Saturday, 5 February 2011

நகைச்சுவை: இந்தப் பெரிய கம்பனியில் வேலை செய்ய விருப்பமா?


இது ஒரு பெரிய கம்பனி.
இதன் பங்குதாரர்கள் பல கோடி. ஆனாலும் பங்கிலாபம் பெறுவதில்லை.
இந்த வியாபாரத்தில் இது உலகின் மிகப் பெரிய கம்பனி.
இது அன்னியர் ஒருவரின் ஆதிக்கத்தில் இயங்கும் கம்பனி.
இங்கு வேலை பெறுவது இலகுவான காரியமல்ல.
இங்கு வேலை பெறுமுன் அங்கு வேலை செய்பவர்களைப்பற்றிய தகவல்களை அறிதல் நன்று.

இந்தக் கம்பனியில் வேலை செய்பவர்களில்
29 பேர் மனைவிகளைக் கொடுமைப்படுத்துபவர்கள்
52பேர் மருமகளைக் கொடுமைப்படுத்துபவர்கள்
117 பேர் பாரிய ஊழல் செய்பவர்கள்
67 பேர் திருட்டுத் தொழில் செய்பவர்கள்
19 கள்ளச் சராயம் காய்ச்சுபவர்கள்
3 பேர் ஏற்கனவே சிறையில் இருந்தவர்கள்
71 பேர் வாங்கிய கடனைத் திருப்பி அடைக்காதவர்கள்.
28 பேர் போதைப் பொருள் கடத்துபவர்கள்
54 பேரில் நீதிமன்ற வழக்கு உள்ளது.
84 பேர் குடிபோதையில் வேலைக்கு வருபவர்கள்.
28 பேர் கொலை செய்தவர்கள்

இப்போது உங்களுக்கு அங்கு வேலை செய்ய விருப்பமில்லை என்று தெரிகிறது.

கம்பனியின் பெயர் Loksabha (pvt)Ltd..

Friday, 4 February 2011

இதயத்தில் ஒரு வலி


என் இதயத்தில் இன்று நீ
ஒரு வலியாகத்தன்னும்
இருப்பதும் ஒரு சுகம்

அடங்காப் பசி
ஆணவத்தின் உணவகத்தில்
சாப்பிடப் போனவர்கள்
என்றும் பசியாறுவதில்லை

பொய்யும் உண்மையும்
அரசியல்வாதிளின் மானத்தில் அரைவாசி
அவர்கள் சொல்லும் பொய்களால் போகும்
மிகுதியாய் இருக்கும் அவர் மானம்
அவர்கள் பற்றிய உண்மைகளால் போகும்

பயங்கரவாதம்
அரசியலைச் சுத்தமாக்க
செய்ய நாம் நினைப்பதெல்லாம்
அரச விரோதச் செயலாம்.

வாழ்வு
இறப்பு வேண்டாம் என்றால்
முதுமை வேண்டுமா?
நல்ல ஆயுள் ஒரு கொடை
நீண்ட ஆயுள் கடும் தண்டனை

Thursday, 3 February 2011

ஹைக்கூ: உணர்ச்சிகளின் பெருக்கம்


துன்பத்தால் நிறைந்தது
துன்பம் தாண்டும் துணிவுடையோர்க்கு உரியது
இவ்வுலகம்

இனிமையில் தொடங்கும்
போதனையில் முடியும்
நல்ல கவிதை

அறிவை வளர்க்கும்
சந்தேகங்கள் தீர்க்கும்
அர்த்தமுள்ள கேள்விகள்

இனிய வார்த்தைகளின் சுருக்கம்
உணர்ச்சிகளின் பெருக்கம்
காதலர் முத்தம்

யாவர்க்கும் போதாதது
சாதனைகளுக்குத் தேவையானது
நேரம்

பாராளமன்ற அமர்வில் i-Pad இல் பலான பெண்களைத் தேடிய MP


பாராளமன்ற உறுப்பினர்கள் தங்கள் பணிகளைச் செய்வதற்கு வசதியாக அவர்க்ளுக்கு இலவச i-Padகளை அரசு வழங்கியது. அதை வைத்துக் கொண்டு ஒரு பாராளமன்ற உறுப்பினர் நாட்டில் என்ன நடக்கிறது, பொருளாதாரம் எங்கு போகிறது, வேலையில்லாத் திண்டாட்டம் எப்படி இருக்கிறது அல்லது எகிப்திய அரசு கவுழுமா, வன்முறை வெடிக்குமா, என்று அறிய முயலவில்லை. பெண் துணைகளை வாடகைக்கு ஒழுங்கு செய்யும் நிறுவனத்தின் வலைத் தளத்தில் உள்ள பெண்களின் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். இவர்ஏற்கனவே மூன்று தடவை திருமணமான 66வயது இத்தாலியப் பாராளமன்ற உறுப்பினர் சைமன் டி கங்கோ அப்ரெசிக்கா என்பவர். அதுவும் பாரளமன்ற அமர்வின் போது. சாதாரண அமர்வல்ல ஆளும் கட்சியின் மந்திரி ஒருவருக்கு எதிரான நம்பிக்கை இல்லப் பிரேரணை விவாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் போது. உபரித் தகவல்: ஒரு இரவிற்கு ஒரு பெண்ணுக்கான கட்டணம் £1000.

இத்தாலியப் பாராளமன்ற உறுப்பினர் சைமன் டி கங்கோ அப்ரெசிக்கா என்பவர் i-Padஇல் பெண்கள் படத்தைப்பார்த்துக் கொண்டிருந்தபோது படம்பிடிக்கப் பட்டுள்ளார். அவர் கொடுத்த விளக்கம் தான் தனக்கு வந்த தகவல்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது தவறுதலாக விரஒ ஒரிடத்தில் பட்ட போது வந்த ஒரு pop out windowவில் இருந்த அழகிகளைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. அதனால் அந்த அழகிகளைப் பார்ப்பதற்காக அந்த வலயத் தளத்திற்கு சென்றதாக அவர் கூறுகிறார்.

Wednesday, 2 February 2011

நகைச்சுவைக் கதை: மன்மோகன் சிங்கின் தலைப்பகை நாறடிக்கப்படுவதைத் தடுத்த சோனியாஜீ



அது ஒரு காங்கிரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம். பணமும் குவாட்டரும் பிரியாணியும் கொடுத்து வந்த இலட்சக்கணக்கான தொண்டர்கள் குழுமி இருந்தனர். மேடையில் சில கரை வேட்டிகள் இருந்து தங்கள் சுவிஸ் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தனர். மன்மோஹன் சிங் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தார். இந்தப் பேமானியக் துரத்துவது எப்போ, ராகுலுக்கு முடி சூட்டுவது எப்போ என்ற கவலையுடன் சோனியா காந்தி உட்கார்ந்து இருந்தார் மேடையில்.

மன்மோஹன் சிங் உரையாற்றுகிறார். என்னை கைப்பொம்மை என்கிறார்கள். நான் உலகத்தின் வலுமிக்கவர்கள் பட்டியலில் 18-ம் இடத்தில் இருக்கிறேன். சோனியாஜீ 9-ம் இடத்தில் இருக்கிறார். அவர் எப்போதும் எனக்கு மேலேதான். உலகத்தலைவர்களிலேயே மற்ற உலக நாட்டுத் தலைவர்களின் விருப்பத்துக்குரியவர் பட்டியலில் நான் முதலாம் இடத்தில் இருக்கிறேன். மற்ற உலகத்தலைவர்களுக்கு நான் ஒரு முன்மாதிரியாக இருக்கிறேன் என்று பல தலைவர்கள் சொல்கிறார்கள். இந்தியப் பொருளாதாரத்தை திறந்து விட்டவன் நான். இந்தியப் பொருளாதாரத்தை தரகு முதலாளிகளுக்குத் தாரை வார்த்தவன் நான். லைசென்ஸ் ராஜ் என்று மேற்குலகப் பத்திரிகைகள் விமர்சித்த இந்தியாவை சுதந்திரப் பொருளாதார நாடாக்கிக் காட்டிக் கொண்டிருப்பவன் நான். 1.72இலட்சம் கோடி ரூபாய்கள் கற்றையாக அலையில் அடித்துச் சென்றபோது கற்சிலையாக இருந்தவன் நான் என்று காவிப் பயங்கரவாதிகள் என்மீது குற்றம் சாட்டுகிறார்கள். நான் கற்சிலை அல்ல, நான் கற்சிலை அல்ல, நான் கற்சிலை அல்ல, நான் கற்சிலை அல்ல நான்......என்று மன்மோகன் சிங் பேசிக் கொண்டிருக்கும் போது சோனியாஜீ விரைந்து வந்து அவர்காதில் "உன் தலையில் ஒரு புறா அமர்ந்திருக்கிறது. உன் தொப்பியை நாறடிக்க முன் அதை விரட்டித் தொலையய்யா!" என்றார்.

பெண்களை ஊக்குவிக்கும் ஆண்களை மந்தமாக்கும்


பெண்களே சுறுசுறுப்பாக செயற்படவும் அல்லது வேலை செய்யும் பணிமனையில் முக்கிய சந்திப்பில் சிறப்பாகச் செயற்படவும் மூளையை ஊக்குவிக்கவும் காப்பி அருந்துங்கள். புதிய ஆய்வொன்றின் முடிபு இது.

காப்பி அருந்தினால் பிரச்சனைக்குரிய நேரங்களில், வேலைகளில் பெண்கள் சிறப்பாகச் செயற்படுவார்களாம் ஆனால் பாவம் ஆண்கள் காப்பி அவர்களை மந்தமாகச் செயற்பட வைகிறதாம்.

காப்பி என்பது உலகெங்கும் மிகப் பிரபலமான பானம். பிரித்தானியாவில் மட்டும் ஒரு நாளில் ஏழு கோடி குவளைகள் காப்பி அருந்தப்படுகின்றன.

பிரிஸ்டல் பல்கலைக்கழகம் 64 பெண்களையும் ஆண்களயும் வைத்து ஒரு பகுதியினருக்கு அதிக கபீன் உள்ள காப்பியும் ஒரு பகுதியினருக்கு குறைந்த அளவுள்ள காப்பியும் கொடுத்து அவர்களிடம் பல பணிகள் செய்யும் படி கேட்கப் பட்டனர்.

காப்பி அருந்திய ஆண்களின் ஞாபக சக்தி குறைந்திருந்தமை அவதானிக்கப்பட்டது. கபீன் குறைந்த காப்பி அருந்திய ஆண்களிலும் பார்க்க கபீன் கூடிய காப்பி அருந்திய ஆண்கள் சில பணிகளைச் செய்ய 20செக்கண்டுகள் கூட எடுத்தனர். கபீன் கூடிய காப்பி அருந்திய பெண்கள் மற்றவர்களிலும் பார்க்க 100செக்கண்டுகள் விரைவாக செய்து முடித்தனர்.

Tuesday, 1 February 2011

இனி மதுபோதையில் இருந்தால் முரண்டுபிடிக்கும் மகிழூர்தி(கார்)


மது போதையில் வாகனங்கள் ஓட்டுபவர்களால் உலகெங்கும் பெரும் பிரச்சனை. நடக்கும் உயிராபத்தான விபத்துக்களில் பெரும்பாலானவை மது போதையில் வாகனங்கள் ஓட்டுபவர்களால் ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண அமெரிக்காவில் பத்து மில்லியன் டொலர்கள் செலவழித்து நீண்டகால ஆராய்ச்சி செய்யப்பட்டது. பல முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களும் இந்த ஆராச்சியில் ஈடுபட்டன. மதுபோதை விபத்துக்களில் கொல்லப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

மேற்படி ஆராச்சியின் விளைவாக Dadss என்னும் கருவி உருவாக்கப்பட்டது. Dadss என்பது Driver Alcohol Detection Systems for Safety என்பதன் சுருக்கம். இந்தக் கருவி பல்லாயிரக் கணக்கான உயிரழிவுகளைத் தடுக்கும் என்று நம்பப்படுகிறது. வாகனங்களின் ஓட்டுனரின் இருக்கையில் பொருத்தப் பட்டிருக்கும் கருவிகள் ஓட்டுனரின் தோலையும் மூச்சையும் உணர்ந்து ஓட்டுனரின் இரத்தத்தில் இருக்கும் மதுவின் அளவை தீர்மானிக்கும். இரத்தத்தில் இருக்கும் மதுவின் அளவு அபாயகரமானதாக இருந்தால் வாகனம் ஓடாது அடம்பிடிக்கும்.

Driver Alcohol Detection Systems for Safety என்னும் கருவி இப்போதும் ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கிறது. இது பாவனைக்கு வர இன்னும் பத்து ஆண்டுகள் எடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Driver Alcohol Detection Systems for Safetyகருவியின் பரீட்சார்த்தமாக சென்றவாரம் பயன்படுத்தப் பட்டது. இந்த நிகழ்வில் அமெரிக்கவின் போக்கு வரத்துத் துறைச் செயலரும் கலந்து கொண்டார்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...