Monday, 10 January 2022

சீனாவிற்கு அச்சுறுத்தலாகும் ஜப்பான் ஒஸ்ரேலிய ஒப்பந்தம்

  

பெல்ஜியம், நெதர்லாந்து, போலாந்து, ஆர்ஜெண்டீனா, கனடா, பிரேசில், மெக்சிக்கோ, ஜப்பான், ஒஸ்ரேலியா, இந்தியா ஆகிய நாடுகளை நடு-வலிமை நாடுகள் எனச் சொல்லலாம். இந்த நாடுகள் தமக்கு இசைவான வல்லரசு நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பைச் செய்கின்றன. அவ்வப்போது நடு-வலிமை நாடுகள் தமக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்வதுண்டு. இந்தியாவும் ஒஸ்ரேலியாவும் இருபுற அனுமதி ஒப்பந்தங்களை (Reciprocal Access Agreements) 2020-ம் ஆண்டு செய்தன. அதன் படி இரண்டு நாடுகளும் ஒன்றின் தளங்களை மற்றது தனது படைத்துறையின் வான்கலன்களை, கடற்கலன்களை பழுதுபார்க்கவும், பராமரிக்கவும், மீள்நிரப்பல் செய்யவும் பாவிக்க முடியும். இந்தியா இதே போன்ற ஒப்பந்தங்களை அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் செய்திருந்தது. 2022 ஜனவரி 6-ம் திகதி ஜப்பானும் ஒஸ்ரேலியாவும் இருபுற அனுமதி ஒப்பந்தந்தத்தைச் செய்துள்ளன.

ஒஸ்ரேலிய – ஜப்பானிய உறவு

ஒஸ்ரேலியர்களும் ஜப்பானியர்களும் ஒருவரை ஒருவர் வெறுப்பதில்லை. ஜப்பான் கிழக்கில் உள்ள ஒரு மேற்கு நாடாக கருதப்படுகின்றது. ஒஸ்ரேலியா மேற்கு நாட்டவர் குடியேறி ஆட்சி செய்யும் கிழக்கு நாடு. 2017-ம் ஆண்டில் இருந்தே ஒஸ்ரேலியாவும் ஜப்பானும் இருபுற அனுமதி ஒப்பந்தந்தத்தை செய்யும் பேச்சு வார்த்தையை செய்து வந்தன. ஆனால் 2020-ம் ஆண்டு அந்தப் பேச்சு வார்த்தை ஜப்பானில் உள்ள இறப்புத் தண்டனைச் சட்டத்தால் தேக்க நிலையை அடைந்திருந்தது. ஆனால் அதிகரித்து வரும் சீன அச்சுறுத்தலால் இரு நாடுகளும் நெருங்கி ஒத்துழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஒஸ்ரேலியாவும் ஜப்பானும் தமக்கிடையிலேயான பாதுகாப்பு ஒத்துழைப்பில் இன்னும் ஒரு மைல் கல்லைத் தாண்டியுள்ளன.

கேந்திரோபாய பங்காண்மை நிலைக்கு உயற்ச்சி

நாடுகளுக்கிடையிலேயான உறவுகளின் உச்ச நிலையை கூட்டு (Alliance) எனவும் அதற்கு அடுதத நிலையை கேந்திரோபாய பங்காண்மை (Strategic Partnership) எனவும். அதனிலும் கீழான நிலையின் உள்ள உறவை பங்காண்மை எனவும். மிகக் குறைந்த உறவை நட்பு நாடு எனவும் வகைப்படுத்தலாம். கூட்டு நாடுகள் எச்சூழலிலும் ஒரு நாட்டுக்கு மற்ற நாடு உதவும். கூட்டு நாடுகளின் வெளியுறவுக் கொள்கை பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கும். எல்லா படைத்துறைத் தொழில்நுட்பத்தையும், உளவுத்தகவல்களையும் அவை தடையின்றிப் பகிர்ந்து கொள்ளும். உதாரணமாக அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் உள்ள உறவு கூட்டு உறவாகும். ஆனால் அமெரிக்கா F-22 போர் விமானத்தை பிரித்தானியாவிற்கு விற்பனை செய்யவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கேந்திரோபாய பங்காண்மையில் பல வகையில் இரு நாடுகள் ஒன்றிற்கு ஒன்று உதவியாக இருக்கும். உதாரணம கட்டார் – அமெரிக்க உறவு. அவை பயங்கரவாதத்திற்கு எதிராகவும் பிராந்திய அமைதி தொடர்பாகவும் ஒத்துழைக்கின்றன. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு கேந்திரோபாய பங்காணமையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றது. பங்காண்மையில் இருக்கும் நாடுகள் குறித்த சில வகைகளில் ஒன்றிற்கு ஒன்று உதவியாக இருக்கும். நட்பு நாடுகள் ஒன்றிற்கு ஒன்று உலக அரங்கில் அனுசரணையாக நடந்து கொள்ளும். ஒஸ்ரேலிய ஜப்பானிய உறவு இருபுற அனுமதி ஒப்பந்தம் செய்த பின்னர் கேந்திரோபாய பங்காண்மை நிலைக்கு உயர்ந்துள்ளது.

வலிமை மிக்க கடற்படைகள்

எடை அடிப்படையில் ஒஸ்ரேலியாவின் கடற்படை உலகின் 16வது பெரிய கடற்படையாக இருக்கின்ற போதிலும் புதிய படைக்கலன்கள் உபகரணங்கள் அடிப்படையிலும் கடற்போர் அனுபவத்திலும் ஒஸ்ரேலியக் கடற்படை உலகின் முன்னணிக் கடற்படையாகும். தற்பாதுகாப்பு படையான ஜப்பானின் கடற்படை Kaga, Izumo என்னும் இரண்டு உலங்கு வானுர்திக் கப்பல்களையும் கொண்டுள்ளது. இந்த இரண்டு கப்பல்களாலும் பன்னிரண்டுக்கு மேற்பட்ட அமெரிக்காவின் முன்னணி போர்விமானமான F-35-Bகளைக் காவிச் செல்ல முடியும். 114 கடற்கலன்களைக் கொண்டது ஜப்பானியக் கடற்படை. ஜப்பானின் நாசகாரிக் கப்பல்களினதும் தரைசார் கப்பல்களினதும் மொத்த எண்ணிக்கை பிரித்தானியாவினதும் பிரான்ஸினதும் மொத்த எண்ணிக்கையிலும் அதிகமானது. தாக்குதிறனின் ஜப்பானியக் கடற்படை சீனாவை விஞ்சக் கூடியது எனக் கருதப்படுகின்றது. ஜப்பானிடம் சிறந்த கப்பல் கட்டுமான வசதிகள் உண்டு. ஜப்பானின் கடற்போக்குவரத்திற்கு எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லாத வகையில் காப்பாற்றும் வலிமை ஜப்பானுக்கு உண்டு எனச் சொல்லப்படுகின்றது. 2011-ம் ஆண்டு ஜப்பானில் நடந்த புவி அதிர்ச்சியின் போது ஜப்பானியக் கடற்படையின் துரித செயற்பாடு உலகத்தை வியப்பில் ஆழ்த்தியது. ஜப்பானிய ஒஸ்ரேலியக் கடற்படை ஒத்துழைப்பு கடற்போர் அனுபவமில்லாத சீனாவிற்கு பெரும் சவாலாக அமையும்.

குவாட் படைத்துறை ஒத்துழைப்பை ஆரம்பிக்கவில்லை

2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் திகதி வெள்ளை மாளிகையில் அமெரிக்கா, ஒஸ்ரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய குவாட் உரையாடல் நாடுகளின் அரச தலைவர்கள் ஒரு கலந்தாலோசனையை நடத்தினர். அந்த ஒன்று கூடலின் முடிவில் அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் படைத்துறை ஒத்துழைப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை. குவாட் உரையாடல் நாடுகளின் அமைச்சர்கள் அரசுறவியலாளர்கள் கலந்துரையாடுவாரக்ள் எனக் குறிப்பிடப்படடிருந்தது. ஆனால் படைத்துறையைச் சேர்ந்தவர்கள் கலந்துரையாடுவார்கள் என்று குறிப்பிடப்படவில்லை. அதனால் குவாட் ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக இன்னும் உருவெடுக்கவில்லை என்பது உறுதியாகின்றது. அது மட்டுமல்ல ஒஸ்ரேலியா அமெரிக்காவுடனும் பிரித்தானியாவுடனும் ஓக்கஸ் என்னும் ஒரு பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டை 2021 செப்டம்பரில் செய்துள்ளது. இந்த நிலையில் ஜப்பான் தன்னுடைய பாதுகாப்பை உறுதி செய்ய பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஓரு பகுதியாக ஒஸ்ரேலியாவுடன் இருபுற அனுமதி ஒப்பந்தத்தை (Reciprocal Access Agreement) செய்துள்ளது.

கொதிக்குக் கடலில் குதிக்கும் நட்பு

கிழக்குச் சீனக் கடலில் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையில் ஒரு முறுகல் நிலை நீண்ட காலமாக இருந்து வருகின்றது. 2013 நவம்பரில் கிழக்குச் சீனக் கடலில் சீனா பத்து இலட்சம் சதுர மைல்களைக் கொண்ட கிழக்குச் சீனக் கடலுக்கு மேலான வான் பரப்பை தன்னுடைய வான் பாதுகாப்பு பிராந்தியமாகப் பிரகடனப் படுத்தியது. அதை அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் ஏற்க மறுத்ததுடன் தமது போர் விமானங்களை தொடர்ச்சியாக அங்கு பறக்க விட்டு தம் ஆட்சேபனையைத் தெரிவித்தன. சீனாவின் இது போன்ற அச்சுறுத்தலால் ஜப்பான் தற்பாதுகாப்பு படையை மட்டும் வைத்திருக்க முடியும் என்ற அதனது அரசியலமைப்பு யாப்பிற்கு புதிய வியாக்கியானங்களைக் கொடுத்து தன் படைவலிமையைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றது. ஒஸ்ரேலிய ஜப்பானிய நட்பு கிழக்குச் சீனக் கடலில் சீனாவிற்கு பாதகமாக அமையலாம்.

ஆழக் கடல் ஆளப் போகும் ஒஸ்ரேலியா

ஒஸ்ரேலியா அமெரிக்காவிடமிருந்து பெறவுள்ள அணு வலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒஸ்ரேலியாவில் இருந்து புறப்பட்டு பசுபிக்கடல், தென் சீனக் கடல், கிழக்குச் சீனக் கடல், ஜப்பானியக் கடல் ஆகியவற்றினூடாக ஆர்க்டிக் வலயம் வரை தொடர்ச்சியா தங்குமிடமின்றிப் பயணிக்கக் கூடியவை. அவற்றால் ஜப்பானிய துறைமுகங்களைப் பாவிக்க முடியும். பல தீவுகளைக் கொண்ட ஜப்பானுடனான ஒப்பந்தம் ஒஸ்ரேலியாவின் கடற்கலன்கள் மேற்கூடிய ஐந்து கடல்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் வலிமையை ஏற்படுத்தும்.

மலாக்காவில் சீனா மல்லாக்காக விழுத்தப்படுமா?

சீனாவின் கடற்பாதையில் முக்கிய திருகுப் புள்ளியாகிய மலாக்கா நீரிணைக்கு அண்மையாக உள்ள இந்தியாவிற்கு சொந்தமான அந்தமான் மற்றும் நிக்கோபா தீவுகளை இப்போது இந்தியாவுடன் அமெரிக்கா, ஒஸ்ரேலியா போன்ற நாடுகள் பாவிக்கலாம். அதற்கு அண்மையாக உள்ள ஒஸ்ரேலியாவிற்கு சொந்தமான கொக்கோஸ் மற்றும் கிறிஸ்மஸ் தீவுகளை ஒஸ்ரேலியாவுடன் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் படையினர் பாவிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் சீனாவிற்கு எதிரான போர் என்று வரும்போது இந்த நான்கு நாடுகளும் இணைந்து மலாக்கா நீர்ணையூடாக சீனாவின் போக்கு வரத்தை துண்டிக்கலாம் என்ற அச்சுறுத்தல் சீனாவிற்கு ஏற்பட்டுள்ளது. சீனாவின் மீயுயர்-ஒலிவேக ஏவுகணைகள் இலக்குத் தப்பாமல் தாக்குமா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...