இந்தியாவும் சீனாவும் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் தமது பிரச்சனைகளை ஒரு புறம் வைத்து விட்டு இரு நாடுகளும் தமது பொருளாதரப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மோடியின் சீனப் பயணத்தைப் பயன்படுத்தின. சீனா வலுவாக இருக்கும் துறைகளில் நாம் சீனாவின் சேவைகளைப் பெற விரும்புகின்றோம் என்றார் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தனது சீனப் பயணத்தின் போது. மேலும் அவர் இந்தியாவின் அபிவிருத்தியில் சீனாவின் ஈடுபாட்டையும், வாய்ப்பையும், திறனையும் இந்தியாவில் காட்டும் படி வேண்டுகின்றோம் என்றார்.
மோடியின் மூன்று நாள் (மே மாதம் 14,15,16-ம் திகதிகள்) சீனப் பயணத்தை முழுக்க முழுக்க வர்த்தக நோக்கத்திற்காகப் பயன்படுத்த சீனாவும் இந்தியாவும் முயன்றன. உலகின் முன்னணி நாடுகளில் வேகமாக வளரும் நாடு என்ற சீனாவின் இடத்தை இந்த ஆண்டு இந்தியா பிடிக்க இருக்கும் வேளையில் மோடியின் சீனப் பயணம் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது. 2014-ம் ஆண்டு சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியாவிற்குப் பயணம் செய்த வேளை சீனப் படைகள் இந்தியாவினுள் ஊடுருவி இருந்தன. ஆனால் மோடியின் சீனப் பயணத்திற்கு சீனா அதிக முக்கியத்துவம் கொடுப்பது போல் காட்டிக் கொண்டது. இனிவரும் காலங்களில் உலகிலேயே வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டவிருக்கும் இந்தியாவுடனான வர்த்தகம் சீனாவிற்கு அவசியமான ஒன்றாகும்.
சண்டை சண்டையாக இருக்கட்டும் வியாபாரத்தைக் கவனி
உலகில் எந்த இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு என்று பார்க்கும் போது ஒரு நீண்ட வரலாறு இருக்கும். ஆனால் சீன இந்திய இடையிலான உறவு வரலாறு ஒப்புவமை இல்லாமல் நீண்டது எனச் சொல்லலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாகவும் சீனா இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகவும் ரோமப் பேரரசு மூன்றாவது பெரிய நாடாகவும் இருந்தன. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சீனா, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் இந்த இடங்களைப் பிடித்தன. இந்தியா மீண்டும் உலகத்தில் பெரிய பொருளாதார நாடாக வரத் துடிக்கின்றது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத பிரச்சனையாக இருப்பவை:
1. அருணச்சலப் பிரதேசம் யாருக்குச் சொந்தம்
2. இந்தியாவிற்கு சீனாவிற்கும் இடையிலான 4,000கிலே மீட்டர் எல்லைப் பிரச்சனை.
3. சீனா கைப்பற்றிய இந்திய நிலப்பரப்பு
4. பாக்கிஸ்த்தானின் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரூடாக சீனா ஒரு பெரும் தெருவை அமைப்பது
5. தீபெத் தொடர்பாகவும் தலாய் லாமா தொடர்பாகவும் இரு நாடுகளின் முரண்பட்ட நிலைப்பாடுகள்.
இவை எல்லாவற்றிலும் மேலாக இரு நாடுகளிற்கும் இடையில் உள்ள வர்த்தகச் சமநிலை பெரும் பிரச்சனையாக இருக்கின்றது.
மெதுவாகச் செல்லும் புல்லட் தொடரூந்து.
மோடியின் சீனப் பயணத்திற்கு முன்னர் புது டில்லியில் இருந்து சென்னைக்கான புல்லட் எனப்படும் மிக விரைவு தொடரூந்துத் திட்டத்தை நிறவேற்றுவதைத் துரிதப் படுத்தும் படி சீனா இந்தியாவிடம் வேண்டு கோள் விடுத்தது. சீனா இந்தியாவில் செய்யவுள்ள இத் திட்டம் 36பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியுடையதாகும். நாளொன்றிற்கு இரண்டரைக் கோடி மக்கள் பாவிக்கும் இந்தியத் தொடரூந்துச் சேவையை மேம்படுத்தும் மோடியின் திட்டத்தில் தான் பங்கு பற்றி இலாபம் ஈட்டுவது சீனாவின் நோக்கமாகும். முன்னோடித் திட்டமான சென்னையில் இருந்து பெங்களூருவிற்கான தொடரூந்துப் பாதையை மேம்படுத்தும் திட்டத்தையாவது உடனடியாக ஆரம்பிக்க சீனா விரும்புகிறது.
சீன் போட்டு ஃபில்ம் காட்டத் தவறாத மோடி
சீனாவில் உரையாற்றும் போது "இருதரப்பினருக்கும் இடையிலான பங்காண்மையை முழுமையாகச் செயற்படுத்தமுடியாமல் பின் இழுப்பவைகள் பற்றி நாம் கவனம் செலுத்த வேண்டிய தேவையை நான் இங்கு அழுத்திக் கூற விரும்புகின்றேன். இந்தியாவிற்கென்று சில மனக் குறைகள் உண்டு." என்றார் மோடி. இந்தியாவிற்கும் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்ட மோடியின் உரையில் "சீனா இருதரப்பு உறவை கேந்திரோபாயமாகவும் நீண்டகால அடிப்படையிலும் நோக்க வேண்டும்." என்பதையும் தெரிவித்தார். மோடியில் உரை வழமையாக ஆசிய நாட்டுத் தலைவர்கள் வேறு நாடுகளில் ஆற்றும் உரையுடன் ஒப்பிடுகையில் சற்றுக் கடினமான தொனியில் இருந்ததாகக் கருதப்படுகின்றது. அவர் இந்தியர்களுக்குச் "சீன் போடுவதிலும் ஃபில்ம் காட்டுவதிலும்" வல்லவர். அதனால் இந்தியாவில் ஒளிபரப்பப்படும் தன் உரையை நன்கு பயன்படுத்திக் கொண்டார்.
சமமடையாத வர்த்தகச் சமநிலை
2000-ம் ஆண்டு இரண்டு பில்லியன் டொலர்களாக இருந்த சீன வர்த்தக வர்த்தகம் தற்போது 75பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இது சீன அமெரிக்க வர்தகத்தின் பெறுமதியான 569 பில்லியன்களுடன் ஒப்பிடுகையில் சிறிதளவாகும். இரு நாடுகளும் 2015-ம் ஆண்டு தமக்கிடையிலேயான வர்த்தகத்தை 100 பில்லியன் டொலர்களாக உயர்தத் திட்டமிட்டுள்ளன. இரு நாடுகளும் வர்த்தக ரீதியில் ஒன்றுக்கு ஒன்றைத் தேவையாக இருக்கின்றன. ஆனால் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் சீனாவிற்குச் சாதகமாக இருக்கின்றது. 2014-15-ம் ஆண்டிற்கான இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தகத்தில் சீனாவிலிருந்து இந்தியா செய்யும் இறக்குமதி 60.39பில்லியன் டொலர்களாகவும் சீனாவிற்கான இந்திய ஏற்றுமதி 11.95 பில்லியன் டொலர்களாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா வர்த்தகம் செய்யும் முன்னணி 25 நாடுகளில் 16 நாடுகளுக்கு இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதியிலும் பார்க்கக் குறைவானதாகும். ஈராக்குடனான இந்திய வர்த்தகத்தில் 93 விழுக்காடு இந்தியா செய்யும் இறக்குமதியாகும். இந்த விழுக்காடு சுவிஸ்ற்லாந்துடன் 83ஆகவும் ஒஸ்ரேலியாவுடன் 62ஆகவும் இருக்கின்றது. இந்தியாவின் உற்பத்தித் துறை வலுவற்றதாகும். தனது ஒரு பில்லியன்களுக்கு மேற்பட்ட மக்களுக்குத் தேவையான தரம் மிக்க பொருட்களை இந்தியா உற்பத்தி செய்ய முடியாமல் இருக்கின்றது. இதனால் இந்தியாவின் இறக்குமதி அது மற்ற நாடுகளுக்குச் செய்யும் ஏற்றுமதியிலும் குறைவானதாக இருக்கின்றது. சீனா தனது தரம் குறைந்த உற்பத்திப் பொருட்களை இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது எனக் குறியீடு இட்டு ஆபிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததாகவும் குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டது. இதன் மூலம் சீனா உலக அரங்கில் இந்திய உற்பத்திப் பொருட்களை பற்றிய தாழ்வான எண்ணத்தை உருவாக்க முயல்வதுடன் ஆபிரிக்காவில் உள்ள வறிய மக்களிடம் தனது வர்த்தகத்தைச் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்தியா தனது மருந்துகளையும் இறைச்சி வகைகளையும் தகவல் தொழில்நுட்பச் சேவைகளையும் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதை அதிகரிக்க முயல்கின்றது.
ஏற்றுமதியில் பின்தங்கிய இந்தியா
சீனா இந்தியாவிற்கு தான் உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது. இவற்றில் தொலைதொடர்புச் சாதனங்களும், கணனி வன்பொருட்களூம், தொழிற்துறை இயந்திரங்களும் முக்கியமானவையாக இருக்கின்றன. இந்தியா சீனாவிற்கு பெரும்பாலும் மூலப் பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது. அவை முக்கியமாக உள்ளவை பருத்தி, செப்பு, இரும்புத்தாது, பெற்றோலியப் பொருட்களாகும். உலக அரங்கில் ஏற்றுமதித் துறையில் சீனா போட்டி போடத் தொடங்கி பதின்மூன்று ஆண்டுகளின் பின்னரே இந்தியா ஏற்றுமதித் துறையில் உலக அரங்கில் போட்டி போடத் தொடங்கியது. சீனர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. இந்தியாவில் முதலீடு செய்யும் நாடுகளின் பட்டியலில் ஐக்கிய இராச்சியம் முதலாம் இடத்திலும் சீனா பத்தாம் இடத்திலும் இருக்கின்றன. இந்தியாவில் சீனாவிலும் பார்க்க மலேசியா போலாந்து ஆகிய நாடுகள் அதிக முதலீடு செய்கின்றன. கடந்த 14 ஆண்டுகளில் ஐக்கிய இராச்சியம் 21.5பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது. ஆனால் சீனாவின் முதலீடு அரை பில்லியன் டொலர்களிற்கும் குறைவானதாகும்.
பாக்கிஸ்த்தானிலும் சிறிய இந்தியா
மோடியின் சீனப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் 22 பில்லியன் டொலர்கள் பெறுமதியான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டன. ஆனால் இந்தியர்கள் தமது சாதனைகளை எப்போதும் பாக்கிஸ்த்தானுடன் ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள். சீனாவும் பாக்கிஸ்த்தானும் செய்து கொண்ட 46 பில்லியன் டொலர்கள் பெறுமதியான உடன்படிக்கையுடன் ஒப்பிடுகையில் சிறிதாகும். இதை காங்கிரசுக் கட்சியின் மணிசங்கர ஐயர் பெரிதாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.
வர்த்தகர்களின் மேம்பாடுகள்
மோடியின் சீனப் பயணத்தின் போது பார்த்தி எயார்டெல் நிறுவனத்திற்கு சீன அபிவிருத்தி வங்கி இரண்டு பில்லியன் டொலர்கள் கடன் வழங்க உடன்பட்டது. அத்துடன் பார்த்தி எயார்டெல் நிறுவனம் சைனா மொபைல் நிறுவனத்துடன் கேந்திரோபாய ஒத்துழைப்புச் செய்வதாகவும் ஒத்துக் கொள்ளப்பட்டது. மேலும் அம்பானிகளின் எஸ்ஸார் ஓயில் நிறுவனத்திற்கும் ரிலையன்ஸ் குரூப்பிற்கும் 1.2பில்லியன் டொலர்கள் கடனை சீன அபிவிருத்தி வங்கி கொடுப்பதாக ஒத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அடானிக்குச் சொந்தமான சீன நிறுவனம் ஒன்றுடன் இணைந்து சூரிய ஒளியில் இருந்து மின் உற்பத்தி செய்யும் தொழில் ஆரம்பிப்பதாகவும் ஒத்துக் கொள்ளப்பட்டது.
மோடியின் சீனப் பயணம் இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தக மேம்பாட்டிலும் பார்க்க ஆளும் கட்சிக்கு தேர்தலில் உதவி செய்த வர்த்தகர்களின் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தியதா?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment