தென் சீனக் கடலில் ஸ்பிராட்லி தீவுக் கூட்டத்தில் உள்ள பவளப்பாறைகளை மேடுறுத்தி சீனா உருவாக்கிய தீவுகளின் மேல் 2015-05-20-ம் திகதி புதன் கிழமை ஐக்கிய அமெரிக்காவின் P8-A Poseidon என்னும் வேவு விமானம் சி.என்.என் தொலைக்காட்சிக் சேவையினர் சகிதம் பறந்து சென்றது. அமெரிக்காவின் விமானத்திற்கு சீனக் கடற்படையினர் எட்டுத் தடவைகள் எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பினர். ஸ்பிராட்லி தீவுக் கூட்டங்களில் உள்ள பியரி குரொஸ் என்னும் பவளப்பாறையை மேடாக்கி சீனா உருவாக்கிய தீவின் மேல் இச் சம்பவம் நடந்தது.
பிலிப்பைன்ஸில் இருந்து கிளம்பிய விமானம்.
அமெரிக்காவின் P8-A Poseidon போர் விமானம் வேவு பார்ப்பதற்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாடுவதற்கும் நீரின் மேற்பரப்பில் உள்ள கடற்கலங்கள் மீது தாக்குதல் நடாத்துவதற்கும் இலத்திரனியல் சமிக்ஞைகளை ஒற்றுக் கேட்பதற்கும் போயிங் நிறுவனத்தால் உருவாக்கப் பட்ட சிறப்பு விமானமாகும். ஒரு விமானத்தின் விலை 257 மில்லியன் டொலர்களாகும். சிறந்த நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்ட சீனாவிற்கு எதிராக P8-A Poseidon போர்விமானங்களை அமெரிக்கா பயன்படுத்துகின்றது. இதனால் இந்த விமானங்களை இந்தியாவும் அமெரிக்காவிடமிருந்து வாங்கியுள்ளது. பிலிப்பைன்ஸின் கிளார்க் விமானத் தளத்தில் இருந்து சி.என்.என் தொலைக்காட்சிச் சேவையினருடன் கிளம்பிய விமானம் 460 மைல்கள் பறந்து சீனா நிர்மாணித்த தீவின் மேல் உள்ள வான்பரப்பை அடைந்தது. சி.என்.என் தொலைக்காட்சியினர் சீனாவின் இயந்திரங்கள் கடற்படுக்கையில் இருந்து மணலை இறைத்துக் குவித்து தீவுகளை உருவாக்கிக் கொண்டிருப்பதை தாம் அவதானித்ததாகச் தெரிவித்தார்கள். தொடர்ந்து எட்டுத் தடவைகள் எச்சரிக்கை செய்தி அனுப்பிய சீனக்கடற்படையினரின் குரலில் இறுதியில் விரக்தி தென்பட்டதாகவும் அவர்கள் செய்தி வெளியிட்டனர். அமெரிக்கப் போர்விமானம் பறந்த அதே வேளை அமெரிக்க குடிசார் விமானச் சேவையான டெல்டாவின் விமானமும் அதே பகுதியில் பறந்தது. சீனா தனது கடற்படைக்கு என ஆழ்கடல் துறைமுகங்களையும் தென் சீனக் கடலில் உருவாக்குகின்றது.
அமெரிக்கா வரைந்த செங்கோடு
சீனாவின் தீவுகளின் மேல் பறந்த பின்னர் அமெரிக்க அரசு தமது கடற்கலன்களும் விமானங்களும் பன்னாட்டுச் சட்டத்திற்கு அமைய உலகின் எந்தப் பாகத்திற்கும் செல்லும் என்றது. சீனா தென் சீனக் கடலில் செய்யும் விரிவாக்கத்திற்கு அமெரிக்கா ஒரு செங்கோடு வரைந்துள்ளது என ஓர் அமெரிக்க ஊடகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் விமான ஓடுபாதை
பியரி குரோஸில் சீனா அமைத்த தீவில் 3000 மீட்டர் நீளமான விமான ஓடுபாதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுபாதை 2015-ம் ஆண்டின் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகின்றது. அங்கு சீனக் கடற்படையினர் பெருமளவில் இருந்ததாக சி.என்.என் தொலைக்காட்ச்சிச் சேவையினர் தெரிவித்தனர். ஸ்பார்ட்லித் தீவுகளில் சீனா உருவாக்கும் தீவுகள் அத் தீவுகளுக்கு உரிமை கொண்டாடும் பிலிப்பைன்ஸ், வியட்னாம், மலேசியா, தாய்வான். புரூனே ஆகிய நாடுகளைக் கலக்கமடைய வைத்துள்ளது. இந்த நாடுகளுக்கு நம்பிக்கை கொடுக்கவும் தென் சீனக் கடலினூடாக உலகக் கப்பற் போக்கு வரத்துக்குள் சுந்ததிரமாக நடமாடுவதை உறுதி செய்யவும் தான் முயற்ச்சிப்பதாக அமெரிக்கா சொல்கின்றது.
தென் சீனக் கடலின் பின்னணி
தென் சீனக் கடலானது பசிபிக் பெருங்கடலுக்கும் இந்துப் பெருங்கடலுக்கும் இடையில் இருக்கும் 3.6 மில்லியன் சதுர கிலோமீட்டர் கடற்பரப்பாகும். இது வடக்குத் தெற்காக 1800 கிலோ மீட்டர் நீளத்தையும் கிழக்கு மேற்காக 900 கிலோ மீற்றர் நீளத்தையும் கொண்டது. தென் சீனக் கடலில் பல குட்டித் தீவுகள் உள்ளன. இவற்றில் பல தீவுகள் கடல் பெருக்கெடுக்கும் போது முற்றாக நீரில் மூழ்கிவிடும். உலக கடற் போக்கு வரத்தில் அறுபது விழுக்காடு தென் சீனக் கடலினூடாக நடை பெறுகிறது. மொத்த வர்த்தக போக்குவரத்துப் பெறுமதி ஐந்து ரில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. தென் சீனக் கடலானது கப்பல் போக்கு வரத்திற்கும் கனிம வள இருப்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி விட்டது. அங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு இருக்கிறதென்ற செய்தி அப்பிராந்தியத்தை பல நாடுகள் முட்டி மோதக்கூடிய களமாக்கிவிட்டது. தென் சீனக்கடலில் 213 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.எரிவாயு 900 ரில்லியன் கன அடி இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடலுணவு வளமும் அங்கு நிறைய உண்டு.
சீனாவின் ஒன்பது புள்ளிக் கோடு
1947-ம் ஆண்டில் இருந்த சீன ஆட்சியாளர்கள் தென் சீனக் கடலில் தங்கள் ஆதிக்கத்தை ஒரு 11துண்டுக் கோடுகள் வரைபடத்தின் மூலம் வெளிப்படுத்தி இருந்தனர். பின்னர் 1949இல் சீனாவில் ஆட்சிக்கு வந்த பொதுவுடமை ஆட்சியாளரான சூ என் லாய் ஒரு 9 துண்டுக் கோடுகள் மூலம் தென் சீனக் கடலில் தமது ஆதிக்கத்தை வரையறை செய்தார். இதன்படி பரசெல்ஸ் தீவுகளும் ஸ்பிராட்லி தீவுகளும் தன்னுடையவை என்றது சீனா. பரசெல்ஸ் தீவுகள் தம்முடையவை என வியட்னாமும் தாய்வானும் சொல்கின்றன. பரசெல்ஸ் தீவுகளில் சில தமது நாடுகளுக்கு அண்மையில் இருப்பதால் அவை தம்முடையவை என்கின்றன இந்தோனேசியாவும் பிலிப்பைன்ஸும் புரூனியும், மலேசியாவும். தாய்வானும் சீனாவும் ஸ்பிராட்லி தீவுகளையும், பரசெல்ஸ் தீவுகளையும் தம்மிடம் ஜப்பான் கையளிக்க வேண்டும் என்கின்றன. தாய்வான் 1947இல் செய்யப்பட்ட 11 துண்டுக் கோடுகள் வரைபடத்தை ஒட்டி நிற்கிறது. சீனாவினதும் தாய்வானினதுக் கோரிக்கைகளிற்கு எந்த ஒரு பன்னாட்டு உடன்படிக்கையும் அடிப்படையாக அமையாவில்லை என வியட்னாம் வாதாடுகிறது. முழுத் தாய்வானும் தன்னுடையது என்று சீனா சொல்வதால் மேலும் சிக்கல்கள் இருக்கின்றன. சீனா தனது ஒன்பது புள்ளிக் கோட்டின் மூலம் தென் சீனக் கடலின் 90 விழுக்காடு பரப்பளவிற்கு உரிமை கொண்டாடுகின்றது.
உறுதியாக நிற்கும் சீனா
அமெரிக்காவின் வேவு விமானமான P8-A Poseidon சீனா பியரி குரொஸ் பவளப்பாறையில் உருவாக்கிய தீவின் மேற் பறந்ததால் சீனாவின் ஆத்திரத்தை அதன் வெளிநாட்டமைச்சர் வாங் யி வெளிப்படுத்தினார். சீனா தனது பிராந்திய ஒருமைபாட்டையும் இறைமையையும் பாதுகாக்கக் கொண்டுள்ள உறுதி பாறையைப் போல் உறுதியானது என்றார் அவர். பீஜிங் இந்த பிரதேச முரண்பாட்டை சுமூகமாகத் தீர்க்க முயல்கின்றது என்றும் அவர் சொன்னார்.
உலக அரங்கில் சீனா
தனது எரிபொருள் தேவையை நிறைவேற்றும் வழங்கல்களையும் வழங்கல் பாதையையும் உறுதி செய்தல், தனது நாணயத்தை உலக நாணயமாக்குதல், ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கும் தனது பொருளாதாரத்தை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் வைத்திருத்தல் ஆகியவை சீனாவின் தலையாய கேந்திரோபாயக் கொள்கைகளாக இப்போது இருக்கின்றது. உலக வங்கிக்கும் பன்னாட்டு நாணய நிதியத்திற்கும் போட்டியாக சீனா ஆரம்பித்துள்ள ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் 57 நாடுகள் இணைந்துள்ளன. அமெரிக்காவின் அதிருப்தியையும் மீறி பிரித்தானியாவும் ஒஸ்ரேலியாவும் கூட இதில் இணைந்துள்ளன. சீனாவிற்குத் தேவையான எரிபொருளும் அதன் ஏற்றுமதிகளும் அமெரிக்க ஆதிக்கத்தில் உள்ள கடற்பரப்புக்களைக் கடந்து செல்ல வேண்டி இருக்கின்றது என்பது சீனாவின் கரிசனையாகும். அமெரிக்க ஆதிக்கத்தில் இருந்து விடுபட முயலும் சீனாவை ஒடுக்க தென் சீனக் கடலையும் கிழக்குச் சீனக் கடலையும் அமெரிக்கா பாவிப்பதாக சீனாவில் உள்ள தேசிய வாதிகள் நம்புகின்றனர். 2008-ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அமெரிக்காவின் கிழக்கு நோக்கிய நகர்வும் அதன் ஆசியச் சுழற்ச்சி மையத் திட்டமும் தவிடு பொடியாகிவிடும் என சீனக் கொள்கை வகுப்பாளர்கள் நம்பியிருந்தனர். அவர்களின் நம்பிக்கையை சீனா உருவாக்கிய தீவுகளின் மேல் 2015-05-20-ம் திகதி புதன் கிழமை ஐக்கிய அமெரிக்காவின் என்னும் வேவு விமானம் P8-A Poseidon சி.என்.என் தொலைக்காட்சிக் சேவையினர் சகிதம் பறந்து சென்றமை சிதறடித்தது.
தன் வலு காட்டும் சீனா
சீனாவின் முன்னாள் அதிபர் டெங் சியொபிங் (Deng Xiaoping) "சீனாவின் படைவலுவை மறைத்துவை, தருணம் வரும்வரை காத்திரு" என்ற கொள்கையுடன் இருந்தார். ஆனால் தற்போதைய அதிபர் சி ஜின்பிங் சீனாவின் படைவலுவைப் பகிரங்கப் படுத்தும் கொள்கையை மேற்கொண்டுள்ளார். மே மாதம் 25-ம் திகதி சீன வெளிநாட்டமைச்சு அமெரிக்க வேவு விமானம் தனது தீவின் மேலாகப் பறந்தது தொடர்பாக தனதுஆட்சேபனையை அமெரிக்காவிடம் தெரிவித்தது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர் தென் சீனக் கடலில் சீனா கட்டும் தீவுகளில் இருந்து 12 மைல் தொலைவில் அமெரிக்க வான் படையும் கடற்படையும் சீனாவிற்கு சவால் விடும் வகையில் செல்லக் கூடியதாகத் திட்டங்கள் வரையும்படி பணித்துள்ளார். அதேவேளைசீனப்படையினரின் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய சீன மக்கள் படைத் தளபதி யாங் யுஜுன் (Yang Yujun) வெளி வல்லரசுகள் சீனப் படையினரின் மதிப்பைக் கெடுக்கும் விதத்தில் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தினார்.
சீனாவின் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமானவை:
1. சீனாவின் கடற்படைக் கட்டமைப்பு சீனாவின் தேசிய பாதுகாப்புக்கும், நலன்களுக்கும் இறைமைக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தக் கூடிய வகையில் மாற்றியமைக்கப்படும்
2. ஜப்பான் மீள் படைத்துறை மயமாக்கல் செய்கின்றது என்பதை சீனா கருத்தில் கொண்டுள்ளது. .
3. உலக கேந்திரோபாய ஈர்ப்பு மையம் ஆசிய பசுபிக் பிராந்தியத்தை நோக்கி விரைவாக நகர்கின்றது
4. அமெரிக்காவுடனும் மற்ற மேற்கு நாடுகளுடனும் முறுகல் நிலையில் உள்ள இரசியாவுடன் கேந்திரோபாய் ஒத்துழைப்பை சீனா மேற்கொள்ளும்.
5. தென் சீனக் கடலில் உரிமை கொண்டாடும் அயல் நாடுகள் ஆத்திர மூட்டும் நடவடிக்கைகளைச் செய்கின்ற வேளையில் வெளி வல்லரசுகள் அங்கு குழப்பம் விளைவிக்க முயல்கின்றன.
6. கடலிலும் பார்க்கத் தரை முக்கியமானது என்ற மரபுவழி மனப்பான்மை மாற்றப்பட வேண்டும்.
7. சீன வான்படை பாதுகாப்பிற்கு மட்டுமன்றித் தாக்குதல்களுக்கும் ஏற்ற வகையில் மாற்றப்படும்.
8. இணையவெளிப் படைப்பிரிவு உருவாக்கப்படும்.
சீனாவின் படையில் 23 இலட்சம் பேர் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் 73 விழுக்காடு தரைப்படையினரும், 17 விழுக்காடு வான்படையினரும் 10 விழுக்காடு கடற்படையினரும் அடங்கும்.
தென் சீனக் கடலில் சீனாவின் விரிவாக்கம் தடுக்கப்பட முடியாது என்கின்றார் வஷிங்டன் போர்க் கல்லூரிப் பேராசிரியர் பேர்னார்ட் டி கோல்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment