Monday, 14 March 2022

இரசிய – உக்ரேனிய இணையவெளிப் போர்

  


இணையவெளிப் போர் வல்லரசுகளாக இஸ்ரேல், அமெரிக்கா, இரசியா, சீனா, பிரித்தானியா ஆகிய நாடுகள் கருதப்படுகின்றன. வட கொரியா மற்றும் ஈரானிடம் வலிமை மிக்க இணையவெளிப் படைப்பிரிவுகள் உள்ளன. கணினிகளுக்குள் தீங்குநிரல்(Malware) புகுத்துதல். கணினிச்சேவை நிறுத்தம், தரவு அழித்தல், தரவு திருடுதல், தரவுகளைப் பணயக் கைதிகள் போலாக்கி பணம் பறித்தல், இரு கணினிகள் அல்லது கணினித் தொகுதிகளிடையே இருந்து அவை இரண்டிற்கும் இடையிலான தொடர்பாடலைத் துண்டித்தல், திசைமாற்றல் அல்லது திரிபுபடுத்தல் எனப் பலவகையான இணைய வெளித் தாக்குதல்கள் உள்ளன. பிரித்தானியாவின் Lloyds Insurance நிறுவனம் சராசரியாக ஓர் இணையவெளித் தாக்குதலால $54 மில்லியன் இழப்பீடு ஏற்படுகின்றது என மதிப்பிட்டுள்ளது. 2008-ம் ஆண்டு ஜோர்ஜியாவை இரசியா ஆக்கிரமிக்க முன்னரும் 2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்க முன்னரும் இரு நாடுகள் மீதும் கடுமையான இணைய்வெளித் தாக்குதல்கள் நடந்தன. ஜோர்ஜியாவில் பல கணினித் தொகுதிகள் செயலிழக்கச் செய்யப்பட்டன. அவற்றில் நாடாளுமன்றம், வெளியுறவுத்துறை அமைச்சு, பல ஊடகங்கள், தனியார் நிறுவனங்களும் அடங்கும். 2014-ம் ஆண்டு இரசியப் படைகள் உக்ரேனிய அரச மற்றும் மின்சார வழங்கல் கணினிகள் மீது இணையவெளித் தாக்குதல் நடத்தப்பட்டன. 2022 ஜனவரி 10,13, 14-ம் திகதிகளில் உக்ரேனிய அரசுக்கு சொந்தமான கணினித் தொகுதிகளில் இணையவெளியூடாக தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 2022 மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து இரசியாவில் பல் வேறுபட்ட கணினித் தொகுதிகளில் தாக்குதல்கள் நடக்கின்றன. உக்ரேனில் இணையச் சேவை வழங்குனர் (Internet Service Producer) Triolan மீது இரு தடவை தாக்குதல் நடத்தப்பட்டது. SpaceXஇன் நிறுவனர் Elon Musk தனது செய்மதி மூலமான Starlink என்னும் இணையச் சேவையை உக்ரேன் மக்களுக்கு இலவசமாக வழங்குகின்றார்.

உக்ரேனின் தொடருந்து சேவை மீது தாக்குதல்

புட்டீனின் ஆக்கிரமிப்புப் போரால் அயல் நாடுகளுக்கு தப்பி ஓடுபவர்களைத் தடுப்பதற்காக உக்ரேனின் தொடருந்து சேவையின் கணினித் தொகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இஸ்ரேலிய ஊடகம் ஒன்று உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பு போரில் பல இணையவெளித் தாக்குதல் குழுக்களுக்கும் இரசிய ஆட்சியாளர்களுக்கும் உள்ள தொடர்பு அம்பலப்டுத்தப்பட்டுள்ளது என்கின்றது. அது இரசியாவை Cyber Gangland என விபரித்துள்ளது. உக்ரேன் மீது செய்யப்படும் தாக்குதலால் இரசியாவின் இணையவெளித் தாக்குதல்களை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி அமெரிக்கா அறிந்து கொண்டிருக்கின்றது.

இரசிய தொலைக்காட்சிச் சேவைகள் மீது தாக்குதல்

இரசிய கணினித் தொகுதிகள் மீது Distributed Denial of Service (DDoS) பல மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல கணினித் தொகுதிகள் மூலம் எதிரியின் கணினிக்கு அளவிற்கு அதிகமான தரவுகளைச் செலுத்துவது Distri.uted Denial of Service எனப்படும். அவை மட்டுமல்ல பல ஊடுருவல்களும் செய்யப்பட்டன. 2022 மார்ச் இரண்டாம் வாரம் Russia 24, Channel One, Moscow24 ஆகிய தொலைக்காட்சி சேவைகளை ஊடுருவியவர்கள் உக்ரேனில் நடக்கும் கொடுமைகளை இரசிய மக்களுக்கு ஒளிபரப்பினர். உக்ரேனில் நடக்குப் போர் தொடர்பாக இரசிய ஊடகங்கள் செய்திகள் வெளியிடுவதில் கடுமையான கட்டுப்பாடுகளை இரசிய அரசு விதித்துள்ளது. அவற்றில் இரசிய அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்ற வேண்டு கோள்களும் விடுக்கப்பட்டன. இரசியாவின் விண்வெளி முகவரகம் மூடப்படும் அளவிற்கு அதன் மீது இணையவெளித்தாக்குதல் செய்யப்பட்டன. இதனால் இரசியா செய்மதி மூலம் உளவு திரட்டுதல் பாதிக்கப் பட்டுள்ளது. இரசியாவின் வலைத்தளம் ஒன்றில் தாக்குதல் செய்து அதில் உள்ளவற்றை அகற்றி விட்டு அங்கு போரில் கொல்லப்பட்டவரகளின் கல்லறைகளின் படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. இரசியா மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் இணையவெளித் தாக்குதலைச் சமாளிக்க சீனாவின் Huawei நிறுவனத்தின் சேவையை இரசியா அவசரமாகப் பெற்றுள்ளது. இரசியாவின் செய்தி தணிக்கைப் பணிமனை மீது தாக்குதல் செய்யப்பட்டு அங்குள்ள தடுத்து வைக்கப்பட்டுள்ள செய்திகளைக் கொண்ட 340,000 கோப்புக்களை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோப்புக்கள் இரசியானின் Bashkortostan மாநிலத்துடன் தொடர்புபட்டன.

அமெரிக்காவும் பங்கு பெறுகின்றதா?

இரசியாவிற்கு எதிராக நடக்கும் தாக்குதல்களில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டுள்ளதா என்ற ஐயம் உண்டு. அமெரிக்க ஒரு இணையவெளிக் கட்டளைப் பணியகம் ஒன்றை 2018இல் உருவாக்கியுள்ளது. அதில் 133 பிரிவுகள் இருக்கும். அவற்றில் 27 தாக்குதல் அணிகளாகும். 133 பிரிவுகளிலும் 4300 படையினர் இருப்பர். 27 தாக்குதல் அணியில் 1600 படைவீரர்கள் இருப்பர். இவர்கள் வெறும் படை வீரர்கள் அல்லாமல் கணனித்துறை நிபுணர்களாக இருப்பர். இவர்கள் சீனாவின் இணைய வெளித் தாக்குதல்களை சமாளிப்பதிலும் ஈடுபடுவார்கள். அத்துடன் வட கொரியாவின் இணையவெளிப் படைப்பிரிவான Bureau 121இன் நடவடிக்கைகளுக்குப் பதில் நடவடிக்கை எடுப்பார்கள். அமெரிக்காவின் படைத் துறை இரகசியங்களை இணைய வெளி மூலம் எதிரி நாடுகள் திருடாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் இந்த இணையவெளிப் படைப்பிரிவினர் ஈடுபடுகின்றனர். அமெரிக்கா உருவாக்கும் போர் விமானம் தொடர்பான இரகசியங்களை எதிரி நாடுகள் திருடி அவற்றை அழிப்பதற்கான வழி முறைகளை சில நாட்களிலேயே உருவாக்கி விடலாம். முன்பு அப்படி ஒன்றை உருவாக்கப் பல ஆண்டுகள் எடுக்கும். அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் ஒகஸ்டா நகரில் அமெரிக்காவின் இணைய வெளிப் படைப்பிரிவின் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு ஊடுருவிகளின் பல்கலைக் கழகமும் (hacker university) அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடம் Fort Gordon என அழைக்கப்படுகின்றது. அங்கு எதிரியின் கணனித் தொகுதிகளை ஊடுருவும் முறைகள் பற்றிய பயிற்ச்சிஆராய்ச்சி போன்றவை நடக்கின்றன. வெளியுலக இணைய வெளித் தொடர்புகள் ஏதும் இன்றி இந்தப் பல்கலைக் கழகம் செயற்படுகின்றது. அங்கு கைப்பேசிகள் கூட எடுத்துச் செல்ல முடியாது. உள்ளக தொடர்பாடல்கள் மட்டுமே பாவிக்கப் படுகின்றன. புளோரிடா மாநிலத்தில் Pensacola நகரில் உள்ள  Information Dominance என்னும் பயிற்ச்சி நிலையத்தில் ஆறுமாதங்கள் பயிற்ச்சி பெற்றுத் தேர்ச்சியடைந்தவர்கள் Fort Gordonஇல் மேலதிக பயிற்ச்சி ஒன்பது மாதங்களுக்குப் பெறுவார்கள். பின்னர் அமெரிக்காவின் பல்வேறுபட்ட படை நிலையங்களில் Cyber Analysis Course என்னும் கற்கை நெறி போதிக்கப்படும்.  ஐக்கிய அமெரிக்கா தனது படைநடவடிக்கைகளை எதிரியின் படைத்துறை இலக்குகளுக்கு மட்டும் எதிராகச் செய்ய வேண்டும் என்ற தற்கட்டுப்ப்பாட்டுடன் செயற்படுவதாகச் சொல்லிக் கொள்கின்றது.  அமெரிக்கப் படைத்துறை பல வெளிநாடுகளின் கணனிக் கட்டமைப்புக்களிற்குள் வைரசைப் புகுத்தி வைத்திருந்து தேவையான நேரங்களில் அவை அந்தக் கணனிக் கட்டமைப்பைச் செயலிழக்கச் செய்யும் ஒரு முறைமையை உருவாக்கியுள்ளது. இது வழமையான ஊடுருவல்களிலும் வேறுபட்டது. இந்த வைரசின் இருப்பைக் கண்டறிவதும் கடினம். அமெரிக்கப் படைத்துறை அமெரிக்க அதிபரின் ஒப்புதலின் பேரிலேயே இந்த வைரசுகளை செயற்பட வைக்க முடியும்.

எங்காவது போர் நடந்தால் அங்கு தனது படையினரை இஸ்ரேஸ் அனுப்ப முயற்ச்சிக்கும். உதவி என்னும் போர்வையில் நேரடி களமுனை அனுபவத்தை தனது படையினருக்கு வழங்குவதே இஸ்ரேலின் நோக்கம். உக்ரேன் – இரசிய இணைய வெளிப்போரிலும் அது நடக்கலாம்.

எதிர்காலப் போரில் முதலில் களமிறங்கும் அணி இணைவெளிப் படைப்பிரிவாகத்தான் இருக்கும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...