Friday, 17 December 2021

HAWC: அமெரிக்காவின் புதிய சுவாசிக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை

  


அமெரிக்க வான்படையும் Defence Advanced Research Projects Agency (DARP) என்னும் படைத்துறை முகவரகமும் இணைந்து புதிய வகை வானில் இருந்து வானுக்கு தாக்குதல் செய்யும் மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கான ஏவுகணைகளை உருவாக்கும் ஒப்பந்தத்தை Raytheon நிறுவனத்திற்கும் ராம்ஜெட் இயந்திரத்தை உருவாக்கும் ஒப்பந்தத்தை Northrop நிறுவனத்திற்கும் 2019-ம் ஆண்டு வழங்கப்பட்டது.

ஒலியிலும் பார்க்க வேகமாக பாய்பவற்றை supersonic என அழைப்பர். ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்திலும் அதிகமான வேகத்தில் பாய்பவற்றை மீயுயர்-ஒலிவேகம் (ஹைப்பர்சோனிக் என அழைப்பர். பறக்கும் விமானம், பாயும் ஏவுகணை ஆகியவற்றின் வேகத்தை ஒலியின் வேகத்தால் பிரிக்க வருமது Mach என்னும் அளவீடாகும். ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணையின் வேகம் Mach 5 எனப்படும். தாரை எந்திரத்தில் (Jet Engines) இயங்கும் விமானங்களால் ஆகக் கூடுதலாக Mach 3.5 வேகத்தில் பறக்கும். Ramjet Engines மூலம் இயங்கும் ஏவுகணைகள் Mach 3.5 முதல் Mach 6 வரையிலான வேகத்தில் பாயலாம். Scramjet Engines மூலம் இயங்கும் ஏவுகணைகள் Mach 15 வரையிலான வேகத்தில் பாயக்கூடியவை. இவற்றை தற்போதுள்ள ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் இடைமறித்து அழிக்க முடியாது.


இயந்திரங்கள் வளியில் உள்ள ஒட்சிசனையும் எரிபொருளையும் (பெற்றோல், டீசல்) இணைந்து எரியச் செய்து உந்துவலுவை (thrust) உருவாக்குகின்றன. வளிமண்டலத்திலும் உயரமாகச் செல்லும் ஏவூர்திகள் (ராக்கெட்) தமக்கு தேவையான ஒட்சிசனை (Oxygen) தம்முடன் எடுத்துச் செல்லும். தாரை (ஜெட்) விமானங்கள் தமக்கு தேவையான ஒட்சிசனை வளிமண்டலத்தில் இருந்து பெற்றுக் கொள்ளும். ஒலியிலும் வேகமாக இயங்கும் விமானங்களும் ஏவுகணைகளும் Ramjet, Scramjet ஆகிய இயந்திரங்கள் பாவிக்கப்படுகின்றன. Ramjet இயந்திரங்கள் ஒலியிலும் பார்க்க ஆகக் கூடியது ஆறுமடங்கு வேகத்தில் இயக்க வல்லன. Scramjet இயந்திரங்கள் ஒலியிலும் பார்க்க 24 மடங்கு வேகம் வரை இயக்க வல்லன.


Hypersonic Air-breathing Weapon Concept (HAWC)இல் இயக்கும் ஏவுகணைகள் ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கிற்கும் அதிகமான வேகத்தில் பாய்வதுடன் அது பாய்ந்து கொண்டிருக்கும் இறுதிக் கட்டத்தில் அதன் பாயும் திசையையும் வழியையும் மாற்றலாம். மற்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை திசை மாற்ற முடியாது. ஆனால் சீனா 2021 ஜூலை மாதம் பரிசோதித்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை திசை மாற்றக் கூடியது. ஆனால் அதனால் இலக்கை துல்லியமாக தாக்க முடியவில்லை. ஆனால் அமெரிக்காவின் புதிய ஏவுகணை துல்லியமாக தாக்க வல்லது என நம்பப்படுகின்றது. Hypersonic Air-breathing Weapon Concept (HAWC)இல் இயக்கும் ஏவுகணைகளை உற்பத்தி செய்பவர்கள் இது ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறையை சாரும் என்கின்றனர். குறுகிய கால அவகாசத்தில் இந்த ஏவுகணைகளை ஏவ முடியும் என்பதுடன் அவையில் பாய்ச்சல் தூரமும அதிகம் என்கின்றனர். ஆனால் தூரம் எவ்வளவு என்பதை வெளியிடவில்லை. இவற்றின் இன்னும் ஓர் அம்சம் இவற்றைக் குறைந்த செலவில் உருவாக்கலாம். முதலாவதாக ஏவும் பரிசோதனை 2021 செப்டம்பர் மாதமளவில் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. பெரும்பாலும் அது அமெரிக்காவின் B-52 H குண்டு வீச்சு விமானத்தில் இருந்து வீசப்பட்டிருக்கலாம். இரசியா HAWC ஏவுகணைகளை உருவாக்க ஆரம்பித்துவிட்டது. சீனா வானில் இருந்து ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வீசும் வல்லமையை இன்னும் அடையவில்லை எனவும் சொல்லப்படுகின்றது. அமெரிக்காவின் HAWC ஏவுகணை எந்த விமானத்தில் இருந்து வீசப்படுகின்றதோ அந்த விமானத்தின் பறப்பு வேகமும் ஏவுகணையின் வேகத்திற்கு வலுவூட்டும்.

HAWC ஏவுகணைகள் காற்றை சுவாசிக்கும் தன்மை கொண்டவை என்பதால் காற்றுடன் உரசும் போது ஏற்படும் வெப்ப அதிகரிப்பு குறைவாக இருக்கும் அத்துடன் காற்று ஏற்படுத்தும் வேகக் குறைப்பும் குறைவானதாகவே இருக்கும். ஒட்சிசன் செறிவாக உள்ள வளிமண்டலத்தில் Hypersonic Air-breathing Weapon Concept (HAWC)இல் இயக்கும் ஏவுகணைகள் மிகவும் சிறப்பாக செயற்படும் எனப்படுகின்றது. அதாவது சிறந்த செலுத்துதற்கையாள்கையும் (manoeuvrability) வேகமும் அதன் சிறப்பு அம்சமாக இருப்பதுடன் அவற்றை எதிரிகளால் இலகுவில் இனம் காண முடியாது.

HAWC ஏவுகணைகளின் அடுத்த தலைமுறை ஏவுகணைகள் அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானங்களான B-52, B-1 Lancer ஆகிய குண்டு வீச்சு விமானங்களில் இருந்தும் F-35, F-15 போன்ற சண்டை விமானங்களில் இருந்தும் இலகுவாக வீசக் கூடியவையாக இருக்கும்.

Hypersonic Air-breathing Weapon Concept (HAWC)இல் இயக்கும் ஏவுகணைகள் எப்படி இரசியாவின் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளான எஸ்-400 மற்றும் எஸ்-500 ஆகியவற்றிற்கு எதிராக எப்படிச் செயற்படும் என்பதை ஒரு போர் முனையில்தான் கண்டறிய முடியும்.

Wednesday, 15 December 2021

இலங்கையில் இருந்து கூலி கிடைக்காமல் ஏங்கும் இந்தியா

 


கூலியை எதிர்பார்த்து வேலை செய்தவனுக்கு உரிய கூலி கொடுக்கப்பட வேண்டும். இலங்கை இன ஒழிப்புப் போரில் இலங்கைக்கு உதவி செய்த நாடுகள் இருபதுக்கு மேல். இதில் முக்கிய பங்கு வகித்தவை இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய மூன்றும். இதில் சீனா படைக்கலன்களையும் கடனையும் இலங்கைக்கு வழங்கியது. போரின் போது இலங்கைப் படையினருக்கு ஏற்பட்ட ஆளணி இழப்புக்களை நிவர்தி செய்ய தனது இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட படையினரை சீனா பின்கதவால் இலங்கைக்கு அனுப்பவில்லை. சீனக் கப்பல்கள் தமிழர்களின் கடற்பரப்பில் காவல் நாய்கள் போல் நின்று தமிழர்களுக்கு உணவு, மருந்து போன்றவை கிடைக்காமல் தடுக்கவில்லை. சீனா விடுதலைப் புலிகளின் கப்பல்களை செய்மதி மூலம் கண்டறியவோ அல்லது தாக்கியழிக்கவோ இல்லை. தமிழர்கள் என்பவர்கள் சூத்திரர்கள் அவர்கள் ஒரு நாளும் ஆளக்கூடாது என்பது சீனக் கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாடாக இல்லை. ஆனால் இலங்கையில் இருந்து தனக்கு வேண்டியதை சீனா துறைமுகங்களாகவும் தீவுகளாகவும் பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் சீனா செய்யாதவற்றைச் செய்த ஒரு நாட்டுக்கு சிங்களவர்களின் சில்லறைக் கைக்கூலிக்கு உரிய கூலி இன்னும் சிங்களவர்களிடம் இருந்து கிடைக்கவில்லை.

இலங்கையும் அமெரிக்க இந்திய உறவும்

இலங்கையில் அமெரிக்காவும் இந்தியாவும் எதிர் எதிர் நிலையில் இருந்தன. 1970களில் இருந்து அந்த முரண்பாடு தீவிரமடைந்தது. அமெரிக்க நெறியாள்கையில் சிங்களம் நடத்திய ஜெயசிக்குறு படை நடவடிக்கையை விடுதலைப் புலிகள் இந்தியா செய்த விட்டுக் கொடுப்புடன் 1998 மே மாதம் முறியடித்தனர். அந்த முறியடிப்பு இந்தியாவைப் பகைத்து இலங்கையில் அமெரிக்காவால அரசுறவியல் நகர்வுகளை வெற்றிகரமாக செய்ய முடியாது என அமெரிக்காவை உணர வைத்தது. அதன் பின்னர் இந்தியாவுக் அமெரிக்காவும் இணைந்து செயற்பட ஆரம்பித்தன. 1999இல் இந்தியா பாக்கிஸ்த்தானிடையே நடந்த கார்கில் போரில் அமெரிக்காவின் நிலைப்பாடு இந்தியாவை திருப்தியடைய வைத்தது. அமெரிக்கா இஸ்ரேல் இந்தியவிற்கு ஆதரவாக தனது வான்படையை அனுப்பியதை எதிர்க்கவுமில்லை. 2000-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொண்டார். 32 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்க அதிபர் புது டில்லிக்கு மேற்கொண்ட பயணம் அதுவாகும். இந்தியாவின் அணுக்குண்டு பரிசோதனையின் பின்னர் அமெரிக்கா இந்தியா மீது விதித்த பொருளாதாரத் தடை 2001-ம் ஆண்டு நீக்கப்பட்டது. அதன பின்னர் சிங்களவர்களுக்கு இரண்டு நாடுகளும் இணைந்து ஆதரவு வழங்குவதும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஒழிப்பதும் ஆரம்பமானது. அமெரிக்காவின் பயங்கரவாததத் திற்கு எதிரான போரில் இந்தியா இணைவதற்கு நிபந்தனையாக விடுதலைப் புலிகளை அமெரிக்காவும் மற்ற மேற்கு நாடுகளும் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்பது இந்தியாவின் நிபந்தனையாக இருந்தது. இலங்கையின் நட்புப் பட்டியலில் இந்தியாவிற்கு முதன்மை நிலையைப் பெறுவதற்காக இந்தியா இதைச் செய்தது. இரண்டு நாடுகளும் இலங்கை இனக்கொலையின் கூட்டுப் பங்காளிகளாக செயற்பட்டன. இலங்கையை இந்தியாவின் பின்புறமாக அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. ஆனால் இலங்கையை கையாளும் திறன் இந்திய வெளியுறவுத்துறைக்கு இல்லாத படியால் இலங்கை சீன சார்பு நாடாக 2009இன் பின்னர் ராஜபக்சேக்களின் ஆட்சியில் மாறிக் கொண்டது. இந்தியாவை இலங்கை தொடர்ந்து ஏமாற்றியது.  இலங்கை விவகாரத்தை இந்தியா கையாளும் விதம் அமெரிக்காவிற்குத் திருப்தி அளிக்காததால் 2013-ம் ஆண்டு அமெரிக்கா தனது கையில் இலங்கை விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக் கொண்டது. மாலை தீவிலும் அதையே செய்தது. இந்தியா இலங்கையில் சீன ஆதிக்கத்தை ஒழிக்கும் தன் தந்திரோபாய நடவைக்கைகளுக்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்தி 2013-ம ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவை வாக்களிக்க நிர்பந்தித்தது. ஆனாலும் இலங்கையின் சில்லறைக் கூலிகள் போற் செயற்படும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் தீர்மானத்தின் தீவிரத்தைக் குறைத்த பின்னரே அதற்கு ஆதரவு வழங்கினர்.

இந்தியாவின் அயோக்கியத் தனம்
இந்தியாவின் நேர்மையற்ற ஆட்சியாளர்களும் குடும்ப ஆதிக்கமும் சாதி வெறிபிடித்த தென்மண்டலப் பார்ப்பனர்களுமே இலங்கையில் இந்தியா விட்ட தவறுகளுக்கும் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கும் காரணம். அவர்கள் இந்தியா உதவாவிட்டால் சீனா இலங்கைக்கு உதவும் என்ற பொய்யையும் இலங்கையில் தமிழர்கள் உரிமை பெற்றால் அது இந்தியாவில் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்ற பொய்யையும் சொல்லி சிங்களவர்களுக்கு உதவி செய்து தமிழர்களின் போராட்டத்தை வலுவிழக்கச் செய்தனர்.

சீபா வேண்டாம் சீ போ என்ற இலங்கை

சிங்களவரக்ளுக்கு இனக்கொலை செய்ய உதவி செய்த இந்தியா அதற்கான கூலியாக சீபா ஒப்பந்தம் எனப்படும் Comprehensive Economic Partnership Agreement (CEPA) ஒப்பந்தத்தை இலங்கை இந்தியாவுடன் செய்ய வேண்டும். 2008-ம் ஆண்டு போர் நடக்கும் போது கையொப்பம் இட வேண்டும் என இந்தியா நிர்ப்பந்தித்தது. போர் முடிந்த பின்னர் கையொப்பம் இடுவோம் என இலங்கை இழுத்தடித்தது. 2005-ம் ஆண்டு சீபா ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தை இரு நாடுகளுக்கும் இடையில் நடந்தது. 2008இல் ஒரு புறம் போர் நடந்து கொண்டிருக்கும் போது மறுபுறம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் கடினமான 13சுற்றுப் பேச்சு வார்த்தை செய்யப்பட்டு ஓர் ஒப்பந்தம் வரையப்பட்டது. போரில் பின்னரும் இலங்கை கையொப்பமிடவில்லை, 2013இல் ஒப்பந்தத் தில் கையொப்பமிட மாட்டோம் இன இலங்கை கையை விரித்து விட்டது. 2015-ம் ஆண்டு தலைமை அமைச்சர் பதவிக்கு வந்த ரணில் விக்கிர்மசிங்கவும் சீபா ஒப்பந்தத்தை நிராகரித்து இந்தியாவின் முகத்தில் கரி பூசினார். இதனால் இனக்கொலைக்கு கூலி வேலை செய்த இந்தியா ஏமாற்றப்பட்டது.

இலங்கை இந்திய சீபா ஒப்பந்தம்

இலங்கையின் சில தொழிற்துறையினர் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் சீபா எனப்படும் பரந்த பொருளாதார பங்காண்மை ஒப்பந்தம் தமக்கு நன்மை பயக்கும் என்று கருதுகின்றனர். உலகின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான இந்தியா தமக்குத் திறந்து விடப்படுவதை அவர்கள் விரும்புகிறார்கள். இலங்கையை சீபாவிற்கு சம்மதிக்க வைக்க தனது சலுகைக்களை முக்கியமாக ஆடை உற்பத்தித் தொழிலில் அதிகரித்தது. ஏற்கனவே சுங்கவரியின்றி மூன்று மில்லியன் துண்டுகளை இலங்கை ஏற்றுமதி செய்யலாம் என்றிருந்தது. இதை இந்தியா இரட்டிப்பாக்கியதுடன் மேலும் பல மில்லியன் துண்டுகளை குறைந்த சுங்கவரியுடன் இலங்கை ஏற்றுமதி செய்யலாம் எனத் தெரிவித்தது. ஆனால் சிங்களவர்களுக்கு இந்தியாவில் இருக்கும் வெறுப்பை இந்தியா சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இலங்கை அரசியல்வாதி விமல் வீரவன்ச சிபாவில் இலங்கை ஒப்பமிட்டால் பாரிய விளைவுகள் ஏற்படுமென்றார். மேலும் அவர் தெரிவிக்கையில் இந்தியா தனது நாட்டு வேலையில்லாப் பிரச்சனையைத் தீர்க்கவே இந்த ஒப்பத்தத்தை நிர்ப்பந்தித்தது என்றார். அத்துடன் அவர் நிற்கவில்லை. இலங்கைக்கு இந்தியாவிற்குமிடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இலங்கை இந்தியாவின் 37வது மாநிலமாகும் என்பதால் இவ்வொப்பந்தத்தை கைச்சாத்திட வேண்டாம் என்கிறார்; இந்தியாவுடன் செய்யப்பட்டுள்ள சீபா எனப்படும் பொருளாதாரத்தை விரிவாக்கும் நோக்கிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது இலங்கை தனக்குத் தானே தூக்கிட்டுக் கொள்வதற்கு ஈடானது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்தது. சீபா ஒப்பந்தம் என்ற பேச்சு எழுந்த போது இலங்கையில் பல சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களும் தொழில் நெறிஞர்களும் (Professionals), இடதுசாரிகளும் பொங்கி எழுந்தனர்.


இலங்கையின் நெருக்கடி

அமெரிக்காவில் இருந்து செயற்படும் கடன்படு திறன் தரப்படுத்தும் மூன்று நிறுவனங்கள் இலங்கை அரசின் கடன்படு திறனை தரம் தாழ்த்திய பின்னர் இலங்கை அரசு பன்னாட்டு நிதிச் சந்தையில் கடன்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு செலவாணிக் கையிருப்பு குறைந்த நிலையில் இலங்கைக்கு இலகு கடனும் நிதி உதவியும் அவசரம் தேவைப்படுகின்றது. சீனாவிடம் கடனோ நிதி உதவியோ பெறுவதாயின் சீனாவிற்கு பெரும் விட்டுக் கொடுப்புக்களை இலங்கை செய்ய வேண்டும். அது இந்தியாவையும் மேற்கு நாடுகளையும் கடும் விசனத்திற்கு உள்ளாக்கும். இலங்கையின் ஏற்றுமதியின் மூன்றில் இரண்டு பங்கு மேற்கு நாடுகளுக்கும் அதன் நட்பு நாடுகளான ஜப்பான், தென் கொரியா, ஒஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் செய்யப்படுகின்றது. மேற்கு நாடுகளும் இந்தியாவும் இணைந்து இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை கொண்டு வந்தால் இலங்கை அவர்களின் எல்லா நிபந்தனைகளுக்கும் அடி பணிய வேண்டிய நிலை ஏற்படும். இலங்கை பன்னாட்டு நாணய நிதியத்திடம் கடன் பெறுவதாயின் அதன் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனால் அரசு மக்களுக்கு செய்யும் சமூகநலக் கொடுப்பனவுகள் பலவற்றை நிறுத்த வேண்டி வரும். அதனால் ராஜ்பக்சேக்கள் அடுத்த தேர்த்தல்களில் தோல்விகளைச் சந்திக்க வேண்டி வரும்.

இலங்கையில் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு நெருக்கடிக்கு உதவி செய்து இலங்கையை சீபா ஒப்பந்தத்தில் கையொப்பமிட வைக்க இந்தியா முயல்கின்றது. இலங்கையின் பொருளாதர நெருக்கடியில் இருந்து மீட்க இந்தியா ஒரு நான்கு அம்சத் திட்டத்தை முன் வைத்துள்ளது:

1. உணவு, மருந்து, எரிபொருள் கொள்வனவிற்கு கடன வழங்குதல்

2. நாணயப் பரிவர்த்தனை ஒப்பந்தம்

3. திருகோணமனை எரிபொருள் குதங்களை மேம்படுத்துதல்

4. இலங்கையில் இந்திய முதலீட்டிற்கு இலங்கை வசதி செய்து கொடுத்தல்

இவற்றைச் செய்த பின் இந்தியாவிற்கான கூலி கிடைக்குமா?

Monday, 13 December 2021

சீன அச்சுறுத்தல் ஜப்பானை வல்லரசாக்குகின்றது

  



உலகத்திலேயே சீனர்கள் அதிகம் வெறுக்கும் நாடாக ஜப்பான் இருக்கின்றது. 1937இல் இருந்து 1945வரை ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் கடும் போர் நடந்தது. இரண்டாம் உலகப் போரின் ஒரு பகுதியாக நடந்த இப்போரில் மூன்று மில்லியன் சீனப்படை வீரர்களும் பத்து மில்லியன்களுக்கு மேற்பட்ட சீனப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். முதலாம் ஜப்பான் – சீனப் போர் 1894-1895 ஆண்டுகளில் நடந்தது. ஜப்பான் ஆக்கிரமித்த ஆசிய நாடுகளில் மோசமான போர்க்குற்றங்கள் நடந்தன. சீனப் பெண்களை ஜப்பானியர்கள் பாலியல் அடிமைகளாக வைத்திருந்தனர். சீனா ஜப்பானின் அட்டூழியங்களை அதன் மக்கள் மனதில் ஆழமாக பதித்து  வைத்துள்ளது. சீனாவில் நடக்கும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் ஜப்பானிய விளையாட்டு வீரர்களைக் கண்டவுடன் சீனப் பார்வையாளர்கள் கூச்சலிடுவதை வழமையாகக் கொண்டுள்ளனர்.

ஒற்றுமை நிறைந்த வேற்றுமை

சீனாவிற்கும் ஜப்பானிற்கும் இடையில் கலாச்சார மற்றும் மத ரீதியில் பெரும் ஒற்றுமை உண்டு. ஜப்பானியக் கலாச்சாரம் சீனாவிடமிருந்து பெறப்பட்டதே என்றும் சொல்லப்படுகின்றது. ஜப்பான் உலகத்தில் இருந்து தனிமைப் பட்டு இருந்த வேளையில் சீனா உலகெங்கும் தனது பட்டுப்பாதையை நீட்டி பலநாடுகளுடன் வர்த்தக மற்றும் கலாச்சாரப் பரிவர்த்தனை செய்யத் தொடங்கிவிட்டது. ஆனால் ஜப்பானியர்கள் சீனர்கள் தமது நாட்டுக்குள் அந்நியர்களை அனுமத்துப் போதைப் பொருளுக்கு அடிமையானார்கள் எனக் கருதுகின்றனர். இரு நாடுகளும் சீனத் தத்துவ ஞானி கன்ஃபூசியஸ் அவர்களின் சிந்தனை அடிப்படையில் தம் கலாச்சாரங்களை வளர்த்துக் கொண்டாலும் சரித்திரமும் பூகோளமும் இரு நாடிகளையும் பிரித்து வைத்துள்ளது. உலகிலேயே போர் மூளும் அபாயம் கூடிய இடங்களாக தென் சீனக் காடலும் கிழக்குச் சீனக் கடலும் இருக்கின்றன. இதற்கு ஜப்பானிற்கும் சீனாவிற்கும் இடையில் பேச்சு வார்த்தை அவசியம். சீன ஜப்பானியப் போர் நடந்தால் அங்கு அமெரிக்காவும் தலையிடும் கட்டாயம் உள்ளது. ஆசிய பசுபிக் பொருளாதாரக் கூட்டுறவின் உச்சி மாநாட்டின் முன்னர் இரு தலைவர்களும் சந்திப்பார்களா என்பது ஒரு முயற்கொம்பாகவே இருந்தது. சீன அதிபர் ஷி ஜின்பிங் ஜப்பானி எதிர்ப்புப் பரப்புரைகள் மூலமும் கிழக்குச் சீனக் கடலுக்கு அடிக்கடி கடற்கலங்களையும் வான் கலன்களையும் அனுப்பி ஜப்பானைச் சீண்டுவதன் மூலமும் சீனாவில் தனது செல்வாக்ககிப் பெருக்கிக் கொள்கின்றார் என்பது ஜப்பானின் குற்றச்சாட்டு. ஜப்பானியர்கள் போரின் போது செய்ய அட்டூழியங்களைப் பற்றி சீனாவில் அதிகம் பேசுவதால் சீனர்கள் இப்போதும் பழைமையிலேயே வாழ எத்தனிக்கின்றார்கள் எனக் குற்றம் சாட்டும் ஜப்பான் அவர்கள் பழையவற்றை மறந்து புது யுகத்தில் இரு நாடுகளிற்கும் இடையிலான ஒத்துழைப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கின்றது. ஜப்பானுடன் பேச்சு வார்த்தை நடாத்துவதற்கு சீன இரு நிபந்தனைகளை விதித்திருந்ததாகக் கூறப்படுகின்றது. ஒன்று சர்ச்சைக்குரியதான ஜப்பானின் இறந்த போர்வீரர்களின் யசுக்குனி எனப்படும் நினைவிடத்திற்கு ஜப்பானியத் தலைமை அமைச்சர் பயணம் மேற்கொள்ளக் கூடாது. மற்றது கிழக்குச் சீனக் கடலில் உள்ள சென்காகு அல்லது டயோயு தீவுக் கூட்டங்கள் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையில் முரண்பாடு இருக்கின்றது என்பதை ஜப்பான் ஒத்துக் கொள்ள வேண்டும்.வ்

கிழக்குசீனக்கடல்

கிழக்குச் சீனக் கடசீனக் கடலில் உள்ள தீவுக்கூட்டத்திற்கு ஜப்பானும் சீனாவும் உரிமை கொண்டாடி வருகின்றன. மக்களற்ற இத்தீவுக் கூட்டங்களை ஜப்பானியர்கள் செங்காகு எனவும் சீனர்கள் டயாகு எனவும் அழைக்கின்றனர். அமெரிக்கா இரு நாடுகளுக்கும் இந்த தீவுக் கூடங்களிள் இறையாண்மை இல்லை எனவும் ஆனால் ஜப்பனிற்கு அவற்றில் நிர்வாகக் கட்டுப்பாடு இருக்கின்றது எனவும் கூறுகின்றது.  2013 நவம்பர் 24-ம் திகதி சீனா இத்தீவுக் கூட்டத்தை உள்ளடக்கிய வான் பிராந்தியத்திற்குள் வரும் விமானங்கள் தனக்கு அறிவித்துவிட்டு வரவேண்டும் என ஒரு தலைப்பட்சமாக பிரகடனம் செய்தது. சீனாவின் வான் பாதுகாப்புப் பிரந்தியப் பிரகடனத்தை மறுக்கும் முகமாக அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் தமது விமானங்களை சீனாவிற்கு அறிவிக்காமல் அப் பிராந்தியத்திற்குள் பறக்க விட்டன. அமெரிக்க அரசு தனது நாட்டு பயணிகள் போக்குவரத்து மற்றும் வர்த்தக விமானங்கள் சீன அரசிற்கு அறிவித்து விட்டு கிழக்குச் சீனக்கடலுக்கூடான பறப்புக்களை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தியது. 2013 நவம்பர் 24-ம் திகதி கிழக்குச் சீனக் கடலில் உருவான பதட்டத்தைத் தொடர்ந்து செய்யப்படும் முதல் படை நகர்வாக அமெரிக்கா தனது நீர்மூழ்கிகளை வேட்டையாடும் விமானங்களை ஜப்பானிற்கு அனுப்பியுள்ளது. P-8 எனப்படும் இந்த விமானங்கள் torpedoes எனப்படும் ஏவுகணைகளையும் புது ரக கதுவிகளையும்(ராடார்) கொண்டுள்ளன.

அமெரிக்காவின் நம்பகமற்ற தன்மை

ஆப்கானிஸ்த்தானில் இருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறிய போது அமெரிக்கா நடந்து கொண்ட விதம் அமெரிக்காவின் நம்பகத்தைனமையை கேள்விக்குறியாக்கியுள்ளது. உலக வரலாற்றிலேயே முதல் முதலாக அணுக்குண்டால் தாக்கப்பட்ட நாடான ஜப்பான் ஐக்கிய அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தின் படி 1947-ம் ஆண்டு மே மாதம் 3-ம் திகதி நிறைவேற்றிய அரசமைப்பு யாப்பின்படி ஜப்பான் வேறு நாடுகளுடனான பிணக்கைப் போர் மூலம் தீர்க்க முடியாது. தனது நாட்டுக் குடிமக்களைப் பாதுகாக்க வேறு நாடுகளுக்குப் படை அனுப்ப முடியாது. ஒரு தன்னைப் பாதுகாக்கும் படையை மட்டுமே வைத்திருக்கலாம். சுருங்கச் சொன்னால் ஜப்பானியப் படையினர் மீது வேறு யாராவது சுட்டால் மட்டுமே ஜப்பானியப் படைகள் திருப்பிச் சுடலாம். இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த ஜேர்மனியின் அரசியல்யாப்பில் இல்லாத ஒன்று ஏன் ஜப்பானிய யாப்பில் இருக்க வேண்டும் என்பது சில ஜப்பானியர்கள் எழுப்பும் கேள்வியாகும். ஜப்பானின் படைத்துறைச் செலவு ஆண்டுக்கு 49 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கின்றது. அது சீனாவின் 188 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஈடாக மாட்டாது. அதனால் ஆண்டுக்கு 640 பில்லியன் டொலர்கள் செலவு செய்யும் அமெரிக்காவில் ஜப்பான் தங்கியிருக்க வேண்டிய நிலை. அத்துடன் 23 படையினருக்கு ஜப்பானின் 58,000 படையினர் ஈடாகவும் முடியாது. உலகப் படைவலுப்பட்டியலில் சீனா மூன்றாம் இடத்திலும் ஜப்பான் பத்தாம் இடத்திலும் இருக்கின்றன. 2014-ம் ஆண்டு ஏப்ரம் மாதம் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபமா சீனா ஜாப்பானிற்குச் சொந்தமான தீவுகளை அபகரிக்க முயன்றால் ஜப்பானைப் பாதுகாக்கும் அமெரிக்க ஜப்பானிய பாதுகாப்பு உடன்படிக்கையின் படி அமெரிக்கா ஜப்பானைப் பாதுகாக்கும் என உறுதியளித்தார்.  அமெரிக்கா கைவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வியும் ஜப்பானிய மக்கள் மத்தியில் உண்டு.வ் ஜப்பான் தனது பாதுகாப்பிற்கு அமெரிக்காவில் தங்கியிருந்தது. சீனாவின் மிகையான படைத்துறை வளர்ச்சியும் தொழில்நுட்ப வளர்ச்சியும் அயல் நாடுகளின் மீது சீனா அதிகரிக்கும் ஆதிக்கமும் ஜப்பானை தனது பாதுகாப்பு தொடர்பாக அதிகம் சிந்திக்க வைத்துள்ளது. அமெரிக்காவும் பசுபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தமது பாதுகாப்புச் செலவை அதிகரிக்க வேண்டும் என விரும்புகின்றது. அதனால் தனது பாதுகாப்புச் செலவைக் குறைப்பதுடன் அந்த நாடுகளுக்கான தனது படைக்கலன் விற்பனையையும் அதிகரிக்கவும் முடியும்.

ஜப்பானின் பாதுகாப்புத்துறையின் வெள்ளை அறிக்கை – 2020

2020 ஜூலை 13-ம் திகதி ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் ஜப்பான் F-35 போர்விமானங்கள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் F-X போர்விமானங்கள், மூன்று P-1 ரோந்து விமானங்கள் ஏழு SH-60K ரோந்து உலங்கு வானூர்திகள், ஆளில்லாப் போர்விமானப் படையணி, வானில் வைத்து விமானங்களுக்கு எரிபொருள் மீள்நிரப்பும் விமானங்கள், இரண்டு நாசகாரிக் கப்பல்கள், ஒரு நீர்மூழ்கி, ஆளில்லாமல் நீரின் கீழ் இயங்கும் கலன்கள் போன்றவை ஜப்பானியப் படையில் இணைக்கப்படும் என சொல்கின்றது. அமெரிக்க உற்பத்தி F-35 போர்விமானங்கள் 157ஐ வாங்க திட்டமிட்டுள்ளது. அவற்றில் 42 F-35-B விமானங்களும் அடங்கும். F-35-B விமானங்கள் விமானம் தாங்கிக் கப்பல்களில் பயன்படுத்தக் கூடியவகையில் குறுகிய தூர ஓட்டத்துடன் வானில் எழும்பவும் செங்குத்தாக உலங்கு வானூர்தி போல் தரையிறங்கவும் (Short take off and vertical landing STOVL) வல்லன. சீனாவை அதிக கரிசனை கொள்ள வைத்த F-35 விமானங்களை அமெரிக்காவின் Lockeed Martin, Northdrop Grumman பிரித்தானியாவின் BAE System ஆகியவை உட்பட பல நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ளன. வானாதிக்கம், வான்மேன்மை, இலத்திரனியல் போர், தாக்குதல், வேவு, உளவு, கண்காணிப்பு ஆகியவற்றைச் செய்யக் கூடிய பற்பணிப் போர் விமானங்களாகும்.

ஜப்பானின் விமானம் தாங்கிக் கப்பல்

ஜப்பானிடம் இரண்டு Izumo வகை நாசகாரிக் கப்பல்கள் இருக்கின்றன. இவை உண்மையில் உலங்குவானூர்தி தாங்கிக் கப்பல்களாகும். இவை நீர்மூழ்கி அழிப்புப் பணிகள், கிழக்கு சீனக் கடல் பாதுகாப்புப் பணிகள் போன்றவற்றைச் செய்வதுடன் கட்டுப்பாட்டகம்+கட்டளையகம் ஆகவும் செயற்படக்கூடியவை. 248 மீட்டர் நீளமுள்ள இவற்றை ஜப்பான் மேலும் மேம்படுத்தி அவற்றில் அமெரிக்கத் தயாரிப்பான F-35-B ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை ஜப்பான் உள்ளடகிக் கொண்டிருக்கின்றது. இது ஜப்பானின் வலிமை மிக்க கடற்படையை மேலும் வலிமையுள்ளதாக்கின்றது.

சீனாவிற்கு எதிரான இரு தீவுச் சங்கிலிகளில் ஜப்பான்



சீனாவின் பசுபிக் பிராந்திய ஆதிக்கத்தை தவிற்பதற்கு இரண்டு சங்கிலித் தொடர் தீவிகளை அமெரிக்கா வியூகமாக வகுத்துள்ளது. முதலாவது சங்கிலித்தீவில் ஜப்பானின் யொக்கோசுக்கோ, ஒக்கினோவா ஆகிய தீவுகள், கொரியத் தீபகற்பம், பிலிப்பைன்ஸ் ஆகியவற்றில் இருக்கும் அமெரிக்கப் படைத்தளங்கள் முதற் சங்கிலித் தீவுகள் எனவும் ஜப்பானியத்தீவுகள், குவாம் தீவு, பலௌ தீவு, ஒஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் இரண்டாம் தீவுக் கூட்டம் எனவும் அழைக்கப்படுகின்றன. இரண்டு தீவுச் சங்கிலிகளிலும் ஜப்பான் முக்கியத்துவம் பெறுகின்றது. சீனா தைவானை ஆக்கிரமித்தால் இவ்விரு தீவுச் சங்கிலிகளும் சீனாவின் வர்தகப் போக்குவரத்தை முற்றாக தடை செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை சீனா அறியும்.

ஜப்பானின் ஆறாம் தலைமுறைப் போர்விமானம்

1997-ம் ஆண்டு அமெரிக்காவின் F-22 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை ஜப்பான் வாங்க முயன்ற போது அவற்றை விற்பனை செய்ய முடியாது என அமெரிக்கா அறிவித்தது. தனது உயர் தொழில்நுட்பத்தை பாதுகாப்பதற்காக அமெரிக்கா F-22 போர்விமான ங்களை எந்த நாட்டுக்கும் விற்பனைச் செய்யவில்லை. அப்போது ஜப்பான் தனது நாட்டிலேயே உயர்தர விமானங்களை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தை ஆரம்பித்தது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்கி முடிக்கும் போது அது பிந்தங்கிய ஒரு விமானமாகிவிடும் என்பதால் ஜப்பான் நேரடியாக ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்கியது. இதே வழியை பிரித்தானியாவும் பின்பற்றியது. அமெரிக்கா 2020இல் ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தின் முதல் விமானத்தை உருவாக்கி பரீசித்துள்ளது. ஜப்பானின் F-X என்னும் பெயர் கொண்ட ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்குவதில் ஜப்பான் கணிசமான அளவு முன்னேறியுள்ளது. ஆறாம் தலைமுறைப் போர்விமானங்களில் செயற்கை விவேகமும் இயந்திரக் கற்கையும் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் அவை தாமாகவே இயங்கக் கூடியன. நிலைமைக்கு ஏற்ப தாமே இலக்குகளைத் தெரிவு செய்து தாக்கக் கூடியவை. விமானிகளின்றியும் பறப்புக்களை மேற்கொள்ளக் கூடியவை. லேசர் மற்றும் மைக்குறோவேவ் படைக்கலன்களை இவை கொண்டிருக்கும். எதிரிகளின் கதுவிகளால்(ரடார்களால்) அவற்றைக் கண்டறிய முடியாது. சில வகையான ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள் ஒலியிலும் பலமடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜப்பானிற்கும் வல்லரசுக் கனவு உண்டு

இந்தியா, ஜேர்மனி, தென் ஆபிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளைப் போல ஜப்பானும் ஒரு வல்லரசாக விரும்புகின்றது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தற்போது உள்ள வல்லரசு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது தானும் ஒரு வல்லரசாக வேண்டும் என ஜப்பான் நினைக்கின்றது. ஜப்பானின் மக்கள் தொகை, பொருளாதார வலு, படை வலு ஆகியவை மற்ற நாடுகளுக்கு சளைத்தவை அல்ல சவால் விடக்கூடியவை. ஜப்பானின் வயோதிபர்களை அதிகமாகக் கொண்ட மக்கள் தொகைக் கட்டமைப்பு ஜப்பானின் ஒரு பாதகமான அம்சமாகும்.

 

அமெரிக்க சீனப் போர் பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்

https://www.veltharma.com/2020/10/2021.html

இந்தியா ஜப்பானிய உறவின் முக்கியத்துவம் பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்

https://www.veltharma.com/2014/09/blog-post_8.html

Thursday, 9 December 2021

இடியப்பச்சிக்கலைத் தெளிவாக்கிய மோடி புட்டீன் சந்திப்பு

  


2021 டிசம்பர் 6-ம் திகதி இரசிய அதிபர் புட்டீன் இந்தியா சென்று தலைமை அமைச்சர் மோடியுடன் ஒரு குறுகிய நேர உச்சி மாநாட்டை நடத்தியுள்ளார். புட்டீன் 2021இல் செய்த இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் இந்தியாவிற்கானதாக அமைந்துள்ளது. முதலாவது பயணமாக அமெரிக்க அதிபரைச் சந்திக்க ஜூன் மாதம் ஜெனீவாவிற்கு சென்றிருந்தார். இரு நாட்டுத் தலைவர்களிடையே நடந்த 21வது இந்திய இரசிய உச்சி சந்திப்பு இதுவாகும். இரசியாவின் சென் அண்டுரூ கட்டளை மூலம் கௌரவிக்கப்பட்ட நான்கு வெளிநாட்டவரகளுள் நரேந்திர மோடியும் ஒருவராவர். தனிப்பட்ட ரீதியில் இருவருக்கும் இடையில் சிறப்பான நட்பு நிலவுகின்றது. அதாவது chemistry நல்லா workout ஆகுது.

படைக்கலன் கொள்வனவால் வலிமையடைந்த உறவு

இந்தியா இரசியாவிடமிருந்து படைக்கலன்களை வாங்குவது 1962-ம் ஆண்டு இரசியாவிடமிருந்து மிக்-21 போர் விமான ங்களை கொள்வனவு செய்ததில் இருந்து ஆரம்பித்தது. இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் படைக்கலன்களை கொள்வனவு செய்வது முக்கிய பங்கு வகிக்கின்றது. இரு நாடுகளும் இணைந்து பல படைக்கலன்களை உற்பத்தி செய்கின்றன. அதில் முக்கியமானது பிரம்மோஸ் ஏவுகணைகளாகும். இரு நாட்டு கூட்டு உற்பத்தியில் ஆரம்பிக்கப் பட்ட ஐந்தாம் தலைமுறைப் போர்விமானம் சரிவரவில்லை. செலவு அதிகம் எனச் சொல்லி இந்தியா அதிலிருந்து விலகி விட்டது. அதனால் இரு நாட்டு உறவு பாதிக்கப்படவில்லை. 2011இல் இருந்து 2015 வரையிலான காலப் பகுதியில் இந்தியாவின் படைக்கலன் இறக்குமதில் 70% இரசியாவில் இருந்து செய்யப்பட்டது. அதன் அடுத்த ஐந்தாண்டுக் காலப்பகுதியான 2016-2020இல் அது 49% ஆகக் குறைந்து விட்டது. அதே காலப்பகுதியில் அமெரிக்கா இந்தியாவை பெரிய பாதுகாப்பு பங்களி நாடாக (Major Defence Partner) அறிவித்தது. அதன் மூலம் பல புதிய படைக்கலன்களையும் தொழில்நுட்பங்களையும் இந்தியா அமெரிக்காவிடமிருந்து பெற்றுக் கொண்டது. அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்ய மறுக்கும் நீர்மூழ்கிகளை அணுவலுவில் இயக்கும் தொழில்நுட்பத்தை இந்தியா இரசியாவிடமிருந்தே பெற்றுக் கொண்டது.

சிக்கலான உறவு

2014-ம் ஆண்டில் இருந்து வலதுசாரி பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியில் அமெரிக்க இந்திய உறவு மேம்படுத்தப்படுகின்றது. அதே ஆண்டு இரசியா உக்ரேன் மீது ஆக்கிரமிப்பு போர் தொடுத்ததில் இருந்து அமெரிக்க இரசிய உறவில் முறுகல் தீவிரமடைந்துள்ளது. அதே ஆண்டு தென் சீனக் கடலில் சீனா செயற்கை தீவுகளை உருவாக்கத் தொடங்கியதில் இருந்து அமெரிக்க சீன உறவில் நெருக்கடி ஏற்பட்டு பின்னர் சீனா தைவானை தன்னுடன் இணைப்பதை அமெரிக்கா கடுமையாக எதிர்ப்பதால் அந்த நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் பொது எதிரியான அமெரிக்காவிற்கு எதிராக இரசியாவும் சீனாவும் தமக்கிடையிலேயான உறவை மேம்படுத்துகின்றன. இந்தியா அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளுடன் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான கடற்போக்கு வரத்தை உறுதி செய்ய குவாட் அமைப்பில் இணைந்து செயற்படுகின்றது. அமெரிக்காவிடமிருந்து எல்லா படைக்கலன்களையும் படைத்துறைத் தொழில்நுட்பங்களையும் இந்தியாவால் கொள்வனவு செய்ய முடியாது. அமெரிக்கா எல்லாவற்றையும் மற்ற நாடுகளுக்கு வழங்குவதில்லை என்பது மட்டுமல்ல சில விற்பனைகள் மனித உரிமைகளுடன் தொடர்பு படுத்தப்படுவதுடன் சிலவற்றிற்கு இறுக்கமான அறிவுசார் காப்புரிமையை அமெரிகா கடைப்பிடிக்கின்றது. இந்தியா இரசியாவிடமிருந்து படைக்கலன்களை வாங்குவதை குறைத்தால் இரசியா பாக்கிஸ்த்தானிற்கு படைக்கலன்களை விற்பனை செய்யலாம் என்ற செய்தியை இரசியா மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளது. சீனா தொடர்ச்சியாக இந்திய எல்லையில் அத்துமீறல்களைச் செய்வதை தடுக்க இந்தியாவிற்கு அமெரிக்காவின் உதவியும் ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றது. தேவையான போது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இந்தியாவிற்கு சாதகமாக இரசியா தனது இரத்து அதிகாரத்தை பாவிப்பது வழமை. அதற்காக இரசியாவின் உறவு இந்தியாவிற்கு அவசியமாகின்றது. இந்தியாவின் இந்த நிலையை சமாளிக்க பிரான்ஸ் முன்வந்தது. பிரான்ஸ் தேவையான படைக்கலன்கள் தேவையானபோது ஐநா இரத்துப் பாவனை என்ற அடிப்படையில் இந்தியாவுடன் ஒத்துழைக்க பிரான்ஸ் தயாராகியது. இந்தவிதமான இடியப்பச் சிக்கலின் நடுவில் மோடி – புட்டீன் சந்திப்பு நடந்தது.

எஸ்-400 வான் பாதுகாப்பு முறைமை

இந்தியாவிற்கான இரசியத் தயாரிப்பு வான் பாதுகாப்பு முறைமையான எஸ்-400இன் விநியோகத்தை துரிதப் படுத்துமாறு இந்தியா விடுத்த வேண்டு கோளை ஏற்றுக் கொண்ட நிலையிலேயே புட்டீன் தன் இந்தியப் பயணத்தை மேற்கொண்டார். எஸ்-400 பாக்கிஸ்த்தான் – இந்தியப் படைத்துறைச் சமநிலையை இந்தியாவிற்கு சாதகமாக மாற்றும். சீனாவிற்கும் பிரச்சனையாக அமையும். இந்தியா இரசியாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையை வாங்குவதற்கு அமெரிக்காவில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியாவிற்கு எதிராக படைக்கலன் விற்பனை தடைகளைக் கொண்டு வரவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அதற்கு எதிராக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மூன்று மூதவை உறுப்பினர்கள் ஒரு சட்ட மூலத்தை அமெரிக்க நாடளுமன்றத்தில் சமர்பித்ததுடன் குவாட் அமைப்பின் உறவை பாதிக்கும் எந்த ஒரு தடை உத்தரவிற்கும் அமெரிக்க அதிபர் உடன்படக் கூடாது என்ற கோரிக்கையையும் அவரிடம் விடுத்தனர்.

எஸ்-400 பற்றிய கட்டுரையை இந்த இணைப்பில் காணலாம்:

https://www.veltharma.com/2021/08/400-f-35.html

2+2 உரையாடல்

அமெரிக்காவும் இந்தியாவும் 2+2 உரையாடல் என்னும் பேச்சு வார்த்தையை ஆண்டு தோறும் இரு நாடுகளினதும் வெளிநாட்டு அமைச்சர்களும் பாதுகாப்பு அமைச்சர்களும் இணைந்து நடத்திவருகின்றனர். இவை இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு மற்றும் உலக விவகாரங்களில் ஒன்றுபட்டு செயற்படுவதை உறுதி செய்கின்றன. அதே போன்ற உரையாடலை இனி இந்தியாவும் இரசியாவும் செய்ய மோடி – புட்டீன் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்தியா அமெரிக்காவிற்கு கொடுக்கும் முக்கியத்துவ போல இரசியாவிற்கும் கொடுக்க விரும்புகின்றது என்பதைக் காட்டுகின்றது.

இரசியாவின் சமரச முயற்ச்சி

2020 மே மாதம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடந்த எல்லை மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளிடயே சமரசம் செய்ய புட்டீன முன்வந்தார். பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றிற்கு இரசியா தலைமை வகித்த காலத்தில் இந்திய சீன முறுகல் நடந்தது. இந்த இரு அமைப்புக்களிலும் சீனா, இரசியா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன. 2020 செப்டம்பரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் இரசியா இந்திய சீன வெளியுறவுத்துறை அமைச்சர்களை நேரடியாக சந்திக்க வைத்தது. அதைத் தொடர்ந்து இரு நாடுகளினதும் படையினரும் எல்லையில் தமக்கிடையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்த ஒத்துக் கொண்டனர். இரசியா சீனாவுடனும் இந்தியாவுடனும் ஏற்படுத்தியுள்ள கேந்திரோபாய உறவு இப்படி ஒரு பிரச்ச்னையை தீர்க்கும் தன்மையை இரசியாவிற்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இரு நாடுகளுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா எடுத்த முயற்ச்சியை இரு நாடுகளும் கவனத்தில் எடுக்கவில்லை. சீனாவின் நடவடிக்கைகளை அமெரிக்கா ஆக்கிரமிப்பு என அடையாளமிட்டிருந்தது. இந்தியா இன்றுவரை இந்தியாவிற்கு படைக்கலன்களை விநியோகம் செய்வதில் காத்திரமான பங்கை வகிக்கின்றது. சீனாவும் பல படைத்துறைத் தொழில் நுட்பங்களை இரசியாவில் இருந்தே பெறுகின்றது.

மோடி – புட்டீன் ஒப்பந்தங்கள்

இருபத்தெட்டு ஒப்பந்தங்களும் புரிந்துணர்வு குறிப்பேடுகளும் கைச்சாத்திடப்பட்டன. வர்த்தகம், எரிபொருள், விஞ்ஞானம், தொழில்நுட்பம், அறிவுசார் சொத்து, விண்வெளி, கனிமவள ஆய்வு, கலாச்சார பரிவர்த்தனை, கல்வி என பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைக்கும் ஒப்பந்தங்கள், புரித்துணர்வு குறிப்பேடுகள் கைச்சாத்திடப்பட்டன. இரசியாவின் AK-203 Assault Rifleகளை இந்தியாவில் இரு நாடுகளும் இணைந்து உற்பத்தி செய்யும் ஒப்பந்தம். மொத்தமாக 500,000 ரைபிள்கள் உற்பத்தி செய்யப்படும். இப்படிப்பட்ட படைத்துறை ஒத்துழைப்பு இன்னும் பத்து ஆண்டுகளுக்கு தொடரும் எனவும் ஒத்துக்கொள்ளப்பட்டது. இரு நாடுகளும் தத்தம் நடுவண் வங்கிகளை இணையவெளித் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பது தொடர்பாகவும் ஒத்துக் கொண்டுள்ளன. இரசியாவும் இந்தியாவும் செய்யும் வர்த்தகத்திலும் பார்க்க பத்து மடங்கு வர்த்தகம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடக்கின்றது. அத்துடன் இந்திய-சீன வர்த்தகம் இந்தியாவிற்கு பாதகமான முறையில் நடக்கின்றது. சீனா போதிய அளவு இறக்குமதியை இந்தியாவில் இருந்து செய்வதில்லை என்ற குறைபாடு உள்ளது.

சீன வேலப்பசிக்கு இரையாகும் இந்தியப் பொருளாதாரம் என்னும் 2013-ம் ஆண்டு எழுதிய கட்டுரையை இந்த இணைப்பில் காணலாம்:

https://www.veltharma.com/2013/05/blog-post_21.html

அமெரிக்க இந்திய உறவின் வளர்ச்சி இந்திய இரசிய உறவை பாதிக்காது.

Monday, 6 December 2021

இந்தியாவிற்கு 114 பற்பணிப் போர்விமானங்களை விற்கும் போட்டி

  


2019 ஏப்ரலில் இந்திய வான்படைக்கு 114 பற்பணிப் போர் விமானங்களை வாங்கவிருப்பதாக இந்திய அரசு அறிவித்து அதற்கான வழங்கல் அறிவிப்புக்களையும் உலகெங்கிலும் இருந்து கோரியிருந்தது. 114 விமானங்களுக்குமான மொத்த விலை 18 பில்லியன் டொலர்கள் அண்மைக்கால வரலாற்றின் மிகப் பெரிய படைக்கலன் கொள்வனவாக அமைந்துள்ளது. 2021 ஒக்டோபர் இந்தியாவின் வான்படைத்தளபதி வீ ஆர் சௌதாரி 114 பற்பணிப் போர் விமானங்களை வழங்குவதற்கு பல பன்னாட்டு விமான உற்பத்தியாளர்கள் முன்வந்து பத்திரங்கள் கையளித்துள்ளதாகவும் கொள்வனவின் அடுத்த கட்டத்தை நோக்கி தாம் நகர்வதாகவும் தெரிவித்திருந்தார். போயிங், லொக்கீட் மார்ட்டின், யூரோஃபைட்டர், இரசிய யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேசன், சாப் ஆகிய முன்னணி விமான உற்பத்தியாளர்கள் இந்தியாவிற்கு 114 பற்பணி போர்விமானங்களை வழங்க முன் வந்துள்ளன.

வானில் ஆதிக்கம் செலுத்துதல், வானில் இருந்து வானுக்கு தாக்குதல், வானில் இருந்து தரைக்கு குண்டு வீசுதல், வேவு பார்த்தல், கண்காணிப்பு, முற்சென்று வானைக் கட்டுப்படுத்துதல், இலத்திரனியல் போர் முறை, எதிரிவிமானங்களை இடைமறித்தல் போன்ற பல பணிகளைச் செய்யக் கூடிய விமானங்களை பற்பணிப் போர் விமானம் என அழைப்பர். முன்பு ஒவ்வொருவிதமான பணிகளுக்கும் என்றும் ஒவ்வொரு வகையான விமானங்கள் தயாரிக்கப்பட்டன. பின்பு பல பணிகளையும் செய்யக் கூடிய ஒரே விமானம் உருவாக்கப்படுகின்றன. இருந்தும் இப்போதும் வேவு பார்த்தலுக்கு தனியான விமானங்கள் உருவாக்கப்படுகின்றன.



இந்தியாவிடம் தற்போது உள்ள சோவியத் ஒன்றிய காலத் தயாரிப்பு விமானங்களான மிக்-21 மற்றும் மிக்-27 போர்விமானங்களை சேவையில் இருந்து அகற்றி விட்டு புதிய பற்பணி விமானங்களை வாங்க வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது. இந்தியா கடைசியாக வாங்கிய ரஃபேல் போர் விமான ங்களை வாங்கி முடிக்க பத்து ஆண்டுகளுக்கு மேல் எடுத்தது. இந்த முறை 114 போர்விமான ங்களை துரிதமாக வாங்கி முடிக்க இந்தியா முயல்கின்றது. 2024 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கின்றது பாதுகாப்புச் செலவிற்கு அதிக நிதி செலவு செய்வதால் ஆளும் கட்சியின் வருமானத்தை அதிகரிக்க வாய்ப்புண்டு.



இந்தியாவின் தேஜஸ்

இந்தியாவின் மிராஜ்-2000, மிக்-29 ஆகிய போர்விமானங்கள் 30ஆண்டுகள் பழமையானவை. ஜகுவார் போர்விமானங்கள் 40ஆண்டுகள் பழமையானவை. 2014 பெப்ரவரி பாக்கிஸ்த்தானால் கைப்பற்றப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் ஓட்டிச் சென்ற மிக்-21 விமானம் 44 ஆண்டுகள் பழமையானவை. இந்தியா அவசியமாகவும் அவசரமாகவும் தனது விமானங்களைப் புதுப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளது. மிக்-21 போர் விமானங்கள் பழமையடைந்ததால் உள்நாட்டிலேயே அவற்றிற்கு ஈடான பாரம் குறைந்த தாக்குதல் போர்விமானமாக தேஜஸ் விமான உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது. தேஜஸ் விமானங்களில் பாரம் குறைந்த பற்பணிப் போர்விமானங்களும், தாக்குதல் போர்விமானங்களும் அடங்கும். 2014-ம் ஆண்டில் அவை உற்பத்தி செய்யப்பட்டு விமானப் படையில் இணைக்கப்பட்டன. முன்னூறுக்கு மேற்பட்ட தேஜஸ் விமானங்கள் இந்திய விமானப் படையில் உள்ளன. 2016-ம் ஆண்டு இந்தியக் கடற்படையினர் தேஜஸ் விமானங்களை வாங்க மறுத்தமைக்கு இரு காரணங்களைக் கூறினர். ஒன்று அவை பாரம் அதிகமானவை. இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலில் குறைந்த தூரம் ஓடி எழும்புபவதற்கான போதிய உந்து வலு அவற்றிடம் இல்லை. அதனால் F414 என்னும் இயந்திரங்களால் இயக்கப்படும் தேஜஸ் மார்க் – 2 என்ற விமானங்கள் உருவாக்கப்பட்டன. 201 தேஜஸ் மார்க் - 2 விமானங்களை இந்திய விமானப்படை வாங்கவுள்ளது. தேஜஸ் மார்க்-1 விமானங்களில் இஸ்ரேலின் AESA ரடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேஜஸ் மார்க்-2 விமானங்கள் தற்போது உருவாக்கும் நிலையில் உள்ளன. முன்னோடி உருவாக்கல்களுக்கு என அமெரிக்காவின் ஜெனரஸ் எலெக்ரிக் நிறுவனம் தனது இரண்டு F414-INS6 இயந்திரங்களை வழங்கியுள்ளது.  திட்டம் வெற்றியளித்தால் அறுநூறு மில்லியன் டொலர்களுக்கு தொண்ணூற்றி ஒன்பது F414-INS6 இயந்திரங்களை ஜெனரல் எலெக்ரிக் விற்பனை செய்யும். அத்துடன் F414-INS6 இயந்திரங்களின் 60விழுக்காடு தொழில்நுட்பம் இந்தியாவிற்கு வழங்கப்படும். பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா காவேரி கே-9, கே-10 என்னும் விமான இயந்திரங்களை உள்நாட்டில் உருவாக்க முயற்ச்சி செய்து கொண்டிருக்கின்றது. ஜெனரல் எலெக்ரிக்கின் இயந்திரத் தொழில்நுட்பம் காவேரி இயந்திரங்களை உருவாக்குவதைத் துரிதப்படுத்தும். தேஜஸ் மார்க் – 2 விமானங்களில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் Uttam AESA ரடார்கள் இணைக்கப்படவுள்ளன. Uttam AESA வானில் இருந்து வானிற்கு மட்டுமே செயற்படக் கூடியவை வானில் இருந்து தரைக்கு அவை போதிய பயனைத் தராது. இந்திய வான்படையினர் 46 முதல் 56 வரையிலான தேஜஸ் மார்க்-2 இன் விமானம் தாங்கிக் கப்பல்களுக்கான வகைகளை வாங்கவுள்ளனர்.

எதை இந்தியா வாங்கும்?

சுவீடனின் Gripen விமானங்களிலும் தேஜஸ் விமானத்தைப் போலவே அமெரிக்காவின் General Electric நிறுவனத்தின் இயந்திரங்கள் பாவிக்கப்படுகின்றன. ஆனால் Gripen இல் பாவிக்கப்படுவை F414-GE-39. Gripen – E விமானங்களில் 33% பாகங்கள் அமெரிக்காவிடமிருந்து வாங்கப்படுகின்றன. ரஃபேல் விமானம் ஒன்றை வாங்க 1820 கோடி ரூபா செலவாகும் Gripen – E விமானம் ஒன்றை வாங்க 1050கோடி ரூபா போதும். ரஃபேலின் பறப்புத்தூரம் Gripen இலும் பார்க்க 500கிமீ அதிகமானதாகும். இரசிய விமானங்கள் சுவீடன் வான்பரப்பில் அத்து மீறுவதை தடுக்க சுவீடனின் விமானங்களில் சிறந்த இலத்திரனியல் செயற்பாடுகள் உள்ளன. Gripen விமானங்களின் உற்பத்தியாளர்களான சுவீடனின் SAAB நிறுவனம் இந்தியாவின் TATA நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் விமான உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க விமானங்களை இந்தியா வாங்கினால் அது பல நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டியிருக்கும். நிபந்தனைகள் காப்புரிமையில் இருந்து மனித உரிமைவரைக்கும் இருக்கும். அமெரிக்காவின் போயிங் நிறுவனம் F-15EX பற்பணிப் போர் விமானங்களை விற்பனை செய்ய முயல்கின்றது. Apach Guradian மற்றும் Chihook ஆகிய உலங்கு வானூர்திகளையும் C-17 என்னும் படையினர் போக்குவரத்து விமானங்களையும் P8I ரோந்து விமான ங்களையும் இந்தியாவிற்கு விற்பனை செய்த போயிங் விமான உற்பத்தி நிறுவனத்தால் இந்தியாவிற்கு FA-18 Super Hornet விமானங்க்ளை விற்பனை செய்ய முடியவில்லை. அமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் FA-16 போர் விமானங்களை விற்பனை செய்ய முயல்கின்றது. இரசியா தனது மிக்-35 விமான ங்களை விற்பனை செய்ய முயல்கின்றது.

இரசியாவின் மிக்-35 பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்:

https://www.veltharma.com/2017/02/35.html

இந்தியாவிற்கு 114 போர்விமானங்களை யார் விற்பனை செய்வது என்ற போட்டியில் பிரான்ஸின் ரஃபேலும் சுவீடனின் Gripen உம் முன்னணியில் நிற்கின்றன.

Friday, 3 December 2021

அமெரிக்க நீர்மூழ்கிமீது சீன நீர்மூழ்கி மோதியதா?

 


2021 ஒக்டோபர் 2-ம் திகதி அல்லது அதற்கு முன்னர் அமெரிக்காவின் அணுவலுவில் இயங்கும் USS CONNECTICUT என்னும் நீர்மூழ்கிக்கப்பல் கடலுக்கடியில் இனம் தெரியாத பொருள் ஒன்றின் மீது மோதியதால் அதில் பயணித்துக் கொண்டிருந்த 11 கடற்படையினர் காயப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளிவந்திருந்தன.  இந்த செய்தியை அமெரிக்கா 7-ம் திகதி தான் வெளியிட்டது. USS CONNECTICUT இந்த நிகழ்வின் பின்னர் குவாம் தீவில் உள்ள அமெரிக்கப் படைத்தளத்தைச் சென்றடைந்தது. USS CONNECTICUT பனிப்போர் காலத்தில் தேவை ஏற்படின் சோவியத் ஒன்றியத்தின் நீர்மூழ்கிக் கப்பல்களை துரிதமாக தாக்கி அழிப்பதற்கு 1990களில் $3பில்லியன் டொலர் செலவில் உருவாக்கப் பட்ட நீர்மூழ்கிக்கப்பலாகும். அந்த வகை நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு கடல் ஓநாய் என்ற குறியீட்டுப் பெயருண்டு.



தொடர்ந்து பயணித்த USS CONNECTICUT

USS CONNECTICUTஇன் அணித்தலைவர் அந்த நீர்மூழ்கிக் கப்பலில் அணு உலை பாதிப்பிற்கு உள்ளாகவில்லை என்றதுடன் அது செயற்படு நிலையில் உள்ளது என்றார். மோதலின் பின்னர் அது 1500மைல்கள் பயணித்தது. ஆனால் அப்பயணம் நீருக்கடியில் இல்லாமல் நீரின் மேற்பரப்பில் செய்யப்பட்டது. 

தகவல் சூறையாடும் USS CONNECTICUT

National Interest என்னும் அமெரிக்க ஊடகம் USS CONNECTICUT நீர்மூழ்கிக்கப்பலில் நவீன உளவறியும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்கின்றது. அது செல்லும் கடற் பிரதேசத்திலும் கரையிலும் உள்ள தொடர்பாடல்களைப் அக்கருவிகள் பதிவு செய்யக் கூடியவை என்கின்றது அந்த ஊடகம். தென் சீனக்கடல் போன்ற ஆழம் குறைந்த கடலில் உளவு பார்ப்பதற்கு சாதாரண கப்பல்களிலும் பார்க்க நீர்மூழ்கிக்கப்பல்கள் சிறந்தவை. National Interest எப்படிப் பட்ட பொருளில் USS CONNECTICUT மோதியது என்பதை உறுதி செய்யவில்லை என்கின்றது.

சீனாவின் கருத்து

சீனாவின் South China Morning Post ஊடகமும் மர்மமான பொருள் ஒன்றில் USS CONNECTICUT மோதியதாக செய்தி வெளியிட்டுள்ளது. US Naval Institute News இன் இணயத்தளத்திலும் தெரியாத நீரடியில் இருந்த பொருள் ஒன்றின் மீது மோதியதாக செய்தி வெளியிட்டுள்ளது. அணுக்கசிவு ஆபத்தை இனம் காணுவதற்காக மோதல் நடந்த இடம் பற்றிய தகவல்களை சீனா அமெரிக்காவிடம் கோரியுள்ளது. அமெரிக்கா அந்த நீர்மூழ்கிக் கப்பலகளில் பயணித்தவர்களைத் தனிமைப் படுத்து அணுக்கதிர்வீச்சுக்கு அவர்கள் உள்ளாகியுள்ளார்களா என ஆய்வு செய்கின்றது. மோதிய நீர்மூழ்கிக்கப்பல் பல விஞ்ஞானிகளாலும் நிபுணர்களாலும் ஆய்வு செய்யப்படுகின்றது.

ஹைனன் தீவு மோதல்

2001-ம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி தென் சீனக் கடலில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான EP-3 SERIES-II Signal Intelligence என்னும் உளவு விமானத்தை இரண்டு சீனாவின் J-811 இடைமறிப்பு விமானங்கள் சூழ்ந்து கொண்டன. அதில் ஒரு விமானம் EP-3 AERIES-II இன் கீழ்ப்பகுதியில் மோதியது. அதில் இருந்த ஒருவர் விமானத்தில் இருந்து வெளியேறி காணாமல் போனார். விமானத்தில் பயணித்த ஏனைய 24 பேரும் அவசர மாக சீனாவின் ஹைனன் தீவில் சீன அனுமதியுடன் தரையிறங்கினர். அவர்களையும் விமானத்தையும் சீனா கைப்பற்றியது. விமானத்தின் தொழில்நுட்பத்தை அறிய அதை சீன நிபுணர்கள் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துக் கொண்டனர். அமெரிக்கா தனது விமானத்தையும் பயணிகளையும் திருப்பித் தருமாறு வற்புறுத்திய போது. விமானத் துண்டங்களையும் பயணிகளையும் திருப்பிக் கொடுத்தது. EP-3 AERIES-II உளவு விமானம் பன்னாட்டு வான்பர்ப்பில் பறந்து கொண்டே நூறுமைல்களுக்கும் அப்பால் உள்ள தொடர்பாடல்களை பதிவு செய்யவும் அங்குள்ள இலத்திரனியல் கருவிகளில் உள்ள தகவல்களைச் சூறையாடவும் வல்லது. அதன் ஆபத்தை உணர்ந்தே சீனா அதன் மீது மோதி தரையிறக்கியது. இதே போன்று USS CONNECTICUT நீர்மூழ்கிக்கப்பலுக்கும் நடந்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.

தாமதம் ஏன்?

ஒக்டோபர் 2-ம் திகதி நடந்த நிகழ்வை அமெரிக்கா பகிரங்கமாக அறிவிக்க ஏன் ஐந்து நாட்கள் தாமதித்தது என்ற கேள்வி இந்த நிகழ்வில் சீனா தொடர்புபட்டிருக்கலாம் என்ற ஐயத்தை ஏற்படுத்துகின்றது. சீனா USS CONNECTICUT உள்ள உணரிகளால் இனம் காணப்படாத மூலகங்களால் ஆக்கப்பட்ட பொருள்களை அது வரும் வழியில் வைத்திருக்கலாம் எனவுக் கருதப்பட்டது.

செய்மதிப் படங்கள்

Type – 94 Jin Class SSBN என்ற சீனாவிற்கு சொந்தமான அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்க கப்பல் சேதத் திற்கு உள்ளான வேளையில் சேதமடைந்த நிலையின் இன்னொரு சீனக் கடற்கலம் வழிகாட்ட நீரின் மேற்பரப்பில் பயணித்து சீனாவின் வடகிழக்கு மாகாணமான லயோனிங்கின் கடற்கரையில் உள்ள Bohai Shipyard சென்று திருத்தப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. HI Sutton என்ற படைத்துறை ஆய்வாளர் தனது hisutton.com என்ற இணையத்தளத்தில் ஐரோப்பிய விண்வெளி முகவரகத்தின் செய்மதியான Sentinel-2 எடுத்த படங்களை ஆதாரமாகக் காட்டியுள்ளார். ஆனால் இரண்டும் ஒன்றின் மீது ஒன்று மோதியிருக்கலாம் என அவர் கருத்து வெளியிடவில்லை. ஆனால் Elmer Yuen என்பவர் இந்திய Youtube Channel ஒன்றிற்கு அமெரிக்காவின் USS CONNECTICUT நீர்முழ்கிமீது சீனாவின் Type – 94 Jin Class SSBN நீர்மூழ்கி மோதியது என்கின்றார். ஆனால் அது உறுதிப்படுத்த முடியாதது என்றும் சொல்கின்றார்.


அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிகள் இரண்டு ஒன்றின் மீது ஒன்று மோதுவது பாரிய சூழல் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. அணு உலைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சீன நீர் மூழ்கி மோதியிருக்குமா?

Thursday, 2 December 2021

இரசிய விரிவாக்கம் உண்மையா?

  




2021 நவம்பர் 2-ம் திகதி இரசியக் கட்டுப்பாட்டில் உள்ள கிறிமியாவில் இருந்து கருக்கடலில் உள்ள எதிரிக் கப்பல்களை அழிக்கும் பயிற்ச்சிகளை மேற்கொள்வதன் மூலம் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் தனது வேட்டியை மடித்துக் கட்டிய நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ஆறவது கடற்படைப் பிரிவை USS Mount Whitney என்னும் ஈருடக கட்டளைக் கப்பல் தலைமையிலும் P-8A என்னும் நீர்மூழ்கி எதிர்ப்பு உளவு (Anti-submarine spy planes) விமானங்களின் துணையுடனும் கருங்கடலுக்கு 2021 4-ம் திகதி அனுப்பியுள்ளார்.

நேட்டோ விரிவாக்கம்

1989இல் சோவியத் ஒன்றியத்தின் பிடியில் இருந்த கிழக்கு ஜெர்மனியில் நடந்த மக்கள் கிளர்ச்சியால் ஜெர்மனியை கிழக்கு மேற்கு எனப் பிரித்த பேர்லின் சுவர் உடைக்கப்பட்டது. சோவியத் ஒன்றியம் கிழக்கு ஜேர்மனியை விட்டுக் கொடுக்கும் போது  நேட்டோ விரிவாக்கம் செய்யப்பட மாட்டாது என ஒரு வாய் மூலமான உறுதி மொழியை அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் இரசிய அதிபர் மிக்கையில் கொர்பச்சோவிற்கு வழங்கியிருந்தார். ஆனால் 1991இன் இறுதியில் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர் பல முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளும் அவற்றின் படைத்துறைக் கூட்டமைப்பான வார்சோ ஒப்பந்த நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளும் நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைக்கப்பட்டன. இதை இரசியா தன்னை தனிமப்படுத்தும் முயற்ச்சியாகப் பார்த்தது. ஜோர்ஜியாவும் உக்ரேனும் இரசியாவின் கவசப் பிராந்திய நாடுகள் என இரசியப் படைத்துறையினர் கருதுகின்றனர். அவை நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவது இரசியாவின் இருப்புக்கு ஆபத்து என்பது உண்மையாகும். உக்ரேன் இரசியாவின் எதிரிகளில் கைகளில் இருந்தால் இரசியா ஒரு வல்லரசு என்ற நிலையை இழக்க வேண்டி வரும் என்னும் அளவிற்கு உக்ரேனின் பூகோள அமைப்பு இருக்கின்றது. உக்ரேனின் கிறிமியா இரசியா வசம் இல்லாமல் இரசியக் கடற்படை இயங்க முடியாது என்னும் அளவிற்கு அது இரசியாவிற்கு முக்கியம் வாய்ந்தது.



ஜோர்ஜிய வரலாறு

ஜோர்ஜியாவும் உக்ரேனும் இரசிய வெளியுறவுக் கொள்கையின் இரண்டு கண்கள் எனச் சொல்லலாம். இரண்டு நாடுகளும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பிலே அல்லது ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார-அரசியல் கூட்டமைப்பிலோ இணையாமல் தடுப்பது இரசியாவின் கோந்திரோபங்களில் முதன்மையானது. இரண்டு நாடுகளினதும் பகுதிகளை இரசியா ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்து வைத்துள்ளது. ஒரு தனி நாடாக இருந்த ஜோர்ஜியாவை 1804-ம் ஆண்டு இரசியா ஆக்கிரமித்துக் கொண்டது. இரசியாவில் 1918இல் நடந்த பொதுவுடமைப் புரட்சியின் போது ஜோர்ஜியா தனிநாடாகப் பிரிந்து சென்றது. 1921-ம் ஆண்டு இரசிய செம்படையினர் ஜோர்ஜியாவை ஆக்கிரமித்து இரசியா உருவாக்கிக் கொண்டிருந்த சோவியத் ஒன்றியத்தில் இணைத்துக் கொண்டது. ஜோர்ஜியாவில் பிறந்த ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியத்தின் உச்சத் தலைவராகப் பணியாற்றி அதை படைத்துறையிலும் பொருளாதாரத்திலும் மேம்படுத்தி ஒரு வல்லரசாக மாற்றியதுடன் இரண்டாம் உலகப் போரில் வெற்றியடையவும் வைத்தார். அவர் சோவியத் ஒன்றியத்தின் மக்களுக்கு எதிராக கடுமையாக நடந்து கொண்டார். அதனால் ஸ்டாலினின் செயலை அவரது எதிரிகள் Mass Terror என அழைத்தனர். 1953இல் ஸ்டாலின் மறைந்த பின்னர் ஆட்சிக்கு வந்த நிக்கித்தா குருசேவ் கொண்டு வந்த சீர்திருத்தங்களை ஜோர்ஜியாவில் உள்ள பொதுவுடமைவாதிகள் கடுமையாக எதிர்த்ததுடன் 1956-ம் ஆண்டு ஜோர்ஜியாவை தனிநாடாகப் பிரகடனப்ப்டுத்தினர். அவர்களை சோவியத் ஒன்றியம் இரும்புக்கரங்களால் நசுக்கியது. 1991-ம் ஆண்டு ஜோர்ஜியாவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் பின்னர் அது தனிநாடாக உருவாக்கப்பட்டது. இருந்தும் பல இரசியப் படைத்தளங்கள் ஜோர்ஜியாவில் தொடர்ந்தும் இருக்க அனுமதிக்கப்பட்டது. 1992இல் ஜோர்ஜியாவின் ஒரு பகுதியான தெற்கு ஒசெசிட்டியாவிலும் அப்காசியாவிலும் பிரிவினை வாதம் தலை தூக்கியது. 1993இல் இரசியாவின் சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம் என்னும் அமைப்பில் ஜோர்ஜியா இணைந்து கொண்டது. அதனால் ஜோர்ஜியாவில் இருந்த பிரிவினைவாதப் பிரச்சனையைத் தீர்க இரசியா உதவி செய்தது. இரசிய அமைதிப் படை ஜோர்ஜியாவில் நிலை கொண்டது. 2002-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்கப் படையினர் ஜோர்ஜியப் படையினருக்கு பயிற்ச்சி வழங்க அங்கு சென்றனர். இது இரசிய ஜோர்ஜிய உறவில் விரிசலை ஏற்படுத்தியது. 2002 செப்டம்பர் மாதம் இரசியாவின் செஸ்னியப் பிரதேசத்தில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு ஜோர்ஜியா உதவி செய்யக் கூடாது என இரசிய அதிபர் புட்டீன் எச்சரித்தார். 2003 நவம்பரில் ஜோர்ஜியாவில் நடந்த ரோஸ் புரட்சியால் அதிபர் Shervardnadze பதவி விலகினார். 2006-ம் ஆண்டு ஜோர்ஜியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்தது. ஜோர்ஜியா ஐரோப்பிய் ஒன்றியத்தில் இணைய விரும்பியது. அதேவேளை ஜோர்ஜியா அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணையும் கருத்துக் கணிப்பு வெற்றி பெற்றதுடன் அது ஜோர்ஜிய நாடாளுமன்றத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனால் இரசியா கடும் விசனமடைந்தது. ஜோர்ஜியாவின் ஒரு பகுதியான தெற்கு ஒசெசிட்டியாவிலும் அப்காசியாவிலும் பிரிவினைவாதத்தை இரசியா ஊக்குவித்தது. ஜோர்ஜியாமீது ஓகஸ்ட் 8-ம் திகதி இரசியா பெரும் ஆக்கிரமிப்பு போரைச் செய்தது. தெற்கு ஒசெசிட்டியாவும் அப்காசியாவும் தனிநாடுகளாகப் பிரகடனப் படுத்தப்பட்டன. அவற்றை இரசியா, வெனிசுவேலா, சிரியா, நிக்கிராகுவா ஆகிய நாடுகள் அங்கீகரித்தன. நேட்டோவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் இரசியாவின் எல்லை வரை சென்று இரசியாவின் இருப்புக்கு அச்சுறுத்தலாகியது. பின்னர் 2008-ம் ஆண்டு ஜோர்ஜியாவுடன் இரசியா புரிந்த போருடன் நேட்டோவின் விரிவாக்கத்தை இரசியா ஒரு முடிவிற்கு கொண்டு வந்தது. 2015-ம் ஆண்டு இரசியப் படையினர் தெற்கு ஒசெசிட்டிய-ஜோர்ஜிய எல்லையில் மேலும் ஒன்றரை கிலோ மீட்டர் முன்னேறின.


இரசியாவை நேட்டோவால் தடுக்க முடியுமா?

உக்ரேனையும் ஜோர்ஜியாவையும் இரசியா ஒரு போர் மூலம் முழுமையாக கைப்பற்ற முயன்றால் அதைத் தடுக்க இரசியாவிற்கு எதிராக நேட்டோ படையினர் தாக்குதல் நடத்த முடியுமா? உக்ரேனின் கிறிமியாவை இரசியா ஆக்கிரமித்த போது இரசிய அரசுறவியலாளர்கள் தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தடுத்தால் தம்மால் அமெரிக்காவை ஒரு கதிர்விச்சு மிக்க சாம்பல் மேடாக்க முடியும் என எச்சரித்திருந்தனர். உக்ரேனை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை இரசியா மிகவும் இரகசியமாகவே மேற்கொண்டது. கணினிகள் பாவிக்காமல் பழைய தட்டச்சுக்கள் பாவிக்கப்பட்டன. தகவல் பரிமாற்றங்கள் பழைய முறையில் செய்யப்பட்டன. இரசியாவுடனான நேட்டோ நாடுகளின் மோதல் ஜேர்மனியில் பெரும் பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தும். அதேவேளை 2008-ம் ஆண்டின் பின்னர் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவில் இருந்து சிறிதாக மீண்டு கொண்டிருக்கும் ஜேர்மனிக்கு இப்போது ஒரு போர் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை ஏறபடுத்தும். ஜேர்மனியும் யூரோ வலய நாடுகளும் உறுதியாக நின்றால் இரசியாவை பொருளாதார ரீதியிலும் படைத்துறை ரீதியிலும் பணிய வைக்க முடியும் என சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வல்லரசு நாடுகள் எப்படியும் ஒரு போரைத் தவிர்க்கவே முயற்ச்சிக்கும். ஜேர்மனியுடன் பெரும் பொருளாதார ஒத்துழைப்பைச் செய்யும் பிரித்தானியா ஜேர்மனியின் விருப்பப்படி நடக்கவே விரும்புகின்றது. உக்ரேன் மீண்டும் தனது படையை தன் கிழக்குப் பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளது.

மோல்டோவா

உக்ரேனையும் ஜோர்ஜியாவையும் தவிர மோல்டோவா நாடும் இரசியாவின் ஆக்கிரமிப்பு அச்சத்தை எதிர்கொள்கின்றது. பதின் மூன்று இலட்சம் மக்களைக் கொண்ட ஐரோப்பாவில் வறிய நாடான மோல்டோவா நாட்டில் ஐந்தாயிரம் படையினர் உள்ளனர். இரசியா மோல்டோவாவை ஆக்கிரமித்தால் அந்த ஐயாயிரம் படையினரில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இரசியாவுடன் இணைந்து விடுவார்கள். ஏற்கனவே மோல்டோவாவின் ஒரு பிராந்தியமான திராண்ட்னீஸ்டர்(Transdniester) பிரிவினை கோரியுள்ளது. அங்கு இரசியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள்.

போல்ரிக் நாடுகளும் நடுவண் ஆசிய நாடுகளும்

எஸ்தோனியா நாட்டின் மக்கள் தொகையில் காற்பங்கினர் இரசியர்கள். இது இரசியாவிற்கு வாய்ப்பான ஒரு நிலையாகும். இதே போல் லத்வியா நாட்டின் மூன்றில் ஒரு பங்கினர் இரசியர்களாகும். இதுவும் இரசியாவிற்கு ஒரு வாய்ப்பான நிலையாகும். ஆனால் இவ்விரண்டு நாடுகளும் நேட்டோ படைத் துறைக்கூட்டமைப்பில் உறுப்புரிமை பெற்ற நாடுகளாகும். நேட்டோ நாடு ஒன்றின் மீது வேறு நாடு படை எடுத்தால் மற்ற எல்லா நாடுகளும் அது தம் நாட்டின் மீது படை எடுத்தது போல் பாவித்து அந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டும். அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இவை இரண்டும் உறுப்புரிமை பெற்றுள்ளன. தனியாட்சியாளர்(சர்வாதிகாரி) அலெக்ஸானடர் லுக்கஷென்காவினால் ஆட்சி செய்யப்படும் பெலரஸ் நாடு இரசியாவுடன் நல்ல உறவுகளை பேணுகின்றது. இரசியாவுடன் பெலரஸை இணைக்கும் முயற்ச்சிகள் பல தடவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. கஜகஸ்த்தான் நாடும் இரசியாவுடன் நெருங்கிய நட்பைப் பேணுகின்றது. கஜகஸ்த்தானின் வட பிராந்தியங்களில் இரசியர்கள் பெரும்பான்மையாக வாழுகின்றனர்.

உக்ரேன் எல்லையில் 2021 டிசம்பர்ல் குவித்திருக்கும் இரசியப் படைக்கலன்களினதும் படையினரதும் எண்ணிக்கை முழுமையாக உக்ரேனை ஆக்கிரமிக்கப் போதுமானதாக இல்லை என சில படைத்துறை நிபுணர்கள் கருதுகின்றனர். முழுமையான தயாரிப்புக்கு இன்னும் இரண்டு மாதங்கள் தேவைப்படலாம் எனவும் அவர்கள் சொல்கின்றனர். உக்ரேன் நேட்டோவில் உறுப்புரிமை கொண்ட நாடாக இல்லாத போதிலும் அது நேட்டோவுடன் தனது பாதுகாப்பு தொடர்பாக பல பங்காண்மை ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. 1997இல் தனித்துவமான பங்காண்மைப் பட்டயத்தில் இரு தரப்பும் கையொப்பமிட்டுள்ளன. 2009இல் குறைநிரப்பு பிரகடனத்தில் ஒப்பமிட்டுள்ளன. ஆனால் இந்த ஒப்பந்தங்கள் 2014இல் உக்ரேனின் கிறிமியாவை இரசியா அபகரித்த போது உக்ரேனுக்கு கைகொடுக்கவில்லை. 

இரசியா உலக அரங்கில் தான் 1991இற்கு முன்பு வைத்திருந்த நிலையை மீளப் பெற வேண்டும் என நினைக்கின்றது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...