Thursday 9 September 2021

தலிபான்களின் காபந்து அரசு தேறுமா?

 

அமெரிக்கா தலைமையிலான அந்நியப் படையினர் வெளியேறி மூன்று வாரங்களின் பின்னர் தலிபான் அமைப்பு 2021 செப்டம்பர் 7-ம் திகதி ஆப்கானிஸ்த்தானுக்கான காபந்து அரசை அறிவித்துள்ளது. மூன்று வார தாமதம் உள்ளக இழுபறியா அல்லது நன்கு சிந்திக்க வேண்டி இருந்ததாலா என்பது பற்றி அறிய முடியவில்லை. அமெரிக்க சஞ்சிகை ஒன்று அதை all-Male அரசு என விபரித்துள்ளது. ஒரு நாளேடு பழைய தலிபான் போன்ற புதிய தலிபான்களைப் பாருங்கள் என்றது. முன்னைய ஆப்கான் அரசின் மகளின் விவகார அமைச்சர் ஹ்பீபா சராபி தலிபான்கள் மாறிவிட்டார்கள் என மேற்கு நாடுகள் நம்பியமை தவறு தான் சுட்டிக் காட்டியது உண்மையாகி விட்டது என்றார். இந்திய ஊடகம் ஒன்று தலிபான்களின் காபந்து அரசில் பாக்கிஸ்த்தானின் முத்திரை நன்கு பதிந்துள்ளது என்கின்றது.

அரசின் முக்கிய உறுப்பினர்கள்

தலிபான்கள் அறிவித்த காபந்து அரசின் தலைமை அமைச்சர் பொறுப்பில் உள்ள முல்லா முகம்மத் ஹசன் அக்குண்ட் ஐக்கிய நாடுகள் சபையால் தடை விதிக்கப்பட்ட ஒருவராவார். அத்துடன் அமெரிக்க குற்றத் தடுப்பு பிரிவான எஃப்.பி.ஐயால் தேடப்படும் ஒருவருமாவார். தலிபானின் உயர் அவையான ரெக்பாரி சுராவின் தலைமைப் பதவியை அவர் நீண்டகாலமாக வகித்திருந்தார். 1996 முதல் 2001வரை ஆப்கானிஸ்த்தானில் நடந்த தலிபான்கள் ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் துணைத் தலைமை அமைச்சராகவும் அக்குண்ட் பணியாற்றினார். அவரது துணைத் தலைமை அமைச்சராக தலிபான்கள் சார்பில் அமெரிக்காவுடன் கட்டார் தலைநகர் டோகாவில் பேச்சு வார்த்தை நடத்திய முல்லா பரதார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் மற்ற துணை தலைமை அமைச்சர் அப்துல் சலாம் கனாஃபியும் ஐக்கிய நாடுகள் சபையால் தடைவிதிக்கப்பட்டவர்கள்.

ஐக்கிய நாடுகள் சபை: பெண்ணங்கு இல்லை

கழுவுற மீனில் நழுவுற மீனாக இருப்பதில் வல்லவரான ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளரான ஃபர்ஹான் ஹக் நாடுகளை அங்கீகரிப்பது தமது சபையின் பணியல்ல, அது உறுப்பு நாடுகளின் வேலை என்றார். ஆனால ஐக்கிய நாடுகள் சபையின் மகளிர் அமைப்பின் பொறுப்பாளர் பிரமிளா பற்றன் பெண்களுக்கு காபந்து அரசில் இடம் கொடுக்காமயை சுட்டிக்காட்டி அது புதிய அரசு பெண்களையும் சிறுமிகளையும் எப்படிக் கையாளப் போகின்றது என்பதை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றது என்றார்.

சீனாவின் அரைகுறை வரவேற்பு. பொன்னொன்று கண்டேன்

ஆப்கானிஸ்த்தானில் மூன்று வாரங்கள் சட்ட அடிப்படையிலான ஆட்சியின்மையை முடிவிற்கு கொண்டு வந்தமையை வரவேற்பதாக சீனா அறிவித்துள்ளது. அதன் வரவேற்பு புதிய அரசையும் உள்ளடக்கியதாக தெரியவில்லை. ஆனால் புதிய அரசு அமைந்தமைக்கு “China attaches great important” என்ற சீனாவின் சொற்தொடரில் வரவேற்பையோ பாராட்டுதலையோ காணவில்லை. ஆனால் காபந்து அரசு அமைய முன்னரே தலிபான்களுடன் தாம் சிறந்த உறவை விரும்புவதாக சீனா அறிவித்து விட்டது. ஆப்கானிஸ்த்தானில் இருக்கும் கனிம வழங்கள் மீது நீண்ட காலமாக கண்வைத்திருக்கும் சீனா அதில் முடங்கிப் போயிருக்கும் தமது முதலீடு முதலீட்டைப் பிணை எடுப்பதையிட்டு அதிக கரிசனை கொண்டுள்ளது.

காத்திருக்கும் இரசியா

புதிய காபந்து அரசு தொடர்பாக புது டில்லியில் உள்ள இரசிய அரசுறவியலாளரிடம் ஊடகர்கள் கேள்வி எழுப்பிய போது இரசியா காந்திருந்து செயற்படும் எனப் பதிலளிக்கப்பட்டது. ஆனால் இரசியா ஆப்கானிஸ்த்தானில் இருந்து வரும் பயங்கரவாதத்தை எப்படிக் கையாள்வது என்பது பற்றி இந்தியாவுடன் கலந்துரையாடியுள்ளது.

மேற்கு நாடுகளின் எதிர்வினை

ஐரோப்பிய ஒன்றியம் தன் புதிய ஆப்கான் அரசு தொடர்பாக தனது அதிருப்தியை வெளியிட்டது. ஆப்கானிஸ்த்தானுக்கான அங்கீகாரத்தையும் மனிதநேய உதவிகள் பற்றியும் கருத்தில் கொள்வதற்கு உகந்த வகையில் ஆப்கான் அரசு அங்குள்ள பல்வேறு சமூகத்தினரையும் மதத்தினரையும் உள்ளடக்கியதாக இல்லை என்றார் ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் பீட்டர் ஸ்டனோ கருத்து வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்த்தானுக்கு பலதரப்பினரையும் உள்ளடக்கிய அரசியல் அவசியமான ஒன்றாகும் எனக் கருத்து வெளியிட்டுள்ளது. பல்வேறு சமூகத்தினரையும் பெண்களையும் உள்ளடக்கிய அரசியலின் அவசியத்தை பிரித்தானியா வலியுறுத்துகின்றது. அமெரிக்கா புதிய ஆப்கான் அரசின் உறுப்பினர் சிலரின் கடந்த காலச் செயற்பாடுகளும் அவர்களின் தொடர்புகளும் தம்மைக் கரிசனைக்கு உள்ளாக்குவதாக அறிவித்தது. அமெரிக்காவின் கருத்தில் கண்டனம் கலந்திருக்கவில்லை. அமெரிக்கா தலிபான்களின் சொற்களிலும் பார்க்க செயல்களை வைத்தே அவர்களை மதிப்பீடு செய்யும் எனவும் அமெரிக்க வெளியுறவுத் துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஜேர்மனியில் கூட்டம்

2021 செப்டம்பர் 08-ம் திகதி அமெரிக்காவும் ஜேர்மனியும் இணைந்து ஆப்கானிஸ்த்தானை எப்படிக் கையாள்வது தொடர்பாக ஒரு கூட்டத்தை ஜேர்மனியின் ரம்ஸ்ரின் நகரில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் நடத்தின. ஜேர்மன வெளியுறவுத் துறை அமைச்சர் ஹெய்க்கோ மாஸ் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் அண்டனி பிளின்கென் ஆகியோர் சந்தித்து அது தொடர்பாக உரையாடினார்கள். ஆப்கானிஸ்த்தானுக்கு அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக அளவு படையினரை ஜேர்மனி கடந்த 20 ஆண்டுகளில் அனுப்பியிருந்தது. இருபதிற்கு மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்ட இக்கூட்டம் ஆப்கானிஸ்த்தான் எதிர்காலத்தை மாற்றியமைக்கலாம் என்றிருந்த நிலையில் அந்த நாடுகளின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ஆப்கானிஸ்த்தானின் காபந்து அரசு அமைந்துள்ளது.

இந்தியாவின் நிலைப்பாடு

தலிபான் அமைப்பின் முக்கிய உறுப்பினரான அனஸ் ஹக்கானி அமெரிக்காவின் குவாட்டனாமோ சித்திரவதைக் கூடம் உட்பட பல சிறைகளைக் கண்டவர். அவர் கஷ்மீர் பிரச்சனையில் தாம் தலையிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். தலிபான் அமைப்பினர் இந்தியாவிற்கு எதிரானவர்கள் என இந்திய ஊடகங்கள் உட்பட பன்னாட்டு ஊடகங்கள் பொய்ப்பரப்புரை செய்வதாக அனஸ் ஹக்கானி ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும் அவர் தமது எதிரிகளுக்கு இந்தியா உதவி செய்தமையை தாம் மறந்து இந்தியாவுடன் நல்லுறவை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியா மேற்கு நாடுகள் போல் ஆப்கானிஸ்த்தானுடனான உறவில் பெண்ணுரிமை மற்றும் மனித உரிமை போன்றவற்றைக் கருத்தில் எடுத்துக் கொள்ளாது என்பதால் தலிபான்கள் இந்தியாவுடனான உறவை விரும்புகின்றார்கள் என்பது மட்டுமல்ல இந்தியாமீது பாக்கிஸ்த்தானிலும் பார்க்க அதிக விருப்புக் கொண்ட ஆப்கானிஸ்த்தானின் பஷ்ரூன் இனக்குழுமத்தைச் சேர்ந்தவர்கள் தலிபான்களில் பெரும்பான்மையானவர். இந்தியா இதை எழுதும் வரை இந்தியா புதிய ஆப்கான் அரசைப்பற்றி கருத்து வெளியிடவில்லை. இந்தியாவின் தாமதத்தை “கேந்திரோபாய காத்திருப்பு” என இந்திய அரசு ஆதரவாளரகளும் “துணிச்சலான முடிவெடுக்க முடியாமை” என இந்திய அரசை கடுமையாக விமர்ச்சிப்பவர்களும் கூறுகின்றனர். தலிபான்களின் இஸ்லாமியக் கோட்பாடு இந்தியாவின் டில்லிக்கு வடக்கே உள்ள தியோபந்த் என்னும் சிறு நகரத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலில் உருவானது. தியோபந்தி இஸ்லாமியர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து போராடினவர்கள். பஷ்ரூன் இனத்தினர் பலர் இந்தி சினிமாத்துறையில் சிறந்து விளங்குவதால் இந்தி சினிமாப் படங்களை ஆப்கானிஸ்த்தானில் வாழும் பஷ்ரூன்கள் விரும்பிப்பார்ப்பதால் அவர்கள் இதயங்களில் இந்தியாவிற்கு ஓர் இடம் உண்டு.

இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரச்சனையா?

தலிபான்கள் காபந்து அரசை அறிவித்தற்கு முதல் நாள் அதாவது செப்டம்பர் 6-ம் திகதி தலிபான்களுக்கு ஆதரவாக பாக்கிஸ்த்தானிய ஆளில்லா விமானங்கள் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் தாக்குதல் நடத்தியவுடன்ச் இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஓர் அவசரக் கூட்டத்தைக் கூட்டினார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆப்கானிஸ்த்தானில் நடந்த மாற்றம் இந்தியாவின் வெளியுறவுத் துறைப் பிரச்சனை மட்டுமல்ல அதன் உள்நாட்டுப் பாதுகாப்பு பிரச்சனையுமாகும். அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறியவுடன் கஷ்மீர் மக்கள் அங்குள்ள இந்தியப் படையினரைப் பார்த்து ஒரு நாள் நீங்களும் இப்படி வெளியேறுவீர்கள் என்றனர். ஆப்கானிஸ்த்தானில் நடந்த மாற்றம் உலகெங்கும் உள்ள இஸ்லாமியப் போராளி அமைப்புக்களுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. கஷ்மீர் போராளிகள் அதற்கு விதிவிலக்கல்ல. மோடியின் செப்டம்பர் – 6-ம் திகதிக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் கலந்து கொண்டதாக தகவல் இல்லை ஆனால் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டார். ஆப்கானிஸ்த்தானில் இந்தியா செய்த முன்று பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீட்டைப் பற்றியும் அவர்கள் விவாதித்திருக்கலாம். 2021 செப்டம்பர் 10-ம் திகதி ஐநா பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய இந்திய உறுப்பினர் டி. எஸ் திருமூர்த்தி ஆப்கானிஸ்த்தான் எந்த ஒரு நாட்டின் மீது தாக்குதல் செய்வதற்கான தளமாகப் பாவிக்கப்படக்க் கூடாது என்றார். 

சர்ச்சைக்குரிய சிராயுதீர்ன் ஹக்கானி

பல நாடுகளும் பார்த்து முகம் சுளிப்பது உள்துறை அமைச்சர் சிராயுதீர்ன் ஹக்கானியையே. அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹக்கானி அமைப்பின் தலைவரான சிராயுதீர்ன் ஹக்கானியும் அமெரிக்க சட்ட நிறைவேற்றுப் பிரிவால் தேடப்படும் ஒருவராவர். ஹக்கானி அமைப்பை இந்தியாவிற்கு எதிராக பாக்கிஸ்த்தானின் உளவுத் துறையும் படைத்துறையும் வளர்த்தெடுத்தன எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. அந்த அமைப்பின் தலைவர் சிராயுதீர்ன் ஆவர்.

பாக்கிஸ்த்தான் உண்மையைச் சொல்லாது என்பதால் அதன் கருத்தை கருத்தில் எடுக்கத் தேவையில்லை. மூன்று ரில்லியன் டொலர் பெறுமதியான கனிம வளங்களைக் கொண்ட நாடாக ஆப்கானிஸ்த்தான் இருப்பதாலும் அங்குள்ள உட்கட்டுமான உட்கட்டுமான முதலீட்டு வாய்ப்பாலும் பல நாடுகளின் முதலீட்டாளர்கள் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு காத்திருக்கின்றார்கள் என்பது புதிய ஆப்கான் காபந்து அரசு தொடர்பாக யாரும் கண்டனம் தெரிவிக்காமல் இருப்பதில் இருந்து தெரிய வருகின்றது. அமெரிக்காவில் முடக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்த்தானின் 9.5பில்லியன் பெறுமதியான சொத்துக்களும் உலக வங்கியும் பன்னாட்டு நாணய நிதியமும் இடை நிறுத்தி வைத்திருக்கும் உதவித் தொகைகளையும் கருத்தில் கொண்டு தலிபான்கள் தமது காபந்து அரசை அமைக்கவில்லை என்பது அந்த அரசில் தீவிரப்போக்குடையோரை உள்ளடக்கியதில் இருந்து தெரிய வருகின்றது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...