Wednesday, 6 January 2016

தென் சீனக் கடலில் சீனாவின் இன்னும் ஒரு நகர்வு

2016 ஜனவரி 4-ம் திகதி தென் சீனக் கடலில் தனது இறைமைப் பிராந்தியத்தினுள் அத்து மீறியதாக வியட்னாம் குற்றம் சாட்டியுள்ளது. Spratly தீவுக் கூட்டத்தில் உள்ள Fiery Cross என்னும் பவளப் பாறையை மேடுறுத்தி சீனா உருவாக்கிய செயற்கைத் தீவில் சீனாவின் போர் விமானம் தரையிறங்கியதையே வியட்னாம் தனது இறைமைக்குள் சீனா அத்து மீறியதாகச் சொல்கின்றது. வியட்னாம் வெளியுறவுத் துறை பேச்சாளர் லீ ஹை பின் Fiery Crossஇல் விமான ஓடுபாதை சட்ட விரோதமாக நிர்மாணிக்கப் பட்டதாகத் தெரிவித்தார்.

சீன வெளியுறவுத் துறை அமைச்சர் சீனாவின் இறையாண்மைக்குள் புதிதாக நிர்மாணிக்கப் பட்ட தீவுக்குள்தான் தமது விமானம் பரீட்சார்த்தமாக தரையிறக்கப் பட்டதாகத் தெரிவித்தார் என சீனச் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா அறிவித்துள்ளது. தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ், வியட்னாம், மலேசியா, புரூனே,  போன்ற நாடுகள் தமது கடல் எல்லைகள் தொடர்பாக சீனாவுடன் முரண்படுகின்றன.

சீனா தென் சீனக் கடலில் உருவாக்கும் தீவுகளை செய்மதிகள் மூலம் எடுத்த படங்களில் இருந்து அங்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள், சிறப்புப் படைகளுக்கு எதிரான நடவடிக்கை நிலையங்கள், ரடார் எனப்படும் கதுவிக் கோபுரங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், பாரிய கப்பல்களுக்கான துறைமுகங்கள் உருவாக்கும் வாய்ப்புக்கள் இருப்பதாகக் கருதப் படுகின்றது.

தென் சீனக் கடலில் சீனாவின் நிலைப்பாட்டை அமெரிக்காவும் எதிர்க்கின்றது. சீனா பன்னாட்டுக் கட்ற்பரப்பில் சுந்திரக் கடற்போக்கு வரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தீவுகளைச் செயற்கையாக உருவாக்குவதாக அமெரிக்கா சொல்கின்றது. சீனாவின் தீவுகளுக்கு சவால் விடும் வகையில் அதன் மேலாகத் தனது போர் விமானங்களைப் பறக்க விட்டதுடன் தன் நாசகாரிக் கப்பலையும் அதற்கு அண்மையாகக் கொண்டு சென்றது. அமெரிக்கப் வெளியுறவுத் துறைச் செயலர்அஸ்டன் கார்ட்டர் ஒரு போர் உருவாகக் கூடிய அபாயம் தென் சீனக்  கடலில் உள்ளது என்றார். அமெரிக்காவின் அணுவலுவில் இயங்கும் Nimitz வகையைச் சேர்ந்த பெரிய விமானம் தாங்கிக் கப்பலான USS Ronald Reagan, வழிகாட்டு ஏவுகணைகள் தாங்கி நாசகாரிக் கப்பல்கள், குண்டு வீச்சு விமானங்கள் போன்றவை தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் சேவையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.


எரிபொருள் பெருமளவில் இருக்கின்றது என நம்பப்படும் தென் சீனக் கடலில் 2,740,000 சதுர மீட்டர் கடற்பரப்பை சீனா தனதாக்க முயல்கின்றது. ஆண்டு ஒன்றிற்கு நான்கு ரில்லியன் டொலர்கள் பெறுமதியான வர்த்தகம் தென் சீனக் கடலின் ஊடாக நடக்கின்றது. சீனா Fiery Crossஇல் உருவாக்கிய செயற்கைத் தீ்வு 3000மிட்டர் அல்லது இரண்டு மைல் நீளமானது. இதில் பெரிய போர் விமானம் தரையிறங்க முடியும். இதனால் இந்தச் செயற்கைத் தீ்வு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த்ததாக உள்ளது.

தென் சீனக் கடலின் முக்கியத்துவத்திற்கு இரு பெரும் காரணங்கள் உள்ளன.  முதலாவது கடற்போக்கு வரத்து முக்கியத்துவம். இரண்டாவது எரிபொருள் மற்றும் கனிம வள இருப்பு. உலகக்கடற்போக்கு வரத்தில் 30 விழுக்காடு தென் சீனக் கடலினூடாகச் செல்கின்றது. தென் சீனக்கடலில் 213 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. எரிவாயு 900 ரில்லியன் கன அடி இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான கனிம வளங்களும் கடலுணவு வளங்களும் உண்டு. 1974இலும் 1988இலும் சீனாவும் வியட்னாமும் ஸ்பிரட்லிதீவுகளுக்காக மோதிக் கொண்டன. பிலிப்பைன்ஸ் வியட்னாமுடனும் மலேசியாவுடனும் மோதக் கூடிய நிலைமைகளும் ஏற்பட்டிருந்தன.

சீனாவின் இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பல் உருவாக்கியதும், ஆபிரிக்காவில் ஒரு கடற்படைத் தளம் அமைத்ததும், ஆறு குண்டு வீச்சு விமானங்களை பசுபிக் பிராந்தியத்தில் பறக்க விட்டமையும் சீனா தனது பிராந்திய ஆதிக்கத்தில் அதிக கவனம் செலுத்துகின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...