Monday 20 September 2021

இலங்கையின் பொருளாதாரப் பிரச்சனைக்கு இந்தியாதான் காரணம்

  


இலங்கையில் பொருளாதாரப் பிரச்சனைக்கு சீனாவின் கடன் பெறிதான் காரணம் என “ஜெய் ஹிந்த்” கும்பல்களின் Youtube Channels கூச்சலிடுகின்றன. ஒரு குறிப்பிட்ட பிரச்சனை பற்றிய பொருளாதாரம் ஆய்வுகளை செய்வதாயின் பொருளியல் கோட்பாடுகள் மேற்கோள் காட்டப்பட வேண்டும், அது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப் படவேண்டும் அல்லது செய்யப்பட்ட ஆய்வுகளில் இருந்து மேற்கோள் காட்டப்படவேண்டும், புள்ளிவிபர ஆதாரங்கள் கொடுக்கப்படவேண்டும். இவற்றில் ஒன்று கூட இல்லாமல் இலங்கைப் பொருளாதாரப் பிரச்சனைக்கு சீனாதான் காரணம், சீனக் கடன் பொறிதான் காரணம் என “ஜெய் ஹிந்த்” நிபுணரகள்(?) குற்றம் சாட்டுகின்றனர். போதாக் குறைக்கு செப்டம்பர் -15 ஜூனியர் விகடன்(பெயரிலும் ஆங்கிலக் கலப்பு) சஞ்சிகையில் ஒரு கட்டுரையும் வெளிவந்துள்ளது. 

ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி பற்றி பொருளியல் சொல்வது:

மொத்த உற்பத்தி=கொள்வனவு+முதலீடு+அரச செலவு+(ஏற்றுமதி-இறக்குமதி)

இங்கு கடன் இல்லை. ஆனால் ஒரு அரசு கடன் பட்டு செலவு செய்யும் போது பொருளாதார உற்பத்தி அதிகரிக்கும். ஆனால் இலங்கை அரசு கடன்பட்டு 30 ஆண்டுகள் போர் செய்தது.

கடனால் பிரச்சனை அல்ல கடன் பட முடியாததால் பிரச்சனை

2021 ஏப்ரல் மாத நிலவரப்படி இலங்கை பட்டுள்ள மொத்தக் கடனில் 47% முதலீட்டுச் சந்தைகளிடமிருந்தும், 9% உலக வங்கியிடமிருந்தும், 22% ஆசிய அபிவிருத்தி வங்கியில் இருந்தும், 10% ஜப்பானிடமிருந்தும், 10% சீனாவிடமிருந்தும், 3% இந்தியாவிடமிருந்தும் பெறப்பட்டுள்ளது. இதில் சீனக் கடன் மட்டும் எப்படி இலங்கைப் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைந்தது? இலங்கையில் பொருளாதாரப் பிரச்சனை பற்றி அல் ஜசீரா தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் இலங்கையின் தற்போதைய நடுவண் வங்கி ஆளுநர் நிவாட் கப்ரால், பொருளாதார நிபுணர் நிஷான் டி மெல், எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஹர்ஷா குணவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மூவரில் எவரும் இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு சீனாதான் காரணம் எனச் சொல்லவில்லை. நிஷான் டி மெல் இலங்கை 2019இன் இறுதியில் (பொருளாதாரத்தை தூண்டுவதற்காக) பாரிய வரிக்குறைப்பைச் செய்தபடியால் இலங்கையின் கடன் படு திறனை பன்னாட்டு அமைப்புக்கள் தரம் தாழ்த்தின என்றும் அப்படித் தரம் தாழ்த்திய படியால் இலங்கை உலக முதலீட்டுச் சந்தையில் கடன் பெற முடியாமல் போனதால் இலங்கையில் வெளிநாட்டுச் செலவாணித் தட்டுப்பாடு ஏற்பட்டது என்றார். அப்படிப் பார்க்கும் போது கடன் பட்டதால் இலங்கையில் பொருளாதாரப் பிரச்சனை ஏற்படவில்லை, கடன் பட முடியாமல் போனதால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 


 

போரால் சீரழிந்த இலங்கைப் பொருளாதாரம்

அரசு கடன் பட்டு 30 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டது. இந்த உள்நாட்டுப் போரால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி ஒஸ்ரேலியாவின் The University of Queenslandஇன் School of Economics ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில் இலங்கை உள்நாட்டுப் போர் இலங்கைப் பொருளாதாரத்தில் எதிர் மறையான விளைவை ஏற்படுத்தியது என்று முடிவு செய்துள்ளது.

ஓர் அரசின் வரவிலும் பார்க்க செலவுகள் அதிகரிக்கும் போது அது கடன் படும். இலங்கை அரசின் வரவிலும் பார்க்க செலவுகள் அதிகரிக்கத் தொடங்கியது 1980களின் ஆரம்பத்தில் இருந்துதான். 1970களில் பொருளாதார வளர்ச்சியில் உலகம் பார்த்து வியந்த நாடுகளாக ஹொங் கொங், வட கொரியா, சிங்கப்பூர், தைவான் ஆகிய நாடுகள் இருந்தன. அவற்றைப் பார்த்துத்தான் அப்போதைய சீன அதிபர் Deng Xioaping அமெரிக்காவின் நட்பு நாடுகள் திறந்த பொருளாதாரத்தின் மூலம் பொருளாதார வளர்ச்சியடைவதைச் சுட்டிக் காட்டி சீனாவில் பொருளாதார சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார். 1977-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜே ஆர் ஜெயவர்த்தன இலங்கையை ஒரு திறந்த பொருளாதாரமாகவும் அமெரிக்க நட்பு நாடாகவும் மாற்றி இலங்கையும் சிங்கப்பூரைப் போல் முன்னேற்ற முயற்ச்சித்தார். அதற்காக திருக்கோணமலையில் எரிபொருள் மீள் நிரப்பும் வசதியையும் சிலாபத்தில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான Ultra low wave தொடர்பாடல் வசதியையும் கொடுக்க இணங்கினார். இதை விரும்பாத இந்திரா காந்தியின் இந்திய அரசு அப்போது கைத்துப்பாக்கிகளுடனும் கைக்குண்டுகளுடனும் இலங்கை அரசுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருந்த தமிழ் போராளிகளை இந்தியாவிற்கு அழைத்து போர்ப்பயிற்ச்சியும் படைக்கலன்களும் வழங்கினார். இதனால் இலங்கையில் ஓர் உள்நாட்டுப் போர் உருவாகியது. அதற்காக இலங்கை அரசு படைத்துறைக்கு பெருமளவு செலவு செய்தது. இலட்சக் கணக்கானோர் இலங்கைப் படையில் சேர்க்கப்பட்டனர். இலங்கையின் செலவு வரவிலும் பார்க்க பெருமளவு அதிகரிக்கத் தொடங்கியது. (கட்டுரையின் ஆரம்பத்தில் உள்ள வரைபடத்தைப் பார்க்கவும்) போதாக் குறைக்கு 1987இல் இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படை தமிழர்களின் ஒரு இலட்சம் வீடுகளை அழித்து இலங்கைக்கு பெரும் இழப்பீடு ஏற்படுத்தியது. இலட்சக் கணக்கானோர் இலங்கையில் இருந்து வெளியேறினர். அதனால் இலங்கையின் மொத்தக் கொள்வனவு குறைந்தது. இலங்கைப் பொருளாதாரம் பெரும் இழப்பீட்டைச் சந்தித்தது. இலங்கை உள்நாட்டுப் போரில் தமிழர்களின் கைகள் ஓங்கியிருந்த நிலையில் தலைமை அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தமிழர்களுக்கு ஓர் இடைக்கால தன்னாட்சி அரசைக் கொடுக்க முன்வந்தார். தமிழர்களுக்கு அதிகாரம் கிடைப்பதை பொறுக்க முடியாத இந்தியா ரணிலை சந்திரிக்கா பண்டாரநாயக்கா மூலமாக பதவி நீக்கம் செய்து மஹிந்த ராஜபக்சேயை தலைமை அமைச்சராக்கியது. பின்னர் இந்தியாவும் இணைந்து தமிழர்களின் போராட்ட வலுவை 2009இல் அழித்தது. 2009இல் இலங்கை அரசைக் கடனாளியாகவும் தமிழர்கள் ஒரு கையிறு நிலையையும் இந்தியாதான் உருவாக்கியது.

1980களில் இலங்கையில் அமெரிக்க தலையீடு இருக்கக் கூடாது என்பதற்காக இந்தியா செய்த சதியால்தான் இலங்கையின் கடன்பளு அதிகரித்தது. அதனால் இப்போது இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

“சீனக் கடன் பொறி” என்பது சீனாவின் BELT & ROAD INITIATIVEஐ குழப்ப மேற்கு நாடுக்ள் உருவாக்கிய பதமாகும். அது இப்போது “ஜெய் ஹிந்த்” கும்பல் கொறிக்கும் பொரியாக மாறிவிட்டது. தமிழர்களைப் பொறுத்தவரை தமிழர்களை இனக்கொலை செய்ய மறைமுகமாக உதவி செய்த சீனாவும் நேரடியாக உதவி செய்த இந்தியாவும் அயோச்க்கிய நாடுகளே.

செப்டம்பர் -15 ஜூனியர் விகடன் சஞ்சிகையில் வெளிவந்த. ஈழத்தவர் எழுதிய கட்டுரையில் இந்தியச் சதியை மறைத்தமை கவலைக்குரியது. 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...