Saturday 19 March 2022

உக்ரேனுக்கு அமெரிக்கா செய்யும் உதவி ஆபத்தானது

  

தனது எதிரிகளுக்கு எதிராக போராட அமெரிக்கா மூன்றாம் பேர்வழிகளைத் தூண்டி விடுவது உண்டு. அண்மைக் காலத்தில் ஐ எஸ் என்னும் இஸ்லாமிய அமைப்பினருக்கு எதிராக குர்திஷ் போராளிகளைத் தூண்டி விட்ட அமெரிக்கா அவர்களை சிரிய தாங்கிகள் தாக்கும்போது புதிய தர தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையோ துருக்கிய விமானங்கள் தாக்கும் போது அவர்களுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளையோ வழங்கவில்லை. பழைய தாங்கி எதிர்ப்பு படைக்கலன்களை மட்டுமே அமெரிக்கா வழங்கியது. ஆப்கானிஸ்த்தானில் சோவியத் படையினருக்கு எதிராக போராடிய இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு Stinger missilesகளை வாரி வழங்கியது. இரசியர்களால் அழிக்கப்படும் உக்ரேனியர்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட படைக்கல உதவியையே அமெரிக்கா செய்கின்றது. இது உக்ரேனியர்களுக்கு பெரும் பொருளாதார அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. நாட் செல்ல செல்ல இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் தாக்குதல்கள் கொடூரமானவையாகிக் கொண்டு போகின்றன.

64 கிலோ மீட்டர் வண்டித்தொடர்

இரசியாவின் ஆரம்பத்தாக்குதல் திட்டமிட்ட படி நடக்காத நிலையில் போர் தொடங்கிய நான்காம் நாள்  2022-02-28 இரசியா 64கிலோ மீட்டர்(40மைல்) நீளமான வண்டித் தொடரணி ஒன்றை புட்டீன் உக்ரேனுக்கு அனுப்பினார். உக்ரேனுக்கு அமெரிக்கா சேவையில் இருந்து 2022இல் அகற்றவிருக்கும் ஐம்பதிற்கு மேற்பட்ட F-16 போர்விமானங்களில் பாதியை உக்ரேனுக்கு வழங்கியிருந்தால் இவற்றில் பெரும்பகுதியை உக்ரேனியரகளால் எல்லையில் வைத்தே அழித்திருக்க முடியும். 

அமெரிக்கா கொடுக்கும் MANPAD (MAN PORTABLE AIR DEFENCE)

உக்ரேனுக்கு அமெரிக்கா கொடுக்கும் Stinger missiles என்பவை MANPAD (MAN PORTABLE AIR DEFENCE) என்ற வகையைச் சேர்ந்த ஏவுகணைகளாகும். தனி ஒரு படைவீரன் தன் தோளில் வைத்து செலுத்தக் கூடிய அமெரிக்கத் தயாரிப்பு ஏவுகணை இது. 1981-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட Stinger missiles இன்று வரை பல நாடுகளில் சேவையிலுள்ளன. இவை Tactical Weapons என்ற வகையிலும் அடங்குபவையாகும். Tactical Weapons என்பவற்றின் முக்கிய தன்மை அவை குறுகிய தூரம் வரை செயற்படக்கூடியவை. அவற்றின் தாக்கமும் நடுத்தரமானவை. இவற்றின் தாக்குதூரம் 3500 மீட்டர் (11500 அடி). Stinger missilesஇன் பாய்ச்சல் வேகம் மணிக்கு 2,400 கிமீ (1,500) அதாவது ஒலியிலும் இரண்டு மடங்கு வேகம்.

Stinger missilesகளுக்கு எட்டாத இரசிய விமானங்கள்

இரசியா உக்ரேனில் பெரும்பாலும் Su-25, Su-30, Su-34, ஆகிய விமானங்களையே உக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பயன்படுத்துகின்றது. Su-25 விமான ங்கள் 16,000 அடி உயரத்திலும் Su-30 விமானங்கள் 17,300 மீட்டர் (56,800அடி) உயரத்திலும் Su-34 விமானங்கள்1 7,300 மீட்டர் (56,800அடி) உயரத்திலும் பறக்க வல்லன. இந்த விமானங்கள் உயரப் பறக்கும் போது அவற்றை அமெரிக்காவின் Stinger missilesகளால் சுட்டு வீழ்த்த முடியாது. இரசிய விமான ங்கள் தாழப் பறந்து தாக்குதல் செய்யும் போது மட்டும் Stinger missilesகளால் சுட்டு வீழ்த்த முடியும். அதுவும் மெதுவாகப் பறக்கும் போது மட்டும். இரசிய விமானங்கள் கண்ணுக்கு தெரியும் போது பல Stinger missilesகளை ஏவும் போது மட்டும் ஒன்றாவது இரசிய விமானத்தில் சிறு சேதம் விளைவித்து அதனை தரையிறங்கச் செய்ய முடியும். சில சமயம் விழுத்த முடியும். இரசிய உலங்கு வானூர்திகளை உக்ரேனியர்கள் Stinger missilesகளால் சுட்டு வீழ்த்தியுள்ளனர். உக்ரேனுக்கு சோவியத் ஒன்றிய கால எஸ்-300 வான் பாதுகாப்பு ஏவுகணைகள், Osa, Tunguska ஆகிய பழைய வான் எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்க நேட்டொ நாடுகள் முடிவு செய்தன. இவற்றிற்கு எதிராக இரசியா நாலாம் தலைமுறையிலும் மேம்பட்ட Su-35, ஐந்தாம் தலைமுறை Su-58 போன்ற விமானங்களை களமிறக்கி தன் வானதிக்கத்தை நிலை நாட்டும்.  இதனால் உக்ரேன் Anti-Access, Area Denial (A2/AD) நிலையை தன் வான்பரப்பில் உருவாக்க முடியாது. Anti-Access, Area Denial (A2/AD) என்பதை “இது நம்ம ஏரியா உள்ளே வராதே” என சுலபமாக விளக்கலாம்.

வான் வலிமையே போரை வெல்லும்

புவிசார் அரசியல் கோட்பாடுகளில் முக்கியமான கோட்பாடான வான்வலுக் கோட்பாட்டை முன்வைத்த அலெக்சாண்டர் பி டி செவெர்ஸ்கி 1. வான்வலு தரைப்படைப் போர்களை செல்லுபடியற்றதாக்குகின்றது. 2. வான்வெளியை ஆதிக்கத்தில் வைத்திருப்பவையே உலக வல்லரசாகும். 3. நாடுகளின் வான் ஆதிக்கபரப்புக்கள் சந்திக்கும் இடங்கள் ஆதிக்கத்தை முடிவு செய்யும் இடங்களாகும். அந்த சந்திக்கும் பரப்புக்களைக் கட்டுப்படுத்தும் நாடே ஆதிக்க நாடாகும். அந்த அடிப்படையில் உலகின் முன்னணி வான்படை எனப்படும் 1511 போர்விமானங்களைக் கொண்ட இரசியாவிற்கு 98 பழைய விமானங்களைக் கொண்ட உக்ரேனால் தாக்கு பிடிக்க முடியாது என்பது உண்மை. உக்ரேனியர்கள் உறுதியாப் போராடுகின்றார்கள், தீரத்துடன் போராடுகின்றார்கள் எனக் உசுப்பி விடும் மேற்கு நாடுகள் இரசியா கைப்பற்றிய இடங்களில் இரு அங்குலத்தைத் தன்னும் உக்ரேனியர்கள் இதுவரை கைப்பற்றவில்லை என்பதை பறைசாற்றுவதில்லை. உக்ரேனின் வான்பரப்பில் இரசிய விமான ங்கள் செயற்பட முடியாத வகையில் உக்ரேனியர்களுக்கு படைக்கலன்களை நேட்டோ நாடுகள் வழங்காமல் உக்ரேனியர்களால் இரசியப் படையினரின் முன்னேற்றத்தை தடுக்க முடியாது. உக்ரேனியர்கள் தாம் இரசியாவின் 77 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகச் சொல்கின்றார்கள். ஆனால் 12 விமான ங்கள் மட்டுமே சுட்டு வீழ்த்தப்பட்டதாக சார்பற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரேனியர்களிடமுள்ள ஏவுகணைகளைப் பொறுத்தவரை இது ஒரு சாதனைதான்.

வான்மேன்மை, வானாதிக்கம், வான்மீயுயர் நிலை

வான் போரில் AIR SUPERIORITY, AIR DOMINANCE and AIR SUPREMACY முக்கியமானவையாகும். வான் மேன்மை (AIR SUPERIORITY) எதிரியின் எந்தவித தடையுமின்றி விமானங்கள் ஒரு குறித்த வான் பரப்பில் ஒரு நாட்டின் வான்படை செயற்படுவதாகும். வானதிக்கம் (AIR DOMINANCE) ஒரு நாட்டின் விமானங்கள் எதிரியின் விமானங்களிலும் மேம்பட்டவையாக இருந்து குறித்த வான் பரப்பில் ஆதிக்கம் செலுத்துவதாகும். வான் மீயுயர்நிலை (AIR SUPREMACY) எதிரியின் விமானங்கள் அழிக்கப்பட்டு அல்லது செயற்பட முடியாத நிலையின் ஒரு நாட்டின் விமானங்கள் எந்தவித தடங்கலுமின்றி செயற்படுவது. அமெரிக்காவின் புதிய ஏவுகணைகளால் மட்டும்தான் உக்ரேனிய வான்பரப்பில் இரசியவிமானங்களின் வான்மேன்மை இல்லாமற் செய்ய முடியும். ஐரோப்பிய போர்விமானங்களான Dassault Mirage III, SEPECAT Jaguar, Panavia Tornado, Dassault Mirage 2000, Dassault Rafale, Saab JAS 39 Gripen, Eurofighter Typhoon ஆகிய விமானங்களும். Meteor ஏவுகணைகளும் உக்ரேனுக்கு வழங்கப்பட்டால் மாத்திரம் உக்ரேனால் தனது வான்பரப்பை பாதுகாக்க முடியும். இவற்றை உக்ரேனுக்கு அனுப்பினால் புட்டீன் சினமடைவார் என அஞ்சி நேட்டோ நாடுகள் ஒதுங்கி இருந்து கொண்டு வலிமையற்ற படைக்கலன்களை உக்ரேனுக்கு அனுப்புகின்றன. அவற்றை நம்பி போராடும் உக்ரேனியர்கள் பெரும் இழப்பைச் சந்திக்கின்றனர்.

இரசிய வான்படை தரம் தாழ்ந்ததா?

David Axe என்ற வான் போர் ஆய்வு நிபுணர்:

1. இரசிய வான் படை ஒரு பரந்த வான்பரப்பை கட்டுப்படுத்தக் கூடியவகையில் உருவாக்கப்படவில்லை.

2. இரசியர்களுக்கு வான்கலன்கள் பறக்கும் பீராங்கிகள் மட்டுமே

3. இரசிய வான்படை வான்படை அல்ல

4. 2014-ம் ஆண்டின் பின்னர் இரசியாவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரத் தடையால் இலத்திரனியல் உபகரணங்கள் இறக்குமதி செய்ய முடியாத நிலையில் இரசியாவிடம் துல்லியத் தாக்குதல் வழிகாட்டல் ஏவுகணைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.

5. வானில் இருந்து தரக்கு வீசும் குண்டுகளுக்கு இலத்திரனியல் வழிகாட்டுதல் இல்லாத படியால் இரசிய விமானங்கள் உயரத்தையும் வேகத்தையும் குறைத்து பறக்க வேண்டியுள்ளது. அதனால் அவற்றை எதிரியால் இலகுவாக சுட்டு விழுத்தலாம். போர் விமானங்கள் முகில்களுக்கும் கீழே பறப்பது மிகவும் ஆபத்தானது.

மேற்கு நாட்டு படைத்துறை விமர்சகர்களில் இரண்டு வகையினர் உள்ளனர். ஒரு வகையினர் இரசியா சீனா போன்றவற்றின் படைக்கலன்களை உயர்த்தி மதிப்பிட்டு அவற்றால் அமெரிக்காவிற்கு ஆபத்து எனக் கூச்சலிடுபவர்கள். இவர்கள் படைத்துறை உற்பத்தி நிறுவனங்களால் தூண்டி விடப்படுபவர்கள். இரண்டாம் வகையினர் எதிரியை தாழ்வாக எடை போட்டு தம் வாசகர்களை மகிழ்விப்பவர்கள்

நேட்டோ கொடுத்துக் கொண்டிருக்கும் மட்டுப்படுத்தப் பட்ட உதவி இல்லாவிடில் உக்ரேனியர்கள் இரசியாவுடன் ஓர் உடன்பாட்டுக்கு வரலாம். நேட்டோ நாடுகள் கொடுக்க வேண்டிய உதவியைக் கொடுக்காமல் குறைந்த வலுவுடைய உதவி செய்கின்ற படியால் உக்ரேனியர்கள் போரைத் தொடர்ந்து நடத்தி இழப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...