ஈரான் மீதான பொருளாதாரத்
தடைகளில் பெரும்பாலானவை நீக்கப்பட்டவுடன் ஈரானிற்கு முதலில் பயணம் மேற்கொண்ட உலகத்
தலைவர் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகும். சீனாவிற்கு ஒரு நெருங்கிய நட்பு நாடு
அவசியம் தேவை. அதன் நட்பு நாடாக வரக்கூடிய தன்மைகள் ஈரானிற்கு இருக்கின்றது. நாடுகளிடையே
நட்பு என்பது மனிதர்களிடையே உள்ள நட்பைப் போல் அல்ல. ஒன்றிற்கு ஒன்று நலன்
தரக்கூடிய வகையில் நாடுகளிடையே உள்ள தொடர்புகளையே நாடுகளிடையேயான நட்பு எனப்படும்.
ஈரானும் சீனாவும் ஒன்றின் நலன்களை ஒன்று மேம்படுத்தக் கூடிய நிலையில் இருக்கின்றன.
மேற்காசியாவிற்கும் வட ஆபிரிக்காவிற்கும் சீனாவின் நுழைவாயிலாக ஈரானைக் கருத
முடியும். ஈரானும் சவுதி அரேபியாவிற்கும் இடையில் முறுகல் நிலை மோசமாக இருந்த
நிலையில்சீன அதிபர் இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார். அந்த சூழ்நிலை
சீனாவிற்கு சாதகமாக அமைந்தது.
புவிசார் அரசியல்
ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்கள் தொகைக் கட்டமைப்பும்
பொருளாதாரமும் தொடர்பான ஆதிக்கம் புவிசார் அரசியல் எனப்படும். முதலாவது ஒரு
குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்களின் அரசியல் ஆதிக்கம் புவிசார் அரசியலில்
முக்கியத்துவம் வகிக்கின்றது. இரண்டாவது அக்குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள
பொருளாதார வளங்கள் மீதான ஆதிக்கத்தை யார் செலுத்துவது என்பது புவிசார் அரசியலில்
முக்கியத்துவம் பெறுகின்றது. மூன்றாவது ஒரு குறித்த நிலப்பரப்பில் உள்ள மக்கள், பொருளாதாரம், மற்றும் அரசு அல்லது
அரசுகள் தொடர்பாக அந்த நிலப்பரப்புடன் தொடர்புடைய அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கை
அந்த நிலப்பரப்பின் புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வகிக்கின்றது. இதையே
சுருக்கமாகச் சொல்வதானால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ளவை தொடர்பான பல் வேறு
நாடுகளின் கொள்கைகளை புவிசார் அரசியல் எனலாம். இங்கு உள்ளவை எனக் குறிப்பிட்டது
மிகவும் பரந்த பொருளுடைய ஒரு சொல்லாகும். மக்கள், மதம், கலாச்சாரம், வளம், பொருளாதாரம், படைவலு எனப் பலவற்றை இந்த
உள்ளவை என்னும் சொல் தாங்கி நிற்கின்றது. ஈரானின் உள்ள இயற்கை வளங்களும் ஈரானின்
பூகோள இருப்பும் சீனாவின் நலன்களிற்குத் தேவையானவை. சீனாவின் உட்கட்டுமான
அனுபவமும் சீனாவிடமிருக்கும் அபரிமிதமான வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பும்
ஈரானின் நலன்களுக்குத் தேவையானவை. இரு நாடுக்ளும் கை கோர்த்துக் கொண்டால்
வளைகுடாப் பிராந்தியத்தில் ஈரான் எதிரியாகக் கருதுவதும் சீனா போட்டியாளராகக்
கருதுவதுமான ஐக்கிய அமெரிக்காவைச் சமாளிக்க முடியும். ஈரானிய சீன உறவில் முக்கிய
பங்கு வகிப்பவை சீனாவின் கடல்சார் பட்டுப்பாதைத் திட்டமும் ஈரானின் மலிவான
எரிபொருளுமாகும். மேற்காசியாவில் அமெரிக்க ஆதிக்கமில்லாத ஒரே நாடு ஈரானாகும்.
ஈராக்குடனான போரின் போது ஈரானுக்கு சீனா தனது பட்டுப்புழு(silkworm) ஏவுகணைகள்
உட்படப் பல படைக்கலன்களை விற்பனை செய்தது. ஈரானிற்கு யூரேனியப் பதப்படுத்தலுக்குத் தேவையான
தொழில்நுட்பங்களையும் சீனா விற்பனைச் செய்திருந்தது.
உனக்கு நான் எனக்கு நீ
கடற்போக்குவரத்தைப் பொறுத்தவரை உலகின் ஐந்து திருகுப் புள்ளிகளில்
ஒன்றான ஹோமஸ் நீரிணை ஈரானை ஒட்டி உள்ளது. பாஹ்ரேயில் இருக்கும் அமெரிக்காவின்
ஐந்தாவது கடற்படைப் பிரிவு அந்தத் திருகுப் புள்ளியில் ஆதிக்கம் செலுத்துகின்றது.
ஈரான் அதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. சீனாவின் கடல்சார் பட்டுப் பாதைத்
திட்டத்தில் ஹோமஸ் நீரிணை முக்கியத்துவம் பெறுகின்றது. பாக்கிஸ்த்தானில் இருக்கும்
குவாடர் துறை முகம் சீனா வசமுள்ளது. அது தான் சீனாவின் முத்து மாலையில்
அந்திப்புள்ளி. அதை மேலும் நீட்சி செய்ய ஈரானின் நட்பு சீனாவிற்கு அவசியம்.
குவாடர் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய சீனா 2015-ம் ஆண்டு 46பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதியை ஒதுக்கியிருந்தது. குவாடர்
துறைமுகத்தை சீனா படைத்தளம், மேற்குச்
சீனாவிற்கான வழங்கற்பாதை முனையம்,
வர்த்தக விருத்தி ஆகியவற்றிற்குப் பயன்படுத்தலாம். குவாடர் துறை
முகம் வர்த்தக ரீதியில் வளர்ச்சியும் முக்கியத்துவமும் பெறும் போது அது ஈரானின் சபாஹர்
துறைமுகத்திற்குச் சவாலாக அமையலாம். ஈரான் - ஈராக் போரின் ஹோமஸ் நீரிணையூடான
எரிபொருள் ஏற்றுமதி தடைபட்ட போது ஈரான் சபாஹர் துறைமுகத்தையும் அதை அண்டியுள்ள
பிரதேசத்தையும் பெருமளவு அபிவிருத்தி செய்தது. 1992இல் அங்கு ஒரு சுதந்திர
வர்த்தக வலயத்தையும் உருவாக்கியது. 2002இல் அங்கு ஒரு பன்னாட்டுப் பலகலைக்கழத்தையும் உருவாக்கியது. சபஹாரில்
இருந்து இந்தியா, இரசியா, ஆப்கானிஸ்த்தான் ஆகிய
நாடுகளுக்கு போக்கு வரத்து வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தில் இந்தியாவும்
ஈரானுடன் இணைந்து செயற்பட்டது. கடற்படுக்கையூடாக சபஹாரில் இருந்து இந்தியாவிற்கு
குழாய்களூடாக எரிவாயு விநியோகத் திட்டமும் அதில் அடக்கம். ஆனால் சபாஹர் துறைமுகம்
ஈரானின் பெரிய மாகாணமான சிஸ்ரன் - பலுச்சிஸ்த்தானில் இருக்கிறது. ஈரானுடனும்
துருக்கியுடனும் சீனா உகந்த உறவைப் பேணாமல் சீனாவின் கடல்சார் பட்டுப்பாதைத்
திட்டம் உரிய வெற்றியைத் தரமாட்டாது.
நண்பனின் எதிரியும் நண்பனே
சவுதி அரேபிய அரச் குடும்பம் பொதுவுடமை வாதத்தை முழுமையாக
எதிர்க்கும் ஒரு நாடு. சமூகவுடமையையும்(சோசலிஸம்) இஸ்லாமையும் இணைத்த பாத்திஸம்
அரபுநாடுகளில் பரவுவதைக் கடுமையாக எதிர்த்த சவுதி அரேபிய அரச குடும்பம் 1990-ம் ஆண்டு
சீனாவுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. சவுதி அரேபியா அமெரிக்காவுடன் நெருங்கிய
உறவைப் பேணும் போது அந்த இரண்டு நாடுகளினதும் போட்டி நாடுகளான ஈரானும் சீனாவும்
இணைவது இயல்பானதே. ஆனால் சவுதி அரேபியாவில் இருந்து எரிபொருள் வாங்குவதை சீனா
பெரிதும் விரும்புகின்றது. அதிக அளவு எரிபொருள் இருப்பு உறுதியான ஆட்சி
ஆகியவற்றைக் கொண்ட சவுதியில் இருந்து எரிபொருள் விநியோகம் உறுதியாகவும் சீராகவும்
நடக்கும் என நம்பும் பல நாடுகளில் சீனாவும் ஒன்று. ஆனால் சீனாவின் சின்ஜீயாங் (Xinjiang) மாகாணத்தில்
வாழும் இஸ்லாமியர்களால் சீனாவிற்குப் பிரச்சனை உண்டு. அவர்கள் சுனி
இஸ்லாமியர்களாகும். அவர்களுக்கு உதவி செய்ய சவுதி அரேபியா தயங்காது என்பதும்
சீனாவிற்குப் பிரச்சனைக்கு உரியதாகும். சீனாவின் சின்ஜீயாங் (Xinjiang) மாகாணம்
சீனாவின் தரைவழியான பட்டுப்பாதையும் பொருளாதார வளையமும் (The Silk Road Economic Belt) திட்டத்தின்
ஆரம்பப் புள்ளியாகும். சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஈரானுக்கு மட்டுமால்ல சவுதி
அரேபியாவிற்கும் பயணத்தை மேற் கொண்டார். ஈரானில் 17 உடன்படிக்கைகளைக் கைச்சாத்திட்ட அவர் சவுதி
அரேபியாவில் 2016 ஜனவரி 19-ம் திகதி
14 உடன்படிக்கைகளைச்
செய்து கொண்டார். அதில் முக்கியமானது சவுதி அரேபியானின் அரம்கோ என்னும் அரசுக்குச்
சொந்தமான எரிபொருள் நிறுவனம் சீனாவில் மசகு எண்ணை பதப்படுத்தும் முதலீட்டைச்
செய்வதாகும். இதன் பெறுமதி ஒன்று முதல் ஒன்றரை பில்லியன் அமெரிக்க டொலர்கள்
பெறுமதியானதாகும்.
தடைகள் தாண்டிய நட்பு
ஈரானிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் இருந்த போதே சீனாவில் இருந்து
பெருமளவு முதலீடுகள் ஈரானில் செய்யப்பட்டன. ஒரு சீனாத் தொழிலதிபர் மட்டும்
பொருளாதாரத் தடையின் போது ஈரானில் 200மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீட்டை ஈரானில்
செய்திருந்தார். நாம் ஈரானில் இருந்து விலகி இருந்த போது சீனர்கள் அந்த இடைவெளியை
நன்கு நிரப்பி விட்டார்கள். ஈரானுடனான வர்த்தகத்தைப் பொறுத்த வரை நாம் பின் தங்கி
விட்டோம் என்றார் ஒரு மேற்கு ஐரோப்பிய அரசுறவியலாளர். பொருளாதாரத் தடையின்போது
ஈரானின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகவும் ஈரானில் மிக அதிக அளவு முதலீடு
செய்யும் நாடாகவும் சீனா மாறிவிட்டது. அமெரிக்காவின் தண்டனைகளில் இருந்து தப்ப
இதற்கென தனியாக புது வங்கிகள் சீனாவால் உருவாக்கப் பட்டன. இரண்டு பில்லியன்
அமெரிக்க டொலர்கள் பெறுமதியான தொடருந்துப் பாதை சீனாவால் ஈரானில்
நிர்மாணிக்கப்பட்டது. ஈரானிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம்
நிறைவேற்றப் பட்டபோது அதை தனது அதிகாரத்தை(வீட்டோ) பாவித்து இரத்துச் செய்யாததால்
ஈரான் சற்று அதிருப்தி அடைந்திருந்தது. அத்துடன் ஈரானுடன் நடந்த யூரேனியம்
பதப்படுத்துவதை நிறுத்தக் கோரும் பேச்சு வார்த்தையில் சீனா அமெரிக்காவுடன்
ஓத்துழைத்திருந்தது. ஆனாலும் பொருளாதாரத் தடையால் வந்த இடைவெளியை சீனா
தந்திரோபாயமாக தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. ஈரானியத் தலைநகர்
ரெஹ்ரானில் நிலத்தில் இருந்து உயர்த்தப் பட்ட பெருந்தெரு (elevated highway), நிலத்திற்குக்
கீழான தொடருந்துச்
சேவை போன்றவற்றை சீனா நிர்ம்ணித்தது. போக்குவரத்திற்குத் தேவையான தொடருந்து
வண்டிகளும் சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப் பட்டன. சீனாவிடமிருந்து
J-10 போfர் விமானங்களை வாங்க ஈரான்
விரும்புகின்றது. இதற்கு இஸ்ரேல் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஐக்கிய
அமெரிக்காவை அதிருப்திப் படுத்த விரும்பாததால் சீனா ஈரனிற்குப் J-10 போர்
விமனங்களை விற்பனை செய்வ்தை ஒத்தி வைத்துள்ளது. சவுதி அரேபியாவும் இஸ்ரேலும்
ஐக்கிய அமெரிக்காவிடமிருந்தும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும் சீனாவின் J-10இலும் பார்க்கச் சிறப்பான
போர்விமானங்களை வாங்கி வைத்துள்ளன.
ஈரானிற்குப் பயணம் செய்த சீன அதிபருடன் ஈரான் அடுத்த பத்து
ஆண்டுகளில் இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தகத்தை 600பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவதாக ஒத்துக் கொண்டுள்ளது. சீனா
ஈரானில் ஆறு இலட்சம் தொன் உருக்கை உற்பத்தி செய்தவதாகவும் ஒத்துக்
கொள்ளப்பட்டுள்ளது. ஈரான் கைத்தொழில் மயமாக்கலில் ஒரு திருப்பு முனையில் உள்ள
நாடாகும். திறன் மிக்க ஊழியர்கள் அங்குள்ளனர். சீனாவின் முதலீடு, தொழில் நுட்பம், உட்கட்டுமான அனுபவம்
ஆகியவற்றை ஈரானில் சிறப்பாகப் பயன்படுத்த முடியும்.
No comments:
Post a Comment