Tuesday 19 January 2016

ஈரான் மீதான பொருளாதாரத் தடை நீக்கலின் விளைவுகள்

எண்பது மில்லியன் கல்வியறிவு மிக்க மக்களைக் கொண்ட நாடாகிய ஈரானின் சரித்திரப் பெருமை தனித்துவமானது. அதன் எண்ணெய் வளமும் எரிவாயு வளமும் அபரிமிதமானது. அதன் புவிசார் இருப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.மேற்கு நாடுகள் ஈரானுக்கு எதிராக விதித்த பொருளாதாரத் தடை முடிவிற்கு வந்துள்ளது. ஈரான் “preparing for takeoff.” என ஈரானியர்கள் தெரிவிக்கின்றனர். உலகின் 18வது பெரிய பொருளாதாரம் உலக வர்த்தகத்தில் தடையின்றி ஈடுபடக் கூடிய நிலையை எட்டியுள்ளமை உலகப் பொருளாதாரத்திற்கு உகந்த ஒன்றே. ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானி ஈரான் மீதான பொருளாதாரத்  தடை நிக்கப்பட்ட 2016 ஜனவரி 16-ம் திகதி ஈரானிய வரலாற்று ஏட்டின் பொன்னான பக்கம் என்றார்.

இறக்கை நறுக்கப்பட்ட ஈரான்
யூரேனியப் பதப்படுத்தும் குழாய்களான centrifuges ஈரானிடம் 19,000 இருந்தன. அது இப்போது 6104ஆகக் குறைக்கப் பட்டுள்ளது.  ஈரானிடம் நவீன centrifuges ஆயிரம் இருந்தன அவை இப்போது இல்லாமற் செய்யப் பட்டுள்ளன.  தாழ்-நிலையில் பதப்படுத்தப் பட்ட யூரேனியம் ஈரானிடம் 19,000இறாத்தல்கள் இருந்தன. அவை இப்போது 660 இறாத்தல்கள் ஆகக் குறைக்கப் பட்டுள்ளன. ஈரான் புளூட்டோனியத்தைப் பாவித்து அணுக்குண்டு தயாரிக்க முடியாதபடி செய்யப்பட்டுள்ளது. ஈரான் பதப்படுத்திய 8.5 தொன் யூரேனியம் இரசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஈரான் முழுமையான ஊடுருவல் கண்காணிப்புக்கு  (the most comprehensive, intrusive inspectio) உட்படுத்தப் பட்டுள்ளது என்றார்.

அமெரிக்க ஈரானிய உறவில் மாற்றம்
1979-ம் ஆண்டு ஈரானில் அமெரிக்க சார்பு மன்னர் ஷாவிற்கு எதிராக நடாந்த மதவாதப் புரட்சிக்குப் பின்னர் அமெரிக்க ஈரானிய உறவு ஒரளவிற்கு சீரடைந்துள்ளது. இதற்கு எடுத்துக் காட்டாக ஈரான் கைது செய்த இரண்டு அமெரிக்கக் கடற்படை வீரர்கள் எதிர்பார்த்ததிலும் பார்க்க துரிதமாகவும் (24 மணித்தியாலத்தினுள்) சுமூகமாகவும் விடுவிக்கப் பட்டுள்ளனர். அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஜோன் கெரியும் அமெரிக்காவில் படித்த ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் மொஹமட் ஜவார் ஜரிஃப்பும் தேவைப்படும் போதெல்லாம் ஒருவருடன் ஒருவர் தொலைபேசியீல் உரையாடுகின்றனர். அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையில் 1981-ம் ஆண்டில் இருந்து வந்த நிதிப் பிணக்குத் தீர்க்கப்பட்டுள்ளது.

ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானி(Hassan Rouhani)
ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானி 2013-ம் ஈரானின் மீதான பொருளாதாரத் தடையை நீக்குவேன் என்ற உறுதி மொழியுடன் தேர்தலில் போட்டியிட்டு எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றார். ஈரானின் பல அதிகார மையங்கள் உள்ளன:
1. மக்களால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப் படும் அதிபர்
2. மக்களால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும்290 உறுப்பினர்களைக் கொண்ட பாராளமன்றம்.
3. மக்களால் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை  88 உறுப்பினர்களைக் கொண்ட அறிஞர்கள் சபை.
4. அறிஞர் சபையால் தேர்ந்தெடுக்கப்படும் உச்சத் தலைவர் - தற்போது இருப்பவர் அலி கொமெய்னி. ஆரம்பத்தில் இருந்தவர் அயத்துல்லா கொமெய்னி.தேர்தல்களில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களும் 12 உறுப்பினர்களைக் கொண்ட Guardian Council எனப்படும் காப்பாளர்கள் சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்தப் பன்னிரண்டு உறுப்பினர்களில் அறுவர் இஸ்லாமியச் சட்டத்தில் வல்லவர்களாக இருக்க வேண்டும். எஞ்சிய ஆறு பேரும் பல்வேறு சட்டத் துறைகளில் வல்லவர்களாக இருக்க வேண்டும்.   இவர்கள் பன்னிருவரையும் உச்சத் தலைவர் நியமிப்பார். அதிகாரம் மிக்க இச்சபையை நியமிக்கும் உச்சத்தலைவரே ஈரானில் அதிகாரம் மிக்கவராவார். ஈரானின் சிறப்புப் படையணியான Quds Force ஈரானில் உள்ள ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அதிகார மையமாகும். காப்பாளர் சபை உறுப்பினரை நியமிக்கும் உச்சத் தலைவர் ஈரானில் அதிகாரம் மிக்கவராவார். தற்போது உள்ள உச்சத் தலைவர் அலி கொமெய்னி  வல்லரசு நாடுகாளுடன் யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பான பேச்சு வார்த்தைக்கு உரிய அதிகாரம் வழங்கியிருந்தார்.

தேர்தலை ஒட்டிய நகர்வுகள்
ஈரானியப் பாராளமன்றத்திற்கான தேர்தல் 2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16-ம் திகதி நடக்கவிருக்கின்றது. இந்தத் தேர்தலில் அதிபர் ஹசன் ரௌஹானியைப் போலவும் அவரது கரங்களை வலுப்படுத்தும் விதத்திலும் தாராண்மைவாத உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்படுவதற்கு ஏதுவாக ஈரான் மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது. ஈரானும் தனது யூரேனியப் பதப்படுத்துதலை 2015 ஜூலை மாதம் ஈரானும் ஐந்து வல்லரசுகளும் ஜேர்மனியும் இணைந்த P-5+1 என்னும் குழுவுடன் செய்து கொண்ட உடன்பட்டிக்கையின் படி ஈரான் மாற்றியமைத்துள்ளது. உடனடியாக ஈரான் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்பட்டது. 2015 ஜூலை மாதம் உடன்படிக்கை கைச்சாத்திட்ட போது 2016 ஜூலை மாதம் உடன்படிக்கை நிறை வேற்றப்படும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் ஈரானியப் பாராளமன்றத் தேர்தலுக்கு முன்னர் அவசரமாக உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டு ஈரான் மீதான பொருளாதாரத் தடை நீக்கப் பட்டுள்ளது.ஆனால் பொருளாதாரத் தடை நீக்கப் பட்டதால் ஏற்படும் நன்மைகள் பொது மக்களைப் போய்ச் சேர பல மாதங்கள் எடுக்கும்.

ஈரான் பணத்தை என்ன செய்யும்?
ஈரானிற்குச் சொந்தமான ஐம்பது பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகளில் முடக்கி வைக்கப் பட்டிருந்தது. அவை இப்போது விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த நிதியை ஈரான் ஹிஸ்புல்லா, ஹமாஸ் போன்ற இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்குக் கொடுக்கும், சிரியாவில் பஷார் அல் அசாத்தின் ஆட்சியைப் பாதுகாக்க மேலும் உதவிகளைச் செய்யும் என சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் சொல்கின்றன. இதே கருத்தை இஸ்ரேலும் கொண்டுள்ளது.  ஈரானில் உள்ள தீவிரவாதிகளின் நோக்கம் அதுவாகத்தான் இருக்கும். ஆனால் ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானி இவர்களுடன் போராட வேண்டிய நிலையில் இருக்கின்றார். அவரது கைகளை வலுப்படுத்த சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளினதும் இஸ்ரேலினதும் ஆட்சேபனைகளுக்கு இடையில் ஈரான் மீதான பொருளாதாரத் தடை நிக்கப் பட்டுள்ளது.

முதலீடு தேடும் ஈரான்
ஈரானுக்கு தற்போது ஒரு ரில்லியன் வெளிநாட்டு முதலீடு தேவைப் படுகின்றது. அதற்கு ஓர் உறுதியான ஆட்சியும் அமைதியான சூழலும் அவசியம். ஈரானில் உள்ள தீவிரவாதப் போக்குடையவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் வெளிநாட்டு முதலீடு சாத்தியமல்ல.   அமெரிக்க நிறுவனங்கள் ஈரானில் முதலீடு செய்யத் தயக்கம் காட்டூகின்றன. ஈரான் உடனடியாக மேற்கு ஐரோப்பாவிலிருந்து114 Airbus jets வாங்கவிருக்கின்றது. பொருளாதாரத் தடை நீக்கப் பட்ட மறுநாளே ஐரோப்பிய அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் ஈரானுக்குப் படையெடுத்தனர். இரசியா தனது படைக்கலன்களை பெருமளவில் ஈரானுக்கு விற்பனை செய்யலாம். துருக்கிக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்த இரசியா அங்கு இருந்து இறக்குமதி செய்யாமல் போன பொருட்கள் பலவற்றை ஈரானில் இருந்து இறக்குமதி செய்யலாம். ஆனால் இரசியாவிற்குப் பேரிடியாக அமையப் போவது ஈரான் எரிபொருள் ஏற்றுமதி செய்யப் போவதால் ஏற்படப் போகும் எரிபொருள் விலை வீழ்ச்சியே. 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடக்க விருக்கும் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஈரானுக்கு எதிரான அல்லது இஸ்ரேல் சொற்படி ஆடும் அல்லது இரண்டும் இணைந்த ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப் பட்டால் ஈரானில் நிலைமைகள் தலைகீழாகலாம் எனச் சில முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர்.

எரியும் எரிபொருள் விலை வீழ்ச்சிக்கு ஈரானும் எண்ணெய் ஊற்றும்
ஈரான் தான் ஏற்கனவே உற்பத்தி செய்த 50 மில்லியன் பீப்பாய்கள் மசகு எண்ணெயை கடலில் கப்பல்களில் வைப்பிலிட்டுள்ளது. ஈரான் இனி நாள் ஒன்றிற்கு ஒரு மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்ய விருக்கின்றது. மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 20 டொலர்களாகக் குறைவது நிச்சயம் என்றும் பத்து டொலர்களாக வீழ்ச்சியடைவது சாத்தியம் என்றும் சொல்லப் படுகின்றது. இது  இரசியா, வெனிசுவேலா போன்ற நாடுகளை மோசமாகப் பாதிக்கப்படவிருக்கின்றன. எல்லா எரிபொருள் உற்பத்தி நாடுகளும் பாதிக்கப்படும். சீனாவிலும் இந்தியாவிலும் எரிபொருளுக்கு விதிக்கப் படும் வரிகள் அதிகரிக்கப் படும். இது அந்த நாடுகளில் பாதீட்டுப் பற்றாக் குறையை சீர் செய்ய உதவும்.

ஈரானின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அதன் மீது அமெரிக்கா செய்த பொருளாதாரத்தடைகள் தொடர்ந்தும் இருக்கும். அதே வேளை ஈரானின் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை உற்பத்தி தொடர்பாக அமெரிக்கா சில புதிய தடைகளையும் விதித்துள்ளது. ஈரானின் எதிர்கால நகர்வுத் திசையில் பெப்ரவரி மாதம் நடக்கும் தேர்தல் தீர்மானிக்கும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...