Monday 14 March 2022

புட்டீனின் 22 ஆண்டுத் தயாரிப்பு வீண் போகுமா?

  


2022 பெப்ரவரி 24-ம் திகதி புட்டீன் உக்ரேனுக்கு படைகளை அனுப்பியது கடந்த இருபத்தி இரண்டு ஆண்டுகளாக செய்த தயாரிப்பின் முதற் கட்ட நடவடிக்கையாகும். அதன் காரணத்தை 2021 டிசம்பர் மாதம் 23-ம் திகதி ஊடக மாநாட்டில் விளக்கியிருந்தார்.

·         அவர் கூறியதன் முக்கிய பகுதி: “கிழக்கு நோக்கி ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம் என 90களில் எமக்குச் சொன்னார்கள். ஆனால் என்ன? எம்மை எமாற்றினார்கள். வெளிப்படையாக எம்மை வஞ்சித்தார்கள். ஐந்து அலைகளாக நேட்டோ விரிவாக்கம் நடந்தது. அவர்கள் (நேட்டோ) இப்போது உருமேனியாவிலும் போலாந்திலும் இருக்கின்றார்கள், எங்கள் வாசற்படியில் அமெரிக்கா அணுக்குண்டுகளுடன் நிற்கின்றது”

வரலாற்று நிகழ்விற்கு பிழையான பொருள்விளக்கம்

புட்டீன் உக்ரேன் எல்லையில் இலட்சக்கணக்கான படையினரைக் குவித்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலரும் இரசிய வெளியுறவுத் துறை அமைச்சரும் சந்தித்த பின்னர் அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் அண்டனி பிலின்கன் சொன்னது: “வரலாறு தொடர்பாக நாம் வேறுபட்ட விளக்கங்களைக் கொடுக்கின்றோம்.” மேற்கு நாட்டு ஆய்வாளர்கள் சொல்லும் கருத்துக்கள்:

1. நேட்டோ எந்த அளவு விர்வாக்கம் செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பாக் எந்த ஓர் உடன்படிக்கையும் செய்யப்படவில்லை.

2. நேட்டோவில் புதிதாக இணைந்து கொள்ளும் நாடுகளை இணைந்து கொள்ளும் படி நிர்ப்பந்திக்கப்படுவதில்லை.

3. நேட்டோ விரிவாக்கம் எந்த ஒரு நாட்டுக்கும் அச்சுறுத்தலாக அமையாது.

2014 ஆக்கிரமிப்பு போல் 2022இல் இல்லை

அரை-மக்களாட்சி பரப்பியவாதியாக (semi-democratic populist) புட்டீன் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். அவருக்கு எதிரானவர்கள் இருப்பதை விரும்பாத புட்டீன் ஆட்சியில் தனது பிடியை இறுக்குவதற்காக கடுமையான நிலைப்பாட்டை எடுத்தார். அவருக்கு எதிரானவர்கள் ஐயத்திற்கு இடமான முறையில் கொல்லப்பட்டனர். ஊடகங்கள் அவரை எதிர்த்து எழுத தயங்குகின்றன. உக்ரேன் போர் பற்றிய உண்மையான நிலையை இரசியர்கள் அறிய முடியாத நிலையில் இருக்கின்றனர். 2014-ம் ஆண்டு புட்டீன் உக்ரேனின் ஒரு பகுதியா இருந்த கிறிமியாவைக் கைப்பற்றிய போது இரசியர்கள் அதை மிகவும் ஆரவாரத்துடன் வரவேற்றனர். புட்டீனின் செல்வாக்கும் இரசியர்கள் இடையே பெரிதும் அதிகரித்தது. ஆனால் 2022இல் நிலை அப்படியல்ல.

முதற்கனவு

1999 மார்ச் மாதம் 3-ம் திகதி விள்டிமீர் புட்டீன் உக்ரேன் தலைமை அமைச்சராக பதவியேற்ற போதே இரசியா இழந்த கௌரவத்தை மீளக் கட்டி எழுப்புவதாக உறுதி பூண்டார். 1998-ம் ஆண்டு இரசிய பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து பட்ட கடன்களை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டு உலக வங்கியிடமும் பன்னாட்டு நாணய நிதியத்திடமும் கடன் வாங்கி நெருக்கடியைச் சமாளித்த பின்னர் மேற்கு நாடுகள் இரசியாவை ஒரு பொருட்டாக மதிக்காத நிலை ஏற்பட்டது. அதுவும் புட்டீனை பெரிதும் பாதித்திருந்தது. பொருளாதாரப் பிரச்சனையில் இருந்து இரசியாவை மீட்ட பின்னர் புட்டீனின் மதிப்பு இரசியர்களிடையே உயர்ந்தது. அவர் தேர்தல்களில் இலகுவாக வெற்றியீட்டினார். ஆனால் மேற்கு நாட்டு ஊடகங்கள் தேர்தலில் ஊழல், எதிர்க்கட்சிகளை அடக்கினார் என செய்திகள் வெளியிட்டுக் கொண்டே இருந்தன. 2020-ம் ஆண்டு இரசியாவை உலகின் படைத்துறையின் முதல் தர நாடாக்க வேண்டும் என்ற 20 ஆண்டுத் திட்டத்தை 2020- ஆண்டு தீட்டினார். மீயுர்-ஒலி வேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை உருவாக்குவது அவரது திட்டத்தின் மணிமகுடமாக அமைந்தது. விமானப்படை, செய்மதிகளை படைத்துறைக்கு பாவித்தல், நீமூழ்கிகளை புதுமைப் படுத்துதல், உலகின் எப்பாகத்தையும் தாக்கக் கூடிய ஏவுகணைகளை உருவாக்குதல் ஆகியவையும் அடங்கும்.

2018இல் பெருமைப்ப்ட்ட புட்டீன்

புட்டீனின் இருபதாண்டுத் திட்டம் வெற்றியுடன் நிறைவேறிக் கொண்டிருக்கின்றது என்பதை உலகத்திற்கும் இரசியரகளுக்கும் எடுத்துரைக்கும் வகையில் 2018 மார்ச் முதலாம் திகதி புட்டீன் நாட்டு மக்களுக்கான உரை ஒன்றை ஆற்றினார். இரசியாவின் பொருளாதார வெற்றி படைத்துறை முன்னேற்றம் ஆகியவற்றைப் பற்றி காணொலியுடன் அவர் விளக்கினார். புட்டீனின் உரையும் காணொலியும் புதிய ஐ-போனை அப்பிள் முதலில் அறிமுகம் செய்வது போல இருந்தது எனச் சொல்லப்பட்டது. அவர் அதில் முன்வைத்தவைகளில் முக்கியமானவை:

1. உலகின் எப்பாகத்திலும் அணுக்குண்டை வீசக் கூடிய அணுவலுவில் இயங்கும் ரடார்களுக்குப் புலப்படாத, எதிரிகளால் இடைமறிக்க முடியாத வழிகாட்டல் ஏவுகணை.

2. அமெரிக்கப் பாதுகாப்பை முறியடிக்கக் கூடிய அணுவலுவில் இயங்கும் நீரடி ஏவுகணைகள் (nuclear torpedo that could outsmart all American defences)Status-Nuclear Torpedo என்னும் பெயருடைய இந்த நீரடி ஏவுகணைகளைப்போல் அமெரிக்காவிடம் இல்லை என்றார் புட்டீன்.

3. ஹைப்பர்சோனிக் வழுக்கி வாகனங்கள் (Avengard Hypersonic Glide Vehicles). இவை வழமையான விண்வெளிக்குச் செல்லும் ஏவுகணைகளில் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிர்ந்து ஏவப்படும் ஏவுகணையாகும். புவியீர்ப்பு விசையாலும் தன் உந்து சக்தியாலும் அது ஒலியிலும் பலமடங்கு வேகத்தில் தன் இலக்கை நோக்கிப் பறந்து செல்லும். அது செல்லும் பாதையில் ஏவுகணை எதிர்ப்பு முறைமை இருந்தால் அவற்றைத் தவிர்த்துக் கொண்டு செல்ல வல்லது.

புட்டீனின் நம்பிக்கை வீணாகவில்லை

இவை மட்டுமல்ல இரசியாவின் S-400, S-500 போன்ற ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் அமெரிகாவின் ஏவுகணை எதிர்ப்பு முறைமையிலும் சிறந்தவை, புட்டீன் இறுதியாக புட்டீன் 2021 நவம்பரில் இரசியாவின் எதிரிகளின் செய்மதிகளை அழிக்கும் ஏவுகணையைப் பரிசோதித்தார். எதிரிகளின் செய்மதிகளை அழிப்பதன் மூலம் தன்னால் எதிரிகளின் பல படைக்கலன்களை குருடாக்க முடியும் என முழங்கினார் புட்டீன். உக்ரேனை புட்டீன் ஆக்கிரமிக்கும் போது உக்ரேனுக்கு ஆதரவாக இரசியாவின் படைவலிமைக்கு அஞ்சி நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பின் நாடுகள் களமிறங்க மாட்டாது என புட்டீன் உறுதியாக நம்பினார். அவர் நம்பிக்கை வீண் போகாத வகையில் நேட்டோ நாடுகள் உக்ரேனுக்கு ஆதரவாக தாம் இரசியாவிற்கு எதிராகப் போர் புரியப் போவதில்லை என உக்ரேனை ஆக்கிரமித்ததில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கின்றன.

நேட்டோ போட்ட கணக்கு வேறு

2019 பெப்ரவரி மாதம் உக்ரேன் நாடாளுமன்றம் நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணையும் வகையில் அரசியலமைப்பை மாற்றியதில் இருந்து புட்டீன் உக்ரேனுக்கு பாடம்புகட்ட முடிவு செய்தார். கொவிட் பெருந்தொற்று நோயால் அது தாமதமாகியது. 2021 மார்ச் மாதத்தில் இருந்தே இரசியப் படைகள் உக்ரேன் எல்லையில் குவிக்கப்பட்டன. அப்போது வலிமை மிக்க படைக்கலன்களை நேட்டோ நாடுகள் உக்ரேனுக்கு வழங்காமல் ஒரு கேந்திரோபாயக் காத்திருப்பைச் செய்தன. புட்டீனின் வேண்டுகோள்கள் நிபந்தனைகள் போன்றவற்றிற்கு நேட்டோ நாடுகளும் உக்ரேனும் இணங்காமல் இருந்தன. புட்டீன் 2021 இறுதியில் மேலும் படைகளை உக்ரேன் – இரசிய எல்லைக்கு அனுப்பியதுடன். பெலரஸ் மற்றும் மோல்டோவாவிலும் இரசியப் படைகளைக் குவித்தார். அதற்கும் உக்ரேன் மசியாத நிலையில் 2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியப் படைகள் உக்ரேனை ஆக்கிரமித்தன. அதன் பின்பு உக்ரேனுக்கு நேட்டோ நாடுகள் தமது படைக்கலன்களை பெருமளவில் அனுப்பின. இரசியாவை உக்ரேனுக்குள் செல்ல விட்டு உக்ரேனியர்கள் மூலமாக அவர்கள் மீது கடும் தாக்குதலை மேற்கொள்வது நேட்டோவின் கேந்திரோபாய நோக்கமாக இருந்திருக்க வேண்டும். 2014-ம் ஆண்டு இரசியாவால் கிறிமியாவைக் கைப்பற்றியது போல் 48 மணித்தியாலங்களுக்குள் உக்ரேன் தலைநகரைக் கைப்பற்றி உக்ரேன அரசை வழிக்கு கொண்டு வருவது அல்லது அங்கு ஆட்சி மாற்றத்திற்கு வழிசெய்வது என்ற இரசியாவின் உத்தி பெரும் பின்னடைவைச் சந்தித்தது. ஆனால் இரசியாவிற்கும் கிறிமியாவிற்கும் இடையில் ஒரு நிலத் தொடர்பை ஏற்படுத்துவதைல் இரசியப் படையினர் கணிசமான முன்னேற்றத்தை கண்டுள்ளனர். Mariupol நகரில் 2022 மார்ச் 14-ம் திகதி கடும் சண்டை நடைபெறுகின்றது. அந்த நகரைச் சுற்றி வளைத்த இரசியப் படையினர் அங்கிருந்து மக்கள் தப்பிச் செல்வதற்கும் ஒரு பாதையைத் திறந்துள்ளனர். அந்த நகர் கைப்பற்றியவுடன் கிறிமியாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் ஒரு தரைவழிப்பாதை உருவாக்கப்படும். அத்துடன் உக்ரேனின் கிழக்குப் பகுதி அஜோவ் கடல், கருங்கடல் ஆகியவற்றுடனான தொடர்பு துண்டிக்கப்படும்.

இரசிய வெற்றி பத்து விழுக்காட்டிலும் குறைவு

உக்ரேனியர்கள் வீரமாகப் போராடுகின்றார்கள் என மேற்கு நாட்டு ஊடகங்கள் பறைசாற்றிக் கொண்டிருந்தாலும் இரசியப் படையினர் முன்னேறிக் கொண்டே இருக்கின்றனர். அவரகள் கைப்பற்றிய நிலப்பரப்பில் ஒரு அங்குலத்தைத் தன்னும் உக்ரேனியர்களால் மீளக் கைப்பற்ற முடியவிலை என்பது தான உண்மை. முழு உக்ரேனையும் கைப்பற்ற இன்னும் ஓராண்டிற்கு மேல் எடுக்கலாம். அதுவும் புட்டீன பேரழிவு விளைவிக்க கூடிய படைக்கலன்களைப் பாவித்தே செய்ய முடியும். போர் நீண்ட காலம் இழுபட்டு இரசியப் பொருளாதாரம் சிதைவடைவதை நேட்டோ நாடுகள் விரும்பலாம். போலாந்தினூடாக உக்ரேனியப் படையினருக்கு தொடர்ந்து நேட்டோ நாடுகள் படைக்கலன்களை வழங்கிக் கொண்டிருக்கலாம்.

போர் நீடிக்கும் ஒவ்வொரு மாதமும் இரசியாவிற்கு தோல்வி என்றே சொல்ல வேண்டும். புட்டீன் 22 ஆண்டுகளாக திட்டமிட்ட சோவியத் ஒன்றியம்-2.0 நிறைவேறாமல் போகுமா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...