Monday, 15 June 2015

துருக்கித் தேர்தலின் புவிசார் அரசியலும் குர்திஷ் மக்களின் போராட்டமும்.

உலகின் புவிசார் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் ஒன்றாக துருக்கி இருக்கின்றது. உலக எரிபொருள் வளத்தின் நடைபாதையில் இருக்கும் துருக்கி கிழக்கையும் மேற்கையும் இணைக்கக் கூடிய ஒரு தேசமாகத் திகழ்கின்றது. தென் கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வட ஆபிரிக்கா ஆகியவற்றின் நடுவில் துருக்கி இருக்கின்றது.  புவியியல் ரீதியாக மட்டுமன்றி அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாகவும் ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகிய கண்டங்களை இணைக்கும் ஒரு நாடாக துருக்கி இருக்கின்றது. இஸ்லாமிய மார்க்கத்தின் முக்கிய இனங்களாக இருப்பவர்கள் அரபுக்களும் துருக்கியர்களும் ஈரானியர்களுமாகும். சீன அரசு ஈரானையும் துருக்கியையும் தன் மத்திய கிழக்குக் கேந்திரோபாயத்தில் இணைத்து ஒரு சீன மத்திய கிழக்குச் சுழற்ச்சி மையத்தை (China’s Middle Eastern pivot) உருவாக்க முயல்கின்றது.

நேட்டோத் துருக்கி
நேட்டோக் கூட்டமைப்பில் இணைந்த முதல் இஸ்லாமிய நாடான துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு இணை உறுப்பினராக இருக்கின்றது. அது ஒரு முழு உறுப்பினராக இணைய விரும்புகின்றது. ஆசியச் சுழற்ச்சி மையம் என்னும் அமெரிக்காவும் யேமன், ஈராக், சிரியா, லிபியா ஆகிய நாடுகளில் உருவாகியுள்ள உள்நாட்டுப் போரும் உக்ரேனை மேலும் துண்டாட முயற்ச்சிக்கும் இரசியாவும் தென் சீனக் கடலில் பெரும் விரிவாக்கத்தைச் செய்ய முயலும் சீனாவும் உலக அரங்கில் ஒரு குழப்ப நிலையைத் தோற்றுவித்துள்ள வேளையில் துருக்கியில் ஓர் உறுதியான ஆட்சி அவசியமான ஒன்றாகும். சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்ற விரும்பும் துருக்கிய ஆட்சித் தலைவர் ரிசெப் ரய்யிப் எர்டோகான் அசாத்தின் ஆட்சிக்கு எதிராகப் போராடும் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பில் இணைய விரும்புபவர்களை துருக்கியினூடாகப் பயணிக்க அனுமதிக்கின்றார். அவர் எகிப்தில் இசுலாமிய சகோதரத்துவத்தின் ஆட்சியை விரும்பினார். லிபியாவிலும் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பினர் திரிப்போலியில் நடத்தும் ஆட்சிக்கு உதவுகின்றார். சுனி முஸ்லிமான எர்டோகான் மத்திய கிழக்கில் தான் ஒரு சுனி முஸ்லிம் கூட்டணியில் ஒருவராகத் தன்னைக் காட்டாமல் சியா மற்றும் சுனி முஸ்லிம்களிடையேயான முறுகலின் நடு நிலையாளராகக் காட்ட விரும்புவர். ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எர்டோகான் ஒத்துழைக்க மறுத்தார். துருக்கியில் உள்ள நேட்டோவின் படைக் கூட்டமைப்பு முறைமயையும் துருக்கிய விமானத் தளங்களையும் அமெரிக்கா பாவிக்க அனுமதி மறுத்தார் அவர். மத்திய கிழக்குப் பிராந்தியப் பிரச்சனைகளில் அதிக அக்கறை காட்டும் துருக்கி தன்னை ஒரு பிராந்திய வல்லரசாக முன்னிறுத்த விரும்புகின்றது.

மேற்கே போன துருக்கி
மேற்கு நாடுகளுடன் இணைந்த ஒரு இசுலாமிய நாடான துருக்கி மக்களாட்சி முறைமையில் இசுலாமிய மதத்திற்குப் பாதகமில்லாத வகையில் தனது பொருளாதாரத்தை மேம்படுத்தியமை அரபு வசந்தத்திற்கு பெரும் உந்து வலுவாக அமைந்தது. துருக்கி ஒரு நேட்டோவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் உறுப்பு நாடாக இருப்பதால் மத்திய கிழக்கு நாடுகளுடன் துருக்கியின் உறவு மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை முக்கியமானதாகும். முன்பு மத்திய கிழக்கிலுள்ள எல்லா நாடுகளுடனும் நல்ல உறவை வைத்திருந்தது துருக்கி. ஈராக் போரின் போது துருக்கிக்கும் ஈராக்கிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. 1979-இல் ஈரானில் நடத்த மதவாதப் புரட்ச்சிக்குப் பின்னரும் துருக்கியும் ஈரானும் நல்ல உறவைப்பேணின. துருக்கிக்கும் தற்போது ஈரான் எனப்படும் பாரசீகத்திற்கும் இடையில் புரதான காலம் தொட்டே நல்ல உறவு உண்டு. ஈரானின் அணுக்குண்டு உற்பத்திக்கு எதிரான பொருளாதாரத் தடையில் துருக்கி மிதமாகவே நடந்து கொண்டு வருகிறது. 2013 ஜுலை மாதம் 3-ம் திகதி எகிப்தில் நடந்த படைத்துறைப் புரட்சிக்குப் பின்னர் ஈரானிற்கும் துருக்கிக்கும் இடையில் நல்ல உறவு இருக்கவில்லை. சிரியாவில் துருக்கி கிளர்ச்சிக்காரர்களுக்கும் ஈரான் அதிபர் பஷார் அல் அசாத்திற்கும் ஆதரவாகச் செயற்படுவதாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

துருக்கியின் அடக்குமுறை ஆட்சியாளர்
ஊடகங்களுக்கு எதிராகவும் எர்டோகானின் நடவடிக்கைகள் கடுமையானதாகவே இருந்தன. அவரை எதிர்க்கும் பல ஊடகங்கள் மிரட்டப்பட்டன. மிரட்டலுக்கு அடிபணிய மறுக்கும் ஊடகர்களுக்கு எதிராகப் போலிக் குற்றச் சாட்டுக்கள் புனையப்பட்டன. இதனால் அவருக்கு சவால் விடுக்கக் கூடிய வகையில் துருக்கிய எதிர்க் கட்சிகள் இருக்கவில்லை. முன்னணி எதிர்க் கட்சியான மக்கள் குடியரசுக் கட்சி இந்த முறைத் தேர்தலில் கடும் போட்டியைக் காண்பித்தது. எர்டோகானின் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற முடியாமல் போனதால் துருக்கியின் அரசமைப்பை மாற்றி ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத் தலைவராகத் தன்னை மாற்ற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. துருக்கியின் புட்டீனாகத் தன்னை மாற்ற எர்டோகான் எடுத்த முயற்ச்சி தோல்வியில் முடிந்தது என ஊடகங்கள் கேலி செய்தன.  துருக்கியில் 2003-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டுவரை தலைமை அமைச்சராக இருந்த ரிசெப் ரய்யிப் எர்டோகான் 2014-ம் ஆண்டில் இருந்து ஆட்சித் தலைவராகவும் இருக்கின்றார். அவர் பிரான்ஸில் உள்ளது போல் ஒரு அதிகாரமிக்க குடியரசுத் தலைவர் ஆட்சி முறைமையை உருவாக்க முயன்றார்.  550 உறுப்பினர்களைக் கொண்ட பாராளமன்றத்தில் தனது கட்சி 400 தொகுதிகளை வெல்ல வேண்டும் என விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் 2015-ஜுன் மாதம் 7-ம் திகதி வெளிவந்த பாராளமன்றத் தேர்தல் முடிவுகள் அவருக்கு உகந்ததாக இல்லை.

எதிர்பார்த்தது கிடைக்கவில்லை

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் துருக்கியப் பாராளமன்றத்தின் தேர்தல் 2011-ம் ஆண்டு ஆட்சித் தலைவர் எர்டோகானின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி 327 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 258 உறுப்பினர்களை மட்டுமே பெற்று மொத்தம் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் உள்ளது. ஊழல் மிக்க ஆட்சியை எர்டோகான் செய்கின்றார் என 2013-ம் ஆண்டு ஓர் அமைதியான ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அதை கடுமையான நடவடிக்கைகள் மூலம் அவர் அடக்கினார். நீதித் துறையில் எர்டோகான் தலையிடுவதாகவும் குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இடது பக்கம் சாய்ந்த குர்திஷ் மக்களின் வாய்ப்பு

ஈராக்கின் வடக்கில் ஏர்பில் நகரை ஒட்டிய பிரதேசத்திலும் துருக்கியின் தெற்கில் தியர்பக்கிர் நகரை ஒட்டிய பிரதேசத்திலும் ஈரானின் வடமேற்குப் பிராந்தியத்திலும் செறிந்து வாழும் குர்திஷ் இன மக்கள் மூன்று நாட்டு ஆட்சியாளர்களாலும் இன அழிப்பபிற்கு உள்ளாக்கப்பட்டவர்கள். 2014-ம் ஆண்டில் ஈராக்கில் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினர் ஈராக்கிய அரசபடைகளை பல பிராந்தியங்களில் இருந்து விரட்டிய போது குர்திஷ் மக்கள் அதை வாய்ப்பாகப் பயன்படுத்தி தமக்கு என ஒரு பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அதே போல் துருக்கியில் கடும் போட்டிக்கு இடையில் நடந்த தேர்தலை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர். விகிதாசாரப் பிரதிநித்துவப்படி துருக்கியில் நடக்கும் தேர்தலில் ஒரு கட்சி குறைந்த அளவு 10 விழுக்காடு வாக்குகளையாவது பெற வேண்டும். இதுவரை காலமும் குர்திஷ் மக்களுக்கு அப்படிக் கிடைக்கவில்லை. குர்திஷ் மக்களின் கட்சியான மக்கள் மக்களாட்சிக் கட்சி  13 விழுக்காடு வாக்குகளை முதன் முறையாகப் பெற்று 80 பாராளமன்ற உறுப்புரிமையைப் பெற்றுள்ளது. சரியான முறையில் இடதுசாரிகளுடன் கூட்டணிகள் அமைத்துப் போட்டியிட்டதால அவர்களால் இதைச் சாதிக்க முடிந்தது. மேலும் அவர்கள் துருக்கியில் வாழும் யஷீதிரியர்கள் ஆர்மினியர்கள் கிறிஸ்த்தவர்கள் ஆகியோருடன் தேர்தலில் இணைந்து செயற்பட்டனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டதும் 1970-ம் ஆண்டில் இருந்து தமது சுதந்திரத்திற்காக 40,000 உயிரிழப்புக்களுடன் போராடி வரும் குரிதிஷ் மக்கள் தியர்பக்கிர் நகரில் வாணவேடிக்கைகளுடன் தமது வெற்றியைக் கொண்டாடினர்.

குர்திஷ் மக்களின் சோக வரலாறு

2014-ம் ஆண்டின் பிற்பகுதியில் சிரியாவின் துருக்கிய எல்லையை ஒட்டிய பிரதேசமான கொபானியில் அப்பாவி குர்திஷ் மக்களை ஐ. எஸ் திவிரவாதிகள் கொன்று குவித்த போது துருக்கியால் ஒரு சில நாட்களில் கொபானியின் வாழும் குர்திஷ் மக்களைப் பாதுகாத்திருந்திருக்க முடியும். நேட்டோ நாடுகளில் எண்ணிக்கை அடிப்படையில் துருக்கிய படைகள் இரண்டாவது பெரிய படையாகும். துருக்கியப் பாராளமன்றம் 2014-10-02-ம் திகதி துருக்கியப் படைகள் ஐ. எஸ் அமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை அனுமதிக்கும் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. ஐ. எஸ் போராளிகளை அழித்து குர்திஷ் மக்கள் ஈராக்கில் வலுப்பெறுவதை துருக்கி விரும்பவில்லை. ஈராக்கில் குர்திஷ் மக்கள் வலுவடைந்தால் அது துருக்கியில் வாழும் குர்திஷ் மக்களை வலுவடையச் செய்யும் என துருக்கி அஞ்சியதால் எந்த ஒரு மனித நேய நடவடிக்கையையும் துருக்கி செய்யவில்லை. உலகெங்கும் மூன்று கோடி குர்திஷ் மக்கள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. முதலில் குர்திஷ் இன மக்கள் அரபு மக்¬களால் வெற்றி கொள்ளப்பட்டு ஆளப்பட்டார்கள். பின்னர் மங்கோலியர்களாலும் உதுமானியப் பேரரசினாலும் தொடர்ந்து மேற்கு ஐரோப்பியர்களாலும் அவர்கள் ஆளப்பட்டனர். முதலாம் உலகப் போரின் பின்னர் மேற்கு ஐரோப்பிய நாடுகள் மத்திய கிழக்கை லௌசான் உடன்¬ப¬டிக்¬கையின் மூலம் தமக்குள் பங்கு போட்டுக் கொண்¬டன. அதில் குர்திஷ்த்தான் துண்டாடப்பட்டு சிரியா, ஈராக், துருக்கி ஆகிய நாடுகளுடன் இணைக்கப்பட்டது. இனச்சுத்திகரிப்பு, இனக்கொலை, பாரிய மனிதப் புதைகுழி, வேதியியல் குண்டுகள் (இரசாயனக் குண்டுகள்), பேரழிவு விளைவிக்கும் குண்டுகள் ஆகியவை குர்திஷ் மக்களின் வரலாற்றுத் தடயங்களாகும். மொழி பாவிக்கத் தடை, மத வழிபாட்டுத் தடை, சமூக ஒதுக்கல், பொருளாதாரப் புறக்கணிப்புக்கள் ஆகியவற்றால் குர்திஷ் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். துருக்கி ஐரோப்பியா ஒன்றியத்தில் ஓர் இணை உறுப்பு நாடாக இணையும் வரை குர்திஷ் மொழி பொது இடங்களில் பேசுவது தடை செய்யப்பட்டிருந்தது.

விடிய இன்னும் நேரமிருக்கு

தற்போது நடந்த தேர்தலில் எர்டோகானின் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறமுடியாதபடியால் அது 45 நாட்களுக்குள் ஒரு கூட்டணி அரசை அமைக்க வேண்டும். அல்லாவிடில் மீண்டும் தேர்தல் நடாத்தப்படும். மறு தேர்தல் நடந்தால் குர்திஷ் மக்களின் கட்சிக்கு வாக்களித்தவர்கள் மனம் மாறி தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கலாம். இதனால் குறைந்த அளவான 10 விழுக்காடு வாக்கு அவர்களுக்குக் கிடைக்காமல் போகலாம். இதனால் குர்திஷ் மக்கள் படைக்கலப் போராட்டத்திற்கு மீண்டும் தள்ளப் படலாம்.

Thursday, 11 June 2015

அமெரிக்காவும் வியட்னாமும் செய்து கொண்ட பாதுகாப்பு உடன்பாடு.

2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி ஐக்கிய அமெரிக்காவும் வியட்நாமும் ஒன்றை ஒன்று பாதுக்காக்கும் உடன்படிக்கைக செய்து கொண்டன. ஐக்கிய அமெரிக்கா சார்பில் பாதுகாப்புத் துறைச் செயலர்  அஸ்டன் கார்ட்டரும் வியட்னாம் சார்பில் அதன் பாதுகாப்பு அமைச்சர்ஃபுங் குவாங் தானும்  "பாதுகாப்பு உறவு தொடர்பான இணை நோக்குக் கூற்று" (Joint Vision Statement) என்னும் உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர். ஏற்கனவே ஒன்றுடன் ஒன்று போர் புரிந்த ஐக்கிய அமெரிக்காவும் வியட்னாமும் இப்போது சீனாவைப் பொது எதிரியாகக் கொண்டு ஒன்று பட்டு வருகின்றன.  சென்ற ஆண்டு வியட்னாமிற்கு எதிரான படைக்கல விற்பனைத் தடையை அமெரிக்கா தளர்த்தி இருந்தது. இரு நாடுகளிற்கும் இடையிலான உறவு 2011- ஆண்டு செய்யப்பட்ட புரிந்துணர்வுக் குறிப்பாணையின் படி மேம்படுத்தப்பட்டு வருகின்றது.

வியட்னாம் தனது படைக்கலன்களில் 90 விழுக்காட்டை இரசியாவில் இருந்து இறக்குமதி செய்கின்றது. வியட்னாமிற்கு அதிக அளவு படைக்கலன்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்கா முயல்கின்றது. ஐக்கி நாடுகள் சபையின் பன்னாட்டுப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான பயிற்சியை வியட்னாமியப் படைகளுக்கு ஐக்கிய அமெரிக்கா வழங்கவிருக்கின்றது. ஒரு மனித உரிமை மீறும் பொதுவுடமை நாடாகக் கருதப்படும் வியட்னாமின் படைகளுக்கு ஐக்கிய அமெரிக்கப் படைகள் பயிற்ச்சி அளிப்பதா என்ற கேள்வியைத் தவிர்ப்பதற்காக இந்த ஐநா பணி என்ற போர்வை பாவிக்கப்படுகிறது.


ஐக்கிய அமெரிக்காவிற்கும் வியட்னாமிற்கும் இடையிலான ராஜ தந்திர உறவின் இருபதாம் ஆண்டு நிறைவில் இரு நாடுகளும் பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொண்டன. அடுத்த இருபது ஆண்டுகளில் இரு நாடுகளிற்கும் இடையிலான உறவு ஆழமாக்கப்படும் என்றார் அமெரிக்க ப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஷ்டன் கார்ட்டர். வியட்னாமில் நிலவும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்காவின் நிலைப்பாடு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முட்கள் போல் தடையாக இருக்கின்றது.

ஆசிப பசுபிக் பிராந்தியத்தில் சீனாவைத் தனிமைப் படுத்தி தனது நட்பு வட்டத்தைப் பெருக்க முயலும் அமெரிக்காவிற்கு வியட்னாமின்  உறவு முக்கியமானதாகும். 1979-சினாவும் வியட்னாமும் போர் புரிந்தன. 2014-ம் ஆண்டு மே மாதம் சீனக் கப்பல் ஒன்று  வியட்னாம் தனது எனச் சொந்தம் கொண்டாடும் கடற்பரப்பினுள் எரிபொருள் ஆய்வு வேலைகளில் ஈடுபட்டது. அதைத் தடுக்கச் சென்ற வியட்னாம் கப்பலை சீனா மூழ்கடித்தது. இது சீனாவிற்கு எதிரான உணர்வை வியட்னாமில் தூண்டியது. வியட்னாமில் உள்ள சீன முதலீகளுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்தன. பின்பு சீன எரிபொருள் ஆய்வுக் கப்பல் இரண்டு மாதங்களில் சீரற்ற கால நிலை காரணமாக விலகிச்சென்றது. வியட்னாமின் வெளிநாட்டு வர்த்தகத்தில் சீனா பெரும் பங்கு வகிக்கின்றது. இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தகம் 24 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானதாகும். வியட்னாமில் உற்பத்திகளை மேற்கொள்ளும் பன்னாட்டு நிறுவனங்கள் தமது உள்ளீடுகளிற்கு சீனாவில் பெரிதும் தங்கியிருக்கின்றன. பல சீன உட்கட்டுமானங்களில் சீனா முதலீடு செய்துள்ளது. சீனாவின் மிரட்டல்கள் அத்து மீறல்களில் இருந்து தன்னைப் பாதுகாக்க வியட்னாமிற்கு மாற்று வழி தேவைப்பட்டது. இதைத் தொடர்ந்து பல அமெரிக்க இராசதந்திரிகள் வியட்னாமிற்குப் பயணம் செய்தனர். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரும் வியட்னாமிற்கு சென்றிருந்தார்.

அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் வியட்னாமின் கடற்படைத் தலைமையகத்திற்கும் ரோந்துபடைத் தலைமையகத்திற்கும் சென்றிருந்தமை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஜப்பான் வியட்னாமிற்கு போர்ப்படகுகளை வழங்க முன்வந்தது. இவற்றைத் தொடர்ந்து சீனப் பொதுவுடமைக் கட்சி யின் உயர் பீடத்தைச் சேர்ந்த ஒருவர் வியட்னாமிற்குச் சென்றார். ஆனாலும் சீன வியட்னாம் உறவு சீரடையவில்லை. இதன் பலனாக அமெரிக்காவுடன் வியட்னாம் பாதுகாப்பு உடன்படிக்கையைச் செய்துள்ளன.

Monday, 8 June 2015

லிபியாவிலும் கால் வைத்துள்ள ஐ எஸ் ஐ எஸ் அமைப்பு

ஈராக்கிலும் லிபியாவிலும் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றியுள்ள ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினர் தற்போது லிபியாவில் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றுவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். இந்த அக்கறைக்கு மூன்று காரணங்கள் உண்டு. முதலாவது மும்மர் காடாஃபியின் கொலைக்குப் பின்னர் பல கூறுகளாகப் பிளவு பட்டிருக்கும் லிபியாவை கைப்பற்றுவது இலகு. இரண்டாவது லிபியாவின் எரிபொருள் வளம். மூன்றாவது லிபியாவைக் கைப்பற்றினால் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினரால் இலகுவாகத் தமது போராளிகளை ஐரோப்பாவிற்கு நகர்த்த முடியும்.

கடாஃபியின் கோட்டையில் ஐ எஸ் ஐ எஸ்

முன்னாள் அதிபர் மும்மர் கடாஃபியின் கோட்டையாகக் கருதப்பட்ட  சேர்ட் நகரின் விமான நிலையத்தை ஐ எஸ் ஐ எஸ் என அழைக்கப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் மே மாதம் 29-ம் திகதி வெள்ளிக் கிழமை கைப்பற்றினர். தலைநகர் திரிப்போலியில் ஆட்சியில் இருக்கும் பன்னாட்டு சமூகத்தால் அங்கிகரிக்கப்படாத மொஹமட் அல் ஷமியின் ஃபஜிர் லிபியாப் படையினர் ஐ எஸ் ஐ எஸ் படையினரின் தக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓடினர். திரிப்போலியில் இருந்து 450 கிலோ மீட்டர்(280 மைல்கள்) தொலைவில் உள்ள சேர்ட் விமான நிலையத்துடன் ஒரு ஃபஜிர் லிபியாப் படையினர் முகாமும் இருந்தது. படையினர் விமான நிலையத்தில் இருந்து எல்லா உபகரணங்களையும் தம்முடன் கொண்டு சென்று விட்டனர். பாவனைக்கு உதவாத ஒரு விமானத்தை மட்டும் விட்டுவிட்டுச் சென்றனர். சேர்ட் நகரைக் கைப்பற்றிய ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினர் லிபியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மிசுரட்டா நகரின் மீது தமது தாக்குதலைத் தீவிரப்படுத்தினர்.

லிபிய விடிவும் பெருமை நடவடிக்கையும்
கேணல் மும்மர் கடாஃபி கொலை செய்யப் பட்ட பின்னர் லிபியாவில் உள்ள இனக் குழுமங்களிடையே மோதல்கள் தீவிரமாகின. தற்போது இரு பிரிவினர் லிபியாவின் எண்ணெய் வளங்களையும் மற்றும் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களையும் கைப்பற்றுவதில் போட்டி போடுகின்றனர். ஒரு பிரிவினர் திரிப்போலியில் இருந்து ஓர் அரசையும் மற்றப்பிரிவினர் டொப்ரக் நகரில் இருந்து ஓர் அரசையும் நடாத்துகின்றனர். திரிப்போலியில் இருப்பவர்கள் தம்மை "லிபிய விடிவு" என அழைக்கின்றனர். இவர்களின் படையே ஃப்ஜில் லிபியாப் படை. டொப்ராக்கில் இருப்பவர்கள் தம்மை "பெருமை நடவடிக்கை" என அழைக்கின்றனர். லிபிய விடிவினர் பெருமை நடவடிக்கையினரை கடாஃபி ஆதரவாளர்கள் என்றும் பெருமை நடவடிக்கையினர் லிபிய விடிவினரை இஸ்லாமியப் பயங்கரவாதிகள் என்றும் அழைக்கின்றனர். கடாஃபியின் வீழ்ச்சிக்குப்பின்னர் தெரிவு செய்யப் பட்ட பாராளமன்ற உறுப்பினர்கள் இப்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

மீண்டும் கடாஃபி ஆதரவாளார்கள்
டொப்ரக் நகரில் இருக்கும் "பெருமை நடவடிக்கை" அரசினர் மும்மர் கடாஃபியின் ஆட்சியில் உயர் பதவிகளில் இருந்தவர்களை மீண்டும் பதவியில் அமர்வதற்கான தடைகளை நிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. திரிப்போலியில் இருக்கும் அரசு இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்குச் சார்பானது. இந்த அரசுக்கு துருக்கியும் கட்டாரும் ஆதரவு வழங்குகின்றன. சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், எகிப்து ஆகிய நாடுகள் டொப்ரக் நகரில் இருக்கும் "பெருமை நடவடிக்கை" அரசுக்கு ஆதரவு வழங்குகின்றன. சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதில் துருக்கியும் சவுதி அரேபியாவும் ஒரே கருத்தைக் கொண்டிருக்கின்ற போதிலும் துருக்கியும் கட்டாரும் சிரியாவில் அல் அசாத்திற்குப் பின்னர் யார் அரசாள வேண்டும் என்பதில் சவுதி அரேபியாவின் கொள்கையுடன் முரண்படுகின்றன.

குழம்பிய இளைஞர்கள்
லிபிய அரபு வசந்தத்தின் போது கிளர்ந்து எழுத்த இளைஞர்கள் இப்போது யாருக்காகப் போராடுகிறோம் யாருக்கு எதிராகப் போராடுகின்றோம் என்பது தொடர்பாகப் குழப்ப நிலையில் உள்ளனர்.  முன்னாள் லிபிய அதிபர் கடாஃபியின் படையினர் அவரது மறைவிற்குப் பின்னர் லிபியாவிலும் எகிப்து போன்ற அயல் நாடுகளிலும் பதுங்கியிருந்தனர். அவர்கள் இப்போது ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினருடன் இணைந்து போராடுகின்றனர். சேர்ட் நகர் இப்போது கடாஃபியின் ஆட்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என மிஸ்ராட் நகரவாசிகள் நம்புகின்றனர். மே மாதம் 30-ம் திகதி சனிக்கிழமை பிரிகேட் - 166 இன் படையினர் சேர்ட் நகரத்தின் மேற்குப் புறமாக உள்ள ஐ எஸ் ஐ எஸ் நிலைகள் மீது தாக்குதல் நடாத்தினர். ஞாயிறு காலைவரை சண்டை தொடர்ந்தது. ஐ எஸ் ஐ எஸ் போராளிகள் கார் வெடி குண்டு மூலம் தற்கொடைத் தாக்குதல் நடாத்தினர்.


பலப்பல இனக் குழுமங்கள் கொண்ட லிபியா.

லிபியா ஆறரை மில்லியன் மக்களைக் கொண்டது. இதில் ஒன்றரை மில்லியன் பேர் வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவர்கள். லிபியாவில் 140 இனக் குழுமங்கள் இருக்கின்றன. இந்த இனக் குழுமங்களின் அடையாளங்கள் லிபிய மக்களின் கலாச்சார அடையாளத்தின் முக்கிய அம்சமாகும். இனக்குழுமங்களின் பெயர்களையே தமது குடும்பப் பெயர்களாக லிபிய மக்கள் கொண்டுள்ளனர். மேற்கு லிபியாவில் ஒரு மில்லியன் பேரைக் கொண்ட வார்ஃபல்லா என்ற இனக்குழுமம் முக்கியமானது இந்த இனக் குழுமத்தில் 52 உட்பிரிவுகள் இருக்கின்றன. மத்திய லிபியாவில் கடாஃபி என்ற இனக் குழுமம் முக்கியமானது. மும்மர் கடாஃபி இந்த இனக் குழுமத்தைச் சேர்ந்தவர். இந்த இனக் குழுமத்தின் கையில் லிபியா இருந்தது என்று சொல்லலாம். அல் மாஹார்கா என்ற இன்னொரு இனக் குழுமம் மத்திய லிபியாவில் உள்ளது இது கடாஃபி இனக் குழுமத்துக்கு நெருக்கமானது. கிழக்கு லிபியாவில் ஜுவையா, பானி சலீம், மெஸ்ரத்தா, அல் வாஹீர் ஆகிய இனக் குழுமங்கள் முக்கியமானவை.  கடாஃபியின் மனைவி வார்ஃப்ல்லா என்னும் இனக்குழுமத்தைச் சேர்ந்தவர். 

கடாஃபிக்கும் பின்னர் ஆட்சிப் போட்டி.

கடாஃபிக்குப் பின்னரான ஆட்சிப் போட்டியில் மேற்கு நாடுகளுக்கு ஆதரவானவர்களும் இசுலாமிய மதவாதிகளும் கடுமையாக முரண்பட்டனர். ஈரான் மதவாதிகளிற்கு உதவியது. ஈரானின் நீண்டகாலக் கனவில் முக்கியமானது லிபியா, எகிப்து ஆகிய நாடுகளை தனது ஆதிக்கத்தில் கீழ் கொண்டுவருவதே. சவுதி அரேபியாவின் சில பிரதேசங்களை ஈரான் கைப்பற்றி தனது பொருளாதார வலிமையையும் மேம்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது.   .ஈரான் ஹிஸ்புல்லா மற்றும் ஹாமாஸ் போன்ற இசுலாமிய விடுதலைப் போராளி அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவருகிறது. அவர்களுக்கான நிதி மற்றும் படைக்கலன்கள் உதவிகளை வழங்கி வருகிறது. இவை இரண்டும் சியா முசுலிம்களின் அமைப்பாகும். ஆனால் அல் கெய்தா ஒரு சுனி முசுலிம்களின் அமைப்பாகும். அல் கெய்தாவிற்கும் ஈரானுக்கும் பகைமை எனக் கருதப்படுகிறது. ஆனால் அல் கெய்தாவிற்குத் தேவையான நிதி கட்டாரிலிருந்தும் குவைத்தில் இருந்தும் ஈரானுடாகவே வருகிறது. இதற்காக அல் கெய்தா ஈரானில் எந்த வித தீவிரவாத நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என்ற உடன்பாடு இருக்கிறது. ஈரானுக்கும் அல் கெய்தாவிற்கும் பொதுவான எதிரி அமெரிக்கா. இரண்டும் இணைந்து செயற்படுவதற்கான ஆதாரங்கள் தற்போது சிறிது சிறிதாக வெளிவருகிறது, ஈரான் இப்போது எகிப்தில் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டது. மொஹமட் மேர்சியின் ஆதரவாளர்களுக்கு ஈரான் உதவுவதாக நம்பப்படுகிறது. அத்துடன் அல் கெய்தாவும் எகிப்தில் ஊடுருவி உள்ளது. லிபியாவிலும் இதே நிலைமைதான். ஈரானும் அல் கெய்தாவும் அங்கு தங்கள் கைவரிசைகளைக் காட்டி வருகின்றன. சிரியாவில் அல் கெய்தாவும் ஈரானும் எதிர் எதிர் அணிகளில் நின்று மோதுவது உண்மைதான். ஈரான் லிபியா, எகிப்து, எதியோப்பிய ஆகிய மூன்று நாடுகளும் தனது கட்டுப்பாட்டின்கீழ் இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயற்படுகிறது. ஈரானில் பயிற்ச்சி பெற்ற அல் கெய்தாவினரே எகிப்தில் ஊடுருவி இருப்பதாக எகிப்தியக் காவற்துறை கண்டறிந்துள்ளது. 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நையீரியாவில் ஈரானில் தாயாரான படைக்கலன்களை அல் கெய்தாவினர் கடத்திச் செல்வது கண்டு பிடிக்கப்பட்டது. யேமனிலும் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைச் செலுத்திகளை அல் கெய்தா பாவிப்பது கண்டறியபப்ட்டது. இவை யாவும் ஈரானிற்கும் அல் கெய்தாவிற்கும் இடையில் இருக்கும் ஒத்துழைப்பை உறுதி செய்கின்றன.

பிராந்திய முரண்பாடு

லிபியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சைரெனைக்கா (Cyrenaica) லிபியாவில் இருந்து தன்னாட்சி பெற முயல்கின்றது. லிபியாவின் உயர்தர எண்ணெய் வளத்தில் எண்பது விழுக்காடு சைரெனைக்காவில் இருந்து கிடைக்கின்றது. லிபிய மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கினர் தலைநகர் திரிப்போலியிலும் ஃபெசான் மாகாணத்திலும் வசிக்கின்றனர். சைரெனைக்கா தனிநாடாகப் பிரிந்தால் அங்கிருக்கும் உலகிலேயே ஐந்தாவது பெரிய எண்ணெய் வளம் அதை உலகில் உள்ள மிகவு செலந்த நாடுகளில் ஒன்றாக ஆக்கிவிடுவதுடன் எஞ்சிய லிபியாவை உலகிலேயே வறிய நாடாக மாற்றிவும். சைரெனைக்கா தனக்கு என ஒரு மைய வங்கியையும் உருவாக்கி உலக நாடுகள் தம்மை அங்கீகரிக்கும் படி பரப்புரை செய்ய ஒரு கனடிய நிறுவனத்தின் சேவையையும் பெற்றுள்ளது. சைரெனைக்கா எண்ணையை ஏற்றுமதி செய்வதைத் தடுக்க லிபிய அரகு சைரெனைக்காவின் மீது ஒரு கடல் முற்றுகையைச் செய்தது.


லிபியாவின் படைத்துறைக் காவல் அதிபர் (head of Libya's military police) சட்டத்துறை தலைமை வழக்குத் தொடுநர், இந்திய மருத்துவர், இப்படிப் பலதரப்பட்டவர்களும் கொல்லப்படுகின்றார்கள். கடாஃபிக்குப் பிந்திய லிபியாவில் எவரும் பாதுகாப்பாக இல்லை.

Tuesday, 2 June 2015

இஸ்ரேலின் புதிய சூப்பர் டோராப் படகுகள்

இலங்கையைச் சூழவுள்ள கடலில் பெரிதும் பாவிக்கப்பட்ட இஸ்ரேலின் டோராப் படகுகள் மேம்படுத்தப் பட்டு இப்போது Super Dvora MKIII என்னும் பெயரில் புதிதாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் இஸ்ரேலின் டோராப் படகுகளுக்குக் கிடைத்த கசப்பான அனுபவமும் கருத்திக் கொண்டு புதிய டோராப் படகுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பிரதானமாக ரோந்து நடவடிக்கைக்கு உருவாக்கப் பட்ட டோராப் படகுகள் தாக்குதல்களையும் செய்யக் கூடியவை.

 Super Dvora MKIII படகுகள் கடற்தாக்குதல், கடல் கடந்த ரோந்து நடவடிக்கை, கடற்சட்ட அமூலாக்கம், கடற்கண்காணிப்பு, கடல் வேவு, கட்டளையும் கட்டுப்பாடும் ஆகிய படைத்துறை நடவடிக்கைகளுக்கும் தேடலும் விடுவித்தலும் மனிதாபிமான உதவி புரிதல் போன்ற குடிசார் நடவடிக்கைகளுக்கும் பயன்படக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இரண்டு டீசல் இயந்திரங்களால் Water jet எனப்படும் நீர்த்தாரை மூல இயங்கும்  Super Dvora MKIII படகுகள் ஐம்பது கடல்மைல்கள் வேகத்தில் பயணிக்கக் கூடியவை. அத்துடன் 1250 கடல் மைல்கள் தொடர்ந்து பயணிக்கக் கூடியவை.

27.4 மீட்டர் நீளமும் 5.7 மீட்டர் அகலமும் கொண்ட Super Dvora MKIII படகுகள் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. பலவிதமான படைக்கலன்களைப் பொருத்தக் கூடியவகையிலும் வருங்காலத்தில்  கண்டு பிடித்து  உற்பத்தி செய்யப்படும் படைக்கலன்களைப் பொருத்தக் கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் 12 பேர் தங்கக் கூடிய இருப்பிடம் குளிரூட்டப்பட்ட பணிமனை, மற்றும் பொழுது போக்குக் கூடங்கள், வசதியான நடைபாதை ஆகியவற்றையும் கொண்டுள்ளன.

இரவிலும் பகலிலும் சுடக்கூடிய a Rafael Typhoon stabilised 25mm cannon  என்னும் துப்பாக்கி Super Dvora MKIII படகுகளில் பொருத்தப் பட்டுள்ளன. அத்துடன் தேவை ஏற்படில் தொலைதூர மற்றும் குறுந்தூர ஏவுகணைச் செலுத்திகளும் தரையில் இருந்து தரைக்கு ஏவும் Hellfire surface-to-surface missilesகளும் இதில் பொருத்தப்படலாம்.

வேவுபார்க்கும் நவீன இலத்திரனியல் கருவிகளும்  anti-missile early warning radarஉம் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

Monday, 1 June 2015

தீவுகள் நிர்மானிக்கும் சீனாவும் ஆதிக்கம் செலுத்த வரும் அமெரிக்காவும்

 தென் சீனக் கடலில் ஸ்பிராட்லி தீவுக் கூட்டத்தில் உள்ள பவளப்பாறைகளை மேடுறுத்தி சீனா உருவாக்கிய தீவுகளின் மேல் 2015-05-20-ம் திகதி புதன் கிழமை ஐக்கிய அமெரிக்காவின் P8-A Poseidon என்னும் வேவு விமானம் சி.என்.என் தொலைக்காட்சிக் சேவையினர் சகிதம் பறந்து சென்றது. அமெரிக்காவின் விமானத்திற்கு சீனக் கடற்படையினர் எட்டுத் தடவைகள் எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பினர். ஸ்பிராட்லி தீவுக் கூட்டங்களில் உள்ள பியரி குரொஸ் என்னும் பவளப்பாறையை மேடாக்கி சீனா உருவாக்கிய தீவின் மேல் இச் சம்பவம் நடந்தது.

பிலிப்பைன்ஸில் இருந்து கிளம்பிய விமானம்.                   
அமெரிக்காவின் P8-A Poseidon போர் விமானம் வேவு பார்ப்பதற்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாடுவதற்கும் நீரின் மேற்பரப்பில் உள்ள கடற்கலங்கள் மீது தாக்குதல் நடாத்துவதற்கும் இலத்திரனியல் சமிக்ஞைகளை ஒற்றுக் கேட்பதற்கும் போயிங் நிறுவனத்தால் உருவாக்கப் பட்ட சிறப்பு விமானமாகும். ஒரு விமானத்தின் விலை 257 மில்லியன் டொலர்களாகும். சிறந்த நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்ட சீனாவிற்கு எதிராக P8-A Poseidon போர்விமானங்களை அமெரிக்கா பயன்படுத்துகின்றது. இதனால் இந்த விமானங்களை இந்தியாவும் அமெரிக்காவிடமிருந்து வாங்கியுள்ளது. பிலிப்பைன்ஸின் கிளார்க் விமானத் தளத்தில் இருந்து சி.என்.என் தொலைக்காட்சிச் சேவையினருடன் கிளம்பிய விமானம் 460 மைல்கள் பறந்து சீனா நிர்மாணித்த தீவின் மேல் உள்ள வான்பரப்பை அடைந்தது. சி.என்.என் தொலைக்காட்சியினர் சீனாவின் இயந்திரங்கள் கடற்படுக்கையில் இருந்து மணலை இறைத்துக் குவித்து தீவுகளை உருவாக்கிக் கொண்டிருப்பதை தாம் அவதானித்ததாகச் தெரிவித்தார்கள். தொடர்ந்து எட்டுத் தடவைகள் எச்சரிக்கை செய்தி அனுப்பிய சீனக்கடற்படையினரின் குரலில் இறுதியில் விரக்தி தென்பட்டதாகவும் அவர்கள் செய்தி வெளியிட்டனர். அமெரிக்கப் போர்விமானம் பறந்த அதே வேளை அமெரிக்க குடிசார் விமானச் சேவையான டெல்டாவின் விமானமும் அதே பகுதியில் பறந்தது. சீனா தனது கடற்படைக்கு என ஆழ்கடல் துறைமுகங்களையும் தென் சீனக் கடலில் உருவாக்குகின்றது.

அமெரிக்கா வரைந்த செங்கோடு
சீனாவின் தீவுகளின் மேல் பறந்த பின்னர் அமெரிக்க அரசு தமது கடற்கலன்களும் விமானங்களும் பன்னாட்டுச் சட்டத்திற்கு அமைய உலகின் எந்தப் பாகத்திற்கும் செல்லும் என்றது. சீனா தென் சீனக் கடலில் செய்யும் விரிவாக்கத்திற்கு அமெரிக்கா ஒரு செங்கோடு வரைந்துள்ளது என ஓர் அமெரிக்க ஊடகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் விமான ஓடுபாதை                                     
பியரி குரோஸில் சீனா அமைத்த தீவில் 3000 மீட்டர் நீளமான விமான ஓடுபாதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுபாதை 2015-ம் ஆண்டின் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகின்றது. அங்கு சீனக் கடற்படையினர் பெருமளவில் இருந்ததாக சி.என்.என் தொலைக்காட்ச்சிச் சேவையினர் தெரிவித்தனர். ஸ்பார்ட்லித் தீவுகளில் சீனா உருவாக்கும் தீவுகள் அத் தீவுகளுக்கு உரிமை கொண்டாடும் பிலிப்பைன்ஸ், வியட்னாம், மலேசியா, தாய்வான். புரூனே ஆகிய நாடுகளைக் கலக்கமடைய வைத்துள்ளது. இந்த நாடுகளுக்கு நம்பிக்கை கொடுக்கவும் தென் சீனக் கடலினூடாக உலகக் கப்பற் போக்கு வரத்துக்குள் சுந்ததிரமாக நடமாடுவதை உறுதி செய்யவும் தான் முயற்ச்சிப்பதாக அமெரிக்கா சொல்கின்றது.

தென் சீனக் கடலின் பின்னணி
தென் சீனக் கடலானது பசிபிக் பெருங்கடலுக்கும் இந்துப் பெருங்கடலுக்கும் இடையில் இருக்கும் 3.6 மில்லியன் சதுர கிலோமீட்டர் கடற்பரப்பாகும். இது வடக்குத் தெற்காக 1800 கிலோ மீட்டர்  நீளத்தையும் கிழக்கு மேற்காக 900 கிலோ மீற்றர் நீளத்தையும் கொண்டது. தென் சீனக் கடலில் பல குட்டித் தீவுகள் உள்ளன. இவற்றில் பல தீவுகள் கடல் பெருக்கெடுக்கும் போது முற்றாக நீரில் மூழ்கிவிடும். உலக கடற் போக்கு வரத்தில் அறுபது விழுக்காடு தென் சீனக் கடலினூடாக நடை பெறுகிறது. மொத்த வர்த்தக போக்குவரத்துப் பெறுமதி ஐந்து ரில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. தென் சீனக் கடலானது கப்பல் போக்கு வரத்திற்கும் கனிம வள இருப்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி விட்டது. அங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு இருக்கிறதென்ற செய்தி அப்பிராந்தியத்தை பல நாடுகள் முட்டி மோதக்கூடிய களமாக்கிவிட்டது. தென் சீனக்கடலில் 213 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.எரிவாயு 900 ரில்லியன் கன அடி இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  கடலுணவு வளமும் அங்கு நிறைய உண்டு.

சீனாவின் ஒன்பது புள்ளிக் கோடு
1947-ம் ஆண்டில் இருந்த சீன ஆட்சியாளர்கள் தென் சீனக் கடலில் தங்கள் ஆதிக்கத்தை ஒரு 11துண்டுக் கோடுகள் வரைபடத்தின் மூலம் வெளிப்படுத்தி இருந்தனர். பின்னர் 1949இல் சீனாவில் ஆட்சிக்கு வந்த பொதுவுடமை ஆட்சியாளரான சூ என் லாய் ஒரு 9 துண்டுக் கோடுகள் மூலம் தென் சீனக் கடலில் தமது ஆதிக்கத்தை வரையறை செய்தார். இதன்படி பரசெல்ஸ் தீவுகளும் ஸ்பிராட்லி தீவுகளும் தன்னுடையவை என்றது சீனா. பரசெல்ஸ் தீவுகள் தம்முடையவை என வியட்னாமும் தாய்வானும் சொல்கின்றன. பரசெல்ஸ் தீவுகளில் சில தமது நாடுகளுக்கு அண்மையில் இருப்பதால் அவை தம்முடையவை என்கின்றன இந்தோனேசியாவும் பிலிப்பைன்ஸும் புரூனியும், மலேசியாவும். தாய்வானும் சீனாவும் ஸ்பிராட்லி தீவுகளையும், பரசெல்ஸ் தீவுகளையும் தம்மிடம் ஜப்பான் கையளிக்க வேண்டும் என்கின்றன. தாய்வான் 1947இல் செய்யப்பட்ட 11 துண்டுக் கோடுகள் வரைபடத்தை ஒட்டி நிற்கிறது. சீனாவினதும் தாய்வானினதுக் கோரிக்கைகளிற்கு எந்த ஒரு பன்னாட்டு உடன்படிக்கையும் அடிப்படையாக அமையாவில்லை என வியட்னாம் வாதாடுகிறது. முழுத் தாய்வானும் தன்னுடையது என்று சீனா சொல்வதால் மேலும் சிக்கல்கள் இருக்கின்றன. சீனா தனது ஒன்பது புள்ளிக் கோட்டின் மூலம் தென் சீனக் கடலின் 90 விழுக்காடு பரப்பளவிற்கு உரிமை கொண்டாடுகின்றது.

உறுதியாக நிற்கும் சீனா
அமெரிக்காவின் வேவு விமானமான P8-A Poseidon சீனா பியரி குரொஸ் பவளப்பாறையில் உருவாக்கிய தீவின் மேற் பறந்ததால் சீனாவின் ஆத்திரத்தை அதன் வெளிநாட்டமைச்சர் வாங் யி வெளிப்படுத்தினார். சீனா தனது பிராந்திய ஒருமைபாட்டையும் இறைமையையும் பாதுகாக்கக் கொண்டுள்ள உறுதி பாறையைப் போல் உறுதியானது என்றார் அவர். பீஜிங் இந்த பிரதேச முரண்பாட்டை சுமூகமாகத் தீர்க்க முயல்கின்றது என்றும் அவர் சொன்னார்.

உலக அரங்கில் சீனா

தனது எரிபொருள் தேவையை நிறைவேற்றும் வழங்கல்களையும் வழங்கல் பாதையையும் உறுதி செய்தல், தனது நாணயத்தை உலக நாணயமாக்குதல், ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கும் தனது பொருளாதாரத்தை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் வைத்திருத்தல் ஆகியவை சீனாவின் தலையாய கேந்திரோபாயக் கொள்கைகளாக இப்போது இருக்கின்றது. உலக வங்கிக்கும் பன்னாட்டு நாணய நிதியத்திற்கும் போட்டியாக சீனா ஆரம்பித்துள்ள ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் 57 நாடுகள் இணைந்துள்ளன. அமெரிக்காவின் அதிருப்தியையும் மீறி பிரித்தானியாவும் ஒஸ்ரேலியாவும் கூட இதில் இணைந்துள்ளன. சீனாவிற்குத் தேவையான எரிபொருளும் அதன் ஏற்றுமதிகளும் அமெரிக்க ஆதிக்கத்தில் உள்ள கடற்பரப்புக்களைக் கடந்து செல்ல வேண்டி இருக்கின்றது என்பது சீனாவின் கரிசனையாகும். அமெரிக்க ஆதிக்கத்தில் இருந்து விடுபட முயலும் சீனாவை ஒடுக்க தென் சீனக் கடலையும் கிழக்குச் சீனக் கடலையும் அமெரிக்கா பாவிப்பதாக சீனாவில் உள்ள தேசிய வாதிகள் நம்புகின்றனர். 2008-ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அமெரிக்காவின் கிழக்கு நோக்கிய நகர்வும் அதன் ஆசியச் சுழற்ச்சி மையத் திட்டமும் தவிடு பொடியாகிவிடும் என சீனக் கொள்கை வகுப்பாளர்கள் நம்பியிருந்தனர். அவர்களின் நம்பிக்கையை சீனா உருவாக்கிய தீவுகளின் மேல் 2015-05-20-ம் திகதி புதன் கிழமை ஐக்கிய அமெரிக்காவின் என்னும் வேவு விமானம் P8-A Poseidon சி.என்.என் தொலைக்காட்சிக் சேவையினர் சகிதம் பறந்து சென்றமை சிதறடித்தது.

தன் வலு காட்டும் சீனா
சீனாவின் முன்னாள் அதிபர் டெங் சியொபிங் (Deng Xiaoping) "சீனாவின் படைவலுவை மறைத்துவை, தருணம்  வரும்வரை காத்திரு" என்ற கொள்கையுடன் இருந்தார். ஆனால் தற்போதைய அதிபர் சி ஜின்பிங் சீனாவின் படைவலுவைப் பகிரங்கப் படுத்தும் கொள்கையை மேற்கொண்டுள்ளார். மே மாதம் 25-ம் திகதி சீன வெளிநாட்டமைச்சு அமெரிக்க வேவு விமானம் தனது தீவின் மேலாகப் பறந்தது தொடர்பாக தனதுஆட்சேபனையை அமெரிக்காவிடம் தெரிவித்தது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர் தென் சீனக் கடலில் சீனா கட்டும் தீவுகளில் இருந்து 12 மைல் தொலைவில் அமெரிக்க வான் படையும் கடற்படையும் சீனாவிற்கு சவால் விடும் வகையில் செல்லக் கூடியதாகத் திட்டங்கள் வரையும்படி பணித்துள்ளார். அதேவேளைசீனப்படையினரின் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய சீன மக்கள் படைத் தளபதி யாங் யுஜுன் (Yang Yujun) வெளி வல்லரசுகள் சீனப் படையினரின் மதிப்பைக் கெடுக்கும் விதத்தில் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தினார்.
சீனாவின் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமானவை:
1.  சீனாவின் கடற்படைக் கட்டமைப்பு சீனாவின் தேசிய பாதுகாப்புக்கும், நலன்களுக்கும் இறைமைக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தக் கூடிய வகையில் மாற்றியமைக்கப்படும்
2. ஜப்பான் மீள் படைத்துறை மயமாக்கல் செய்கின்றது என்பதை சீனா கருத்தில் கொண்டுள்ளது. .
3. உலக கேந்திரோபாய ஈர்ப்பு மையம் ஆசிய பசுபிக் பிராந்தியத்தை நோக்கி விரைவாக நகர்கின்றது
4. அமெரிக்காவுடனும் மற்ற மேற்கு நாடுகளுடனும் முறுகல் நிலையில் உள்ள இரசியாவுடன் கேந்திரோபாய் ஒத்துழைப்பை சீனா மேற்கொள்ளும்.
5. தென் சீனக் கடலில் உரிமை கொண்டாடும் அயல் நாடுகள் ஆத்திர மூட்டும் நடவடிக்கைகளைச் செய்கின்ற வேளையில் வெளி வல்லரசுகள் அங்கு குழப்பம் விளைவிக்க முயல்கின்றன.
6. கடலிலும் பார்க்கத் தரை முக்கியமானது என்ற மரபுவழி மனப்பான்மை மாற்றப்பட வேண்டும்.
7. சீன வான்படை பாதுகாப்பிற்கு மட்டுமன்றித் தாக்குதல்களுக்கும் ஏற்ற வகையில் மாற்றப்படும்.
8. இணையவெளிப் படைப்பிரிவு உருவாக்கப்படும்.
சீனாவின் படையில் 23 இலட்சம் பேர் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் 73 விழுக்காடு தரைப்படையினரும், 17 விழுக்காடு வான்படையினரும் 10 விழுக்காடு கடற்படையினரும் அடங்கும்.

தென் சீனக் கடலில் சீனாவின் விரிவாக்கம் தடுக்கப்பட முடியாது என்கின்றார் வஷிங்டன் போர்க் கல்லூரிப் பேராசிரியர் பேர்னார்ட் டி கோல்.

Saturday, 30 May 2015

வெள்ளை மாளிகையில் பர்மிய இனக் கொலையாளி: தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது.

இது 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் இட்ட பதிவு:

பர்மிய(மியன்மார்) படைத்துறை ஆட்சியாளரான தெயின் செயின் ஐக்கிய அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்துள்ளார். பல மனித உரிமை அமைப்புக்களினதும் தெயின் செயினால் பாதிக்கப்பட்டவர்களினதும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இது நடந்துள்ளது. 

பர்மாவா மியன்மாரா?
பர்மாவில் பல முசுலிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டபோது அதைத் தடுக்க எதுவும் செய்யாமல் அதிபர் தெயின் செயின் இருந்த செய்தி எமது காதுகளில் இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் வேளையில் பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் தெயின் செயினைச் சந்தித்துள்ளார். இதுவரை காலமும் படைத்துறை ஆட்சியாளர்கள் பர்மாவிற்கு வைத்த மியன்மார் என்னும் பெயரை வெள்ளை மாளிகை ஏற்க மறுத்திருந்தது. இப்போது தன் நிலைப்பாட்டை மாற்றி  மியன்மார் எனச் சொல்லத் தொடங்கிவிட்டது. 

ஒரு சில மாதங்களின் முன்னர் தீண்டத்தகாத ஆட்சியாளர் என "பன்னாட்டுச் சமூகத்தினரால்" கருதப்பட்ட தெயின் செயின் திடீரென நல்லவராகி விட்டது எப்படி? பத்திரிகைகளில் தனக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தவரை அறுபது ஆண்டுகள் சிறைத்தண்டன வழங்கியவரை ஒபாமா எப்படி வெள்ளை மாளிகைக்கு அழைத்தார்? பர்மாவில் சில அரசியல் சீர்திருத்தங்கள் செய்தது உண்மைதான் ஆனால் இப்போதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை படைத்துறையினரால் கலைக்க முடியும். 

ராகினிய மாகாணத்தில் இனச் சுத்திகரிப்பு
பர்மாவின் ராகினி மாகாணத்தில் வாழ்ந்த முசுலிம்களை அங்குள்ள பௌத்தர்கள் அரச படையினரின் உதவியுடன் கொன்று குவித்து வீடுகளைக் கொழுத்தித் தரைமட்டமாக்கி பெரும் இனச் சுத்திகரிப்பைச் செய்தனர். பல மனித உரிமை அமைப்புக்கள் இதை ஒரு மானிடத்திற்கு எதிரான ஒரு குற்றமாக கருதுகின்றன. ராகினி மாகாணத்தில் இருக்கும் எரிபொருள் வளமே அங்கு வாழ்ந்த முசுலிம்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் உலை வைத்தது. "பன்னாட்டுச் சமூகம்" சும்மா பார்த்துக் கொண்டிருக்கிறது. மன்னாரில் எண்ணெய் வளம் இருப்பதாக இலங்கை அரசு நம்பியது ஞாபகத்திற்கு வருகிறது. புத்த பிக்குக்க்கள் முசுலிம் மக்களுக்கு எதிரான தாக்குதலை முன்னின்று நடாத்துகின்றனர். 2007இல் இலங்கையில் போர் வேண்டாம் என படையினரும் போர் வேண்டும் என பிக்குகளும் கருதுவதாக ஆய்வுகள் தெரிவித்தன. மிதிவண்டியில் சென்ற இசுலாமியப் பெண் ஓர் 11 வயது பிக்குவின் மீது மோதி அவரது கையில் இருந்த பிச்சாபாத்திரத்தை உடைத்ததால் இனக்கலவரம் மூண்டது எனச் சொல்லப்படுகிறது.

கச்சின் மாகாணத்தில் இனக்கொலை
பர்மாவின் கச்சின் மாகாணத்தில் சிறுபான்மைக் கிருத்தவர்கள் பெரும்பானமை பௌத்தர்களின் அடக்கு முறைக்கு எதிராக பிரிவினைப் போரை ஆரம்பித்தனர். பின்னர் போர் நிறுத்தம் செய்து சுயநிர்ணய உரிமை கோரி சமாதானப் பேச்சு வார்த்தையை 1994இல் ஆரம்பித்தனர் (ஈழத் தமிழர்களைப் போலவே). 14 ஆண்டுகள் இழுபட்ட பேச்சு வார்த்தையின் பின்னர் கச்சின் போராளிகளை படைக்கலன்களை ஒப்படைத்து விட்டு பர்மியப் படையினருடன் இணையும் படி வற்புறுத்தினர். பின்னர் பேச்சு வார்த்தை 2011இல் முறிந்து போர் மூண்டது. (ஈழத்தைப் போலவே). போர் முனைக்கு உணவு மற்றும் மருந்துகள்  செல்வதை பர்மியப் படைகள் தடுத்தன. (ஈழத்தைப் போலவே). போர் முனையில் அகப்பட்ட மக்களுக்கு உணவு போடச் செல்வதாகப் பொய் சொல்லிக் கொண்டு பர்மிய விமானங்கள் அப்பாவி மக்கள் மீது குண்டுகளை வீசின. ( பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மக்களை மீட்பதற்கான போர் என இலங்கை அரசு பொய் சொல்லிக் கொண்டு அப்பாவிகளைக் கொன்று குவித்தது போல். )  போர் நடக்கும் போது அமெரிக்காவும் சீனாவும் தமது கரிசனையைத் தெரிவித்தன. ( ஈழத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் செய்தது போல்). நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூயி அம்மையார் தான் இந்த இனக்கொலையில் தலையிடப்போவதில்லை என்றார். (வாக்கு வேட்டை அரசியல்). 2013 ஜனவரியில் கச்சின் மக்களுக்கு எதிராக விமானத் தாக்குதல் நடத்த வேண்டாம் என்றது ஐக்கிய நாடுகள் சபை. கடுமையான விமானத் தாக்குதலையிட்டு தாம் கவலையடைந்துள்ளதாக தெரிவித்த ஐக்கிய அமெரிக்கா பிரச்சனைக்கு படைத்துறத் தீர்வு கிடையாது எனவும் கூறியது. ( ஈழத்திலும் இதையே சொன்னார்கள்). 

இத்தனைக்கும் மத்தியில் ஐக்கிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா படைத்துறை ஆட்சியாளரான தெயின் செயினை வெள்ளை மாளிகையில் ஏன் சந்தித்தார்? ஒரு அரசியல் ஆய்வாளர் இப்படிச் சொன்னார்:
  • The reopening of Burma to the Western world is a blow to Chinese influence in Southeast Asia. For much of the past 20 years China was one of the big investors in Burma.
பர்மிய அரசு சீனாவில் இருந்து விலகி மேற்கு நாடுகளின் சார்பாக மாறியதுதான் காரணம். சீனப் பிடியில் இருந்து இலங்கையில் சீன ஆதிக்கம் அகற்றப்படுமானால் நாளை ராஜ்பக்ச சகோதரர்கள் வெள்ளை மாளிகையில் விருந்து உண்பார்கள்.

Tuesday, 26 May 2015

மோடி மேம்படுத்துவது இந்தியாவின் வர்த்தகத்தையா? அல்லது வர்த்தகர்களையா?

இந்தியாவும் சீனாவும் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் தமது பிரச்சனைகளை ஒரு புறம் வைத்து விட்டு இரு நாடுகளும் தமது பொருளாதரப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மோடியின் சீனப் பயணத்தைப் பயன்படுத்தின. சீனா வலுவாக இருக்கும் துறைகளில் நாம் சீனாவின் சேவைகளைப் பெற விரும்புகின்றோம் என்றார் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தனது சீனப் பயணத்தின் போது. மேலும் அவர் இந்தியாவின் அபிவிருத்தியில் சீனாவின் ஈடுபாட்டையும், வாய்ப்பையும், திறனையும் இந்தியாவில் காட்டும் படி வேண்டுகின்றோம் என்றார்.

மோடியின் மூன்று நாள் (மே மாதம் 14,15,16-ம் திகதிகள்) சீனப் பயணத்தை முழுக்க முழுக்க வர்த்தக நோக்கத்திற்காகப் பயன்படுத்த சீனாவும் இந்தியாவும் முயன்றன.  உலகின் முன்னணி நாடுகளில் வேகமாக வளரும் நாடு என்ற சீனாவின் இடத்தை இந்த ஆண்டு இந்தியா பிடிக்க இருக்கும் வேளையில் மோடியின் சீனப் பயணம் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது. 2014-ம் ஆண்டு சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியாவிற்குப் பயணம் செய்த வேளை சீனப் படைகள் இந்தியாவினுள் ஊடுருவி இருந்தன.  ஆனால் மோடியின் சீனப் பயணத்திற்கு சீனா அதிக முக்கியத்துவம் கொடுப்பது போல் காட்டிக் கொண்டது. இனிவரும் காலங்களில் உலகிலேயே வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டவிருக்கும் இந்தியாவுடனான வர்த்தகம் சீனாவிற்கு அவசியமான ஒன்றாகும்.

சண்டை சண்டையாக இருக்கட்டும் வியாபாரத்தைக் கவனி
உலகில் எந்த இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு என்று பார்க்கும் போது ஒரு நீண்ட வரலாறு இருக்கும். ஆனால் சீன இந்திய இடையிலான உறவு வரலாறு ஒப்புவமை இல்லாமல் நீண்டது எனச் சொல்லலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாகவும் சீனா இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகவும் ரோமப் பேரரசு மூன்றாவது பெரிய நாடாகவும் இருந்தன. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சீனா, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் இந்த இடங்களைப் பிடித்தன. இந்தியா மீண்டும் உலகத்தில் பெரிய பொருளாதார நாடாக வரத் துடிக்கின்றது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத பிரச்சனையாக இருப்பவை:

1. அருணச்சலப் பிரதேசம் யாருக்குச் சொந்தம்
2. இந்தியாவிற்கு சீனாவிற்கும் இடையிலான 4,000கிலே மீட்டர் எல்லைப் பிரச்சனை.
3. சீனா கைப்பற்றிய இந்திய நிலப்பரப்பு
4. பாக்கிஸ்த்தானின் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரூடாக சீனா ஒரு பெரும் தெருவை அமைப்பது
5. தீபெத் தொடர்பாகவும் தலாய் லாமா தொடர்பாகவும் இரு நாடுகளின் முரண்பட்ட நிலைப்பாடுகள்.

இவை எல்லாவற்றிலும் மேலாக இரு நாடுகளிற்கும் இடையில் உள்ள வர்த்தகச் சமநிலை பெரும் பிரச்சனையாக இருக்கின்றது.

மெதுவாகச் செல்லும் புல்லட் தொடரூந்து.
மோடியின் சீனப் பயணத்திற்கு முன்னர் புது டில்லியில் இருந்து சென்னைக்கான புல்லட் எனப்படும் மிக விரைவு தொடரூந்துத் திட்டத்தை நிறவேற்றுவதைத் துரிதப் படுத்தும் படி சீனா இந்தியாவிடம் வேண்டு கோள் விடுத்தது. சீனா இந்தியாவில் செய்யவுள்ள இத் திட்டம் 36பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியுடையதாகும். நாளொன்றிற்கு இரண்டரைக் கோடி மக்கள் பாவிக்கும் இந்தியத் தொடரூந்துச் சேவையை மேம்படுத்தும் மோடியின் திட்டத்தில் தான் பங்கு பற்றி இலாபம் ஈட்டுவது சீனாவின் நோக்கமாகும். முன்னோடித் திட்டமான சென்னையில் இருந்து பெங்களூருவிற்கான தொடரூந்துப் பாதையை மேம்படுத்தும் திட்டத்தையாவது உடனடியாக ஆரம்பிக்க சீனா விரும்புகிறது.

சீன் போட்டு ஃபில்ம் காட்டத் தவறாத மோடி
சீனாவில் உரையாற்றும் போது "இருதரப்பினருக்கும் இடையிலான பங்காண்மையை முழுமையாகச் செயற்படுத்தமுடியாமல் பின் இழுப்பவைகள்  பற்றி நாம் கவனம் செலுத்த வேண்டிய தேவையை நான் இங்கு அழுத்திக் கூற விரும்புகின்றேன். இந்தியாவிற்கென்று சில மனக் குறைகள் உண்டு." என்றார் மோடி.  இந்தியாவிற்கும் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்ட மோடியின் உரையில் "சீனா இருதரப்பு உறவை கேந்திரோபாயமாகவும் நீண்டகால அடிப்படையிலும் நோக்க வேண்டும்." என்பதையும் தெரிவித்தார். மோடியில் உரை வழமையாக ஆசிய நாட்டுத் தலைவர்கள் வேறு நாடுகளில் ஆற்றும் உரையுடன் ஒப்பிடுகையில் சற்றுக் கடினமான தொனியில் இருந்ததாகக் கருதப்படுகின்றது. அவர் இந்தியர்களுக்குச் "சீன் போடுவதிலும் ஃபில்ம் காட்டுவதிலும்" வல்லவர். அதனால் இந்தியாவில் ஒளிபரப்பப்படும் தன் உரையை நன்கு பயன்படுத்திக் கொண்டார்.

சமமடையாத வர்த்தகச் சமநிலை
2000-ம் ஆண்டு இரண்டு பில்லியன் டொலர்களாக இருந்த சீன வர்த்தக வர்த்தகம் தற்போது 75பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இது சீன அமெரிக்க வர்தகத்தின் பெறுமதியான 569 பில்லியன்களுடன் ஒப்பிடுகையில் சிறிதளவாகும். இரு நாடுகளும் 2015-ம் ஆண்டு தமக்கிடையிலேயான வர்த்தகத்தை 100 பில்லியன் டொலர்களாக உயர்தத் திட்டமிட்டுள்ளன.  இரு நாடுகளும் வர்த்தக ரீதியில் ஒன்றுக்கு ஒன்றைத் தேவையாக இருக்கின்றன. ஆனால் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் சீனாவிற்குச் சாதகமாக இருக்கின்றது. 2014-15-ம் ஆண்டிற்கான இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தகத்தில் சீனாவிலிருந்து இந்தியா செய்யும் இறக்குமதி 60.39பில்லியன் டொலர்களாகவும் சீனாவிற்கான இந்திய ஏற்றுமதி 11.95 பில்லியன் டொலர்களாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா வர்த்தகம் செய்யும் முன்னணி 25 நாடுகளில் 16 நாடுகளுக்கு இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதியிலும் பார்க்கக் குறைவானதாகும். ஈராக்குடனான இந்திய வர்த்தகத்தில் 93 விழுக்காடு இந்தியா செய்யும் இறக்குமதியாகும். இந்த விழுக்காடு சுவிஸ்ற்லாந்துடன் 83ஆகவும் ஒஸ்ரேலியாவுடன் 62ஆகவும் இருக்கின்றது. இந்தியாவின் உற்பத்தித் துறை வலுவற்றதாகும். தனது ஒரு பில்லியன்களுக்கு மேற்பட்ட மக்களுக்குத் தேவையான தரம் மிக்க பொருட்களை இந்தியா உற்பத்தி செய்ய முடியாமல் இருக்கின்றது. இதனால் இந்தியாவின் இறக்குமதி அது மற்ற நாடுகளுக்குச் செய்யும் ஏற்றுமதியிலும் குறைவானதாக இருக்கின்றது. சீனா தனது தரம் குறைந்த உற்பத்திப் பொருட்களை இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது எனக் குறியீடு இட்டு ஆபிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததாகவும் குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டது. இதன் மூலம் சீனா உலக அரங்கில் இந்திய உற்பத்திப் பொருட்களை பற்றிய தாழ்வான எண்ணத்தை உருவாக்க முயல்வதுடன் ஆபிரிக்காவில் உள்ள வறிய மக்களிடம் தனது வர்த்தகத்தைச் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்தியா தனது மருந்துகளையும் இறைச்சி வகைகளையும் தகவல் தொழில்நுட்பச் சேவைகளையும் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதை அதிகரிக்க முயல்கின்றது.

ஏற்றுமதியில் பின்தங்கிய இந்தியா
சீனா இந்தியாவிற்கு தான் உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது. இவற்றில் தொலைதொடர்புச் சாதனங்களும், கணனி வன்பொருட்களூம், தொழிற்துறை இயந்திரங்களும் முக்கியமானவையாக இருக்கின்றன. இந்தியா சீனாவிற்கு பெரும்பாலும் மூலப் பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது. அவை முக்கியமாக உள்ளவை பருத்தி, செப்பு, இரும்புத்தாது, பெற்றோலியப் பொருட்களாகும். உலக அரங்கில் ஏற்றுமதித் துறையில் சீனா போட்டி போடத் தொடங்கி பதின்மூன்று ஆண்டுகளின் பின்னரே இந்தியா ஏற்றுமதித் துறையில் உலக அரங்கில் போட்டி போடத் தொடங்கியது. சீனர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. இந்தியாவில் முதலீடு செய்யும் நாடுகளின் பட்டியலில் ஐக்கிய இராச்சியம் முதலாம் இடத்திலும் சீனா பத்தாம் இடத்திலும் இருக்கின்றன. இந்தியாவில் சீனாவிலும் பார்க்க மலேசியா போலாந்து ஆகிய நாடுகள் அதிக முதலீடு செய்கின்றன. கடந்த 14 ஆண்டுகளில் ஐக்கிய இராச்சியம் 21.5பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது. ஆனால் சீனாவின் முதலீடு அரை பில்லியன் டொலர்களிற்கும் குறைவானதாகும்.

பாக்கிஸ்த்தானிலும் சிறிய இந்தியா
மோடியின் சீனப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் 22 பில்லியன் டொலர்கள் பெறுமதியான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டன. ஆனால் இந்தியர்கள் தமது சாதனைகளை எப்போதும் பாக்கிஸ்த்தானுடன் ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள். சீனாவும் பாக்கிஸ்த்தானும் செய்து கொண்ட 46 பில்லியன் டொலர்கள் பெறுமதியான உடன்படிக்கையுடன் ஒப்பிடுகையில் சிறிதாகும். இதை காங்கிரசுக் கட்சியின் மணிசங்கர ஐயர் பெரிதாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

வர்த்தகர்களின் மேம்பாடுகள்
மோடியின் சீனப் பயணத்தின் போது பார்த்தி எயார்டெல் நிறுவனத்திற்கு சீன அபிவிருத்தி வங்கி இரண்டு பில்லியன் டொலர்கள் கடன் வழங்க உடன்பட்டது. அத்துடன் பார்த்தி எயார்டெல் நிறுவனம் சைனா மொபைல் நிறுவனத்துடன் கேந்திரோபாய ஒத்துழைப்புச் செய்வதாகவும் ஒத்துக் கொள்ளப்பட்டது. மேலும் அம்பானிகளின் எஸ்ஸார் ஓயில் நிறுவனத்திற்கும் ரிலையன்ஸ் குரூப்பிற்கும் 1.2பில்லியன் டொலர்கள் கடனை சீன அபிவிருத்தி வங்கி கொடுப்பதாக ஒத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அடானிக்குச் சொந்தமான சீன நிறுவனம் ஒன்றுடன் இணைந்து சூரிய ஒளியில் இருந்து மின் உற்பத்தி செய்யும் தொழில் ஆரம்பிப்பதாகவும் ஒத்துக் கொள்ளப்பட்டது.

மோடியின் சீனப் பயணம் இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தக மேம்பாட்டிலும் பார்க்க ஆளும் கட்சிக்கு தேர்தலில் உதவி செய்த வர்த்தகர்களின் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தியதா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...