Monday, 8 February 2016

அசைக்க முடியாத புட்டீனும் ஆட்டம் காணாத இரசியாவும்

ஐரோப்பிய இசைவுறுதி முன்னெடுப்பு (European Reassurance Initiative) என்னும் பெயரில் ஐரோப்பாவில் உள்ள படையினரையும் தாங்கிகளையும் பீரங்கிப் படையையும் அதிகரிக்கும் திட்டத்தை ஐக்கிய அமெரிக்கா நிறைவேற்றவிருக்கின்றது. இதற்காக 2016-ம் ஆண்டு ஒதுக்கிய 760மில்லியன் டொலர்கள் 2017-ம் ஆண்டு 3.4பில்லியன் டொலர்களாக அதிகரிக்கப் படவுள்ளது. இதே வேளை அட்லாண்டிக் மாகடலில் இரசியாவின் நீர் மூழ்கிக் கப்பல்களின் நடவடிக்கைகள் பனிப்போர்க் காலத்தில் இருந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என நேட்டோவின் கடற்படைத் தளபதி Vice Admiral Clive Johnstone தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவும் இரசியாவும் ஒன்றின் படைவலு அதிகரிப்பிற்கு ஏற்ப மற்றது தன் படைவலுவை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கான செலவை அமெரிக்கா நான்கு மடங்காக உயர்த்தி இருப்பது புட்டீனின் இரசியாவை இட்டு அமெரிக்கப்பாதுகாப்புத் துறை அதிக கரிசனை கொண்டுள்ளது என்பதை எடுத்துக் கட்டுகின்றது.

உடையும் என்பார் உடையாது

ஐக்கிய அமெரிக்கா இரசியாவில் குழப்பத்தை ஏற்படுத்தி சோவியத் ஒன்றியத்தை உடையச் செய்தது போல் இரசிய கூட்டகத்தை(Russian Federation) சிதைக்க முயற்ச்சி செய்கின்றது என இரசிய வெளியுறவுத்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். இரசியாவைத் தமதாக்கி இரசியவின் வளங்களைத் தமதாக்கும் முயற்ச்சியில் அமெரிக்கா முயல்கின்றது எனவும் அவர்கள் சொல்கின்றனர். ஆனால் இதற்குப் பதிலளித்த அமெரிக்க அரசியல் விமர்சகர்கள் இரசியாவை சிதைக்க அமெரிக்கா முயற்ச்சி செய்யத் தேவையில்லை. விளடிமீர் புட்டீன் அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் எனத் தெரிவிக்கின்றனர்.

புட்டீனின் இரசியாவில் சவால்கள்

புட்டீன் தலைமையில் உலக அரங்கில் மீள எழுச்சியுற முயலும் இரசியாவிற்கு உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்துவதற்கான போதிய படைகள், படைத்துறைத் தொழில் நுட்பம், மக்கள் ஆதரவு போன்றவை இருக்கின்றது. இரசியாவின் மீள் எழுச்சிக்குப் பெரும் தடையாக இருப்பது அதன் பொருளாதாரமாகும். இரசியப் பொருளாதாரம் பெரிதும் எரிபொருள் ஏற்றுமதியில் தங்கியுள்ளது. இரசியாவின் 2015-ம் ஆண்டிற்கான பாதீடு மசகு எண்ணெய் விலை 100 அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வகுக்கப் பட்டது. ஆனால் 2015இல் அது ஐம்பது அமெரிக்க டொலர்களுக்கும் கீழாகக் குறைந்தது. 2016-ம் ஆண்டிற்கான வரவு செலவு த்திட்டம் மசகு எண்ணெயின் விலை உலகச் சந்தையில் 50 டொலர்களாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வரையப் பட்டது. ஆனால் எரிபொருள் விலை முப்பது டொலர்களாகக் குறைந்துள்ளது. உலக வங்கி 2016இல் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் சராசரியாக 37 டொலர்களாக இருக்கும் என எதிர்வு கூறியுள்ளது. சில ஆய்வாளர்கள் விலை இருபது டொலர்களிலும் குறையலாம் என எதிர்பார்க்கின்றனர். கடந்த 18 மாதங்களில் 70 விழுக்காடு வீழ்ச்சியடைந்த எரிபொருள் விலை வீழ்ச்சி இரசியப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. 2016-ம் ஆண்டிற்கான பாதீட்டை மீள் பரிசீலனை செய்யப்படலாம் என இரசியத் தலைமை அமைச்சர் Dmitry Medvedev தெரிவித்துள்ளார்.

பட்டினியால் வாடாத இரசியார்கள்
2015-ம் ஆண்டு இரசியப் பொருளாதாரத்தின் மொத்தத் தேசிய உற்பத்தி 4 விழுக்காட்டால் சுருங்கியது. பணவீக்கம் 13 விழுக்காடாக இருந்தது. இரசிய நாணயமான ரூபிளின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக அரைப்பங்கு வீழ்ச்சியடைந்தது. இரசியர்களின் சராசரி வருமானம் பத்து விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் உணவு விலைகள் 14 வீழுக்காடு அதிகரித்துள்ளது. வறுமைக் கோட்டின் கீழ் மக்களின் எண்ணிக்கை 6 விழுக்காட்டில் இருந்து 23 விழுக்காடாக 2015-ம் ஆண்டு உயர்ந்துள்ளது. Sergey Shelin என்னும் சுதந்திர பொருளாதார ஆய்வு நிறுவனம் இரசிய மக்கள் பட்டினியால் வாடவில்லை ஆனால் சாப்பாட்டிற்கு சிரமப் படுவோர் தொகை அதிகரித்துள்ளது, மக்கள் தரம் குறைந்த உணவை உண்கின்றார்கள் என்கின்றது. 2015-ம் ஆண்டு மகிழுந்துகளின் விற்பனை 35விழுக்காட்டால் குறைந்துள்ளது. இந்த நிலைமைகளால் இரசியாவின் அமைச்சர்கள் அதிக கலவரமடைந்துள்ளனர். 20018-ம் ஆண்டுவரை இரசியாவின் பொருளாதாரப் பிரச்சனைகள் தொடரும் என இரசியத் தலைமை அமைச்சரைத் தலைவராகக் கொண்ட சமகால அபிவிருத்திக்கான நிலையம் தெரிவித்துள்ளது. 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் தேர்தலைச் சந்திக்க வேண்டும்.

களம் பல கண்ட இரசியா
1998-ம் ஆண்டு இரசியா பெரும் கடன் நெருக்கடியைச் சந்தித்து தன் கடன் நிலுவைகளைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. 2008-ம் ஆண்டு எரிபொருள் விலை வீழ்ச்சியின் போதும் இரசியா நிதிநெருக்கடியைச் சந்தித்தது.  2012-ம் ஆண்டில் இருந்தே இரசியப் பொருளாதாரம் பிழையான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கிவிட்டது. இரசிய அரபு சார்பு ஊடகங்கள் இரசியாவில் பிரச்சனை உண்டு ஆனால் நாம் கலவரமடையவில்லை எனப்பரப்புரை செய்கின்றன. இரசிய அரசு சார்பு ஊடகங்கள் இரசியாவின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு எரிப்பொருள் வீழ்ச்சி மட்டும் காரணம் பொருளாதாரத் தடைகள் அல்ல எனவும் பரப்புரை செய்கின்றன.

ஒரு மூலம் போதாது
எரிபொருள் விலை வீழ்ச்சி மட்டுமல்ல உக்ரேன் விவகாரத்தைத் தொடர்ந்து மேற்கு நாடுகள் இரசியாவிற்கு எதிராகக் கொண்டு வந்த பொருளாதாரத் தடைகள் மட்டுமல்ல இரசியாவின் பொருளாதாரத்திற்கு எனச் சில அடிப்படை வலுமின்மைகள் உண்டு. கடந்த 15 ஆண்டுகளாக இரசியாவைத் தலைமை அமைச்சராகவும் அதிபராகவும் தனது பிடிக்குள் வைத்திருக்கும் விளடிமீர் புட்டீன் இரசியப் பொருளாதாரம் எரிபொருள் ஏற்றுமதில் பெரிதும் தங்கி இருக்கும் நிலையை மாற்ற ஏதும் செய்யவில்லை என மேற்குலக ஆய்வாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.


படைக்கு முந்து
இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் ஆதரவுத்தளமான படைத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய தர வர்க்கத்தினரிடமிருந்து அதிக வரி அறவிடப்படுவதான குற்றச் சாட்டு முன்வைக்கப் படுகின்றது. இரசியப் பொருளாதாரத்தைச் சீர் செய்ய விளடிமீர் புட்டீன் இரு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ஒன்று இரசியாவின் அரச உடமை நிறுவனங்களைத் தனியார் துறைக்கு விற்பனை செய்தல். விளடிமீர் புட்டீன் பதவிக்கு வரமுன்னர் இரசிய அரச நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தும் பணி நடந்து கொண்டிருந்தது. நாட்டை முதலாளித்துவ மயப் படுத்துவதை விரும்பாத புட்டீன் இதை நிறுத்தி இருந்தார். இப்போது அவரே அந்தச் செய்கையைத் தொடங்கப் போகின்றார். இரண்டாவதாக வெளிநாட்டு மூலதனங்களை இரசியாவிற்கு அழைத்துள்ளார். பொருளாதாரத் தடை உள்ள நிலையில் சீனாவால் மட்டுமே இதில் ஈடுபடமுடியும். சீனா தவிச்ச முயல் அடிப்பதில் முன்னிற்கு நிற்கும் ஒரு நாடு. புட்டீனின் நண்பர்களான இரசியப் பெருமுதலாளிகள் தமது வெளிநாட்டு முதலீடுகளை இரசியாவிற்கு கொண்டு வரலாம். அவர்களைத் திருப்திப் படுத்தக் கூடிய மலிவான விலைகளின் புட்டீன் அரச நிறுவனங்களை விற்க வேண்டியிருக்கும். புட்டீனின் தனியார் மயப் படுத்தலில் எரிபொருள் நிறுவனங்களே முன்னணியில் உள்ளன. தற்போது எரிபொருள் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்திருக்கும் வேளையில் அடிமாட்டு விலைக்கு விற்கவேண்டிய நிலை ஏற்படலாம்.

உலக அரங்கில் தனிமைப் படுத்த முடியாத இரசியா
இரசியாவின் இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 70வது ஆண்டு நினைவு நாளை மேற்கு நாடுகளின் ஆட்சித் தலைவர்கள் உக்ரேன் விவகாரத்தில் இரசியாவின் நிலைப்பாட்டிற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் முககாமப் புறக்கணித்திருந்தார்கள். சீன அதிபர் ஷி ஜின்பிங், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜி, வெனிசுவேலாவின் அதிபர் நிக்கொலஸ் மதுரோ ஆகியோர் அங்கு பங்குபற்றியவர்களில் முக்கியமானவர்கள். வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் பங்குபற்றுவதாக இருந்தது ஆனால் இறுதி நேரத்தில் அவர் மஸ்கோவின் செஞ் சதுக்கத்திற்குப் போக முடியாமல் போய்விட்டது. இந்த நிகழ்வி இரசியா உலக அரங்கில் தனிமைப்படுத்த முடியாத ஒரு வல்லரசு என்பதை எடுத்துக் காட்டியது. ஜேர்மனிய அதிபர் அஞ்சேலா மேர்கெல் 2016 பெப்ரவரி 2-ம் திகதி புட்டீனுடன் உக்ரேன் விவகாரம் தொடர்பாக தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அசைக்க முடியாத புட்டீனின் செல்வாக்கு
இரசியா பல பொருளாதாரப் பின்னடைவுகளைச் சந்தித்த போதும் மக்கள் மத்தியில் அதிபர் விளடிமீர் புட்டீனின் செல்வாக்கு உறுதியாகவே இருக்கின்றது. புட்டீனுக்கு 80 விழுக்காட்டிற்கு மேற்பட்ட மக்களின் ஆதரவு இருப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புள்ளி விபரங்கள் புட்டீனால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களால் திரட்டப்பட்டவை அவற்றி நம்ப முடியாது என மேற்கு நாடுகளின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. புட்டீன் கொலை செய்வதற்கான அனுமதிப் பத்திரம் பெற்ற ஒருவர். அவரைப் பற்றி விமர்சிப்பவர்கள் கொல்லப்படுகின்றார்கள் எனவும் அந்த ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. அண்மைக்காலங்களில் இரசியாவில் பார ஊர்திகள் ஓட்டுபவர்கள் மட்டுமே அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்தனர்.

பொருளாதாரத்திலும் பன்னாட்டுச் சட்டத்திலும் பட்டம் பெற்ற விளடிமீர் புட்டீன் எரிபொருள் விலை இறக்கமும் இரசிய நாணயத்தில் மதிப்பு இறக்கமும் இரசியப் பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் என அடிக்கடி கூறிவருகின்றார். எரிபொருள் விலை 50 விழுக்காடு வீழ்ச்சியடைந்த போது இரசியாவின் ரூபிள் நாணயத்தின் பெறுமதியையும் வீழ்ச்சியடைய விட்டு ரூபிளைப் பொறுத்தவரை எரி பொருள் விலை 27 விழுக்காடு மட்டுமே வீச்சியடையச் செய்தார். இரசியாவால் தனது பிரச்சனைகளில் இருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொள்ளும் ஆற்றல் இருக்கின்றது என்பதைச் சரித்திரத்தில் பலதடவைகள் அது நிரூபித்துள்ளது. இரசியா ஒரு வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது என்ற பலரின் எதிர்பார்ப்புக்களை பிழையாக்கும் வல்லமை இரசியர்களிடம் இருக்கின்றது.
.

Tuesday, 2 February 2016

மேற்காசியப் புவிசார் அரசியலில் சீன ஈரானிய உறவின் தாக்கம்

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளில் பெரும்பாலானவை நீக்கப்பட்டவுடன் ஈரானிற்கு முதலில் பயணம் மேற்கொண்ட உலகத் தலைவர் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகும். சீனாவிற்கு ஒரு நெருங்கிய நட்பு நாடு அவசியம் தேவை. அதன் நட்பு நாடாக வரக்கூடிய தன்மைகள் ஈரானிற்கு இருக்கின்றது. நாடுகளிடையே நட்பு என்பது மனிதர்களிடையே உள்ள நட்பைப் போல் அல்ல. ஒன்றிற்கு ஒன்று நலன் தரக்கூடிய வகையில் நாடுகளிடையே உள்ள தொடர்புகளையே நாடுகளிடையேயான நட்பு எனப்படும். ஈரானும் சீனாவும் ஒன்றின் நலன்களை ஒன்று மேம்படுத்தக் கூடிய நிலையில் இருக்கின்றன. மேற்காசியாவிற்கும் வட ஆபிரிக்காவிற்கும் சீனாவின் நுழைவாயிலாக ஈரானைக் கருத முடியும். ஈரானும் சவுதி அரேபியாவிற்கும் இடையில் முறுகல் நிலை மோசமாக இருந்த நிலையில்சீன அதிபர் இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார். அந்த சூழ்நிலை சீனாவிற்கு சாதகமாக அமைந்தது.

புவிசார் அரசியல்
ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்கள் தொகைக் கட்டமைப்பும் பொருளாதாரமும் தொடர்பான ஆதிக்கம் புவிசார் அரசியல் எனப்படும். முதலாவது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்களின் அரசியல் ஆதிக்கம் புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வகிக்கின்றது. இரண்டாவது அக்குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள பொருளாதார வளங்கள் மீதான ஆதிக்கத்தை யார் செலுத்துவது என்பது புவிசார் அரசியலில் முக்கியத்துவம் பெறுகின்றது. மூன்றாவது ஒரு குறித்த நிலப்பரப்பில் உள்ள மக்கள், பொருளாதாரம், மற்றும் அரசு அல்லது அரசுகள் தொடர்பாக அந்த நிலப்பரப்புடன் தொடர்புடைய அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கை அந்த நிலப்பரப்பின் புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வகிக்கின்றது. இதையே சுருக்கமாகச் சொல்வதானால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ளவை தொடர்பான பல் வேறு நாடுகளின் கொள்கைகளை புவிசார் அரசியல் எனலாம். இங்கு உள்ளவை எனக் குறிப்பிட்டது மிகவும் பரந்த பொருளுடைய ஒரு சொல்லாகும். மக்கள், மதம், கலாச்சாரம், வளம், பொருளாதாரம், படைவலு எனப் பலவற்றை இந்த உள்ளவை என்னும் சொல் தாங்கி நிற்கின்றது. ஈரானின் உள்ள இயற்கை வளங்களும் ஈரானின் பூகோள இருப்பும் சீனாவின் நலன்களிற்குத் தேவையானவை. சீனாவின் உட்கட்டுமான அனுபவமும் சீனாவிடமிருக்கும் அபரிமிதமான வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பும் ஈரானின் நலன்களுக்குத் தேவையானவை. இரு நாடுக்ளும் கை கோர்த்துக் கொண்டால் வளைகுடாப் பிராந்தியத்தில் ஈரான் எதிரியாகக் கருதுவதும் சீனா போட்டியாளராகக் கருதுவதுமான ஐக்கிய அமெரிக்காவைச் சமாளிக்க முடியும். ஈரானிய சீன உறவில் முக்கிய பங்கு வகிப்பவை சீனாவின் கடல்சார் பட்டுப்பாதைத் திட்டமும் ஈரானின் மலிவான எரிபொருளுமாகும். மேற்காசியாவில் அமெரிக்க ஆதிக்கமில்லாத ஒரே நாடு ஈரானாகும். ஈராக்குடனான போரின் போது ஈரானுக்கு சீனா தனது பட்டுப்புழு(silkworm) ஏவுகணைகள் உட்படப் பல படைக்கலன்களை விற்பனை செய்தது.  ஈரானிற்கு யூரேனியப் பதப்படுத்தலுக்குத் தேவையான தொழில்நுட்பங்களையும் சீனா விற்பனைச் செய்திருந்தது.

உனக்கு நான் எனக்கு நீ
கடற்போக்குவரத்தைப் பொறுத்தவரை உலகின் ஐந்து திருகுப் புள்ளிகளில் ஒன்றான ஹோமஸ் நீரிணை ஈரானை ஒட்டி உள்ளது. பாஹ்ரேயில் இருக்கும் அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப் பிரிவு அந்தத் திருகுப் புள்ளியில் ஆதிக்கம் செலுத்துகின்றது. ஈரான் அதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. சீனாவின் கடல்சார் பட்டுப் பாதைத் திட்டத்தில் ஹோமஸ் நீரிணை முக்கியத்துவம் பெறுகின்றது. பாக்கிஸ்த்தானில் இருக்கும் குவாடர் துறை முகம் சீனா வசமுள்ளது. அது தான் சீனாவின் முத்து மாலையில் அந்திப்புள்ளி. அதை மேலும் நீட்சி செய்ய ஈரானின் நட்பு சீனாவிற்கு அவசியம். குவாடர் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய சீனா 2015-ம் ஆண்டு 46பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதியை ஒதுக்கியிருந்தது.  குவாடர் துறைமுகத்தை சீனா படைத்தளம், மேற்குச் சீனாவிற்கான வழங்கற்பாதை முனையம், வர்த்தக விருத்தி ஆகியவற்றிற்குப் பயன்படுத்தலாம். குவாடர் துறை முகம் வர்த்தக ரீதியில் வளர்ச்சியும் முக்கியத்துவமும் பெறும் போது அது ஈரானின் சபாஹர் துறைமுகத்திற்குச் சவாலாக அமையலாம். ஈரான் - ஈராக் போரின் ஹோமஸ் நீரிணையூடான எரிபொருள் ஏற்றுமதி தடைபட்ட போது ஈரான் சபாஹர் துறைமுகத்தையும் அதை அண்டியுள்ள பிரதேசத்தையும் பெருமளவு அபிவிருத்தி செய்தது. 1992இல் அங்கு ஒரு சுதந்திர வர்த்தக வலயத்தையும் உருவாக்கியது. 2002இல் அங்கு ஒரு பன்னாட்டுப் பலகலைக்கழத்தையும் உருவாக்கியது. சபஹாரில் இருந்து இந்தியா, இரசியா, ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளுக்கு போக்கு வரத்து வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தில் இந்தியாவும் ஈரானுடன் இணைந்து செயற்பட்டது. கடற்படுக்கையூடாக சபஹாரில் இருந்து இந்தியாவிற்கு குழாய்களூடாக எரிவாயு விநியோகத் திட்டமும் அதில் அடக்கம். ஆனால் சபாஹர் துறைமுகம் ஈரானின் பெரிய மாகாணமான சிஸ்ரன் - பலுச்சிஸ்த்தானில் இருக்கிறது.  ஈரானுடனும் துருக்கியுடனும் சீனா உகந்த உறவைப் பேணாமல் சீனாவின் கடல்சார் பட்டுப்பாதைத் திட்டம் உரிய வெற்றியைத் தரமாட்டாது.

நண்பனின் எதிரியும் நண்பனே
சவுதி அரேபிய அரச் குடும்பம் பொதுவுடமை வாதத்தை முழுமையாக எதிர்க்கும் ஒரு நாடு. சமூகவுடமையையும்(சோசலிஸம்) இஸ்லாமையும் இணைத்த பாத்திஸம் அரபுநாடுகளில் பரவுவதைக் கடுமையாக எதிர்த்த சவுதி அரேபிய அரச குடும்பம் 1990-ம் ஆண்டு சீனாவுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. சவுதி அரேபியா அமெரிக்காவுடன் நெருங்கிய உறவைப் பேணும் போது அந்த இரண்டு நாடுகளினதும் போட்டி நாடுகளான ஈரானும் சீனாவும் இணைவது இயல்பானதே. ஆனால் சவுதி அரேபியாவில் இருந்து எரிபொருள் வாங்குவதை சீனா பெரிதும் விரும்புகின்றது. அதிக அளவு எரிபொருள் இருப்பு உறுதியான ஆட்சி ஆகியவற்றைக் கொண்ட சவுதியில் இருந்து எரிபொருள் விநியோகம் உறுதியாகவும் சீராகவும் நடக்கும் என நம்பும் பல நாடுகளில் சீனாவும் ஒன்று. ஆனால் சீனாவின் சின்ஜீயாங் (Xinjiang) மாகாணத்தில் வாழும் இஸ்லாமியர்களால் சீனாவிற்குப் பிரச்சனை உண்டு. அவர்கள் சுனி இஸ்லாமியர்களாகும். அவர்களுக்கு உதவி செய்ய சவுதி அரேபியா தயங்காது என்பதும் சீனாவிற்குப் பிரச்சனைக்கு உரியதாகும். சீனாவின் சின்ஜீயாங் (Xinjiang) மாகாணம் சீனாவின் தரைவழியான பட்டுப்பாதையும் பொருளாதார வளையமும் (The Silk Road Economic Belt) திட்டத்தின் ஆரம்பப் புள்ளியாகும். சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஈரானுக்கு மட்டுமால்ல சவுதி அரேபியாவிற்கும் பயணத்தை மேற் கொண்டார். ஈரானில் 17 உடன்படிக்கைகளைக் கைச்சாத்திட்ட அவர் சவுதி அரேபியாவில் 2016 ஜனவரி  19-ம் திகதி 14 உடன்படிக்கைகளைச் செய்து கொண்டார். அதில் முக்கியமானது சவுதி அரேபியானின் அரம்கோ என்னும் அரசுக்குச் சொந்தமான எரிபொருள் நிறுவனம் சீனாவில் மசகு எண்ணை பதப்படுத்தும் முதலீட்டைச் செய்வதாகும். இதன் பெறுமதி ஒன்று முதல் ஒன்றரை பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியானதாகும்.

தடைகள் தாண்டிய நட்பு
ஈரானிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் இருந்த போதே சீனாவில் இருந்து பெருமளவு முதலீடுகள் ஈரானில் செய்யப்பட்டன. ஒரு சீனாத் தொழிலதிபர் மட்டும் பொருளாதாரத் தடையின் போது ஈரானில் 200மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீட்டை ஈரானில் செய்திருந்தார். நாம் ஈரானில் இருந்து விலகி இருந்த போது சீனர்கள் அந்த இடைவெளியை நன்கு நிரப்பி விட்டார்கள். ஈரானுடனான வர்த்தகத்தைப் பொறுத்த வரை நாம் பின் தங்கி விட்டோம் என்றார் ஒரு மேற்கு ஐரோப்பிய அரசுறவியலாளர். பொருளாதாரத் தடையின்போது ஈரானின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகவும் ஈரானில் மிக அதிக அளவு முதலீடு செய்யும் நாடாகவும் சீனா மாறிவிட்டது. அமெரிக்காவின் தண்டனைகளில் இருந்து தப்ப இதற்கென தனியாக புது வங்கிகள் சீனாவால் உருவாக்கப் பட்டன. இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான தொடருந்துப் பாதை சீனாவால் ஈரானில் நிர்மாணிக்கப்பட்டது. ஈரானிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டபோது அதை தனது அதிகாரத்தை(வீட்டோ) பாவித்து இரத்துச் செய்யாததால் ஈரான் சற்று அதிருப்தி அடைந்திருந்தது. அத்துடன் ஈரானுடன் நடந்த யூரேனியம் பதப்படுத்துவதை நிறுத்தக் கோரும் பேச்சு வார்த்தையில் சீனா அமெரிக்காவுடன் ஓத்துழைத்திருந்தது. ஆனாலும் பொருளாதாரத் தடையால் வந்த இடைவெளியை சீனா தந்திரோபாயமாக தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. ஈரானியத் தலைநகர் ரெஹ்ரானில் நிலத்தில் இருந்து உயர்த்தப் பட்ட பெருந்தெரு (elevated highway), நிலத்திற்குக் கீழான  தொடருந்துச் சேவை போன்றவற்றை சீனா நிர்ம்ணித்தது. போக்குவரத்திற்குத் தேவையான தொடருந்து வண்டிகளும் சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப் பட்டன.  சீனாவிடமிருந்து J-10 போfர் விமானங்களை வாங்க ஈரான் விரும்புகின்றது. இதற்கு இஸ்ரேல் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவை அதிருப்திப் படுத்த விரும்பாததால் சீனா ஈரனிற்குப் J-10 போர் விமனங்களை விற்பனை செய்வ்தை ஒத்தி வைத்துள்ளது. சவுதி அரேபியாவும் இஸ்ரேலும் ஐக்கிய அமெரிக்காவிடமிருந்தும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும் சீனாவின் J-10இலும் பார்க்கச் சிறப்பான போர்விமானங்களை வாங்கி வைத்துள்ளன.

ஈரானிற்குப் பயணம் செய்த சீன அதிபருடன் ஈரான் அடுத்த பத்து ஆண்டுகளில் இரு நாடுகளிற்கும் இடையிலான  வர்த்தகத்தை 600பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவதாக ஒத்துக் கொண்டுள்ளது.  சீனா ஈரானில் ஆறு இலட்சம் தொன் உருக்கை உற்பத்தி செய்தவதாகவும் ஒத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஈரான் கைத்தொழில் மயமாக்கலில் ஒரு திருப்பு முனையில் உள்ள நாடாகும். திறன் மிக்க ஊழியர்கள் அங்குள்ளனர். சீனாவின் முதலீடு, தொழில் நுட்பம், உட்கட்டுமான அனுபவம் ஆகியவற்றை ஈரானில் சிறப்பாகப் பயன்படுத்த முடியும்.


Tuesday, 26 January 2016

கொலையுதிர் காலமான அரபு வசந்தம்

ஜனவரி-25-ம் திகதி எகிப்தில் அரபு வசந்தந்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவு நாள். கடந்த நான்கு ஆண்டுகளாக ஜனவரி-25ம் திகதி அதிக சுதந்திரம் கோரும் பெரும் ஆர்ப்பாட்டங்களுடன் நினைவு கூரப்படும். இந்த ஆண்டு எதுவும் நடக்கவில்லை. நடக்காமல் விட்டதற்கான காரணம் போதிய சுதந்திரம் கிடைத்தமையால் அல்ல உள்ள சுதந்திரமும் பறிக்கப் பட்டுவிட்டது. மக்கள் கைது செய்யப் படலாம் என்ற அச்சத்தில் எகிப்திய அரபு வசந்தத்தம் உருவான தஹ்ரீர் சதுக்கப் பக்கம் போகவில்லை. ஜனவரி - 25இற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே பலர் கைது செய்யப்பட்டுவிட்டனர். ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்யக் கூடியவர்கள் கடுமையாகக் கண்காணிக்கப் பட்டனர். அவர்கள் கூடக் கூடிய இடங்கள் தீவிர சோதனைகளுக்கு உள்ளாக்கப் பட்டன.

அரபு வசந்தத்தின் பிறப்பிடமான துனிசியாவில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் தலை தூக்கியுள்ளன. அங்கு எழு இலட்சம் பேர் வேலையின்றி இருக்கின்றார்கள். இது மக்கள் தொகையின் 15 விழுக்காடாகும். 62 விழுக்காடான பட்டதாரிகள் வேலையின்றியும், இளையோரில் 38 விழுக்காட்டினர் வேலையின்றியும் இருக்கின்றனர். இது ஒரு மக்கள் எழுச்சியின் பிறப்பிடமாக மீண்டும் உருவாகியுள்ளது. ஊரடங்குச் சட்டம் அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துனிசியாவின் மொஹமட் பௌஜிஜி (Mohamed Bouazizi) மறக்கப்பட்டுவிட்டார். எகிப்த்தின் அஸ்மா மஹ்பூஸ் என்றால் யாருக்கும் தெரியாது. இஸ்லாமியர்களின் வேலை இறை நம்பிக்கை அற்ற அமெரிக்கர்களை ஒழித்துக் கட்டுவதே என அல் கெய்தா பரப்புரை செய்து கொண்டிருக்க. இஸ்லாமியப் "பயங்கரவாதத்திற்கு" எதிராக அமெரிக்கா போராடிக் கொண்டிருக்க. இஸ்லாமியர்களும் மனிதர்களே அவர்களும் இம்மண்ணில் வாழ வேண்டும் என எழுந்தவர்கள்  இவர்கள் இருவரும். அரபு மக்கள் தமது மக்கள் எழுச்சியை மல்லிகைப் புரட்சி என அழைத்தனர். மேற்கு நாட்டு ஊடகங்கள் அதை அரபு வசந்தம் என அழைத்தன. துனிசியா, எகிப்து, லிபியா, சூடான் ஆகிய நாடுகளில் ஆட்சியாளர்கள் பதவியில் இருந்து விரட்டப்பட்டனர். 14 மாத எழுச்சியில் 4 ஆட்சியாளர்களின் மொத்த 117 ஆண்டுகால ஆட்சி முடிவிற்குக் கொண்டு வரப்பட்டது.

துனிசியாவில் தந்தையற்ற தன் குடும்பத்தைக் காப்பாற்ற தெருவோரம் பழவியாபாரம் செய்து கொண்டிருந்த மொஹமட் பௌஜிஜியை எழு அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பணத்தை இலஞ்சமாகக் கொடுத்த மறுத்தமைக்காக துனிசிய அரச காவற்துறையைச் சேர்ந்த பெண் ஒருத்தி தாக்கி அவன் முகத்தில் காறி உமிழ்ந்தாள். அவன் தற்கொலை செய்து கொள்ள துனிசியாவில் உருவான இளையோர் எழுச்சி மேற்காசியவிலும் வட ஆபிரிக்காவிலும் உள்ள பல நாடுகளிற்கும் பரவியது. அல்ஜீரியா, லிபியா, எகிப்து, சிரியா, சூடான், சவுதி அரேபியா, பாஹ்ரேன், ஈராக் எனப் பல நாடுகளில் மக்கள் ஆடம்பர வாழ்கை வாழும் அக்கிரம ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தனர். மன்னராட்சி அல்லது படைத்துறையினரின் ஆட்சி மட்டுமே மேற்காசிய மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் நடக்கின்றன.


ஒரு புரட்சி என்பது அக்கிரமம் பிடித்த ஆட்சியாளர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும், ஆட்சி முறைமையை மாற்ற வேண்டும், ஆட்சி பிழையானவர்களின் கைகளுக்குப் போகமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மக்கள் வாழ்வு மேம்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எகிப்திய மக்கள் 18நாட்கள் நடத்திய "புரட்சியின்" மூலம் பெப்ரவரி 11-ம் திகதி ஹஸ்னி முபாரக்கைப் பதவியில் இருந்து விரட்டினர். ஆனால் புரட்சி என்பது ஒரு ஆட்சியாளரை மாற்றுவதுடன் முற்றுப் பெறுவதல்ல என்பதற்கு எகிப்து ஒரு நல்ல உதாரணமாக அமைகிறது. எகிப்த்தில் உருவான மக்கள் எழுச்சி அமெரிக்காவின் பாதுகப்புத்துறையினரையும் உளவுத் துறையினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அமெரிக்கா தான் பாதுகாத்து  வந்த அடக்கு முறை ஆட்சியாளர்களில் ஒருவரான ஹஸ்னி முபாரக்கைக் கைவிடும் அளவிற்கு நிலை மோசமாக இருந்தது.

துனிசீய மக்கள் ஆரம்பித்து வைத்த அரபு வசந்தத்தால் உந்தப்பட்ட எகிப்திய மக்கள் ஒரு திடமான சக்தியாக திரண்டு அதிக இரத்தம் சிந்தாமல்  18 நாட்கள் நடத்திய "புரட்சியின்" மூலம் 2011பெப்ரவரி 11-ம் திகதி ஹஸ்னி முபாரக்கைப் பதவியில் இருந்து விரட்டினர். ஐக்கிய அமெரிக்காவின் உளவுத் துறை எகிப்தியப் படையினரை புரட்சியை எதிர்க்காமல் இருப்பதை உறுதி செய்தது. இதனால் எகிப்தியப் படைத்துறைக்கு புரட்சியாளர்களால் எந்த விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. எகிப்தியப் படைத்துறையின் உயர்பதவிகளில் இருப்போர் அமெரிக்காவில் பயிற்ச்சி பெற்றவர்கள். இந்தப் புரட்சியை முன்னெடுப்பதில் முன்னணியில் நின்று செயற்பட்டவர் ஒரு இளம் பெண். அஸ்மா மஹ்பூஸ் என்ற 26 வயதான எகிப்தியப் பெண் ஹஸ்னி முபராக்கின் அடக்கு முறைக்கு எதிராக தனியான ஒரு போராட்டத்தை ஆரம்பித்தாள். முதலில் முகவேட்டில் அனைவரையும் தஹ்ரீர் சதுக்கத்தில் திரளும்படி அழைப்பு விடுத்தாள். அவளது அழைப்பை மூன்று இளைஞர்கள் மட்டுமே வந்தனர். முகவேட்டின் மூலம் தகவலை அறிந்த காவற்துறை அவர்கள் நாலு பேருக்கும் முதல் அங்கு திரண்டுவிட்டனர். அந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்த காவற்துறையினர் அஸ்மா மஹ்பூஸை எச்சரித்து விட்டுச் சென்றனர். அத்துடன் அஸ்மா மஹ்பூஸ் சளைக்கவில்லை பின்னர் ஒரு காணொளியைத் தயாரித்து அதன் மூலம் நான் மீண்டும் தஹ்ரீர் சதுக்கம் செல்வேன் உங்களுக்குத் தன்னம்பிக்கை இருந்தால் என்னுடன் வாருங்கள் என்று அறை கூவல் விடுத்தாள். அது பெரும் மக்கள் எழுச்சியாக மாறி 18 நாட்களில் ஹஸ்னி முபராக்கின் ஆட்சியை எகிப்த்தில் இருந்து அகற்றியது. ஆனால் தொடர்ந்து ஆட்சியைக் கைப்பற்றியவர்களோ புரட்சியை முன்னெடுத்த இளைஞர்களின் மதசார்பற்ற கொள்கைக்கு முரணான இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பினர். அவர்களின் ஆட்சி ஹஸ்னி முபாராக்கின் ஆட்சியிலும் பார்க்க மோசமானதாக அமைந்தது. இதனால் இளைஞர்கள் மீண்டும் கிளர்ந்து எழுந்தபோது இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டு படையினர் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டனர். மீண்டும் மக்கள் அடக்கு முறை ஆட்சிக்கு உள்ளாகி உள்ளனர். இன்னும் ஒரு மக்கள் எழுச்சி எகிப்தில் ஏற்பட தற்போது வாய்ப்பில்லை. எகிப்தின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகித்த உல்லாசப் பயணத்துறை மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளது. இளையோர் மத்தியிலான வேலைவாய்ப்பின்மையே அரபு வசந்தத்திற்கு வித்திட்டது. அது அரபு வசந்த எழுச்சிக்கு முன்பிருந்ததை விட இப்போது அதிகரித்துள்ளது.  எகிப்தின் பாதீட்டுப் பற்றாக்குறை பத்து விழுக்காட்டிலும் அதிகம். அதன் கடன் பளு அதன் அதன் மொத்தத் தேசிய உற்பத்தியிலும் அதிகமானதாகும்.

லிபியாவில் அரபு வசந்தம் ஒரு பெரும் உள்நாட்டுப் போராக வெடித்தது. கடாஃபியைப் பதவியில் இருந்து வெளியேற்றத் துடித்த மேற்கு நாடுகள் அவரது படையினருக்கு எதிராக போர் விமனத் தாக்குதல்கள் வழிகாட்டி ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்து அவரை ஆட்சியில் இருந்து அகற்றிக் கொல்ல வழி வகுத்தன. தேர்தலுக்காக கடாஃபியிடம் இருந்து பணம் பெற்ற அரசியல்வாதிகளின் இரகசியங்கள் அவருடன் அழிக்கப்பட்டன. லிபியா இப்போது ஒரு தேறாத தோல்வியடைந்த நாடக இருக்கின்றது. இரண்டு அரசுகள் இப்போது அங்கு ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருக்கின்றன. பல போர்ப்பிரபுக்கள் மத்தியில் லிபிய மக்கள் சிக்குண்டு கொண்டிருக்கின்றனர். ஆபிரிக்காவின் செல்வந்த நாடுகளில் ஒன்றான லிபியாவில் உலகின் தலை சிறந்த சமூக நலக் கொடுப்பனவுகள் கடாஃபியின் ஆட்சியால் செய்யப்பட்டன. அறுபது இலட்சம் மக்களும் நன்கு வாழக்கூடிய எண்ணெய் வளம் அங்கு இருக்கின்றது. ஆனால் 2015-ம் ஆண்டு டிசம்பரில் லிபியாவின் அரசியல்வாதி ஒருவர் அடுத்த சோமாலியாவாக லிபியா மாறப்போகின்றது என எச்சரித்தார்.

சிரியாவின் அரபு வசந்த எழுச்சி முதலில் சியா மற்றும் சுனி முஸ்லிம்களுக்கு இடையிலான போட்டியாக மாறியது. பின்னர் ஈரானுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான போட்டிக்களமானது. தற்போது உலக வல்லரசுகளின் போட்டிக் களமாகியுள்ளது. சிரிய நகரங்களின் அரைவாசி தரைமட்டமாகிவிட்டது. தற்போது பிரச்சனை பஷார் அல் அசாத்தின் அடக்குமுறை மிக்க ஆட்சியை அகற்றுவதல்ல இஸ்லாமியத் தீவிரவாதத்தை எப்படி ஒழிப்பது என்பதே! மற்ற எல்லா நாடுகளையும் விட மோசமான உயிரிழப்பு சிரியாவிலேயே ஏற்பட்டது. மூன்று இலட்சத்திற்கு மேலான அப்பாவிகள் கொல்லப் பட்டனர். 65இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர்.

அரபு வசந்தத்தின் பின்னர் ஈராக் மூன்றாகப் பிளவு பட்டுள்ளது. சியா முஸ்லிம்களின் ஆட்சி, குரிதிஷ் மக்களின் ஆட்சி, ஐ எஸ் அமைப்பினரின் ஆட்சி என மூன்று ஆட்சிகள் அங்கு நிலவுகின்றன. அதன் பொருளாதாரம் மோசமாகின்றது. ஈராக்கில் யதீஷியர்கள் இனக்கொலைக்கு உள்ளானார்கள்.

சவுதி அரேபியாவிலும் பாஹ்ரேனிலும் உருவான மக்கள் எழுச்சியையும் அதை சவுதி அரேபியப் படைகள் மூர்க்கத்தனமாக அடக்கியதைப் பற்றியும் மேற்கு நாட்டுப் பத்திரிகைகள் பெரிது படுத்தவில்லை. அமெரிக்காவின் படைத்தளமுள்ள பாஹ்ரேனில் ஈரானிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்கள் பெரும் போராட்டம் செய்தனர். நிலைமை மோசமானவுடன் சவுதி அரேபியா தனது படைகளை அங்கு அனுப்பி கிளர்ச்சிக்காரர்களை அடக்கியது. பஹ்ரேனில் அரபு வசந்தத்தின் பின்னர் மோசமான அடக்கு முறை நிலவுகின்றது.

அரபு நாடுகளில் ஓர் நல்ல ஆட்சி முறைமை இருந்ததில்லை. அவ்வப்போது வந்த ஒரு சில ஆட்சியாளர்களைத் தவிர மற்ற எல்லா ஆட்சியாளர்களும் ஊழல் மிக்கதும் திறனற்றதுமான ஆட்சியையே செய்தனர். துனிசியாவைத் தவிர எல்லா நாடுகளிலும் அரபு வசந்தத்திற்கு முன்னர் இருந்ததிலும் பார்க்க மோசமான ஆட்சி, மோசமான அடக்கு முறை, மோசமான மனித உரிமை மீறல்கள், மோசமான பொருளாதாரச் சூழல் ஆகியவை நிலவுகின்றன. இவற்றில் மாற்றம் ஏற்படக் கூடிய நிலைமை அண்மையில் இல்லை. அரபு வசந்தம் துயரைத் தவிர வேறு எதையும் கொண்டு வரவில்லை.

Tuesday, 19 January 2016

ஈரான் மீதான பொருளாதாரத் தடை நீக்கலின் விளைவுகள்

எண்பது மில்லியன் கல்வியறிவு மிக்க மக்களைக் கொண்ட நாடாகிய ஈரானின் சரித்திரப் பெருமை தனித்துவமானது. அதன் எண்ணெய் வளமும் எரிவாயு வளமும் அபரிமிதமானது. அதன் புவிசார் இருப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.மேற்கு நாடுகள் ஈரானுக்கு எதிராக விதித்த பொருளாதாரத் தடை முடிவிற்கு வந்துள்ளது. ஈரான் “preparing for takeoff.” என ஈரானியர்கள் தெரிவிக்கின்றனர். உலகின் 18வது பெரிய பொருளாதாரம் உலக வர்த்தகத்தில் தடையின்றி ஈடுபடக் கூடிய நிலையை எட்டியுள்ளமை உலகப் பொருளாதாரத்திற்கு உகந்த ஒன்றே. ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானி ஈரான் மீதான பொருளாதாரத்  தடை நிக்கப்பட்ட 2016 ஜனவரி 16-ம் திகதி ஈரானிய வரலாற்று ஏட்டின் பொன்னான பக்கம் என்றார்.

இறக்கை நறுக்கப்பட்ட ஈரான்
யூரேனியப் பதப்படுத்தும் குழாய்களான centrifuges ஈரானிடம் 19,000 இருந்தன. அது இப்போது 6104ஆகக் குறைக்கப் பட்டுள்ளது.  ஈரானிடம் நவீன centrifuges ஆயிரம் இருந்தன அவை இப்போது இல்லாமற் செய்யப் பட்டுள்ளன.  தாழ்-நிலையில் பதப்படுத்தப் பட்ட யூரேனியம் ஈரானிடம் 19,000இறாத்தல்கள் இருந்தன. அவை இப்போது 660 இறாத்தல்கள் ஆகக் குறைக்கப் பட்டுள்ளன. ஈரான் புளூட்டோனியத்தைப் பாவித்து அணுக்குண்டு தயாரிக்க முடியாதபடி செய்யப்பட்டுள்ளது. ஈரான் பதப்படுத்திய 8.5 தொன் யூரேனியம் இரசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஈரான் முழுமையான ஊடுருவல் கண்காணிப்புக்கு  (the most comprehensive, intrusive inspectio) உட்படுத்தப் பட்டுள்ளது என்றார்.

அமெரிக்க ஈரானிய உறவில் மாற்றம்
1979-ம் ஆண்டு ஈரானில் அமெரிக்க சார்பு மன்னர் ஷாவிற்கு எதிராக நடாந்த மதவாதப் புரட்சிக்குப் பின்னர் அமெரிக்க ஈரானிய உறவு ஒரளவிற்கு சீரடைந்துள்ளது. இதற்கு எடுத்துக் காட்டாக ஈரான் கைது செய்த இரண்டு அமெரிக்கக் கடற்படை வீரர்கள் எதிர்பார்த்ததிலும் பார்க்க துரிதமாகவும் (24 மணித்தியாலத்தினுள்) சுமூகமாகவும் விடுவிக்கப் பட்டுள்ளனர். அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஜோன் கெரியும் அமெரிக்காவில் படித்த ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் மொஹமட் ஜவார் ஜரிஃப்பும் தேவைப்படும் போதெல்லாம் ஒருவருடன் ஒருவர் தொலைபேசியீல் உரையாடுகின்றனர். அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையில் 1981-ம் ஆண்டில் இருந்து வந்த நிதிப் பிணக்குத் தீர்க்கப்பட்டுள்ளது.

ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானி(Hassan Rouhani)
ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானி 2013-ம் ஈரானின் மீதான பொருளாதாரத் தடையை நீக்குவேன் என்ற உறுதி மொழியுடன் தேர்தலில் போட்டியிட்டு எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றார். ஈரானின் பல அதிகார மையங்கள் உள்ளன:
1. மக்களால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப் படும் அதிபர்
2. மக்களால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும்290 உறுப்பினர்களைக் கொண்ட பாராளமன்றம்.
3. மக்களால் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை  88 உறுப்பினர்களைக் கொண்ட அறிஞர்கள் சபை.
4. அறிஞர் சபையால் தேர்ந்தெடுக்கப்படும் உச்சத் தலைவர் - தற்போது இருப்பவர் அலி கொமெய்னி. ஆரம்பத்தில் இருந்தவர் அயத்துல்லா கொமெய்னி.தேர்தல்களில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களும் 12 உறுப்பினர்களைக் கொண்ட Guardian Council எனப்படும் காப்பாளர்கள் சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்தப் பன்னிரண்டு உறுப்பினர்களில் அறுவர் இஸ்லாமியச் சட்டத்தில் வல்லவர்களாக இருக்க வேண்டும். எஞ்சிய ஆறு பேரும் பல்வேறு சட்டத் துறைகளில் வல்லவர்களாக இருக்க வேண்டும்.   இவர்கள் பன்னிருவரையும் உச்சத் தலைவர் நியமிப்பார். அதிகாரம் மிக்க இச்சபையை நியமிக்கும் உச்சத்தலைவரே ஈரானில் அதிகாரம் மிக்கவராவார். ஈரானின் சிறப்புப் படையணியான Quds Force ஈரானில் உள்ள ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அதிகார மையமாகும். காப்பாளர் சபை உறுப்பினரை நியமிக்கும் உச்சத் தலைவர் ஈரானில் அதிகாரம் மிக்கவராவார். தற்போது உள்ள உச்சத் தலைவர் அலி கொமெய்னி  வல்லரசு நாடுகாளுடன் யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பான பேச்சு வார்த்தைக்கு உரிய அதிகாரம் வழங்கியிருந்தார்.

தேர்தலை ஒட்டிய நகர்வுகள்
ஈரானியப் பாராளமன்றத்திற்கான தேர்தல் 2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16-ம் திகதி நடக்கவிருக்கின்றது. இந்தத் தேர்தலில் அதிபர் ஹசன் ரௌஹானியைப் போலவும் அவரது கரங்களை வலுப்படுத்தும் விதத்திலும் தாராண்மைவாத உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்படுவதற்கு ஏதுவாக ஈரான் மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது. ஈரானும் தனது யூரேனியப் பதப்படுத்துதலை 2015 ஜூலை மாதம் ஈரானும் ஐந்து வல்லரசுகளும் ஜேர்மனியும் இணைந்த P-5+1 என்னும் குழுவுடன் செய்து கொண்ட உடன்பட்டிக்கையின் படி ஈரான் மாற்றியமைத்துள்ளது. உடனடியாக ஈரான் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்பட்டது. 2015 ஜூலை மாதம் உடன்படிக்கை கைச்சாத்திட்ட போது 2016 ஜூலை மாதம் உடன்படிக்கை நிறை வேற்றப்படும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் ஈரானியப் பாராளமன்றத் தேர்தலுக்கு முன்னர் அவசரமாக உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டு ஈரான் மீதான பொருளாதாரத் தடை நீக்கப் பட்டுள்ளது.ஆனால் பொருளாதாரத் தடை நீக்கப் பட்டதால் ஏற்படும் நன்மைகள் பொது மக்களைப் போய்ச் சேர பல மாதங்கள் எடுக்கும்.

ஈரான் பணத்தை என்ன செய்யும்?
ஈரானிற்குச் சொந்தமான ஐம்பது பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகளில் முடக்கி வைக்கப் பட்டிருந்தது. அவை இப்போது விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த நிதியை ஈரான் ஹிஸ்புல்லா, ஹமாஸ் போன்ற இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்குக் கொடுக்கும், சிரியாவில் பஷார் அல் அசாத்தின் ஆட்சியைப் பாதுகாக்க மேலும் உதவிகளைச் செய்யும் என சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் சொல்கின்றன. இதே கருத்தை இஸ்ரேலும் கொண்டுள்ளது.  ஈரானில் உள்ள தீவிரவாதிகளின் நோக்கம் அதுவாகத்தான் இருக்கும். ஆனால் ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானி இவர்களுடன் போராட வேண்டிய நிலையில் இருக்கின்றார். அவரது கைகளை வலுப்படுத்த சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளினதும் இஸ்ரேலினதும் ஆட்சேபனைகளுக்கு இடையில் ஈரான் மீதான பொருளாதாரத் தடை நிக்கப் பட்டுள்ளது.

முதலீடு தேடும் ஈரான்
ஈரானுக்கு தற்போது ஒரு ரில்லியன் வெளிநாட்டு முதலீடு தேவைப் படுகின்றது. அதற்கு ஓர் உறுதியான ஆட்சியும் அமைதியான சூழலும் அவசியம். ஈரானில் உள்ள தீவிரவாதப் போக்குடையவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் வெளிநாட்டு முதலீடு சாத்தியமல்ல.   அமெரிக்க நிறுவனங்கள் ஈரானில் முதலீடு செய்யத் தயக்கம் காட்டூகின்றன. ஈரான் உடனடியாக மேற்கு ஐரோப்பாவிலிருந்து114 Airbus jets வாங்கவிருக்கின்றது. பொருளாதாரத் தடை நீக்கப் பட்ட மறுநாளே ஐரோப்பிய அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் ஈரானுக்குப் படையெடுத்தனர். இரசியா தனது படைக்கலன்களை பெருமளவில் ஈரானுக்கு விற்பனை செய்யலாம். துருக்கிக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்த இரசியா அங்கு இருந்து இறக்குமதி செய்யாமல் போன பொருட்கள் பலவற்றை ஈரானில் இருந்து இறக்குமதி செய்யலாம். ஆனால் இரசியாவிற்குப் பேரிடியாக அமையப் போவது ஈரான் எரிபொருள் ஏற்றுமதி செய்யப் போவதால் ஏற்படப் போகும் எரிபொருள் விலை வீழ்ச்சியே. 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடக்க விருக்கும் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஈரானுக்கு எதிரான அல்லது இஸ்ரேல் சொற்படி ஆடும் அல்லது இரண்டும் இணைந்த ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப் பட்டால் ஈரானில் நிலைமைகள் தலைகீழாகலாம் எனச் சில முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர்.

எரியும் எரிபொருள் விலை வீழ்ச்சிக்கு ஈரானும் எண்ணெய் ஊற்றும்
ஈரான் தான் ஏற்கனவே உற்பத்தி செய்த 50 மில்லியன் பீப்பாய்கள் மசகு எண்ணெயை கடலில் கப்பல்களில் வைப்பிலிட்டுள்ளது. ஈரான் இனி நாள் ஒன்றிற்கு ஒரு மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்ய விருக்கின்றது. மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 20 டொலர்களாகக் குறைவது நிச்சயம் என்றும் பத்து டொலர்களாக வீழ்ச்சியடைவது சாத்தியம் என்றும் சொல்லப் படுகின்றது. இது  இரசியா, வெனிசுவேலா போன்ற நாடுகளை மோசமாகப் பாதிக்கப்படவிருக்கின்றன. எல்லா எரிபொருள் உற்பத்தி நாடுகளும் பாதிக்கப்படும். சீனாவிலும் இந்தியாவிலும் எரிபொருளுக்கு விதிக்கப் படும் வரிகள் அதிகரிக்கப் படும். இது அந்த நாடுகளில் பாதீட்டுப் பற்றாக் குறையை சீர் செய்ய உதவும்.

ஈரானின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அதன் மீது அமெரிக்கா செய்த பொருளாதாரத்தடைகள் தொடர்ந்தும் இருக்கும். அதே வேளை ஈரானின் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை உற்பத்தி தொடர்பாக அமெரிக்கா சில புதிய தடைகளையும் விதித்துள்ளது. ஈரானின் எதிர்கால நகர்வுத் திசையில் பெப்ரவரி மாதம் நடக்கும் தேர்தல் தீர்மானிக்கும்.

Monday, 18 January 2016

பங்குச் சந்தையில் சீனாவின் சண்டித்தனம்

முதலாளித்துவப் பொருளாதாரம் போல் சரிவு (recession) மீட்சி (recovery) என்ற சுழற்ச்சிக்குள் அகப்படாமல் சீனா ஆட்சியாளர்கள் கால் நூற்றாண்டுகளாக சீனாவின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தி தொடர் வளர்ச்சிப் பாதையில் இன்றுவரை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். 2016இலும் சீனப் பொருளாதாரம் ஐந்துக்கு மேற்பட்ட மொத்தத் தேசிய உற்பத்தி அதிகரிப்பைப் பெறும்.

சீனாவின் இரு பங்குச் சந்தைகள்

2016-ம் ஆண்டின் முதல் வாரத்தில் சீனப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி உலகை உலுப்பியது. சீனாவின் பொருளாதாரத்தைப் பற்றி கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன. 2015-ம் ஆண்டின் நடுப்பகுதியிலும் சீனப் பங்குச் சந்தை வீழ்ச்சியைச் சந்தித்த போதும் எதிர்மறையான கருத்துக்கள் பல சீன பொருளாதாரத்திற்கு எதிராக முன்வைக்கப் பட்டன. சீனா இரு பொருளாதாரக் கட்டமைப்புக்களைக் கொண்டது. ஒன்று பிரதான சீனாவிலும் மாற்றது ஹொங்கொங்க் தீவிலும் இருக்கின்றன. அதே போல் ஏ-பங்குகள் என்றும் பி-பங்குகள் என இருவகையான பங்குகள் இருக்கின்றன. ஏ-பங்குகள் உள்நாட்டு நாணயத்திலும் பி-பங்குகள் அமெரிக்க டொலரிலும் விற்று வாங்கப்படும். ஹொங்கொங்இலும் பிரதான சீனாவில் உள்ள ஷென்ஜென் நகரிலும் இரு பங்குச் சந்தைகள் உள்ளன. சீன நாணயத்திற்கும் இரு முகங்கள் உள்ளன. ஒரு முகம் ஹொங்கொங்கிலும் மறுமுகம் பிரதான சீனாவிலும் இருக்கின்றன. இரு இடங்களிலும் சீன நாணயத்தின் பெறுமதி வேறுபட்டதாக இருக்கும்

சீனா சந்தைக்குச் சென்ற நீண்ட பாதை

சீனாவின் அரச முதலாளித்துவப் பொருளாதாரத்தை சந்தைப் பொருளாதாரமாக மாற்ற எடுக்கும் முயற்ச்சி பல சவால்களைச் சந்திக்கின்றது. 1978-ம் ஆண்டு சீனப் பொருளாதாரத்தை திட்டமிடுதலையும் கட்டுப்படுத்தலையும் சீன ஆட்சியாளர்கள் தளர்த்தத் தொடங்கினர். சீனப் பொருளாதாரத்தின் செயற்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் இம் முயற்ச்சி தொடங்கப் பட்டது. ஜப்பான், தென் கொரியா, தாய்வான், சிங்கப்பூர், ஹொங்கொங் ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைப் பார்த்து சீனா கற்றுக்கொள்ள அப்போது விரும்பியது.1979இல் வெளிநாட்டு முதலீடுகள் அனுமதிக்கப்பட்டு 1980இல் சீனா பன்னாட்டு நாணய நிதியத்திலும் உலக வங்கியிலும் இணைந்து கொண்டது. அத்துடன் சீனாவில் பல சிறப்புப் பொருளாதார வலயங்கள் வெளிநாட்டு முதலீடுகளுக்கு வசதியாக உருவாக்கப் பட்டன. 1981இல் சீன விவசாயிகள் இலாபமீட்ட அனுமதிக்கப் பட்டனர். 1982இல் சீனப் பொருளாதாரத்தைச் சந்தைப் பொருளாதாரமாக மாற்றும் ஐந்தாண்டுத் திட்டம் உருவாக்கப்பட்டது. 1984இல் சீனக் கரையோர நகரங்கள் பதின்நான்கு சிவப்பு நாடா இல்லாமலும் வரிவிலக்கு உரித்துடையவையாகவும் ஆக்கப்பட்டு வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு திறந்து விடப்பட்டன. 1986 சந்தைப் பொருளாதாரத்திற்கு உரிய சட்டங்கள் இயற்றப்பட்டன. சீனப் பொதுவுடமைக் கட்சியின் 13வது மாநாட்டில் அரச துறைக்கு மாற்றீடாகத் தனியார் துறை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து சீன நாணயத்தின் அதிகரித்த பெறுமதியை உணர்ந்து கரையோர அபிவிருத்தி உபாயங்கள் வகுக்கப் பட்டன. 1988இல் தனியுடமை, பங்குடமை, வரையறுக்கப்பட்ட பொறுப்புடை பங்காண்மை ஆகியவற்றை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டது. பின்னர் 1990இல் ஷங்காய், ஷென்ஜென் ஆகிய நகரங்களின் பங்குச் சந்தைகள் திறக்கப்பட்டன. 1992இல் சமுகவுடமைச் சந்தைப் பொருளாதாரம் என்பது சீனப் பொருளாதாரத்தின் சீர்திருத்த இலக்காக பதின்நான்காவது பொதுவுடமைக் கட்சியின் மாநாட்டில் முடிவு செய்யப் பட்டது. அதைத் தொடர்ந்து வங்கிச் சீர்திருத்தம் செய்யப்பட்டது. 1997இல் ஆசியாவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி சீனாவைச் சிறிதளவே பாதித்தது. 1994இல் சீன நாணயம் முகாமைப்படுத்தப்பட்டு நாணயச் சந்தையில் மிதக்க விடப்பட்டது (a market-based, but managed floating exchange rate system). அத்துடன் முழுச் சீனாவிலும் வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கப்பட்டது. 1997இல் சீனாவின் உள்நாட்டுக் கொள்வனவை அதிகரிப்பதின் முக்கியத்துவம் உணரப்பட்டது. 1999இல் ஐக்கிய அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டு சீனா உலக வர்த்தக நிறுவனத்தில் இணைந்து கொண்டது. 2001-ம் ஆண்டு சீன மக்கள் பி-பங்குகளில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சீனாவில் விலைக் கட்டுப்பாடு அகற்றப்பட்டது. விவசாய ஏற்றுமதிக்கான உதவிகள் நீக்கப்பட்டன. 2003-இல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சீனாவின் ஏ-பங்குகள் வாங்க அனுமதிக்கப்பட்டனர்.

சீனாவும் உலக வர்த்தகமும்

1977இல் உலக வர்த்தகத்தில் சீனாவின் பங்கு ஒரு விழுக்காடு மட்டுமே. சீனா தனது பொருளாதாரத்தை சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தியதால் உலக வர்த்தகத்தில் அது அமெரிக்காவையும் மிஞ்சி முதலாம் இடத்தில் இருக்கின்றது. தற்போது சீனா ஒரு சந்தைப் பொருளாதார நாடுமல்ல முழுமையான அரச கட்டுப்பாடுடைய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுமல்ல. இரண்டுக்கும் இடையில் தடுமாறி நிற்கின்றது. இது ஓர் ஆபத்தான இரண்டும் கெட்டான் நிலை. இதை எக்கொனொமிஸ்ற் சஞ்சிகை இப்படிச் சொல்கின்றது:
Yet China is not normal. It is caught in a dangerous no-man’s-land between the market and state control. And the yuan is the prime example of what a perilous place this is. After a series of mini-steps towards liberalisation, China has a semi-fixed currency and semi-porous capital controls. Partly because a stronger dollar has been dragging up the yuan, the People’s Bank of China (PBOC) has tried to abandon its loose peg against the greenback since August; but it is still targeting a basket of currencies. A gradual loosening of capital controls means savers have plenty of ways to get their money out.

உடைக்கப்பட்ட மடை
கடந்த ஆறுமாதமாக சீனாவில் இருந்து வெளியேறும் மொத்த மூலதனத்தின் விகிதம் ஆண்டு ஒன்றிற்கு ஒரு ரில்லியன்கள் என்ற நிலையை எட்டியுள்ளது. சீன நாணயத்தின் பெறுமதி குறையப் போகின்றது என்ற எதிர்பார்ப்புடம் சீனாவில் இருந்து ஒரு புறம் நிதி சீனாவில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்க மறுபுறம் சீனப் பங்குகள் விலை வீழ்ச்சியடையப் போகின்றது என்ற அச்சத்தில் நிதி சீனாவில் இருந்து வெளியேறுகின்றது. இது சீன நாணயத்தின் பெறுமதியை பெரிதும் பாதிக்கின்றது. 2015-ம் ஆண்டு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதியிலும் பார்க்க 595பில்லியன் டொலர்கள் அதிகமானதாகும். சீனப் பொருளாதாரம் வலுவிழந்ததால் அதன் இறக்குமதி பெரு வீழ்ச்சியை அடைந்துள்ளது. சீனாவில் இருந்து முதலீடு மடைதிறந்த வெள்ளம் போல் வெளியேறுகின்றது. சீன மக்கள் சீனாவின் பொருளாதாரத்தின் மீது நம்பிக்கையை இழக்கின்றனர். சீனப் பொருளாதாரம் ஆபத்திற்கு உள்ளாகியுள்ளது அல்லது சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது. பெரிய ஆபத்தா அல்லது சாதாரண சிக்கலா எனச் சொல்ல முடியாமல் இருக்கின்றது. காரணம் சீனாவின் புள்ளி விபரங்கள் நம்பகத் தன்மை வாய்ந்தவை அல்ல. சீனாவின் நாணயத்தின் பெறுமதி குறையப் போகின்றது என்றோ அல்லது சீனப் பங்குகள் விலை வீழ்ச்சி அடையப் போகின்றன என்றோ முதலீட்டாளர்கள் கருதினால் அவர்கள் சீனாவில் உள்ள முதலீட்டை விற்றுவிட்டு வெளியேறுவார்கள். இது சீனாவின் நாணயத்தின் பெறுமதியையும் பங்குகளின் விலைகளையும் மேலும் வீழ்ச்சியடையச் செய்யும்.

கலங்கிய சீனப் பங்குச் சந்தை

சீனாவின் கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டி தொடர்ந்து குறைந்து கொண்டு போனதால் சீனப் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடையத் தொடங்கின. 2016 ஜனவரி 7-ம் திகதி ஷாங்காய் பங்குச் சுட்டி 11.7 விழுக்காட்டும், ஷென்ஜென் பங்குச் சுட்டி15.2 விழுக்காடும் வீழ்ச்சியடைந்து 1.1ரில்லியன் டொலர்கள் பெறுமதியான் சொத்து இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் இரண்டு சுட்டிகளும் முறையே 2விழுக்காடும் 1.1 விழுக்காடும் அதிகரித்தன. இந்த அதிகரிப்புக் காரணம் சீன அரசின் தலையீடே. ஜனவரி 13-ம் திகதி சீனாவின் வர்த்தகம் தொடர்பான் சாதகமான புள்ளிவிபரங்கள் வெளிவந்த போதும் அது பங்குச் சந்தையில் சாதகமான நிலையை உருவாக்கவில்லை.

சீனாவின் கடன்பளு: பயன்தராப்புள்ளியிலா(Point of no retrun)
சீனாவின் கடன்பளு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியில் 280விழுக்காடாக இருக்கின்றது. சீன அரசு பொருளாதாரத்தைத் தூண்டுவதற்கு அதிகரிக்கும் பணப்புழக்கம் ஏற்கனவே வாங்கிய கடன்களை அடைக்கவே பெரிதும் பாவிக்கப் படுகின்றது. பணப்புழக்கத்தை அதிகரிக்கப் பொருளாதாரத்தினுள் செலுத்தப் படும் நிதி முழுவதும் கடன்களை அடைக்கப் பயன்படுத்தப்படும் போது அது பொருளாதார உற்பத்தியை அதிகரிக்காத நிலையை எட்டும். கடந்த பத்து ஆண்டுகளாக சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் சீனாவின் உள்கட்டுமானங்களில் செய்யப் பட்ட முதலீடுகள் அரைப்பங்காக இருந்தன. சீனாவின் பொருளாதார வளர்ச்சி சீனாவை ஒரு மலிவான தொழிலாளர்களைக் கொண்ட நாடு என்ற நிலையில் இருந்து நீக்கி விட்டது. பங்களாதேசம், வியட்னாம் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவில் தொழிலாளர் ஊதியம் அதிகமானதாகும். இது சீனாவின் ஏற்றுமதியைப் பாதித்துக் கொண்டிருக்கின்றது.

சுதந்திரமான சந்தைப் பொருளாதாரம்
சீனா சந்தையை அரச தலையீடு இல்லாமல் சுதந்திரமாக இயங்க விடவேண்டும் என்ற கருத்து இப்போது பரவலாக முனவைக்கப் படுகின்றது. சுதந்திரமான சந்தைப் பொருளாதாரம் என ஒன்று இருந்ததுமில்லை! இருக்கப் போவதுமில்லை! அமெரிக்கா உட்பட எல்லா சந்தைப் பொருளாதார நாடுகளும் சந்தையில் தலையிடுவதுண்டு ஆனால் சீனா சந்தையில் சண்டித்தனம் விடுகின்றது. தான் நினைத்தபடி சந்தையில் எல்லாம் நடக்க வேண்டும் என நினைக்கின்றது.  பங்குச் சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்படும் போது வட்டி விழுக்காட்டை குறைப்பதும் வங்கிகள் நடுவண் வங்கிகளில் வைத்திருக்க வேண்டிய வைப்பீட்டைக் குறைப்பதும்தான் பொதுவான நடவடிக்கைகள். ஆனால் சீனா பல தடவை வட்டி விழுக்காட்டைக் குறைத்ததும் வைப்பீட்டுக் கோரிக்கையைக் குறைத்ததும் பங்குச் சந்தையில் விலை வீழ்ச்சியைத் தடுக்கவில்லை. இதனால் சீனா சண்டித்தன நடவடிக்கைகளில் இறங்கியது.

சீனாவின் சண்டித்தனங்கள்

1. சீனாவின் சண்டித்தனம்-பெரு நிறுவனங்களுக்குத் தடை

சீனாவின் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைவதைத் தடுக்க சீனப் பெரு நிறுவன்ங்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடாமல் சீன அரசு தடை விதித்தது.

2. சீனாவின் சண்டித்தனம்-புதிய பங்கு விற்பனைத் தடை

சீன அரச நிறுவனங்கள் புதிதாக பங்கு விற்பனை செய்வது இடை நிறுத்தப்பட்டது. ஜூலை

3. சீனாவின் சண்டித்தனம் -  சுற்று முறிப்பு

சீனாவின் பங்குச் சந்தையில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவதைத் தடுக்க சீனா ஒரு சுற்று முறிப்பை (Circuit Breaker)அறிமுகப் படுத்தியது. அதன் படி சீனப் பங்குகளின் விலைகள் 5 விழுக்காடு விழுந்தால் பங்குகளை விற்கவோ வாங்கவோ முடியாதபடி பங்குச் சந்தை தற்காலிகமாக மூடப்படும்.இந்த சுற்று முறிப்பை 2016 ஜனவரி 4-ம் திகதி சீனா அறிமுகம் செய்தது. ஆனால் நான்கு விழுக்காடு விலை வீழ்ச்சி வந்தவுடன் சந்தை மூடப் படப்போகின்றது என உணர்ந்த முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்கத் தொடங்கி விட்டார்கள். இதனால் பங்குகளின் விலைகள் மேலும் துரிதமாகச் சரியத் தொடங்கியது. இதனால் சுற்று திரும்பப் பெறப்பட்டது.

4. சீனாவின் சண்டித்தனம்- குறுகியகால விற்பனைத் தடை
குறுகிய கால விற்றல் (short selling) தடை செய்யப்பட்டு அதை மீறுபவர்கள் கைது செய்யப்படலாம் என மிரட்டல் சீன அரசால் விடுக்கப்பட்டது. short selling என்பது பங்குளை வாங்க முன்னரே விற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வது. ஆனால் சீன ஆட்சியாளர்கள் சீனப் பங்குகளின் விலை அளவுக்கு மிஞ்சி மிகைப்படுத்தப் பட்டிருந்தன என்பதை உணரவில்லை.

சீனா ஆட்டம் காணலாம் கவிழாது
அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் பங்குச் சந்தை வர்த்தகம் அவற்றின் மொத்தத் தேசிய உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் நூறு விழுக்காட்டிற்கும் அதிகமாக நடக்கும். ஆனால் சீனாவில் நடக்கும் பங்கு வர்த்தகம் சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தியின் மூன்றில் முப்பது விழுக்காடு மட்டுமே. இதனால் சீனப் பங்குச் சந்தைச் சுட்டெண் சீனப் பொருளாதார வளர்ச்சியின் சுட்டியாகக் கருத முடியாது. சீனா பல நெருக்கடிகளைச் சந்திக்கின்றது. அது சோவியத் ஒன்றியம் போல் கவிழப்போவதில்லை.  ஜப்பானைப் போல் ஒரு தொடர் பொருளாதார மந்த நிலையையும் அடையப் போவதில்லை. அதன் பொருளாதார வளர்ச்சியின் வேகம் தொடர்ந்து குறைந்து கொண்டே போகும்.

Wednesday, 6 January 2016

தென் சீனக் கடலில் சீனாவின் இன்னும் ஒரு நகர்வு

2016 ஜனவரி 4-ம் திகதி தென் சீனக் கடலில் தனது இறைமைப் பிராந்தியத்தினுள் அத்து மீறியதாக வியட்னாம் குற்றம் சாட்டியுள்ளது. Spratly தீவுக் கூட்டத்தில் உள்ள Fiery Cross என்னும் பவளப் பாறையை மேடுறுத்தி சீனா உருவாக்கிய செயற்கைத் தீவில் சீனாவின் போர் விமானம் தரையிறங்கியதையே வியட்னாம் தனது இறைமைக்குள் சீனா அத்து மீறியதாகச் சொல்கின்றது. வியட்னாம் வெளியுறவுத் துறை பேச்சாளர் லீ ஹை பின் Fiery Crossஇல் விமான ஓடுபாதை சட்ட விரோதமாக நிர்மாணிக்கப் பட்டதாகத் தெரிவித்தார்.

சீன வெளியுறவுத் துறை அமைச்சர் சீனாவின் இறையாண்மைக்குள் புதிதாக நிர்மாணிக்கப் பட்ட தீவுக்குள்தான் தமது விமானம் பரீட்சார்த்தமாக தரையிறக்கப் பட்டதாகத் தெரிவித்தார் என சீனச் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா அறிவித்துள்ளது. தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ், வியட்னாம், மலேசியா, புரூனே,  போன்ற நாடுகள் தமது கடல் எல்லைகள் தொடர்பாக சீனாவுடன் முரண்படுகின்றன.

சீனா தென் சீனக் கடலில் உருவாக்கும் தீவுகளை செய்மதிகள் மூலம் எடுத்த படங்களில் இருந்து அங்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள், சிறப்புப் படைகளுக்கு எதிரான நடவடிக்கை நிலையங்கள், ரடார் எனப்படும் கதுவிக் கோபுரங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், பாரிய கப்பல்களுக்கான துறைமுகங்கள் உருவாக்கும் வாய்ப்புக்கள் இருப்பதாகக் கருதப் படுகின்றது.

தென் சீனக் கடலில் சீனாவின் நிலைப்பாட்டை அமெரிக்காவும் எதிர்க்கின்றது. சீனா பன்னாட்டுக் கட்ற்பரப்பில் சுந்திரக் கடற்போக்கு வரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தீவுகளைச் செயற்கையாக உருவாக்குவதாக அமெரிக்கா சொல்கின்றது. சீனாவின் தீவுகளுக்கு சவால் விடும் வகையில் அதன் மேலாகத் தனது போர் விமானங்களைப் பறக்க விட்டதுடன் தன் நாசகாரிக் கப்பலையும் அதற்கு அண்மையாகக் கொண்டு சென்றது. அமெரிக்கப் வெளியுறவுத் துறைச் செயலர்அஸ்டன் கார்ட்டர் ஒரு போர் உருவாகக் கூடிய அபாயம் தென் சீனக்  கடலில் உள்ளது என்றார். அமெரிக்காவின் அணுவலுவில் இயங்கும் Nimitz வகையைச் சேர்ந்த பெரிய விமானம் தாங்கிக் கப்பலான USS Ronald Reagan, வழிகாட்டு ஏவுகணைகள் தாங்கி நாசகாரிக் கப்பல்கள், குண்டு வீச்சு விமானங்கள் போன்றவை தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் சேவையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.


எரிபொருள் பெருமளவில் இருக்கின்றது என நம்பப்படும் தென் சீனக் கடலில் 2,740,000 சதுர மீட்டர் கடற்பரப்பை சீனா தனதாக்க முயல்கின்றது. ஆண்டு ஒன்றிற்கு நான்கு ரில்லியன் டொலர்கள் பெறுமதியான வர்த்தகம் தென் சீனக் கடலின் ஊடாக நடக்கின்றது. சீனா Fiery Crossஇல் உருவாக்கிய செயற்கைத் தீ்வு 3000மிட்டர் அல்லது இரண்டு மைல் நீளமானது. இதில் பெரிய போர் விமானம் தரையிறங்க முடியும். இதனால் இந்தச் செயற்கைத் தீ்வு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த்ததாக உள்ளது.

தென் சீனக் கடலின் முக்கியத்துவத்திற்கு இரு பெரும் காரணங்கள் உள்ளன.  முதலாவது கடற்போக்கு வரத்து முக்கியத்துவம். இரண்டாவது எரிபொருள் மற்றும் கனிம வள இருப்பு. உலகக்கடற்போக்கு வரத்தில் 30 விழுக்காடு தென் சீனக் கடலினூடாகச் செல்கின்றது. தென் சீனக்கடலில் 213 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. எரிவாயு 900 ரில்லியன் கன அடி இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான கனிம வளங்களும் கடலுணவு வளங்களும் உண்டு. 1974இலும் 1988இலும் சீனாவும் வியட்னாமும் ஸ்பிரட்லிதீவுகளுக்காக மோதிக் கொண்டன. பிலிப்பைன்ஸ் வியட்னாமுடனும் மலேசியாவுடனும் மோதக் கூடிய நிலைமைகளும் ஏற்பட்டிருந்தன.

சீனாவின் இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பல் உருவாக்கியதும், ஆபிரிக்காவில் ஒரு கடற்படைத் தளம் அமைத்ததும், ஆறு குண்டு வீச்சு விமானங்களை பசுபிக் பிராந்தியத்தில் பறக்க விட்டமையும் சீனா தனது பிராந்திய ஆதிக்கத்தில் அதிக கவனம் செலுத்துகின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

Monday, 4 January 2016

2016: வரலாறு படைக்குமா பதினாறு?

2016-ம் ஆண்டு உலகப் பொருளாதாரத்திற்கு சவால் மிக்க ஆண்டாக அமையும். பன்னாட்டு நாணய நிதியம் 2016-ம் ஆண்டு 3.5 விழுக்காடு வளரும் என எதிர்பார்க்கின்றது. இது 2008-ம் ஆண்டுக்கு முன்னரான பத்தாண்டுகால சராசரி வளர்ச்சியான 4.5விழுக்காடுடன் ஒப்பிடுகையில் குறைவானதே. ஐக்கிய அமெரிக்காவினதும் பிரித்தானியாவினதும் பொருளாதாரங்க்ள் உள் நாட்டுக் கொள்வனவால் தாக்குப் பிடிக்கின்றன. ஆனாலும் அவற்றின் வளர்ச்சிகள் 2016இல் போதுமானதாக இருக்காது. ஐரோப்பிய ஒன்றியம் தனது பொருளாதாரத்தை நிலை நிறுத்த தொடர்ந்தும் பல ஊக்குவிப்பு நடவடிக்கைகளைச் செய்ய வேண்டியிருக்கும். ஐரோப்பாவினதும் வட அமெரிக்காவினதும் பொருளாதாரங்களுக்கு ஏற்றுமதித் துறையில் இருந்து தூண்டுதல்கள் போதிய அளவு கிடைக்காத அளவிற்கு வளர்முக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி போதியதாக இருக்காது. எரிபொருள் உற்பத்தி நாடுகளுக்கான ஏற்றுமதிகளும் வீழ்ச்சியடையும். எரிபொருள் உற்பத்தி நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தில் தங்கியிருக்கும் பொருளாதாரங்களும் 2016-ம் ஆண்டு பாதிக்கப்படும். உலக நாடுகளிடையே ஏற்றுமதிக்கான போட்டிகள் தீவிரமடையும். நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தமது நாணயங்களின் பெறுமதியைக் குறைக்க முயலும். உள் நாட்டு வேலைவாய்ப்புக்களை வளர்க்க சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, பிரேசில், இரசியா ஆகிய நாடுகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடும். உலகெங்கும் பகுதி நேர வேலை செய்பவர்களின் தொகை அதிகரிக்கும். அரசியல் கட்சிகள் மக்களிடம் தங்கள் செல்வாக்கை உயர்த்துவதற்காகக் கடைப்பிடிக்கும் பரப்பியற் கொள்கைகள் உலகெங்கும் முனைப்புப் பெறும்.

ஐக்கிய அமெரிக்காவின் வட்டியும் முதற் குட்டியும்
அமெரிக்க மைய வங்கி 2016-ம் ஆண்டு நான்கு தடவைகள் தனது வட்டி விழுக்காட்டை உயர்த்தும் என Goldman Sachs Group Inc இன் பொருளியல் நிபுணர்கள் எதிர்வு கூறுகின்றார்கள். உலக விலைவாசி உயர்வு அந்த அளவிற்கு அதிகமாக இருக்கும் என்கின்றனர் அவர்கள். ஆனால் HSBC. 2015இறுதியில் சீனப் பொருளாதாரம் தொடர்பான சாதகமற்ற புள்ளி விபரங்களும் எரிபொருள் விலை தொடர்ந்து சரிவதும் HSBC Holdings Plc இன் பொருளியல் நிபுணர்களின் வாதத்திற்கு வலுச் சேர்த்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் 2016 நவம்பரில் தெரிவு செய்யப் படுவாரா?

சீனா அடங்காது அடக்கி வாசிக்கும்
தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் சீனா 2016-ம் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கான நகர்வுகளைச் செய்யும். எந்த வித விட்டுக்கொடுப்புக்களையும் அது செய்யாது. ஆனால் ஒரு போர் உருவாகுவதை அது எப்போதும் தவிர்த்துக் கொண்டே இருக்கும். கிழக்குச் சீனக் கடலில் புதிதாகத் தீவுகள் எதையும் சீனா உருவாக்காது என எதிர்பார்க்கலாம். ஆனால் ஏற்கனவே உருவாக்கிய தீவுகளில் தனது கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும். ஏற்றுமதியிலும் முதலீட்டில்லும் தங்கி இருக்கும் சீனப் பொருளாதாரத்தை உள் நாட்டுக் கொள்வனவை நோக்கி நகர்த்தும் சீனாவின் முயற்ச்சி 2016இல் தீவிரப்படுத்தப்படும். சீனா ஆட்சியாளர்கள் பொருளாதாரத்தின் மீதான தமது கட்டுப்பாடுகளை மட்டுப்படுத்தப் பட்ட அளவில் மட்டுமே தளர்த்துவார்கள். சந்தைப் பொருளாதாரமாகச் சீனப் பொருளாதாரத்தை மாற்றும் முயற்ச்சி மந்த கதியிலேயே நடக்கும். ஆனாலும் பொதுவுடமைக் கட்சியினர் நாட்டின் மீதான தமது கட்டுப்பாட்டைத் தளர்த்த மாட்டார்கள். சீனா தனது நாணயத்தின் பெறுமதியை 2016இலும் தேய்மானம் அடைய அனுமதிக்கும்.

நேட்டோ விரிவாக்கம்
2016-ம் ஆண்டு மொண்டிநிக்ரோ நேட்டோவில் இணைக்கப்படலாம். 1500தரைப்படையினரும், 350கடற்படையினரும், 230 விமானப் படையினரும் உள்ள சின்னஞ்சிறிய நாடு நேட்டோவில் இணைவது நேட்டோவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான படைத்துறைச் சமநிலையைப் பெரிதும் பாதிக்காவிட்டாலும் இரசிய அதிபர் புட்டீனை ஆத்திரப்படவைக்கும் ஒரு நிகழ்வாக 2016இல் அமையப் போகின்றது. அடுத்த நேட்டோ உச்சி மாநாடு போலாந்துத் தலைநகர் வார்சோவில் ஜூலை மாதம் 8-ம் 9-ம் திகதிகளில் நடக்கவிருக்கின்றது. உக்ரேனில் இரசியா செய்த தலையீட்டைத் தொடர்ந்து சுவீடன், சுவிற்சலாந்து, பின்லாந்து, ஒஸ்ரியா ஆகிய நாடுகளில் இரசியாவிடமிருந்து பாதுகாப்பதற்கு நேட்டோவில் இணையவேண்டும் என்ற கருத்து வலுவடைகின்றது. ஆனாலும் ஒரு வல்லரசுப் போட்டிக்குள் தாம் சிக்கிக் கொள்ளக் கூடாது என இரசியாவிற்கு அண்மையாக இருக்கும் இந்த நாடுகள் கருதுகின்றன். சேர்பியா நாடு நேட்டோவில் இணைவதற்குத் தயக்கம் காட்டுகின்றது.

வளர்முக நாடுகள்
வளர்முக நாடுகளைப் பொறுத்தவரை ஒரு புறம் அதிகரிக்கும் அமெரிக்க டொலரின் பெறுமதி இறக்குமதிக்குக் கொடுக்க வேண்டிய விலையை அதிகரித்துக் கொண்டிருக்க மறுபுறம் குறையும் சீன நாணயப் பெறுமதி ஏற்றுமதியில் நெருக்கடியை கொடுக்கும். பிரேசில், துருக்கி, நைஜீரியா ஆகிய நாடுகளில் பொருளாதார நெருக்கடிகள் அதிகரிக்கும். மத்திய அமெரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் பொருளாதாரப் பிரச்சனைகள் மோசமடைந்து அரசியற் குழப்பங்களாக மாறும்.

எரிபொருள் உற்பத்தி நாடுகள்
2016-ம் ஆண்டு எரிபொருள் உற்பத்தி நாடுகளுக்கு மிகவும் சோதனை மிகுந்த ஆண்டாக அமையும். மேற்காசியாவில் உள்ள எரிபொருள் உற்பத்தி நாடுகள் தமது அந்நியச் செலவாணிக் கையிருப்பு கரைந்து போவதைக் கண்ணீர் மல்கப் பார்க்க வேண்டிய நிலை உருவாகும். இரசியா, வெனிசுவேலா போன்ற நாடுகள் பல நெருக்கடிகளைச் சந்திக்கும். அமெரிக்காவில் பல எரிபொருள் உற்பத்தி நிறுவனங்கள் நிதி நெருக்கடியால் மூடப்படும். சவுதி அரேபியா போன்ற செல்வந்த நாடுகள் தமது தேசிய வருமானத்தை வேறு முனைப்படுத்த முயற்ச்சி செய்யும்.

ஐரோப்பிய ஒன்றியம்
அகதிகள் வருகையும் அரச செலவில் சிக்கன நடவடிக்கையும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அரசியற் பிரச்சனைகளைத் தீவிரப்படுத்தும். விளடிமீர் புட்டீனின் இரசிய விரிவாக்கக் கொள்கை பாதுகாப்புப் பிரச்சனையை மோசமாக்கும். சீனாவிற்கான ஏற்றுமதி வீழ்ச்சியும் வளரமுடியாமல் தவிக்கும் வளர்முக நாடுகளின் பொருளாதாரமும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பொருளாதார நெருக்கடியையும் மோசமாக்கும். அவ்வப்போது சிறு தீவிரவாதத் தாக்குதல்கள் சில நாடுகளில் நடக்கும். உள்நாட்டுப் பாதுகாப்பு பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும். பொருளாதார ரீதியில் இத்தாலியும் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சேர்க்கப் படவேண்டிய ஒரு நாடாக 2016இல் உருவாகும்.

பிரித்தானியா
பிரித்தானியாவின் அரசியலில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இருப்பதா என்பது தொடர்பான விவாதம் சூடு பிடிக்கும். ஸ்கொட்லாந்து, வேல்ஸ் ஆகிய பிராந்தியப் பாராளமன்றங்களுக்கான தேர்தல் 2016இல் நடைபெறும். வீழ்ச்சியடையும் எரிபொருள் விலை ஸ்கொட்லாந்தின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு கிடைக்கும் ஆதரவைக் குறைக்கும். பிரித்தானிய அரசியலில் பொறிஸ் ஜோன்ஸனின் செல்வாக்கு அதிகரிக்கும். இலண்டன் மாநகர பிதாவிற்கான தேர்தலும் 2016இல் நடக்க விருக்கின்றது. 2016-ம் ஆண்டு வில்லியம் ஷேக்ஸ்பியரின் 400வது நினைவு ஆண்டாகும்.

கலக்கிய ஐ எஸ் கலங்கும் அசாத் நிலைப்பார்
2015-ம் ஆண்டில் உலகை கலக்கிய ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எல் என்றும் அழைக்கப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு 2016இல் பல முனை எதிர்ப்புக்களால் கலக்கமடையவிருக்கின்றது. 2015-ம் ஆண்டின் இறுதியிலேயே ஐ எஸ் அமைப்பிற்க்கு பல பிரச்சனைகள் ஆரம்பித்துவிட்டன. அதன் நிதி மூலங்கள் பல அழிக்கப்படலாம். அதன் ஆதிக்க நிலப்பரப்பு சுருக்கப்படலாம். பல தலைவர்களை ஆளில்லாப் போர் விமானங்கள் வேட்டையாடலாம். துருக்கியும் ஐக்கிய அமெரிக்காவும் ஐ எஸ் அமைப்பிற்கு எதிராக நெருக்கமாக இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். 2016-ம் ஆண்டிலும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தை அசைக்க முடியாது.

இணையவெளிப் படைக்கலப் போட்டி
2016இல் பல நாடுகளிடையே இணையவெளிப் போர் முறைமை தொடர்பாகப் போட்டிகள் அதிகரிக்கும். ஒரு நாட்டின் கணனித் தொகுதிகளை ஊடுருவி அவற்றைச் செயலிழக்கச் செய்வது இணையவெளிப் போர் எனப்படும். இணையவெளியில் ஊடுருவித் தாக்குதல்களுக்கும் அப்படிப்பட்ட தாக்குதல்களுக்கும் எதிரான செலவுகளை பல நாடுகள் 2016இல் அதிகரிக்கும்.

இரசியா
இரசியா தனது உலக ஆதிக்கத்தை மீள் நிலை நிறுத்தும் முயற்ச்சியை 2016இலும் தொடரும். ஆனால் மேலும் பல பொருளாதாரப் பின்னடைவுகளை இரசியா 2016இல் சந்திக்க வேண்டிவரும். இது பல உள்நாட்டுக் குழப்பங்களை இரசியாவில் தோற்றுவிக்கும். வேலை நிறுத்தங்கள் பல நடக்கலாம். அவற்றிற்கு எதிராக புட்டீன் பல அடக்குமுறைகளை அவிழ்த்துவிட நிர்ப்பந்திக்கப்படுவார். இது தற்போது உச்சத்தில் இருக்கும் அவரது செல்வாக்கைப் பாதிக்கும். உக்ரேனில் இரசியா சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்து ஒரு உடன்பாட்டுக்கு வரும்.

இந்தியா நகரும்
உலக நாடுகள் பலவும் தமது பொருளாதாரங்களை வளர்ச்சிப் பாதையில் நகர்த்த முடியாமல் தவிக்கும் போது இந்தியா தனது பொருளாதாரத்தை வளரச்சிப் பாதையில் நகர்த்தும். அதை ஓடச் செய்வதற்கு ஊழல் ஒழிப்பும் சிவப்பு நாடா அறுப்பும் செய்வது இந்தியாவில் இலகுவான காரியங்களல்ல.

போக்கை மாற்றும் அமெரிக்கா
மற்ற நாட்டு விவகாரங்களிலும் பிராந்தியப் பிரச்சனைகளிலும் தனது மூக்கை அவசரப்பட்டு மூக்கை நுழைக்கும் போக்கை 2016இல் மாற்றிக் கொள்ளும். மாறாக அதனது நட்பு ஆட்சியாளர்கள் தாமாகப் பிராந்தியப் பிரச்சனையை கையாளத் தூண்டுதலும் உதவிகளும் செய்யும். இதன் மூலம் தனது பாதுகாப்புச் செலவீனக் குறைப்பைச் செய்து பொருளாதாரத்தை மேம்படுத்தும்.

வல்லாதிக்கப் போட்டி
அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் சீனாவையும் இரசியாவையும் வேறு வேறு விதமாகக் கையாளும். சீனாவிற்கு பொருளாதார விட்டுக் கொடுப்புக்களைச் செய்து பிராந்திய ஆதிக்க ரீதியில் நெருக்கடிகளைக் கொடுக்கும். ஆனால் இரசியாவிற்குப் பிராந்திய ரீதியில் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்து பொருளாதார ரீதியில் பல நெருக்கடிகளைக் கொடுக்கும். சீனாவின் பொருளாதார வளர்ச்சியும் அதன் பொருளாதாரச் சீர்திருத்தமும் மேற்கு நாடுகளின் பொருளாதாரத்திற்கு அவசியமானவையாக இருக்கும். இரசியாவைப் பொருளாதார ரீதியில் சின்னா பின்னப் படுத்தி விட்டால் பின்னர் அதன் பிராந்திய ஆதிக்கத்தை இலகுவாகக் கட்டுப்படுத்தலாம்
.
2016-ம் ஆண்டு வரலாற்று படைக்கக் கூடிய அளவிற்கு தகராறுகளைத் தீர்க்காது..

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...