ஐரோப்பிய இசைவுறுதி முன்னெடுப்பு (European Reassurance Initiative) என்னும் பெயரில் ஐரோப்பாவில் உள்ள படையினரையும் தாங்கிகளையும் பீரங்கிப் படையையும் அதிகரிக்கும் திட்டத்தை ஐக்கிய அமெரிக்கா நிறைவேற்றவிருக்கின்றது. இதற்காக 2016-ம் ஆண்டு ஒதுக்கிய 760மில்லியன் டொலர்கள் 2017-ம் ஆண்டு 3.4பில்லியன் டொலர்களாக அதிகரிக்கப் படவுள்ளது. இதே வேளை அட்லாண்டிக் மாகடலில் இரசியாவின் நீர் மூழ்கிக் கப்பல்களின் நடவடிக்கைகள் பனிப்போர்க் காலத்தில் இருந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என நேட்டோவின் கடற்படைத் தளபதி Vice Admiral Clive Johnstone தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவும் இரசியாவும் ஒன்றின் படைவலு அதிகரிப்பிற்கு ஏற்ப மற்றது தன் படைவலுவை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கான செலவை அமெரிக்கா நான்கு மடங்காக உயர்த்தி இருப்பது புட்டீனின் இரசியாவை இட்டு அமெரிக்கப்பாதுகாப்புத் துறை அதிக கரிசனை கொண்டுள்ளது என்பதை எடுத்துக் கட்டுகின்றது.
உடையும் என்பார் உடையாது
ஐக்கிய அமெரிக்கா இரசியாவில் குழப்பத்தை ஏற்படுத்தி சோவியத் ஒன்றியத்தை உடையச் செய்தது போல் இரசிய கூட்டகத்தை(Russian Federation) சிதைக்க முயற்ச்சி செய்கின்றது என இரசிய வெளியுறவுத்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். இரசியாவைத் தமதாக்கி இரசியவின் வளங்களைத் தமதாக்கும் முயற்ச்சியில் அமெரிக்கா முயல்கின்றது எனவும் அவர்கள் சொல்கின்றனர். ஆனால் இதற்குப் பதிலளித்த அமெரிக்க அரசியல் விமர்சகர்கள் இரசியாவை சிதைக்க அமெரிக்கா முயற்ச்சி செய்யத் தேவையில்லை. விளடிமீர் புட்டீன் அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் எனத் தெரிவிக்கின்றனர்.
புட்டீனின் இரசியாவில் சவால்கள்
புட்டீன் தலைமையில் உலக அரங்கில் மீள எழுச்சியுற முயலும் இரசியாவிற்கு உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்துவதற்கான போதிய படைகள், படைத்துறைத் தொழில் நுட்பம், மக்கள் ஆதரவு போன்றவை இருக்கின்றது. இரசியாவின் மீள் எழுச்சிக்குப் பெரும் தடையாக இருப்பது அதன் பொருளாதாரமாகும். இரசியப் பொருளாதாரம் பெரிதும் எரிபொருள் ஏற்றுமதியில் தங்கியுள்ளது. இரசியாவின் 2015-ம் ஆண்டிற்கான பாதீடு மசகு எண்ணெய் விலை 100 அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வகுக்கப் பட்டது. ஆனால் 2015இல் அது ஐம்பது அமெரிக்க டொலர்களுக்கும் கீழாகக் குறைந்தது. 2016-ம் ஆண்டிற்கான வரவு செலவு த்திட்டம் மசகு எண்ணெயின் விலை உலகச் சந்தையில் 50 டொலர்களாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வரையப் பட்டது. ஆனால் எரிபொருள் விலை முப்பது டொலர்களாகக் குறைந்துள்ளது. உலக வங்கி 2016இல் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் சராசரியாக 37 டொலர்களாக இருக்கும் என எதிர்வு கூறியுள்ளது. சில ஆய்வாளர்கள் விலை இருபது டொலர்களிலும் குறையலாம் என எதிர்பார்க்கின்றனர். கடந்த 18 மாதங்களில் 70 விழுக்காடு வீழ்ச்சியடைந்த எரிபொருள் விலை வீழ்ச்சி இரசியப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. 2016-ம் ஆண்டிற்கான பாதீட்டை மீள் பரிசீலனை செய்யப்படலாம் என இரசியத் தலைமை அமைச்சர் Dmitry Medvedev தெரிவித்துள்ளார்.
பட்டினியால் வாடாத இரசியார்கள்
2015-ம் ஆண்டு இரசியப் பொருளாதாரத்தின் மொத்தத் தேசிய உற்பத்தி 4 விழுக்காட்டால் சுருங்கியது. பணவீக்கம் 13 விழுக்காடாக இருந்தது. இரசிய நாணயமான ரூபிளின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராக அரைப்பங்கு வீழ்ச்சியடைந்தது. இரசியர்களின் சராசரி வருமானம் பத்து விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் உணவு விலைகள் 14 வீழுக்காடு அதிகரித்துள்ளது. வறுமைக் கோட்டின் கீழ் மக்களின் எண்ணிக்கை 6 விழுக்காட்டில் இருந்து 23 விழுக்காடாக 2015-ம் ஆண்டு உயர்ந்துள்ளது. Sergey Shelin என்னும் சுதந்திர பொருளாதார ஆய்வு நிறுவனம் இரசிய மக்கள் பட்டினியால் வாடவில்லை ஆனால் சாப்பாட்டிற்கு சிரமப் படுவோர் தொகை அதிகரித்துள்ளது, மக்கள் தரம் குறைந்த உணவை உண்கின்றார்கள் என்கின்றது. 2015-ம் ஆண்டு மகிழுந்துகளின் விற்பனை 35விழுக்காட்டால் குறைந்துள்ளது. இந்த நிலைமைகளால் இரசியாவின் அமைச்சர்கள் அதிக கலவரமடைந்துள்ளனர். 20018-ம் ஆண்டுவரை இரசியாவின் பொருளாதாரப் பிரச்சனைகள் தொடரும் என இரசியத் தலைமை அமைச்சரைத் தலைவராகக் கொண்ட சமகால அபிவிருத்திக்கான நிலையம் தெரிவித்துள்ளது. 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் தேர்தலைச் சந்திக்க வேண்டும்.
களம் பல கண்ட இரசியா
1998-ம் ஆண்டு இரசியா பெரும் கடன் நெருக்கடியைச் சந்தித்து தன் கடன் நிலுவைகளைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. 2008-ம் ஆண்டு எரிபொருள் விலை வீழ்ச்சியின் போதும் இரசியா நிதிநெருக்கடியைச் சந்தித்தது. 2012-ம் ஆண்டில் இருந்தே இரசியப் பொருளாதாரம் பிழையான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கிவிட்டது. இரசிய அரபு சார்பு ஊடகங்கள் இரசியாவில் பிரச்சனை உண்டு ஆனால் நாம் கலவரமடையவில்லை எனப்பரப்புரை செய்கின்றன. இரசிய அரசு சார்பு ஊடகங்கள் இரசியாவின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு எரிப்பொருள் வீழ்ச்சி மட்டும் காரணம் பொருளாதாரத் தடைகள் அல்ல எனவும் பரப்புரை செய்கின்றன.
ஒரு மூலம் போதாது
எரிபொருள் விலை வீழ்ச்சி மட்டுமல்ல உக்ரேன் விவகாரத்தைத் தொடர்ந்து மேற்கு நாடுகள் இரசியாவிற்கு எதிராகக் கொண்டு வந்த பொருளாதாரத் தடைகள் மட்டுமல்ல இரசியாவின் பொருளாதாரத்திற்கு எனச் சில அடிப்படை வலுமின்மைகள் உண்டு. கடந்த 15 ஆண்டுகளாக இரசியாவைத் தலைமை அமைச்சராகவும் அதிபராகவும் தனது பிடிக்குள் வைத்திருக்கும் விளடிமீர் புட்டீன் இரசியப் பொருளாதாரம் எரிபொருள் ஏற்றுமதில் பெரிதும் தங்கி இருக்கும் நிலையை மாற்ற ஏதும் செய்யவில்லை என மேற்குலக ஆய்வாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
படைக்கு முந்து
இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் ஆதரவுத்தளமான படைத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய தர வர்க்கத்தினரிடமிருந்து அதிக வரி அறவிடப்படுவதான குற்றச் சாட்டு முன்வைக்கப் படுகின்றது. இரசியப் பொருளாதாரத்தைச் சீர் செய்ய விளடிமீர் புட்டீன் இரு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ஒன்று இரசியாவின் அரச உடமை நிறுவனங்களைத் தனியார் துறைக்கு விற்பனை செய்தல். விளடிமீர் புட்டீன் பதவிக்கு வரமுன்னர் இரசிய அரச நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தும் பணி நடந்து கொண்டிருந்தது. நாட்டை முதலாளித்துவ மயப் படுத்துவதை விரும்பாத புட்டீன் இதை நிறுத்தி இருந்தார். இப்போது அவரே அந்தச் செய்கையைத் தொடங்கப் போகின்றார். இரண்டாவதாக வெளிநாட்டு மூலதனங்களை இரசியாவிற்கு அழைத்துள்ளார். பொருளாதாரத் தடை உள்ள நிலையில் சீனாவால் மட்டுமே இதில் ஈடுபடமுடியும். சீனா தவிச்ச முயல் அடிப்பதில் முன்னிற்கு நிற்கும் ஒரு நாடு. புட்டீனின் நண்பர்களான இரசியப் பெருமுதலாளிகள் தமது வெளிநாட்டு முதலீடுகளை இரசியாவிற்கு கொண்டு வரலாம். அவர்களைத் திருப்திப் படுத்தக் கூடிய மலிவான விலைகளின் புட்டீன் அரச நிறுவனங்களை விற்க வேண்டியிருக்கும். புட்டீனின் தனியார் மயப் படுத்தலில் எரிபொருள் நிறுவனங்களே முன்னணியில் உள்ளன. தற்போது எரிபொருள் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்திருக்கும் வேளையில் அடிமாட்டு விலைக்கு விற்கவேண்டிய நிலை ஏற்படலாம்.
உலக அரங்கில் தனிமைப் படுத்த முடியாத இரசியா
இரசியாவின் இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 70வது ஆண்டு நினைவு நாளை மேற்கு நாடுகளின் ஆட்சித் தலைவர்கள் உக்ரேன் விவகாரத்தில் இரசியாவின் நிலைப்பாட்டிற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் முககாமப் புறக்கணித்திருந்தார்கள். சீன அதிபர் ஷி ஜின்பிங், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜி, வெனிசுவேலாவின் அதிபர் நிக்கொலஸ் மதுரோ ஆகியோர் அங்கு பங்குபற்றியவர்களில் முக்கியமானவர்கள். வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் பங்குபற்றுவதாக இருந்தது ஆனால் இறுதி நேரத்தில் அவர் மஸ்கோவின் செஞ் சதுக்கத்திற்குப் போக முடியாமல் போய்விட்டது. இந்த நிகழ்வி இரசியா உலக அரங்கில் தனிமைப்படுத்த முடியாத ஒரு வல்லரசு என்பதை எடுத்துக் காட்டியது. ஜேர்மனிய அதிபர் அஞ்சேலா மேர்கெல் 2016 பெப்ரவரி 2-ம் திகதி புட்டீனுடன் உக்ரேன் விவகாரம் தொடர்பாக தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அசைக்க முடியாத புட்டீனின் செல்வாக்கு
இரசியா பல பொருளாதாரப் பின்னடைவுகளைச் சந்தித்த போதும் மக்கள் மத்தியில் அதிபர் விளடிமீர் புட்டீனின் செல்வாக்கு உறுதியாகவே இருக்கின்றது. புட்டீனுக்கு 80 விழுக்காட்டிற்கு மேற்பட்ட மக்களின் ஆதரவு இருப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புள்ளி விபரங்கள் புட்டீனால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களால் திரட்டப்பட்டவை அவற்றி நம்ப முடியாது என மேற்கு நாடுகளின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. புட்டீன் கொலை செய்வதற்கான அனுமதிப் பத்திரம் பெற்ற ஒருவர். அவரைப் பற்றி விமர்சிப்பவர்கள் கொல்லப்படுகின்றார்கள் எனவும் அந்த ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. அண்மைக்காலங்களில் இரசியாவில் பார ஊர்திகள் ஓட்டுபவர்கள் மட்டுமே அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்தனர்.
பொருளாதாரத்திலும் பன்னாட்டுச் சட்டத்திலும் பட்டம் பெற்ற விளடிமீர் புட்டீன் எரிபொருள் விலை இறக்கமும் இரசிய நாணயத்தில் மதிப்பு இறக்கமும் இரசியப் பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் என அடிக்கடி கூறிவருகின்றார். எரிபொருள் விலை 50 விழுக்காடு வீழ்ச்சியடைந்த போது இரசியாவின் ரூபிள் நாணயத்தின் பெறுமதியையும் வீழ்ச்சியடைய விட்டு ரூபிளைப் பொறுத்தவரை எரி பொருள் விலை 27 விழுக்காடு மட்டுமே வீச்சியடையச் செய்தார். இரசியாவால் தனது பிரச்சனைகளில் இருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொள்ளும் ஆற்றல் இருக்கின்றது என்பதைச் சரித்திரத்தில் பலதடவைகள் அது நிரூபித்துள்ளது. இரசியா ஒரு வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது என்ற பலரின் எதிர்பார்ப்புக்களை பிழையாக்கும் வல்லமை இரசியர்களிடம் இருக்கின்றது.
.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment