Tuesday 21 September 2021

Money Printing: காசு அச்சிடுதல் என்பது என்ன?

  


இலங்கையின் நடுவண் வங்கியின் ஆளுநராக செப்டம்பர் 16-ம் திகதி (மீண்டும்) பொறுப்பேற்ற நிவாட் கப்ரால் முதல் செய்த வேலை 45.95பில்லியன் ரூபாக்களை அச்சிட்டதுதான். இலங்கை அரசின் திறைசேரிக்கு பணம் தேவைப்படும் போது அது தன் கடன்முறிகளை (Bonds) விற்பனை செய்யும். அரசு கடன் வாங்குவதற்கு கொடுக்கப்பட்ட கௌரமான பெயர்தான் கடன்முறி விற்பனை. கடன்முறிக்கு என ஒரு விலையும் வட்டி விழுக்காடும் கால எல்லையும் உள்ளன. அதை வாங்குபவர் அதிக விலை கொடுத்தும் வாங்காலம் அல்லது குறைந்த விலை கொடுத்தும் வாங்கலாம். முதலீட்டாளர்கள் யாரும் வாங்காத நிலையில் அரசின் கடன் முறிகளை நடுவண் வங்கி (Central Bank) வாங்கும். நடுவண் வங்கி வாங்குவதற்கு கொடுக்க வேண்டிய பணத்தை காசு உருவாக்குதல் மூலம் செய்யும். இதை நாணய அச்சிடுதல் என்பர். கொடுக்க வேண்டிய பணம் முழுவதையும் நடுவண் வங்கி காசாக அச்சடிக்காது. ஒரு பகுதி (3% முதல் 8%) மட்டும் நாணயத் தாள்களாக அச்சிடப்படும். எனையவை நடுவண் வங்கியில் கணக்கு ஏடுகளில் செய்யப்படும் பதிவாக இருக்கும். நடுவண் வங்கியைப் பொறுத்தவரை அரசுக்கு கொடுத்த கடன் என்பது அதன் சொத்தாகவும் அது உருவாக்கிய பணம் கடனாகவும் அமையும்.

விற்க முடியாத கடன் முறி

2021 மார்ச் 30-ம் திகதி இலங்கை 45பில்லியன் ரூபா பெறுமதியான அரசின் கடன் முறிகளை விற்பனைக்கு விட்ட போது 10பில்லியன் ரூபா பெறுமதியான கடன் முறிகளை மட்டும் விற்பனை செய்ய முடிந்தது. பொதுவாக இலங்கை அரசின் கடன் முறிகளில் பெரும்பகுதியை பன்னாட்டு முதலீட்டாளர்கள் வாங்குவாரகள் இலங்கை அரசின் வெளிநாட்டுக் கடனில் 47% வெளிநாட்டு முதலீட்டாளர்களே வாங்குவார்கள். இலங்கை அரசின் கடன் மீளளிப்புத் திறனை கடன் மதிபீடு செய்யும் நிறுவனங்கள் தரம் தாழ்த்திய படியால் கடன் முறிகளை விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் காசு அச்சிடும் சூழல் உருவானது.

பணம் உருவாக்கல் கடன்படுதலாகும்

நடுவண் வங்கி அரச முறிகளை வாங்குவதற்கு தனியார் வங்கிகளுக்கு கடன் கொடுப்பதும் உண்டு. தான் வாங்கிய கடன் முறிகளை விற்பனை செய்வதும் உண்டு. ஒரு நடுவண் வங்கி உருவாக்கும் பணம் அது நாட்டு மக்களிடம் படும் கடனாகும். எனது கையில் இலங்கை காசு ஆயிரம் ரூபா இருந்தால் அது நடுவண் வங்கி எனக்குக் கொடுக்க வேண்டிய கடனாகும்.  நடுவண் வங்கியிடம் இருந்து அரச திறைசேரி பெற்ற கடன் பணத்தை அரசு செலவு செய்யும் போது அது பல்வேறுவழிகளில் பொதுமக்களைச் சென்றடையும். பொதுமக்கள் அப்பணத்தைக் கொண்டு பொருட்களை வாங்கும் போது நாட்டில் உற்பத்தி அதிகரிக்கும். அதனால் அரசுக்கு வரி மூலமாக வருமானம் கிடைக்கும். அச்சடிக்கும் நாணயத்திற்கு ஏற்ப நாட்டில் உற்பத்தி அதிகரிக்காவிடில் விலைவாசி ஏறி நாணயத்தில் பெறுமதி குறையும். 


பணம் உருவாக்கல் விலைவாசியை அதிகரிக்கும்

இலங்கையில் நடுவண் வங்கி உருவாக்கும் மேலதிக பணம் நாட்டு மக்களின் கைகளில் மேலதிக வருமானமாகப் போய் இப்போது சேர்வதில்லை. மாறாக ஏற்கனவே அரசு செய்து கொண்டிருக்கும் கொடுப்பனவுகளை தொடர்ந்து செய்வதற்காக இலங்கை அரசு கடன் படுகின்றது. மக்கள் கைகளில் மேலதிக பணம் சேராத படியால் மேலதிக கொள்வனவு இல்லை. நாட்டில் மேலதிக உற்பத்தி இல்லை. இலங்கை நாணயத்தின் பெறுமதி குறைந்திருப்பதால் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. மக்கள் கைகளுக்கு செல்லும் பணத்தை கொண்டு முன்பு வாங்கியவற்றிலும் பார்க்க குறைந்த அளவு பொருட்களையே மக்கள் வாங்குகின்றனர். பெருந்தொற்று காரணமாக மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப் பட்டுள்ள படியாலும் உரம் மற்றும் கிருமி நாசினி தட்டுப்பாட்டாலும் மக்கள் வாங்கும் உணவின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. விலைவாசி தொடர்ச்சியாக ஏறி அவசிய உணவுப் பொருட்களுக்கு இலங்கை மக்கள் மிக அதிக விலை கொடுக்க வேண்டிய அல்லது வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பண உருவாக்கம் விலைவாசியை அதிகரிக்கின்றது. விலைவாசி அதிகரித்தால் நாணயப் பெறுமதி குறையும். அதை சமாளிக்க நடுவண் வங்கி வட்டி விழுக்காட்டை அதிகரிக்க வேண்டி வரும். பணவீக்கம் அளவுக்கு அதிகமாக இருக்கும் போது நடுவண் வங்கி மேலும் பணத்தை உருவாக்குதலை வயிற்றோட்டத்திற்கு பேதிமருந்து கொடுப்பதற்கு ஒப்பிடுவார்கள்.

அளவுசார் தளர்ச்சி(Quantitative Easing)

நடுவண் வங்கி நாணயத் தாள்களை அச்சிடாமல் இலத்திரனியல் மூலமாக நிதி ஒதுக்கத்தைச் செய்து அதை வர்த்தக வங்கிகளுக்கு வழங்கும். அதைக்கொண்டு திறைசேரியின் கடன் முறிகள் வாங்கப்படும். இதை அளவுசார் தளர்ச்சி(Quantitative Easing) என்பார்கள். இதைச் செய்யும் போது நீண்டகால கடன்களுக்கான வட்டிவிழுக்காடு குறைக்கப்படும்.

அரச பொருளாதார நடவடிக்கை

அரசு உற்பத்தித் துறையில் ஈடுபட்டு மக்கள் கொள்வனவு செய்யக் கூடிய பொருட்களை மேலதிகமாக உற்பத்தி செய்வது ஒரு தீர்வாக அமையலாம். அமெரிக்கா உட்கட்டுமானத்திற்கு இரண்டு ரில்லியன் டொலர்களை ஒதுக்குவதும் அதற்காகத்தான். 2008-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ள அமெரிக்கா அளவுசார் தளர்ச்சி என்னும் (Quantitative Easing) பெயரில் பண உருவாக்கத்தில் ஈடுபட்டது. பெருந்தொற்றுக்குப் பின்னர் பொது முடக்கத்தால் உற்பத்தித்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பணத்தை மேலதிகமாக உருவாக்கியபோது அமெரிக்காவில் விலைகள் அதிகரித்து பணவீக்கம் ஏற்பட்டது. அதனால் வட்டி விழுக்காடு அதிகரித்தல் அவசியமானது.

கண்காணிக்கப்பட வேண்டிய பணப்புழக்கம்

நடுவண் வங்கி நாட்டில் புழக்கத்தில் உள்ள பணத்தை கண்காணிக்க வேண்டும். நடுவண் வங்கியால் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் முடியும் குறைக்கவும் முடியும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி, விலைவாசி, வட்டி விழுக்காடு ஆகியவறைக் கருத்தில் கொண்டு நடுவண் வங்கி பணப்புழக்கத்தை முடிவு செய்ய வேண்டும். அளவிற்கு மிஞ்சிய பணத்தை உருவாக்கி புழக்கத்தில் விட்டால் விலைவாசி ரில்லியன் விழுக்காடு கணக்கில் ஏறி பணம் செல்லாக்காசாகிவிடும் என்பதற்கு ஜிம்பாப்பேயில் 2008-2009இல் நடந்தவை சிறந்த உதாரணமாகும். அதோபோன்று ஆர்ஜெண்டீனா தொடர்ச்சியாக பல மிகைபணவீக்கத்தைக் கண்டது. வெனிசுவேலா கண்டுகொண்டிருக்கின்றது.

தனித்துவத்தையும் சுதந்திரத்தையும் இழந்த நடுவண் வங்கி

ஒரு பாராளமன்ற உறுப்பினர் இலங்கை நடுவண் வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்றமை நட்ப்பொழுங்கிற்கு மாறானதாகும். மேலும் அவரது நியமனத்துடன் நடுவண் வங்கியின் ஆளுநர் அமைச்சரவைத் தகுதியுள்ள அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார். தனித்துவமாக இயங்க வேண்டியதாகக் கருதப்படும் நடுவண் வங்கி இப்போது ஓர் அரச திணைக்களம் ஆகிவிட்டது. இவர் முன்பு இலங்கை நடுவண் வங்கியின் ஆளுநராக இருந்த போது தன் கணக்கியல் புலமையால் கணக்கு விட்டு நமல் ராஜ்பக்சே அமெரிக்கா சென்றபோது அவருக்கு தேவையான ஆடம்பரச் செலவுகளை ஏற்பாடு செய்தவர் எனக் குற்றம் சாட்டப்பட்டவர். இவர் முன்பு ஆளுநராக இருந்த போது முறையற்ற முறையில் நடந்து கொண்டதைச் சுட்டிக்காட்டி இவரது நியமனத்திற்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்ற வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இவற்றால் இவர் ராஜபக்சே குடும்பத்திற்கு மிகவும் வேண்டப்பட்டவராக திகழ்கின்றார். இவரது செயற்பாடு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் பார்க்க மீண்டும் ராஜபக்சேக்கள் தேர்தலில் வெற்றி பெறுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.

சிலர் இலங்கை வங்குரோத்து அடைந்துவிட்டது என்றும் சிலர் அடையப் போகின்றது என்றும் கூறுகின்றார்கள். பன்னாட்டு நாணய நிதியத்தின் (IMF) இணையத் தளத்தில் “நாடுகள் வங்குரோத்தடைவதில்லை” (Countries Don’t Go Bankrupt) என ஒரு கட்டுரையும் உண்டு. அதற்குக் காரணம் நடுவண் வங்கிகளால் பணத்தை உருவாக்க முடியும் என்பதாகும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...