Thursday 20 January 2022

சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல் வலிமையற்றதா?

  


அமெரிக்க கடற்படைத் தளபதி ரோய் கிச்சினர் 2022 ஜனவரி 11-ம் திகதி நடந்த கடற்படையினரின் மாநாடு ஒன்றில் வெளியிட்ட தகவல் சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்களின் வலிமையைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. சீனாவிடம் லியோனிங், ஷண்டோங் என்னும் இரு விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன. விமானம் தாங்கிக் கப்பலின் வலிமை 1. அது தாங்கிச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை 2. அவ்விமானங்களின் வலிமை, 3. படைக்கலன்களின் அளவு 4. கப்பலின் இயங்கு வலிமை 5. அதை சுற்றிவரும் பரிவாரக் கப்பல்கள் போன்றவற்றில் தங்கியுள்ளன.

விமானம் தாங்கி - சிங்கிளாக வராத சிங்கம்

விமானம் தாங்கிக் கப்பல்கள் தனித்துப் பயணிப்பதில்லை. அவற்றை சுற்றி ஒரு பெரும் பரிவாரம் எப்போதும் இருக்கும். அவை விமானம் தாங்கிக் கப்பலுக்கு பல வட்டப் பாதுகாப்பை வழங்கும். விமானந்தாங்கிக் கப்பல்கள் நீருக்குக் கீழ்நீர் மேற்பரப்புவான்வெளி ஆகியவற்றில் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இவற்றைத் தடுக்க பல நாசகாரிக் கப்பல்கள் ஈடுபடுத்தப்படும். அத்துடன் குறைந்தது ஒரு frigate கப்பலாவது இருக்கும். மொத்தக் கப்பல்களையும் Carrier Battle Group என அழைப்பர். விமானம் தாங்கிக் கப்பலை எதிரியின் விமானங்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க ஒரு Guided Missile Cruiser  என்னும் வழிகாட்டல் ஏவுகணை தாங்கிக் கப்பல் அந்தப் பரிவாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும். Light Airborne Multi-Purpose System என்னும் முறைமை கொண்ட கப்பல் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் கடற்கப்பல்களில் இருந்தும் பாதுகாக்கும். பல உலங்கு வானூர்திகள் விமானந்தாங்கிக் கப்பல்களுக்குச் சுற்றவர உள்ள கடற்பரப்பின் கீழ் உள்ள பகுதிகளை இலத்திரனியல் கருவிகளால் பார்வையிட்டுக் கொண்டே இருக்கும்.

நீலத் தண்ணீர் கடற்படை

1980களின் ஆரம்பத்தில் இருந்து பொருளாதாரத்தில் மிகப்பாரிய வளர்ச்சியை ஆரம்பித்த சீனாவின் பொருளாதாரம் ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கின்றது. ஏற்றுமதி செய்யவும் ஏற்றுமதிக்கான உற்பத்திக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்யவும் சீனாவும் தனது கடற்போக்குவரத்தின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றது. அதற்கு ஏற்ப சீனா தனது கடற்படையை தற்போது எண்ணிக்கை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கடற்படையாக உயர்த்தியுள்ளது. வெறும் எண்ணிக்கை மட்டும் வலிமையை முடிவு செய்ய மாட்டாது. கடற்படையின் தொழில்நுட்ப மேம்பாடும் மிக அவசியமானதாகும். 1990களின் சீனாவின் கடற்படை பழுப்புப் தண்ணீர் கடற்படை என்ற நிலையில் இருந்து நீலத் தண்ணீர் கடற்படை என்ற நிலைக்கு தற்போது உயர்ந்தது. நாட்டின் உட்புறத்தில் உள்ள கடல் மற்றும் ஆறு போன்ற நீர்நிலைகளில் செயற்படும் கடற்படையை பழுப்புப் தண்ணீர் கடற்படை (Brown Water Navy) எனவும் நாட்டின் கடல் எல்லைகளை பாதுகாக்கவும் ஆதிக்கம் செலுத்தவும் கூடிய கடற்படையை பசுமைத் தண்ணீர் கடற்படை (Green Water Navy) எனவும் உலகெங்கும் உள்ள ஆழக்கடல்கள் எல்லாவற்றிற்கும் சென்று ஆதிக்கம் செலுத்தக் கூடிய கடற்படையை நீலத் தண்ணீர் கடற்படை (Blue Water Navy) எனவும் அழைப்பர்.

அமெரிக்க சீன விமானம் தாங்கி கப்பல்கள்

சீனாவின் விமானம் தாங்கிக் கப்பலான லியோனிங் வெறும் பயிற்ச்சிக் கப்பல் மட்டுமே என கிண்டல் செய்வோரும் உண்டு. லியோனிங் தாங்கிச் செல்லும் Shenjang J-15 போர்விமானங்களால் ஆகக் கூடியது 4000இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களை மட்டுமே தாங்கிச் செல்ல முடியும். ஆனால் அமெரிக்காவின் விமானம் தாங்கிகளில் பாவிக்கப்பட்ட F/A-18 போர்விமானங்களால் 12,000இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களைத் தாங்கிச் செல்ல முடியும். அமெரிக்காவின் நிமிட்ஸ் வகையைச் சேர்ந்த விமானம் தாங்கிக் கப்பலில் 64 F/A-18 விமானங்களைத் தாங்கிச் செல்ல முடியும். லியோனிங்கில் 26 Shenjang J-15 போர்விமானங்களை மட்டுமே தாங்கிச் செல்ல முடியும். சீனாவின் இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலான ஷாண்டோங்கால் 44 Shenjang J-15 போர்விமானங்களைத் தாங்கிச் செல்ல முடியும். கடற்போரில் பயிற்ச்சியும் நேரடி அனுபவமும் பெற்ற ஒரு அட்மிரலின் தலைமையில்தான் விமானம் தாங்கிக் கப்பலும் அதன் பரிவாரக் கப்பல்களும் இயங்கும். எந்த ஒரு கடற்போர் அனுபவமும் இல்லாத சீனக் கடற்படையில் எவரையும் அட்மிரல் என அழைக்க முடியாது என சீனாவை சில படைத்துறை ஆய்வாளர்கள் கிண்டலடிப்பதும் உண்டு.

Close Encounter

2021 ஏப்ரல் மாதம் தென்சீனக் கடலில் சீனாவின் விமானம் தாங்கிக் கப்பலான லியோனிங்கிற்கு கண்ணால் பார்க்கக் கூடிய வகையில் அண்மையாகச் சென்ற அமெரிக்காவின் நாசகாரிக் கப்பலான USS Mustin லியோனிங்கின் செயற்படு திறன் மட்டுப்படுத்தப் பட்ட அளவில் உள்ளது எனக் கண்டறிந்துள்ளதாக அமெரிக்க கடற்படை அறிவித்தது. அமெரிக்க நாசகாரி லியோனிங்கை சாதரண ஒளிபடப் பதிவுக் கருவியால் படம் பிடித்துள்ளது. ஒரு வலிமை மிக்க விமானம் தாங்கியைச் சுற்றியுள்ள நாசகாரிக் கப்பல்கள் எதிரியின் கப்பல்களை விமானம் தாங்கிக்கு அண்மையில் செல்லாமல் தடுத்துவிடும். ஒரு தனி நாசகாரி எதியின் விமானம் தாங்கிக்கு அண்மையில் செல்வது அந்த விமானம் தாங்கியில் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 2021இன் ஆரம்பத்தில் லியோனிங்கை கண்காணிக்கும் பணியில் அமெரிக்க கடற்படையினர் தமது USS Mustin என்னும் பற்பணி நாசகாரிக்கப்பலை ஈடுபடுத்தினர். USS Mustin என்பது Arleigh Burke-Class guided missile destroyer ஆகும். இந்த வகுப்பைச் சேர்ந்த நாசகாரிகள் Aegis Combat System என்னும் வலிமை மிக்க கணினிகளாலும் உயர் உணர் திறன் கொண்ட கதுவிகளாலும் (ரடார்கள்) இயங்கும் ஏவுகணைகளைக் கொண்டவை. அவ் ஏவுகணைகள் எதிரியின் இலக்குகளை துல்லியமாக தாக்கக் கூடியவை.

கப்பல்களில் இருந்து விமானங்களைச் செலுத்தும் முறைமைகள்

இதுவரை மூன்று முறைகள் மூலம் விமானங்களில் இருந்து கப்பல்கள் பறந்து செல்லும். முதலாவது பொதுவாக விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து விமானங்கள் கிளம்பும் போது சிறு தூரம் ஓடிப் பறக்க ஆரம்பித்தல். இரண்டாவது  நீராவிக் கவண் அதாவது steam catapult என்னும் தொழில் நுட்பம். ஆடு மேய்ப்பவர்கள் வடிவத் தடியில் இறப்பர் கட்டி செய்யும் கவணில் இருந்து கல் வீசுவது போல விமானங்கள் பறக்கச் செய்யப்படும். மூன்றாவது EMALS முறைமை. இதில் விமானம் தாங்கிக் கப்பலில் அணுவலுவால் மின்காந்த தொழில் நுட்பம் மூலம் விமானத்தைப் பறக்கச் செய்யப்படும். இதனால் இரண்டு முதல் நாற்பது தொன் வரையான எடையுள்ள ஒரு விமானம் ஒரு சில நொடிகளில் மணிக்கு இருநூற்றி இருபது கிலோ மிட்டர் வேகத்தைப் பெறும். நீராவிக் கவண் தொழில் நுட்பப்படி ஆகக் கூடியது பதினெட்டுத் தொன் எடையுள்ள விமானங்களை மட்டுமே செலுத்த முடியும்சீனா உருவாக்கிக் கொண்டிருக்கும் மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பலில் EMALS முறைமை இணைக்கப் படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தனியே வந்த ஒரு நாசகாரிக் கப்பல்களை எதிர் கொள்ள முடியாத சீனாவின் விமானம் தாங்கி கப்பல் Carrier Battle Group என அழைக்கப்படும் பல கப்பல்கள் சூழ ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களுடன் வரும் அமெரிக்கா, பிரித்தானியா போன்றவற்றின் விமானம் தாங்கி கப்பல்களை எப்படி எதிர் கொள்ளப்போகின்றது? சீனா இன்னும் ஒரு நீலத்தண்ணீர் கடற்படையாக உருவெடுக்கவில்லையா? சீனா விமானம் தாங்கி உற்பத்தித் துறை இப்போது தவழும் நிலையில்தான் இருக்கின்றதா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...