Monday 13 December 2021

சீன அச்சுறுத்தல் ஜப்பானை வல்லரசாக்குகின்றது

  



உலகத்திலேயே சீனர்கள் அதிகம் வெறுக்கும் நாடாக ஜப்பான் இருக்கின்றது. 1937இல் இருந்து 1945வரை ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையில் கடும் போர் நடந்தது. இரண்டாம் உலகப் போரின் ஒரு பகுதியாக நடந்த இப்போரில் மூன்று மில்லியன் சீனப்படை வீரர்களும் பத்து மில்லியன்களுக்கு மேற்பட்ட சீனப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். முதலாம் ஜப்பான் – சீனப் போர் 1894-1895 ஆண்டுகளில் நடந்தது. ஜப்பான் ஆக்கிரமித்த ஆசிய நாடுகளில் மோசமான போர்க்குற்றங்கள் நடந்தன. சீனப் பெண்களை ஜப்பானியர்கள் பாலியல் அடிமைகளாக வைத்திருந்தனர். சீனா ஜப்பானின் அட்டூழியங்களை அதன் மக்கள் மனதில் ஆழமாக பதித்து  வைத்துள்ளது. சீனாவில் நடக்கும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் ஜப்பானிய விளையாட்டு வீரர்களைக் கண்டவுடன் சீனப் பார்வையாளர்கள் கூச்சலிடுவதை வழமையாகக் கொண்டுள்ளனர்.

ஒற்றுமை நிறைந்த வேற்றுமை

சீனாவிற்கும் ஜப்பானிற்கும் இடையில் கலாச்சார மற்றும் மத ரீதியில் பெரும் ஒற்றுமை உண்டு. ஜப்பானியக் கலாச்சாரம் சீனாவிடமிருந்து பெறப்பட்டதே என்றும் சொல்லப்படுகின்றது. ஜப்பான் உலகத்தில் இருந்து தனிமைப் பட்டு இருந்த வேளையில் சீனா உலகெங்கும் தனது பட்டுப்பாதையை நீட்டி பலநாடுகளுடன் வர்த்தக மற்றும் கலாச்சாரப் பரிவர்த்தனை செய்யத் தொடங்கிவிட்டது. ஆனால் ஜப்பானியர்கள் சீனர்கள் தமது நாட்டுக்குள் அந்நியர்களை அனுமத்துப் போதைப் பொருளுக்கு அடிமையானார்கள் எனக் கருதுகின்றனர். இரு நாடுகளும் சீனத் தத்துவ ஞானி கன்ஃபூசியஸ் அவர்களின் சிந்தனை அடிப்படையில் தம் கலாச்சாரங்களை வளர்த்துக் கொண்டாலும் சரித்திரமும் பூகோளமும் இரு நாடிகளையும் பிரித்து வைத்துள்ளது. உலகிலேயே போர் மூளும் அபாயம் கூடிய இடங்களாக தென் சீனக் காடலும் கிழக்குச் சீனக் கடலும் இருக்கின்றன. இதற்கு ஜப்பானிற்கும் சீனாவிற்கும் இடையில் பேச்சு வார்த்தை அவசியம். சீன ஜப்பானியப் போர் நடந்தால் அங்கு அமெரிக்காவும் தலையிடும் கட்டாயம் உள்ளது. ஆசிய பசுபிக் பொருளாதாரக் கூட்டுறவின் உச்சி மாநாட்டின் முன்னர் இரு தலைவர்களும் சந்திப்பார்களா என்பது ஒரு முயற்கொம்பாகவே இருந்தது. சீன அதிபர் ஷி ஜின்பிங் ஜப்பானி எதிர்ப்புப் பரப்புரைகள் மூலமும் கிழக்குச் சீனக் கடலுக்கு அடிக்கடி கடற்கலங்களையும் வான் கலன்களையும் அனுப்பி ஜப்பானைச் சீண்டுவதன் மூலமும் சீனாவில் தனது செல்வாக்ககிப் பெருக்கிக் கொள்கின்றார் என்பது ஜப்பானின் குற்றச்சாட்டு. ஜப்பானியர்கள் போரின் போது செய்ய அட்டூழியங்களைப் பற்றி சீனாவில் அதிகம் பேசுவதால் சீனர்கள் இப்போதும் பழைமையிலேயே வாழ எத்தனிக்கின்றார்கள் எனக் குற்றம் சாட்டும் ஜப்பான் அவர்கள் பழையவற்றை மறந்து புது யுகத்தில் இரு நாடுகளிற்கும் இடையிலான ஒத்துழைப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கின்றது. ஜப்பானுடன் பேச்சு வார்த்தை நடாத்துவதற்கு சீன இரு நிபந்தனைகளை விதித்திருந்ததாகக் கூறப்படுகின்றது. ஒன்று சர்ச்சைக்குரியதான ஜப்பானின் இறந்த போர்வீரர்களின் யசுக்குனி எனப்படும் நினைவிடத்திற்கு ஜப்பானியத் தலைமை அமைச்சர் பயணம் மேற்கொள்ளக் கூடாது. மற்றது கிழக்குச் சீனக் கடலில் உள்ள சென்காகு அல்லது டயோயு தீவுக் கூட்டங்கள் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையில் முரண்பாடு இருக்கின்றது என்பதை ஜப்பான் ஒத்துக் கொள்ள வேண்டும்.வ்

கிழக்குசீனக்கடல்

கிழக்குச் சீனக் கடசீனக் கடலில் உள்ள தீவுக்கூட்டத்திற்கு ஜப்பானும் சீனாவும் உரிமை கொண்டாடி வருகின்றன. மக்களற்ற இத்தீவுக் கூட்டங்களை ஜப்பானியர்கள் செங்காகு எனவும் சீனர்கள் டயாகு எனவும் அழைக்கின்றனர். அமெரிக்கா இரு நாடுகளுக்கும் இந்த தீவுக் கூடங்களிள் இறையாண்மை இல்லை எனவும் ஆனால் ஜப்பனிற்கு அவற்றில் நிர்வாகக் கட்டுப்பாடு இருக்கின்றது எனவும் கூறுகின்றது.  2013 நவம்பர் 24-ம் திகதி சீனா இத்தீவுக் கூட்டத்தை உள்ளடக்கிய வான் பிராந்தியத்திற்குள் வரும் விமானங்கள் தனக்கு அறிவித்துவிட்டு வரவேண்டும் என ஒரு தலைப்பட்சமா பிரகடனம் செய்தது. சீனாவின் வான் பாதுகாப்புப் பிரந்தியப் பிரகடனத்தை மறுக்கும் முகமாக அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் தமது விமானங்களை சீனாவிற்கு அறிவிக்காமல் அப் பிராந்தியத்திற்குள் பறக்க விட்டன. அமெரிக்க அரசு தனது நாட்டு பயணிகள் போக்குவரத்து மற்றும் வர்த்தக விமானங்கள் சீன அரசிற்கு அறிவித்து விட்டு கிழக்குச் சீனக்கடலுக்கூடான பறப்புக்களை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தியது. 2013 நவம்பர் 24-ம் திகதி கிழக்குச் சீனக் கடலில் உருவான பதட்டத்தைத் தொடர்ந்து செய்யப்படும் முதல் படை நகர்வாக அமெரிக்கா தனது நீர்மூழ்கிகளை வேட்டையாடும் விமானங்களை ஜப்பானிற்கு அனுப்பியுள்ளது. P-8 எனப்படும் இந்த விமானங்கள் torpedoes எனப்படும் ஏவுகணைகளையும் புது ரக கதுவிகளையும்(ராடார்) கொண்டுள்ளன.

அமெரிக்காவின் நம்பகமற்ற தன்மை

ஆப்கானிஸ்த்தானில் இருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறிய போது அமெரிக்கா நடந்து கொண்ட விதம் அமெரிக்காவின் நம்பகத்தைனமையை கேள்விக்குறியாக்கியுள்ளது. உலக வரலாற்றிலேயே முதல் முதலாக அணுக்குண்டால் தாக்கப்பட்ட நாடான ஜப்பான் ஐக்கிய அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தின் படி 1947-ம் ஆண்டு மே மாதம் 3-ம் திகதி நிறைவேற்றிய அரசமைப்பு யாப்பின்படி ஜப்பான் வேறு நாடுகளுடனான பிணக்கைப் போர் மூலம் தீர்க்க முடியாது. தனது நாட்டுக் குடிமக்களைப் பாதுகாக்க வேறு நாடுகளுக்குப் படை அனுப்ப முடியாது. ஒரு தன்னைப் பாதுகாக்கும் படையை மட்டுமே வைத்திருக்கலாம். சுருங்கச் சொன்னால் ஜப்பானியப் படையினர் மீது வேறு யாராவது சுட்டால் மட்டுமே ஜப்பானியப் படைகள் திருப்பிச் சுடலாம். இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த ஜேர்மனியின் அரசியல்யாப்பில் இல்லாத ஒன்று ஏன் ஜப்பானிய யாப்பில் இருக்க வேண்டும் என்பது சில ஜப்பானியர்கள் எழுப்பும் கேள்வியாகும். ஜப்பானின் படைத்துறைச் செலவு ஆண்டுக்கு 49 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கின்றது. அது சீனாவின் 188 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஈடாக மாட்டாது. அதனால் ஆண்டுக்கு 640 பில்லியன் டொலர்கள் செலவு செய்யும் அமெரிக்காவில் ஜப்பான் தங்கியிருக்க வேண்டிய நிலை. அத்துடன் 23 படையினருக்கு ஜப்பானின் 58,000 படையினர் ஈடாகவும் முடியாது. உலகப் படைவலுப்பட்டியலில் சீனா மூன்றாம் இடத்திலும் ஜப்பான் பத்தாம் இடத்திலும் இருக்கின்றன. 2014-ம் ஆண்டு ஏப்ரம் மாதம் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபமா சீனா ஜாப்பானிற்குச் சொந்தமான தீவுகளை அபகரிக்க முயன்றால் ஜப்பானைப் பாதுகாக்கும் அமெரிக்க ப்பானிய பாதுகாப்பு உடன்படிக்கையின் படி அமெரிக்கா ஜப்பானைப் பாதுகாக்கும் என உறுதியளித்தார்.  அமெரிக்கா கைவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வியும் ஜப்பானிய மக்கள் மத்தியில் உண்டு.வ் ஜப்பான் தனது பாதுகாப்பிற்கு அமெரிக்காவில் தங்கியிருந்தது. சீனாவின் மிகையான படைத்துறை வளர்ச்சியும் தொழில்நுட்ப வளர்ச்சியும் அயல் நாடுகளின் மீது சீனா அதிகரிக்கும் ஆதிக்கமும் ஜப்பானை தனது பாதுகாப்பு தொடர்பாக அதிகம் சிந்திக்க வைத்துள்ளது. அமெரிக்காவும் பசுபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தமது பாதுகாப்புச் செலவை அதிகரிக்க வேண்டும் என விரும்புகின்றது. அதனால் தனது பாதுகாப்புச் செலவைக் குறைப்பதுடன் அந்த நாடுகளுக்கான தனது படைக்கலன் விற்பனையையும் அதிகரிக்கவும் முடியும்.

ஜப்பானின் பாதுகாப்புத்துறையின் வெள்ளை அறிக்கை – 2020

2020 ஜூலை 13-ம் திகதி ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் ஜப்பான் F-35 போர்விமானங்கள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் F-X போர்விமானங்கள், மூன்று P-1 ரோந்து விமானங்கள் ஏழு SH-60K ரோந்து உலங்கு வானூர்திகள், ஆளில்லாப் போர்விமானப் படையணி, வானில் வைத்து விமானங்களுக்கு எரிபொருள் மீள்நிரப்பும் விமானங்கள், இரண்டு நாசகாரிக் கப்பல்கள், ஒரு நீர்மூழ்கி, ஆளில்லாமல் நீரின் கீழ் இயங்கும் கலன்கள் போன்றவை ஜப்பானியப் படையில் இணைக்கப்படும் என சொல்கின்றது. அமெரிக்க உற்பத்தி F-35 போர்விமானங்கள் 157ஐ வாங்க திட்டமிட்டுள்ளது. அவற்றில் 42 F-35-B விமானங்களும் அடங்கும். F-35-B விமானங்கள் விமானம் தாங்கிக் கப்பல்களில் பயன்படுத்தக் கூடியவகையில் குறுகிய தூர ஓட்டத்துடன் வானில் எழும்பவும் செங்குத்தாக உலங்கு வானூர்தி போல் தரையிறங்கவும் (Short take off and vertical landing STOVL) வல்லன. சீனாவை அதிக கரிசனை கொள்ள வைத்த F-35 விமானங்களை அமெரிக்காவின் Lockeed Martin, Northdrop Grumman பிரித்தானியாவின் BAE System ஆகியவை உட்பட பல நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ளன. வானாதிக்கம், வான்மேன்மை, இலத்திரனியல் போர், தாக்குதல், வேவு, உளவு, கண்காணிப்பு ஆகியவற்றைச் செய்யக் கூடிய பற்பணிப் போர் விமானங்களாகும்.

ஜப்பானின் விமானம் தாங்கிக் கப்பல்

ஜப்பானிடம் இரண்டு Izumo வகை நாசகாரிக் கப்பல்கள் இருக்கின்றன. இவை உண்மையில் உலங்குவானூர்தி தாங்கிக் கப்பல்களாகும். இவை நீர்மூழ்கி அழிப்புப் பணிகள், கிழக்கு சீனக் கடல் பாதுகாப்புப் பணிகள் போன்றவற்றைச் செய்வதுடன் கட்டுப்பாட்டகம்+கட்டளையகம் ஆகவும் செயற்படக்கூடியவை. 248 மீட்டர் நீளமுள்ள இவற்றை ஜப்பான் மேலும் மேம்படுத்தி அவற்றில் அமெரிக்கத் தயாரிப்பான F-35-B ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களை ஜப்பான் உள்ளடகிக் கொண்டிருக்கின்றது. இது ஜப்பானின் வலிமை மிக்க கடற்படையை மேலும் வலிமையுள்ளதாக்கின்றது.

சீனாவிற்கு எதிரான இரு தீவுச் சங்கிலிகளில் ஜப்பான்



சீனாவின் பசுபிக் பிராந்திய ஆதிக்கத்தை தவிற்பதற்கு இரண்டு சங்கிலித் தொடர் தீவிகளை அமெரிக்கா வியூகமாக வகுத்துள்ளது. முதலாவது சங்கிலித்தீவில் ஜப்பானின் யொக்கோசுக்கோ, ஒக்கினோவா ஆகிய தீவுகள், கொரியத் தீபகற்பம், பிலிப்பைன்ஸ் ஆகியவற்றில் இருக்கும் அமெரிக்கப் படைத்தளங்கள் முதற் சங்கிலித் தீவுகள் எனவும் ஜப்பானியத்தீவுகள், குவாம் தீவு, பலௌ தீவு, ஒஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் இரண்டாம் தீவுக் கூட்டம் எனவும் அழைக்கப்படுகின்றன. இரண்டு தீவுச் சங்கிலிகளிலும் ஜப்பான் முக்கியத்துவம் பெறுகின்றது. சீனா தைவானை ஆக்கிரமித்தால் இவ்விரு தீவுச் சங்கிலிகளும் சீனாவின் வர்தகப் போக்குவரத்தை முற்றாக தடை செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை சீனா அறியும்.

ஜப்பானின் ஆறாம் தலைமுறைப் போர்விமானம்

1997-ம் ஆண்டு அமெரிக்காவின் F-22 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை ஜப்பான் வாங்க முயன்ற போது அவற்றை விற்பனை செய்ய முடியாது என அமெரிக்கா அறிவித்தது. தனது உயர் தொழில்நுட்பத்தை பாதுகாப்பதற்காக அமெரிக்கா F-22 போர்விமான ங்களை எந்த நாட்டுக்கும் விற்பனைச் செய்யவில்லை. அப்போது ஜப்பான் தனது நாட்டிலேயே உயர்தர விமானங்களை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தை ஆரம்பித்தது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்கி முடிக்கும் போது அது பிந்தங்கிய ஒரு விமானமாகிவிடும் என்பதால் ஜப்பான் நேரடியாக ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்கியது. இதே வழியை பிரித்தானியாவும் பின்பற்றியது. அமெரிக்கா 2020இல் ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தின் முதல் விமானத்தை உருவாக்கி பரீசித்துள்ளது. ஜப்பானின் F-X என்னும் பெயர் கொண்ட ஆறாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்குவதில் ஜப்பான் கணிசமான அளவு முன்னேறியுள்ளது. ஆறாம் தலைமுறைப் போர்விமானங்களில் செயற்கை விவேகமும் இயந்திரக் கற்கையும் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் அவை தாமாகவே இயங்கக் கூடியன. நிலைமைக்கு ஏற்ப தாமே இலக்குகளைத் தெரிவு செய்து தாக்கக் கூடியவை. விமானிகளின்றியும் பறப்புக்களை மேற்கொள்ளக் கூடியவை. லேசர் மற்றும் மைக்குறோவேவ் படைக்கலன்களை இவை கொண்டிருக்கும். எதிரிகளின் கதுவிகளால்(ரடார்களால்) அவற்றைக் கண்டறிய முடியாது. சில வகையான ஆறாம் தலைமுறைப் போர்விமானங்கள் ஒலியிலும் பலமடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜப்பானிற்கும் வல்லரசுக் கனவு உண்டு

இந்தியாஜேர்மனிதென் ஆபிரிக்காபிரேசில் ஆகிய நாடுகளைப் போல ஜப்பானும் ஒரு வல்லரசாக விரும்புகின்றது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தற்போது உள்ள வல்லரசு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது தானும் ஒரு வல்லரசாக வேண்டும் என ஜப்பான் நினைக்கின்றது. ஜப்பானின் மக்கள் தொகைபொருளாதார வலுபடை வலு ஆகியவை மற்ற நாடுகளுக்கு சளைத்தவை அல்ல சவால் விடக்கூடியவை. ஜப்பானின் வயோதிபர்களை அதிகமாகக் கொண்ட மக்கள் தொகைக் கட்டமைப்பு ஜப்பானின் ஒரு பாதகமான அம்சமாகும்.

 

அமெரிக்க சீனப் போர் பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்

https://www.veltharma.com/2020/10/2021.html

இந்தியா ஜப்பானிய உறவின் முக்கியத்துவம் பற்றி அறிய இந்த இணைப்பிற்கு செல்லவும்

https://www.veltharma.com/2014/09/blog-post_8.html

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...