உக்ரேனில் நடக்கும் போரில் சீனாவிடம் இரசியா படைத்துறை உதவியைக் கோரியுள்ளதாக முதலில் அமெரிக்க நாளிதழான Washington Post அறிவித்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலைவன் சீனாவின் வெளியுறவுத் துறை ஆணையகத்தின் இயக்குனர் ஜாங் ஜீச்சியுடன் ரோம் நகரில் 2022-03-14-ம் திகதி உக்ரேன் போர் தொடர்பாகப் ஏழு மணித்தியாலம் பேச்சு வார்த்தை நடத்தினார். சீனாவின் South China Morning Post ஜேக் சலைவன் சீனா இரசியாவிற்கு படைத்துறை உதவிகளையோ மற்ற உதவிகளையோ செய்தால் குறிப்பிடத்தக்க விளைவுகள் ஏற்படும் என எச்சரித்தார் எனச் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இரசியா தம்மிடம் எந்த உதவியும் கேட்கவில்லை என சீன அதிகாரிகள் சொல்லி வருகின்றனர்.
ஒன்றும் தெரியாத பாப்பாவாம் சீனா
சீனாவிற்கு முன் கூட்டியே உக்ரேன் மீது இரசியா படையெடுக்கும் என்பது தெரியும் என்றும் சீனாவின் வேண்டுதலின் பேரில் சீனாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி முடியும் வரை இரசியா தனது படையெடுப்பை பின் போட்டிருந்தது என்றும் Washington Post செய்திகள் வெளியிட்டிருந்தது. இதை அமெரிக்காவிற்கான சீனத் தூதுவர் கடுமையாக மறுத்ததுடன் சீனாவிற்கு முன் கூட்டியே தெரிந்திருந்தால் போரைத் தவிர்க்க சீனா முயற்ச்சித்திருக்கும் என்றார். 2021 மார்ச் மாதத்தில் இருந்தே இரசியா உக்ரேன் எல்லையில் தனது படையினரைக் குவிக்கத் தொடங்கியது உலகறிந்தது.
ரோம் நகரில் மரதன் பேச்சு வார்த்தை
2022 பெப்ரவரி 24-ம் திகதி உக்ரேன் மீது இரசியா படையெடுத்ததில் இருந்து தான் நடுநிலை வகிப்பதாக சீனா அறிவித்துக் கொண்டிருக்கின்றது. 2022 மார்ச் 14-ம் திகதி அமெரிக்க சீன அதிகாரிகளிடையே உக்ரேன் போர் தொடர்பாக ஏழு மணித்தியாலப் பேச்சு வார்த்தை ரோம் நகரில் நடை பெற்றது. இரசியா சீனாவிடம் உதவி கேட்டது உண்மை இல்லாமல் இருக்கலாம் ஆனால் ரோம் நகரப் பேச்சு வார்த்தை சீனா இரசியாவிற்கு உதவி செய்யக் கூடாது என்பதற்காகவே நடை பெற்றது என்பது உண்மை. உக்ரேனில் இருந்து வரும் செய்திகள் இரசியப் படையினர் உண்ண உணவின்றி உக்ரேனியர்களிடம் உணவு கேட்டதாக சொல்கின்றன. இரசியர்கள் இரண்டு நாட்களில் போரை முடிக்கும் திட்டத்துடன் மூன்று நாட்களுக்குத் தேவையான உணவு மற்றும் எரிபொருள் மட்டும் எடுத்துச் சென்றனர். இரசியாவிற்கு தயாரித்த உடன் உணவுகளை (Ready-to-eat meals) அவசரமாக அனுப்பும் படி சீனாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது என்பது உண்மையாக இருக்கலாம்.
எப்போதும் இல்லாத பதட்டம் இரசியாவில்
இரசியாவில் இருந்து பல்லாயிரக் கணக்கானவர்கள் 2022 பெப்ரவரி 24-ம் திகதி போர் தொடங்கிய பின்னர் வெளியேறியபடி உள்ளனர். அவர்களின் கருத்துப் படி இரசியாவில் எப்போதும் இல்லாத பதட்டம் நிலவுகின்றது. பல இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் கண்காணிக்கப்படுகின்றனர். அரச ஊடகங்களில் பணிபுரிபவர்கள் பலர் பதவியில் இருந்து விலகியுள்ளனர். ஒரு தொலைக்காட்டி செய்தி ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் போது செய்தி வாசிப்பவருக்குப் பின்னால் அச்சேவையின் ஆசிரியர் ஒருவர் போர் வேண்டாம் என்ற பதாகையைப் பிடித்தபடி நின்றார். இரசிய உளவுத்துறையைச் சேர்ந்த இரண்டு முன்னணி அதிகாரிகள் வீட்டுக்காவலில் வைத்திருக்கப்பட்டுள்ளனர் எனவும் செய்திகள் வருகின்றன. விளடிமீர் புட்டீன் குழம்பிப் போகாமல் இருக்கச் செய்ய சீன அதிபர் ஜீ ஜின்பிங்கினால் மட்டுமே முடியும்.
இரசியாவின் பிரச்சனைகள்
இரசியா பல உயர் தொழில்நுட்ப படைக்கலன்களை உருவாக்கினாலும் நிதித்தட்டுப்பாட்டால் அவற்றை போதிய எண்ணிக்கையில் உற்பத்தி செய்வதில்லை. அமெரிக்காவிடம் எழுநூறுக்கு மேற்பட்ட F-35 போர் விமானங்கள் உள்ளன. அதற்க்கு ஈடான Su-35 போர் விமானங்கள் இரசியாவிடம் 103 மட்டுமே உள்ளன. இரசியாவின் Su-57 பதின்நான்கு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. இரசியாவின் உலகிற் சிறந்த போர்த்தாங்கியான T-14 Armata போர்த்தாங்கிகள் 2300 உற்பத்தி செய்வதாக திட்டமிடப் பட்டிருந்தும் நூறிலும் குறைவான தாங்கிகளே தற்போது இரசியாவிடம் உள்ளன. இதனால் உக்ரேன் போர்க்களத்தில் இரசியா பல பற்றாக்குறைகளை எதிர் கொள்கின்றது:
1. போதிய அளவு புதிய வழிகாட்டல் ஏவுகணைகள் இல்லை
2. விமானங்கள் இலக்கைத் தெரிவு செய்யும் Targeting Pods தட்டுப்பாடு
3. போதிய அளவு ஆளிலிப் போர் விமானங்கள் இல்லை
இவற்றை சீனாவிடமிருந்து இரசியா பெற முயற்ச்சிக்கலாம். சீனாவின் படைக்கல இறக்குமதியில் 80% இரசியாவில் இருந்தே பெறப்படுகின்றது. இரசியாவில் தங்கியிருக்கும் சீனா இரசியாவின் வேண்டு கோளை அமெரிக்காவின் வற்புறுத்தலுக்கு இணங்கி கொடுக்க மறுக்குமா? சீனா ஆளிலிப் போர் விமானங்களையும் தயாரித்த உடன் உணவுகளையும் (Ready-to-eat meals) வழங்கும் என எதிர்பார்க்கலாம்.
பொருளாதாரத் தடையில் இருந்து இரசியாவை சீனா மீட்குமா?
இரசியாவிற்கு சீனாவிடமிருந்து தேவைப்படும் பேருதவி நேட்டோ நாடுகள் இரசியா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையால் இரசியாவின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பாதிப்பை தணிப்பதே. சீனாவைப் பொறுத்தவரை அதன் வெளியுறவுக் கொள்கையுச்ம் வர்த்தகக் கொள்கையும் உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய்? என் வீட்டிற்கு வந்தால் என்ன கொண்டு வருவாய்? என்பது போன்றது. இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையால் ஏற்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பு சீனாவிற்கு மிகவும் பாதகமானதாகும். அதனால் சீனா இரசியாவிடமிருந்து உலகச் சந்தை விலையிலும் குறைவான விலைக்கு எரிபொருளை வாங்கும். அதுவே இரசியாவிற்கு காத்திரமான உதவியாக அமையும். அடுத்த படியாக இரசியாவிற்கு நிதி தேவைப்படும் போது சீனாவிடமிருந்து கடன் வாங்க வேண்டும். இரசியாவின் வெளிநாட்டுச் செலவாணியை சீனாவில் வைப்பிலிட வேண்டும். இரசியாவின் வெளிநாட்டு செலவாணியை சினாவில் வைப்பிலிடும் போது சீன நாணயத்தின் பெறுமதி குறையும். அதனால் சீனாவில் விலைவாசி அதிகரிக்கும்.
சீனாமீது அமெரிக்கா மேலும் பொருளாதாரத் தடை விதிக்குமா?
இரசியாமீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை தோல்வியில் முடிய வேண்டும் என்பது சீனாவின் பேரவாவாக இருக்கும். இரசியா தோற்கடிக்கப்படுவதும் சீனாவிற்கு உகந்ததல்ல. புட்டீனும் ஜின்பிங்கும் அமெரிக்காவின் வலிமை இறங்குமுகமாக இருக்கின்றது என்பதை உறுதியாக நம்புகின்றனர். உக்ரேன் போரில் இரசியாவிற்கு நேட்டோ நாடுகள் கொடுக்கும் பிரச்சனையில் இரசியாவை மீட்க சீனா உதவி செய்தால் சீனா மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அது பொருளாதாரத் தடையாக இருக்கலாம். ஏற்கனவே இரசியாமீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையால் அமெரிக்கப் பொருளாதாரம் உட்பட உலகப் பொருளாதாரம் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. பொருளாதாரப் போர் என்பது அடி வாங்கினவனிலும் பார்க்க அடித்தவனுக்கு அதிக வலியை ஏற்படுத்தும். சீனாவிற்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவில் கருத்துக்கள் பரவலாக முன் வைக்கப்பட்டுள்ளன.
உக்ரேன் போர் தொடங்க முன்னரே உக்ரேனை இரசியா ஆக்கிரமித்தால் உலக ஒழுங்கைப் பொறுத்தவரை China will be in the driving seat என பல ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். சீனாவின் காட்டில் மழை என்பது உண்மை.
No comments:
Post a Comment