பர்மிய(மியன்மார்) படைத்துறை ஆட்சியாளரான தெயின் செயின் ஐக்கிய அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்துள்ளார். பல மனித உரிமை அமைப்புக்களினதும் தெயின் செயினால் பாதிக்கப்பட்டவர்களினதும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இது நடந்துள்ளது. பர்மாவா மியன்மாரா? பர்மாவில் பல முசுலிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டபோது அதைத் தடுக்க எதுவும் செய்யாமல் அதிபர் தெயின் செயின் இருந்த செய்தி எமது காதுகளில் இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் வேளையில் பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் தெயின் செயினைச் சந்தித்துள்ளார். இதுவரை காலமும் படைத்துறை ஆட்சியாளர்கள் பர்மாவிற்கு வைத்த மியன்மார் என்னும் பெயரை வெள்ளை மாளிகை ஏற்க மறுத்திருந்தது. இப்போது தன் நிலைப்பாட்டை மாற்றி மியன்மார் எனச் சொல்லத் தொடங்கிவிட்டது. ஒரு சில மாதங்களின் முன்னர் தீண்டத்தகாத ஆட்சியாளர் என "பன்னாட்டுச் சமூகத்தினரால்" கருதப்பட்ட தெயின் செயின் திடீரென நல்லவராகி விட்டது எப்படி? பத்திரிகைகளில் தனக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தவரை அறுபது ஆண்டுகள் சிறைத்தண்டன வழங்கியவரை ஒபாமா எப்படி வெள்ளை மாளிகைக்கு அழைத்தார்? பர்மாவில் சில அரசியல் சீர்திருத்தங்கள் செய்தது உண்மைதான் ஆனால் இப்போதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை படைத்துறையினரால் கலைக்க முடியும். ராகினிய மாகாணத்தில் இனச் சுத்திகரிப்பு பர்மாவின் ராகினி மாகாணத்தில் வாழ்ந்த முசுலிம்களை அங்குள்ள பௌத்தர்கள் அரச படையினரின் உதவியுடன் கொன்று குவித்து வீடுகளைக் கொழுத்தித் தரைமட்டமாக்கி பெரும் இனச் சுத்திகரிப்பைச் செய்தனர். பல மனித உரிமை அமைப்புக்கள் இதை ஒரு மானிடத்திற்கு எதிரான ஒரு குற்றமாக கருதுகின்றன. ராகினி மாகாணத்தில் இருக்கும் எரிபொருள் வளமே அங்கு வாழ்ந்த முசுலிம்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் உலை வைத்தது. "பன்னாட்டுச் சமூகம்" சும்மா பார்த்துக் கொண்டிருக்கிறது. மன்னாரில் எண்ணெய் வளம் இருப்பதாக இலங்கை அரசு நம்பியது ஞாபகத்திற்கு வருகிறது. புத்த பிக்குக்க்கள் முசுலிம் மக்களுக்கு எதிரான தாக்குதலை முன்னின்று நடாத்துகின்றனர். 2007இல் இலங்கையில் போர் வேண்டாம் என படையினரும் போர் வேண்டும் என பிக்குகளும் கருதுவதாக ஆய்வுகள் தெரிவித்தன. மிதிவண்டியில் சென்ற இசுலாமியப் பெண் ஓர் 11 வயது பிக்குவின் மீது மோதி அவரது கையில் இருந்த பிச்சாபாத்திரத்தை உடைத்ததால் இனக்கலவரம் மூண்டது எனச் சொல்லப்படுகிறது. கச்சின் மாகாணத்தில் இனக்கொலை பர்மாவின் கச்சின் மாகாணத்தில் சிறுபான்மைக் கிருத்தவர்கள் பெரும்பானமை பௌத்தர்களின் அடக்கு முறைக்கு எதிராக பிரிவினைப் போரை ஆரம்பித்தனர். பின்னர் போர் நிறுத்தம் செய்து சுயநிர்ணய உரிமை கோரி சமாதானப் பேச்சு வார்த்தையை 1994இல் ஆரம்பித்தனர் (ஈழத் தமிழர்களைப் போலவே). 14 ஆண்டுகள் இழுபட்ட பேச்சு வார்த்தையின் பின்னர் கச்சின் போராளிகளை படைக்கலன்களை ஒப்படைத்து விட்டு பர்மியப் படையினருடன் இணையும் படி வற்புறுத்தினர். பின்னர் பேச்சு வார்த்தை 2011இல் முறிந்து போர் மூண்டது. (ஈழத்தைப் போலவே). போர் முனைக்கு உணவு மற்றும் மருந்துகள் செல்வதை பர்மியப் படைகள் தடுத்தன. (ஈழத்தைப் போலவே). போர் முனையில் அகப்பட்ட மக்களுக்கு உணவு போடச் செல்வதாகப் பொய் சொல்லிக் கொண்டு பர்மிய விமானங்கள் அப்பாவி மக்கள் மீது குண்டுகளை வீசின. ( பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மக்களை மீட்பதற்கான போர் என இலங்கை அரசு பொய் சொல்லிக் கொண்டு அப்பாவிகளைக் கொன்று குவித்தது போல். ) போர் நடக்கும் போது அமெரிக்காவும் சீனாவும் தமது கரிசனையைத் தெரிவித்தன. ( ஈழத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் செய்தது போல்). நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூயி அம்மையார் தான் இந்த இனக்கொலையில் தலையிடப்போவதில்லை என்றார். (வாக்கு வேட்டை அரசியல்). 2013 ஜனவரியில் கச்சின் மக்களுக்கு எதிராக விமானத் தாக்குதல் நடத்த வேண்டாம் என்றது ஐக்கிய நாடுகள் சபை. கடுமையான விமானத் தாக்குதலையிட்டு தாம் கவலையடைந்துள்ளதாக தெரிவித்த ஐக்கிய அமெரிக்கா பிரச்சனைக்கு படைத்துறத் தீர்வு கிடையாது எனவும் கூறியது. ( ஈழத்திலும் இதையே சொன்னார்கள்). இத்தனைக்கும் மத்தியில் ஐக்கிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா படைத்துறை ஆட்சியாளரான தெயின் செயினை வெள்ளை மாளிகையில் ஏன் சந்தித்தார்? ஒரு அரசியல் ஆய்வாளர் இப்படிச் சொன்னார்:
The reopening of Burma to the Western world is a blow to Chinese
influence in Southeast Asia. For much of the past 20 years China was one
of the big investors in Burma.
பர்மிய அரசு சீனாவில் இருந்து விலகி மேற்கு நாடுகளின் சார்பாக மாறியதுதான் காரணம். சீனப் பிடியில் இருந்து இலங்கையில் சீன ஆதிக்கம் அகற்றப்படுமானால் நாளை ராஜ்பக்ச சகோதரர்கள் வெள்ளை மாளிகையில் விருந்து உண்பார்கள்.
இந்தியாவும் சீனாவும் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் தமது பிரச்சனைகளை ஒரு புறம் வைத்து விட்டு இரு நாடுகளும் தமது பொருளாதரப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மோடியின் சீனப் பயணத்தைப் பயன்படுத்தின. சீனா வலுவாக இருக்கும் துறைகளில் நாம் சீனாவின் சேவைகளைப் பெற விரும்புகின்றோம் என்றார் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தனது சீனப் பயணத்தின் போது. மேலும் அவர் இந்தியாவின் அபிவிருத்தியில் சீனாவின் ஈடுபாட்டையும், வாய்ப்பையும், திறனையும் இந்தியாவில் காட்டும் படி வேண்டுகின்றோம் என்றார்.
மோடியின் மூன்று நாள் (மே மாதம் 14,15,16-ம் திகதிகள்) சீனப் பயணத்தை முழுக்க முழுக்க வர்த்தக நோக்கத்திற்காகப் பயன்படுத்த சீனாவும் இந்தியாவும் முயன்றன. உலகின் முன்னணி நாடுகளில் வேகமாக வளரும் நாடு என்ற சீனாவின் இடத்தை இந்த ஆண்டு இந்தியா பிடிக்க இருக்கும் வேளையில் மோடியின் சீனப் பயணம் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது. 2014-ம் ஆண்டு சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியாவிற்குப் பயணம் செய்த வேளை சீனப் படைகள் இந்தியாவினுள் ஊடுருவி இருந்தன. ஆனால் மோடியின் சீனப் பயணத்திற்கு சீனா அதிக முக்கியத்துவம் கொடுப்பது போல் காட்டிக் கொண்டது. இனிவரும் காலங்களில் உலகிலேயே வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டவிருக்கும் இந்தியாவுடனான வர்த்தகம் சீனாவிற்கு அவசியமான ஒன்றாகும்.
சண்டை சண்டையாக இருக்கட்டும் வியாபாரத்தைக் கவனி உலகில் எந்த இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு என்று பார்க்கும் போது ஒரு நீண்ட வரலாறு இருக்கும். ஆனால் சீன இந்திய இடையிலான உறவு வரலாறு ஒப்புவமை இல்லாமல் நீண்டது எனச் சொல்லலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாகவும் சீனா இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகவும் ரோமப் பேரரசு மூன்றாவது பெரிய நாடாகவும் இருந்தன. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சீனா, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் இந்த இடங்களைப் பிடித்தன. இந்தியா மீண்டும் உலகத்தில் பெரிய பொருளாதார நாடாக வரத் துடிக்கின்றது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத பிரச்சனையாக இருப்பவை:
1. அருணச்சலப் பிரதேசம் யாருக்குச் சொந்தம் 2. இந்தியாவிற்கு சீனாவிற்கும் இடையிலான 4,000கிலே மீட்டர் எல்லைப் பிரச்சனை. 3. சீனா கைப்பற்றிய இந்திய நிலப்பரப்பு 4. பாக்கிஸ்த்தானின் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரூடாக சீனா ஒரு பெரும் தெருவை அமைப்பது 5. தீபெத் தொடர்பாகவும் தலாய் லாமா தொடர்பாகவும் இரு நாடுகளின் முரண்பட்ட நிலைப்பாடுகள்.
இவை எல்லாவற்றிலும் மேலாக இரு நாடுகளிற்கும் இடையில் உள்ள வர்த்தகச் சமநிலை பெரும் பிரச்சனையாக இருக்கின்றது.
மெதுவாகச் செல்லும் புல்லட் தொடரூந்து. மோடியின் சீனப் பயணத்திற்கு முன்னர் புது டில்லியில் இருந்து சென்னைக்கான புல்லட் எனப்படும் மிக விரைவு தொடரூந்துத் திட்டத்தை நிறவேற்றுவதைத் துரிதப் படுத்தும் படி சீனா இந்தியாவிடம் வேண்டு கோள் விடுத்தது. சீனா இந்தியாவில் செய்யவுள்ள இத் திட்டம் 36பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியுடையதாகும். நாளொன்றிற்கு இரண்டரைக் கோடி மக்கள் பாவிக்கும் இந்தியத் தொடரூந்துச் சேவையை மேம்படுத்தும் மோடியின் திட்டத்தில் தான் பங்கு பற்றி இலாபம் ஈட்டுவது சீனாவின் நோக்கமாகும். முன்னோடித் திட்டமான சென்னையில் இருந்து பெங்களூருவிற்கான தொடரூந்துப் பாதையை மேம்படுத்தும் திட்டத்தையாவது உடனடியாக ஆரம்பிக்க சீனா விரும்புகிறது.
சீன் போட்டு ஃபில்ம் காட்டத் தவறாத மோடி சீனாவில் உரையாற்றும் போது "இருதரப்பினருக்கும் இடையிலான பங்காண்மையை முழுமையாகச் செயற்படுத்தமுடியாமல் பின் இழுப்பவைகள் பற்றி நாம் கவனம் செலுத்த வேண்டிய தேவையை நான் இங்கு அழுத்திக் கூற விரும்புகின்றேன். இந்தியாவிற்கென்று சில மனக் குறைகள் உண்டு." என்றார் மோடி. இந்தியாவிற்கும் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்ட மோடியின் உரையில் "சீனா இருதரப்பு உறவை கேந்திரோபாயமாகவும் நீண்டகால அடிப்படையிலும் நோக்க வேண்டும்." என்பதையும் தெரிவித்தார். மோடியில் உரை வழமையாக ஆசிய நாட்டுத் தலைவர்கள் வேறு நாடுகளில் ஆற்றும் உரையுடன் ஒப்பிடுகையில் சற்றுக் கடினமான தொனியில் இருந்ததாகக் கருதப்படுகின்றது. அவர் இந்தியர்களுக்குச் "சீன் போடுவதிலும் ஃபில்ம் காட்டுவதிலும்" வல்லவர். அதனால் இந்தியாவில் ஒளிபரப்பப்படும் தன் உரையை நன்கு பயன்படுத்திக் கொண்டார்.
சமமடையாத வர்த்தகச் சமநிலை 2000-ம் ஆண்டு இரண்டு பில்லியன் டொலர்களாக இருந்த சீன வர்த்தக வர்த்தகம் தற்போது 75பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இது சீன அமெரிக்க வர்தகத்தின் பெறுமதியான 569 பில்லியன்களுடன் ஒப்பிடுகையில் சிறிதளவாகும். இரு நாடுகளும் 2015-ம் ஆண்டு தமக்கிடையிலேயான வர்த்தகத்தை 100 பில்லியன் டொலர்களாக உயர்தத் திட்டமிட்டுள்ளன. இரு நாடுகளும் வர்த்தக ரீதியில் ஒன்றுக்கு ஒன்றைத் தேவையாக இருக்கின்றன. ஆனால் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் சீனாவிற்குச் சாதகமாக இருக்கின்றது. 2014-15-ம் ஆண்டிற்கான இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தகத்தில் சீனாவிலிருந்து இந்தியா செய்யும் இறக்குமதி 60.39பில்லியன் டொலர்களாகவும் சீனாவிற்கான இந்திய ஏற்றுமதி 11.95 பில்லியன் டொலர்களாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா வர்த்தகம் செய்யும் முன்னணி 25 நாடுகளில் 16 நாடுகளுக்கு இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதியிலும் பார்க்கக் குறைவானதாகும். ஈராக்குடனான இந்திய வர்த்தகத்தில் 93 விழுக்காடு இந்தியா செய்யும் இறக்குமதியாகும். இந்த விழுக்காடு சுவிஸ்ற்லாந்துடன் 83ஆகவும் ஒஸ்ரேலியாவுடன் 62ஆகவும் இருக்கின்றது. இந்தியாவின் உற்பத்தித் துறை வலுவற்றதாகும். தனது ஒரு பில்லியன்களுக்கு மேற்பட்ட மக்களுக்குத் தேவையான தரம் மிக்க பொருட்களை இந்தியா உற்பத்தி செய்ய முடியாமல் இருக்கின்றது. இதனால் இந்தியாவின் இறக்குமதி அது மற்ற நாடுகளுக்குச் செய்யும் ஏற்றுமதியிலும் குறைவானதாக இருக்கின்றது. சீனா தனது தரம் குறைந்த உற்பத்திப் பொருட்களை இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது எனக் குறியீடு இட்டு ஆபிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததாகவும் குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டது. இதன் மூலம் சீனா உலக அரங்கில் இந்திய உற்பத்திப் பொருட்களை பற்றிய தாழ்வான எண்ணத்தை உருவாக்க முயல்வதுடன் ஆபிரிக்காவில் உள்ள வறிய மக்களிடம் தனது வர்த்தகத்தைச் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்தியா தனது மருந்துகளையும் இறைச்சி வகைகளையும் தகவல் தொழில்நுட்பச் சேவைகளையும் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதை அதிகரிக்க முயல்கின்றது.
ஏற்றுமதியில் பின்தங்கிய இந்தியா சீனா இந்தியாவிற்கு தான் உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது. இவற்றில் தொலைதொடர்புச் சாதனங்களும், கணனி வன்பொருட்களூம், தொழிற்துறை இயந்திரங்களும் முக்கியமானவையாக இருக்கின்றன. இந்தியா சீனாவிற்கு பெரும்பாலும் மூலப் பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது. அவை முக்கியமாக உள்ளவை பருத்தி, செப்பு, இரும்புத்தாது, பெற்றோலியப் பொருட்களாகும். உலக அரங்கில் ஏற்றுமதித் துறையில் சீனா போட்டி போடத் தொடங்கி பதின்மூன்று ஆண்டுகளின் பின்னரே இந்தியா ஏற்றுமதித் துறையில் உலக அரங்கில் போட்டி போடத் தொடங்கியது. சீனர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. இந்தியாவில் முதலீடு செய்யும் நாடுகளின் பட்டியலில் ஐக்கிய இராச்சியம் முதலாம் இடத்திலும் சீனா பத்தாம் இடத்திலும் இருக்கின்றன. இந்தியாவில் சீனாவிலும் பார்க்க மலேசியா போலாந்து ஆகிய நாடுகள் அதிக முதலீடு செய்கின்றன. கடந்த 14 ஆண்டுகளில் ஐக்கிய இராச்சியம் 21.5பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது. ஆனால் சீனாவின் முதலீடு அரை பில்லியன் டொலர்களிற்கும் குறைவானதாகும்.
பாக்கிஸ்த்தானிலும் சிறிய இந்தியா மோடியின் சீனப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் 22 பில்லியன் டொலர்கள் பெறுமதியான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டன. ஆனால் இந்தியர்கள் தமது சாதனைகளை எப்போதும் பாக்கிஸ்த்தானுடன் ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள். சீனாவும் பாக்கிஸ்த்தானும் செய்து கொண்ட 46 பில்லியன் டொலர்கள் பெறுமதியான உடன்படிக்கையுடன் ஒப்பிடுகையில் சிறிதாகும். இதை காங்கிரசுக் கட்சியின் மணிசங்கர ஐயர் பெரிதாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.
வர்த்தகர்களின் மேம்பாடுகள் மோடியின் சீனப் பயணத்தின் போது பார்த்தி எயார்டெல் நிறுவனத்திற்கு சீன அபிவிருத்தி வங்கி இரண்டு பில்லியன் டொலர்கள் கடன் வழங்க உடன்பட்டது. அத்துடன் பார்த்தி எயார்டெல் நிறுவனம் சைனா மொபைல் நிறுவனத்துடன் கேந்திரோபாய ஒத்துழைப்புச் செய்வதாகவும் ஒத்துக் கொள்ளப்பட்டது. மேலும் அம்பானிகளின் எஸ்ஸார் ஓயில் நிறுவனத்திற்கும் ரிலையன்ஸ் குரூப்பிற்கும் 1.2பில்லியன் டொலர்கள் கடனை சீன அபிவிருத்தி வங்கி கொடுப்பதாக ஒத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அடானிக்குச் சொந்தமான சீன நிறுவனம் ஒன்றுடன் இணைந்து சூரிய ஒளியில் இருந்து மின் உற்பத்தி செய்யும் தொழில் ஆரம்பிப்பதாகவும் ஒத்துக் கொள்ளப்பட்டது.
மோடியின் சீனப் பயணம் இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தக மேம்பாட்டிலும் பார்க்க ஆளும் கட்சிக்கு தேர்தலில் உதவி செய்த வர்த்தகர்களின் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தியதா?
ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் இந்த வாரம் பெரு வெற்றிகளை ஈட்டியுள்ளனர். ஈராக்கில் ரமாடியா என்னும் நகரையும் சிரியாவில் பல்மைரா என்னும் நகரையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். சிரியாவில் அரைப்பங்கு நிலப்பரப்பு இப்போது அவர்களது கட்டுப்பாட்டில் வந்துள்ளது. ஆப்கானிஸ்த்தானில் பௌத்த புரதானச் சின்னங்கள் அழிக்கப்பட்டது போல், ஈராக் நகரான மொசுலில் சியா முஸ்லிகளின் மதச் சின்னங்கள் அழிக்கப்பட்டது போல் பல்மைரா நகரில் உள்ள பாதுகாக்கப்பட வேண்டிய புரதானச் சின்னங்கள் அழிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஹொம்ஸ் மகாணத்தின் மையத்தில் அமைந்துள்ள பல்மைரா நகர் தலைநகர் டமஸ்கஸ்ஸில் இருந்து 210 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சிரியாவின் மையப் பகுதியில் உள்ள பல்மைரா நகரை ஐ எஸ் அமைப்பினர் மே மாதம் 20-ம் திகதி தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். சிரியாவின் 95000 சதுர மைல்கள் இப்போது ஐ எஸ்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளது. சிரியாவின் 14 மாகாணங்களில் ஒன்பதில் ஐ எஸ்ஸின் ஆதிக்கம் நிலவுகின்றது. சிரியாவின் முக்கிய தெருக்கள் பலவற்றை ஐ எஸ் அமைப்பினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். அத்துடன் பல எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிலையங்களையும் தமது கட்டுபபட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்
ஒரு நகரை ஐ எஸ் அமைப்பினர் சிரியாவில் தமது முற்று முழுதான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது இது முதற் தடவையாகும். ஐ எஸ் படையினர் பல்மைரா நகரைக் கைப்பற்றியதில் இருந்து சிரிய விமானப் படைகள் கண்மூடித்தனமாக அங்கு விமானத் தாக்குதல்கள் நடாத்தின.
மே மாதம் 15-ம் திகதி வெள்ளிக் கிழமை ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் அதிரடியாக ரமாடி நகரத்தின் கிழக்குப் பக்கமாக இருந்த ஈராக்கிய அரச படையினரின் காவல் நிலைகளைத் தாக்கி அழித்துக் கொண்டு முன்னேறினர். ரமாடி நகரின் கிழக்குப் பக்கமாக பத்துக் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஹுசைபா பகுதியில் ஐ எஸ் அமைப்பினரின் தாக்குதல் ஆரம்பித்தது. ரமாடி நகரை ஐ எஸ் போராளிகள் கைப்பற்றியமை ஈராக்கிய அரச படையினருக்க்குப் பேரிழப்பாகும். ஐ எஸ் அமைப்பினர் ஈராக்கில் வீசிய மணற்புயலைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். மணற்புயல் வீசியதால் அமெரிக்க விமானப் படையினர் ஐ எஸ் அமைப்பினரின் முன்னேற்றத்தைத் தடுக்க தாக்குதல் செய்ய முடியவில்லை. ரமாடி நகரில் ஐ எஸ் அமைப்பின் பல போராளிகள் தூக்கநிலைப் தாக்குதலாளிகளாக இருந்தனர். மணற் புயலைப் பாவித்து அவர்கள் 10 மகிழூர்தி குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதைத் தொடர்ந்து தரை நகர்வை மேற்கொண்ட ஐ எஸ் போராளிகளின் தாக்குதலுக்கு ஈராக்கியப் படையினரை நிலை குலையச் செய்தது. அவர்கள் தம் படைக்கலன்களைக் கைவிட்டுத் தலை தெறிக்க ஒடினர். பல்மைராவுடன் ஈராக் சிரியா எல்லை நகரமான அல் வலீட் நகரையும் கைப்பற்றியுள்ளனர். இது இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பில் அவர்களுக்கு ஒரு சாதகமான நிலையைத் தோற்றுவித்துள்ளது.
ஈராக்கில் ரமாடியிலும் சிரியாவில் பல்மைராவிலும் செய்த தாக்குதல்கள் மூலம் ஐ எஸ் அமைப்பினர் போரியலில் தமது திட்டமிடுதலும் நிறைவேற்றுவதிலும் உள்ள திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் சவுதி அரேபியா, அல்ஜீரியா, லெபனான், யேமன் ஆகிய நாடுகளிலும் தமது அமைப்பை விரிவுபடுத்தியுள்ளனர். . ஏற்கனவே அவர்களது செயற்பாடுகள் எகிப்து சூடான், லிபியா, மாலி, நைஜீரியா, ஆப்கானிஸ்த்தான், பாக்கிஸ்த்தான், இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் உள்ளது. . லிபியா ஐ எஸ் அமைப்பின் முக்கிய பயிற்ச்சி நிலையமாக மாறியுள்ளது. சிரியாவில் எண்ணெய் வளம் மிக்க பிராந்தியங்களை நோக்கி அது தனது விரிவாக்கத்தைச் செய்து கொண்டிருக்கின்றது. தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் குடிசார் நிர்வாகத்தில் அவர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். நீர் விநியோகம், தெரு கட்டமைப்பு போன்றவற்றில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர்.
சதாம் ஹுசேய்னின் படையில் இருந்தவர்களும் முன்னாள் அல் கெய்தாப் போராளிகளும் ஐ. எஸ் அமைப்பில் இணைந்திருப்பதால் அவர்களால் சிறப்பாகப் போர் புரிய முடிகின்றது. அமெரிக்கப் படைத்தளபதி Gen Martin Dempsey அவர்களின் கருத்துப்படி ரமாடியாவில் இருந்து ஈராக்கிய அரச படைகள் போர் மூலம் வெளியேற்றப் படவில்லை அவர்கள் ஐ எஸ் படையினர் வருவதைக் கண்டு தாமாக விலகிக் கொண்டார்கள். சிரியாவில் பல்மைரா நகரைக் கைப்பற்ற சில நூறு ஐ எஸ் போராளிகள் மட்டுமே ஈடுபட்டனர். ஈராக்கில் டிக்ரிட் நகரை ஐ எஸ் அமைப்பிடமிருந்து அரச படைகள் மீட்ட பின்னர் ஐ எஸ் போராளிகளின் முடிவு ஆரம்பித்து விட்டது என்ற கருத்துத் தெரிவித்திருந்தார்கள். சென்ற ஆண்டு மொசுல் நகரைக் கைப்பற்றியதில் இருந்து ஐ எஸ் அமைப்பினரை ஈராக்கில் உள்ள சுனி முஸ்லிம்கள் பெருமளவில் ஆதரிக்கத் தொடங்கிவிட்டனர்.
ரமாடி நகரை ஐ எஸ் அமைப்பினர் கைப்பற்றியது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு விழுந்த பேரிடி என அமெரிக்க எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். அமெரிக்கப் படையினரால் பயிற்றுவிக்கப் பட்ட ஈராக்கிய அரச படையினர் மீண்டும் தமது தாங்கிகளையும், கவச ஊர்திகளையும், எறிகணைகளையும் கேந்திர நிலைகளையும் விட்டு தப்பி ஓடி உள்ளனர். 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் ஐ எஸ் அமைப்பினர் அமெரிக்காவால் பயிற்று விக்கப்பட்ட ஈராக்கியப் படையினரிடமிருந்து பெரும் நிலப்பரப்பைக் கைப்பற்றினர். அப்போது அவர்கள் தம்மிலும் பார்க்க பல மடங்கு எண்ணிக்கையைக் கொண்ட ஈராக்கிய அரச படையினரைச் சின்னா பின்னப் படுத்தினர்.
2014-ம் ஆண்டு ஜூன் மாதம் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பெரும் நிலப்பரப்புகளைக் கைப்பற்றிக் கொண்டிருக்கையில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக தனி நாடு கோரிப் போராடும் குர்திஷ் இனத்தின் பெஸ்மேர்கா போராளி அமைப்பு எண்ணெய் வளமிக்க கேர்குக் நகரத்தை ஒரு துப்பாக்கிக் குண்டு கூட வெடிக்காமல் கைப்பற்றிக் கொண்டது. அப்போது குர்திஷ் மக்களின் தலைவர் மஸ்ஸோட் பர்ஜானி குர்திஷ் மக்களுக்கு என்று ஒரு அரசு உருவாகிக் கொண்டிருக்கின்றது என்றார். அதன் பின்பு குர்திஷ் மக்களின் பெஸ்மேர்கா அமைப்பின் போராளிகள் மிகவும் தீரமாகப் போராடி ஐ எஸ் அமைப்பினரிடமிருந்து தமது பிரதேசங்களைப் பாதுகாத்து வருகின்றனர்.
ஈரானும் ஈராகிய அரச படையினருக்கு உதவி செய்து வருகின்றது. ஈராக்கில் இப்போது ஆட்சியில் இருப்பது சியா முஸ்லிகளாகும். அவர்களை எதிர்க்கும் ஐ எஸ் அமைப்பு சுனி முஸ்லிம்களைக் கொண்டது. இதனால் சியா முஸ்லிம் நாடான ஈரான் ஈராக்கிய அரச படைகளுக்கு உதவி செய்து வருகின்றது.
ராமாடி நகர் சுனி முஸ்லிம்களின் புரதான நகராகும்.
ஐ எஸ் அமைப்பினரின் கட்டுபாட்டில் உள்ள எரி பொருள் வளமிக்க மொசுல் நகரைக் கைப்பற்ற ஈராக்கியப் படையினர் கடந்த ஓர் ஆண்டாக திட்டமிட்டுக் கொண்டிருக்கையில் ஐ எஸ் அமைப்பினர் ரமாடி நகரைக் கைப்பற்றியுள்ளனர்.
ஈராகில், சுனி, சியா, குர்திஷ் ஆகிய இனத்தவர்கள் வாழ்கின்றனர். மூன்றில் இரண்டு பங்கு சியா முசுலிம்களைக் கொண்ட ஈராக்கின் கிழக்குப் பிராந்தியத்தில் சுனி முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். சதாம் ஹுசேய்ன் சிறுபான்மையினரான சுனி முசுலிம் இனத்தைச் சேர்ந்தவர். ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாட்டுப் படைகள் அங்கிருந்து விலகும் போது ஈராக்கில் ஒரு "மக்களாட்சியை" உருவாக்கினர். ஈராக்கில் 2006-ம் ஆண்டில் இருந்து நௌரி அல் மலிக்கி தலைமை அமைச்சராக இருந்தார். ஊழல் மிகுந்த இவரது ஆட்சியில் சுனி முசுலிம்கள் புறக்கணிக்கப்பட்டும் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டும் வருகின்றனர். இதனால் சுனி முசுலிம்களிடையே தீவிரவாதம் தலை தூக்கியது. ஐ.எஸ்.ஐ.எஸ் என்னும் அமைப்பு உருவானது.பின்னர் அமெரிக்காவினதும் ஈரானினதும் ஆதரவுடன் ஹைத அல் அபாடி 2014இல் ஈரானின் தலைமை அமைச்சர் ஆனார். இவருக்கு ஈராக்கில் வாழும் சுனி, சியா மற்றும் குர்திஷ் மக்களின் ஆதரவு இருந்தது. இதைத் தொடர்ந்து ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராகப் போராட குர்திஷ் மக்களுக்கு ஐக்கிய அமெரிக்கா நேரடியாகப் படைக்கலனகளை வழங்கியது. அத்துடன் ஈராக்கிய அரச படையினருக்குப் பயிற்ச்சி வழங்க அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டனர். யஷீதியர்களுக்கு எதிராக ஐ எஸ் அமைப்பினர் அட்டூழியங்கள் செய்யத் தொடங்கியதில் இருந்து அமெரிக்கா ஐ எஸ் அமைப்பிற்கு எதிராக விமானத் தாக்குதல்களை ஆரம்பித்தது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அபூபக்கலர் அல் பக்தாடி தலைமையில் இயங்கும் ஒரு சுனி முசுலிம் அமைப்பாகும். Islamic State of Iraq and Syria என்பதன் சுருக்கமே ஐ.எஸ்.ஐ.எஸ் ஆகும். இது அல் கெய்தாவின் கிளை அமைப்பு, இணை அமைப்பு எனப் பல மேற்கத்தைய ஊடகங்கள் பரப்புரை செய்தாலும் இதற்கும் தமக்கும் எந்தத் தொடர்பு இல்லை என அல் கெய்தா மறுத்துள்ளது. ஐ எஸ் ஐ எஸ் அமைப்பு இஸ்லாமிய அரசு ஒன்றைப் பிரகடனம் செய்ததில் இருந்து அதன் பெயர் ஐ எஸ் எனப் பரவலாக அழைக்கப்படுகின்றது.
சிரியாவிலும் ஈராக்கிலும் இருக்கு சியா முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியா இருக்கின்றது. இரு நாட்டு ஆட்சியாளர்களுக்கும் எதிராக ஐ எஸ் அமைப்பினரின் நடவடிக்கைகளுக்கு ஆரம்பத்தில் ஐ எஸ் அமைப்பினருக்கு சவுதியில் இருந்து பணம் நிறையக் கிடத்தது. ஈராக்கில் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக ஈரான் தாக்குதல் நடாத்துகின்றது. சவுதியில் உள்ள பள்ளிவாசலில் மே மாதம் 22-ம் திகதி சியா முஸ்லிம்கள் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமது மகான் இமாம் ஹுசேய்னின் பிறந்தநாளிற்கான தொழுகை செய்து கொண்டிருக்கும்போது ஒரு தற்கொடைத்தாக்குதல் நடாத்தப் பட்டது. இதற்கு ஐ எஸ் அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர். சவுதியில் நடாந்த தாக்குதலுக்கு ஐ எஸ் அமைப்பினர் உரிமை கோரியுள்ளது இதுவே முதற்தடவையாகும். வீரச்சாவு வேண்டிய தமது போராளி ஒருவர் இடுப்புப் பட்டியில் இணைக்கப்பட்ட குண்டை வெடிக்கச் செய்து மாவீரராகியுள்ளார் என்கின்றது ஐ எஸ் அமைப்பு. 12 விழுக்காடு சியா முஸ்லிம்களைக் கொண்ட சவுதி அரேபியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் வாழும் சியா முஸ்லிம்கள் தமக்கு அதிக உரிமைகள் வேண்டிப் போராடி வருகின்றார்கள். 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் சியா முஸ்லிகளின் பேரணி ஒன்றில் கண்மூடித்தனமாக இனம் தெரியாத நபர்கள் துப்பாக்கிகளால் சுட்டனர். அதற்கு யாரும் உரிமை கோரவில்லை.
ஈராக்கிலும் சிரியாவிலும் இரு நகரங்களைக் கைப்பற்றியததைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்காவின் மேற்காசியா தொடர்பான கொள்கை கண்டனத்துக்கு உள்ளாவதுடன் ஆய்வுக்குட்படுத்தப் படுகின்றது
இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியப் படைகளுக்கு எதிரான வெற்றியின் 70வது ஆண்டு நிறைவு நாளை என்றுமே இல்லாத பெரும் படை அணிவகுப்புடன் இரசியா நினைவு கூர்ந்துள்ளது. மே மாதம் 9-ம் திகதி நடந்த அணிவகுப்பில் 16,000படையினரும், 200 தரை ஊர்திகளும், எவுகணை எதிர்ப்பு முறைமைகளும், கண்டம் விட்டுக் கண்டம்பாயும் ஏவுகணைகளும், 150 வானூர்திகளும் பங்கு பற்றின. உக்ரேன் விவகாரத்தைத் தொடர்ந்து மேற்கு நாடுகளுடன் பெருமளவு முரண்பட்டுக் கொண்டிருக்கும் இரசியாவின் இந்த அணிவகுப்பு மேற்கு நாடுகளுக்கு சவால் விட்டதுடன் இரசியர்களுக்கு நம்பிக்கையும் தேசப்பற்றையும் ஊட்ட முயன்றது.
புறக்கணித்த மேற்கும் பங்குபற்றிய கிழக்கும்
இரசியாவின் இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 70வது ஆண்டு நினைவு நாளை மேற்கு நாடுகளின் ஆட்சித் தலைவர்கள் உக்ரேன் விவகாரத்தில் இரசியாவின் நிலைப்பாட்டிற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் முககாமப் புறக்கணித்திருந்தார்கள். சீன அதிபர் ஷி ஜின்பிங், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜி, வெனிசுவேலாவின் அதிபர் நிக்கொலஸ் மதுரோ ஆகியோர் அங்கு பங்குபற்றியவர்களில் முக்கியமானவர்கள். வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் பங்குபற்றுவதாக இருந்தது ஆனால் இறுதி நேரத்தில் அவர் மஸ்கோவின் செஞ் சதுக்கத்திற்குப் போக முடியாமல் போய்விட்டது.
அசைய மறுக்கும் புட்டீன்
உக்ரேன் விவகாரத்தின் பின்னர் உருவான நேட்டோவின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் இருக்க 2015-ம் ஆண்டின் ஆரம்பத்தில் இரசியா தனது படைவலுவைக் கூட்டும் திட்டத்தை அதிரடியாக அறிவித்தது. 2020-ம் ஆண்டு இரசியா தனது அணுக்குண்டு இருப்பைப் பெருமளவில் அதிகரிக்கவுள்ளது என்றார் இரசியாவின் முப்படைத் தளபதி வலெரி ஜெரசிமோவ். அத்துடன் இந்த ஆண்டு இரசியா ஐம்பது கண்டம் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அணுக்குண்டு கொண்ட ஏவுகணைகளைத் தனது படைக்கு இரசியா இணைக்கவிருக்கின்றது. அமெரிக்காவின் படைவலு மேலாண்மை இரசியாமீது ஆதிக்கம் செலுத்த முடியாதவகையில் நாம் எமது படைவலுவை அதிகரிப்போம் எனச் சூளுரைத்திருந்தார் இரசியாவின் முப்படைத் தளபதி வலெரி ஜெரசிமோவ். இருபது ரில்லியன் ரூபிள் அதாவது 287 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான படைத்துறை புதுப்பிக்கும் ஐந்தாண்டுத் திட்டத்தை இரசியா அறிவித்தது. அத்துடன் அடுத்த பத்து ஆண்டுகளில் இரசியாவின் படைத்துறையில் முழுமையாகப் புதுப்பிக்கப்படும் என்றும் இரசியா அறிவித்தது. இத்திட்டங்களை இரசியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷேர்கி ஷொய்குவும் உறுதி செய்துள்ளார். இரசியாவிடம் தற்போது 8500 அணுக்குண்டுகள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது அமெரிக்காவிடம் இருக்கும் குண்டுகளின் எண்ணிக்கையிலும் பார்க்க ஆயிரம் அதிகமானதுமாகும். ஏற்கனவே இரசியாவிடம் 3082 போர் விமானங்கள், 15,550 போர்த் தாங்கிகள். ஒரு விமானம் தாங்கிக் கப்பல், 352 போர்க்கப்பல்கள் இருக்கின்றன. 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் திகதி ஐரோப்பாவிற்கான பாதுகாப்பிற்கும் ஒத்துழைப்புக்குமான நிறுவனத்தில் உரையாற்றிய இரசியப் பிரதிநிதி உக்ரேனிற்கு மேற்கு நாடுகள் படைத்துறை ரீதியில் ஆதரவு வழங்கினால் அது பெரும் அழிவில் முடியும் என எச்சரித்திருந்தார். இரசியாவின் பொருளாதாரம்
சரிந்த எரிபொருள் விலையும் பொருளாதாரத் தடைகளும் இரசியப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தின. 2015 ஏப்ரல் மாதம் இரசியாவில் ஊழியர்களுக்கான ஊதியக் கொடுப்பனவு நிலுவை 2.9பில்லியன் ரூபிள் (அதாவது 56பில்லியன் டொலர்கள்) ஆக இருந்தது. இரசியாவின் பல பாகங்களில் இதனால் வேலை நிறுத்தங்களும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. ஐக்கிய அமெரிக்கா, இரசியா, சீனா ஆகிய மூன்றும் உலகின் முன்னணிப் படைக்கலன் ஏற்றுமதி நாடுகளாக இருக்கின்ற போதும் இரசியா படைக்கலன் ஏற்றுமதித் திறனை இழந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. படைக்கல ஏற்றுமதியில் சீனா, ஜேர்மனி, உக்ரேன் ஆகிய நாடுகளிடமிருந்து இரசியா கடும் போட்டியை எதிர் நோக்குகின்றது. இரசியாமீது மேற்கு நாடுகள் கொண்டு வந்த பொருளாதாரத் தடையால் இரசியாவின் படைக்கல ஏற்றுமதி ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தது. இரசியாவின் பொருளாதாரம் படைக்கல ஏற்றுமதியிலும் தங்கியிருக்கின்றது. கடந்த 11 ஆண்டுகளில் இரசியாவின் படைக்கல ஏற்றுமதி மூன்று மடங்காக அதிகரித்திருந்தது. 2014-ம் ஆண்டிற்கான இரசியப் படைக்கல ஏற்றுமதி 15.5பில்லியன் டொலர்களாக இருந்தது. தற்போது இரசியாவிடம் 48 பில்லியன் படைக்கல ஏற்றுமதிக்கான உத்தரவு உள்ளது. சரிந்த எரிபொருள் விலை தற்போது ஓரளவிற்கு உறுதியான நிலையை அடைந்தமை இரசியாவிற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. 2014-ம் ஆண்டு 5 விழுக்காடு சுருங்கிய இரசியப் பொருளாதாரம் இந்த ஆண்டு 3 விழுக்காடு மட்டும் சுருங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விலைவாசி 17 விழுக்காடாக இருக்கின்ற போதும் அதன் அதிகரிப்பு விகிதம் குறைவடைகின்றது. இரசிய ரூபிளின் பெறுமதி டொலருக்கும் யூரோவிற்கும் எதிராக அதிகரிக்கின்றது. இரசியாவின் மைய வங்கி சிறப்பாகச் செயற்பட்டு பொருளாதாரத்தை உறுதிப் படுத்துகின்றது என்பதை மேற்கத்திய பொருளியல் வல்லுனர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
சீனாவை நெருங்கும் இரசியா
இரசியாவின் இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 70வது ஆண்டு நினைவு நாளில் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனுக்கு அருகில் சீன அதிபன் சி ஜின்பிங் அமர்ந்திருந்தமை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வளர்ந்து விட்டது என்பதைக் காட்டுகின்றது. இந்தப் பயணத்தின் போது சீன அதிபர் இரசியாவுடன் 32 இருதரப்பு உடன்படிக்கைகளிள் கையொப்பமிட்டார். ஒரு நாட்டின் இணையவெளிமீது மற்ற நாடு ஊடுருவல் செய்வதில்லை என்பதும் இந்த உடன்படிக்கைகளில் ஒன்றாகும். அத்துடன் இரு நாடுகளும் இணைந்து மத்திய தரைக்கடலில் ஒரு போர் ஒத்திகையையும் நடாத்தின. நாம் ஒன்றுபட்டால் வலுவடைவோம் பிளவு பட்டால் வலுவிழப்போம் என்றார் சீன அதிபர். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை நெருக்கமடையச் செய்வது அமெரிக்காவின் உலக ஆதிக்கம் என்றாலும். சீனாவிற்கு இரசியாவைத் தேவைப்படுவதிலும் பார்க்க அதிக அளவு இரசியாவிற்கு சீனாவைத் தேவைப்படுகின்றது. சீன மக்களிடை எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் படி சீன மக்கள் பொதுவாக இரசியாவையும் அதன் அதிபரையும் பார்த்து வியக்கிறார்கள். புட்டீன் இரசியாவிற்காகப் பிறந்தவர் என்ற தலைப்பிலான புட்டீனின் வாழ்கை வரலாற்று நூல் சீனாவில் அதிகம் விற்பனையாகின்றது.ஆனால் அவர்கள் அமெரிக்க வாழ்கை முறையை விரும்புகிறார்கள். சீனாவில் உள்ள வர்த்கர்களும் தொழில்கள் புரிவோரும் அமெரிக்காவுடன் வியாபாரம் செய்வதை அதிகம் விரும்புகின்றார்கள். சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான உறவு அன்று பொதுவுடமைச் சித்தாந்த ரீதியாக அமைந்திருந்தது. சீனாவிற்கு தனது பொதுவுடமை ஆட்சியை நிலை நிறுத்த சோவியத் ஒன்றிய ஆதரவு அப்போது தேவைப்பட்டது. சோவியத் ஒன்றியத்திற்கு சீனாவின் உறவு பெரும் புவிசார் அரசியல் வலுவைக் கொடுத்தது. தற்போது அந்த உறவு பொது நலன் சார்ந்ததல்ல. பொது எதிரிக்கானது. இரசியா கிறிமியாவை விழுங்கியது பற்றியோ உக்ரேனைப் பிய்த்துப் பிடுங்குவது பற்றியோ சீனா கவலைப்படப் போவதில்லை. சீனாவின் கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களில் ஆதிக்கம் செலுத்துவது இரசியாவைப் பாதிக்கப் போவதுமில்லை. சீனா தனது நாணயத்தை உலக நாணயமாக்கும் திட்டம் இரசியாவிற்கு பெரும் பாதகமாக அமையப் போவதுமில்லை. சீனாவிற்குத் தேவையான எரிபொருள் இரசியாவிடமிருக்கின்றது.
ஜோன் ஜெரியின் இரசியப் பயணம்
ஐக்கிய அமெரிக்காவின் வெளியுறவுத் துறைக்குப் பொறுப்பான அரசுச் செயலர் ஜோன் கெரி இரசியாவின் இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியப் படைகளுக்கு எதிரான வெற்றியின் 70வது ஆண்டு நிறைவு நாள் அணிவகுப்பு நடந்து மூன்றாம் நாள் அதாவது மே மாதம் 9-ம் திகதி இரசியாவிற்கு ஒரு பயணத்தை மேற்கொண்டார். இதற்கு முதல் நாள் உலக அரங்கில் இரசியாவைத் தனிமைப்படுத்த அமெரிக்கா முயல்வதாக இரசிய வெளியுறவுத்துறை ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. கெரியின் பயணம் உக்ரேனில் போர் நிறுத்தம், சிரியாவில் அப்பாவி மக்கள் மீது போடுவதாக நம்பப்படும் குளோரின் குண்டுகள், ஈரானுடனான யூரேனியம் பதப்படுத்தல் தொடர்பான பேச்சு வார்த்தை ஆகியவற்றை மையப்படுத்தி அமைந்தது. ஜோன் கெரி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனைச் சந்திக்க முன்னர் இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கி லவ்ரோவுடன் நான்கு மணித்தியாலங்கள் பேச்சுவார்த்தை நடாத்தினார். இரசியா தனது பத்துப் படையணிகளை உக்ரேன் எல்லைக்கு நகர்த்தி வைத்திருக்கின்றது. அத்துடன் SA-22 மற்றும் SA-15 ஆகிய விமான எதிர்ப்பு முறைமைகளை உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தினுள் நகர்த்தியுள்ளது. தொடர்ந்தும் உக்ரேன் கிளர்சிக்காரர்களுக்கு பயிற்ச்சி கொடுத்து வருகின்றது. இரசியாவின் இந்த நகர்வுகள் உக்ரேனின் பிராந்தியங்களை மேலும் அபகரித்துக் கொள்ளவா அல்லது உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் வாழும் இரசியர்களுக்கு மேலும் அதிகாரங்களை வழங்கும் அழுத்தத்தை உக்ரேனிய அரசுக்குக் கொடுக்கவா என்பது பற்றி அமெரிக்கா குழம்பிப் போயுள்ளது. ஆனால் இரசியாவின் இந்த நடவடிக்கைகள் போர் நிறுத்த உடன்பாட்டை மீறுவதாகும் என்கின்றது அமெரிக்கா. இருதரப்புப் பேச்சு வார்த்தைகளின் போது காத்திரமான எந்த ஒரு உடன்பாடும் ஏற்படவில்லை. உக்ரேன் விவகாரத்தில் இருதரப்பினரும் தொடர்ந்து முரண்படுவதாக ஒத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிப்பதாக ஒத்துக் கொள்ளப்பட்டது. ஈரானுக்கு இரசியா ஏவுகணை எதிர்ப்பு முறைமையை விற்பது தொடர்பாக ஜோன் கெரி அமெரிக்காவின் ஆட்சேபனையைத் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கெரி அதுபற்றி ஏதும் பேசவில்லை. ஈரான் அணுக்குண்டு உற்பத்தி செய்வதை இரசியா விரும்பாத போதிலும் அது அமெரிக்காவிற்கு ஒரு தலையிடியாகத் தொடர்வதை இரசியா விரும்புகின்றது. ஈரான் அணுக்குண்டு உற்பத்தி செய்யக் கூடாது என சவுதி அரேபியா உட்பட்ட பல அமெரிகாவின் அரபு நட்பு நாடுகள் என அமெரிக்காவை வலியுறுத்துவதுடன் இஸ்ரேலும் அமெரிக்கா ஈரானை அணுக்குண்டு உற்பத்தி செய்யாமல் தடுக்க வேண்டும் என அடம்பிடிக்கின்றது. ஜோன் கெரியின் இரசியப் பயணம் இரசியா மீண்டும் உலக அரங்கில் தனது ஆதிக்கத்தை சோவியத் ஒன்றியக் காலத்திற்கு இணையாக உயர்த்தி வருகின்றது என்பதைக் காட்டுகின்றது.
இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவும் இரசியா தலைமையிலான சோவியத் ஒன்றியமும் ஹிட்லரின் ஜேர்மனிக்கு எதிராக ஒரு தரப்பில் நின்று போர் செய்தன. அதில் பெற்ற வெற்றியின் பின்னர் இரு நாடுகளும் இரு துருவங்களாகின. இரு நாடுகளும் பெரும் படைக்கல உற்பத்திப் போட்டியில் பல பத்தாண்டுகளாக ஈடுபட்டிருந்தன. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இரசியாவை நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பில் இணைக்கும் முயற்ச்சி கூட நடந்தது. ஆனால் புட்டீனின் கொள்கை வேறு பட்டது. அவர் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு முன்னர் இரசியா உலக அரங்கில் இருந்த நிலைக்கு மீண்டும் இட்டுச் செல்லும் முயற்ச்சியை உலகிற்கு உரத்த குரலில் சொல்ல இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியப் படைகளுக்கு எதிரான வெற்றியின் 70வது ஆண்டு நிறைவு நாளைப் பயன் படுத்தியுள்ளார்.
ஐக்கிய அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏயின் சிறப்புப் படைப்பிரிவான
டெல்டாப் படையணி சிரியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள Deir ez-Zor
என்னும் நகரில் இருந்த கட்டிடத்தில் தாக்குதல் நடாத்தி அங்கு தங்கியிருந்த ஐ
எஸ்இன் முன்னணித் தலைவர்களில் ஒருவரான அபு சய்யஃப் என்பவரைக் கொன்று அவரது
மனைவியைக் கைது செய்ததுடன் அவர்கள் அடிமையாக வைத்திருந்த 18 வயது யஷீதியப்
பெண்ணை விடுவித்தனர். இந்தத் தாக்குதல் 15-05-2015 வெள்ளிக் கிழமை
நள்ளிரவில் தொடங்கி மறுநாள் காலை வரை நடந்தது.
24 டெல்டாப்
படையினர் Black Hawkஎன்ற ஒரு உழங்கு வானூர்தியிலும் V-22 Osprey என்ற ஒரு
வானூர்தியிலும் சென்று அபு சய்யஃப் இருந்த கட்டிடத்தில் அதிரடித் தாக்குதல்
நடாத்தினர். இவர்கள் போய் இறங்கியவுடன் அபு சய்யஃப்பிற்குப் பாதுகாவலராக
இருந்த போராளிகள் டெல்டாப் படையினர் மீது தாக்குதல் நடாத்தத் தொடங்கினர்.
இரு தரப்பினருக்கும் இடயில் நேரடிச் சண்டை மூண்டதால் அபு சய்யஃபை உயிருடன்
கைது செய்யும் அமெரிக நோக்கம் நிறைவேறாமல் போய்விட்டது. ஐ எஸ் அமைப்பின்
எரிபொருள் உற்பத்திப் பிரிவிற்கும் நிதித் துறைக்கும் பொறுப்பாய் இருந்த
அபு சய்யஃபை தமது ஆளில்லா வேவு விமானங்கள் மூலமாகவும் இலத்திரனியல் தடயத்
தேடல் மூலமாகவும் உளவாளிகள் மூலமாகவும் காட்டிக் கொடுப்போர் மூலமாகவும்
தொடர்ந்து அவதானித்து வந்த அமெரிக்க உளவுத்துறையினர் அதிபர் பராக்
ஒபாமாவின் அனுமதியுடன் தாக்குதல் நடாத்தினர்.அபு சய்யஃபும் அவரது மனைவியும்
ஐ எஸ் அமைப்பின் போராளிகளுமாவார்.
அமெரிக்க டெல்டாப் படையின் தாம் தாக்குதல் தொடங்கியவுடன் ஐ எஸ் போராளிகள் பெண்களையும் சிறுவர்களையும் கவசங்களாகப் பாவித்ததாகச் சொல்கின்றனர். ஆனாலும் தாம் குறிதப்பாமல் சுட்டு பெண்களையும் சிறுவர்களையும் தாக்குதலில் இருந்து தவிர்த்ததாகச் சொல்கின்றனர். அபு சய்யஃபின் பணிமனையில் இருந்த தொடர்பாட கருவிகளையும் மடிக் கணனிகளையும் வேறு பலவற்றையும் கைப்பற்றி எடுத்துச் சென்றதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 2014-ம் ஆண்டு ஈராக்கில் பெரும் நிலப்பரப்பை ஐ எஸ் அமைப்பினர் தமது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த போது பல யதீஷியர்களைக் கொன்றதுடன் பெண்களையும் சிறுவர்களையும் அடிமைகளாகப் பிடித்துக் கொண்டனர்.
1970களின் பிற்பகுதியில் உருவாக்கப் பட்ட டெல்டாப் படையணியினர் Operation Eagle Claw என்னும் பெயரில் 1980-ம் ஆண்டு செய்த தாக்குதல் இடையில் உழங்கு வானூர்தி விபத்திற்கு உள்ளானதால் கைவிடப்பட்டது. ஐஸ் அமைப்பிற்கு எதிராக அண்மைக் காலங்களாகச் செய்தசில தாக்குதல்கள் தோல்வியில் முடிவடைந்தன. ஆனால் வெள்ளிக் கிழமை இரவு செய்த தாக்குதல் அமெரிக்கத் தரப்பில் எவரும் காயப்படமாலோ கொல்லப்படாமலோ செய்யப்பட்டுள்ளது.
சிரிய அரசுக்குத் தெரியாமல் இந்தத் தாக்குதல் செய்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனால் இது நம்பும்படியாக இல்லை. சிரியாவில் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக தமது எந்த ஒரு படை நடவடிக்கைக்கும் சிரியா இடையூறு செய்யக் கூடாது என ஏற்கனவே சிரியாவிற்கு அமெரிக்கா அறிவுறுத்தல் விடுத்ததாகச் சொல்லப்படுகின்றது.
ஐ எஸ் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் ஐ எஸ் இன் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்திற்கு வந்து இஸ்லாமிய மார்க்கத்தின் எதிரிகளுக்கு எதிராகப் போர் செய்யும் படி அவர்களது வானொலி மூலம் அறை கூவல் விடுத்துள்ளார்.
உங்கள் இலக்கு எமது அபு சய்யஃப் என்றால் எமது இலக்கு பராக் ஒபாமாவும் மற்றும் சிலுவையைக் கும்பிடுபவர்களாக இருக்கும் என ஐ எஸ் அமைப்பினர் சூளுரைத்துள்ளனர்.
ஐ எஸ் ஐப் பொறுத்தவரை துனிசியக் குடிமகனான அபு சய்யஃப் கொல்லப் பட்டது ஓர் இழப்பு அவரது கணனிகளையும் உம் சய்யஃப் என்னும் பெயருடைய மனைவியையும் கைப்பற்றி சென்றது பேரிழப்பு. அபு சய்யஃபின் மனைவி பல பணயக் கைதிகளைப் பிடிக்கும் நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்கு பற்றியவர்.. இதனால் ஐ எஸ் தொடர்பாகாப் பல தகவல்களை அமெரிக்க உளவுத் துறையால் அறிய முடியும். ஐ எஸ் எரிபொருள் விற்பனை மூலம் நாள் ஒன்றிற்கு மூன்று மில்லியன் டொலர்களை வருமானத்தைப் பெறுகின்றது. இந்த நிதி மூலத்தை தற்போது அமெரிக்காவால் சிதைக்க முடியுமா?
ஈரானின் ஆதரவுடன் லெபனானில் இருந்து செயற்படும் ஹிஸ்புல்லா அமைப்பு சிரியாவில் பஷார் அல் அசாத்திற்கு ஆதரவாக நின்று அங்குள்ள கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகப் போராடுவதால் களமுனை அனுபவத்தையும் படைக்கலன்கள் கையாளும் திறனையும் பெருக்கிக் கொண்டுள்ளது. தெற்கு லெபனானில் கிராமங்கள் தோறும் ஹிஸ்புல்லா அமைப்பினர் பல படைக்கல களஞ்சியங்களையும் ஏவுகணை வீசும் நிலைகளையும் கலாடபடைப்பிரிவுகளையும் தாங்கி எதிர்ப்பு நிலைகளையும் அமைத்துள்ளனர்.
1983-ம் ஆண்டு லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இருந்த அமெரிக்கக் கடற்படையினர் மீது ஹிஸ்புல்லா தற்கொடைத் தாக்குதல் நடாத்தி 241 படையினரைக் கொன்றது. இது அமெரிக்கப் படையைப் பொறுத்தவரை ஒரு நாளில் ஏற்பட்ட பேரிழப்பாகும். இதில் இருந்து ஹிஸ்புல்லா உலகப் புகழ் பெற்றதுடன் அமெரிக்கப் படைகளையும் 1984இல் லெபனானில் இருந்து வெளியேற்றியது
2006-ம் ஆண்டு நடந்த ஹிஸ்புல்லா இஸ்ரேல் போருக்குப் பின்னர் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஈரானின் ஆதரவுடன் தமது படைக்கலன்களைப் பெரிதும் அதிகரித்துள்ளனர். அத்துடன் சிரியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹொலான் குன்றுகளில் தமது ஏவுகணைகளையும் மற்றும் பல படைக்கலன்களையும் நிறுத்தியுள்ளனர். இஸ்ரேலியர்கள் மேற்குக் கரையிலோ, காசா நிலப்பரப்பிலோ , லெபனானிலோ தமக்கு எதிரான தீவிரவாதிகள் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தால அளவுக்கு வலுப்பெறும் போதெல்லாம் முன் கூட்டியே அவர்கள் மீது தாக்குதல் நடாத்தி அவர்களின் ஆளணிகளையும் படைக்கலன்களையும் அழிப்பது வழக்கம். இஸ்ரேலின் கணிப்பின் படி ஹிஸ்புல்லாவிடம் இப்போது ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட எறிகணைகளும் ஏவுகணைகளும் உள்ளன. அவற்றில் பெரும்பான்மையானவை ஈரானில் தயாரிக்கப்பட்ட கற்றியூஷா என்னும் குறுந்தூர ஏவுகணைகளாகும். ஹிஸ்புல்லாவிடம் நிதிவலு, படைக்கலவலு ஆகியவை நிறைய உண்டு. கட்டமைக்கப்படாத போராளி இயக்கமான (Asymmetric movement) ஹிஸ்புல்லாவிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகள், போர்க்கப்பல்களை அழிக்கும் ஏவுகணைகள், தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், வேவுபார்க்கவும் தாக்கவும் கூடிய ஆளில்லாப் போர்விமானங்கள் ஆகியவை இருப்பதாக இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறை கருதுகின்றது
ஹிஸ்புல்லா தன் படைவலுவை 2006-ம் ஆண்டில் இருந்ததிலும் பார்க்க பத்து மடங்கு அதிகரித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹஸன் நஸ்ரல்லாவும் தாம் தற்போது மிகவும் வலுவடைந்திருப்பதாகச் சொன்னார்.
2006-ம் ஆண்டின் பின்னர் சற்று அமைதியாக இருந்த லெபனானில் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக ஹிஸ்புல்லா செயற்படத் தொடங்கியதில் இருந்து அமைதி இழந்துள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் பல குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டனர். ஹிஸ்புல்லா அமைப்பின் படைத்துறைத் தலைவர்களில் ஒருவரான ஹசன் லகீஸ் 2013-ம் ஆண்டு டிசம்பரில் கொலை
செய்யப்பட்டார். லெபனானின் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில்
உள்ள அவரது வீட்டின் முன் இக் கொலை நடந்தது. ஹிஸ்புல்லா இந்தக் கொலையை
இஸ்ரேல் செய்ததாகக் குற்றம் சாட்டியிருந்தது. ஹிஸ்புல்லா அமைப்பு ஹசன் லகீஸ் எப்படிக் கொல்லப்பட்டார் என்ற விபரத்தை
வெளிவிடவில்லை. லெபனானிய அரசு அவர் துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டார்
என்கின்றது. அவரது தலையிலும் தோளிலும் நான்கு தடவை ஒலி எழுப்பாத
கைத்துப்பாக்கியால் சுடப்பட்டார். இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சு தமது நாட்டுக்கும்
இந்தக் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்திருதது. இஸ்ரேல் ஹிஸ்புல்லா இயக்கத்தை தனது முதலாவது எதிரியாகக் கருதுகின்றது.
ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு படைக்கலன்கள் போய்ச் சேர்வதைத் தடுக்க சிரியாவில்
ஆறுக்கு மேற்பட்ட விமானத் தாக்குதல்களை சிரியக் கிளர்ச்சி தொடங்கியதில்
இருந்து இஸ்ரேல் நடாத்தியிருந்தது. 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் சிரியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹொலன் குன்றுகளில் இஸ்ரேல் நடாத்திய விமானத் தாக்குதலில் ஈரானிய ஜெனரலான மொஹமட் அலி அல்லா தாதியும் மொஹமட் இஸ்ஸா என்ற ஓர் ஈரானியத் தளபதியும் ஜிஹாட் முக்னியா என்ற ஹிஸ்புல்லாத் தளபதியின் மகனும் கொல்லப்பட்டனர். அப்போது இதற்குப் பதிலடியாக இஸ்ரேலிய படையினர் காவு வண்டி ஒன்றின் மீது ஹிஸ்புல்லாப் போராளிகள் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வீசி இரு படையினரைக் கொன்றனர்.இது ஒரு பெரும் போராக மாறாமல் இருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையூடாக ஹிஸ்புல்லா வேண்டுகோளையும் விடுத்தது.
இஸ்ரேல் தான் ஹிஸ்புல்லாவிற்கு எதிராகத் தாக்குதல் நடாத்தினால் அதில் அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினர் எந்தவித சீருடைகளையும் அணிவதில்லை அவர்கள் பொதுமக்களைப் போல் ஆடையணித்து பொதுமக்கள் மத்தியில் இருந்து செயற்படுவதால் அவர்கள் மீது தாக்குதல் நடாத்தும் போது பொதுமக்கள் கொல்லப்படுவார்கள் என்கின்றது இஸ்ரேல்.
லெபனானின் அரச படைகளால் இஸ்ரேலிடம் இருந்து லெபனானைக் காப்பாற்றும் திறன் இல்லை என்கின்றது ஹிஸ்புல்லா. தெற்கு லெபனானில் மக்கள் ஆதரவு தமக்கு மட்டுமே எனச் சொல்கின்றது ஹிஸ்புல்லா. ஆனால் தற்போது சிரியா, ஈராக், யேமன் ஆகிய நாடுகளில் ஈரானின் வேண்டுதலின் பெயரில் போரில் ஈடுபட்டுள்ள ஹிஸ்புல்லா அகலக் கால்களை வைத்துள்ளது எனச் சொல்லலாம்.ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தாக்குதல் நடாத்தினால் அது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து உருவாக்கிய ஏவுகணை எதிர்ப்பு முறைமைக்கு இன்னும் ஒரு பரிசோதனைக் களமாக அமைவதுடன் லெபனானில் ஒரு பேரழிவையும் ஏற்படுத்தும்.
பொதுவாக தேர்தல் என்றால் கட்சிகளின் கொள்கைகளின் மோதல், தலைவர்களின் திறமைகளின் மோதல் தேர்தல் கூட்டங்களில் செய்யும் பேச்சுக்களின் மோதல் என்பதை நாம் அறிவோம். ஆனால் பிரித்தானியாவில் நடந்து முடிந்த தேர்தல் பிரித்தானியா மக்களுடன் சம்பந்தமில்லாத இரு விற்பன்னர்களின் மோதலாக அமைந்தது. ஒருவர் பராக் ஒபாமாவை இரு தடவை வெற்றி பெறச் செய்த டேவிட் அக்ஸெல்றொட் மற்றவர் ஒஸ்ரேலியாவில் ஜொன் ஹோவார்டை நான்கு தடவைகள் வெற்றி பெறச் செய்த லிண்டன் குறொஸ்பி. இந்த லிண்டன் குறொஸ்பியே கொன்சர்வேர்டிவ் கட்சியின் பொறிஸ் ஜோன்ஸனை இரண்டு தடவைகள் இலண்டன் மாநகர சபைத் தேர்தலில் வெற்றி பெற வைத்தவர். இவர்கள் தேர்தல் பரப்புரைகளை நடாத்துவது தொடர்பாக தந்திரோபாயங்களை வகுத்துக் கொடுப்பார்கள். பரப்புரை உத்திகளை வகுப்பார்கள். இவர்கல்இருவருக்கும் ஆளுக்கு ஐந்து இலட்சம் பவுண் கட்டணமாகச் செலுத்தப்பட்டது. கொன்சர்வேர்டிவ் கட்சிக்கு ஆலொசனை வழங்கிய லிண்டன் குறொஸ்பி தனிமனித நிந்தனைகள் செய்யத் தூண்டுவதில் பெயர் போனவர். ஆனால் கொன்சர்வேர்டிவ் கட்சியினர் டேவிட் கமரூன் தனிமனிதத் தாக்குதல் செய்யக் கூடியவர் அல்லர் எனக் கருதினர். அவர்கள் “David is too posh to push” என்றனர்
கொன்சர்வேர்டிக் கட்சிக்கு லிண்டன் குறொஸ்பி வகுத்த உபாயங்கள்:
1. தொழிற்கட்சித் தலைவர் எட்வர்ட் மில்லிபாண்ட் கொன்சர்வேர்டிவ் கட்சியின் தலைவரும் தலைமை அமைச்சருமான டேவிட் கமரூனுக்குச் சரியானதும் நம்பகத்தைமை வாய்ந்ததுமான மாற்றீடு அல்லர் எனப் பரப்புரை செய்வது. இதை ஒட்டி எட்வர்ட் மில்லிபாண்டிடம் நாட்டை ஒப்படைப்பது ஜிம்மி சவைலிடம் சிறுவர் பராமரிப்பு வேலையை ஒப்படைப்பது போன்ற கட்டுரைகள் ஊடகங்களில் வெளிவிடப்பட்டன. காலம் சென்ற ஜிம்மி சவைல் பிபிசியில் பணிபுரியும் போது பல சிறுவர்களை பாலியல் முறைகேட்டுக்கு உள்ளாக்கியவர்.
2 தொழிற்கட்சியுடன் தோழமையாக நடந்து கொண்ட தாராண்மைவாதக் கட்சிக்கு எதிராக தீவிர சந்தைப்படுத்தல் நுட்பங்களைப்பயன்படுத்தி செல்வாக்கிழக்கச் செய்தல்.
3. டேவிட்கமரூன் ஆட்சியில் இருபது இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் கொடுத்தமை, அரச பாதீட்டில் துண்டுவிழும் தொகைகளைக் குறைத்தமை, வருமானவரிகளைக் குறைத்தமை தொடர்பாக மிகைப்படுத்தப்பட்ட பரப்புரைகளைச் செய்தல்.
4. டேவிட் மில்லிபாண்டின் பலவீனங்கள் மீது தாக்குதல் நடாத்துதல். இதற்காக அவர் அவசர அவசரமாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட படத்தை பத்திரிகைகளில் பிரசுரித்து வருங்கால பிரித்தானியத் தலைமை அமைச்சர் இப்படியா அசிங்கமாகச் சாப்பிடுவது என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.
கொன்சர்வேர்டிவ் கட்சியைச் சேர்ந்தவர்களே இந்தப் பரப்புரைகள் சில்லறைத்தனமானது என இரகசியமாக ஒப்புக் கொண்டார்கள்.
தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புக்கள் கொன்சர்வேர்டிவ் கட்சியினருக்குத் திருப்தி அளிக்காத நிலையில் லிண்டன் குறொஸ்பி எல்லாம் எமக்குச் சாதகமாகவே நகர்ந்து கொண்டிருக்கின்றது என ஊக்கமளித்தார். பின்னர் கடைசித் துருப்பாக தொழிற் கட்சி ஸ்கொட்லாந்துத் தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்கும் அது ஆங்கிலேயர்களுக்கு பெரும் பாதகமாக அமையும் என்ற பரப்புரையைட் தீவிரமாகச் செய்யச் சொன்னார்.
ஆனால் பாவம் தொழிற்கட்சிக்கு ஆலோசனை வழங்க வந்த டேவிட் அக்ஸெல்றொட்டின் உபாயங்களை நிறைவேற்றப் போதிய பணம் தொழிற்கட்சியிடம் இல்லை. இவரை அழைப்பது என்றவுடன் பணத்தட்டுப்பாட்டில் இருக்கும் எமது கட்சிக்கு இந்த அளவு பணம் செலவழித்து ஒரு ஆலோசகரைப் பெற வேண்டுமா என்ற கேள்வி தொழிற்கட்சியில் உள்ள சிலரிடமிருந்து எழுந்தது. அத்துடன் எமது ஊர்ப் பிரச்சனைகளைப்பற்றி இந்த அமெரிக்கர் எப்படி அறிவார் அவர் எப்படி எமக்கு ஆலோசனை சொல்வார் என்ற கேள்விகள் தொழிற்கட்சியினரிடம் எழுந்தது.
டேவிட் அக்ஸெல்றொட்டின் கருத்துப் படி பிரித்தானிய ஊடகங்கள் எல்லாம் மிகவும் கட்சி சார்பானவை. அமெரிக்க ஊடகமான ஃபொக்ஸ் நியூஸிலும் பார்க்க மோசமானவை பிரித்தானிய ஊடகங்கள்.