ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் இந்த வாரம் பெரு வெற்றிகளை ஈட்டியுள்ளனர். ஈராக்கில் ரமாடியா என்னும் நகரையும் சிரியாவில் பல்மைரா என்னும் நகரையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். சிரியாவில் அரைப்பங்கு நிலப்பரப்பு இப்போது அவர்களது கட்டுப்பாட்டில் வந்துள்ளது. ஆப்கானிஸ்த்தானில் பௌத்த புரதானச் சின்னங்கள் அழிக்கப்பட்டது போல், ஈராக் நகரான மொசுலில் சியா முஸ்லிகளின் மதச் சின்னங்கள் அழிக்கப்பட்டது போல் பல்மைரா நகரில் உள்ள பாதுகாக்கப்பட வேண்டிய புரதானச் சின்னங்கள் அழிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஹொம்ஸ் மகாணத்தின் மையத்தில் அமைந்துள்ள பல்மைரா நகர் தலைநகர் டமஸ்கஸ்ஸில் இருந்து 210 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சிரியாவின் மையப் பகுதியில் உள்ள பல்மைரா நகரை ஐ எஸ் அமைப்பினர் மே மாதம் 20-ம் திகதி தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். சிரியாவின் 95000 சதுர மைல்கள் இப்போது ஐ எஸ்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளது. சிரியாவின் 14 மாகாணங்களில் ஒன்பதில் ஐ எஸ்ஸின் ஆதிக்கம் நிலவுகின்றது. சிரியாவின் முக்கிய தெருக்கள் பலவற்றை ஐ எஸ் அமைப்பினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். அத்துடன் பல எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிலையங்களையும் தமது கட்டுபபட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்
ஒரு நகரை ஐ எஸ் அமைப்பினர் சிரியாவில் தமது முற்று முழுதான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது இது முதற் தடவையாகும். ஐ எஸ் படையினர் பல்மைரா நகரைக் கைப்பற்றியதில் இருந்து சிரிய விமானப் படைகள் கண்மூடித்தனமாக அங்கு விமானத் தாக்குதல்கள் நடாத்தின.
மே மாதம் 15-ம் திகதி வெள்ளிக் கிழமை ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் அதிரடியாக ரமாடி நகரத்தின் கிழக்குப் பக்கமாக இருந்த ஈராக்கிய அரச படையினரின் காவல் நிலைகளைத் தாக்கி அழித்துக் கொண்டு முன்னேறினர். ரமாடி நகரின் கிழக்குப் பக்கமாக பத்துக் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஹுசைபா பகுதியில் ஐ எஸ் அமைப்பினரின் தாக்குதல் ஆரம்பித்தது. ரமாடி நகரை ஐ எஸ் போராளிகள் கைப்பற்றியமை ஈராக்கிய அரச படையினருக்க்குப் பேரிழப்பாகும். ஐ எஸ் அமைப்பினர் ஈராக்கில் வீசிய மணற்புயலைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். மணற்புயல் வீசியதால் அமெரிக்க விமானப் படையினர் ஐ எஸ் அமைப்பினரின் முன்னேற்றத்தைத் தடுக்க தாக்குதல் செய்ய முடியவில்லை. ரமாடி நகரில் ஐ எஸ் அமைப்பின் பல போராளிகள் தூக்கநிலைப் தாக்குதலாளிகளாக இருந்தனர். மணற் புயலைப் பாவித்து அவர்கள் 10 மகிழூர்தி குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதைத் தொடர்ந்து தரை நகர்வை மேற்கொண்ட ஐ எஸ் போராளிகளின் தாக்குதலுக்கு ஈராக்கியப் படையினரை நிலை குலையச் செய்தது. அவர்கள் தம் படைக்கலன்களைக் கைவிட்டுத் தலை தெறிக்க ஒடினர். பல்மைராவுடன் ஈராக் சிரியா எல்லை நகரமான அல் வலீட் நகரையும் கைப்பற்றியுள்ளனர். இது இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பில் அவர்களுக்கு ஒரு சாதகமான நிலையைத் தோற்றுவித்துள்ளது.
ஈராக்கில் ரமாடியிலும் சிரியாவில் பல்மைராவிலும் செய்த தாக்குதல்கள் மூலம் ஐ எஸ் அமைப்பினர் போரியலில் தமது திட்டமிடுதலும் நிறைவேற்றுவதிலும் உள்ள திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் சவுதி அரேபியா, அல்ஜீரியா, லெபனான், யேமன் ஆகிய நாடுகளிலும் தமது அமைப்பை விரிவுபடுத்தியுள்ளனர். . ஏற்கனவே அவர்களது செயற்பாடுகள் எகிப்து சூடான், லிபியா, மாலி, நைஜீரியா, ஆப்கானிஸ்த்தான், பாக்கிஸ்த்தான், இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் உள்ளது. . லிபியா ஐ எஸ் அமைப்பின் முக்கிய பயிற்ச்சி நிலையமாக மாறியுள்ளது. சிரியாவில் எண்ணெய் வளம் மிக்க பிராந்தியங்களை நோக்கி அது தனது விரிவாக்கத்தைச் செய்து கொண்டிருக்கின்றது. தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் குடிசார் நிர்வாகத்தில் அவர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். நீர் விநியோகம், தெரு கட்டமைப்பு போன்றவற்றில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர்.
சதாம் ஹுசேய்னின் படையில் இருந்தவர்களும் முன்னாள் அல் கெய்தாப் போராளிகளும் ஐ. எஸ் அமைப்பில் இணைந்திருப்பதால் அவர்களால் சிறப்பாகப் போர் புரிய முடிகின்றது. அமெரிக்கப் படைத்தளபதி Gen Martin Dempsey அவர்களின் கருத்துப்படி ரமாடியாவில் இருந்து ஈராக்கிய அரச படைகள் போர் மூலம் வெளியேற்றப் படவில்லை அவர்கள் ஐ எஸ் படையினர் வருவதைக் கண்டு தாமாக விலகிக் கொண்டார்கள். சிரியாவில் பல்மைரா நகரைக் கைப்பற்ற சில நூறு ஐ எஸ் போராளிகள் மட்டுமே ஈடுபட்டனர். ஈராக்கில் டிக்ரிட் நகரை ஐ எஸ் அமைப்பிடமிருந்து அரச படைகள் மீட்ட பின்னர் ஐ எஸ் போராளிகளின் முடிவு ஆரம்பித்து விட்டது என்ற கருத்துத் தெரிவித்திருந்தார்கள். சென்ற ஆண்டு மொசுல் நகரைக் கைப்பற்றியதில் இருந்து ஐ எஸ் அமைப்பினரை ஈராக்கில் உள்ள சுனி முஸ்லிம்கள் பெருமளவில் ஆதரிக்கத் தொடங்கிவிட்டனர்.
ரமாடி நகரை ஐ எஸ் அமைப்பினர் கைப்பற்றியது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு விழுந்த பேரிடி என அமெரிக்க எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். அமெரிக்கப் படையினரால் பயிற்றுவிக்கப் பட்ட ஈராக்கிய அரச படையினர் மீண்டும் தமது தாங்கிகளையும், கவச ஊர்திகளையும், எறிகணைகளையும் கேந்திர நிலைகளையும் விட்டு தப்பி ஓடி உள்ளனர். 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் ஐ எஸ் அமைப்பினர் அமெரிக்காவால் பயிற்று விக்கப்பட்ட ஈராக்கியப் படையினரிடமிருந்து பெரும் நிலப்பரப்பைக் கைப்பற்றினர். அப்போது அவர்கள் தம்மிலும் பார்க்க பல மடங்கு எண்ணிக்கையைக் கொண்ட ஈராக்கிய அரச படையினரைச் சின்னா பின்னப் படுத்தினர்.
2014-ம் ஆண்டு ஜூன் மாதம் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பெரும் நிலப்பரப்புகளைக் கைப்பற்றிக் கொண்டிருக்கையில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக தனி நாடு கோரிப் போராடும் குர்திஷ் இனத்தின் பெஸ்மேர்கா போராளி அமைப்பு எண்ணெய் வளமிக்க கேர்குக் நகரத்தை ஒரு துப்பாக்கிக் குண்டு கூட வெடிக்காமல் கைப்பற்றிக் கொண்டது. அப்போது குர்திஷ் மக்களின் தலைவர் மஸ்ஸோட் பர்ஜானி குர்திஷ் மக்களுக்கு என்று ஒரு அரசு உருவாகிக் கொண்டிருக்கின்றது என்றார். அதன் பின்பு குர்திஷ் மக்களின் பெஸ்மேர்கா அமைப்பின் போராளிகள் மிகவும் தீரமாகப் போராடி ஐ எஸ் அமைப்பினரிடமிருந்து தமது பிரதேசங்களைப் பாதுகாத்து வருகின்றனர்.
ஈரானும் ஈராகிய அரச படையினருக்கு உதவி செய்து வருகின்றது. ஈராக்கில் இப்போது ஆட்சியில் இருப்பது சியா முஸ்லிகளாகும். அவர்களை எதிர்க்கும் ஐ எஸ் அமைப்பு சுனி முஸ்லிம்களைக் கொண்டது. இதனால் சியா முஸ்லிம் நாடான ஈரான் ஈராக்கிய அரச படைகளுக்கு உதவி செய்து வருகின்றது.
ராமாடி நகர் சுனி முஸ்லிம்களின் புரதான நகராகும்.
ஐ எஸ் அமைப்பினரின் கட்டுபாட்டில் உள்ள எரி பொருள் வளமிக்க மொசுல் நகரைக் கைப்பற்ற ஈராக்கியப் படையினர் கடந்த ஓர் ஆண்டாக திட்டமிட்டுக் கொண்டிருக்கையில் ஐ எஸ் அமைப்பினர் ரமாடி நகரைக் கைப்பற்றியுள்ளனர்.
ஈராகில், சுனி, சியா, குர்திஷ் ஆகிய இனத்தவர்கள் வாழ்கின்றனர். மூன்றில் இரண்டு பங்கு சியா முசுலிம்களைக் கொண்ட ஈராக்கின் கிழக்குப் பிராந்தியத்தில் சுனி முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். சதாம் ஹுசேய்ன் சிறுபான்மையினரான சுனி முசுலிம் இனத்தைச் சேர்ந்தவர். ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாட்டுப் படைகள் அங்கிருந்து விலகும் போது ஈராக்கில் ஒரு "மக்களாட்சியை" உருவாக்கினர். ஈராக்கில் 2006-ம் ஆண்டில் இருந்து நௌரி அல் மலிக்கி தலைமை அமைச்சராக இருந்தார். ஊழல் மிகுந்த இவரது ஆட்சியில் சுனி முசுலிம்கள் புறக்கணிக்கப்பட்டும் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டும் வருகின்றனர். இதனால் சுனி முசுலிம்களிடையே தீவிரவாதம் தலை தூக்கியது. ஐ.எஸ்.ஐ.எஸ் என்னும் அமைப்பு உருவானது.பின்னர் அமெரிக்காவினதும் ஈரானினதும் ஆதரவுடன் ஹைத அல் அபாடி 2014இல் ஈரானின் தலைமை அமைச்சர் ஆனார். இவருக்கு ஈராக்கில் வாழும் சுனி, சியா மற்றும் குர்திஷ் மக்களின் ஆதரவு இருந்தது. இதைத் தொடர்ந்து ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராகப் போராட குர்திஷ் மக்களுக்கு ஐக்கிய அமெரிக்கா நேரடியாகப் படைக்கலனகளை வழங்கியது. அத்துடன் ஈராக்கிய அரச படையினருக்குப் பயிற்ச்சி வழங்க அமெரிக்கப் படைத்துறை நிபுணர்கள் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டனர். யஷீதியர்களுக்கு எதிராக ஐ எஸ் அமைப்பினர் அட்டூழியங்கள் செய்யத் தொடங்கியதில் இருந்து அமெரிக்கா ஐ எஸ் அமைப்பிற்கு எதிராக விமானத் தாக்குதல்களை ஆரம்பித்தது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அபூபக்கலர் அல் பக்தாடி தலைமையில் இயங்கும் ஒரு சுனி முசுலிம் அமைப்பாகும். Islamic State of Iraq and Syria என்பதன் சுருக்கமே ஐ.எஸ்.ஐ.எஸ் ஆகும். இது அல் கெய்தாவின் கிளை அமைப்பு, இணை அமைப்பு எனப் பல மேற்கத்தைய ஊடகங்கள் பரப்புரை செய்தாலும் இதற்கும் தமக்கும் எந்தத் தொடர்பு இல்லை என அல் கெய்தா மறுத்துள்ளது. ஐ எஸ் ஐ எஸ் அமைப்பு இஸ்லாமிய அரசு ஒன்றைப் பிரகடனம் செய்ததில் இருந்து அதன் பெயர் ஐ எஸ் எனப் பரவலாக அழைக்கப்படுகின்றது.
சிரியாவிலும் ஈராக்கிலும் இருக்கு சியா முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியா இருக்கின்றது. இரு நாட்டு ஆட்சியாளர்களுக்கும் எதிராக ஐ எஸ் அமைப்பினரின் நடவடிக்கைகளுக்கு ஆரம்பத்தில் ஐ எஸ் அமைப்பினருக்கு சவுதியில் இருந்து பணம் நிறையக் கிடத்தது. ஈராக்கில் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக ஈரான் தாக்குதல் நடாத்துகின்றது. சவுதியில் உள்ள பள்ளிவாசலில் மே மாதம் 22-ம் திகதி சியா முஸ்லிம்கள் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமது மகான் இமாம் ஹுசேய்னின் பிறந்தநாளிற்கான தொழுகை செய்து கொண்டிருக்கும்போது ஒரு தற்கொடைத்தாக்குதல் நடாத்தப் பட்டது. இதற்கு ஐ எஸ் அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர். சவுதியில் நடாந்த தாக்குதலுக்கு ஐ எஸ் அமைப்பினர் உரிமை கோரியுள்ளது இதுவே முதற்தடவையாகும். வீரச்சாவு வேண்டிய தமது போராளி ஒருவர் இடுப்புப் பட்டியில் இணைக்கப்பட்ட குண்டை வெடிக்கச் செய்து மாவீரராகியுள்ளார் என்கின்றது ஐ எஸ் அமைப்பு. 12 விழுக்காடு சியா முஸ்லிம்களைக் கொண்ட சவுதி அரேபியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் வாழும் சியா முஸ்லிம்கள் தமக்கு அதிக உரிமைகள் வேண்டிப் போராடி வருகின்றார்கள். 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் சியா முஸ்லிகளின் பேரணி ஒன்றில் கண்மூடித்தனமாக இனம் தெரியாத நபர்கள் துப்பாக்கிகளால் சுட்டனர். அதற்கு யாரும் உரிமை கோரவில்லை.
ஈராக்கிலும் சிரியாவிலும் இரு நகரங்களைக் கைப்பற்றியததைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்காவின் மேற்காசியா தொடர்பான கொள்கை கண்டனத்துக்கு உள்ளாவதுடன் ஆய்வுக்குட்படுத்தப் படுகின்றது
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment