Saturday 25 September 2021

Huawei Ms Meng: அசிங்கப்பட்ட நாடுகள்

 


அணுக்குண்டுகளை வைத்திருக்கும் அமெரிக்கா ஈரான் அணுக்குண்டு உற்பத்தி செய்யக் கூடாது என்று உறுதியாக நிற்கின்றது. அமெரிக்காவை அழிப்போம் இஸ்ரேலை ஒழிப்போம் என்ற கோட்பாடுடன் ஈரானிய மதவாத ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள். இஸ்ரேலின் அரசுறவியல் கைக்கூலி போல அமெரிக்கா செயற்படுகின்றது. 

ஈரான் அணுக்குண்டு உற்பத்திக்கு தேவையான யுரேனியத்தைப் பதப்படுத்துவதாக இரகசியமாக அணுக்குண்டை வைத்திருக்கும் இஸ்ரேல் குற்றம் சாட்டுகின்றது. ஈரான் தனது யுரேனியப் பதப்படுத்தல் அமைதியை இலக்காகக் கொண்டது என்பதுடன் தமக்கு அணுக்குண்டு உற்பத்தி செய்யும் நோக்கம் இல்லை என்கின்றது. ஈரானின் யுரேனியம் பதப்படுத்தும் நிலையங்கள் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணையவெளியூடாக ஊடுருவி தாக்குதல் செய்ததாக குற்றம் சாட்டப்படுகின்றது. அது மட்டுமல்ல ஈரானின் யுரேனியப் பதப்படுத்தலில் சம்பத்தப்பட்டுள்ள விஞானிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அக் கொலகளைச் செய்தது இஸ்ரேலிய உளவுத்துறை என ஈரான் குற்றம் சாட்டுகின்றது.

ஈரானுடன் Huawei கள்ளத் தொடர்பு

ஈரானுக்கு எதிராக பல வர்த்தகத் தடைகளை அமெரிக்கா தன் நட்பு நாடுகளுடன் இணைந்தும் ஐக்கிய நாடுகள் சபையினூடாகவும் தனித்தும் மேற்கொண்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் செய்யும் பன்னாட்டு கொடுப்பனவு முறைமையில் இருந்து ஈரான் தடை செய்யப்பட்டுள்ளது. ஈரான் மீதான தடைகளை மீறி சீனாவின் திறன்பேசி, கணினி மற்றும் பல இலத்திரனியல் துறையில் சிறந்து விளங்கும் Huawei நிறுவனம் செயற்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. அமெரிக்காவுடன் குற்றவாளிகளை மாற்றிக் கொள்ளும் உடன்பாடு உள்ள நாடாகிய கனடாவிற்கு Huawei  நிறுவனத்தின் நிதித்துறைக்கு பொறுப்பான Ms Meng Wanzhou சென்றபோது அவரைக் கைது செய்யும் வேண்டுதலை அமெரிக்கா கனடிய நீதித்துறையிடம் 2018-ம் ஆண்டு விடுத்தது. அதன் பேரில் அவர் கனடாவில் கைது செய்யப்பட்டார். அவரை அமெரிக்காவிற்கு கடத்தும் வழக்கு கனடாவில் மூன்று ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்றது. மூன்று ஆண்டுகளாக Ms Meng Wanzhou கனடாவில் சிறைக் கைதி போல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கனடாவின் செயலைக் கடுமையாகக் கண்டித்த சீனா தனது நாட்டில் உள்ள இரண்டு கனடியக் குடிமகன்களை உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி கைது செய்து தடுத்து வைத்தது. சீனா பணயக் கைதிகளாக அவர்களை பிடித்து வைத்துள்ளது என அமெரிக்காவும் கனடாவும் குற்றம் சாட்டின. 

முந்திய சீனா சீறிய அமெரிக்கா

இலத்திரனியல் தொடர்பாடலை பல மடங்கு துரித்தப்படுத்தும் 5ஜீ அலைக்கற்றை தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் போட்டி போட்டுக் கொண்டு பல நாடுகளும் ஈடுபட்ட வேளையில் சீனாவின் Huawei அதில் முந்திக் கொண்டது. பல நாடுகளிற்கு அவற்றை விநியோகிக்க தொடங்கியது. சீனாவின் 5ஜீ அலைக்கற்றை உலகெங்கும் பாவிக்கப் பட்டால் உலக ஒழுங்கு குலைக்கப்படும், சீனா உலகெங்கும் உளவு பார்க்கும், சீனா உலகெங்கும் உள்ள விஞ்ஞான தொழில்நுட்ப தகவல்களையும் தொழிற்றுறை இரகசியங்களையும் திருடும், சீனா உலகில் ஆதிக்கம் செலுத்தும் என்ற குற்றச்சாட்டு அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகளாலும் அதிகாரிகளாலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஆண்டு தோறும் அரை ரில்லியன் டொலர் பெறுமதியான தொழில்நுட்பத் தகவல் திருட்டுக்களை அமெரிக்காவில் இருந்து சீனா செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது. அலைக்கற்றைச் செயற்பாட்டின் மூலம் 4.7மில்லியன் வேலைவாய்ப்பும் 47பில்லியன் வருமானமும் அமெரிக்காவிற்கு கிடைக்கின்றது. சீனாவின் ஹுவாவே (ஹுவாய்) நிறுவனம் தமது தொழில்நுட்பங்களைத் திருடியதாக அமெரிக்காவின் கூகிள், கோல்கொம் ஆகிய நிறுவனங்கள் பகிரங்கக் குற்றச் சாட்டுக்களை முன்வைத்தன.

5ஜீ சீனாவை பொருளாதாரத்தில் உலகின் முதன்மை நாடாக்கும்

தற்போது பல நாடுகளிலும் பாவிக்கப்படும் 4ஜீ (நான்காம் தலைமுறை) என்பது Long Term Evolution (LTE) என்பதாகும். அது அது 3ஜீ இலும் பார்க்க பத்து மடங்கு வேகமாக தகவற் பரிமாற்றம் செய்யக் கூடியது. 5ஜீ அலைக்கற்றை 4ஜீ அலைக்கற்றையிலும் நூறு மடங்கு வேகத்தில் செயற்படக் கூடியது. 4ஜீ தொழில்நுட்பமுள்ள கைப்பேசியில் இரண்டு மணித்தியாலத் திரைப்படத்தை தரவிறக்கம் செய்ய ஏழு நிமிடங்கள் எடுக்கும். 5ஜீ தொழில்நுட்பம் உள்ள கைப்பேசிக்கு 6 செக்கன்கள் மட்டுமே எடுக்கும். கைப்பேசிகளில் மட்டுமல்ல தானாக இயங்கு மகிழூந்துகள், ஆளில்லாப் போர்விமானங்கள் போன்றவற்றிலும் 5ஜீ பாவிக்கப்படும். ஒரு நாட்டில் இருக்கும் மருத்துவர்கள் இன்னொரு நாட்டில் உள்ள நோயாளிகளைப் பரிசோதிப்பதையும் சிகிச்சை செய்வதையும் 5ஜீ தொழில்நுட்பம் மேலும் இலகுவானதாகவும் சிறப்பானதாகவும் மாற்றும். போக்குவரத்து, தொழிற்றுறை உற்பத்தி, வர்த்தகம் போர்முறைமை போன்றவற்றை இலத்திரனியல் மயப்படுத்தும் நான்காம் தொழிற்புரட்சியை 5ஜீ தொழில்நுட்பம் இலகுவாகவும் துரிதமாகவும் சாத்தியமானதாக்கும். கணினிகள் தாமகச் சிந்திந்து செயற்படும் செயற்கை நுண்ணறிவுப் பாவனைக்கும் 5ஜீ தொழில்நுட்பம் வழிவகுக்கும்.

தொழில்நுட்பப் போர்

Semi-conductors எனப்படும் குறைகடத்திகள் Huawei நிறுவனத்திற்கு மிகவும் தேவைப்படுகின்றது. அவற்றை அது அமெரிக்காவிடமிருந்தும் தைவானிடமிருந்தும் இறக்குமதி செய்கின்றது. Huawei நிறுவனத்திற்கு முட்டுக்கட்டை போடவும் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை தாமதப் படுத்தவும் அமெரிக்கா சீனாவிற்கு Semi-conductorsஐ ஏற்றுமதி செய்வதைத் தடை செய்து சீனாமீது ஒரு தொழில்நுட்ப போரைத் தொடுத்துள்ளது, தனது நட்பு நாடுகளையும் அத்தடையை செய்ய வைத்துள்ளது. Semi-conductorsஐ உருவாக்கும் பொறி ஒன்றை நெதர்லாந்திடமிருந்து சீனா வாங்க முயன்றபோது அமெரிக்கா அதை தடுத்தது. 

குற்றத்தை ஒத்துக்கொண்ட Ms Meng Wanzhou

Huawei நிறுவனத்தின் நிதித்துறைப் பொறுப்பாளரான Ms Meng மெய்நிகர் வெளியில் அமெரிக்க நீதிமன்ற விசாரணையில் பங்கு கொண்டு ஈரானுடன் தனது நிறுவனம் தடைகளை மீறி வர்த்தகம் செய்தமையை ஒப்புக் கொண்டதன் பேரில் அவரை கனடிய நீதிமன்றம் விடுதலை செய்தது. அதே வேளையில் சீனாவில் கைது செய்து வைக்கப்பட்டிருக்கும் இரு கனடியக் குடிமக்களையும் சீனா விடுவித்துள்ளது. அதனால் அமெரிக்கா, கனடா, சீனா ஆகியவற்றிற்கிடையிலேயான இழுபறி இப்போது முடிவுக்கு வந்துள்ளது. 

சீனா பணயக் கைதிகளைப் பிடித்தமைக்கு அமெரிக்கா அடிபணிந்து விட்டது என அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர். முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பைப்போல் ஜோ பைடன் சீன விவகாரத்தில் இறுக்கமாக நிற்காமல் விட்டுக் கொடுக்கின்றார் எனவும் சீனா தொடர்ந்து பணயக் கைதிகளாக பிடிப்பதைச் செய்யும் எனவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் Ms Meng Wanzhouஇன் நான்கு பக்க அறிக்கை Huawei நிறுவனத்திற்கு எதிராக பல சட்ட நடவடிக்கைகளை எடுக்க வழிவகுக்கும் என்கின்றனர் ஜோ பைடனின் ஆதரவாளர்கள். சீனாவிற்கும் அமெரிக்காவிற்கு இடையில் உள்ள பல சட்ட அடிப்படையிலான இழுபறிகளைக் கையாண்ட அமெரிக்க சட்ட அறிஞரான Jerome A. Cohen இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பாதித்துள்ள பல சிக்கல்கள் இனித் தீருவதற்கு வழிவகுக்கும் என்கின்றார். 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...