1298-ம் ஆண்டு ரொபேர்ட் புரூஸ் தலைமையில் ஸ்கொட்லாந்து மக்கள் ஆங்கிலேயரைத் தோற்கடித்து தமது சுதந்திரத்தைப் பெற்றனர். அதன் பின்னர் ஆங்கிலேயர் ஸ்கொட்லாந்தைக் கைப்பற்ற பல தடவை முயன்றனர். கிரிஸ்த்துவ மதப் பிரிவுகளும் மன்னர் குடும்பத்தினரின் குளறுபடிகளும் ஸ்கொட்லாந்தைச் சிதறடித்தது.
அரச குடும்பக் குளறுபடி
ஸ்கொட்லாந்தின் ஐந்தாம் ஜேம்ஸ் மன்னர் இறக்கும் போது அவரது ஒரே மகளான மேரி பிறந்து ஆறாம் நாள் அரசியாக்கப்பட்டார். ஆட்சிஆளுநர்களால் நடாத்தப்பட்டது. அப்போது ஆட்சி புரட்டஸ்த்தாந்திரனருக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் இழுபறிபட்டது. கத்தோலிக்கருக்கு ஆதரவாக பிரான்ஸும் புரட்டஸ்தாந்தினருக்கு ஆதரவாக இங்கிலாந்தும் செயற்பட்டன. இரு நாடுகளும் தம்முடன் ஸ்கொட்லாந்தை இணைக்க முயன்றன. பிரான்ஸின் இரண்டாம் ஹென்றி மன்னர் ஸ்கொட்லாந்தின் குழந்தை அரசிக்குத் தன் மகனைத் திருமணம் செய்து வைத்து ஸ்கொட்லாந்தைப் பிரான்ஸுடன் இணைத்தார். வளர்ந்த அரசி மேரி Henry Stuart Lord Darnley என்னும் கத்தோலிக்க ஆங்கிலேயரை இரண்டாம்தாரமாகவும் James Hepburn என்னும் Lord Bothwellஎன்னும் புரட்டஸ்த்தாந்து ஆங்கிலேயரை மூன்றாம் தாரமாகவும் மணந்தார். மேரியின் மகன் ஸ்கொட்லாந்திற்கும் இங்கிலாந்திற்கும் மன்னரானார். ஒரு மன்னரின் கீழ் இரு அரசுகள் இயங்கி வந்தன. அரசி மேரிக்கு இறுதியில் கொலைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தவிச்ச முயல் அடித்த பிரித்தானியா
ஸ்கொட்லாந்து கத்தோலிக்கப் பிடிக்குள் அகப்பட்டு தனக்கு எதிரான நாடாக மாறக்கூடாது என இங்கிலாந்து கங்கணம் கட்டிக் கொண்டிருந்தது. 1707-ம் ஆண்டு ஸ்கொட்லாந்து அரசு ஒரு நிதி நெருக்கடியைச் சந்தித்தது. அமெரிக்கக் கண்டத்தின் பனாமா பிரதேசத்தில் ஸ்கொட்லாந்து செய்த குடியேற்றத் திட்டத்தால் இந்த நிதி நெருக்கடி உருவானது. இத்திட்டத்தில் ஸ்கொட்லாந்து தனது செல்வத்தில் பாதியை இழந்தது. அதேவேளை இங்கிலாந்து செல்வம் கொழிக்கும் நாடாக இருந்தது. இதை வைத்து இரு நாடுகளும் ஒன்றாக்க இரு தரப்பினரும் ஒத்துக் கொண்டதாகச் சொல்லப்படுகின்றது. இதன் பின்னர் ஸ்கொட்லாந்தின் பாராளமன்றத்திலும் இங்கிலாந்துப் பாராளமன்றத்திலும் இயற்றப்பட்ட சட்டங்கள் மூலம் இரு நாடுகளும் ஒன்றாக்கப்பட்டன. ஸ்கொட்லாந்தின் பாராளமன்றத்தில் மிகவும் சிரமப்பட்டே இரு நாடுகளையும் ஒன்றாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஸ்கொட்லாந்தின் பாராளமன்ற உறுப்பினர்கள் விலை போனதாகவும் கருத்து நிலவுகின்றது. இரு நாடுகளின் இணைப்பிற்குப் பேராதரவு இருந்திருக்கவில்லை. இணைப்புச் சட்டம் நிறைவேற்றிய பின்னர் ஸ்கொட்லாந்தின் பாராளமன்றம் செயற்படாமல் போனது.
ஒன்றானால் பெரிது பெரிதானால் வலிமை
ஸ்கொட்லாந்து மக்கள் தமது ஆட்சியுரிமையை வெஸ்ற்மின்ஸ்டர் பாராளமன்றத்திற்குத் தாரைவார்த்து 307 ஆண்டுகள் கடந்து விட்டன. தற்போது ஸ்கொட்லாந்தால் ஒரு தனி நாடாக இருந்து செயற்பட முடியும். ஆனால் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய தேசங்கள் ஒன்றிணைந்து ஐக்கிய இராச்சியமாக இருந்தால் அது இன்னும் சில ஆண்டுகளில் பிரான்ஸையும் ஜேர்மனியையும் மிஞ்சி ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப் பெரிய நாடாக உருவெடுக்க முடியும். ஐக்கிய இராச்சியத்தில் குடியேறிய குடியேறிக் கொண்டிருக்கும் திறமை மிக்க இளையோரால் பொருளாதார ரீதியில் அது வலுவடைந்து கொண்டிருக்கின்றது. மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஐக்கிய இராச்சியம் அதிக அளவு இளையோரைக் கொண்ட ஒரு நாடாக இருக்கின்றது. இப்படிப் பட்ட ஒரு நாட்டை பல பெரும் கூட்டாண்மைகள் (Corporates) விரும்புகின்றன. இந்தப் பெரிய நாட்டில் அவர்களால் பெரும் இலாபம் ஈட்ட முடியும் என நம்புகின்றனர். இதனால் அவர்கள் ஸ்கொட்லாந்து மக்கள் சுந்தந்திரம் பெறுவதை எதிர்க்கின்றனர்
சிறியது அழகானது
சுதந்திர ஸ்கொட்லாந்தால் தனது தனித்துவத்தையும் பேண முடியும். அதன் பொருளாதாரத்தையும் திறம்பட நிர்வகிக்க முடியும். ஸ்கொட்லாந்தைப் போன்ற ஒரு சிறிய தேசமான நியூசிலாந்து பிரித்தானியாவில் இருந்து பிரிந்து தனி நாடாகத் திறம்பட இயங்கிக் கொண்டிருக்கினது. மலேசியாவிடமிருந்து பிரிந்த சிங்கப்பூர் ஒரு குட்டி நாடாக மிகத் திறமையாக நிர்வகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
மிரட்டும் கூட்டாண்மை நாட்டாண்மைகள்
ஸ்கொட்லாந்து பிரியும் போது பிரித்தானியா முழுவதும் ஒரு தற்காலிகப் பொருளாதாரத் தளம்பல் ஏற்பட வாய்ப்புண்டு. இதை ஒட்டி பங்குச் சந்தைகளில் விலை வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு. ஸ்கொட்லாந்தின் பிரிவினைக்கு ஆதரவுத் தளம் கூடுகின்றது என்ற கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்தவுடன். பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. பிரித்தானிய நாணயமான ஸ்ரேலிங்க் பவுண்டின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. இதை சாட்டாக வைத்துக் கொண்டு பெரு வர்த்தக நிறுவனங்களான கூட்டாண்மைகள் (Corporates) ஸ்கொட்லாந்து மக்களை மிரட்டட் தொடங்கி விட்டன. தற்போது ஸ்கொட்லாந்தில் இருந்து செயற்படும் கூட்டாண்மைகள் ஸ்கொட்லாந்து தனிநாடாகினால் தாம் ஸ்கொட்லாந்தில் இருந்து விலகி விடுவதாக மிரட்டுகின்றன. ஒரு கட்டத்தில் YouGov எடுத்த கருத்துக் கணிப்பில் பிரிவினைக்கு ஆதரவு எதிர்ப்பிலும் பார்க்கச் சிறிதளவு அதிகம் என்றவுடன் ஸ்கொட்லாந்தில் செயற்படும் கூட்டாண்மைகளின் பங்குச் சந்தைப் பெறுமதியில் 17 பில்லியன் பவுண்கள் வீழ்ச்சியடைந்தது. ஸ்கொட்லாந்து தவிர்ந்த மற்றத் தேசங்களான இங்கிலாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகியவற்றில் எடுத்த கருத்துக் கணிப்பில் 81 விழுக்காடு மக்கள் ஸ்கொட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் எனச் சொல்கின்றது. ஸ்கொட்லாந்தில் தலைமையகத்தைக் கொண்ட வங்கிகள் தாம் இங்கிலாந்து மைய வங்கிக்குக் கீழ் இருப்பதை விரும்புவதாகச் சொல்கின்றன. இறுதிக் கடன் வழங்கும் பாதுகாப்பு அதிலிருந்து தமக்கு அதிகமாகக் கிடைக்கும் என்கின்றன அவை.
போதுமடா சாமி
56 நாடுகள் இருந்த உலகில் இப்போது 193இற்கு மேற்பட்ட நாடுகள் இருக்கின்றன. இது கூட்டாண்மைகளுக்குப் (Corporates) பெரும் சிரமமாகும். வேறு வேறு நாணயங்கள் வேறு வேறு சட்டப் பிரச்சனைகளுக்கு அவை முகம் கொடுக்க வேண்டும். இதனால் கூட்டாண்மைகள் (Corporates) புதிய நாடுகள் உருவாகுவதை விரும்பவில்லை. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஸ்கொட்லாந்து பிரியக் கூடாது எனப் பகிரங்கமாக அறிவித்து விட்டார். நாடுகள் அதிகரிக்கும் போது அமெரிக்காவின் வெளியுறவுத் துறை, உளவுத் துறை, பாதுகாப்புத்துறை, நிதித்துறை ஆகியனவற்றின் பிரச்சனைகளும் பொறுப்புக்களும் அதிகரிக்கும். இதனால் அமெரிக்கா உட்படப் பல ஆதிக்க நாடுகள் புதிய நாடுகள் உருவாகுவதை விரும்புவதில்லை. பன்னாட்டு நாணய நிதியமும் பிரிவினைகளை விரும்புவதில்லை.
பரவும் பிரிவினை நோய்
ஸ்கொட்லாந்து பிரிந்தால் அந்தத் தனித்துவவாதம் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவ வாய்ப்புண்டு. முக்கியமாக ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் இதே போன்ற கருத்துக் கணிப்பு வலியுறுத்தப்படும். அயர்லாந்திலும் வேல்ஸிலும் சுதந்திர வேட்கை உருவெடுக்கும். இதனால் வெளிநாடுகளில் ஸ்கொட்லாந்து பிரிவினைக்கு ஆதரவில்லை. இந்திய வெளிநாட்டமைச்சர் சுஸ்மா சுவராஜ் அவர்கள் ஸ்கொட்லாந்தின் பிரிவினை பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் போது கடவுள் விட்ட வழி என்றார்.
நீண்டகால அடிப்படையில் எல்லாம் சரிவரும்
ஸ்கொட்லாந்தின் பிரிவினையால் ஸ்ரேலிங் பவுண் வீழ்ச்சி காண்பது ஒரு இடைக்கால நிகழ்வு மட்டுமே. 10 ஆண்டுகால அரச கடன் ஆவணமான Giltsஇன் பெறுமதியில் ஸ்கொட்லாந்துப் பிரிவினை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஸ்கொட்லாந்து மக்கள் பிரிவினை தொடர்பாக அரைவாசி ஆதரவு இருக்கும் வேளையில் ஸ்கொட்லாந்தின் வர்த்தகர்கள் நடுவே 10 விழுக்காட்டினர் மட்டுமே பிரிவினையை ஆதரிக்கின்றனர். ஸ்கொட்லாந்திற்கு அதிகாரப் பரவலாக்கம் செய்து அங்கு ஒரு மாநில அரசு உருவாக்கப்பட்ட போது அது பொருளாதாரச் சீரழிவை உருவாக்கும் என கடும் எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் அண்மைக்காலங்களாக ஸ்கொட்லாந்தின் பொருளாதாரம் ஐக்கிய இராச்சியப் பொருளாதாரத்தைப் போலவே செயற்படுகின்றது:
பிரிவினையும் கட்சி அரசியலும்
ஸ்கொட்லாந்து தொழிற்கட்சியின் கோட்டையாக இருக்கின்றது. ஸ்கொட்லாந்தின் தேசியவாதம் அண்மைக்காலங்களாக வளர்ச்சியடைந்த போது அங்கு ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி செல்வாக்குச் செலுத்துகின்றது. இருந்தும் இன்னும் தொழிற்கட்சிக்கு அங்கு ஆதரவு இருக்கின்றது. பிரித்தானியத் தேர்தல் முடிவுகளின் சரித்திரத்தை வைத்துப் பார்க்கும் போது ஸ்கொட்லாந்து தனியாகப் பிரிந்தால் தொழிற்கட்சி ஒரு போதும் ஆட்சி அமைக்க முடியாது. இதனால் தொழிற்கட்சி பிரிவினையை விரும்பவில்லை. ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த தொழிற்கட்சித் தலைவர்களே பிரிவினைக்கு எதிராகக் கடும் பிரச்சாரம் செய்கின்றனர். தொழிற்கட்சியின் தொழிற்சங்கங்களிடையே பிரிவினைக்கு கணிசமான ஆதரவு உண்டு. பழமைவாதக் கட்சி பிரிவினையை விரும்பாத போதும் அது பிரிவினைக்கு எதிராகப் பெரும் பரப்புரைகளைச் செய்யவில்லை. அப்படிச் செய்தால் எதிர்மாறான விளைவுகள் ஏற்பட்டு பிரிவினைவாதம் வளரும் என்பதால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பழமைவாதக் கட்சி பிரச்சாரம் செய்கின்றது.
மறைக்கப்பட்ட உண்மைகள்
ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபதிகளின் ஆரம்பத்தில் முதன் முதலாக ஸ்கொட்லாந்தின் 30விழுக்காடு மக்களின் ஆதரவை ஸ்கொட்லாந்தின் தேசியவாதக் கட்சி பெற்றிருந்தது. அப்போதைய தொழிற்கட்சி அரசு ஸ்கொட்லாந்து தனியாகப் பிரிக்கப்பட்டால் அதன் பொருளாதார வளம் எப்படி இருக்கும் என்பது பற்றி ஆராய பேராசிரியர் கவின் மக் குரோன் தலைமையில் ஒரு குழு அமைத்தது. அந்த பேராசிரியர் மக் குரோனின் அறிக்கை நீண்ட நாட்களாக மறைத்து வைக்கப்பட்டது. அந்த அறிக்கை 2000-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தகவலறியும் சட்டத்தின் படி 2005-ம் வெளிவிடப்பட்டது. அந்த அறிக்கையின்படி ஸ்கொட்லாந்து தனிநாடாகப் பிரிந்தால் அதன் பொருளாதாரப் பிரச்சனைகள் பல தீர்க்கப்படுவதுடன் ஸ்கொட்லாந்து மக்களின் தனி நபர் வருமானம் 30 விழுக்காட்டால் அதிகரிக்கும். சுதந்திர ஸ்கொட்லாந்தின் வரவுகள் செலவிலும் அதிகமாக இருப்பதுடன் அதன் ஏற்றுமதியும் இறக்குமதியிலும் பார்க்க அதிகமாக இருக்கும்.
ஹரி பொட்டர் கதாசிரியை
ஸ்கொட்லாந்தில் வசிக்கும் ஆங்கிலேயரான ஹர் பொட்டர் கதாசிரியை றௌலிங் பிரிவினையைக் கடுமையாக எதிர்ப்பதுடன் பிரிவினைக்கு எதிரான பரப்புரைக்கு ஒரு மில்லியன் பவுண்களை வழங்கியுள்ளார். முன்னாள் மான்செஸ்டர் யுனைட்டெட் முகாமையாளரும் பயிற்ச்சியாலருமான அலெக்ஸ் ஃபெர்க்குசன் ஒரு ஸ்கொட்லாந்து தேசத்தவர். அவர் பிரிவினையை எதிர்க்கின்றார். ஜேம்ஸ் பொண்ட் நடிகர் சோன் கொன்ரி அமெரிக்காவில் வசிக்கும் ஸ்கொட்லாந்து தேசத்தவர். அவர் ஸ்கொட்லாந்துப் பிரிவினையை ஆதரிக்கின்றார்.
பிபிசி செய்தி நிறுவனம் பிரிவினைக்கு ஆதரவாக நின்று பாராபட்சம காட்டுவதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது. பிரிவினைக்கு ஆதவராக முன்னின்று செயற்படும் ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் அலெக்ஸ் சமண்ட் தாம் பலவழிகளி்ல் பயம் காட்டப்படுவதாகவும் மிரட்டப்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment