Sunday, 14 September 2014

ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்தை மிரட்டும் பண முதலைகள்.

1298-ம் ஆண்டு ரொபேர்ட் புரூஸ் தலைமையில் ஸ்கொட்லாந்து மக்கள் ஆங்கிலேயரைத் தோற்கடித்து தமது சுதந்திரத்தைப் பெற்றனர். அதன் பின்னர் ஆங்கிலேயர் ஸ்கொட்லாந்தைக் கைப்பற்ற பல தடவை முயன்றனர். கிரிஸ்த்துவ மதப் பிரிவுகளும் மன்னர் குடும்பத்தினரின் குளறுபடிகளும் ஸ்கொட்லாந்தைச் சிதறடித்தது.

அரச குடும்பக் குளறுபடி
ஸ்கொட்லாந்தின் ஐந்தாம் ஜேம்ஸ் மன்னர் இறக்கும் போது அவரது ஒரே மகளான மேரி பிறந்து ஆறாம் நாள் அரசியாக்கப்பட்டார். ஆட்சிஆளுநர்களால் நடாத்தப்பட்டது. அப்போது ஆட்சி புரட்டஸ்த்தாந்திரனருக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் இழுபறிபட்டது. கத்தோலிக்கருக்கு ஆதரவாக பிரான்ஸும் புரட்டஸ்தாந்தினருக்கு ஆதரவாக இங்கிலாந்தும் செயற்பட்டன. இரு நாடுகளும் தம்முடன் ஸ்கொட்லாந்தை இணைக்க முயன்றன. பிரான்ஸின் இரண்டாம் ஹென்றி மன்னர் ஸ்கொட்லாந்தின் குழந்தை அரசிக்குத் தன் மகனைத் திருமணம் செய்து வைத்து ஸ்கொட்லாந்தைப் பிரான்ஸுடன் இணைத்தார். வளர்ந்த அரசி மேரி  Henry Stuart Lord Darnley என்னும் கத்தோலிக்க ஆங்கிலேயரை  இரண்டாம்தாரமாகவும் James Hepburn என்னும் Lord Bothwellஎன்னும் புரட்டஸ்த்தாந்து ஆங்கிலேயரை மூன்றாம் தாரமாகவும் மணந்தார். மேரியின் மகன் ஸ்கொட்லாந்திற்கும் இங்கிலாந்திற்கும் மன்னரானார். ஒரு மன்னரின் கீழ் இரு அரசுகள் இயங்கி வந்தன. அரசி மேரிக்கு இறுதியில் கொலைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தவிச்ச முயல் அடித்த பிரித்தானியா
ஸ்கொட்லாந்து கத்தோலிக்கப் பிடிக்குள் அகப்பட்டு தனக்கு எதிரான நாடாக மாறக்கூடாது என இங்கிலாந்து கங்கணம் கட்டிக் கொண்டிருந்தது. 1707-ம் ஆண்டு ஸ்கொட்லாந்து அரசு ஒரு நிதி நெருக்கடியைச் சந்தித்தது. அமெரிக்கக் கண்டத்தின் பனாமா பிரதேசத்தில் ஸ்கொட்லாந்து செய்த குடியேற்றத் திட்டத்தால் இந்த நிதி நெருக்கடி உருவானது. இத்திட்டத்தில் ஸ்கொட்லாந்து தனது செல்வத்தில் பாதியை இழந்தது. அதேவேளை இங்கிலாந்து செல்வம் கொழிக்கும் நாடாக இருந்தது. இதை வைத்து இரு நாடுகளும் ஒன்றாக்க இரு தரப்பினரும் ஒத்துக் கொண்டதாகச் சொல்லப்படுகின்றது. இதன் பின்னர் ஸ்கொட்லாந்தின் பாராளமன்றத்திலும் இங்கிலாந்துப் பாராளமன்றத்திலும் இயற்றப்பட்ட சட்டங்கள் மூலம் இரு நாடுகளும் ஒன்றாக்கப்பட்டன. ஸ்கொட்லாந்தின் பாராளமன்றத்தில் மிகவும் சிரமப்பட்டே இரு நாடுகளையும் ஒன்றாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஸ்கொட்லாந்தின் பாராளமன்ற உறுப்பினர்கள் விலை போனதாகவும் கருத்து நிலவுகின்றது. இரு நாடுகளின் இணைப்பிற்குப் பேராதரவு இருந்திருக்கவில்லை. இணைப்புச் சட்டம் நிறைவேற்றிய பின்னர் ஸ்கொட்லாந்தின் பாராளமன்றம் செயற்படாமல் போனது.

ஒன்றானால் பெரிது பெரிதானால் வலிமை
ஸ்கொட்லாந்து மக்கள் தமது ஆட்சியுரிமையை வெஸ்ற்மின்ஸ்டர் பாராளமன்றத்திற்குத் தாரைவார்த்து 307 ஆண்டுகள் கடந்து விட்டன. தற்போது ஸ்கொட்லாந்தால் ஒரு தனி நாடாக இருந்து செயற்பட முடியும். ஆனால் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய தேசங்கள் ஒன்றிணைந்து ஐக்கிய இராச்சியமாக இருந்தால் அது இன்னும் சில ஆண்டுகளில் பிரான்ஸையும் ஜேர்மனியையும் மிஞ்சி ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப் பெரிய நாடாக உருவெடுக்க முடியும். ஐக்கிய இராச்சியத்தில் குடியேறிய குடியேறிக் கொண்டிருக்கும் திறமை மிக்க இளையோரால் பொருளாதார ரீதியில் அது வலுவடைந்து கொண்டிருக்கின்றது. மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஐக்கிய இராச்சியம் அதிக அளவு இளையோரைக் கொண்ட ஒரு நாடாக இருக்கின்றது. இப்படிப் பட்ட ஒரு நாட்டை பல பெரும் கூட்டாண்மைகள் (Corporates) விரும்புகின்றன. இந்தப் பெரிய நாட்டில் அவர்களால் பெரும் இலாபம் ஈட்ட முடியும் என நம்புகின்றனர். இதனால் அவர்கள் ஸ்கொட்லாந்து மக்கள் சுந்தந்திரம் பெறுவதை எதிர்க்கின்றனர்

சிறியது அழகானது
சுதந்திர ஸ்கொட்லாந்தால் தனது தனித்துவத்தையும் பேண முடியும். அதன் பொருளாதாரத்தையும் திறம்பட நிர்வகிக்க முடியும். ஸ்கொட்லாந்தைப் போன்ற ஒரு சிறிய தேசமான நியூசிலாந்து பிரித்தானியாவில் இருந்து பிரிந்து தனி நாடாகத் திறம்பட இயங்கிக் கொண்டிருக்கினது. மலேசியாவிடமிருந்து பிரிந்த சிங்கப்பூர் ஒரு குட்டி நாடாக மிகத் திறமையாக நிர்வகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

மிரட்டும் கூட்டாண்மை நாட்டாண்மைகள்
ஸ்கொட்லாந்து பிரியும் போது பிரித்தானியா முழுவதும் ஒரு தற்காலிகப் பொருளாதாரத் தளம்பல் ஏற்பட வாய்ப்புண்டு. இதை ஒட்டி பங்குச் சந்தைகளில் விலை வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு.  ஸ்கொட்லாந்தின் பிரிவினைக்கு ஆதரவுத் தளம் கூடுகின்றது என்ற கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்தவுடன். பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. பிரித்தானிய நாணயமான ஸ்ரேலிங்க் பவுண்டின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. இதை சாட்டாக வைத்துக் கொண்டு பெரு வர்த்தக நிறுவனங்களான கூட்டாண்மைகள் (Corporates) ஸ்கொட்லாந்து மக்களை மிரட்டட் தொடங்கி விட்டன. தற்போது ஸ்கொட்லாந்தில் இருந்து செயற்படும் கூட்டாண்மைகள் ஸ்கொட்லாந்து தனிநாடாகினால் தாம் ஸ்கொட்லாந்தில் இருந்து விலகி விடுவதாக மிரட்டுகின்றன. ஒரு கட்டத்தில் YouGov எடுத்த கருத்துக் கணிப்பில் பிரிவினைக்கு ஆதரவு எதிர்ப்பிலும் பார்க்கச் சிறிதளவு அதிகம் என்றவுடன் ஸ்கொட்லாந்தில் செயற்படும் கூட்டாண்மைகளின் பங்குச் சந்தைப் பெறுமதியில் 17 பில்லியன் பவுண்கள் வீழ்ச்சியடைந்தது. ஸ்கொட்லாந்து தவிர்ந்த மற்றத் தேசங்களான இங்கிலாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகியவற்றில் எடுத்த கருத்துக் கணிப்பில் 81 விழுக்காடு மக்கள் ஸ்கொட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் எனச் சொல்கின்றது. ஸ்கொட்லாந்தில் தலைமையகத்தைக் கொண்ட வங்கிகள் தாம் இங்கிலாந்து மைய வங்கிக்குக் கீழ் இருப்பதை விரும்புவதாகச் சொல்கின்றன. இறுதிக் கடன் வழங்கும் பாதுகாப்பு அதிலிருந்து தமக்கு அதிகமாகக் கிடைக்கும் என்கின்றன அவை.

போதுமடா சாமி
56 நாடுகள் இருந்த உலகில் இப்போது 193இற்கு மேற்பட்ட நாடுகள் இருக்கின்றன. இது கூட்டாண்மைகளுக்குப் (Corporates) பெரும் சிரமமாகும். வேறு வேறு நாணயங்கள் வேறு வேறு சட்டப் பிரச்சனைகளுக்கு அவை முகம் கொடுக்க வேண்டும். இதனால் கூட்டாண்மைகள் (Corporates) புதிய நாடுகள் உருவாகுவதை விரும்பவில்லை. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஸ்கொட்லாந்து பிரியக் கூடாது எனப் பகிரங்கமாக அறிவித்து விட்டார். நாடுகள் அதிகரிக்கும் போது அமெரிக்காவின் வெளியுறவுத் துறை, உளவுத் துறை, பாதுகாப்புத்துறை, நிதித்துறை ஆகியனவற்றின் பிரச்சனைகளும் பொறுப்புக்களும் அதிகரிக்கும். இதனால் அமெரிக்கா உட்படப் பல ஆதிக்க நாடுகள் புதிய நாடுகள் உருவாகுவதை விரும்புவதில்லை. பன்னாட்டு நாணய நிதியமும் பிரிவினைகளை விரும்புவதில்லை.

பரவும் பிரிவினை நோய்
ஸ்கொட்லாந்து பிரிந்தால் அந்தத் தனித்துவவாதம் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவ வாய்ப்புண்டு. முக்கியமாக ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் இதே போன்ற கருத்துக் கணிப்பு வலியுறுத்தப்படும். அயர்லாந்திலும் வேல்ஸிலும் சுதந்திர வேட்கை உருவெடுக்கும். இதனால் வெளிநாடுகளில் ஸ்கொட்லாந்து பிரிவினைக்கு ஆதரவில்லை. இந்திய வெளிநாட்டமைச்சர் சுஸ்மா சுவராஜ் அவர்கள் ஸ்கொட்லாந்தின் பிரிவினை பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் போது கடவுள் விட்ட வழி என்றார்.

நீண்டகால அடிப்படையில் எல்லாம் சரிவரும்

ஸ்கொட்லாந்தின் பிரிவினையால் ஸ்ரேலிங் பவுண் வீழ்ச்சி காண்பது ஒரு இடைக்கால நிகழ்வு மட்டுமே. 10 ஆண்டுகால அரச கடன் ஆவணமான Giltsஇன் பெறுமதியில்  ஸ்கொட்லாந்துப் பிரிவினை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஸ்கொட்லாந்து மக்கள் பிரிவினை தொடர்பாக அரைவாசி ஆதரவு இருக்கும் வேளையில் ஸ்கொட்லாந்தின் வர்த்தகர்கள் நடுவே 10 விழுக்காட்டினர் மட்டுமே பிரிவினையை ஆதரிக்கின்றனர். ஸ்கொட்லாந்திற்கு அதிகாரப் பரவலாக்கம் செய்து அங்கு ஒரு மாநில அரசு உருவாக்கப்பட்ட போது அது பொருளாதாரச் சீரழிவை உருவாக்கும் என கடும் எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் அண்மைக்காலங்களாக ஸ்கொட்லாந்தின் பொருளாதாரம் ஐக்கிய இராச்சியப் பொருளாதாரத்தைப் போலவே செயற்படுகின்றது:

பிரிவினையும் கட்சி அரசியலும்
ஸ்கொட்லாந்து தொழிற்கட்சியின் கோட்டையாக இருக்கின்றது. ஸ்கொட்லாந்தின் தேசியவாதம் அண்மைக்காலங்களாக வளர்ச்சியடைந்த போது அங்கு ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி செல்வாக்குச் செலுத்துகின்றது. இருந்தும் இன்னும் தொழிற்கட்சிக்கு அங்கு ஆதரவு இருக்கின்றது. பிரித்தானியத் தேர்தல் முடிவுகளின் சரித்திரத்தை வைத்துப் பார்க்கும் போது ஸ்கொட்லாந்து தனியாகப் பிரிந்தால் தொழிற்கட்சி ஒரு போதும் ஆட்சி அமைக்க முடியாது. இதனால் தொழிற்கட்சி பிரிவினையை விரும்பவில்லை. ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த தொழிற்கட்சித் தலைவர்களே பிரிவினைக்கு எதிராகக் கடும் பிரச்சாரம் செய்கின்றனர். தொழிற்கட்சியின் தொழிற்சங்கங்களிடையே பிரிவினைக்கு கணிசமான ஆதரவு உண்டு. பழமைவாதக் கட்சி பிரிவினையை விரும்பாத போதும் அது பிரிவினைக்கு எதிராகப் பெரும் பரப்புரைகளைச் செய்யவில்லை. அப்படிச் செய்தால் எதிர்மாறான விளைவுகள் ஏற்பட்டு பிரிவினைவாதம் வளரும் என்பதால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பழமைவாதக் கட்சி பிரச்சாரம் செய்கின்றது.

மறைக்கப்பட்ட உண்மைகள்
ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபதிகளின் ஆரம்பத்தில் முதன் முதலாக ஸ்கொட்லாந்தின்  30விழுக்காடு மக்களின் ஆதரவை ஸ்கொட்லாந்தின் தேசியவாதக் கட்சி பெற்றிருந்தது. அப்போதைய தொழிற்கட்சி அரசு  ஸ்கொட்லாந்து தனியாகப் பிரிக்கப்பட்டால் அதன் பொருளாதார வளம் எப்படி இருக்கும் என்பது பற்றி ஆராய பேராசிரியர் கவின் மக் குரோன் தலைமையில் ஒரு குழு அமைத்தது. அந்த பேராசிரியர் மக் குரோனின் அறிக்கை நீண்ட நாட்களாக மறைத்து வைக்கப்பட்டது. அந்த அறிக்கை  2000-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தகவலறியும் சட்டத்தின் படி 2005-ம் வெளிவிடப்பட்டது. அந்த அறிக்கையின்படி ஸ்கொட்லாந்து தனிநாடாகப் பிரிந்தால் அதன் பொருளாதாரப் பிரச்சனைகள் பல தீர்க்கப்படுவதுடன் ஸ்கொட்லாந்து மக்களின் தனி நபர் வருமானம் 30 விழுக்காட்டால் அதிகரிக்கும். சுதந்திர ஸ்கொட்லாந்தின் வரவுகள் செலவிலும் அதிகமாக இருப்பதுடன் அதன் ஏற்றுமதியும் இறக்குமதியிலும் பார்க்க அதிகமாக இருக்கும்.

ஹரி பொட்டர் கதாசிரியை
ஸ்கொட்லாந்தில் வசிக்கும் ஆங்கிலேயரான ஹர் பொட்டர் கதாசிரியை றௌலிங் பிரிவினையைக் கடுமையாக எதிர்ப்பதுடன் பிரிவினைக்கு எதிரான பரப்புரைக்கு ஒரு மில்லியன் பவுண்களை வழங்கியுள்ளார். முன்னாள் மான்செஸ்டர் யுனைட்டெட் முகாமையாளரும் பயிற்ச்சியாலருமான அலெக்ஸ் ஃபெர்க்குசன் ஒரு ஸ்கொட்லாந்து தேசத்தவர். அவர் பிரிவினையை எதிர்க்கின்றார். ஜேம்ஸ் பொண்ட் நடிகர் சோன் கொன்ரி அமெரிக்காவில் வசிக்கும் ஸ்கொட்லாந்து தேசத்தவர். அவர் ஸ்கொட்லாந்துப் பிரிவினையை ஆதரிக்கின்றார்.

பிபிசி செய்தி நிறுவனம் பிரிவினைக்கு ஆதரவாக நின்று பாராபட்சம காட்டுவதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது. பிரிவினைக்கு ஆதவராக முன்னின்று செயற்படும் ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் அலெக்ஸ் சமண்ட் தாம் பலவழிகளி்ல் பயம் காட்டப்படுவதாகவும் மிரட்டப்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றார்

Friday, 12 September 2014

அமெரிக்காவிற்கு சவால் விடும் ஈரானின் காலிஜ் ஃபார்ஸ் (Khalij Fars) ஏவுகணைகள்

சீனாவும் ஈரானும் அமெரிக்கக் கடற்படையால் அதிகம் அச்சுறுத்தலுக்கு உள்ளான இரு நாடுகளாகும். இரு நாடுகளும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றன. அமெரிக்கக் கடலாதிக்கத்திற்கு ஈரானின் பதிலடியாக அமைந்தவை காலிஜ் ஃபார்ஸ் (Khalij Fars) எனப்படும் கப்பல்-எதிர்  எறியியல் ஏவுகணைகளாகும் (anti-ship ballistic missile) இவை சுருக்கமாக AShBM என அழைக்கப்படுகின்றன.

உலக எண்ணெய் விநியோகத்தின் முதல்தரத் திருகுப் புள்ளியாக (chokepoint) ஈரானை ஒட்டிய ஹோமஸ் நீரிணை அமைந்துள்ளது. உலக எரிபொருள் வர்த்தகத்தின் இருபது விழுக்காடு ஹோமஸ் நீரிணையூடாக நடைபெறுகின்றது. இந்த நீரிணையை தனது முழுக் கட்டுப் பாட்டில் வைத்திருக்க ஈரான் நீண்ட காலமாக முயன்று வருகின்றது. 35மைல் அகலமான ஹோமஸ் நீரிணை உலகின் கப்பல் போக்குவரத்திற்கு மிகச்சிரம்மான கடல் பகுதிகளில் ஒன்றாகும். 2007-ம் ஆண்டு ஜனாரி 1ஒ-ம் திகதி அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பலான USS Newport ஒரு ஜப்பானிய நீர் மூழ்கிக் கப்பலுடன் மோதிக் கொண்டது. 2009-ம் ஆண்டு மார்ச் 20-ம் திகதி அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றும்(USS New Orleans) நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றும்(USS Hartford) மோதிக் கொண்டன. 1988 ஏப்ரில் மாதம் அமெரிக்கப் போர்க்கப்பலான USS Samuel Roberts ஒரு கடற்கண்ணியில் மோதுண்டதைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் ஒரு நாள் கடற்போர் நடந்தது. ஈரான் ஹோமஸ் நீரிணையை மூடிவிடப்போவதாகப் பல தடவைகள் மிரட்டியதுண்டு. அதற்கு அதனை மூடும் படை வலு இருந்ததில்லை.ஆனால் ஈரான் தன் படைவலுவை அதிகரிக்கப் பலகாலமாக பல வழிகளில் முயன்று வருகின்றது. அந்த முயற்ச்சியின் ஒரு அம்சமே காலிஜ் ஃபார்ஸ் (Khalij Fars) எனப்படும் கப்பல்-எதிர்  எறியியல் ஏவுகணைளின் உற்பத்தியாகும்.

தரையில் இருந்து கடலுக்குள் ஏவக் கூடிய காலிஜ் ஃபார்ஸ் ஏவுகணைகள் ஈரானின் ஃபட்டா-110 (Fateh-110 tactical ballistic missile)இன் மேம்படுத்தப் பட்ட வடிவமாகும். இவற்றால் இலத்திரனியல் இலக்குத் தேடும் முறைமை உண்டு (electro-optical (EO) seeker) இவற்றால் 650 கிலோ எடையுள்ள குண்டுகளைத் தாங்கிக் கொண்டு 300 கிலோ மீட்டர்வரை பாய முடியும். இவற்றைக் கொண்டு ஈரானால் ஹோமஸ் நீரிணையிலும் பாரசீக வளை குடாவிலும் எந்த ஒரு இடத்தையும் தாக்க முடியும். இவற்றால் வளைகுடாப் பிராந்தியத்தில் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்களைத் தாக்க முடியும். ஈரானின் மற்ற ஏவுகணைகளுடன் ஒப்பிடுகையில் காலிஜ் ஃபார்ஸ் ஏவுகணைகள் இடைமறித்துத் தாக்குவதற்குச் சிரமமானவையாகும்.

குறுகிய கடற்பரப்பு என்பதால் ஹோமஸ் நீரிணையில் ஏவுகணை எதிர்ப்பு முறைமையை செயற்பட வைப்பது சிரமமாகும்.
அமெரிக்கா தான் உருவாக்கிக் கொண்டிருக்கும் ஏவுகணை எதிர்ப்பு லேசர் துப்பாக்கிகளை வளைக் குடாவில் நிறுத்துமா?

ஈரான் பற்றிய முந்தைய பதிவுகளைக் காண கீழே சொடுக்கவும்:

1. ஹோமஸ் நீரிணையை மூட முயலும் ஈரான்
2. விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்திற்கு அமெரிக்காவின் பதிலடி.

Monday, 8 September 2014

பத்துப் பொருத்தங்களும் பொருந்திய ஜப்பானும் இந்தியாவும்.

184 நாடுகளைக் கொண்ட தனி நபர் வருமானப் பட்டியலில் இந்தியா 140வது இடத்திலும் ஜப்பான் 19-ம் இடத்திலும் இருக்கின்றன. ஜப்பானின் தனிநபர் வருமானம் இந்தியர்களினதிலும் பார்க்க 25 மடங்காகும். ஜப்பான் ஆசியாவில் முதலாவதாக வளர்ச்சியடைந்த நாடு என்ற பெருமையைப் பெற்றது. அதைத் தொடர்ந்து தென் கொரியாவும் அந்தப் பட்டியலில் இணைந்து கொண்டது. ஆனால் 2013-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏறக்குறைய 5 விழுக்காடாக இருக்கையில் ஜப்பானின் வளர்ச்சி 1.5 வீழுக்காடாக மட்டுமே இருக்கின்றது. ஆசியாவில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் ஜப்பானினுடையது. இந்தியா மூன்றாம் இடத்தில் இருக்கின்றது. இந்த இரண்டு நாடுகளும் எப்படி இணைந்து செயற்படப் போகின்றன என்பது இப்போது முக்கிய கேள்வியாக இருக்கின்றது.

நாடி நின்ற அபேயும் தேடிச்சென்ற மோடியும்
இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஜப்பானிற்கான ஐந்து நாள் பயணம் ஒன்றை 2014 ஓகஸ்ட் 31-ம் திகதியில் இருந்து மேற்கொண்டார். இருபது ஆண்டுகளாக எழும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றது ஜப்பானியப் பொருளாதாரம். அதன் ஏற்றுமதியை அதிகரிக்க ஒரு பெரிய சந்தை தேவை. ஐந்து விழுக்காட்டைச் சுற்றிக் கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதர வளர்ச்சியை எட்டு விழுக்காட்டிற்க்கு மேல் உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் மோடி இருக்கின்றார். ஜப்பானியத் தலைமை அமைச்சர் ஷின்சே அபே 2007-ம் ஆண்டு எழுதிய அழகிய நாட்டை நோக்கி: ஜப்பானிற்கான எனது பார்வை (Towards a Beautiful Country: My Vision For Japan)  என்னும் நூலில் இந்திய ஜப்பானிய உறவின் முக்கியத்துவத்தை எதிர்வு கூறி இருந்தார். இதுவரை ஜப்பானை ஆண்டவர்களில் ஷின்சே அபேயே இந்தியாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த ஒருவராவார். 2013-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அபே தனது மக்காளாட்சிப் பாதுகாப்பு வைரம் (Democratic Security Diamond) என்னும் முன் மொழிவில் அமெரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, வியட்னாம், ஒஸ்ரேலியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், புரூனே ஆகிய நாடுகள் பாதுகாப்புத் துறையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.  மோடி பதிவிக்கு வந்த 100 நாட்களில் மிக முக்கியத்துவம் கொடுத்த வெளிநாட்டுப் பயணமாக அவரது ஜப்பானியப் பயணம் அமைந்துள்ளது.  ஜப்பான் நாடானது இந்துமாக்கடல் நாடுகளையும் மற்றும்  பசுபிக்கடல் நாடுகளையும்  அமெரிக்காவையும் இணைத்து ஒரு பெரும் கூட்டணியை சீனாவிற்கு எதிராக அமைக்க விரும்புகின்றது. காங்கிரசு ஆட்சியின் போது இதற்கு இந்தியா சற்றுத் தயக்கம் காட்டி வந்தது. இந்தியா சீனாவைப் பகைக்க விரும்பவில்லை. இதற்கு இரு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று இந்திய சீன வர்த்தகம். இரண்டாவது ஐக்கிய நாடுகள் சபையில் சீனாவின் ஆதரவுடன் இந்தியா ஒரு வல்லரசாக விருப்பம் கொண்டுள்ளது. பல இந்தியப் பெரு முதலாளிகள் இந்திய சீன வர்த்தகத்தால் பெரும் இலாபம் ஈட்டுகிறார்கள்.  மோடியும் அபேயும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவியவிதம் பற்றி பல பத்திரிகைகள் குறைந்தது ஒரு பந்தியாவது எழுதியுள்ளன. அது ஒரு வழமைக்கு மாறான தழுவல் என்கின்றன.

 1. பாதுகாப்புத் துறைப் பொருத்தம்
இந்தியாவும் ஜப்பானும் தமக்கிடையிலான ஒத்துழைப்பில் பொருளாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக வெளியில் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அவர்களுக்கிடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் சீனாவிற்கு எதிராகக் கைகோர்ப்பதே. இரு நாடுகளும் இணைந்து ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் பல பாதுகாப்பு ஒத்துழைப்பைச் செய்ய முடியும்.  மலாக்க நிரிணையை  இரு நாடுகளும் மலேசியாவுடனும் மற்றைய பிராந்திய நாடுகளுடனும் இணைந்து தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதன் மூலம் சீனாவின் கப்பப் போக்குவரத்தின் பெரும்பகுதியைக் கட்டுப் படுத்த முடியும். மோடியின் முதலாவது வெளிநாட்டுப் பயணம் பூட்டானிற்கானதாக் இருந்தது.  பின்னர் அவரது நேபாளத்திற்கான பயணமும் அதைத் தொடர்ந்து அவர் ஜப்பானிற்கு மேற்கொண்ட பயணமும் சீனாவின் பிராந்தியஅச்சுறுத்தலை மையப்படுத்தியதாகவே அமைந்துள்ளன.  ஏற்கனவே அமெரிக்கா, ஜப்பான் இந்தியா ஆகிய நாடுகள் மூன்றும் இணைந்து மலபார் பயிற்ச்சி என்னும் பெயரில் ஒரு பெரும் கடற்போர் ஒத்திகையைச் செய்துள்ளன. இது சீனாவை அடக்க எடுக்கும் முயற்ச்சி என்று சொல்லத் தேவையில்லை.

2. மனித வளப் பொருத்தம்

நாட்டில் வேலையில்லாப் பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும் என்ற நிலையில் இருக்கின்றது இந்தியா. உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே அதிக வயது போனவர்களை வைத்துக் கொண்டு தவிக்கும் நாடு ஜப்பான். ஜப்பானிய மக்கள் தொகை 2013-ம் ஆண்டு 270,000 ஆல் குறைந்துள்ளது. ஜப்பானின் மக்கள் தொகை 127 மில்லியன்கள் இந்திய மக்கள் தொகை இதிலும் பார்க்கப் பத்து மடங்கானது. மனிதவளம் மிக்க இந்தியாவும்  தொழில்நுட்ப வளம் நிறைந்த ஜப்பானும் இணைந்து பெரும் பொருளாதார வெற்றிகளை ஈட்ட முடியும். வேறு வகையில் சொன்னால் இந்தியத் தொழிலாளர்களைச் சுரண்ட ஜப்பானிற்கு அதிக வாய்ப்புள்ளது.

3. வர்த்தகப் பொருத்தம்

2013-ம் ஆண்டு   இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையிலான வர்த்தகம் 15.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியானதாக மட்டுமே இருந்தது. இது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகத்தின் காற்பங்கு மட்டுமே. இந்தியாவிற்கு ஜப்பான் பெருமளவு வாகனங்களை ஏற்றுமதி செய்ய முடியும். அதே வேளை யப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் தனது வாகனங்களை உற்பத்தி செய்யவும் முடியும். ஆனால் இந்த வகையிலான ஒத்துழைப்பைப் பற்றி மோடி அதிகம் அக்கறை காட்டியதாகத் தெரிவரில்லை. மோடிக்கு தேர்தலின் போது "உதவி செய்த” இந்திய வாகன உற்பத்தியாளர்களை மோடி அதிருப்திக்கு உள்ளாக்க விரும்பவில்லை. சீனாவின் உள்நாட்டு வாகன உற்பத்தித் துறை வளராமல் இருப்பதற்கு ஜப்பானே காரணம். சீனர்கள் சீனாவில் உற்பத்தியாகும் வாகனங்களைவிட ஜப்பானிய வாகனங்களை வாங்க அதிகம் விரும்புகின்றார்கள். இருந்தும் ஜப்பானும் இந்தியாவும் இருதரப்பிற்கும் நன்மையளிக்கக் கூடிய வகையில் வர்த்தங்களை மேம்படுத்த முடியும்.     சோனி, டொயோட்டா, ஹொண்டா போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் தமது பொருட்களை உற்பத்தி செய்கின்றன.

4. படைக்கல உற்பத்திப் பொருத்தம்

தற்போது உலகிலேயே அதிக அளவு படைக்கலன்களை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கின்றது. தனது படைக்கலன் உற்பத்தியை விரிவாக்கும் நோக்கத்துடன் ஜப்பான் இருக்கின்றது. 1998இல் இந்தியா மேற்கொண்ட அணுக்குண்டுப் பரிசோதனையைத் தொடர்ந்து ஜப்பான் இந்தியாமீது சில பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது. மோடியின் பயணத்தின் போது ஆறு இந்தியப் படைத்துறை நிறுவனங்கள் மீது ஜப்பான் விதித்திருந்த தடைகளை நீக்க ஜப்பான் ஒத்துக் கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த பின்னர் ஜப்பான் எந்த ஒரு நாட்டிற்கும் படைக்கலன்கள் விற்பதில்லை என்ற முடிவில் இருந்தது. இந்த நிலைப்பாட்டில் இருந்து மாறி இந்தியாவிற்கு ஈரூடக விமானங்களை விற்க ஜப்பான் முன்வந்துள்ளது. ஜப்பானின் இந்த மாற்றம் சீன விரிவாக்கத்திற்கு எதிராக ஜப்பானும் இந்தியாவும் நெருங்கி ஒத்துழைக்கவிருக்கின்றன என்பதற்குக் கட்டியம் கூறுகின்றது.  2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜப்பானியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் இற்சுனொரி ஒனோடேராவும் இந்திய (முன்னாள்)வெளியுறவுத் துறை அமைச்சர் ஏ கே அந்தோனியும் புது டில்லியில் சந்தித்து உரையாடிய போது "இருவருடன் இருவர்" என்ற ரீதியில் பேசுவதாக முடிவெடுக்கப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஜப்பானிடம் இருந்து இந்தியா சின்மாய்வா யூஎஸ் -2  என்னும் ஈருடக விமானங்களை வாங்கவும் ஒத்துக் கொள்ளப்பட்டது. சின்மாய்வா யூஎஸ் -2 விமானங்கள் கடல் மேற்பரப்பில் படகு போல் மிதக்கவும் கூடியவை. 7,516.6கிலோ மீட்டர் (4,670.6 மைல்கள்) நீளமான தனது கடற்கரையைப் பாதுகாக்க இந்தியாவிற்கு அதிக வலுக்கொண்ட ஒரு கடற்படை தேவை. கப்பல் கட்டுமானத்தில் உலகில் முன்னணியில் நிற்கும் ஜப்பானும் கடற்படைக் கலன்களை நிர்மாணிப்பதில் அனுபவம் பெற்றுக் கொண்டிருக்கும் இந்தியாவும் இணைந்து உலகிலேயே தரமான கடற்படைக் கலன்களை உருவாக்க முடியும்.

5. கலாச்சாரப் பொருத்தம்
பௌத்த மதத்தை முதலில் பரப்பிய நாடு இந்தியா. பௌத்தமதம் வாழும் நாடு ஜப்பான். 736-ம் ஆண்டு ஜப்பான் சென்ற போதி சேனா என்ற துறவி ஜப்பானில் புத்தமதத்தை பெருமளவில் பரப்பினார். பிரித்தானியக் காலனித்துவத்திற்கு எதிராகப் போராடுவதற்கு சுபாஷ் சந்திரபோஸிற்கு ஜெர்மன் உதவ மறுத்த போது ஜப்பான் அவருக்கு உதவியது. ஜப்ப்பான் உதவி வழங்கும் நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இரு நாட்டு மக்களும் தற்போது தமது ஆட்சியாளர்களாக வலது சாரி அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

6.  பிராந்தியப் பொருத்தம்

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஒத்துழைக்க வேண்டிய கட்டாயத்தில் ஜப்பானும் இந்தியாவும் இருக்கின்றன. ஜப்பானின் கிழக்குச் சீனக் கடற்பிராந்தியத்தில் சீனா ஜப்பனிற்கு அச்சுறுத்தலாக இருகின்றது. அங்குள்ள செங்காகு, டயாகு ஆகிய தீவுகளை ஜப்பான் தன்னுடையது என்கின்றது. சீன விமானங்களும் கடற்படைக் கப்பல்களும் அத்தீவுகளின் பிராந்தியத்திற்குள் அடிக்கடி அத்து மீறி புகுவதாக ஜப்பான் குற்றம் சாட்டுகின்றது. சீனா அதை மறுத்து அவை தனக்கே சொந்தம் என்கின்றது. அதே போல் ஒஸ்ரியா நாட்டின் நிலப்பரப்பளவைக் கொண்ட அருணாச்சலப் பிரதேசத்தை சீனா தன்னுடையது என்கின்றது. சீனப் படையினர் அடிக்கடி அருணாச்சலப் பிரதேசத்துக்குள் ஊடுருவி படை முகாம்களை அமைக்கின்றனர்.  சீனப் பிராந்திய ஆதிக்கத்தைச் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இரு நாடுகளுக்கும் இருக்கின்றன.

7. கட்டுமானப் பொருத்தம்

ஜப்பானின் உள்ளகக் கட்டுமானம் உலகத் தரம் வாய்ந்தது. உலகிலேயே நெரிசல் மிக்க டோக்கியோ நகரை முகாமைத்துவம் செய்யும் அனுபவம் ஜப்பானிடம் உண்டு. துரித தொடரூந்துச் சேவை, புதிய நகரக் கட்டுமானம் ஆகியவற்றில் ஜப்பானின் அனுபவத்தையும் திறமையையும் இந்தியா பெற்றுக் கொள்ளலாம். மோடியின் ஜப்பானியப் பயணத்தின் போது இந்தியக் கட்டுமானங்களிலும் புது நகர உருவாக்க்கத்திலும் அடுத்த ஐந்து ஆண்டுகளின் ஜப்பானிய அரசும் தனியார் நிறுவனங்களும் 53 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதாக உறுதியளித்துள்ளன.  இந்தியாவின் கட்டுமானப் பசியை ஜப்பானால் திருப்தி செய்ய முடியும். மோடி குஜாராத் மாநில முதலமைச்சராக இருந்த போது பாவித்த "முதலீட்டாளர்களுக்கு சிவப்பு நாடா இல்லை; சிவப்புக் கம்பளம் உண்டு" என்ற வாசகத்தை ஜப்பானிலும் வலியுறுத்திச் சொன்னார். வெளிநாட்டு மூதலீடுகள் தொடர்பான முடிவுகளை இந்திய அரசு இப்போது மிகவும் துரிதமாக மேற்கொள்கின்றது என உறுதியளித்தார் மோடி. ஜப்பானிய முதலீட்டார்கள் முன் பேசும் போது இந்தியா மக்களாட்சி, மக்கள் தொகை, மக்கள் தேவை ஆகிய மூன்றிலும் உலகில் முன்னணியில் நிற்கின்றது என்றார் மோடி. ஐம்பதிற்கும் மேற்பட்ட நகரங்களை இணைக்கும் துரித தொடரூந்து சேவையை  உருவாக்கும் திட்டத்துடன் மோடி இருக்கின்றார்.

8. வன்பொருள் மென்பொருள் பொருத்தம்
இந்தியா உலகில் சிறந்த கணனி மென்பொருள் உற்பத்தி செய்யக் கூடிய நாடு. அமெரிக்காவில் உள்ள உலகின் முதல்தர மென் பொருள் உற்பத்தி நிறுவனங்களில் பல இந்தியரக்ள் முதுகெலும்பாக இருந்து பணிபுரிகின்றனர். ஜப்பான் கணனி வன்பொருள் உற்பத்தில் சிறந்து விளங்குகின்றது. இரு நாடுகளும் இணைந்து வரும் காலங்களில் கணனித் துறையில் அரசோச்ச முடியும்.

9. உலக அரங்கத் தேவைப் பொருத்தம்

தற்போது உலக அரங்கில் ஜப்பான் தனது பாதுகாப்பிற்கும் ஆதிக்கத்திற்கும் அமெரிக்காவில் பெரிதும் தங்கியிருக்கின்றது. அதே போல் இந்தியா தனது படைக்கல உற்பத்திக்கும் தேவையான போது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இந்தியாவிற்கு ஏற்ப இரத்து அதிகாரம் பாவிக்கவும் இரசியாவில் பெரிதும் தங்கியிருக்கின்றன. பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் இருக்கும் சீனாவும் பிரேசிலும் மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவிற்குப் போட்டியான நாடுகளாகும். இவ்விரண்டு நாடுகளும் தமது மக்களுக்கான வேலைவாய்ப்பை உலக அரங்கில் தேடுவதில் இந்தியாவுட்ன் போட்டி போடுகின்றன. உலக அரங்கில் ஒன்றுடன் ஒன்று போட்டி போடாமல் இந்தியாவும் ஜப்பானும் இணைந்து தமது பேரம் பேசும் வலுவை அதிகரித்துக் கொள்ளலாம.

10. மாற்று எரிபொருள் உற்பத்திப் பொருத்தம்

இந்தியா ஜப்பான ஆகிய இரு நாடுகளும் எரிபொருள் இறக்குமதியில் பெரிதும் தங்கியிருக்கின்றன. இரண்டும் இணைந்து காற்றலையில் இருந்தும், சூரிய ஒளியில் இருந்தும் வலு பெறும் பல முயற்ச்சிகளில் ஈடுபடலாம். சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் பெறும் துறையில் சீனா அமெரிக்காவையும் முந்தி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இந்தியாவும் சீனாவும் ஜேர்மனியும் இணைந்து முதலாம் இடத்தைப் பிடிக்கலாம்.

இரு நாட்டுத் தலைமை அமைச்சர்களும் இறுதியில் இணைந்து வெளிவிட்ட கூட்டறிக்கைக்கு இந்தியாவிற்கான டோக்கியோப் பிரகடனம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜப்பானிய இந்திய உறவு மேம்படும் போது ஜப்பானால் இந்தியாவை கேந்திரோபாய ரீதியில் மேலும் அமெரிக்காவிற்கு நெருக்கமாகக் கொண்டு செல்ல முடியும். சீனக் கடற்படைக்கப்பல்கள் அமெரிக்கக் கடற்படைக் கப்பலை மோதிவிடும் வகையில் நெருங்கிச் சென்றதும் சீனப் போர் விமானம் அமெரிக்காவின் நீர் மூழ்கி அழிப்பு விமானத்தை மிரட்டும் வகையில் நெருக்கமாகப் பறந்து சென்றது அண்மையில் நடந்த இரு நிகழ்வுகள். இவை அமெரிக்காவின் ஆசிய பசுபிக் கடற்பிராந்தியத்தில் செலுத்தும் படைத்துறை மேன்மையையும் ஆதிக்கத்தையும் சோதனைக்கு உள்ளாக்க சீனா முயல்கின்றது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. இது நாளை ஒரு சவாலாக முன்னர் அமெரிக்கா தனது கேந்திரோபாய பங்காண்மையை ஜப்பானுடனும் இந்தியாவுடனும் செய்ய விரும்பும். இது ஆசிய பசுபிக் பிராந்தியத்தை ஒரு வல்லாதிக்க நாடுகளின் மோசமான போட்டிக்களமாக மாற்றும். இதில் தமிழர்களும் பாதிக்கப்படலாம்

சிங்களவர்களுக்கு உதவி செய்வதைத் தனது தலையாய கடமையாகக் கொண்ட ஜப்பானும் தமிழர்கள் சிங்களவர்களுக்கு அடங்கி இருக்க வேண்டும் சிங்களவர்கள் இந்தியாவிற்கு அடங்கி இருக்க வேண்டும் என்ற பேரினவாத இந்துத்துவாக்களும் இணைவது தமிழர்களுக்கு உகந்தது அல்ல.

பத்துப் பொருத்தங்களும் பொருந்திய இந்தியாவும் ஜப்பானும்.

Thursday, 4 September 2014

திண்டாடும் உலகப் பொருளாதாரமும் திணறும் மைய வங்கிகளும்

2008-ம் ஆண்டில் விழுந்த உலகப் பொருளாதாரம் எழும்ப முடியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. உலக நாடுகளின் மைய வங்கிகள் 2008-ம் ஆண்டிலிருந்து தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமது நாணயப் பெறுமதிகளைத் தத் தம் நாட்டுப் பொருளாதார நிலைக்களுக்கு ஏற்ப மாற்றப் பெரு முயற்ச்சி செய்து கொண்டிருக்கின்றன. பொருளாதாரத்தை ஊக்குவிக்க நாணயப் புழக்கத்தை அதிகரிப்பதும் அதனால் ஏற்படும் நாணயப் பெறுமதி வீழ்ச்சியையும் பணவீக்கத்தையும் கட்டுப்படுத்த மைய வங்கிகள் படும்பாடு பெரும்பாடு.

நாணயப் போர்
மைய வங்கிகள் ஒரு நாட்டின் வட்டி விழுக்காட்டைத் தீர்மானைக்கும் போது நாட்டின் பணவீக்கம், பொருளாதார வெளியீட்டு வித்தியாசம் (Output Gap)  ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். நாட்டின் உண்மையான மொத்தப் பொருளாதார உற்பத்திக்கும் அதன் மொத்த உற்பத்தி ஆற்றலுக்கும்(potential) உள்ள வித்தியாசத்தை வெளியீட்டு வித்தியாசம் என்பர். பணவீக்கத்தின் ஒன்றைரைப் பங்கையும் வெளியீட்டு வித்தியாசத்தையும் நாட்டின் வட்டி விழுக்காட்டிற்கு ஏற்ப இன்னும் ஒரு கணியத்தையும் கூட்டி வரும் தொகையை நாட்டின் வட்டி விழுக்காடாக இருக்க வேண்டும். ஆனால் பல நாடு மைய வங்கிகள் அப்படிச் செய்யாமல் தமது நாட்டுப் பொருட்கள் மற்ற நாடுகளில் மலிவாக இருக்கக் கூடியதாக தமது நாட்டின் நாணயப் பெறுமதி குறைவாக இருக்கக் கூடிய வகையில் தமது வட்டி விழுக்காட்டை தீர்மானிக்கின்றன. இதை நாணயப் போர் என்பர். இந்த நாணயப் போரில் பெரு வெற்றி அடைந்த நாடு சீனாவாகும்.

எரி பொருள் ஒளிகாட்டும்
உக்ரேனிலும் லிபியாவிலும் பிரச்சனைகள் தொடர்கின்றபோது உலக எரிபொருள் விநியோகம் பாதிப்பில்லாமல் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் உலகில் எரிபொருள் தேவை குறைந்து கொண்டிருப்பதாக பன்னாட்டு வலுவள முகவரகம் தெரிவிக்கின்றது.  2014-ம் ஆண்டுக்கான சராசரி எரிபொருள் தேவை நாளொன்றிற்கு 180,000 பீப்பாய்களால் குறைவடைந்து விட்டதாக இந்த முகவரகம் தெரிவிக்கின்றது. 2014-ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான எரிபொருள் பாவனை நாள் ஒன்றிற்கு 700,000 பீப்பாய்கள் மட்டுமே. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகக் குறைவான எரிபொருள் பாவனையாகும். எரி பொருள்பாவனையும் அதற்கான தேவையும் பொருளாதாரம் வளர்ச்சியை எதிர்வு கூறக் கூடியவை. உலக எரிபொருள் பாவனை உலகப் பொருளாதாரம் இன்னும் 2008-ம் ஆண்டின் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை எனச் சுட்டிக் காட்டுகின்றது. 2014-ம் ஆண்டு ஜி-20 நாடுகளின் சராசரிப் பொருளாதார வளர்ச்சி 2013-ம் ஆண்டைப் போலவே 2.8 விழுக்காடாகவே இருக்கும். 2015-ம் ஆண்டு இது 3.2 ஆக அதிகரிக்கலாம். ஜி-7 நாடுகளின் பொருளாதாரம் 2013-ம் ஆண்டு 2.2 விழுக்காடு வளர்ந்தது. 2014-ம் ஆண்டின் முதலாம் காலாண்டில் இந்த வளர்ச்சி 2 விழுக்காடு மட்டுமே.
அமெரிக்காவும்  பிரித்தானியாவும் எழும்புகின்றன நிமிரவில்லை.
2008-ம் ஆண்டின் பின்னர் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஐக்கிய அமெரிக்கப் பொருளாதாரமும் ஐக்கிய இராச்சியப் பொருளாதாரமும் ஒரு திடமான பொருளாதார வளர்ச்சியைக் கண்டப் போதும் அவை காத்திரமான வளர்ச்சியாக இல்லை. அதே வேளை யூரோ வலய நாடுகளின் பொருளாதாரங்கள் இன்னும் மந்த நிலையிலேயே இருக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் வேலைவாய்ப்புகள் அதிகரிப்புக்கள் ஏற்படுகின்ற போதிலும் வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க இரு நாடுகளும் பெரும் பாடு படுகின்றன.  அமெரிக்காவில் ஒருவரு வேலை கொடுக்க அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு முப்பத்தேழாயிரம் டொலர்களை உட்செலுத்த வேண்டியுள்ளது. 2008-ம் ஆண்டு இது 7600 டொலர்களாக இருந்தது. இது அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீதான அதன் மைய வங்கியின் பிடி தளர்ந்து கொண்டு போவதைக் காட்டுகின்றது. இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும் சீனா தனது நாணயத்தை உலக நாணயமாக்க எடுக்கும் பெரு முயற்ச்சிகளுக்கு மத்தியிலும் அமெரிக்க டொலர் தனது உலக நாணய நிலையை இழக்காமல் இருக்கின்றது. அமெரிக்க டொலரின் பெறுமதியும் உறுதியாக இருக்கின்றது. ஆனால் அமெரிக்காவில் உள்ள பல் வேறு உளவுத்துறைகள் அமெரிகாவில் தொடர்ந்து 25 ஆண்டுகள் பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம் என எச்சரிக்கின்றன. இந்த வீழ்ச்சி அமெரிக்காவின் உலக ஆதிக்க நிலையைப் பெரிதும் பாதிக்கலாம். பொருளதாரச் சுழற்ச்சி நிபுணர்கள் 2016, 2017 ஆண்டுகளில் அமெரிக்காவில் மீண்டும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்கின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியம்
ஒரு நாட்டின் வங்கிகள் தமது காப்பு வைப்புக்களை மைய வங்கிகளில் இடுவதுண்டு. இவற்றிற்காக மைய வங்கிகள் வைப்பிடும் வங்கிகளுக்கு வட்டி வழங்குவதுண்டு. ஆனால் ஐரோப்பிய ஒன்றிய மைய வங்கி வைப்பிடும் வங்கிகளிடம் இருந்து கட்டணம் அறவிடும் முறையை 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்தது. இது ஒரு எதிர்மறை வட்டி விழுக்காட்டை உருவாக்கும் முயற்ச்சியாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைச்சன் பிள்ளை ஜேர்மனியின் 2014 ஓகஸ்ட் மாதம் வெளிவந்த வியாபார சூழ்நிலைச் சுட்டெண் ஜெர்மனியின் பொருளாதாரம் இன்னும் மந்த நிலையிலேயே இருக்கின்றது எனச் சுட்டிக் காட்டுகின்றது. ஜேர்மனி மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சிக்கன நடவடிக்கையில் ஈடுபட நிர்பதந்திக்கின்றது. இந்த சிக்கன நடவடிக்கையைப் பின்பற்றுவது தொடர்பாக பிரான்ஸில் பெரும் அரசியல் குழப்பம் உருவாகியுள்ளது. இந்த சிக்கன நடவடிக்கைகள் வருமானம் குறைந்தவர்களைப் பாதிக்கும் என்பதால் பிரெஞ்சு இடது சாரி அரசியல்வாதிகள் இவற்றிற்கு கடும் எதிர்ப்புக் காட்டுகின்றார்கள். இதனால் பிரெஞ்சுத் தலைமை அமைச்சர் பதவி விலகி அங்கு ஆட்சிய் மாற்றம் ஏற்படவிருக்கின்றது. பிரெஞ்சுப் பொருளாதாரம் 2014-ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 0.2 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியடைந்தது.

எகிறும் இந்தியா
ஆண்டொறின்ற்கு  ஒரு கோடி வேலைவாய்ப்புக்களை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவிற்கு உண்டு. இதற்கு இந்தியா குறைந்த அளவு எட்டு விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை  எட்ட வேண்டும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக  இந்தியப் பொருளாதாரம் 4ஐந்து விழுக்காட்டிலும் குறைவாகவே வளர்ந்தது. 2014-ம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 4.6 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியடைந்தது. இக்காலாண்டில் இந்தியக் கைத்தொழில் துறை நிலக்கரிச் சுரங்கத் துறை ஆகியன தேய்வைச் சந்தித்தன. 2014-ம் ஆண்டு இந்திய ரூபாவின் பெறுமான வீழ்ச்சியைத் தடுக்க இந்திய மைய வங்கி வட்டி விழுக்காட்டை அதிகரித்தது. 2015-ம் ஆண்டு இந்தியப் பொருளாதாரம் ஐந்து விழுக்காடு வளர்ச்சியை எட்டலாம். 2015-ம் ஆண்டு 5 முதல் 5.6 விழுக்காடு வளர்ச்சி ஏற்படலாம். இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உள்ளகக் கட்டுமானங்களில் பெரும் முதலீடு செய்ய வேண்டி இருக்கின்றது. இதற்கு அந்நிய முதலீட்டை வரவேற்பதைத் தவிர வேறு வழி இருப்பதாகக்த் தெரியவில்லை. இரசியாவிற்கு எதிரான முலதனத் தடை இந்தியாவில் அந்நிய முதலீட்டை இலகுவாக்குவதுடன் மலிவாகக் கிடைக்கவும் செய்யும். நரேந்திர மோடி தனது பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்பிரமணியனை நியமிப்பது அவர் இந்தியாவை சந்தைசார் பொருளாதாரமாக “சீர்திருத்தப்” போகின்றார் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இவர் ஏற்கனவே இந்திய மைய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்ட ரகுராம் ராஜனுடன் இணைந்து நூல்கள் எழுதுவதிலும் ஆய்வுப் பத்திரங்கள் தயாரிப்பதிலும் ஈடுபட்டவர்.

பிரேசில்
பிரேலின் மைய வங்கி பொருளாதாரத்தை ஊக்குவிக்க நாலரை பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் வழங்குதலை செய்ய முனைகின்றது. இது பிரேசிலின் இரண்டாவது பெரிய முயற்ச்சியாகும். பிரேசிலின் பொருளாதாரம் 2014-ம் ஆண்டு 1.8 விழுக்காடு மட்டுமே வளரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரேசிலிய மைய வங்கி பொருளாதாரம் 2.5 விழுக்காடு வளர்ச்சியடையும் என இந்த ஆண்டின் ஆரம்பத்தில் எதிர்வு கூறியிருந்தது. பிரேசிலிய மைய வங்கி நாட்டின் பணவீக்கம் 4.5 விழுக்காட்டிலும் குறைவானதாக இருக்க வேண்டும் என முயல்கின்றது. ஆனால் தற்போதைய பனவிக்கம் 6.2 விழுக்காடாகும்.
சீன நாட்டாண்மைகளும் கூட்டாண்மைகளும்
கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் மைய வங்கியும் அரசும் நான்கு பெரும் பிரச்சனைகளை எதிர் கொண்டிருந்தன:
1. வீடு மற்றும் கட்டிங்களின் (Real Estate) விலை அதிகரிப்பு.
2. உள்ளூராட்சிச் சபைகளின் கட்டுக்கடங்காத கடன்கள்.
3.  நிழல் வங்கிகள் (Shadow Banking) எனப்படும் பதிவு செய்யாத கடன் வழங்கு நிறுவனங்களின் அதிகரிப்பு.
4. கூட்டாண்மை எனப்படும் பெரிய வியாபார அமைப்புக்களின் கடன் (Corporate  Debt)  பளு அதிகரிப்பு.
இப்பிரச்சனைகளால் சீனப் பொருளாதாரம் பெரும் பிரச்சனைக்கு உள்ளாகி திடீர் சரிவை சந்திக்கலாம் என 2014-ம் ஆண்டின் ஆரம்பத்தில் பல பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியிருந்தனர். இதில் கூட்டாண்மைகளின் கடன் பளு சீன மைய வங்கிக்குப் மிகப்பெரும் சவாலாகும். சீனாவில் உள்ள கூட்டாண்மை எனப்படும் பெரிய வியாபார அமைப்புக்களின் கடன் (Corporate  Debt) உலகிலேயே பெரியதாகும். 2013-ம் ஆண்டு இக்கடன் 142ரில்லியன்(14,200 கோடி) அமெரிக்க டொலர்களாக இருந்தது.  ஐக்கிய அமெரிக்காவின் கூட்டாண்மை எனப்படும் பெரிய வியாபார அமைப்புக்களின் கடன் (Corporate  Debt) 13.1ரில்லியன்கள் மட்டுமே. சீனக் கூட்டாண்மைகளின் கடன் சீனவின் மொத்தத் தேசிய உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 120 விழுக்காடாகும். 2014-ம் ஆண்டு மார்ச் மாத முற்பகுதியில் சீன நிறுவனமான Shanghai Chaori Solar தனது கடன நிலுவைகளைச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டமை சீன பெரிய வியாபார அமைப்புக்களின் கடன் மோசமான நிலையில் இருப்பதைச் சுட்டிக் காட்டியது.  கடன் மீளளிப்பு வலுக்களைத் தரவரிசைப் படுத்திப் பட்டியலிடும் நிறுவனமான Standard & Poor சீனாவின் கூட்டாண்மைகளின் கடன் பளு ஆபத்தான வகையில் உயர்வாக இருக்கின்றது என அறிவித்தது. 1. சீனப் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்த படியால் கூட்டாண்மைகளின் நிதிநிலைமை பாதிப்படைந்தமை; 2. சீன அரசு நாட்டில் கடன் வழங்குதல்களைக் கட்டுப்படுத்தியமை; 3. அதிகரித்த வட்டி ஆகியவை சீனக் கூட்டாண்மைகளின் கடன் பளுவை அதிகரித்தன. சீனக் கூட்டாண்மைகளின் இலாபத்திறன் ஆறு விழுக்காடாக இருக்கும் நிலையில் அவற்றின் கடன்களின் வட்டி விழுக்காடு ஏழிற்கும் அதிகமாக இருப்பது ஒரு நல்ல பொருளாதார அறிகுறியல்ல. சீனக் கூட்டாண்மைகளின் நிதிப் பாய்ச்சல் சீராக இல்லாத்தால் கடன்பளு மேலும் அதிகரிக்கின்றது. நிதிப் பாய்ச்சல் குறைவதால் கடன் படுதலைத் தொடர்ந்து கடன் பளுவால் நிதிப்பாய்ச்சல் குறைதன் என்பது ஒரு தொடர் சுழற்ச்சியாகி நிலைமையை மேலும் மோசமாக்கிக் கொண்டிருக்கின்றன. நிறுவனங்களின் கடனுக்கும் அதன்மொத்தப் பெறுமதிக்கும் அதன் உள்ள விகிதாசாரம் கடன் நெம்புத் திறனாகும்(debt leverage). சீனாவில் நிதி நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய கூட்டாண்மைகளின் கடன் நெம்புத் திறன் 113 விழுக்காடாக இருக்கின்றது. அதாவது ஒரு மில்லியன் பெறுமதியான ஒரு கூட்டாண்மை 113 மில்லியன்கள் கடன் பட்டுள்ளது. இந்தக் கடன் நெம்புத்திறன் குறைவதற்கான அறிகுறி எதுவும் காணப்படவில்லை.
2008-ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி சீனாவின் பொருளாதாரத்தை வீழ்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதைத் தடுக்க சீன அரசு சீனப் பொருளாதாரத்திற்கு நான்கு ரில்லியன் யூவான்களை உட்செலுத்தியது. இதில் பெரும் பகுதி கூட்டாண்மைகளுக்கு கடன்வழங்குவதாக அமைந்தது. அவற்றில் பெரும்பகுதி சீனா முன்னுரிமை கொடுத்த துறைகளில் முதலிடப் படவேண்டும் எனபது சீன அரசின் நிபந்தனையாக இருந்தது. ஆனால் அத்துறைகள் இலாபத் திறன் குறைந்தனவாக இருந்தன. தற்போது சீனவின் கூட்டாண்மைகளின் கடன்களில் நிலுவை செலுத்த முடியாத கடன்கள்(non-performing loans அதாவது உரிய நேரத்தில் மாதாந்த கடன் கொடுப்பனவையோ அல்லது வட்டிகளையோ கொடுக்க முடியாத கடன்கள்) அதிகரித்துச் செல்கின்றன. இது ஒரு ஆபத்தான நிலை என கூட்டாண்மைகளின் கடன்களை ஆய்வு செய்யும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சீனாவின் மேற்பார்வை செய்யும் National Development and Reform Commission இன் கூட்டாண்மை கடன் வழங்குதலை மேற்பார்வை செய்யும் பிரிவில் சீன அரசு பெரும் மாற்றங்களைச் செய்துள்ளது. அப்பிரிவின் தலைவரை இடமாற்றம் செய்து புதியவரை அப்பதவிக்கு அமர்த்தியுள்ளது.தற்போது கூட்டாண்மைத் துறையில் ஏற்பட்டது போன்ற ஓர் ஆபத்தான கடன் அதிகரிப்பு 1998-இல் இருந்து 2001-ம் ஆண்டு வரை சீன அரச துறையில் ஏற்பட்டது. அப்போது சீன அரசு சீனப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் முகமாக உள்கட்டமைப்புக்களிலும் (infrastructure) வீடுகள் மற்றும் கட்டிங்களிலும் (Real Estate)பாரிய முதலீடுகளைச் செய்தது. இதற்காக சீன அரசு பெருமளவில் கடன்பட்டது. கடன் பளுவைக் குறைக்கும் முகமாக வட்டி விழுக்காடு செயற்கையாக குறைந்த நிலையில் வைத்திருக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து வந்த பத்து ஆண்டுகளில் சீனப் பொருளாதாரம் பெரு வளர்ச்சியைக் கண்டது. 1998இல் இருந்து 2001 ஆண்டு வரை சீன அரச கடனின் அசூர வளர்ச்சி ஆபத்தானது எனப் பொருளாதார நிபுணர்கள் அப்போதும் எச்சரித்தனர். ஆனால் சீனா அந்தக் கடன் பளுவைச் சமாளித்து விட்டது. 1996-ம் ஆண்டு ஜப்பானின் அரச கடன் நெம்புத்திறன்  எண்பது விழுக்காடாக இருந்த போது ஜப்பான் கடன் நெருக்கடியைச் சந்திக்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் தற்போது ஜப்பானில் அரச கடன் நெம்புத்திறன் இருநூறு விழுக்காடாக உயர்ந்து விட்டது. ஜப்பான் கடன் நெருக்கடியைச் சந்திக்காமல் தன் கடன் பளுவைச் சமாளித்துக் கொண்டே இருக்கின்றது. சீனா தனது பொருளாதாரத்தை சந்தை சார் பொருளாதாரமாகச் சீர்திருத்தம் செய்வதை மேலும் துரிதப்படுத்தும் போது அது பலதுறைகளில் பொருளாதார் முன்னேற்றம் அடையும். அப்போது சீனக் கூட்டாண்மைகளின் இலாபத் திறன் அதிகர்த்து அவற்றால் கடன்பளுவைச் சமாளிக்கக் கூடிய நிலை ஏற்படுமென நம்பலாம்.

தீக்குள் விரலை வைத்த இரசியா
இரசியப் பொருளாதாரம் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருப்பவர்களால் பாதிப்படைந்து கொண்டிருக்கின்றது. இரசியாவின் மக்கள் தொகை குறைந்து கொண்டு செல்வது அதன் மொத்த தேசிய உற்பத்தியைப் பாதிக்கின்றது. நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் பெரும்பாலும் படித்த இளைஞர்கள். இது போதாது என்று இரசியா உக்ரேன் விவகாரத்தில் தலையிட்ட படியால் அதற்கு எதிராக மேற்கு நாடுகள் கொண்டு வந்த பொருளாதாரத் தடை இரசியாவைப் பாதிக்கத் தொடங்கி இருக்கின்றது. இரசியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அலெக்ஸி உல்யுகயேவ் இரசியப் பொருளாதாரம் தேய்வுச் சுழற்ச்சிக்குள் நுழைந்து விட்டது என்கின்றார். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பெரிதும் தங்கி இருக்கும் இரசியப் பொருளாதாரத்தை சீனாவையும் இந்தியாவையும் நோக்கி நகர்த்தும் முயற்ச்சி வெற்றியளிக்க நீண்ட நாட்கள் எடுக்கும். சீனாவிற்கும் இந்தியாவிற்கும் எரி வாயு விநியோகம் செய்ய பெரும் முதலீட்டை இரசியா செய்ய வேண்டியிருக்கும். இரசியாவின் மூலதனத் தேவையில் அரைவாசிப் பங்கு மேற்கு நாடுகளிடம் இருந்தே பெறப்படுகின்றன. இதனால் இரசியாவின் எரிவாயு விநியோகத்திற்கு ஆப்பு வைக்க மேற்கு நாடுகள் இரசியாவிற்கான மூலதனத் தடையை மேற்கொள்ளவிருக்கின்றன.
தற்போது மத்திய கிழக்கிலும் உக்ரேனிலும் இருக்கும் கொதி நிலை 2015-ம் ஆண்டு தென் சீனக் கடல் கிழக்குச் சீனக் கடல் தாய்வான் எனப் பல இடங்களில் விரிவடைய வாய்ப்புண்டு. 2017-ம் ஆண்டின் மையப் பகுதிக்குப் பின்னர்தான் உலகப் பொருளாதாரம் தற்போதைய மந்த நிலையில் இருந்து மீட்சியடையும்.

Friday, 29 August 2014

இரசியாவின் குடியேற்றவாதம்: உக்ரேனிற்குள் களவாக ஊடுருவும் இரசியப் படைகள்

 ஆகக் குறைந்தது ஆயிரம் இரசியப் படைகள் உக்ரேனிற்குள் களவாக நுழைந்துள்ளமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இரசியர்கள் பெரும்பான்மையாக வாழும் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் உக்ரேனிய அரச படைகளுக்கு எதிராக அண்மைக்காலங்களாக பெரும் கிளர்ச்சியை இரசியா தூண்டி விட்டுள்ளது. இந்த உக்ரேனிய உள்நாட்டு விவகாரத்தில் இரசியாவின் தலையீட்டை சிலர் "கம்யூனிசியத்திற்கு எதிரான போர்" என விமர்சிப்பதுண்டு. ஆனால் இரசியாவிற்கோ அல்லது உக்ரேனிற்கோ கம்யூனிசியத்துடன் எந்தத் தொடர்பும் கிடையாது. உக்ரேனில் நடப்பது இரசியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஆதிக்கப் போட்டியாகும்.

1991-ம் ஆண்டு    சோவியத் ஒன்றியம்   வீழ்ச்சி அடைந்த பின்னர்   அதில் ஓர் உறுப்பு நாடாக இருந்த உக்ரேன்   தனி நாடாகியது.   அப்போது  சோவியத் ஒன்றியத்தின் மூன்றில் ஒரு பங்கு அணுக் குண்டுகள் உக்ரேன் நாட்டின் வசமாகியது.   இதானால் உக்ரேன் உலகிலேயே ஐக்கிய அமெரிக்காவிற்கும்   இரசியாவிற்கும் அடுத்த படியாக மூன்றாவது பெரிய   அணுக்குண்டு  நாடாக உருவெடுத்தது.    தன் வசமான அணுக்குண்டுகளை உக்ரேன் வைத்திருக்க விரும்பியது.   ஆனால் ஐக்கிய அமெரிக்காவும் இரசியாவும் அதை விரும்பவில்லை.   அரசியல் உறுதிப்பாடு உத்தரவாதமில்லாத ஒரு புதிய நாட்டிடம்   அதிக அளவிலான அணுக்குண்டுகள் இருப்பது   எங்கு போய் முடியும் என்ற அச்சம் பல நாடுகளிடம்  அப்போது இருந்தது. உக்ரேனின் முதல் அதிபர் லியோனிட் கிரவ்சக் (Leonid Kravchuk)  தமது நாட்டில் உள்ள அணுக்குண்டுகளை இரசியாவிடம் ஒப்படைத்து அவற்றை அழிப்பதற்கு  நிபந்தனை அடிப்படையில் ஒப்புக்கொண்டார்.    அவர் கேட்ட நிபந்தனை  பியூடப்பெஸ்ற் குறிப்பாணை அதாவது The Budapest Memorandum என்னும் பெயரில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.   அதன்படி உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டை  இரசியா, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள்  உறுதி செய்வதாக ஒத்துக் கொண்டன.  இதை மீறும் விதமாக இரசியா கிறிமியாவைத் தன்னுடை இணைத்துள்ளது. உக்ரேன்  தன்னிடம்  இருந்த விமானங்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள் உட்படப் பல படைக்கலன்களை "விற்றுத் தின்ன" வேண்டிய நிலையும் அப்போது இருந்தது.  உக்ரேன் நாடு உருவான நாளில் இருந்து கிட்டத்தட்ட வக்குரோத்து நிலையில்தான அதன் பொருளாதாரம் ஓடிக்கொண்டிருக்கின்றது. 

சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம்
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர்    தனது ஆதிக்க நிலப்பரப்பை    இரசியா விரிவாக்கவே விரும்பியது.   அதன் முதல் முயற்ச்சியாக     இரசியாவும், உக்ரேனும், பெலரசும் இணைந்து     சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம் என்னும் கூட்டமைப்பை 1991-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கின.    பின்னர் இதில் ஆர்மினியா, அஜர்பைஜான், கஜகஸ்த்தான், கிர்க்கிஸ்த்தான், மோல்டோவா,   தேர்க்மெனிஸ்த்தான்,   தஜிகிஸ்த்தான்,   உஸ்பெக்கிஸ்த்தான்    ஆகிய நாடுகள் இணைந்தன.   1993-ம் ஆண்டு ஜோர்ஜியாவும் இணைந்து கொண்டது.     பின்னர் உக்ரேன், ஜோர்ஜியா, தேர்க்மெனிஸ்த்தான் ஆகிய நாடுகளில்   நடந்த ஆட்சி மாற்றத்தால்   அவை இந்த இரசியா தலைமையிலான சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம் என்னும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறின.    சுதந்திர நாடுகளின் பொதுநலவாய நாடுகளிடையே   ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட    இரசியா முயற்ச்சித்த போதும் அதற்கு சில நாடுகள் ஒத்துக் கொள்ள மறுத்தன.    2013-ம் ஆண்டு  உக்ரேன், இரசியா, மோல்டோவா, ஆர்மீனியா ஆகிய நாடுகள் ஒரு பொது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டன. 

ஜேர்மனியும் இரசியாவும்
மேற்கு ஐரோப்பிய நாடுகள்  ஐரோப்பிய ஒன்றியம் என்னும் பெயரில்    தமது நிலப்பரப்பையும்  பொருளாதார வலயத்தையும்   விரிவாக்கிக் கொண்டு    முன்னாள் சோவியத் நாடுகளையும்    இரசிய ஆதிக்க வலய நாடுகளையும் தம்முடன் இணைக்க      இரசியாவிற்கு    தான் ஓரம் கட்டப்பட்டு விடுவேனோ என்ற அச்சம் பற்றிக்கொண்டது.     அத்துடன் முன்பு இரசியாவுடன் வார்சோ ஒப்பந்த நாடுகள் கூட்டமைப்பில்    இணைந்திருந்த நாடுகளான     போலாந்து, ஹங்கேரி, ருமேனியா, செக் குடியரசு, குரேசியா ஆகிய நாடுகளும்    முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான எஸ்தோனிய, லத்வியா, லித்துவேனியா ஆகியவையும் ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைந்ததும்    இரசியாவைச் சிந்திக்க வைத்தது. பதிலடியாக தானும் யூரோ ஏசிய பொருளாதார சமூகத்தை உருவாக்கியது.   ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவாக்கத்தை    இரசியா ஒரு ஜேர்மனிய ஆக்கிரமிப்பாகவே கருதியது.   ஐரோப்பாவில் ஒரு முக்கிய நாடாகிய உக்ரேனை யார் பக்கம் இழுப்பது என்ற போட்டி   இதை ஒட்டி ஆரம்பமானது.    உக்ரேன் தனது யூரோ ஆசிய பொருளாதர சமூகத்தில் இணைய வேண்டும்  என இரசியா  உக்ரேனை நிர்ப்பந்தித்தது. 

கடந்த ஓர் ஆண்டாக உக்ரேனிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இரசியாவிற்கும் இடையில் அகப்பட்டுத் தவிக்கின்றனர். இரசியா உக்ரேனின் ஒரு பகுதியான கிறிமியாவை தன்னுடன் இணைத்து ஒரு நில அபகரிப்பைச் செய்து கொண்டது. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் பல இரசியப் பிடியில் இருந்து விலகி மேற்கு ஐரோப்பாவுடனும் அமெரிக்காவுடனும் இணைந்து கொண்டன. சோவியத் ஒன்றியத்தின் படைத்துறைக் கூட்டமைப்பாக இருந்த வார்சோ ஒப்பந்த நாடுகளில் இருந்து அவை விலகி இரசியாவின் எதிரி அமைப்பான நேட்டோவில் இணைந்து கொண்டன. மேற்கு நாடுகளின் ஆதிக்கம் தனது எல்லை வரை வருவதாக அஞ்சிய இரசியா எதிர் நடவடிக்கைக்களை எடுக்கத் தொடங்கியது. 

இரசிய குடியேற்ற ஆட்சியும் நேட்டோவும் 
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் இரசிய்ர்கள் பலர் திட்டமிட்டுக் குடியேற்றப்பட்டுள்ளனர். இவர்களை வைத்து இரசியா இப்போது அந்த நாடுகளைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர் முயல்கின்றது. இதை நொவோஇரசியா (Novorussiya) ஆனால் பெரும்பாலான முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் இரசியாவுடன் இணைந்து செயற்படுவதிலும் பார்க்க அமெரிக்காவுடனும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனும் இணைந்து செயற்படுவதை விரும்புகின்றன. மேற்கு ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க ஊடகங்களும் இதற்கு ஏற்ப்ப பரப்புரைகளை மேற்கொள்கின்றன. எஸ்தோனியா நாட்டின் மக்கள் தொகையில் காற்பங்கினர் இரசியர்கள். இது இரசியாவிற்கு வாய்ப்பான ஒரு நிலையாகும். இதே போல் லத்வியா நாட்டின் மூன்றில் ஒரு பங்கினர் இரசியர்களாகும். இது இரசியாவிற்கு ஒரு வாய்ப்பான நிலையாகும். ஆனால் இவ்விரண்டு நாடுகளும் நேட்டோ படைத் துறைக்கூட்டமைப்பில் உறுப்புரிமை பெற்ற நாடுகளாகும்.   நேட்டோ நாடு ஒன்றின் மீது வேறு நாடு படை எடுத்தால்   மற்ற எல்லா நாடுகளும் அது தம் நாட்டின் மீது படை எடுத்தது போல் பாவித்து   அந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டும். அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இவை இரண்டும் உறுப்புரிமை பெற்றுள்ளன. தனியாட்சியாளர்(சர்வாதிகாரி) அலெக்ஸானடர் லுக்கஷென்காவினால் ஆட்சி செய்யப்படும் பெலரஸ் நாடு இரசியாவுடன் நல்ல உறவுகளை பேணுகின்றது. இரசியாவுடன் பெலரஸை இணைக்கும் முயற்ச்சிகள் பல தடவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. கஜகஸ்த்தான் நாடும் இரசியாவுடன் நெருங்கிய நட்பைப் பேணுகின்றது. கஜகஸ்த்தானின் வட பிராந்தியங்களில் இரசியர்கள் பெரும்பான்மையாக  வாழுகின்றனர்.ஆரம்பம் முதலே உக்ரேன் விவகாரத்தில் அதிக அக்கறை காட்டி வரும் நாடு போலாந்து. உக்ரேனில் இருந்த இரசிய சார்பு ஆட்சியாளர் விக்டன் யனுக்கோவிச் அவர்களை பதவியில் இருந்து அகற்றி அங்கு மேற்குலகிற்கு சார்பான ஒரு ஆட்சியை அமைப்பதில் போலாந்து அதிக அக்கறை காட்டியது. ஐக்கிய அமெரிக்காவின் துணை அதிபர் ஜோ பிடன் உக்ரேன் சென்று நிலைமைகள் தொடர்பாக உக்ரேன் ஆட்சியாளர்களுடன் கலந்துரையாட போலாந்தின் பாதுகாப்பு அமைச்சர் தோமஸ் சீமோனியக் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் சக் கஜெலைச் சந்தித்து உரையாடினார். பின்னர் அமெரிக்கப் படையினர் போலாந்து சென்று பாதுகாப்பு நடவடிக்கைக்களில் ஈடுபடுவதாக இரு தரப்பினரும் பெண்டகனில் ஒடததுக் கொண்டனர். ஆனால் போலாந்தில் தங்கியிருக்கும் அமெரிக்கப் படையினர் உக்ரேனில் எந்த வித படை நடவடிக்கைகளும் மேற்கொள்ள மாட்டார்கள் எனச் சொல்லப்படுகின்றது. 

இரசியாவின் ஒபரேசன் பூமாலை
உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் வாழும் இரசியர்கள் தமக்குத் தனிநாடு வேண்டும் எனக் கிளர்ச்சி செய்கின்றனர். இவர்களின் முதல் நோக்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையப் போகும் உக்ரேனிற்கு பெரும் பிரச்சனை கொடுத்துத் தடுத்தல். இரண்டாவது நோக்கம் இரசிய ஆதிக்க நிலப்பரப்பை அதிகரித்தல். இரசியா இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட தனது படைகளை உக்ரேனுடனான தனது எல்லையில் குவித்து வைத்திருக்கின்றது. மலேசிய விமானம் உக்ரேனின் இரசியக் கிளர்ச்சிக்காரர்களின் பிராந்தியத்த்தில் சுட்டு விழ்த்தப்பட்ட பின்னர் உக்ரேனில் உள்ள இரசிய சார்ப்புக்  கிளர்ச்சிக்காரர்கள்மீது உக்ரேனிய அரசு கடும் தாக்குதல்களை மேற்கொண்டு அவர்கள் வசமிருந்து நிலப்பரப்புக்களை மீட்டது. தனக்கு சார்பான கிளர்ச்சிக்காரர்கள் பின்வாங்கிச் செல்வதைப் பொறுக்காத இரசியா முதலில் உக்ரேனில் தவிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருள் என்ற போர்வையில் தனது படையினரையும் படைக்கலன்களையும் அனுப்ப முயன்றது. அது கை கூடாமல் போனதால் இரசியா இப்போது களவாக ஆயிரம் படையினரை கனரகப் படைக்கலன்களுடன் உக்ரேனிற்குள் அனுப்பி வைத்துள்ளது. 

இரசியப் பொருளாதாரம் ஆட்டம் காண்கிறது           
உக்ரேனில் இரசியாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கு நாடுகளும் ஜப்பானும் ஒஸ்ரேலியாவும் இரசியாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இரசியா இப்போது தனது படைகளை உக்ரேனிற்குள் அனுப்பிய படியால் மேலும் இறுக்கமான பொருளாதாரத் தடைகள் விதிக்கபப்டலாம். ஏற்கனவே இரசியா பொருளாதார விழ்ச்சிச் சுழலில் அகப்பட்டு விட்டதாக இரசிய பொருளாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இரசியா உக்ரேனிற்குள் படையினரை அனுப்பிய செய்தி வந்தவுடன் இரசிய நாணயமான ரூபிள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. பல பன்னாட்டு வர்த்தக் நிறுவனங்கள் இப்போது இரசியாவுடன் வர்த்தகம் செய்வதை நிறுத்தி வருகின்றன. இரசியா தனது மூலதனத் தேவையில் பாதிக்கு மேற்பட்டவற்றை மேற்கு நாடுகளிடமிருந்தே பெற்று வந்தது. இப்போது மேற்கு நாடுகளின் மூலதனச் சந்தை இரசிவிற்கு மூடப்பட்டுவிட்டது. இதற்கு மாற்றீடாக இரசிய தனத்க்குத் தேவையான மூலதனத்தை சீனாவிடமிருந்து பெறவேண்டி ஏற்படலாம். ஆனால் இரசியாவின் முழுத் தேவையையும் சீனாவால் திருப்தி செய்ய முடியாது. அத்துடன் சீன மூலதனத்திற்கு அதிக விலை கொடுக்க வேண்டும். புளூம்பேர்க் இரசிய மூலதன நிலைமை பற்றி இப்படிச் சொல்கின்றது: 
  • Bloomberg report of August 3: “Not a single US dollar, Euro, or Swiss franc was lent to a Russian company in July ….(this is) the first time since the depths of the financial crisis that Russian companies have faced such a credit drought.”

Forbes இப்படிச் சொல்கின்றது.  :
  • The European market for Russian debt is shrinking from nearly $50 billion to $3 billion, despite the best efforts of European banks to keep their Russian business afloat. 
இரசியாவிடம் போதிய வெளிநாட்டுக் கையிருப்பு உண்டு அதை வைத்துச் சிலகாலம் சமாளிக்கலாம்.பின்னர் இரசியா "தனது மழைக்காலக் கையிருப்புக்களைப்" பாவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளபப்ட்டுள்ளது. இரசியாவில் இருந்து பல பண முதலைகள் தமது பணத்துடன் தப்பி ஓடுகின்றனர். 2014 ஆண்டின் முதல் காலாண்டில் இரசியாவில் இருந்து 221பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பணம் வெளியேறியுள்ளது. 2013‍ம் ஆன்டின் மூலதன நிலைய 2014‍ம் ஆண்டிற்கும் பேணுவதாயின் இரசியா வெளிநாடுகளில் இருந்து 360பில்லியன் டொலர்களை நாட்டிற்குள் கொண்டு வரவேண்டும். இதற்கு அதிக விலை கொடுக்க வேன்டிய நிலையில் இரசியா உள்ளது. இரசியப் பொருளாதாரம் வீழ்ச்சியைச் சந்திக்கப்போவது உறுதி என சில பொருளாதார நிபுணர்கள் அடித்துச் சொல்கின்றனர். இரசியாவும் மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக தானும் பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தியுள்ளது. இரசியாவின் எரிபொருளில் பல மேற்கு ஐரோப்பிய நாடுகள் தங்கியுள்ளன. அமெரிக்காவால் இந்த இடைவெளியை நீண்டகால அடிப்படையில் நிரப்ப முடியும். இரசியாவில் இருக்கும் அமெரிக்க வர்த்த நிறுவனங்களுக்கு எதிராக புட்டீன் பல நடவடிக்கைகளை எடுக்கின்றார். மக் டொனால்டின் பல கிளைகளை சுகாதாரக் காரணங்களைக் காட்டி மூடியுள்ளார். சிலர் ஆதாரங்கள் எதையும் முன்வைக்காமல் இரசியாவின் பொருளாதாரத் தடையால் பல மேற்கு ஐரோப்பிய நாடுகள் வங்குரோத்து நிலையை அடையப் போகின்றன என்கின்றனர். சொல்பவர்கள்தான் அறிவில் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளனர். 

Thursday, 28 August 2014

மோதல் நிறுத்தத்தின் பின்னர் மார் தட்டும் ஹமாஸ்

2100 பலஸ்த்தீனியர்களும் 70 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலிற்கும் இடையில் நடந்த‌ மோதலில் பலஸ்த்தீனியர்கள் வாழும் காசா நிலப்பரப்பில் பெருந்தொகையான கட்டிடங்களும் கட்டுமானங்களூம் அழிக்கப்பட்ட நிலையில் தாம் வெற்றி பெற்றுள்ளதாக ஹமாஸ் அமைப்பினர் சொல்கின்றனர். ஹமாஸ் மானபங்கப்படுத்தப் பட்டதாகவும் இஸ்ரேல் தோல்வியடைந்ததாகவும் நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.

வெற்றி இரும்புக் கூரைக்கே
அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் உருவாக்கிய இரும்புக் கூரை எனப்படும் எவுகணை எதிர்ப்பு முறைமைதான் ஹமாஸிற்கும் இஸ்ரேலிற்கும் இடையில் நடந்த போரில் வெற்றி பெற்றதாகப் படைத்துறை நிபுணர்கள் சொல்கின்றனர். ஹமாஸ் அமைப்பினர் மிகவும் சிரமப்பட்டு ஈரானில் இருந்து கொன்டு வந்து சேர்த்த ஏவுகணைகளையும் தாம் உருவாக்கிய ஏவுகணைகளையும் கண்மூடித்தனமாக இஸ்ரேல் மீது வீசினர். மொத்தமாக 4600இற்கும் அதிகமான ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் 90 விழுக்காடு இரும்புக் கூரையால் அழிக்கப்பட்டு விட்டன. காசா இஸ்ரேல் எல்லையில் வசிக்கும் 6 இஸ்ரேலியப் பொதுமக்கள் மட்டுமே கொல்லப்பட்டனர். எஞ்சிய 64 பேர்களும் மோதலில் கொல்லப்பட்டன் இஸ்ரேலியப் படைத்துறையினர்.

தோல்வியடைந்தது இஸ்ரேலியத் தலைமை அமைச்சரே
எகிப்தும் இஸ்ரேலும் பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் இணைந்தே ஹமாஸிற்கும் இஸ்ரேலிற்கும் இடையிலான மோதல் நிறுத்தத்தை ஏற்படுத்தினர். இஸ்ரேலில் உள்ள தீவிரப் போக்குடையவர்கள் இந்த மோதல் நிறுத்தத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவிக்டொர் லீபெர்மன், பொதுமக்கள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யிட்ஷக் அஹரோனொவிச், தொடர்பாடல் துறை அமைச்சர் கிலட் ஏர்டன் பொருளாதாரத் துறை அமைச்சர் நஃப்டலி பெனெட் ஆகிய முக்கிய இஸ்ரேலிய அமைச்சர்கள் மோதல் நிறுத்தத்தைக் கடுமையாக எதிர்க்கின்றனர். ஹமாஸ் அமைப்பினரின் நிலக்கீழ் சுரங்கங்களை இஸ்ரேலால் முற்றாக அழிக்க முடியவில்லை. இத்தனை எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ அமைச்சரவையின் ஒப்புதல் பெறாமல் மோதல் நிறுத்தத்திற்கு ஒத்துக் கொன்டார். இஸ்ரேலில் உள்ள வலதுசாரித் தீவிரவாதிகள் ஹமாஸ் அமைப்பு முற்றாக அழிக்கப்படவேண்டும் காசா நிலப்பரப்பை இஸ்ரேல் கைப்பற்றி அங்கு ஆட்சி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கின்றனர். மோதல் தொடங்க முன்னர் நடத்தப் பட்ட கருத்துக் கணிப்பில் பெஞ்சமின் நெத்தன்யாஹூ 82 விழுக்காடு மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தார். மோதலின் பின்னர் இது 38 ஆக விழ்ச்சியடைந்துள்ளது.

நன்மைகள் பெற்ற காசா மக்கள்
இதுவரை காலமும் காசா நிலப்பரப்பின் வெளியுலகத் தொடர்பை இஸ்ரேல் தடுத்து வைத்திருந்தது. எகிப்து அதைக் கட்டுப்படுத்திக் கொன்டிருந்தது. இதனால் காசாவிற்குத் தேவையானவை எல்லாம் நிலக் கீழ்ச் சுரங்கங்களுடாகக் கடத்தியே செல்லப்பட்டன. காசா வாழ் மக்கள் மத்திய தரைக் கடலில் மீன்பிடிப்பது கூடத் தடை செய்யப்பட்டிருந்தது. மோதல் நிறுத்தத்தின் அம்சங்களாக இந்தத் தடைகள் நீக்கப்பட்டுள்ளன. காசாவில் இரு துறைமுகத்தையும் ஒரு விமான நிலையத்தையும் உருவாக்க இஸ்ரேல் அனுமதிப்பதாக உடன்பட்டுள்ளது. ஹாமாஸைப் பொறுத்தவரை இது  ஒரு வெற்றியாகும். இதனால் காசா வாழ் மக்கள் மோதல் நிறுத்த உடன்பாட்டை மகிழ்ச்சியுடன் வீதிகளில் இறங்கிக் கொன்டாடினர்.

இருதரப்பும் இன்னும் எத்தனை நாட்கள் மோதாமல் இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...