்திய மற்றும் அமெரிக்க சார்பு இப்ராஹிம் மொஹமட் சொலியின் முதல் வெளிநாட்டுப்பயணம் இந்தியாவிற்கானதே. அவரது கொள்கையும் “இந்தியா முதன்மையானது” என அழைக்கப்பட்டது. இந்தியா அவருக்கு 1.4 பில்லியன் டொலர் கடனை வழங்கியதுடன் மாலைதீவின் கடற்படைத் துறைமுகத்தை அபிவிருத்து செய்யும் பொறுப்பையும் இந்தியா பெற்றுக் கொண்டது. புதிய இந்திய சார்பு அதிபர் பழைய சீன சார்பு அதிபரை 2018-ம் ஆண்டு பணச்சலவைக் குற்றச்சாட்டில் கைது செய்து சிறையிலடைத்தது. 2021 நவம்பர் மாதம் அந்த சீன சார்பு அதிபர் யாமீர் அப்துல்லாவை மாலைதீவு நீதிமன்றம் விடுதலை செய்தது. 2018-ம் ஆண்டு இந்திய சார்பு அதிபர் மொஹமட் சொலி தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து மாலைதீவில் இந்தியாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கு அவ்வப்போது சீன சார்புக் கட்சியான மாலைதீவு முற்போக்குக் கட்சியின் ஏற்பாட்டில் நடந்து வந்தன. அது பின்னர் “இந்தியாவே வெளியேறு” என்ற இயக்கமாக வளர்ச்சி பெற்றது. மாலைதீவுக் கடற்படைத்தளத்தில் இந்தியக் கடற்படையினர் அபிவிருத்தி என்ற போர்வையில் வந்து நிலை கொண்டிருப்பதாக மாலைதீவில் மக்கள் விசனமடைந்துள்ளனர்.

“இந்தியாவே வெளியேறு” இயக்கத்தை மாலைதீவில் சிறையில் இருந்து விடுதலையான முன்னாள் அதிபர் யாமீன் அப்துல் தீவிரப்படுத்தியுள்ளார். அவருக்கு சீனா மறைமுகமாக உதவி செய்தால் அவரால் இதை ஆட்சிக்கவிழ்ப்பு வரைக்கும் இட்டுச் செல்ல முடியுமா?. 2018இல் மாலைதீவில் செய்யப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு இந்தியாவிற்கு அமெரிக்காவும் உறுதுணையாக இருந்தது. அந்த ஆட்சி மாற்றத்தை பாதுகாக்கவும் அமெரிக்காவின் உதவி அவசியம். இந்தியாவிடம் அதன் சுற்றவுள்ள நாடுகளைக் கையாளும் திறன் இல்லை.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...