இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியப் படைகளுக்கு எதிரான வெற்றியின் 70வது ஆண்டு நிறைவு நாளை என்றுமே இல்லாத பெரும் படை அணிவகுப்புடன் இரசியா நினைவு கூர்ந்துள்ளது. மே மாதம் 9-ம் திகதி நடந்த அணிவகுப்பில் 16,000படையினரும், 200 தரை ஊர்திகளும், எவுகணை எதிர்ப்பு முறைமைகளும், கண்டம் விட்டுக் கண்டம்பாயும் ஏவுகணைகளும், 150 வானூர்திகளும் பங்கு பற்றின. உக்ரேன் விவகாரத்தைத் தொடர்ந்து மேற்கு நாடுகளுடன் பெருமளவு முரண்பட்டுக் கொண்டிருக்கும் இரசியாவின் இந்த அணிவகுப்பு மேற்கு நாடுகளுக்கு சவால் விட்டதுடன் இரசியர்களுக்கு நம்பிக்கையும் தேசப்பற்றையும் ஊட்ட முயன்றது.
புறக்கணித்த மேற்கும் பங்குபற்றிய கிழக்கும்
இரசியாவின் இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 70வது ஆண்டு நினைவு நாளை மேற்கு நாடுகளின் ஆட்சித் தலைவர்கள் உக்ரேன் விவகாரத்தில் இரசியாவின் நிலைப்பாட்டிற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் முககாமப் புறக்கணித்திருந்தார்கள். சீன அதிபர் ஷி ஜின்பிங், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜி, வெனிசுவேலாவின் அதிபர் நிக்கொலஸ் மதுரோ ஆகியோர் அங்கு பங்குபற்றியவர்களில் முக்கியமானவர்கள். வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் பங்குபற்றுவதாக இருந்தது ஆனால் இறுதி நேரத்தில் அவர் மஸ்கோவின் செஞ் சதுக்கத்திற்குப் போக முடியாமல் போய்விட்டது.
அசைய மறுக்கும் புட்டீன்
உக்ரேன் விவகாரத்தின் பின்னர் உருவான நேட்டோவின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் இருக்க 2015-ம் ஆண்டின் ஆரம்பத்தில் இரசியா தனது படைவலுவைக் கூட்டும் திட்டத்தை அதிரடியாக அறிவித்தது. 2020-ம் ஆண்டு இரசியா தனது அணுக்குண்டு இருப்பைப் பெருமளவில் அதிகரிக்கவுள்ளது என்றார் இரசியாவின் முப்படைத் தளபதி வலெரி ஜெரசிமோவ். அத்துடன் இந்த ஆண்டு இரசியா ஐம்பது கண்டம் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அணுக்குண்டு கொண்ட ஏவுகணைகளைத் தனது படைக்கு இரசியா இணைக்கவிருக்கின்றது. அமெரிக்காவின் படைவலு மேலாண்மை இரசியாமீது ஆதிக்கம் செலுத்த முடியாதவகையில் நாம் எமது படைவலுவை அதிகரிப்போம் எனச் சூளுரைத்திருந்தார் இரசியாவின் முப்படைத் தளபதி வலெரி ஜெரசிமோவ். இருபது ரில்லியன் ரூபிள் அதாவது 287 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான படைத்துறை புதுப்பிக்கும் ஐந்தாண்டுத் திட்டத்தை இரசியா அறிவித்தது. அத்துடன் அடுத்த பத்து ஆண்டுகளில் இரசியாவின் படைத்துறையில் முழுமையாகப் புதுப்பிக்கப்படும் என்றும் இரசியா அறிவித்தது. இத்திட்டங்களை இரசியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷேர்கி ஷொய்குவும் உறுதி செய்துள்ளார். இரசியாவிடம் தற்போது 8500 அணுக்குண்டுகள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது அமெரிக்காவிடம் இருக்கும் குண்டுகளின் எண்ணிக்கையிலும் பார்க்க ஆயிரம் அதிகமானதுமாகும். ஏற்கனவே இரசியாவிடம் 3082 போர் விமானங்கள், 15,550 போர்த் தாங்கிகள். ஒரு விமானம் தாங்கிக் கப்பல், 352 போர்க்கப்பல்கள் இருக்கின்றன. 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் திகதி ஐரோப்பாவிற்கான பாதுகாப்பிற்கும் ஒத்துழைப்புக்குமான நிறுவனத்தில் உரையாற்றிய இரசியப் பிரதிநிதி உக்ரேனிற்கு மேற்கு நாடுகள் படைத்துறை ரீதியில் ஆதரவு வழங்கினால் அது பெரும் அழிவில் முடியும் என எச்சரித்திருந்தார்.
இரசியாவின் பொருளாதாரம்
சரிந்த எரிபொருள் விலையும் பொருளாதாரத் தடைகளும் இரசியப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தின. 2015 ஏப்ரல் மாதம் இரசியாவில் ஊழியர்களுக்கான ஊதியக் கொடுப்பனவு நிலுவை 2.9பில்லியன் ரூபிள் (அதாவது 56பில்லியன் டொலர்கள்) ஆக இருந்தது. இரசியாவின் பல பாகங்களில் இதனால் வேலை நிறுத்தங்களும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. ஐக்கிய அமெரிக்கா, இரசியா, சீனா ஆகிய மூன்றும் உலகின் முன்னணிப் படைக்கலன் ஏற்றுமதி நாடுகளாக இருக்கின்ற போதும் இரசியா படைக்கலன் ஏற்றுமதித் திறனை இழந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. படைக்கல ஏற்றுமதியில் சீனா, ஜேர்மனி, உக்ரேன் ஆகிய நாடுகளிடமிருந்து இரசியா கடும் போட்டியை எதிர் நோக்குகின்றது. இரசியாமீது மேற்கு நாடுகள் கொண்டு வந்த பொருளாதாரத் தடையால் இரசியாவின் படைக்கல ஏற்றுமதி ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தது. இரசியாவின் பொருளாதாரம் படைக்கல ஏற்றுமதியிலும் தங்கியிருக்கின்றது. கடந்த 11 ஆண்டுகளில் இரசியாவின் படைக்கல ஏற்றுமதி மூன்று மடங்காக அதிகரித்திருந்தது. 2014-ம் ஆண்டிற்கான இரசியப் படைக்கல ஏற்றுமதி 15.5பில்லியன் டொலர்களாக இருந்தது. தற்போது இரசியாவிடம் 48 பில்லியன் படைக்கல ஏற்றுமதிக்கான உத்தரவு உள்ளது. சரிந்த எரிபொருள் விலை தற்போது ஓரளவிற்கு உறுதியான நிலையை அடைந்தமை இரசியாவிற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. 2014-ம் ஆண்டு 5 விழுக்காடு சுருங்கிய இரசியப் பொருளாதாரம் இந்த ஆண்டு 3 விழுக்காடு மட்டும் சுருங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விலைவாசி 17 விழுக்காடாக இருக்கின்ற போதும் அதன் அதிகரிப்பு விகிதம் குறைவடைகின்றது. இரசிய ரூபிளின் பெறுமதி டொலருக்கும் யூரோவிற்கும் எதிராக அதிகரிக்கின்றது. இரசியாவின் மைய வங்கி சிறப்பாகச் செயற்பட்டு பொருளாதாரத்தை உறுதிப் படுத்துகின்றது என்பதை மேற்கத்திய பொருளியல் வல்லுனர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
சீனாவை நெருங்கும் இரசியா
இரசியாவின் இரண்டாம் உலகப் போர் வெற்றியின் 70வது ஆண்டு நினைவு நாளில் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனுக்கு அருகில் சீன அதிபன் சி ஜின்பிங் அமர்ந்திருந்தமை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வளர்ந்து விட்டது என்பதைக் காட்டுகின்றது. இந்தப் பயணத்தின் போது சீன அதிபர் இரசியாவுடன் 32 இருதரப்பு உடன்படிக்கைகளிள் கையொப்பமிட்டார். ஒரு நாட்டின் இணையவெளிமீது மற்ற நாடு ஊடுருவல் செய்வதில்லை என்பதும் இந்த உடன்படிக்கைகளில் ஒன்றாகும். அத்துடன் இரு நாடுகளும் இணைந்து மத்திய தரைக்கடலில் ஒரு போர் ஒத்திகையையும் நடாத்தின. நாம் ஒன்றுபட்டால் வலுவடைவோம் பிளவு பட்டால் வலுவிழப்போம் என்றார் சீன அதிபர். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை நெருக்கமடையச் செய்வது அமெரிக்காவின் உலக ஆதிக்கம் என்றாலும். சீனாவிற்கு இரசியாவைத் தேவைப்படுவதிலும் பார்க்க அதிக அளவு இரசியாவிற்கு சீனாவைத் தேவைப்படுகின்றது. சீன மக்களிடை எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் படி சீன மக்கள் பொதுவாக இரசியாவையும் அதன் அதிபரையும் பார்த்து வியக்கிறார்கள். புட்டீன் இரசியாவிற்காகப் பிறந்தவர் என்ற தலைப்பிலான புட்டீனின் வாழ்கை வரலாற்று நூல் சீனாவில் அதிகம் விற்பனையாகின்றது.ஆனால் அவர்கள் அமெரிக்க வாழ்கை முறையை விரும்புகிறார்கள். சீனாவில் உள்ள வர்த்கர்களும் தொழில்கள் புரிவோரும் அமெரிக்காவுடன் வியாபாரம் செய்வதை அதிகம் விரும்புகின்றார்கள். சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான உறவு அன்று பொதுவுடமைச் சித்தாந்த ரீதியாக அமைந்திருந்தது. சீனாவிற்கு தனது பொதுவுடமை ஆட்சியை நிலை நிறுத்த சோவியத் ஒன்றிய ஆதரவு அப்போது தேவைப்பட்டது. சோவியத் ஒன்றியத்திற்கு சீனாவின் உறவு பெரும் புவிசார் அரசியல் வலுவைக் கொடுத்தது. தற்போது அந்த உறவு பொது நலன் சார்ந்ததல்ல. பொது எதிரிக்கானது. இரசியா கிறிமியாவை விழுங்கியது பற்றியோ உக்ரேனைப் பிய்த்துப் பிடுங்குவது பற்றியோ சீனா கவலைப்படப் போவதில்லை. சீனாவின் கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களில் ஆதிக்கம் செலுத்துவது இரசியாவைப் பாதிக்கப் போவதுமில்லை. சீனா தனது நாணயத்தை உலக நாணயமாக்கும் திட்டம் இரசியாவிற்கு பெரும் பாதகமாக அமையப் போவதுமில்லை. சீனாவிற்குத் தேவையான எரிபொருள் இரசியாவிடமிருக்கின்றது.
ஜோன் ஜெரியின் இரசியப் பயணம்
ஐக்கிய அமெரிக்காவின் வெளியுறவுத் துறைக்குப் பொறுப்பான அரசுச் செயலர் ஜோன் கெரி இரசியாவின் இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியப் படைகளுக்கு எதிரான வெற்றியின் 70வது ஆண்டு நிறைவு நாள் அணிவகுப்பு நடந்து மூன்றாம் நாள் அதாவது மே மாதம் 9-ம் திகதி இரசியாவிற்கு ஒரு பயணத்தை மேற்கொண்டார். இதற்கு முதல் நாள் உலக அரங்கில் இரசியாவைத் தனிமைப்படுத்த அமெரிக்கா முயல்வதாக இரசிய வெளியுறவுத்துறை ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. கெரியின் பயணம் உக்ரேனில் போர் நிறுத்தம், சிரியாவில் அப்பாவி மக்கள் மீது போடுவதாக நம்பப்படும் குளோரின் குண்டுகள், ஈரானுடனான யூரேனியம் பதப்படுத்தல் தொடர்பான பேச்சு வார்த்தை ஆகியவற்றை மையப்படுத்தி அமைந்தது. ஜோன் கெரி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனைச் சந்திக்க முன்னர் இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கி லவ்ரோவுடன் நான்கு மணித்தியாலங்கள் பேச்சுவார்த்தை நடாத்தினார். இரசியா தனது பத்துப் படையணிகளை உக்ரேன் எல்லைக்கு நகர்த்தி வைத்திருக்கின்றது. அத்துடன் SA-22 மற்றும் SA-15 ஆகிய விமான எதிர்ப்பு முறைமைகளை உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தினுள் நகர்த்தியுள்ளது. தொடர்ந்தும் உக்ரேன் கிளர்சிக்காரர்களுக்கு பயிற்ச்சி கொடுத்து வருகின்றது. இரசியாவின் இந்த நகர்வுகள் உக்ரேனின் பிராந்தியங்களை மேலும் அபகரித்துக் கொள்ளவா அல்லது உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் வாழும் இரசியர்களுக்கு மேலும் அதிகாரங்களை வழங்கும் அழுத்தத்தை உக்ரேனிய அரசுக்குக் கொடுக்கவா என்பது பற்றி அமெரிக்கா குழம்பிப் போயுள்ளது. ஆனால் இரசியாவின் இந்த நடவடிக்கைகள் போர் நிறுத்த உடன்பாட்டை மீறுவதாகும் என்கின்றது அமெரிக்கா. இருதரப்புப் பேச்சு வார்த்தைகளின் போது காத்திரமான எந்த ஒரு உடன்பாடும் ஏற்படவில்லை. உக்ரேன் விவகாரத்தில் இருதரப்பினரும் தொடர்ந்து முரண்படுவதாக ஒத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிப்பதாக ஒத்துக் கொள்ளப்பட்டது. ஈரானுக்கு இரசியா ஏவுகணை எதிர்ப்பு முறைமையை விற்பது தொடர்பாக ஜோன் கெரி அமெரிக்காவின் ஆட்சேபனையைத் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கெரி அதுபற்றி ஏதும் பேசவில்லை. ஈரான் அணுக்குண்டு உற்பத்தி செய்வதை இரசியா விரும்பாத போதிலும் அது அமெரிக்காவிற்கு ஒரு தலையிடியாகத் தொடர்வதை இரசியா விரும்புகின்றது. ஈரான் அணுக்குண்டு உற்பத்தி செய்யக் கூடாது என சவுதி அரேபியா உட்பட்ட பல அமெரிகாவின் அரபு நட்பு நாடுகள் என அமெரிக்காவை வலியுறுத்துவதுடன் இஸ்ரேலும் அமெரிக்கா ஈரானை அணுக்குண்டு உற்பத்தி செய்யாமல் தடுக்க வேண்டும் என அடம்பிடிக்கின்றது. ஜோன் கெரியின் இரசியப் பயணம் இரசியா மீண்டும் உலக அரங்கில் தனது ஆதிக்கத்தை சோவியத் ஒன்றியக் காலத்திற்கு இணையாக உயர்த்தி வருகின்றது என்பதைக் காட்டுகின்றது.
இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவும் இரசியா தலைமையிலான சோவியத் ஒன்றியமும் ஹிட்லரின் ஜேர்மனிக்கு எதிராக ஒரு தரப்பில் நின்று போர் செய்தன. அதில் பெற்ற வெற்றியின் பின்னர் இரு நாடுகளும் இரு துருவங்களாகின. இரு நாடுகளும் பெரும் படைக்கல உற்பத்திப் போட்டியில் பல பத்தாண்டுகளாக ஈடுபட்டிருந்தன. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இரசியாவை நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பில் இணைக்கும் முயற்ச்சி கூட நடந்தது. ஆனால் புட்டீனின் கொள்கை வேறு பட்டது. அவர் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு முன்னர் இரசியா உலக அரங்கில் இருந்த நிலைக்கு மீண்டும் இட்டுச் செல்லும் முயற்ச்சியை உலகிற்கு உரத்த குரலில் சொல்ல இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியப் படைகளுக்கு எதிரான வெற்றியின் 70வது ஆண்டு நிறைவு நாளைப் பயன் படுத்தியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment