Wednesday 15 December 2021

இலங்கையில் இருந்து கூலி கிடைக்காமல் ஏங்கும் இந்தியா

 


கூலியை எதிர்பார்த்து வேலை செய்தவனுக்கு உரிய கூலி கொடுக்கப்பட வேண்டும். இலங்கை இன ஒழிப்புப் போரில் இலங்கைக்கு உதவி செய்த நாடுகள் இருபதுக்கு மேல். இதில் முக்கிய பங்கு வகித்தவை இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய மூன்றும். இதில் சீனா படைக்கலன்களையும் கடனையும் இலங்கைக்கு வழங்கியது. போரின் போது இலங்கைப் படையினருக்கு ஏற்பட்ட ஆளணி இழப்புக்களை நிவர்தி செய்ய தனது இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட படையினரை சீனா பின்கதவால் இலங்கைக்கு அனுப்பவில்லை. சீனக் கப்பல்கள் தமிழர்களின் கடற்பரப்பில் காவல் நாய்கள் போல் நின்று தமிழர்களுக்கு உணவு, மருந்து போன்றவை கிடைக்காமல் தடுக்கவில்லை. சீனா விடுதலைப் புலிகளின் கப்பல்களை செய்மதி மூலம் கண்டறியவோ அல்லது தாக்கியழிக்கவோ இல்லை. தமிழர்கள் என்பவர்கள் சூத்திரர்கள் அவர்கள் ஒரு நாளும் ஆளக்கூடாது என்பது சீனக் கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாடாக இல்லை. ஆனால் இலங்கையில் இருந்து தனக்கு வேண்டியதை சீனா துறைமுகங்களாகவும் தீவுகளாகவும் பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் சீனா செய்யாதவற்றைச் செய்த ஒரு நாட்டுக்கு சிங்களவர்களின் சில்லறைக் கைக்கூலிக்கு உரிய கூலி இன்னும் சிங்களவர்களிடம் இருந்து கிடைக்கவில்லை.

இலங்கையும் அமெரிக்க இந்திய உறவும்

இலங்கையில் அமெரிக்காவும் இந்தியாவும் எதிர் எதிர் நிலையில் இருந்தன. 1970களில் இருந்து அந்த முரண்பாடு தீவிரமடைந்தது. அமெரிக்க நெறியாள்கையில் சிங்களம் நடத்திய ஜெயசிக்குறு படை நடவடிக்கையை விடுதலைப் புலிகள் இந்தியா செய்த விட்டுக் கொடுப்புடன் 1998 மே மாதம் முறியடித்தனர். அந்த முறியடிப்பு இந்தியாவைப் பகைத்து இலங்கையில் அமெரிக்காவால அரசுறவியல் நகர்வுகளை வெற்றிகரமாக செய்ய முடியாது என அமெரிக்காவை உணர வைத்தது. அதன் பின்னர் இந்தியாவுக் அமெரிக்காவும் இணைந்து செயற்பட ஆரம்பித்தன. 1999இல் இந்தியா பாக்கிஸ்த்தானிடையே நடந்த கார்கில் போரில் அமெரிக்காவின் நிலைப்பாடு இந்தியாவை திருப்தியடைய வைத்தது. அமெரிக்கா இஸ்ரேல் இந்தியவிற்கு ஆதரவாக தனது வான்படையை அனுப்பியதை எதிர்க்கவுமில்லை. 2000-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொண்டார். 32 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்க அதிபர் புது டில்லிக்கு மேற்கொண்ட பயணம் அதுவாகும். இந்தியாவின் அணுக்குண்டு பரிசோதனையின் பின்னர் அமெரிக்கா இந்தியா மீது விதித்த பொருளாதாரத் தடை 2001-ம் ஆண்டு நீக்கப்பட்டது. அதன பின்னர் சிங்களவர்களுக்கு இரண்டு நாடுகளும் இணைந்து ஆதரவு வழங்குவதும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஒழிப்பதும் ஆரம்பமானது. அமெரிக்காவின் பயங்கரவாததத் திற்கு எதிரான போரில் இந்தியா இணைவதற்கு நிபந்தனையாக விடுதலைப் புலிகளை அமெரிக்காவும் மற்ற மேற்கு நாடுகளும் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்பது இந்தியாவின் நிபந்தனையாக இருந்தது. இலங்கையின் நட்புப் பட்டியலில் இந்தியாவிற்கு முதன்மை நிலையைப் பெறுவதற்காக இந்தியா இதைச் செய்தது. இரண்டு நாடுகளும் இலங்கை இனக்கொலையின் கூட்டுப் பங்காளிகளாக செயற்பட்டன. இலங்கையை இந்தியாவின் பின்புறமாக அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. ஆனால் இலங்கையை கையாளும் திறன் இந்திய வெளியுறவுத்துறைக்கு இல்லாத படியால் இலங்கை சீன சார்பு நாடாக 2009இன் பின்னர் ராஜபக்சேக்களின் ஆட்சியில் மாறிக் கொண்டது. இந்தியாவை இலங்கை தொடர்ந்து ஏமாற்றியது.  இலங்கை விவகாரத்தை இந்தியா கையாளும் விதம் அமெரிக்காவிற்குத் திருப்தி அளிக்காததால் 2013-ம் ஆண்டு அமெரிக்கா தனது கையில் இலங்கை விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக் கொண்டது. மாலை தீவிலும் அதையே செய்தது. இந்தியா இலங்கையில் சீன ஆதிக்கத்தை ஒழிக்கும் தன் தந்திரோபாய நடவைக்கைகளுக்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்தி 2013-ம ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவை வாக்களிக்க நிர்பந்தித்தது. ஆனாலும் இலங்கையின் சில்லறைக் கூலிகள் போற் செயற்படும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் தீர்மானத்தின் தீவிரத்தைக் குறைத்த பின்னரே அதற்கு ஆதரவு வழங்கினர்.

இந்தியாவின் அயோக்கியத் தனம்
இந்தியாவின் நேர்மையற்ற ஆட்சியாளர்களும் குடும்ப ஆதிக்கமும் சாதி வெறிபிடித்த தென்மண்டலப் பார்ப்பனர்களுமே இலங்கையில் இந்தியா விட்ட தவறுகளுக்கும் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கும் காரணம். அவர்கள் இந்தியா உதவாவிட்டால் சீனா இலங்கைக்கு உதவும் என்ற பொய்யையும் இலங்கையில் தமிழர்கள் உரிமை பெற்றால் அது இந்தியாவில் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்ற பொய்யையும் சொல்லி சிங்களவர்களுக்கு உதவி செய்து தமிழர்களின் போராட்டத்தை வலுவிழக்கச் செய்தனர்.

சீபா வேண்டாம் சீ போ என்ற இலங்கை

சிங்களவரக்ளுக்கு இனக்கொலை செய்ய உதவி செய்த இந்தியா அதற்கான கூலியாக சீபா ஒப்பந்தம் எனப்படும் Comprehensive Economic Partnership Agreement (CEPA) ஒப்பந்தத்தை இலங்கை இந்தியாவுடன் செய்ய வேண்டும். 2008-ம் ஆண்டு போர் நடக்கும் போது கையொப்பம் இட வேண்டும் என இந்தியா நிர்ப்பந்தித்தது. போர் முடிந்த பின்னர் கையொப்பம் இடுவோம் என இலங்கை இழுத்தடித்தது. 2005-ம் ஆண்டு சீபா ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தை இரு நாடுகளுக்கும் இடையில் நடந்தது. 2008இல் ஒரு புறம் போர் நடந்து கொண்டிருக்கும் போது மறுபுறம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் கடினமான 13சுற்றுப் பேச்சு வார்த்தை செய்யப்பட்டு ஓர் ஒப்பந்தம் வரையப்பட்டது. போரில் பின்னரும் இலங்கை கையொப்பமிடவில்லை, 2013இல் ஒப்பந்தத் தில் கையொப்பமிட மாட்டோம் இன இலங்கை கையை விரித்து விட்டது. 2015-ம் ஆண்டு தலைமை அமைச்சர் பதவிக்கு வந்த ரணில் விக்கிர்மசிங்கவும் சீபா ஒப்பந்தத்தை நிராகரித்து இந்தியாவின் முகத்தில் கரி பூசினார். இதனால் இனக்கொலைக்கு கூலி வேலை செய்த இந்தியா ஏமாற்றப்பட்டது.

இலங்கை இந்திய சீபா ஒப்பந்தம்

இலங்கையின் சில தொழிற்துறையினர் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் சீபா எனப்படும் பரந்த பொருளாதார பங்காண்மை ஒப்பந்தம் தமக்கு நன்மை பயக்கும் என்று கருதுகின்றனர். உலகின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான இந்தியா தமக்குத் திறந்து விடப்படுவதை அவர்கள் விரும்புகிறார்கள். இலங்கையை சீபாவிற்கு சம்மதிக்க வைக்க தனது சலுகைக்களை முக்கியமாக ஆடை உற்பத்தித் தொழிலில் அதிகரித்தது. ஏற்கனவே சுங்கவரியின்றி மூன்று மில்லியன் துண்டுகளை இலங்கை ஏற்றுமதி செய்யலாம் என்றிருந்தது. இதை இந்தியா இரட்டிப்பாக்கியதுடன் மேலும் பல மில்லியன் துண்டுகளை குறைந்த சுங்கவரியுடன் இலங்கை ஏற்றுமதி செய்யலாம் எனத் தெரிவித்தது. ஆனால் சிங்களவர்களுக்கு இந்தியாவில் இருக்கும் வெறுப்பை இந்தியா சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இலங்கை அரசியல்வாதி விமல் வீரவன்ச சிபாவில் இலங்கை ஒப்பமிட்டால் பாரிய விளைவுகள் ஏற்படுமென்றார். மேலும் அவர் தெரிவிக்கையில் இந்தியா தனது நாட்டு வேலையில்லாப் பிரச்சனையைத் தீர்க்கவே இந்த ஒப்பத்தத்தை நிர்ப்பந்தித்தது என்றார். அத்துடன் அவர் நிற்கவில்லை. இலங்கைக்கு இந்தியாவிற்குமிடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இலங்கை இந்தியாவின் 37வது மாநிலமாகும் என்பதால் இவ்வொப்பந்தத்தை கைச்சாத்திட வேண்டாம் என்கிறார்; இந்தியாவுடன் செய்யப்பட்டுள்ள சீபா எனப்படும் பொருளாதாரத்தை விரிவாக்கும் நோக்கிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது இலங்கை தனக்குத் தானே தூக்கிட்டுக் கொள்வதற்கு ஈடானது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்தது. சீபா ஒப்பந்தம் என்ற பேச்சு எழுந்த போது இலங்கையில் பல சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களும் தொழில் நெறிஞர்களும் (Professionals), இடதுசாரிகளும் பொங்கி எழுந்தனர்.


இலங்கையின் நெருக்கடி

அமெரிக்காவில் இருந்து செயற்படும் கடன்படு திறன் தரப்படுத்தும் மூன்று நிறுவனங்கள் இலங்கை அரசின் கடன்படு திறனை தரம் தாழ்த்திய பின்னர் இலங்கை அரசு பன்னாட்டு நிதிச் சந்தையில் கடன்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு செலவாணிக் கையிருப்பு குறைந்த நிலையில் இலங்கைக்கு இலகு கடனும் நிதி உதவியும் அவசரம் தேவைப்படுகின்றது. சீனாவிடம் கடனோ நிதி உதவியோ பெறுவதாயின் சீனாவிற்கு பெரும் விட்டுக் கொடுப்புக்களை இலங்கை செய்ய வேண்டும். அது இந்தியாவையும் மேற்கு நாடுகளையும் கடும் விசனத்திற்கு உள்ளாக்கும். இலங்கையின் ஏற்றுமதியின் மூன்றில் இரண்டு பங்கு மேற்கு நாடுகளுக்கும் அதன் நட்பு நாடுகளான ஜப்பான், தென் கொரியா, ஒஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் செய்யப்படுகின்றது. மேற்கு நாடுகளும் இந்தியாவும் இணைந்து இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை கொண்டு வந்தால் இலங்கை அவர்களின் எல்லா நிபந்தனைகளுக்கும் அடி பணிய வேண்டிய நிலை ஏற்படும். இலங்கை பன்னாட்டு நாணய நிதியத்திடம் கடன் பெறுவதாயின் அதன் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனால் அரசு மக்களுக்கு செய்யும் சமூகநலக் கொடுப்பனவுகள் பலவற்றை நிறுத்த வேண்டி வரும். அதனால் ராஜ்பக்சேக்கள் அடுத்த தேர்த்தல்களில் தோல்விகளைச் சந்திக்க வேண்டி வரும்.

இலங்கையில் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு நெருக்கடிக்கு உதவி செய்து இலங்கையை சீபா ஒப்பந்தத்தில் கையொப்பமிட வைக்க இந்தியா முயல்கின்றது. இலங்கையின் பொருளாதர நெருக்கடியில் இருந்து மீட்க இந்தியா ஒரு நான்கு அம்சத் திட்டத்தை முன் வைத்துள்ளது:

1. உணவு, மருந்து, எரிபொருள் கொள்வனவிற்கு கடன வழங்குதல்

2. நாணயப் பரிவர்த்தனை ஒப்பந்தம்

3. திருகோணமனை எரிபொருள் குதங்களை மேம்படுத்துதல்

4. இலங்கையில் இந்திய முதலீட்டிற்கு இலங்கை வசதி செய்து கொடுத்தல்

இவற்றைச் செய்த பின் இந்தியாவிற்கான கூலி கிடைக்குமா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...