வெற்றி இரும்புக் கூரைக்கே
அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் உருவாக்கிய இரும்புக் கூரை எனப்படும் எவுகணை எதிர்ப்பு முறைமைதான் ஹமாஸிற்கும் இஸ்ரேலிற்கும் இடையில் நடந்த போரில் வெற்றி பெற்றதாகப் படைத்துறை நிபுணர்கள் சொல்கின்றனர். ஹமாஸ் அமைப்பினர் மிகவும் சிரமப்பட்டு ஈரானில் இருந்து கொன்டு வந்து சேர்த்த ஏவுகணைகளையும் தாம் உருவாக்கிய ஏவுகணைகளையும் கண்மூடித்தனமாக இஸ்ரேல் மீது வீசினர். மொத்தமாக 4600இற்கும் அதிகமான ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் 90 விழுக்காடு இரும்புக் கூரையால் அழிக்கப்பட்டு விட்டன. காசா இஸ்ரேல் எல்லையில் வசிக்கும் 6 இஸ்ரேலியப் பொதுமக்கள் மட்டுமே கொல்லப்பட்டனர். எஞ்சிய 64 பேர்களும் மோதலில் கொல்லப்பட்டன் இஸ்ரேலியப் படைத்துறையினர்.
தோல்வியடைந்தது இஸ்ரேலியத் தலைமை அமைச்சரே
எகிப்தும் இஸ்ரேலும் பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் இணைந்தே ஹமாஸிற்கும் இஸ்ரேலிற்கும் இடையிலான மோதல் நிறுத்தத்தை ஏற்படுத்தினர். இஸ்ரேலில் உள்ள தீவிரப் போக்குடையவர்கள் இந்த மோதல் நிறுத்தத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவிக்டொர் லீபெர்மன், பொதுமக்கள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யிட்ஷக் அஹரோனொவிச், தொடர்பாடல் துறை அமைச்சர் கிலட் ஏர்டன் பொருளாதாரத் துறை அமைச்சர் நஃப்டலி பெனெட் ஆகிய முக்கிய இஸ்ரேலிய அமைச்சர்கள் மோதல் நிறுத்தத்தைக் கடுமையாக எதிர்க்கின்றனர். ஹமாஸ் அமைப்பினரின் நிலக்கீழ் சுரங்கங்களை இஸ்ரேலால் முற்றாக அழிக்க முடியவில்லை. இத்தனை எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ அமைச்சரவையின் ஒப்புதல் பெறாமல் மோதல் நிறுத்தத்திற்கு ஒத்துக் கொன்டார். இஸ்ரேலில் உள்ள வலதுசாரித் தீவிரவாதிகள் ஹமாஸ் அமைப்பு முற்றாக அழிக்கப்படவேண்டும் காசா நிலப்பரப்பை இஸ்ரேல் கைப்பற்றி அங்கு ஆட்சி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கின்றனர். மோதல் தொடங்க முன்னர் நடத்தப் பட்ட கருத்துக் கணிப்பில் பெஞ்சமின் நெத்தன்யாஹூ 82 விழுக்காடு மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தார். மோதலின் பின்னர் இது 38 ஆக விழ்ச்சியடைந்துள்ளது.
நன்மைகள் பெற்ற காசா மக்கள்
இதுவரை காலமும் காசா நிலப்பரப்பின் வெளியுலகத் தொடர்பை இஸ்ரேல் தடுத்து வைத்திருந்தது. எகிப்து அதைக் கட்டுப்படுத்திக் கொன்டிருந்தது. இதனால் காசாவிற்குத் தேவையானவை எல்லாம் நிலக் கீழ்ச் சுரங்கங்களுடாகக் கடத்தியே செல்லப்பட்டன. காசா வாழ் மக்கள் மத்திய தரைக் கடலில் மீன்பிடிப்பது கூடத் தடை செய்யப்பட்டிருந்தது. மோதல் நிறுத்தத்தின் அம்சங்களாக இந்தத் தடைகள் நீக்கப்பட்டுள்ளன. காசாவில் இரு துறைமுகத்தையும் ஒரு விமான நிலையத்தையும் உருவாக்க இஸ்ரேல் அனுமதிப்பதாக உடன்பட்டுள்ளது. ஹாமாஸைப் பொறுத்தவரை இது ஒரு வெற்றியாகும். இதனால் காசா வாழ் மக்கள் மோதல் நிறுத்த உடன்பாட்டை மகிழ்ச்சியுடன் வீதிகளில் இறங்கிக் கொன்டாடினர்.
இருதரப்பும் இன்னும் எத்தனை நாட்கள் மோதாமல் இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment