Saturday 9 May 2015

இரு விற்பன்னர்களின் மோதலால் முடிவு செய்யப்பட்ட பிரித்தானியத் தேர்தல்

தேர்தலைமுடிவு செய்த படம்

பொதுவாக தேர்தல் என்றால் கட்சிகளின் கொள்கைகளின் மோதல், தலைவர்களின் திறமைகளின் மோதல் தேர்தல் கூட்டங்களில் செய்யும் பேச்சுக்களின் மோதல் என்பதை நாம் அறிவோம். ஆனால் பிரித்தானியாவில் நடந்து முடிந்த தேர்தல் பிரித்தானியா மக்களுடன் சம்பந்தமில்லாத இரு விற்பன்னர்களின் மோதலாக அமைந்தது. ஒருவர் பராக் ஒபாமாவை இரு தடவை வெற்றி பெறச் செய்த டேவிட் அக்ஸெல்றொட் மற்றவர் ஒஸ்ரேலியாவில் ஜொன் ஹோவார்டை நான்கு தடவைகள் வெற்றி பெறச் செய்த லிண்டன் குறொஸ்பி. இந்த லிண்டன் குறொஸ்பியே கொன்சர்வேர்டிவ் கட்சியின் பொறிஸ் ஜோன்ஸனை இரண்டு தடவைகள் இலண்டன் மாநகர சபைத் தேர்தலில் வெற்றி பெற வைத்தவர். இவர்கள் தேர்தல் பரப்புரைகளை நடாத்துவது தொடர்பாக தந்திரோபாயங்களை வகுத்துக் கொடுப்பார்கள். பரப்புரை உத்திகளை வகுப்பார்கள். இவர்கல்இருவருக்கும் ஆளுக்கு ஐந்து இலட்சம் பவுண் கட்டணமாகச் செலுத்தப்பட்டது. கொன்சர்வேர்டிவ் கட்சிக்கு ஆலொசனை வழங்கிய லிண்டன் குறொஸ்பி தனிமனித நிந்தனைகள் செய்யத் தூண்டுவதில் பெயர் போனவர். ஆனால் கொன்சர்வேர்டிவ் கட்சியினர் டேவிட் கமரூன் தனிமனிதத் தாக்குதல் செய்யக் கூடியவர் அல்லர் எனக் கருதினர். அவர்கள் “David is too posh to push” என்றனர்

கொன்சர்வேர்டிக் கட்சிக்கு லிண்டன் குறொஸ்பி வகுத்த உபாயங்கள்:
1. தொழிற்கட்சித் தலைவர் எட்வர்ட் மில்லிபாண்ட் கொன்சர்வேர்டிவ் கட்சியின் தலைவரும் தலைமை அமைச்சருமான டேவிட் கமரூனுக்குச் சரியானதும் நம்பகத்தைமை வாய்ந்ததுமான மாற்றீடு அல்லர் எனப் பரப்புரை செய்வது. இதை ஒட்டி எட்வர்ட் மில்லிபாண்டிடம் நாட்டை ஒப்படைப்பது ஜிம்மி சவைலிடம் சிறுவர் பராமரிப்பு வேலையை ஒப்படைப்பது போன்ற கட்டுரைகள் ஊடகங்களில் வெளிவிடப்பட்டன. காலம் சென்ற ஜிம்மி சவைல் பிபிசியில் பணிபுரியும் போது பல சிறுவர்களை பாலியல் முறைகேட்டுக்கு உள்ளாக்கியவர்.
2 தொழிற்கட்சியுடன் தோழமையாக நடந்து கொண்ட தாராண்மைவாதக் கட்சிக்கு எதிராக தீவிர சந்தைப்படுத்தல் நுட்பங்களைப்பயன்படுத்தி செல்வாக்கிழக்கச் செய்தல்.
3. டேவிட்கமரூன் ஆட்சியில் இருபது இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் கொடுத்தமை, அரச பாதீட்டில் துண்டுவிழும் தொகைகளைக் குறைத்தமை, வருமானவரிகளைக் குறைத்தமை தொடர்பாக மிகைப்படுத்தப்பட்ட பரப்புரைகளைச் செய்தல்.
4. டேவிட் மில்லிபாண்டின் பலவீனங்கள் மீது தாக்குதல் நடாத்துதல். இதற்காக அவர் அவசர அவசரமாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட படத்தை பத்திரிகைகளில் பிரசுரித்து வருங்கால பிரித்தானியத் தலைமை அமைச்சர் இப்படியா அசிங்கமாகச் சாப்பிடுவது என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.

கொன்சர்வேர்டிவ் கட்சியைச் சேர்ந்தவர்களே இந்தப் பரப்புரைகள் சில்லறைத்தனமானது என இரகசியமாக ஒப்புக் கொண்டார்கள்.

தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புக்கள் கொன்சர்வேர்டிவ் கட்சியினருக்குத் திருப்தி அளிக்காத நிலையில் லிண்டன் குறொஸ்பி எல்லாம் எமக்குச் சாதகமாகவே நகர்ந்து கொண்டிருக்கின்றது என ஊக்கமளித்தார். பின்னர் கடைசித் துருப்பாக தொழிற் கட்சி ஸ்கொட்லாந்துத் தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்கும் அது ஆங்கிலேயர்களுக்கு பெரும் பாதகமாக அமையும் என்ற பரப்புரையைட் தீவிரமாகச் செய்யச் சொன்னார்.

ஆனால் பாவம் தொழிற்கட்சிக்கு ஆலோசனை வழங்க வந்த டேவிட் அக்ஸெல்றொட்டின் உபாயங்களை நிறைவேற்றப் போதிய பணம் தொழிற்கட்சியிடம் இல்லை. இவரை அழைப்பது என்றவுடன் பணத்தட்டுப்பாட்டில் இருக்கும் எமது கட்சிக்கு இந்த அளவு பணம் செலவழித்து ஒரு ஆலோசகரைப் பெற வேண்டுமா என்ற கேள்வி தொழிற்கட்சியில் உள்ள சிலரிடமிருந்து எழுந்தது. அத்துடன் எமது ஊர்ப் பிரச்சனைகளைப்பற்றி இந்த அமெரிக்கர் எப்படி அறிவார் அவர் எப்படி எமக்கு ஆலோசனை சொல்வார் என்ற கேள்விகள் தொழிற்கட்சியினரிடம் எழுந்தது.

டேவிட் அக்ஸெல்றொட்டின் கருத்துப் படி பிரித்தானிய ஊடகங்கள் எல்லாம் மிகவும் கட்சி சார்பானவை. அமெரிக்க ஊடகமான ஃபொக்ஸ் நியூஸிலும் பார்க்க மோசமானவை பிரித்தானிய ஊடகங்கள்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...