184 நாடுகளைக் கொண்ட தனி நபர் வருமானப் பட்டியலில் இந்தியா 140வது இடத்திலும் ஜப்பான் 19-ம் இடத்திலும் இருக்கின்றன. ஜப்பானின் தனிநபர் வருமானம் இந்தியர்களினதிலும் பார்க்க 25 மடங்காகும். ஜப்பான் ஆசியாவில் முதலாவதாக வளர்ச்சியடைந்த நாடு என்ற பெருமையைப் பெற்றது. அதைத் தொடர்ந்து தென் கொரியாவும் அந்தப் பட்டியலில் இணைந்து கொண்டது. ஆனால் 2013-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏறக்குறைய 5 விழுக்காடாக இருக்கையில் ஜப்பானின் வளர்ச்சி 1.5 வீழுக்காடாக மட்டுமே இருக்கின்றது. ஆசியாவில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் ஜப்பானினுடையது. இந்தியா மூன்றாம் இடத்தில் இருக்கின்றது. இந்த இரண்டு நாடுகளும் எப்படி இணைந்து செயற்படப் போகின்றன என்பது இப்போது முக்கிய கேள்வியாக இருக்கின்றது.
நாடி நின்ற அபேயும் தேடிச்சென்ற மோடியும்
இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஜப்பானிற்கான ஐந்து நாள் பயணம் ஒன்றை 2014 ஓகஸ்ட் 31-ம் திகதியில் இருந்து மேற்கொண்டார். இருபது ஆண்டுகளாக எழும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றது ஜப்பானியப் பொருளாதாரம். அதன் ஏற்றுமதியை அதிகரிக்க ஒரு பெரிய சந்தை தேவை. ஐந்து விழுக்காட்டைச் சுற்றிக் கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதர வளர்ச்சியை எட்டு விழுக்காட்டிற்க்கு மேல் உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் மோடி இருக்கின்றார். ஜப்பானியத் தலைமை அமைச்சர் ஷின்சே அபே 2007-ம் ஆண்டு எழுதிய அழகிய நாட்டை நோக்கி: ஜப்பானிற்கான எனது பார்வை (Towards a Beautiful Country: My Vision For Japan) என்னும் நூலில் இந்திய ஜப்பானிய உறவின் முக்கியத்துவத்தை எதிர்வு கூறி இருந்தார். இதுவரை ஜப்பானை ஆண்டவர்களில் ஷின்சே அபேயே இந்தியாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த ஒருவராவார். 2013-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அபே தனது மக்காளாட்சிப் பாதுகாப்பு வைரம் (Democratic Security Diamond) என்னும் முன் மொழிவில் அமெரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, வியட்னாம், ஒஸ்ரேலியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், புரூனே ஆகிய நாடுகள் பாதுகாப்புத் துறையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மோடி பதிவிக்கு வந்த 100 நாட்களில் மிக முக்கியத்துவம் கொடுத்த வெளிநாட்டுப் பயணமாக அவரது ஜப்பானியப் பயணம் அமைந்துள்ளது. ஜப்பான் நாடானது இந்துமாக்கடல் நாடுகளையும் மற்றும் பசுபிக்கடல் நாடுகளையும் அமெரிக்காவையும் இணைத்து ஒரு பெரும் கூட்டணியை சீனாவிற்கு எதிராக அமைக்க விரும்புகின்றது. காங்கிரசு ஆட்சியின் போது இதற்கு இந்தியா சற்றுத் தயக்கம் காட்டி வந்தது. இந்தியா சீனாவைப் பகைக்க விரும்பவில்லை. இதற்கு இரு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று இந்திய சீன வர்த்தகம். இரண்டாவது ஐக்கிய நாடுகள் சபையில் சீனாவின் ஆதரவுடன் இந்தியா ஒரு வல்லரசாக விருப்பம் கொண்டுள்ளது. பல இந்தியப் பெரு முதலாளிகள் இந்திய சீன வர்த்தகத்தால் பெரும் இலாபம் ஈட்டுகிறார்கள். மோடியும் அபேயும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவியவிதம் பற்றி பல பத்திரிகைகள் குறைந்தது ஒரு பந்தியாவது எழுதியுள்ளன. அது ஒரு வழமைக்கு மாறான தழுவல் என்கின்றன.
1. பாதுகாப்புத் துறைப் பொருத்தம்
இந்தியாவும் ஜப்பானும் தமக்கிடையிலான ஒத்துழைப்பில் பொருளாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக வெளியில் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அவர்களுக்கிடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் சீனாவிற்கு எதிராகக் கைகோர்ப்பதே. இரு நாடுகளும் இணைந்து ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் பல பாதுகாப்பு ஒத்துழைப்பைச் செய்ய முடியும். மலாக்க நிரிணையை இரு நாடுகளும் மலேசியாவுடனும் மற்றைய பிராந்திய நாடுகளுடனும் இணைந்து தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதன் மூலம் சீனாவின் கப்பப் போக்குவரத்தின் பெரும்பகுதியைக் கட்டுப் படுத்த முடியும். மோடியின் முதலாவது வெளிநாட்டுப் பயணம் பூட்டானிற்கானதாக் இருந்தது. பின்னர் அவரது நேபாளத்திற்கான பயணமும் அதைத் தொடர்ந்து அவர் ஜப்பானிற்கு மேற்கொண்ட பயணமும் சீனாவின் பிராந்தியஅச்சுறுத்தலை மையப்படுத்தியதாகவே அமைந்துள்ளன. ஏற்கனவே அமெரிக்கா, ஜப்பான் இந்தியா ஆகிய நாடுகள் மூன்றும் இணைந்து மலபார் பயிற்ச்சி என்னும் பெயரில் ஒரு பெரும் கடற்போர் ஒத்திகையைச் செய்துள்ளன. இது சீனாவை அடக்க எடுக்கும் முயற்ச்சி என்று சொல்லத் தேவையில்லை.
2. மனித வளப் பொருத்தம்
நாட்டில் வேலையில்லாப் பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும் என்ற நிலையில் இருக்கின்றது இந்தியா. உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே அதிக வயது போனவர்களை வைத்துக் கொண்டு தவிக்கும் நாடு ஜப்பான். ஜப்பானிய மக்கள் தொகை 2013-ம் ஆண்டு 270,000 ஆல் குறைந்துள்ளது. ஜப்பானின் மக்கள் தொகை 127 மில்லியன்கள் இந்திய மக்கள் தொகை இதிலும் பார்க்கப் பத்து மடங்கானது. மனிதவளம் மிக்க இந்தியாவும் தொழில்நுட்ப வளம் நிறைந்த ஜப்பானும் இணைந்து பெரும் பொருளாதார வெற்றிகளை ஈட்ட முடியும். வேறு வகையில் சொன்னால் இந்தியத் தொழிலாளர்களைச் சுரண்ட ஜப்பானிற்கு அதிக வாய்ப்புள்ளது.
3. வர்த்தகப் பொருத்தம்
2013-ம் ஆண்டு இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையிலான வர்த்தகம் 15.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியானதாக மட்டுமே இருந்தது. இது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகத்தின் காற்பங்கு மட்டுமே. இந்தியாவிற்கு ஜப்பான் பெருமளவு வாகனங்களை ஏற்றுமதி செய்ய முடியும். அதே வேளை யப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் தனது வாகனங்களை உற்பத்தி செய்யவும் முடியும். ஆனால் இந்த வகையிலான ஒத்துழைப்பைப் பற்றி மோடி அதிகம் அக்கறை காட்டியதாகத் தெரிவரில்லை. மோடிக்கு தேர்தலின் போது "உதவி செய்த” இந்திய வாகன உற்பத்தியாளர்களை மோடி அதிருப்திக்கு உள்ளாக்க விரும்பவில்லை. சீனாவின் உள்நாட்டு வாகன உற்பத்தித் துறை வளராமல் இருப்பதற்கு ஜப்பானே காரணம். சீனர்கள் சீனாவில் உற்பத்தியாகும் வாகனங்களைவிட ஜப்பானிய வாகனங்களை வாங்க அதிகம் விரும்புகின்றார்கள். இருந்தும் ஜப்பானும் இந்தியாவும் இருதரப்பிற்கும் நன்மையளிக்கக் கூடிய வகையில் வர்த்தங்களை மேம்படுத்த முடியும். சோனி, டொயோட்டா, ஹொண்டா போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் தமது பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
4. படைக்கல உற்பத்திப் பொருத்தம்
தற்போது உலகிலேயே அதிக அளவு படைக்கலன்களை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கின்றது. தனது படைக்கலன் உற்பத்தியை விரிவாக்கும் நோக்கத்துடன் ஜப்பான் இருக்கின்றது. 1998இல் இந்தியா மேற்கொண்ட அணுக்குண்டுப் பரிசோதனையைத் தொடர்ந்து ஜப்பான் இந்தியாமீது சில பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது. மோடியின் பயணத்தின் போது ஆறு இந்தியப் படைத்துறை நிறுவனங்கள் மீது ஜப்பான் விதித்திருந்த தடைகளை நீக்க ஜப்பான் ஒத்துக் கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த பின்னர் ஜப்பான் எந்த ஒரு நாட்டிற்கும் படைக்கலன்கள் விற்பதில்லை என்ற முடிவில் இருந்தது. இந்த நிலைப்பாட்டில் இருந்து மாறி இந்தியாவிற்கு ஈரூடக விமானங்களை விற்க ஜப்பான் முன்வந்துள்ளது. ஜப்பானின் இந்த மாற்றம் சீன விரிவாக்கத்திற்கு எதிராக ஜப்பானும் இந்தியாவும் நெருங்கி ஒத்துழைக்கவிருக்கின்றன என்பதற்குக் கட்டியம் கூறுகின்றது. 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜப்பானியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் இற்சுனொரி ஒனோடேராவும் இந்திய (முன்னாள்)வெளியுறவுத் துறை அமைச்சர் ஏ கே அந்தோனியும் புது டில்லியில் சந்தித்து உரையாடிய போது "இருவருடன் இருவர்" என்ற ரீதியில் பேசுவதாக முடிவெடுக்கப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஜப்பானிடம் இருந்து இந்தியா சின்மாய்வா யூஎஸ் -2 என்னும் ஈருடக விமானங்களை வாங்கவும் ஒத்துக் கொள்ளப்பட்டது. சின்மாய்வா யூஎஸ் -2 விமானங்கள் கடல் மேற்பரப்பில் படகு போல் மிதக்கவும் கூடியவை. 7,516.6கிலோ மீட்டர் (4,670.6 மைல்கள்) நீளமான தனது கடற்கரையைப் பாதுகாக்க இந்தியாவிற்கு அதிக வலுக்கொண்ட ஒரு கடற்படை தேவை. கப்பல் கட்டுமானத்தில் உலகில் முன்னணியில் நிற்கும் ஜப்பானும் கடற்படைக் கலன்களை நிர்மாணிப்பதில் அனுபவம் பெற்றுக் கொண்டிருக்கும் இந்தியாவும் இணைந்து உலகிலேயே தரமான கடற்படைக் கலன்களை உருவாக்க முடியும்.
5. கலாச்சாரப் பொருத்தம்
பௌத்த மதத்தை முதலில் பரப்பிய நாடு இந்தியா. பௌத்தமதம் வாழும் நாடு ஜப்பான். 736-ம் ஆண்டு ஜப்பான் சென்ற போதி சேனா என்ற துறவி ஜப்பானில் புத்தமதத்தை பெருமளவில் பரப்பினார். பிரித்தானியக் காலனித்துவத்திற்கு எதிராகப் போராடுவதற்கு சுபாஷ் சந்திரபோஸிற்கு ஜெர்மன் உதவ மறுத்த போது ஜப்பான் அவருக்கு உதவியது. ஜப்ப்பான் உதவி வழங்கும் நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இரு நாட்டு மக்களும் தற்போது தமது ஆட்சியாளர்களாக வலது சாரி அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
6. பிராந்தியப் பொருத்தம்
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஒத்துழைக்க வேண்டிய கட்டாயத்தில் ஜப்பானும் இந்தியாவும் இருக்கின்றன. ஜப்பானின் கிழக்குச் சீனக் கடற்பிராந்தியத்தில் சீனா ஜப்பனிற்கு அச்சுறுத்தலாக இருகின்றது. அங்குள்ள செங்காகு, டயாகு ஆகிய தீவுகளை ஜப்பான் தன்னுடையது என்கின்றது. சீன விமானங்களும் கடற்படைக் கப்பல்களும் அத்தீவுகளின் பிராந்தியத்திற்குள் அடிக்கடி அத்து மீறி புகுவதாக ஜப்பான் குற்றம் சாட்டுகின்றது. சீனா அதை மறுத்து அவை தனக்கே சொந்தம் என்கின்றது. அதே போல் ஒஸ்ரியா நாட்டின் நிலப்பரப்பளவைக் கொண்ட அருணாச்சலப் பிரதேசத்தை சீனா தன்னுடையது என்கின்றது. சீனப் படையினர் அடிக்கடி அருணாச்சலப் பிரதேசத்துக்குள் ஊடுருவி படை முகாம்களை அமைக்கின்றனர். சீனப் பிராந்திய ஆதிக்கத்தைச் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இரு நாடுகளுக்கும் இருக்கின்றன.
7. கட்டுமானப் பொருத்தம்
ஜப்பானின் உள்ளகக் கட்டுமானம் உலகத் தரம் வாய்ந்தது. உலகிலேயே நெரிசல் மிக்க டோக்கியோ நகரை முகாமைத்துவம் செய்யும் அனுபவம் ஜப்பானிடம் உண்டு. துரித தொடரூந்துச் சேவை, புதிய நகரக் கட்டுமானம் ஆகியவற்றில் ஜப்பானின் அனுபவத்தையும் திறமையையும் இந்தியா பெற்றுக் கொள்ளலாம். மோடியின் ஜப்பானியப் பயணத்தின் போது இந்தியக் கட்டுமானங்களிலும் புது நகர உருவாக்க்கத்திலும் அடுத்த ஐந்து ஆண்டுகளின் ஜப்பானிய அரசும் தனியார் நிறுவனங்களும் 53 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதாக உறுதியளித்துள்ளன. இந்தியாவின் கட்டுமானப் பசியை ஜப்பானால் திருப்தி செய்ய முடியும். மோடி குஜாராத் மாநில முதலமைச்சராக இருந்த போது பாவித்த "முதலீட்டாளர்களுக்கு சிவப்பு நாடா இல்லை; சிவப்புக் கம்பளம் உண்டு" என்ற வாசகத்தை ஜப்பானிலும் வலியுறுத்திச் சொன்னார். வெளிநாட்டு மூதலீடுகள் தொடர்பான முடிவுகளை இந்திய அரசு இப்போது மிகவும் துரிதமாக மேற்கொள்கின்றது என உறுதியளித்தார் மோடி. ஜப்பானிய முதலீட்டார்கள் முன் பேசும் போது இந்தியா மக்களாட்சி, மக்கள் தொகை, மக்கள் தேவை ஆகிய மூன்றிலும் உலகில் முன்னணியில் நிற்கின்றது என்றார் மோடி. ஐம்பதிற்கும் மேற்பட்ட நகரங்களை இணைக்கும் துரித தொடரூந்து சேவையை உருவாக்கும் திட்டத்துடன் மோடி இருக்கின்றார்.
8. வன்பொருள் மென்பொருள் பொருத்தம்
இந்தியா உலகில் சிறந்த கணனி மென்பொருள் உற்பத்தி செய்யக் கூடிய நாடு. அமெரிக்காவில் உள்ள உலகின் முதல்தர மென் பொருள் உற்பத்தி நிறுவனங்களில் பல இந்தியரக்ள் முதுகெலும்பாக இருந்து பணிபுரிகின்றனர். ஜப்பான் கணனி வன்பொருள் உற்பத்தில் சிறந்து விளங்குகின்றது. இரு நாடுகளும் இணைந்து வரும் காலங்களில் கணனித் துறையில் அரசோச்ச முடியும்.
9. உலக அரங்கத் தேவைப் பொருத்தம்
தற்போது உலக அரங்கில் ஜப்பான் தனது பாதுகாப்பிற்கும் ஆதிக்கத்திற்கும் அமெரிக்காவில் பெரிதும் தங்கியிருக்கின்றது. அதே போல் இந்தியா தனது படைக்கல உற்பத்திக்கும் தேவையான போது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இந்தியாவிற்கு ஏற்ப இரத்து அதிகாரம் பாவிக்கவும் இரசியாவில் பெரிதும் தங்கியிருக்கின்றன. பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் இருக்கும் சீனாவும் பிரேசிலும் மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவிற்குப் போட்டியான நாடுகளாகும். இவ்விரண்டு நாடுகளும் தமது மக்களுக்கான வேலைவாய்ப்பை உலக அரங்கில் தேடுவதில் இந்தியாவுட்ன் போட்டி போடுகின்றன. உலக அரங்கில் ஒன்றுடன் ஒன்று போட்டி போடாமல் இந்தியாவும் ஜப்பானும் இணைந்து தமது பேரம் பேசும் வலுவை அதிகரித்துக் கொள்ளலாம.
10. மாற்று எரிபொருள் உற்பத்திப் பொருத்தம்
இந்தியா ஜப்பான ஆகிய இரு நாடுகளும் எரிபொருள் இறக்குமதியில் பெரிதும் தங்கியிருக்கின்றன. இரண்டும் இணைந்து காற்றலையில் இருந்தும், சூரிய ஒளியில் இருந்தும் வலு பெறும் பல முயற்ச்சிகளில் ஈடுபடலாம். சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் பெறும் துறையில் சீனா அமெரிக்காவையும் முந்தி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இந்தியாவும் சீனாவும் ஜேர்மனியும் இணைந்து முதலாம் இடத்தைப் பிடிக்கலாம்.
இரு நாட்டுத் தலைமை அமைச்சர்களும் இறுதியில் இணைந்து வெளிவிட்ட கூட்டறிக்கைக்கு இந்தியாவிற்கான டோக்கியோப் பிரகடனம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜப்பானிய இந்திய உறவு மேம்படும் போது ஜப்பானால் இந்தியாவை கேந்திரோபாய ரீதியில் மேலும் அமெரிக்காவிற்கு நெருக்கமாகக் கொண்டு செல்ல முடியும். சீனக் கடற்படைக்கப்பல்கள் அமெரிக்கக் கடற்படைக் கப்பலை மோதிவிடும் வகையில் நெருங்கிச் சென்றதும் சீனப் போர் விமானம் அமெரிக்காவின் நீர் மூழ்கி அழிப்பு விமானத்தை மிரட்டும் வகையில் நெருக்கமாகப் பறந்து சென்றது அண்மையில் நடந்த இரு நிகழ்வுகள். இவை அமெரிக்காவின் ஆசிய பசுபிக் கடற்பிராந்தியத்தில் செலுத்தும் படைத்துறை மேன்மையையும் ஆதிக்கத்தையும் சோதனைக்கு உள்ளாக்க சீனா முயல்கின்றது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. இது நாளை ஒரு சவாலாக முன்னர் அமெரிக்கா தனது கேந்திரோபாய பங்காண்மையை ஜப்பானுடனும் இந்தியாவுடனும் செய்ய விரும்பும். இது ஆசிய பசுபிக் பிராந்தியத்தை ஒரு வல்லாதிக்க நாடுகளின் மோசமான போட்டிக்களமாக மாற்றும். இதில் தமிழர்களும் பாதிக்கப்படலாம்
சிங்களவர்களுக்கு உதவி செய்வதைத் தனது தலையாய கடமையாகக் கொண்ட ஜப்பானும் தமிழர்கள் சிங்களவர்களுக்கு அடங்கி இருக்க வேண்டும் சிங்களவர்கள் இந்தியாவிற்கு அடங்கி இருக்க வேண்டும் என்ற பேரினவாத இந்துத்துவாக்களும் இணைவது தமிழர்களுக்கு உகந்தது அல்ல.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment