சீனா 2021 செப்டம்பர் 24-ம் திகதி தனது நாட்டில் பிட்கொயின் (Bitcoin) என பரவலாக அறியப்படும் நுண்மிய நாணயங்களை (Cryptocurrencies) உருவாக்குதலையும் (Mining) அதன் மூலம் கொடுப்பனவுகள் செய்வதையும் தடை செய்துள்ளது. உலகிலேயே அதிக அளவு நுண்மியநாணயங்கள் சீனாவில் உருவாக்கப்பட்டு புழக்கத்தில் இருந்தன. இதனால் சீனா விதித்த தடையின் பின்னர் நுண்மிய நாணயங்களின் பெறுமதி விழ்ச்சியடைந்துள்ளது. சீனாவின் முன்னணி மெய்ப்பேட்டை (Real Estate) நிறுவனமான Evergrande நிதி நெருக்கடியைச் சந்தித்த தலையிடிக்கு நடுவில் சீன அரசு நுண்மிய நணயங்களுக்கு தடை விதித்தது அவற்றிற்கு பேரிடியாக அமைந்துள்ளது. Evergrandeஇன் நிதி நெருக்கடியால் உலகெங்கும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்தன. பொதுவாக பங்குச் சந்தைகள் வீழ்ச்சியைக் காணும் போது பிட்கொயின் உட்பட எல்லா நுண்மிய நாணயங்களும் பெறுமானச் சரிவைச் சந்தித்துள்ளன.
நுண்மிய நாணயங்களின் வரலாறு
2008-ம் ஆண்டு Satoshi Nakamoto என்ற புனைபெயரின் பின்னால் இருக்கும் ஒரு நபர் அல்லது பல நபர்கள் நுண்மிய நாணயத்திற்கான(Cryptocurrency) தமது வெள்ளை அறிக்கையைச் சமர்பித்தனர். தமது நாணயத்தின் மூலம் செய்யப்படும் கொடுப்பனவுகளுக்கு நடுத்தரகர், இடையில் கட்டணம் அறவிடுவோர் என யாரும் இருக்க மாட்டார்கள். அதனால் கட்டணமின்றி கொடுப்பனவுகளைச் செய்ய முடியும் என அவர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டனர். அவர்களே 2009இல் பிட்கொயின் (Bitcoin) எனப்படும் முதலாவது நுண்மிய நாணயத்தை அறிமுகப்படுத்தினர். அதைத் தொடர்ந்து பல நுண்மிய நாணயங்கள் உருவாக்கப்பட்டாலும் நுண்மியநாணயம் என்றால் பிட்கொயின் என்பது போன்றும் பிட்கொயின் என்றால் நுண்மிய நாணயம் என்பது போன்றும் தோற்றப்பாடு உள்ளது. நுண்மிய நாணயம் என்பது நடுவண் வங்கியில்லா நாணயமாகும். 2008-ம் ஆண்டு ஏற்பட்ட உலக நிதி நெருக்கடியின் போது டொலருக்கு ஏற்பட்ட சோதனை எல்லா உலக நாணயங்களையும் பாதித்தது. இந்த நெருக்கடியின் விளைவாகவே நுண்மியநாணயங்கள் உருவாகின.
விழுந்த டொலரும் எழுந்த நுண்மிய நாணயங்களும்
அமெரிக்க டொலரின் பெறுமதி கேள்விக்குறியான நிலையில் நுண்மியமிய நாணயங்களில் (Cryptocurrency) பெருமளவு முதலீடு செய்யப்படுகின்றது. உலகெங்கும் பல நுண்மியமிய நாணயங்கள் இருக்கின்றன. அவற்றில் முதன்மையானதும் அதிகம் பேசப்படுவதும் பிட்கொயின்(Bitcoin) ஆகும். 2020-ம் ஆண்டு பின்கொயினின் பெறுமதி 13%இற்கு மேல் அதிகரித்துள்ளது. அதேவேளை அமெரிக்க டொலர் சுட்டியின் மதிப்பு 9% வீழ்ச்சியடைந்துள்ளது.
BLOCKCHAIN என்னும் தொடர்பதிவேடுகள்
நுண்மிய நாணயங்கள் என்பது வெறும் எண்மியக் குறியீடுகள்(Digital Codes) மட்டுமே. அவை பெறுமதியுள்ள சொத்துக்கள் போல் விற்கப்படுவதும் வாங்கப்படுவதும் நடைமுறையில் உள்ளன. மற்ற சொத்துக்கள் போல் அவற்றின் பெறுமதியும் ஏறுவதும் உண்டு இறங்குவதும் உண்டு. Blockchain எனப்படும் தொடர்பதிவேட்டு தொழில்நுட்பம் மூலம் அவற்றின் கணக்குகள் பேணப்படுகின்றன. தொடர்பதிவேட்டு தொழில்நுட்பம் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் அதன் பாவனையாளர்களுக்கு வழங்குகின்றது என்கின்றனர் அதை உருவாக்கியவர்கள். அந்த பதிவேடுகளைப் பராமரிக்கும் கணினித் தொகுதிகள் பெருமளவு மின்சாரத்தை பயன்படுத்துவதால் அது சூழலை மாசுபடுத்துகின்றது எனக் குற்றம் சாட்டப்படுகின்றது.
நம்பிக்கையே நாணயம்
ஊழல் செய்வோர், போதைப்பொருள் விற்பனை செய்வோர், வரிஏய்ப்புச் செய்வோர், பயங்கரவாதிகள், கப்பம் கேட்போர் போன்றவர்களுக்கு நுண்மிய நாணயம் சிறந்த புகலிடமாக அமையும் என உலகின் பல அரசுகள் அச்சம் தெரிவித்தன. நாம் அன்றாடம் பாவிக்கும் காசு எனப்படும் நாணயங்கள் நடுவண் வங்கிகளால் வெளியிடப்படுபவை. நடுவண் வங்கிகள் மீதும் அவற்றின் பின்னால் உள்ள அரசுகள் மீதும் வைத்துள்ள நம்பிக்கையே நாணயங்கள் உலகெங்கும் புழக்கத்தில் இருப்பதற்கு காரணமா அமைகின்றது. அந்த நம்பிக்கை கடந்த சில நூற்றாண்டுகளாக கட்டியெழுப்பப்பட்டவை. நுண்மிய நாணயங்கள் (Cryptocurrencies) தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களை அகற்றி அவற்றின் இடத்தை தாம் பிடிப்பதற்கு இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும் என்பதுதான். ஏற்கனவே இணையவெளியில் நடக்கும் ஊடுருவல்கள், ஊழல்கள், திருட்டுக்கள் போன்றவற்றால் மக்களுக்கு அதன் மீது பெரும் அவநம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருக்கின்றது. அதே போல் தற்போது புழக்கத்தில் உள்ள நாணயத்தாள்களைப் போலியாக அச்சிடுவதும் உண்டு. கடன் அட்டை, வங்கி அட்டை, கைப்பேசிச் செயலிகள் மூலமாகச் செய்யப்படும் கொடுப்பனவுகளுக்கு அந்த அட்டைகளையும் செயலிகளையும் வழங்கும் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வர்த்தக நிறுவங்களிடமிருந்து கட்டணங்களை அறவிடும்.
பரிசோதனியில் ஈடுபட்ட JP MORGAN
JP MORGAN என்னும் நிதி நிறுவனம் Etherumஎன்னும் நுண்மிய நாணயம் பாவிக்கும் etherum technologyயை 2016-ம் ஆண்டில் இருந்து பரிசோதனைக்காக பவித்து வருகின்றது. இதற்காக அது டென்மார்க்கைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான செய்மதியையும் பாவித்துள்ளது. பாதுகாப்பன கொடுப்பனவுகளுக்காக இணையவெளிப் பதிவேடுகளையும் அது உருவாக்கியது. அந்த இணையவெளி தொடர்பதிவேடுகள் blockchain என அழைக்கப்ப்டுகின்றன. JP MORGAN அந்த தொடர்பதிவேட்டு தொழில்நுட்பத்தை Consensys என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்தது.
Teslaவின் ஏற்பும் மறுப்பும் பிட்கொயினின் ஏற்றமும் இறக்கமும்
Tesla என்னும் தானியங்கி கார் உற்பத்தி நிறுவனம் ஒன்றரை பில்லியன் டொலர்களுக்கு பிட்கொயின் (Bitcoin) என்னும் நுண்மிய நாணத்தை 2021 பெப்ரவரியில் வாங்கிய பின்னர் அதன் பெறுமதி பெருமளவில் அதிகரித்தது. ஒரு அலகு பிட்கொயின் $64,000களுக்கு இணயானது. தனது கார்களை வாங்க பிட்கொயின் மூலம் கொடுப்பனவைச் செய்யலாம் எனவும் Tesla அறிவித்தது. மூன்று மாதங்கள் கழித்து Tesla தனது நிலைப்பாட்டில் இருந்து பின் வாங்கியது. Teslaஇன் பின்வாங்கலால் மற்ற நுண்மிய நாணயங்களான Ethereum, Binance Coin, Dogecoin, XRP, Litecoin ஆகிய நுண்மிய நாணயங்களின் பெறுமதியும் பெருமளவில் வீழ்ச்சியடைந்தன. Tesla உரிமையாளரின் ஒரு டுவிட்டர் பதிவு பல மில்லியன் இழப்பீட்டை ஏற்படுத்தியது.
பொய்ச்செய்தியால் எழுந்த விழுந்த Litecoin
2021-09-13 திங்கட் கிழமை Global Newswire என்ற ஓர் ஊடகம் Walmart என்ற அமெரிக்க நிறுவனம் Litecoin என்ற நுண்நாணயத்தின் மூலம் தங்கள் வாடிக்கையாளர்கள் கொடுப்பனவைச் செய்யலாம் என்ற செய்தியைத் தவறுதலாக வெளியிட்டிருந்தது. அதனால் Litecoinஇன் பெறுமதி அதிகரித்தது. பின்னர் அரை மணித்தியாலத்தில் பெறுமதி வீழ்ச்சியடைந்தது.
எல் சல்வடோரின் பரிசோதனை
அமெரிக்காவின் டொலரையே தனது நாணயமாக கடந்த இருபது ஆண்டுகளாக வைத்திருக்கும் எல் சல்வடோர் நாடு அமெரிக்க டொலருடன் பிட்கொயின் என்னும் நுண்மிய நாணயத்தையும் ஏற்றுக்கொள்ளும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அத்துடன் அதைப் பாவிப்பவர்களுக்கு $30 ஊக்கத்தொகையையும் வழங்கியது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பிட்கொயினை வாங்கி விற்பனை செய்யும் போது ஈட்டும் இலாபத்திற்கு எல் சல்வடோரில் வருமான வரி விதிவிலக்கும் வழங்கப்பட்டுள்ளது. எல் சல்வடோரின் தேசிய வருமானத்தில் இருபது விழுக்காடு வெளிநாடுகள்ல் வாழும் எல் சல்வடோரியர்கள் அனுப்பும் பணத்தில் இருந்து பெறப்படுகின்றது. அப்படி அனுப்ப்ப்படும் பணத்திற்கு வங்கிகள் கட்டணம் அறவிடும். அவர்கள் பிட்கொயின் மூலம் அனுப்பும் போது பெருமளவு கட்டணங்களைச் சேமிக்கலாம். ஆனால் பிட்கொயினை அறிமுகப் படுத்துவதில் பல சிக்கல்கள் தோன்றின. ATM Machines மூலம் பிட்கொயின் கணக்கில் உள்ள நிதியில் இருந்து டொலர்களை பெற முடியாமல் அவை செயற்படாமல் இருந்தன. கைப்பேசிகளில் உள்ள Wallets செயலிகளுக்கு நிதி மாற்றம் செய்வதிலும் பல் சிக்கல்கள் இருந்தன. இதனால் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். எல் சல்வடோர் அரசு 280மில்லியன் அமெரிக்க டொலரக்ளை பிட்கொயினில் முதலீடு செய்திருந்தது. அதை நடைமுறைப்படுத்துவதில் இருந்த சிக்கலால் பிட்கொயினின் பெறுமதி குறைந்து அரசுக்கு மூன்று மில்லியன் டொலர் இழப்பீடு ஏற்பட்டது. எல் சல்வடோரின் மக்கள் தொகையில் அரைப்பங்கிற்கும் குறைவானவர்களே இணையவெளியைப் பாவிக்கும் வசதி கொண்டவர்கள். அங்கு எடுத்த கணக்கெடுப்பின் படி 70விழுக்காடு மக்கள் பிட்கொயின் என்னும் நுண்மிய நாணயத்தின் அறிமுகத்தை எதிர்க்கின்றார்கள். எல் சல்வடோரில் முப்பது விழுக்காட்டினர் மட்டுமே வங்கிக் கணக்கு வைத்திருக்கின்றனர்.
Telsa தூக்கிப் போட்ட, எல் சல்வடோர் தூக்கி நிறுத்திய நுண்மிய நாணயத்தை சீனா மீண்டும் வீழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment