சீனாவின் ஏற்றுமதி சார் பொருளாதார வளர்ச்சியால் அங்கு வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் தொகை மொத்த மக்கள் தொகையின் 3.3விழுக்காடாக உள்ளது. இதை இந்தியாவின் 29.3 விழுக்காடு வறியோர் தொகையுடன் ஒப்பிடுகையில் ஆச்சரியமாக இருக்கின்றது. இருந்தும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் சீனாவில் சமத்துவமின்மை ஒழிக்கப்படவேண்டும் என உறுதியாகச் சொல்லி இருக்கின்றார். பொதுவுடமை மற்றும் சமூகவுடமையை வலியுறுத்தி வந்த சீனா 1979இல் அவற்றில் இருந்து விலகி அரை முதலாளித்துவ நாடாக தன்னை மாற்றி பொருளாதாரச் சீர்திருத்தத்தை அறிமுகம் செய்தது. அதனால் (அரசால் கட்டுப்படுத்தப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட, திறனற்ற) சீனப் பொருளாதாரம் பெரும் வளர்ச்சியை கண்டு கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் நாட்டின் பல்வேறு பிராந்தியங்களிடையேயும் பல்வேறு மக்களிடையேயும் சமமான வருமானப்பங்கீடு சமூகவுடமையின் முக்கிய அம்சங்களாக இருப்பதுதான் சீனப்பாணி நவீனமயமாக்குதலாகும் என்கின்றார்.
சீன மக்களின் செல்வ நிலை உயர்த்தப்பட வேண்டும்
சீனப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் ஏற்றுமதியும் உட்கட்டுமான அபிவிருத்தியும் இப்போது தடைகளைச் சந்தித்துள்ளன. சீனாவின் பொருளாதார வளர்ச்சி இனி சீன மக்களின் கொள்வனவில் தங்கியிருக்க வேண்டும். அதற்கு சீனமக்களின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். அமெரிக்கர்களின் சராசரி தனிநபர் வருமானம் சீனர்களின் தனிநபர் வருமானத்திலும் 5.78 மடங்கு அதிகமானதாக உள்ளது. அதனால் உலகின் செல்வந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா ஐந்தாவதாகவும் சீனா 57வதாகவும் உள்ளன. அமெரிக்காவின் மொத்த தேசிய உற்பத்தியில் அமெரிக்கர்களின் கொள்வனவின் பங்கு எழுபது விழுக்காடாகும். சீனாவில் அது 39 விழுக்காடாக உள்ளது. பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் அது 55 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருக்கின்றது. அமெரிக்காவின் ஏற்றுமதி அதன் இறக்குமதியிலும் பார்க்க ஐந்து விழுக்காடு குறைவாகும். அதனால் அமெரிக்காவின் மொத்த தேசிய உற்பத்தியில் ஐந்து விழுக்காடு குறைக்கப்படுகின்றது. சீனப் பொருளாதாரம் உலக அரங்கில் உறுதியாக நிற்பதற்கு அது ஏற்றுமதியில் தங்கியிருப்பது குறைக்கப்பட்டு உள்நாட்டு மக்களின் கொள்வனவில் தங்கியிருக்க வேண்டும். அதற்கு சீன மக்களின் செல்வ நிலை உயர்த்தப்பட வேண்டும். சீனத் தலைமை அமைச்சர் லீ கெக்க்யாங் இதற்காக ஒரு புதிய திட்டத்தை முன் வைத்துள்ளார். சீனாவில் உற்பத்திக் காரணிகளை திறன்படச் செயற்படுத்தல், அதிக வருமானம் உள்ளவர்களிடம் வரி அறவிட்டு குறைந்த வருமானமுள்ளவர்களுக்கு உதவி செய்தல், செல்வந்தர்கள் தாமாகவே வருமானம் குறைந்தவர்களுக்கு உதவி செய்தல். சீனாவின் புதிய திட்டம் “பொதுச் செழுமை” என அழைக்கப்படுகின்றது. சீனப் பொதுவுடமைக் கட்சி தனது செயற்திட்டங்களில் பொதுச் செழுமை முதலிடம் வகிக்கின்றது. சீன அதிபர் ஜீ ஜின்பிங் 2021-ம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் ஆற்றிய உரைகளில் 65 தடவை “பொதுச் செழுமை” என்ற பதம் பாவிக்கப்பட்டுள்ளது
அரை முதலாளித்துவ சீனா?
1978-ம் ஆண்டு “திறந்த கதவு” கொள்கை என்னும் பெயரில் சீனா வெளிநாட்டு முதலீடுகளையும் வேற்று நாடுகளுடனான வர்த்தகத்திர்கும் வழிவகுத்த1979-ம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்தை ஆரம்பித்த சீனா 1979இல் அமெரிக்காவுடன் உறவையும் உருவாக்கியது. அதே ஆண்டில் சீனாவில் பல சுதந்திர வர்த்தக வலயங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அப்போது ஆரம்பித்த சீனப் பொருளாதார வளர்ச்சி இன்றுவரை வளர்ந்து கொண்டே இருக்கின்றது. உலக சரித்திரத்தில் எந்த ஒரு நாடும் 40 ஆண்டுகள் தொடர்ச்சியான வளர்ச்சியைக் காணவில்லை. தற்போது சீன அதிபர் ஜின்பிங் முன்வைக்கும் சமூகவுடமைக் கொள்கை சீனாவை “அரை முதளாளித்துவ நாடு” என்ற நிலையில் இருந்து விலக்கி முழுமையான சமூகவுடமை நாடு என்ற நிலையை நோக்கி நகர்த்தினாலும் சீனா தனது தனியார் துறை தொடர்ந்து பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கின்றார். சீனா அமெரிக்காவை விஞ்சி பொருளாதாரத்தில் வளராது என்கின்றார் கலிபோனியப் பல்கலைக்கழகமொன்றில் அரசறிவுத்துறைக்கு பொறுப்பான சீனரான MINXIN PEI.
சீனச் செல்வந்தர்கள்
ஒரு பில்லியன் டொலர்களுக்கும் அதிக சொத்துக்களை கொண்ட செல்வந்தர்கள் அமெரிக்காவில் 724பேரும் சீனாவில் 626பேரும் இந்தியாவில் 140பேரும் உள்ளனர். அதிக செல்வந்தர்கள் இருப்பது ஒரு முதலாளித்துவ நாடாக இருக்கும் அமெரிக்காவிற்கு உகந்ததாக இருக்கலாம். ஆனால் சோசலிஸ நாடாக இருக்க முயலும் சீனாவிற்கு அது உகந்ததல்ல என்பது சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் கருத்து. சீனா இரசியாவிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இரசியா பொதுவுடமையைக் கைவிட்டு மக்களாட்சி நாடாக மாற்றப்பட்டாலும் அங்கு சில பெரும் செல்வந்தர்கள் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் கூட ஒரு பெரும் செல்வந்தரே. சில பெரும் செல்வந்தர்கள் கையில் ஒரு நாட்டின் பொருளாதாரமும் ஆட்சியும் இருப்பதை சிலராண்மை (Oligarchy) என்பர். இது மக்களாட்சிக்கும் சமுக்வுடமை ஆட்சிக்கும் முரணானதாகும். அதனால் சீனாவில் பெரும் செல்வந்தர்கள் உருவாகுவதை சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஐயத்துடன் நோக்குகின்றார். சீனாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான ஜக் மாவிற்கு சொந்தமான நிறுவனம் தனது பங்குகளை பொது மக்களுக்கு விற்பனை செய்ய முற்பட்ட போது ஜீ ஜின்பிங் அதைத் தடை செய்தார். அதைத் தொடர்ந்து ஜக் மாவிற்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்ததால் அவரது செல்வம் பத்து பில்லியன் டொலர்களால் குறைந்து போனது.
நடுத்தர வருமானப் பொறியை சீனா தவிர்க்க வேண்டும்
வருமானம் குறைந்த மக்களைக் கொண்ட நாட்டில் ஊழியக் கொடுப்பனவு குறைந்த அளவில் இருப்பதால் அங்கு செய்யப்படும் வெளிநாட்டு முதலீடுகள் வருமானம் கூடிய நாடுகளில் செய்யப்படும் முதலீடுகளிலும் பார்க்க அதிக இலாபத்தைத் தரும். தொடர்ச்சியான வெளிநாட்டு முதலீட்டால் மக்களின் வருமானம் அதிகரித்து வேலைவாய்ப்பின்மை குறைந்து கொண்டு போகும். அதனால் அந்த நாடு நடுத்தர வருமான நாடாக வளரும். அப்போது அந்த நாட்டில் ஊழியக் கொடுப்பனவு அதிகமாகும். அதனால் அந்த நாட்டில் வெளிநாட்டு முதலீடு குறையத் தொடங்கும். மக்கள் தொடர்ச்சியாக நடுத்தர வருமானமுள்ளவர்களாக மட்டும் இருப்பார்கள். இதை நடுத்தர வருமானப் பொறி என்பர். இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறையத் தொடங்கும். சீன அரசு தமது நாடு நடுத்தர வருமானப் பொறிக்குள் சிக்காமல் இருக்க பெரு முயற்ச்சி செய்கின்றது. சீனாவில் நடுத்தர வருமானம் கொண்ட மக்கள் தொகை தற்போது 400 மில்லியன்களாகும். இதை 2025இல் இருமடங்காக உயர்த்த சீன அரசு திட்டமிட்டுள்ளது.
சீன அதிபரினதும் தலைமை அமைச்சரினதும் புதிய கொள்கைகளுக்கு இணங்க சீனாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான மா ஹுவாரெங்கிற்கு சொந்தமான டென்செண்ட் (Tencent) நிறுவனம் பொதுச் செழுமைக்கு என 7.7பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு குறைந்த வருமானமுள்ள மக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்தப்படும். இது போன்று மேலும் பல செல்வந்தர்கள் நன் கொடைகளை வழங்கியுள்ளனர்.
செல்வந்தர்களின் பிள்ளைகளின் கல்வியில் கைவைத்த சீனா
சீனாவில் உள்ள பல தனியார் கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீடுகளுடன் இயங்குகின்றன. இவற்றில் பல செல்வந்தர்களின் பிள்ளைகள் கல்வி கற்று வந்தனர். அதனால் அவர்களின் கல்வித்தரம் மற்றப் பிள்ளைகளின் கல்வித்தரத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் உயர்ந்த்தாகவும் உலகத் தரமானவயாகவும் இருந்தன. சீன அரசு ஒரே நாளில் அந்த கல்வி நிறுவனங்களை மூடி விட்டது. இதனால் பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரும் இழப்பீட்டைச் சந்தித்தனர். கல்வியில் சமத்துவம் நிலவ வேண்டும் என்ற எண்ணத்துடன் இதைச் செய்ததாக சீன அரசு அறிவித்தது.
சீனப் பொதுவுடமைக் கட்சியிலும் ஆட்சியிலும் தனக்கு என ஓர் அசைக்க முடியாத இடத்தை பெற்றுள்ள ஜீ ஜின்பிங் மக்கள் மத்தியிலும் ஓர் அசைக்க முடியாத இடத்தைப் பெறுவதற்காக “பொதுச் செழுமை”, சமூகவுடமை போன்ற பதங்களை கையில் எடுத்துள்ளாரா என்ற ஐயமும் எழுந்துள்ளது. பெரும் செல்வந்தர்கள் ஒன்றிணைந்து சீனாவின் ஆட்சி முறைமையையே மாற்றியமைக்க முயல்வார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஜீ ஜின்பிங் பல கலைஞர்கள் புகழின் உச்சிக்கு போவதற்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார். பெரும் புகழ் பெற்ற சீன நடிகை ஒருவர் தண்டிக்கப்பட்டுள்ளார். கலைஞர்களுக்கு இரசிகர் மன்றம் அமைப்பவை போன்றவற்றையும் அவர் தடை செய்துள்ளார். இவை செல்வ சம பங்கீட்டுகாக அல்ல.
No comments:
Post a Comment