முதலாளித்துவப் பொருளாதாரம் போல் சரிவு (recession) மீட்சி (recovery) என்ற சுழற்ச்சிக்குள் அகப்படாமல் சீனா ஆட்சியாளர்கள் கால் நூற்றாண்டுகளாக சீனாவின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தி தொடர் வளர்ச்சிப் பாதையில் இன்றுவரை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். 2016இலும் சீனப் பொருளாதாரம் ஐந்துக்கு மேற்பட்ட மொத்தத் தேசிய உற்பத்தி அதிகரிப்பைப் பெறும்.
சீனாவின் இரு பங்குச் சந்தைகள்
2016-ம் ஆண்டின் முதல் வாரத்தில் சீனப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி உலகை உலுப்பியது. சீனாவின் பொருளாதாரத்தைப் பற்றி கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன. 2015-ம் ஆண்டின் நடுப்பகுதியிலும் சீனப் பங்குச் சந்தை வீழ்ச்சியைச் சந்தித்த போதும் எதிர்மறையான கருத்துக்கள் பல சீன பொருளாதாரத்திற்கு எதிராக முன்வைக்கப் பட்டன. சீனா இரு பொருளாதாரக் கட்டமைப்புக்களைக் கொண்டது. ஒன்று பிரதான சீனாவிலும் மாற்றது ஹொங்கொங்க் தீவிலும் இருக்கின்றன. அதே போல் ஏ-பங்குகள் என்றும் பி-பங்குகள் என இருவகையான பங்குகள் இருக்கின்றன. ஏ-பங்குகள் உள்நாட்டு நாணயத்திலும் பி-பங்குகள் அமெரிக்க டொலரிலும் விற்று வாங்கப்படும். ஹொங்கொங்இலும் பிரதான சீனாவில் உள்ள ஷென்ஜென் நகரிலும் இரு பங்குச் சந்தைகள் உள்ளன. சீன நாணயத்திற்கும் இரு முகங்கள் உள்ளன. ஒரு முகம் ஹொங்கொங்கிலும் மறுமுகம் பிரதான சீனாவிலும் இருக்கின்றன. இரு இடங்களிலும் சீன நாணயத்தின் பெறுமதி வேறுபட்டதாக இருக்கும்
சீனா சந்தைக்குச் சென்ற நீண்ட பாதை
சீனாவின் அரச முதலாளித்துவப் பொருளாதாரத்தை சந்தைப் பொருளாதாரமாக மாற்ற எடுக்கும் முயற்ச்சி பல சவால்களைச் சந்திக்கின்றது. 1978-ம் ஆண்டு சீனப் பொருளாதாரத்தை திட்டமிடுதலையும் கட்டுப்படுத்தலையும் சீன ஆட்சியாளர்கள் தளர்த்தத் தொடங்கினர். சீனப் பொருளாதாரத்தின் செயற்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் இம் முயற்ச்சி தொடங்கப் பட்டது. ஜப்பான், தென் கொரியா, தாய்வான், சிங்கப்பூர், ஹொங்கொங் ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைப் பார்த்து சீனா கற்றுக்கொள்ள அப்போது விரும்பியது.1979இல் வெளிநாட்டு முதலீடுகள் அனுமதிக்கப்பட்டு 1980இல் சீனா பன்னாட்டு நாணய நிதியத்திலும் உலக வங்கியிலும் இணைந்து கொண்டது. அத்துடன் சீனாவில் பல சிறப்புப் பொருளாதார வலயங்கள் வெளிநாட்டு முதலீடுகளுக்கு வசதியாக உருவாக்கப் பட்டன. 1981இல் சீன விவசாயிகள் இலாபமீட்ட அனுமதிக்கப் பட்டனர். 1982இல் சீனப் பொருளாதாரத்தைச் சந்தைப் பொருளாதாரமாக மாற்றும் ஐந்தாண்டுத் திட்டம் உருவாக்கப்பட்டது. 1984இல் சீனக் கரையோர நகரங்கள் பதின்நான்கு சிவப்பு நாடா இல்லாமலும் வரிவிலக்கு உரித்துடையவையாகவும் ஆக்கப்பட்டு வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு திறந்து விடப்பட்டன. 1986 சந்தைப் பொருளாதாரத்திற்கு உரிய சட்டங்கள் இயற்றப்பட்டன. சீனப் பொதுவுடமைக் கட்சியின் 13வது மாநாட்டில் அரச துறைக்கு மாற்றீடாகத் தனியார் துறை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து சீன நாணயத்தின் அதிகரித்த பெறுமதியை உணர்ந்து கரையோர அபிவிருத்தி உபாயங்கள் வகுக்கப் பட்டன. 1988இல் தனியுடமை, பங்குடமை, வரையறுக்கப்பட்ட பொறுப்புடை பங்காண்மை ஆகியவற்றை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டது. பின்னர் 1990இல் ஷங்காய், ஷென்ஜென் ஆகிய நகரங்களின் பங்குச் சந்தைகள் திறக்கப்பட்டன. 1992இல் சமுகவுடமைச் சந்தைப் பொருளாதாரம் என்பது சீனப் பொருளாதாரத்தின் சீர்திருத்த இலக்காக பதின்நான்காவது பொதுவுடமைக் கட்சியின் மாநாட்டில் முடிவு செய்யப் பட்டது. அதைத் தொடர்ந்து வங்கிச் சீர்திருத்தம் செய்யப்பட்டது. 1997இல் ஆசியாவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி சீனாவைச் சிறிதளவே பாதித்தது. 1994இல் சீன நாணயம் முகாமைப்படுத்தப்பட்டு நாணயச் சந்தையில் மிதக்க விடப்பட்டது (a market-based, but managed floating exchange rate system). அத்துடன் முழுச் சீனாவிலும் வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கப்பட்டது. 1997இல் சீனாவின் உள்நாட்டுக் கொள்வனவை அதிகரிப்பதின் முக்கியத்துவம் உணரப்பட்டது. 1999இல் ஐக்கிய அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டு சீனா உலக வர்த்தக நிறுவனத்தில் இணைந்து கொண்டது. 2001-ம் ஆண்டு சீன மக்கள் பி-பங்குகளில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சீனாவில் விலைக் கட்டுப்பாடு அகற்றப்பட்டது. விவசாய ஏற்றுமதிக்கான உதவிகள் நீக்கப்பட்டன. 2003-இல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சீனாவின் ஏ-பங்குகள் வாங்க அனுமதிக்கப்பட்டனர்.
சீனாவும் உலக வர்த்தகமும்
1977இல் உலக வர்த்தகத்தில் சீனாவின் பங்கு ஒரு விழுக்காடு மட்டுமே. சீனா தனது பொருளாதாரத்தை சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தியதால் உலக வர்த்தகத்தில் அது அமெரிக்காவையும் மிஞ்சி முதலாம் இடத்தில் இருக்கின்றது. தற்போது சீனா ஒரு சந்தைப் பொருளாதார நாடுமல்ல முழுமையான அரச கட்டுப்பாடுடைய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுமல்ல. இரண்டுக்கும் இடையில் தடுமாறி நிற்கின்றது. இது ஓர் ஆபத்தான இரண்டும் கெட்டான் நிலை. இதை எக்கொனொமிஸ்ற் சஞ்சிகை இப்படிச் சொல்கின்றது:
Yet China is not normal. It is caught in a dangerous no-man’s-land between the market and state control. And the yuan is the prime example of what a perilous place this is. After a series of mini-steps towards liberalisation, China has a semi-fixed currency and semi-porous capital controls. Partly because a stronger dollar has been dragging up the yuan, the People’s Bank of China (PBOC) has tried to abandon its loose peg against the greenback since August; but it is still targeting a basket of currencies. A gradual loosening of capital controls means savers have plenty of ways to get their money out.
உடைக்கப்பட்ட மடை
கடந்த ஆறுமாதமாக சீனாவில் இருந்து வெளியேறும் மொத்த மூலதனத்தின் விகிதம் ஆண்டு ஒன்றிற்கு ஒரு ரில்லியன்கள் என்ற நிலையை எட்டியுள்ளது. சீன நாணயத்தின் பெறுமதி குறையப் போகின்றது என்ற எதிர்பார்ப்புடம் சீனாவில் இருந்து ஒரு புறம் நிதி சீனாவில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்க மறுபுறம் சீனப் பங்குகள் விலை வீழ்ச்சியடையப் போகின்றது என்ற அச்சத்தில் நிதி சீனாவில் இருந்து வெளியேறுகின்றது. இது சீன நாணயத்தின் பெறுமதியை பெரிதும் பாதிக்கின்றது. 2015-ம் ஆண்டு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதியிலும் பார்க்க 595பில்லியன் டொலர்கள் அதிகமானதாகும். சீனப் பொருளாதாரம் வலுவிழந்ததால் அதன் இறக்குமதி பெரு வீழ்ச்சியை அடைந்துள்ளது. சீனாவில் இருந்து முதலீடு மடைதிறந்த வெள்ளம் போல் வெளியேறுகின்றது. சீன மக்கள் சீனாவின் பொருளாதாரத்தின் மீது நம்பிக்கையை இழக்கின்றனர். சீனப் பொருளாதாரம் ஆபத்திற்கு உள்ளாகியுள்ளது அல்லது சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது. பெரிய ஆபத்தா அல்லது சாதாரண சிக்கலா எனச் சொல்ல முடியாமல் இருக்கின்றது. காரணம் சீனாவின் புள்ளி விபரங்கள் நம்பகத் தன்மை வாய்ந்தவை அல்ல. சீனாவின் நாணயத்தின் பெறுமதி குறையப் போகின்றது என்றோ அல்லது சீனப் பங்குகள் விலை வீழ்ச்சி அடையப் போகின்றன என்றோ முதலீட்டாளர்கள் கருதினால் அவர்கள் சீனாவில் உள்ள முதலீட்டை விற்றுவிட்டு வெளியேறுவார்கள். இது சீனாவின் நாணயத்தின் பெறுமதியையும் பங்குகளின் விலைகளையும் மேலும் வீழ்ச்சியடையச் செய்யும்.
கலங்கிய சீனப் பங்குச் சந்தை
சீனாவின் கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டி தொடர்ந்து குறைந்து கொண்டு போனதால் சீனப் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடையத் தொடங்கின. 2016 ஜனவரி 7-ம் திகதி ஷாங்காய் பங்குச் சுட்டி 11.7 விழுக்காட்டும், ஷென்ஜென் பங்குச் சுட்டி15.2 விழுக்காடும் வீழ்ச்சியடைந்து 1.1ரில்லியன் டொலர்கள் பெறுமதியான் சொத்து இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் இரண்டு சுட்டிகளும் முறையே 2விழுக்காடும் 1.1 விழுக்காடும் அதிகரித்தன. இந்த அதிகரிப்புக் காரணம் சீன அரசின் தலையீடே. ஜனவரி 13-ம் திகதி சீனாவின் வர்த்தகம் தொடர்பான் சாதகமான புள்ளிவிபரங்கள் வெளிவந்த போதும் அது பங்குச் சந்தையில் சாதகமான நிலையை உருவாக்கவில்லை.
சீனாவின் கடன்பளு: பயன்தராப்புள்ளியிலா(Point of no retrun)
சீனாவின் கடன்பளு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியில் 280விழுக்காடாக இருக்கின்றது. சீன அரசு பொருளாதாரத்தைத் தூண்டுவதற்கு அதிகரிக்கும் பணப்புழக்கம் ஏற்கனவே வாங்கிய கடன்களை அடைக்கவே பெரிதும் பாவிக்கப் படுகின்றது. பணப்புழக்கத்தை அதிகரிக்கப் பொருளாதாரத்தினுள் செலுத்தப் படும் நிதி முழுவதும் கடன்களை அடைக்கப் பயன்படுத்தப்படும் போது அது பொருளாதார உற்பத்தியை அதிகரிக்காத நிலையை எட்டும். கடந்த பத்து ஆண்டுகளாக சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் சீனாவின் உள்கட்டுமானங்களில் செய்யப் பட்ட முதலீடுகள் அரைப்பங்காக இருந்தன. சீனாவின் பொருளாதார வளர்ச்சி சீனாவை ஒரு மலிவான தொழிலாளர்களைக் கொண்ட நாடு என்ற நிலையில் இருந்து நீக்கி விட்டது. பங்களாதேசம், வியட்னாம் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவில் தொழிலாளர் ஊதியம் அதிகமானதாகும். இது சீனாவின் ஏற்றுமதியைப் பாதித்துக் கொண்டிருக்கின்றது.
சுதந்திரமான சந்தைப் பொருளாதாரம்
சீனா சந்தையை அரச தலையீடு இல்லாமல் சுதந்திரமாக இயங்க விடவேண்டும் என்ற கருத்து இப்போது பரவலாக முனவைக்கப் படுகின்றது. சுதந்திரமான சந்தைப் பொருளாதாரம் என ஒன்று இருந்ததுமில்லை! இருக்கப் போவதுமில்லை! அமெரிக்கா உட்பட எல்லா சந்தைப் பொருளாதார நாடுகளும் சந்தையில் தலையிடுவதுண்டு ஆனால் சீனா சந்தையில் சண்டித்தனம் விடுகின்றது. தான் நினைத்தபடி சந்தையில் எல்லாம் நடக்க வேண்டும் என நினைக்கின்றது. பங்குச் சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்படும் போது வட்டி விழுக்காட்டை குறைப்பதும் வங்கிகள் நடுவண் வங்கிகளில் வைத்திருக்க வேண்டிய வைப்பீட்டைக் குறைப்பதும்தான் பொதுவான நடவடிக்கைகள். ஆனால் சீனா பல தடவை வட்டி விழுக்காட்டைக் குறைத்ததும் வைப்பீட்டுக் கோரிக்கையைக் குறைத்ததும் பங்குச் சந்தையில் விலை வீழ்ச்சியைத் தடுக்கவில்லை. இதனால் சீனா சண்டித்தன நடவடிக்கைகளில் இறங்கியது.
சீனாவின் சண்டித்தனங்கள்
1. சீனாவின் சண்டித்தனம்-பெரு நிறுவனங்களுக்குத் தடை
சீனாவின் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைவதைத் தடுக்க சீனப் பெரு நிறுவன்ங்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடாமல் சீன அரசு தடை விதித்தது.
2. சீனாவின் சண்டித்தனம்-புதிய பங்கு விற்பனைத் தடை
சீன அரச நிறுவனங்கள் புதிதாக பங்கு விற்பனை செய்வது இடை நிறுத்தப்பட்டது. ஜூலை
3. சீனாவின் சண்டித்தனம் - சுற்று முறிப்பு
சீனாவின் பங்குச் சந்தையில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவதைத் தடுக்க சீனா ஒரு சுற்று முறிப்பை (Circuit Breaker)அறிமுகப் படுத்தியது. அதன் படி சீனப் பங்குகளின் விலைகள் 5 விழுக்காடு விழுந்தால் பங்குகளை விற்கவோ வாங்கவோ முடியாதபடி பங்குச் சந்தை தற்காலிகமாக மூடப்படும்.இந்த சுற்று முறிப்பை 2016 ஜனவரி 4-ம் திகதி சீனா அறிமுகம் செய்தது. ஆனால் நான்கு விழுக்காடு விலை வீழ்ச்சி வந்தவுடன் சந்தை மூடப் படப்போகின்றது என உணர்ந்த முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்கத் தொடங்கி விட்டார்கள். இதனால் பங்குகளின் விலைகள் மேலும் துரிதமாகச் சரியத் தொடங்கியது. இதனால் சுற்று திரும்பப் பெறப்பட்டது.
4. சீனாவின் சண்டித்தனம்- குறுகியகால விற்பனைத் தடை
குறுகிய கால விற்றல் (short selling) தடை செய்யப்பட்டு அதை மீறுபவர்கள் கைது செய்யப்படலாம் என மிரட்டல் சீன அரசால் விடுக்கப்பட்டது. short selling என்பது பங்குளை வாங்க முன்னரே விற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வது. ஆனால் சீன ஆட்சியாளர்கள் சீனப் பங்குகளின் விலை அளவுக்கு மிஞ்சி மிகைப்படுத்தப் பட்டிருந்தன என்பதை உணரவில்லை.
சீனா ஆட்டம் காணலாம் கவிழாது
அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் பங்குச் சந்தை வர்த்தகம் அவற்றின் மொத்தத் தேசிய உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் நூறு விழுக்காட்டிற்கும் அதிகமாக நடக்கும். ஆனால் சீனாவில் நடக்கும் பங்கு வர்த்தகம் சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தியின் மூன்றில் முப்பது விழுக்காடு மட்டுமே. இதனால் சீனப் பங்குச் சந்தைச் சுட்டெண் சீனப் பொருளாதார வளர்ச்சியின் சுட்டியாகக் கருத முடியாது. சீனா பல நெருக்கடிகளைச் சந்திக்கின்றது. அது சோவியத் ஒன்றியம் போல் கவிழப்போவதில்லை. ஜப்பானைப் போல் ஒரு தொடர் பொருளாதார மந்த நிலையையும் அடையப் போவதில்லை. அதன் பொருளாதார வளர்ச்சியின் வேகம் தொடர்ந்து குறைந்து கொண்டே போகும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment