அமெரிக்க வான்படையும் Defence Advanced Research Projects Agency (DARP) என்னும் படைத்துறை முகவரகமும் இணைந்து புதிய வகை வானில் இருந்து வானுக்கு தாக்குதல் செய்யும் மீயுயர்-ஒலிவேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கான ஏவுகணைகளை உருவாக்கும் ஒப்பந்தத்தை Raytheon நிறுவனத்திற்கும் ராம்ஜெட் இயந்திரத்தை உருவாக்கும் ஒப்பந்தத்தை Northrop நிறுவனத்திற்கும் 2019-ம் ஆண்டு வழங்கப்பட்டது.
ஒலியிலும் பார்க்க வேகமாக பாய்பவற்றை supersonic என அழைப்பர். ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்திலும் அதிகமான வேகத்தில் பாய்பவற்றை மீயுயர்-ஒலிவேகம் (ஹைப்பர்சோனிக் என அழைப்பர். பறக்கும் விமானம், பாயும் ஏவுகணை ஆகியவற்றின் வேகத்தை ஒலியின் வேகத்தால் பிரிக்க வருமது Mach என்னும் அளவீடாகும். ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணையின் வேகம் Mach 5 எனப்படும். தாரை எந்திரத்தில் (Jet Engines) இயங்கும் விமானங்களால் ஆகக் கூடுதலாக Mach 3.5 வேகத்தில் பறக்கும். Ramjet Engines மூலம் இயங்கும் ஏவுகணைகள் Mach 3.5 முதல் Mach 6 வரையிலான வேகத்தில் பாயலாம். Scramjet Engines மூலம் இயங்கும் ஏவுகணைகள் Mach 15 வரையிலான வேகத்தில் பாயக்கூடியவை. இவற்றை தற்போதுள்ள ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் இடைமறித்து அழிக்க முடியாது.
இயந்திரங்கள் வளியில் உள்ள ஒட்சிசனையும் எரிபொருளையும் (பெற்றோல், டீசல்) இணைந்து எரியச் செய்து உந்துவலுவை (thrust) உருவாக்குகின்றன. வளிமண்டலத்திலும் உயரமாகச் செல்லும் ஏவூர்திகள் (ராக்கெட்) தமக்கு தேவையான ஒட்சிசனை (Oxygen) தம்முடன் எடுத்துச் செல்லும். தாரை (ஜெட்) விமானங்கள் தமக்கு தேவையான ஒட்சிசனை வளிமண்டலத்தில் இருந்து பெற்றுக் கொள்ளும். ஒலியிலும் வேகமாக இயங்கும் விமானங்களும் ஏவுகணைகளும் Ramjet, Scramjet ஆகிய இயந்திரங்கள் பாவிக்கப்படுகின்றன. Ramjet இயந்திரங்கள் ஒலியிலும் பார்க்க ஆகக் கூடியது ஆறுமடங்கு வேகத்தில் இயக்க வல்லன. Scramjet இயந்திரங்கள் ஒலியிலும் பார்க்க 24 மடங்கு வேகம் வரை இயக்க வல்லன.
Hypersonic Air-breathing Weapon Concept (HAWC)இல் இயக்கும் ஏவுகணைகள் ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கிற்கும் அதிகமான வேகத்தில் பாய்வதுடன் அது பாய்ந்து கொண்டிருக்கும் இறுதிக் கட்டத்தில் அதன் பாயும் திசையையும் வழியையும் மாற்றலாம். மற்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை திசை மாற்ற முடியாது. ஆனால் சீனா 2021 ஜூலை மாதம் பரிசோதித்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை திசை மாற்றக் கூடியது. ஆனால் அதனால் இலக்கை துல்லியமாக தாக்க முடியவில்லை. ஆனால் அமெரிக்காவின் புதிய ஏவுகணை துல்லியமாக தாக்க வல்லது என நம்பப்படுகின்றது. Hypersonic Air-breathing Weapon Concept (HAWC)இல் இயக்கும் ஏவுகணைகளை உற்பத்தி செய்பவர்கள் இது ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறையை சாரும் என்கின்றனர். குறுகிய கால அவகாசத்தில் இந்த ஏவுகணைகளை ஏவ முடியும் என்பதுடன் அவையில் பாய்ச்சல் தூரமும அதிகம் என்கின்றனர். ஆனால் தூரம் எவ்வளவு என்பதை வெளியிடவில்லை. இவற்றின் இன்னும் ஓர் அம்சம் இவற்றைக் குறைந்த செலவில் உருவாக்கலாம். முதலாவதாக ஏவும் பரிசோதனை 2021 செப்டம்பர் மாதமளவில் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. பெரும்பாலும் அது அமெரிக்காவின் B-52 H குண்டு வீச்சு விமானத்தில் இருந்து வீசப்பட்டிருக்கலாம். இரசியா HAWC ஏவுகணைகளை உருவாக்க ஆரம்பித்துவிட்டது. சீனா வானில் இருந்து ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வீசும் வல்லமையை இன்னும் அடையவில்லை எனவும் சொல்லப்படுகின்றது. அமெரிக்காவின் HAWC ஏவுகணை எந்த விமானத்தில் இருந்து வீசப்படுகின்றதோ அந்த விமானத்தின் பறப்பு வேகமும் ஏவுகணையின் வேகத்திற்கு வலுவூட்டும்.
HAWC ஏவுகணைகள் காற்றை சுவாசிக்கும் தன்மை கொண்டவை என்பதால் காற்றுடன் உரசும் போது ஏற்படும் வெப்ப அதிகரிப்பு குறைவாக இருக்கும் அத்துடன் காற்று ஏற்படுத்தும் வேகக் குறைப்பும் குறைவானதாகவே இருக்கும். ஒட்சிசன் செறிவாக உள்ள வளிமண்டலத்தில் Hypersonic Air-breathing Weapon Concept (HAWC)இல் இயக்கும் ஏவுகணைகள் மிகவும் சிறப்பாக செயற்படும் எனப்படுகின்றது. அதாவது சிறந்த செலுத்துதற்கையாள்கையும் (manoeuvrability) வேகமும் அதன் சிறப்பு அம்சமாக இருப்பதுடன் அவற்றை எதிரிகளால் இலகுவில் இனம் காண முடியாது.
HAWC ஏவுகணைகளின் அடுத்த தலைமுறை ஏவுகணைகள் அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானங்களான B-52, B-1 Lancer ஆகிய குண்டு வீச்சு விமானங்களில் இருந்தும் F-35, F-15 போன்ற சண்டை விமானங்களில் இருந்தும் இலகுவாக வீசக் கூடியவையாக இருக்கும்.
Hypersonic Air-breathing Weapon Concept (HAWC)இல் இயக்கும் ஏவுகணைகள் எப்படி இரசியாவின் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளான எஸ்-400 மற்றும் எஸ்-500 ஆகியவற்றிற்கு எதிராக எப்படிச் செயற்படும் என்பதை ஒரு போர் முனையில்தான் கண்டறிய முடியும்.
No comments:
Post a Comment