Thursday, 2 December 2021

இரசிய விரிவாக்கம் உண்மையா?

  




2021 நவம்பர் 2-ம் திகதி இரசியக் கட்டுப்பாட்டில் உள்ள கிறிமியாவில் இருந்து கருக்கடலில் உள்ள எதிரிக் கப்பல்களை அழிக்கும் பயிற்ச்சிகளை மேற்கொள்வதன் மூலம் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் தனது வேட்டியை மடித்துக் கட்டிய நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ஆறவது கடற்படைப் பிரிவை USS Mount Whitney என்னும் ஈருடக கட்டளைக் கப்பல் தலைமையிலும் P-8A என்னும் நீர்மூழ்கி எதிர்ப்பு உளவு (Anti-submarine spy planes) விமானங்களின் துணையுடனும் கருங்கடலுக்கு 2021 4-ம் திகதி அனுப்பியுள்ளார்.

நேட்டோ விரிவாக்கம்

1989இல் சோவியத் ஒன்றியத்தின் பிடியில் இருந்த கிழக்கு ஜெர்மனியில் நடந்த மக்கள் கிளர்ச்சியால் ஜெர்மனியை கிழக்கு மேற்கு எனப் பிரித்த பேர்லின் சுவர் உடைக்கப்பட்டது. சோவியத் ஒன்றியம் கிழக்கு ஜேர்மனியை விட்டுக் கொடுக்கும் போது  நேட்டோ விரிவாக்கம் செய்யப்பட மாட்டாது என ஒரு வாய் மூலமான உறுதி மொழியை அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் இரசிய அதிபர் மிக்கையில் கொர்பச்சோவிற்கு வழங்கியிருந்தார். ஆனால் 1991இன் இறுதியில் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர் பல முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளும் அவற்றின் படைத்துறைக் கூட்டமைப்பான வார்சோ ஒப்பந்த நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளும் நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைக்கப்பட்டன. இதை இரசியா தன்னை தனிமப்படுத்தும் முயற்ச்சியாகப் பார்த்தது. ஜோர்ஜியாவும் உக்ரேனும் இரசியாவின் கவசப் பிராந்திய நாடுகள் என இரசியப் படைத்துறையினர் கருதுகின்றனர். அவை நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவது இரசியாவின் இருப்புக்கு ஆபத்து என்பது உண்மையாகும். உக்ரேன் இரசியாவின் எதிரிகளில் கைகளில் இருந்தால் இரசியா ஒரு வல்லரசு என்ற நிலையை இழக்க வேண்டி வரும் என்னும் அளவிற்கு உக்ரேனின் பூகோள அமைப்பு இருக்கின்றது. உக்ரேனின் கிறிமியா இரசியா வசம் இல்லாமல் இரசியக் கடற்படை இயங்க முடியாது என்னும் அளவிற்கு அது இரசியாவிற்கு முக்கியம் வாய்ந்தது.



ஜோர்ஜிய வரலாறு

ஜோர்ஜியாவும் உக்ரேனும் இரசிய வெளியுறவுக் கொள்கையின் இரண்டு கண்கள் எனச் சொல்லலாம். இரண்டு நாடுகளும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பிலே அல்லது ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார-அரசியல் கூட்டமைப்பிலோ இணையாமல் தடுப்பது இரசியாவின் கோந்திரோபங்களில் முதன்மையானது. இரண்டு நாடுகளினதும் பகுதிகளை இரசியா ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்து வைத்துள்ளது. ஒரு தனி நாடாக இருந்த ஜோர்ஜியாவை 1804-ம் ஆண்டு இரசியா ஆக்கிரமித்துக் கொண்டது. இரசியாவில் 1918இல் நடந்த பொதுவுடமைப் புரட்சியின் போது ஜோர்ஜியா தனிநாடாகப் பிரிந்து சென்றது. 1921-ம் ஆண்டு இரசிய செம்படையினர் ஜோர்ஜியாவை ஆக்கிரமித்து இரசியா உருவாக்கிக் கொண்டிருந்த சோவியத் ஒன்றியத்தில் இணைத்துக் கொண்டது. ஜோர்ஜியாவில் பிறந்த ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியத்தின் உச்சத் தலைவராகப் பணியாற்றி அதை படைத்துறையிலும் பொருளாதாரத்திலும் மேம்படுத்தி ஒரு வல்லரசாக மாற்றியதுடன் இரண்டாம் உலகப் போரில் வெற்றியடையவும் வைத்தார். அவர் சோவியத் ஒன்றியத்தின் மக்களுக்கு எதிராக கடுமையாக நடந்து கொண்டார். அதனால் ஸ்டாலினின் செயலை அவரது எதிரிகள் Mass Terror என அழைத்தனர். 1953இல் ஸ்டாலின் மறைந்த பின்னர் ஆட்சிக்கு வந்த நிக்கித்தா குருசேவ் கொண்டு வந்த சீர்திருத்தங்களை ஜோர்ஜியாவில் உள்ள பொதுவுடமைவாதிகள் கடுமையாக எதிர்த்ததுடன் 1956-ம் ஆண்டு ஜோர்ஜியாவை தனிநாடாகப் பிரகடனப்ப்டுத்தினர். அவர்களை சோவியத் ஒன்றியம் இரும்புக்கரங்களால் நசுக்கியது. 1991-ம் ஆண்டு ஜோர்ஜியாவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் பின்னர் அது தனிநாடாக உருவாக்கப்பட்டது. இருந்தும் பல இரசியப் படைத்தளங்கள் ஜோர்ஜியாவில் தொடர்ந்தும் இருக்க அனுமதிக்கப்பட்டது. 1992இல் ஜோர்ஜியாவின் ஒரு பகுதியான தெற்கு ஒசெசிட்டியாவிலும் அப்காசியாவிலும் பிரிவினை வாதம் தலை தூக்கியது. 1993இல் இரசியாவின் சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம் என்னும் அமைப்பில் ஜோர்ஜியா இணைந்து கொண்டது. அதனால் ஜோர்ஜியாவில் இருந்த பிரிவினைவாதப் பிரச்சனையைத் தீர்க இரசியா உதவி செய்தது. இரசிய அமைதிப் படை ஜோர்ஜியாவில் நிலை கொண்டது. 2002-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்கப் படையினர் ஜோர்ஜியப் படையினருக்கு பயிற்ச்சி வழங்க அங்கு சென்றனர். இது இரசிய ஜோர்ஜிய உறவில் விரிசலை ஏற்படுத்தியது. 2002 செப்டம்பர் மாதம் இரசியாவின் செஸ்னியப் பிரதேசத்தில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு ஜோர்ஜியா உதவி செய்யக் கூடாது என இரசிய அதிபர் புட்டீன் எச்சரித்தார். 2003 நவம்பரில் ஜோர்ஜியாவில் நடந்த ரோஸ் புரட்சியால் அதிபர் Shervardnadze பதவி விலகினார். 2006-ம் ஆண்டு ஜோர்ஜியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்தது. ஜோர்ஜியா ஐரோப்பிய் ஒன்றியத்தில் இணைய விரும்பியது. அதேவேளை ஜோர்ஜியா அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணையும் கருத்துக் கணிப்பு வெற்றி பெற்றதுடன் அது ஜோர்ஜிய நாடாளுமன்றத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனால் இரசியா கடும் விசனமடைந்தது. ஜோர்ஜியாவின் ஒரு பகுதியான தெற்கு ஒசெசிட்டியாவிலும் அப்காசியாவிலும் பிரிவினைவாதத்தை இரசியா ஊக்குவித்தது. ஜோர்ஜியாமீது ஓகஸ்ட் 8-ம் திகதி இரசியா பெரும் ஆக்கிரமிப்பு போரைச் செய்தது. தெற்கு ஒசெசிட்டியாவும் அப்காசியாவும் தனிநாடுகளாகப் பிரகடனப் படுத்தப்பட்டன. அவற்றை இரசியா, வெனிசுவேலா, சிரியா, நிக்கிராகுவா ஆகிய நாடுகள் அங்கீகரித்தன. நேட்டோவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் இரசியாவின் எல்லை வரை சென்று இரசியாவின் இருப்புக்கு அச்சுறுத்தலாகியது. பின்னர் 2008-ம் ஆண்டு ஜோர்ஜியாவுடன் இரசியா புரிந்த போருடன் நேட்டோவின் விரிவாக்கத்தை இரசியா ஒரு முடிவிற்கு கொண்டு வந்தது. 2015-ம் ஆண்டு இரசியப் படையினர் தெற்கு ஒசெசிட்டிய-ஜோர்ஜிய எல்லையில் மேலும் ஒன்றரை கிலோ மீட்டர் முன்னேறின.


இரசியாவை நேட்டோவால் தடுக்க முடியுமா?

உக்ரேனையும் ஜோர்ஜியாவையும் இரசியா ஒரு போர் மூலம் முழுமையாக கைப்பற்ற முயன்றால் அதைத் தடுக்க இரசியாவிற்கு எதிராக நேட்டோ படையினர் தாக்குதல் நடத்த முடியுமா? உக்ரேனின் கிறிமியாவை இரசியா ஆக்கிரமித்த போது இரசிய அரசுறவியலாளர்கள் தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தடுத்தால் தம்மால் அமெரிக்காவை ஒரு கதிர்விச்சு மிக்க சாம்பல் மேடாக்க முடியும் என எச்சரித்திருந்தனர். உக்ரேனை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை இரசியா மிகவும் இரகசியமாகவே மேற்கொண்டது. கணினிகள் பாவிக்காமல் பழைய தட்டச்சுக்கள் பாவிக்கப்பட்டன. தகவல் பரிமாற்றங்கள் பழைய முறையில் செய்யப்பட்டன. இரசியாவுடனான நேட்டோ நாடுகளின் மோதல் ஜேர்மனியில் பெரும் பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தும். அதேவேளை 2008-ம் ஆண்டின் பின்னர் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவில் இருந்து சிறிதாக மீண்டு கொண்டிருக்கும் ஜேர்மனிக்கு இப்போது ஒரு போர் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை ஏறபடுத்தும். ஜேர்மனியும் யூரோ வலய நாடுகளும் உறுதியாக நின்றால் இரசியாவை பொருளாதார ரீதியிலும் படைத்துறை ரீதியிலும் பணிய வைக்க முடியும் என சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வல்லரசு நாடுகள் எப்படியும் ஒரு போரைத் தவிர்க்கவே முயற்ச்சிக்கும். ஜேர்மனியுடன் பெரும் பொருளாதார ஒத்துழைப்பைச் செய்யும் பிரித்தானியா ஜேர்மனியின் விருப்பப்படி நடக்கவே விரும்புகின்றது. உக்ரேன் மீண்டும் தனது படையை தன் கிழக்குப் பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளது.

மோல்டோவா

உக்ரேனையும் ஜோர்ஜியாவையும் தவிர மோல்டோவா நாடும் இரசியாவின் ஆக்கிரமிப்பு அச்சத்தை எதிர்கொள்கின்றது. பதின் மூன்று இலட்சம் மக்களைக் கொண்ட ஐரோப்பாவில் வறிய நாடான மோல்டோவா நாட்டில் ஐந்தாயிரம் படையினர் உள்ளனர். இரசியா மோல்டோவாவை ஆக்கிரமித்தால் அந்த ஐயாயிரம் படையினரில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இரசியாவுடன் இணைந்து விடுவார்கள். ஏற்கனவே மோல்டோவாவின் ஒரு பிராந்தியமான திராண்ட்னீஸ்டர்(Transdniester) பிரிவினை கோரியுள்ளது. அங்கு இரசியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள்.

போல்ரிக் நாடுகளும் நடுவண் ஆசிய நாடுகளும்

எஸ்தோனியா நாட்டின் மக்கள் தொகையில் காற்பங்கினர் இரசியர்கள். இது இரசியாவிற்கு வாய்ப்பான ஒரு நிலையாகும். இதே போல் லத்வியா நாட்டின் மூன்றில் ஒரு பங்கினர் இரசியர்களாகும். இதுவும் இரசியாவிற்கு ஒரு வாய்ப்பான நிலையாகும். ஆனால் இவ்விரண்டு நாடுகளும் நேட்டோ படைத் துறைக்கூட்டமைப்பில் உறுப்புரிமை பெற்ற நாடுகளாகும். நேட்டோ நாடு ஒன்றின் மீது வேறு நாடு படை எடுத்தால் மற்ற எல்லா நாடுகளும் அது தம் நாட்டின் மீது படை எடுத்தது போல் பாவித்து அந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டும். அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இவை இரண்டும் உறுப்புரிமை பெற்றுள்ளன. தனியாட்சியாளர்(சர்வாதிகாரி) அலெக்ஸானடர் லுக்கஷென்காவினால் ஆட்சி செய்யப்படும் பெலரஸ் நாடு இரசியாவுடன் நல்ல உறவுகளை பேணுகின்றது. இரசியாவுடன் பெலரஸை இணைக்கும் முயற்ச்சிகள் பல தடவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. கஜகஸ்த்தான் நாடும் இரசியாவுடன் நெருங்கிய நட்பைப் பேணுகின்றது. கஜகஸ்த்தானின் வட பிராந்தியங்களில் இரசியர்கள் பெரும்பான்மையாக வாழுகின்றனர்.

உக்ரேன் எல்லையில் 2021 டிசம்பர்ல் குவித்திருக்கும் இரசியப் படைக்கலன்களினதும் படையினரதும் எண்ணிக்கை முழுமையாக உக்ரேனை ஆக்கிரமிக்கப் போதுமானதாக இல்லை என சில படைத்துறை நிபுணர்கள் கருதுகின்றனர். முழுமையான தயாரிப்புக்கு இன்னும் இரண்டு மாதங்கள் தேவைப்படலாம் எனவும் அவர்கள் சொல்கின்றனர். உக்ரேன் நேட்டோவில் உறுப்புரிமை கொண்ட நாடாக இல்லாத போதிலும் அது நேட்டோவுடன் தனது பாதுகாப்பு தொடர்பாக பல பங்காண்மை ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. 1997இல் தனித்துவமான பங்காண்மைப் பட்டயத்தில் இரு தரப்பும் கையொப்பமிட்டுள்ளன. 2009இல் குறைநிரப்பு பிரகடனத்தில் ஒப்பமிட்டுள்ளன. ஆனால் இந்த ஒப்பந்தங்கள் 2014இல் உக்ரேனின் கிறிமியாவை இரசியா அபகரித்த போது உக்ரேனுக்கு கைகொடுக்கவில்லை. 

இரசியா உலக அரங்கில் தான் 1991இற்கு முன்பு வைத்திருந்த நிலையை மீளப் பெற வேண்டும் என நினைக்கின்றது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...