Thursday, 2 January 2014

சீனாவின் முதலாவது விமானம் தாங்கிக் கப்பல் வெற்றீகரமாக வெள்ளோட்டம் விடப்பட்டது.

சீனாவின் முதலாவது விமானம் தாங்கிக் கப்பலான லியோனிங் கடந்த முப்பத்தி ஏழு நாட்களாக கடலில் பல நூற்றுக்கு மேற்பட்ட சோதனைகளை வெற்றீகரமாக செய்து முடித்துள்ளது. லியோலிங்கின் தாக்குதல் முறைமை வியூகம அமைக்கும் திறன் ஆகியவை நன்கு பரிசோதிக்கப்பட்டன. யாவும் திட்டமிட்டபடி நடந்தன என்கின்றது சீன ஊடகம் ஒன்று.

சீனாவின் லியோனிங் விமானம் தாங்கிக் கப்பலுடன் நீர்மூழ்கிக்கப்பல்கள், ஃபிரிக்கேட் கப்பல்கள், நாசகாரிக் கப்பல்கள், சேவைவழங்கு கப்பல்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். 2013 நவம்பர் ஆரம்பித்து 2012 ஜனவரி 2-ம் திகதி முடிவடைந்த லியோனிங்கின் பரீட்சார்த்த நடவடிக்கைகளில் ஏவுகணைகளை அழிக்கக் கூடிய இரு நாசகாரிக் கப்பல்களான Shenyang உம் Shijiazhuang உம் இணைந்திருந்தன. அத்துடன் ஏவுகணைகளை வீசும் கப்பல்களான Yantai உம் Weifangஉம் உடன் சென்றன. சில படைத் துறை நிபுணர்கள் இந்த நான்கு கப்பல்களும் ஒரு விமானம் தாங்கிக் கப்பலைப் பாதுகாக்கப் போதுமானவை அல்ல என்கின்றனர். பொதுவாக சீன நாசகாரிக் கப்பல்கள் மற்ற நாட்டுக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறியவை என்கின்றனர். இதனால் போதிய அளவு படைக்கலனகளை இவற்றால் எடுத்துச் செல்ல முடியாது. அத்துடன் ஒரு விமானம் தாங்கிக் கப்பலில் விமானங்களை இறக்கவும் பின்னர் அதிலிருந்து பறக்கச் செய்யவும் விமானிகளுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்ச்சி தேவை எனப்படுகின்றது. இதனால் சீன விமானம் தாங்கிக் கப்பல் முழுமையான செயற்பாட்டில் இறங்க இன்னும் இரண்டு ஆண்டுகள் எடுக்கலாம்.

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரேயினிடம் இருந்து வாங்கப்பட்ட பழைய விமானம் தாங்கிக் கப்பலை சீனா சீர் செய்து தனது லியோனிங் விமானம் தாங்கிக் கப்பலை உருவாக்கியுள்ளது. 1985இல் இருந்தே சீனா தனது விமானம் தாங்கிக் கப்பலை உருவாக்கும் திட்டத்தைத் தீவிரப்படுத்தியது. விமானம் தாங்கிக் கப்பல்களைப் பற்றி அறிவதற்காக சீனா முதலில் 1985-ம் ஆண்டு ஒஸ்ரேலியாவிடமிருந்து அதன் பழுதடைந்த HMAS Melbourne விமானம் தாங்கிக் கப்பலையும் பின்னர் இரசியாவிடமிருந்து Minsk, Kiev ஆகிய கப்பல்களையும் உக்கிரேய்னிடமிருந்து Varyag  கப்பலையும் வாங்கி அவற்றின் தொழில் நுட்பங்களை முதலில் அறிந்து கொண்டது.  இவற்றில் Varyag இப்பொது லியோனிங்காக உருமாற்றப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டு சீன மாகாணமான லியொனிங்கின் பெயர் இந்த விமானம் தாங்கிக் கப்பலுக்குச் சூட்டப்பட்டது. பலத்த சிரமங்கள் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலேயே Varyag கட்டி இழுத்துவரப்பட்டது.


சீனாவின் படைத்துறை முன்னேற்றங்கள்
உலகிலேயே அதிக அளவு படையினரைக் கொண்ட மக்கள் விடுதலைப் படை எனப்படும் சீனப் படை இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் 2050 ஆண்டு உலகின் மிகப்பெரிய படையாகத் திகழும் நீண்டகாலத் திட்டத்தை ஆரம்பித்தது. அதன்பின்னர் விண்வெளிப்போர் முறை, இணையவெளிப்போர்முறை, உட்படப் பல துறையிலும் வேகமாக முன்னேறிவருகிறது. ஒரு Space Stationஐ அமைத்து அதில் விண்கலங்களை வெற்றிகரமாக இறக்கியது. அமெரிக்காவின் Global Positioning System (GPS)இற்குப் போட்டியாக 15 செய்மதிகளைக் கொண்ட Beidou GPS ஐ உருவாக்கி வருகிறது. உலக நாடுகளில் இரசியாவும் சீனாவும் மட்டுமே அமெரிக்காவின் GPS இல் தங்கியிருக்காத நாடுகளாகும். Global Positioning System (GPS) குடிமக்களுக்கும் படைத்துறையினருக்கும் பயன்படும் ஒரு வழிகாட்டி முறைமையாகும். சீனாவின் Global Positioning System (GPS) அமெரிக்காவிற்கு வர்த்தக ரீதியாகவும் படைத்துறை ரீதியாகவும் சவாலாக அமையும். உலகின் எந்தப் பகுதிக்கும் தனது படையினரை விரைவாக நகர்த்தக் கூடியதாக Y-20 என்னும் பாரிய போர்முனைப் போக்குவரத்து விமானத்தை உருவாக்கியது. ராடார்களுக்கு அகப்படாத stealth fighter விமானத்தின் தனது இரண்டாம் தலைமுறை J31 சீனா உருவாக்கி விட்டது. விண்வெளிப்பயணத்துறையில் பெரும் முன்னேற்றமாக சீனா தனது 120 tonnes rocket engineஐயும் வெற்றீகரமாகப் பரீட்சித்துவிட்டது. சீனா தனது  Z-10 தாக்குதல் உழங்கு வானூர்திகளை பாரிய அளவில்(mass production) உற்பத்திசெய்கிறது. சீனா தனது நீர்மூழ்கிக் கப்பல்கள் எந்த ஒரு விபத்திலும் கடந்த 40 ஆண்டுகளாக ஈடுபடவில்லை என மார்தட்டிக் கொள்கின்றது. தனது பாதுக்பாப்பு முன்னேற்பாடுகள் அந்த அளவிற்கு உயர் தரம் வாய்ந்தது என்கிறது சீனா.

சீனா தற்போது இரண்டு Type-94வகை Ballistic ஏவுகணைகளை ஏவக்கூடிய நீர் மூழ்கிக் கப்பல்களை வைத்திருக்கின்றது. இவை ஒவ்வொன்றும் ஒரேயடியாக 12 ஏவுகணைகளை வீசக் கூடியவை.  அவற்றின் பாய்ச்சல் தூரம் 7000 முதல் 13000கிலோ மீட்டர்கள் அதாவது 4300முதல் 8100 மைல்கள் சென்று தாக்கக் கூடியவை. சீனா இப்போது நான்கு புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கி வருகின்றது. இவை Type-96வகையைச் சார்ந்தவை. இவற்றால் 16 முதல் 24 வரையிலான Ballistic ஏவுகணைகளைத் தாங்கிச் செல்ல முடியும். சீனாவிடம் 200முதல் 240 வரையிலான அணுக்குண்டுகள் இருக்கின்றன என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் சீனாவிடம் மூன்று கடற்படைப் பிரிவுகள் மட்டுமே இருக்கின்றன. இந்தியாவிடம் நான்கு பிரிவுகளும் ஜப்பானிடம் ஒரு பிரிவும்  அமெரிக்கா, பிரிதானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒவ்வொன்றும் ஆறு பிரிவுகளை வைத்திருக்கின்றன. அமெரிக்கா தனது கடற்படைக்கு Ford வகை விமானம் தாங்கிக் கப்பல்களை இணைந்த பின்னர் சினாவின் கடற்படை அமெரிக்கக் கடற்படைக்கு கிட்டவும் நிற்க முடியாத நிலை ஏற்படும்.

அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலைப் பற்றிப் பார்க்க இங்கு சொடுக்கவும்: அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்

Tuesday, 31 December 2013

2013இல் எழுச்சி பெற்ற அல் கெய்தா

அல் கெய்தா ஈராக்கின் மேற்குப்பகுதியையும் சிரியாவின் கிழக்குப் பகுதியையும் இணைத்து தமக்கென ஒரு நாட்டைப் பிடிக்கும் உத்தியில் ஈடுபட்டுள்ளது. சுனி முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈராக்கின் அன்பர் மாகாணத்தில் அண்மைக்காலங்களாக அல் கெய்தா தனது பிடியை இறுக்கிக் கொண்டே போகின்றது. 

அன்பர் மாகாணத்தில் உள்ள சுனி அரசியல்வாதிகளுக்கும் ஈராக்கின் சியா ஆட்சியாளர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. சியா ஆட்சியாளர்கள் அன்பர் மாகாணத்தில் பல அப்பாவிகளைக் கொன்று குவிப்பதாக சுனி பாராளமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்து இன்று(டிசம்பர் 31) பன்னிரண்டு பாராளமன்ற உறுப்பினர்கள் தமது பதவியில் இருந்து விலகியுள்ளனர்.

அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குத்லான 9-11 இன் பின்னர் அமெரிக்காவின் மிகத்தீவிரமான கண்காணிப்பில் அல் கெய்தா கொண்டுவரப்பட்டது. இதனால் அல் கெய்தாவால் எந்தவித இலத்திரனியல் தொடர்பாடல் கருவிகளையும் பாவிக்க முடியாமல் போனது. அவற்றை வைத்து அவர்களின் இருப்பிடங்களை அறியும் தொழில் நுட்பம் அமெரிக்காவிடம் இருந்தது. இதனால் அல் கெய்தாவின் தலைமைக்குத் தொடர்பாடல் பிரச்சனை இருந்தது. எப்போதும் கொரில்லா இயக்கத்தின் முக்கிய பிரச்சனையே தொடர்பாடல்தான். இதனால் அல் கெய்தா ஒரு புதிய உத்தியைக் கையாண்டது.  பின் லாடன் இருக்கும் போதே அவர் தனது இயக்கத்தை ஒரு franchise(தன்னிச்சைக்கிளை) இயக்கமாக மாற்றிவிட்டார்.  அதன் படி அல் கெய்தாவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தமது நடவடிக்கைகளை தமது எண்ணப்படி மேலிடத்தின் கட்டளைக்குக் காத்திராமல் செய்ய முடியும். முக்கியமான தன்னிச்சைக் குழுக்கள்:
1. ஈராக்கில் அல் கெய்தா -Al Qaeda in Iraq (AQI),
2. அரபுக் குடாநாட்டில் அல் கெய்தா- இது யேமலின் செயற்படுகிறது.  -the Yemen-based AL Qaeda in the Arabian Peninsula (AQAP),
3. இசுலாமிய மக்ரெப்பில் அல் கெய்தாAL Qaeda in the Islamic Maghreb (AQIM)
ஆகியவை தற்போது முக்கியமாகச் செயற்படும் அல் கெய்தாவின் கிளை அமைப்புக்களாகும்.

அல் கெய்தாவிற்குத் எதிர்பாராமல் அரபு வசந்தத்தம் என்னும் பெயரில் துனிசியா, லிபியா,  எகிப்து ஆகிய நாடுகளில் இசுலாமியர்கள் கிளர்ந்து எழுந்து ஆட்சியாளர்கலை விரட்டினர். இந்தப் புரட்சிகளில் அல் கெய்தா ஓரங்கட்டப்பட்டிருந்தது. பின்னர் அல் கெய்தா விழித்துக் கொண்டு தனது தந்திரோபாயமான வட அமெரிக்க நாடுகளுக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் எதிரான புனிதப்போரோடு மட்டும் நிற்காமல் அடைக்கு முறை ஆட்சியாளர்களுக்கு எதிரான இசுலாமிய மக்களின் எழுச்சியிலும் தன்னை இணைத்துக் கொள்கின்றது. இந்த மாற்றப்பட்ட தந்திரோபாயத்தின் ஒன்றாக சிரியாவில் ஆட்சியாளர் பஷார் அல் அசாத்திற்கு எதிரான போராளிகளுக்குள் அல் கெய்தா ஊடுருவிக் கொண்டது.

புதிய மனித வெடி குண்டுகள்
2013இல் அல் கெய்தாவினர் ஒரு புதிய வெடிகுண்டுகளை உருவாக்கியுள்ளனர் என்றது அமெரிக்க உளவுத் துறை. அக் குண்டுகள் ஈரமான வெடிக்கக் கூடிய பதார்த்தத்தில் தோய்த்து எடுக்கப்படும். அந்த ஆடை உலர்ந்தவுடன் அந்தப் பதார்த்தம் வெடிக்கும். இந்த வகைக் குண்டுகள் விமான நிலையங்களில் தற்போது உள்ள ஒளி வருடிகளால்(Scanners) கண்டறிய முடியாதவையாகும். இக்குண்டுகளை அல் கெய்தாவின் இப்ராஹிம் அல் அசிரி என்னும் நிபுணர் உருவாக்கியுள்ளார். 

மாலியில் ஆட்சியாளர்களுக்கு எதிராக துவாரெக் என்னும் சிறுபான்மை இனத்தவர் போராடி பெரும் நிலப்பரப்பைக் கைப்பற்றிய போது தானும் அதற்குள் நுழைந்து கொண்டது. அல் கெய்தாவிற்கு எதிரான போரில் வட அமெரிக்க நாடுகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தமது தந்திரோபாயங்களையும் மாற்றிக் கொண்டன. தாம் நேரடியாக அல் கெய்தாவிற்கு எதிராக போர் புரிவதைத் தவிர்த்து ஆபிரிக்க நாடுகளில் தமக்கு ஆதரவான நாட்டுப் படைகளுக்கு பயிற்ச்சி அளித்து அவர்களை தமது தலைமையின் கீழ் இசுலாமியப் போராளிகளுடன் போர் புரியும் தந்திரத்தை உருவாக்கின. இந்த இரு மாற்றப்பட்ட தந்திரோபாயங்கள் மாலியில் மோதிக் கொண்டன. மாலியில் பிரேஞ்சுப் படைகள் அல் கெய்தாவை விரட்டியதற்குப் பலி கொடுக்கும் முகமாக எண்ணூற்றிற்கும் அதிகமானவர்களை அல்ஜீரியாவில் அல் கெய்தா ஆதரவுப் படைகள் பணயக் கைதிகளாக்கினார்கள். 39 வெளிநாட்டினர் இந்த பணயக் கைதி நாடகத்தில் கொல்லப்பட்டனர். மாலியில் பிரேஞ்சுப்படைகள் தாக்குதல் நடாத்திய போது அல் கெய்தாவினர் லிபியாவிற்குள் ஓடி ஒளிந்தும் கொண்டனர்.

ஈராக்கில் அமெரிக்காவிற்கு ஆதரவாகச் செயற்பட்டவர்கள் 6000இற்கு மேற்பட்டவர்களை அல் கொய்தா 2013-ம் ஆண்டு கொன்று குவித்தது. சிரியாவிலும் ஈராக்கிலும் இசுலாமிய அரசுகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்  ஜபத் அல் நஸ்ரா {Jabhat al-Nusra and the Islamic State of Iraq and al-Sham (ISIS)}என்ற அல் கெய்தா சார்பு இயக்கம் தீவிரமாகச் செயற்படுகின்றது. ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தின் கட்டுப்பாட்டில் பல சிரிய நகரங்கள் இருக்கின்றன. அங்கு இசுலாமியச் சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மேற்கு ஐரோப்பா உட்படப் பல நாடுகளில் இருந்து 11,000 அல் கெய்தாப் போராளிகள் சிரியா சென்று அல் கெய்தாவில் இணைந்து போராடுகின்றனர். சிரியாவில் அல் கெய்தாவில் போராடும் ஐரோப்பிய இளைஞர்கள் இருவரைப் பேட்டி கண்ட அமெரிக்க ஊடகம் ஒன்று நீலக் கண் அல் கெய்தா என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை வெளிவிட்டிருந்தது.

சோமாலியாவில் அல் கெய்தாவின் ஆதரவு இயக்கமான அல் ஷபாப்பினருக்கு எதிராக ஆபிரிக்க ஒன்றிய நாடுகளின் படைகள் எடுத்த நடவடிக்கைக்குப் பழிவாங்கும் முகமாம கென்யாத் தலைநகர் நைரோபியில் உள்ள கடைத் தொகுதியில் அல் ஷபாப் இயக்கத்தினர் தாக்குதல் நடாத்தினர். இந்தத் தாக்குதலுக்கு ஒரு பிரித்தானியப் பெண் தலைமை தாங்கியது மேற்குலக நாடுகளை உலுப்பியது. நான்கு நாட்கள் அந்தக் கடைத் தொகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் அவர்கள் வைத்திருந்தனர்.

இப்போது இசுலாமிய மதவாத அமைப்பான இசுலாமிய சகோதரத்துவ அமைப்பும் எகிப்தியப் படைத்துறையும் மோதுவதை அல் கெய்தா மிகவும் மகிழ்ச்சியுடன் அவதானிக்கின்றனர். எகிப்தியப் படைத்துறை இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் மீது வன்முறையை தொடரத் தொடர அவர்கள் தம்மைப் போல் மிகவும் தீவிரவாதிகளாக மாறித் தம்முடன் இணைவார்கள் என அல் கெய்தா நம்புகிறது. இசுலாமிய சகோதரத்து அமைப்பைப் பார்த்து வாக்குச் சீட்டின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவதிலும் பார்க்க புனிதப் போரின் மூலம் ஆட்சியை கைப்பற்றுங்கள் என்கிறது அல் கெய்தா.எகிப்தில் இப்போது பலர் அல் கெய்தாவில் இணையத் தொடங்கி விட்டார்கள்.

அல் கெய்தா தொடர்பான நிபுணர்கள் அல் கெய்தா பெரிதும் செயலிழக்கச் செய்துவிடப்பட்டதாகச் சொல்கின்றனர்:  "Al Qaeda central no longer exists as an effective organization," says Fawaz Gerges, a professor at the London School of Economics and Political Science, who has done extensive field research on al Qaeda. "Most of its skilled leaders and lieutenants have been either killed or captured. It is no longer capable of carrying out spectacular operations along the 9/11 lines."
London School of Economicsஇன் அரசறிவியற்துறைப் பேராசிரியர் Fawaz Gergesஇன் கருத்துப்படி அல் கெய்தாவின் மையப்பகுதி இப்போது ஒரு செயற்படும் அமைப்பாக இல்லை. அதன் திறன் மிக்க தலைவர்களும் தளபதிகளும் கொல்லப்பட்டும் கைது செய்யப்பட்டும் விட்டனர். அதனால் இப்போது 9/11 போன்ற ஒரு தாக்குதலைச் செய்ய முடியாது. ஆனால் சிரியா, லிபியா, சூடான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் செய்திகள் பேராசிரியர் Fawaz Gergesஇன் கூற்றை மறுதலிக்கின்றன. 2014இல் ஆப்கானிஸ்த்தானில் இருந்து நேட்டோப் படைகள் வெளியேறிய பின்னர் சரியான உண்மை தெரிய வரும்.

Monday, 30 December 2013

2013-ம் ஆண்டு: ஒரு மீள் பார்வை

ஆர்ப்பாட்டக்காரர் அடக்க வந்தவரை முத்தமிடுகின்றார்.

இரசியக் கப்பல்கள் சிரியாவை நோக்கி நகர்கின்ற அச்சத்தில் இருந்தும் மாயன் கலண்டரின்படி உலகம் அழியும் என்ற அச்சத்தில் இருந்தும் உலக மக்கள் மீண்டிருக்கையில் 2013-ம் ஆண்டு பிறந்தது. 2008இல் ஆரம்பமான உலகப் பொருளாதாரப் பிரச்சனை 2013வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.  2013-ம் ஆண்டு இரசிய அதிபர் விளாடிமீர் புட்டீனின் ஆண்டாகவும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு ஒரு மோசமான ஆண்டாகவும் அமைந்தது.


பிலிப்பைன்ஸின் முள்ளிவாய்க்கால்

இயற்கை அனர்த்தங்கள்
பிலிப்பைன்ஸை ஹையான் சூறாவளி மணிக்கு 235மைல் வேகத்தில் தாக்கியதில் பல கரையோர நகரங்களின் குடிசார் கட்டமைப்புக்கள் முற்றாக அழிக்கப்பட்டன. இதுவரை வந்த சூறாவளிகளில் இது நான்காவது பெரியதாகும். ஆறாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
ஐக்கிய அமெரிக்கா இருபது மில்லியன் டொலர்களும் ஜப்பான் பத்து மில்லியன் டொலர்களும் பிலிப்பைன்ஸிற்கு உதவ முன்வந்த போது சீனா இரண்டு மில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவியை மட்டுமே செய்தது. இது சீனாவின் மனிதாபிமானமற்ற கஞ்சத்தனம் என விமர்சிக்கப்படது. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைத் தாக்கிய ஃபைலின் புயலின் போது இந்திய அரசின் நிவாரண ஏற்பாடுகள் இதற்கு முந்திய இயற்கை அனர்த்தங்களுடன் ஒப்பிடுகையில் சிறப்பாக அமைந்திருந்தன என்ற பாராட்டு பல தரப்பினரிடமிருந்து இந்தியாவிற்குக் கிடைத்தன. அமெரிக்க ஒக்லோஹாம நகரம் சுழல்காற்றாலும், மெக்சிக்கோ சூறாவளியாலும் பிலிப்பைன்ஸ் விசியாஸ் நகரம் நிலநடுக்கத்தாலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின.
சிரியாவில் வேதியியல் குண்டுத் தாக்குதல்

சிரியா
2013இல் உலக அரங்கில் முக்கிய இடம் பிடித்தது சிரியாவே. 2012இல் சிரிய அதிபரி பாஷார் அல் அசாத்தின் ஆட்சி கவிழும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2013இன் இறுதியில் அவர் உறுதியுடன் பதவியில் தொடர்கின்றார். ஆனால் சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் பலவீனமடையவில்லை ஆனால் அமெரிக்க ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்கள் பலத்த இழப்புக்களுடன் பலவீனமடைந்துள்ளார்கள். 2011இல் இருந்து இதுவரை சிரியாவில் கொல்லப்பட்டவர்களில் அரைவாசிப்பேர் 2013இல் கொல்லப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட சிரியாவிற்கான சமாதானத் தூதுவர் என்ன செய்கின்றார் என்பதே பெரிய கேள்வி. அவர் ஐநாவின் செலவில் பல நாடுகளுக்குப் பயணம் செய்து கொண்டிருக்கிறார். அவர் ஜெனிவாவில் 2014 ஜனவரியில் கூட்டவிருக்கும் சிரிய சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈரான் பங்கேற்கக் கூடாது என ஐக்கிய அமெரிக்கா தடை செய்துள்ளது.

ஈரானிய அமெரிக்க பேச்சுவார்த்தை
ஈரான்
2013இல் சிறப்பாக ஒரு தேர்தலை நடாத்திய ஈரானை இஸ்ரேலோ அல்லது அமெரிக்காவோ அல்லது இரண்டும் இணைந்தோ தாக்கி அதன் அணுக்குண்டு உற்பத்தி செய்யும் கனவைத் தகர்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2013இன் இறுதியில் அமெரிக்காவும் ஈரானும் நெருங்க இஸ்ரேல் முகம் சுழித்துக் கொண்டிருக்கிறது. ஈரானிற்கும் அமெரிக்காவிற்கும் தற்போது ஒன்றிற்கு ஒன்று அதிகம் தேவைப்படுகின்றது. ஈரானின் யூரேனியப் பதப்படுத்தலுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடை ஈரானைப் பெரிதும் பாதித்துக் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈரான் மீது விதித்திருந்த பொருளாதாரத் தடையால் 2013இன் முற்பகுதியில் ஈரானியப் பொருளாதாரம் சிதறும் ஆபத்து உள்ளது என பல பொருளாதார நிபுணர்கள் 2012இல் எச்சரித்திருந்தனர். ஆனால் 2013 இன் பிற்பகுதி வரை ஈரான் பொருளாதரத் தடைக்கு எதிராகத்தாக்குப் பிடித்துக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் இந்தப் பொருளாதாரத் தடையில் இருந்து விடுபட்டால் ஈரானிய மக்கள் பெரிய சுமையில் இருந்து விடுபடுவார்கள். ஈரானியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லும். இதற்காக சில விட்டுக் கொட்டுப்புக்களைச் செய்து ஈரான் அமெரிக்காவுடன் உறவை வளர்க்க ஈரான் விரும்புகிறது. ஆனாலும் அமெரிக்காவிற்கு பெருமளவில் விட்டுக் கொடுத்தால் அல்லது பணிந்தால் அது ஈரானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக ஈரானி உள்ள தீவிரப் போக்கு உடையவர்களை கிளர்ந்து எழச்செய்யும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் அமெரிக்க ஈரானியப் பேச்சு வார்த்தையில் இழுபறி தொடர்கின்றது.

நைரோபியில் அல் கெய்தா ஆதரவுக் குழு கடைத் தொகுதியில் தாக்குதல் செய்த போது தப்பி ஓடும் சிறுமி
அடங்க மறுக்கும் இசுலாமியப் போராளிகள்
பல தலைவர்களை அமெரிக்காவில் ஆளில்லாப் போர்விமானங்களின் தாக்குதல்களுக்கும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கும் பலை கொடுத்தாலும் இசுலாமியப் போராளி அமைப்புக்களான தலிபான், அல் கெய்தா, ஹிஸ்புல்லா, ஹமாஸ் போன்றவை 2013-ம் ஆண்டு தமது வலிமையை நிலை நிறுத்திக் கொண்டன. தாம் நினைத்த இடத்தில் நினைத்த படி தம்மால் தாக்குதல் நடாத்துவது மட்டுமல்ல தம்மால் பல நாடுகளில் கணிசமான பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்றும் இசுலாமியப் போராளி இயக்கங்கள் 2013இலும் நிரூபித்துள்ளன. தலிபான்களால் சுடப்பட்ட பாக்கிஸ்த்தானியச் சுட்டிப் பெண் மலாலாவை மேற்கு நாடுகள் உலக அரங்கில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான பரப்புரைக் கருவியாக வெற்றிகரமாக திட்டமிட்டு மாற்றினார்கள். வட மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் நடந்த பிரிவினைப் போராட்டத்தில் அல் கெய்தா இயக்கத்தினர் ஊடுருவி அங்கு பெரும் நிலப்பரப்பை தம்வசமாக்கினார். ஒரு பெரும் நிலப்பரப்பு அல் கெய்தாவின் வசமானதால் பிரான்ஸ் அங்கு படைகளை அனுப்பி அல் கெய்தாவினரிடம் இருந்து மாலியை மீட்டது.

சிரியாவில் பாதிக்கப்பட்ட குழந்தை
திசை மாறிய அரபு வசந்தம்
துனிசியாவில் பழவியாபாரம் செய்து கொண்டிருந்த இளைஞனின் தீக்குளிப்புடன் உருவான அரபு வசந்தம் எகிப்து, லிபியா, சூடான் ஆகிய நாடுகளில் ஆட்சியாளர்களை மாற்றியது. சிரியாவில் ஒரு மோசமான உள்நாட்டுப் போரை உருவாக்கியது. ஆனால் எகிப்தில் அரபு வசந்தத்திற்கு முன்  இருந்த நிலையிலும் மொசமான நிலை இப்போது உருவாகிக் கொண்டிருக்கின்றது. துனிசியாவில் நினைத்த இலக்கு இன்னும் அடையப்படவில்லை. லிபியா பல படைக்கலன் ஏந்திய ஒன்றிற்கு ஒன்று முரண்பட்ட குழுக்களின் கைகளில் சிக்கித் தவிக்கிறது.
முடிக்குரியவர்

தென் கொரியா
2013இன் குழப்படிகாரனாக அமைந்த நாடு வட கொரியாவாகும். ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களையும் மீறி தனது அணுப் படைக்கலனகளை உற்பத்தி செய்யப் போவதாக வட கொரியா அறிவித்தது. பல தொலைதூர ஏவுகணைகளையும் வட கொரியா பரிசோதனை செய்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது ஏவுகணைகளை இடைமறிக்கும் ஏவுகணைகளை தனது நட்பு நாடான தென் கொரியாவில் நிறுவியது. வட கொரிய அதிபர் கிம் ஜொங் ஒரு கொலை முயற்ச்சியில் இருந்து தப்பினார். வட கொரிய அதிபரின் மாமனாரும் அதிகாரத்தில் இரண்டாம் நிலையில் இருந்தவரான ஜான் சங்க் தாய்க்கிற்கு தேசத் துரோகக் குற்றத்திற்காக கொலைத் தண்டனை வழங்கப்பட்டது. இவர் தனது நாட்டில் தனது அதிகாரப்பிடியாக அதிகரிக்க முயற்ச்சித்தார் எனப்படுகின்றது. இவரது கொலை வட கொரியாவின் நட்பு நாடுகளான இரசியாவையும் சீனாவையும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

 இரசியா
 2013 இரசியாவினதும் அதன் அதிபர் விளாடிமீர் புட்டீனதும் ஆண்டாகும். உலகிலேயே அதிகாரம் மிக்க தலைவர்களின் பட்டியலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி விட்டு புட்டீன் முதலாம் இடத்தைப் பிடித்துக் கொண்டார். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இரசியாவை ஒரு தோற்கடிக்கப்பட்ட நாடாக மேற்கு நாடுகள் இதுவரை காலமும் நடாத்தி வந்தன. உலக அரங்கில் இரசியாவின் செல்வாக்கை நிலை நிறுத்த வேண்டிய எல்லா இராசதந்திரக் காய் நகர்த்தல்களையும் புட்டீன் வெற்றீகரமாகச் செய்து வருகின்றார். ஐரோப்பிய ஒன்றியம் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளைத் தன்னுடன் இணைத்து தன்னை விரிவாக்கிக் கொண்டு வருவதற்கு உக்ரேயினில் வைத்து விளடிமீர் புட்டீன் ஒரு முற்றுப் புள்ளி வைத்தார்.

ஐக்கிய அமெரிக்கா

அமெரிக்காவையும் அதிபர் பராக் ஒபாமாவையும் பொறுத்தவரை 2013 ஒரு மிக மோசமான ஆண்டாகும். எட்வேர்ட் ஸ்னோடன் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு முகவரகம் உலக நாடுகளையும் உலகத் தலைவர்களையும் அமெரிக்க மக்களையும் தீவிரமாக உளவு பார்த்ததை அம்பலப் படுத்தினார். சோமாலியக் கடற்கரையில் அமெரிக்காவின் பிரபல சீல் படைப்பிரிவினர் செய்ய முயன்ற தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது. எகிப்தும் சவுதி அரேபியாவும் அமெரிக்காவிடமிருந்து விலகிச் செல்கின்றன. சிரியாவில் அமெரிக்க ஆதரவு கிளர்ச்சிக்காரர்கள் படுதோல்வியைச் சந்திக்கின்றனர். ஆப்கானிஸ்த்தானில் இருந்து ஒரு கௌரவ வெளியேற்றம் கேள்விக் குறியாகிக் கொண்டிருக்கின்றது. ஈரானின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யும் திட்டம் இன்னும் வெற்றியளிக்கவில்லை. இஸ்ரேல் அமெரிக்காவின் மத்திய கிழக்குக் கொள்கையி கடும் அதிருப்தி அடைந்துள்ளது. சிரியாவில் இரசியா தலையிட்டு அமெரிக்காவின் சிரிய வேதியியல் குண்டு பாவித்தமைக்கு எதிரான தாக்குதலை நிறுத்தியது. நிதி நெருக்கடியால் அமெரிக்க அரச பணிமனைகள் இரண்டு வாரங்கள் இழுத்து மூடப்பட்டன. ஒபாமாகெயார் எனப்படும் பராக் ஒபாமாவின் மருத்துவக் காப்புறுதித் திட்டம் பல நிர்வாக நெருக்கடிகளை எதிர் கொண்டு ஒபாமா நிர்வாகத்தின் மானத்தைக் கப்பல் ஏற்றிக் கொண்டிருக்கின்றது. அமெரிக்கக் கடற்படைக் கப்பலான கௌப்பென்னை தென் சீனக் கடலில் வைத்து சீனக் கடற்படைக் கப்பல் நிறுத்து என உத்தரவிட்டு கௌப்பென்னுடன் மோதும் நிலையை உருவாக்கியது. கௌப்பென் விலகிச் சென்றது. உலகின் வலிமை மிக்க கடற்படையைக் கொண்ட அமெரிக்காவிற்கு இது ஒரு முகத்தில் கரி பூசிய நிகழ்வாகும். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை இந்தியாவும் தேவ்யானி விவகாரத்தில் சோதனைக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கின்றது.

பொங்கி வரும் அலையை படம் பிடிக்கும் சீனர்கள் முகப்புத்தகத்தில் போடுவதற்கு????
சீனா
தனது பொருளாதாரத்தை நிதானமாகவும் நன்கு திட்டமிட்டும் சீர்திருத்தம் செய்து வரும் சீனாவிற்கு 2013 ஒரு மைல்கல்லாகும். உலகப் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தனது பொருளாதாரத்தில் மேலும் சில சீர்திருத்தம் செய்யும் முடிவுகளை சீனா அறிவித்தது. தென் சீனக் கடலையும் கிழக்குச் சீனக் கடலையும் இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்தையும் குறிவைத்த தனது விரிவாக்கற் கொள்கையை சீனா 2013இல் மேலும் உறுதி செய்து கொண்டுள்ளது. தனது நாணயத்தை உலக நாணயமாக்கும் நகர்வையும் சீனா ஆரம்பித்து வைத்துள்ளது.


இந்தியா
பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட பின்னடைவு வீழ்ச்சியடைந்த நாணயப் பெறுமதி ஆகியவற்றின் மத்தியில் இந்தியா தனது பொருளாதாரத்தை 2013இல் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஊழல் பெண்களுக்கு எதிரான வன்முறை போன்றவற்றால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது. படைத்துறையிலும் விண்வெளி ஆய்விலும் தனது திறைமையை இந்தியா மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஆளும் காங்கிரசுக் கட்சியைப் பொறுத்தவரை 2013 ஒரு மோசமான ஆண்டாக இருந்தாலும் 2014இன்னும் மோசமாக அமையலாம்.

இலங்கை
உலக அரங்கில் பயங்கரவாதத்தை ஒழித்த நாடு என்று புகழப்பட்ட இலங்கை தனது புகழை இழந்து ஒரு மோசமான மனித உரிமை மீறல் செய்யும் நாடு என்ற பெயரை 2013இல் பெற்று விட்டது. பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு பிள்ளையார் பிடிக்கப் போன கதையாகிவிட்டது. 2013 மாகாண சபையிலும் 13-ம் திருத்தத்திலும் ஒன்றும் இல்லை என்பதை நடை முறை ரீதியாக நிரூபிக்கும் ஆண்டாக அமைந்தது.

2013இல் நிகழ்ந்து கொண்டிருக்கும் மோசமான நிலமைகள் சீரடையும் அறிகுறி எங்கும் இல்லை.

Friday, 20 December 2013

தேவ்யானி விவகாரமும் தேவையான இந்திய அமெரிக்க உறவும்


சீன விரிவாக்கம் பெரும் முன்னெடுப்புடன் ஆரம்பித்திருக்கும் இந்த நூற்றாண்டில் இந்திய அமெரிக்க  நல்லுறவு மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறது. ஆனால் தேவ்யானி விவகாரம் இந்திய அமெரிக்க உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்துமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

தேவ்யானி விவாகரத்தில் இந்திய மண்ணில் பிறந்த மூன்று பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். ஒருவர் தேவ்யானி கொப்ரகடெ என்ற இந்திய வெளியுறவுச் சேவை அதிகாரி, இரண்டாமவர் அவரது பணிப்பெண்ணான சங்கீதா ரிச்சர்ட், மூன்றாமவர் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் படித்து அங்கு குடியுரிமை பெற்று மான்ஹட்டன் வழக்குத் தொடுனராகப் பணிபுரியும் பிரீட் பராரா. இதில் சங்கீதா ரிச்சட் தென் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது இங்கு முக்கியமான விடயமாகும்.

பட்டம் பெற்ற மருத்துவரான தேவ்யானி மருத்துவத் தொழிலை விட்டு தனது மாமனாரின் பாதையில் இந்திய வெளியுறவுச் சேவையில் இணைந்தார்.

2013 ஜூன் மாதம் 23-ம் திகதி தேவ்யானி தனது பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்டைக் காணவில்லை என அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டுத் தூதுவரகங்களுக்குப் பொறுப்பான அதிகாரியிடம் முறையிட்டார். நியூயோர்க் நகரக் காவற்துறையினரிடம் முறையிடும்படி அவரிடம் சொல்லப்பட்டது. காவற்துறையினரிடம் முறையிட தேவ்யானி சென்றபோது காணமற் போனவரின் குடும்பத்தவர் மட்டுமே முறையிடலாம் என அவரிடம் கூறப்பட்டது. ஜூலை முதலாம் திகதி பெயர் கூறாத பெண் ஒருத்தி தேவ்யானிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து உரிய இழப்பீடு வழங்கினால் தேவ்யானிக்கு எதிராக வழக்குத் தொடரப்படமாட்டாது எனத் தெரிவித்தார். இதுபற்றி அமெரிக்க அரசுக்கும் காவற்துறைக்கும் தேவ்யானி முறையிட்டார். பின்னர் மீண்டும் ஜூலை 5-ம் திகதி தனக்கு தொலைபேசி மிரட்டல்கள் வருவதாக தேவ்யானி முறையிட்டார். தொடர்ந்து ஜூலை 8-ம் திகதி பணிப்பெண் சங்கீதாமீது திருட்டுக் குற்றச்சாட்டை காவற்துறையில் பதிவு செய்த தேவ்யானி, சங்கீதா தனது கடவுச் சீட்டு தொடர்பாக பேரம் பேசியதாகவும் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து சங்கீதாவின் கடவுச்சீட்டை இந்திய அரசு இராசதந்திரிகளுக்கு உரிய நிலையை நீக்கி சாதாரண கடவுச்சீட்டாக்கியது. இதனால் சங்கீதா அமெரிக்காவில் ஒரு வதிவிட உரிமையற்றவராகினார். ஜூலை 30-ம் திகதி சங்கீதா நியூயோர்க் நகரக் காவற்துறையினரின் பாதுகாப்பில் இருப்பதாக புது டில்லியில் சங்கீதாவின் கணவன் முறையிட்டுள்ளதாக இந்தியத் தூதுவரக அதிகாரிகள் அமெரிக்க வெளியுறவுத் துறையிடம் முறையிட்டனர். இது அமெரிக்க அரசிற்குப் பாரதூரமான விடயம் என பதில் கூறப்பட்டது. அதற்குப் பதில் கூறிய இந்தியத் தூதுவரகம் அப்பெண் தனது குடியுரிமைக்கும் இழப்பீட்டுக்கும் அலைகிறார் இது அமெரிக்க அரசுக்குத் தேவையற்ற விடயம் என்றது. செப்டம்பர் 20-ம் திகதி டில்லி உயர் நீதிமன்றம் சங்கீதா தேவ்யானிக்கு எதிராக எந்த நாட்டிலும் எந்த வழக்கும் தொடர்க் கூடாது என்று தடையுத்தரவு வழங்கியது. பின்னர் டில்லி நீதிமன்றம் சங்கீதாவிற்கு எதிராக பிணையற்ற பிடியாணை பிறப்பித்தது. இது அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு சங்கீதாவை நாடு கடத்தும்படி கோரப்பட்டது. டிசம்பர் 10-ம் திகதி சங்கீதாவின் கணவரும் இரு பிள்ளைகளும் அமெரிக்கா சென்றனர். டிசம்பர் 12-ம் திகதி தேவ்யானி தனது பிள்ளைகளைப் பாடசாலையில் கொண்டு போய் விடும் வேளையில் கைது செய்யப்பட்டார்

பணிப்பெண் சங்கீதா தரப்பு நியாயம் சொல்ல எவரும் இல்லை
இந்திய அரசும் முக்கிய ஊடகங்களும் சங்கீதாவை ஒரு இந்தியக் குடிமகள் போல நடாத்துவதாகத் தெரியவில்லை. அவரது தரப்பு நியாயங்களை யாரும் வெளிக்கொணரவில்லை. இந்தியாவில் வீட்டுப் பணியாளர்கள் மோசமாக நடாத்தப்படுவதை இந்திய அரசு செய்த ஆய்வுகளே சுட்டிக் காட்டி இருக்கின்றன.

பிரீட் பராரா: புகழ்வேட்டையா குற்ற வேட்டையா

நியூயோர்க் தென்பிராந்திய வழக்குத் தொடுனரான பிரீட் பராரா அமெரிக்க நிதிச் சந்தையைக் கலங்கடித்தவர் அங்கு ஊழல் புரிபவர்களை தேடித் தேடி நீதி முன் நிறுத்தித் தண்டித்தவர். ஈழத்துச் செல்வந்தரான ராஜ் ராஜரத்தினத்தைச் சிறைக்கு அனுப்பினவரும் இவரே. பல இரசியர்களையும் இவர் சிறைக்கு அனுப்பியுள்ளார். இந்தியாவில் நடிகர்கள் இலகுவாக அரசியலுக்குள் நுழைவது போல் அமெரிக்காவில் சிறநநத வழக்குத் தொடுனர்கள் அரசியலுக்கு நுழைவதுண்டு. அப்படி ஒரு நோக்கத்துடன்  பீரீட் பராரா செயற்படுகின்றார் என இந்திய ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.

Diplomatic immunity எனப்படும் இராசதந்திரக் காப்பு
பன்னாட்டு இராசதந்திரிகளுக்கு என ஒரு வியன்னா உடன்படிக்கை உண்டு. அதன்படி ஒரு நாட்டு இராசதந்திரி இன்னொரு நாட்டில் செயற்படும்போது செய்யும் குற்றங்களுக்கு அந்த இராசதந்திரியின் சொந்த நாட்டிலேயே விசாரிக்கப்படவேண்டும். இதைத்தான் diplomatic immunity எனப்படும் இராசதந்திரக் காப்பு என்பர். அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு ராசதந்திரிகளின் பணியாளர்களைப் பாதுகாக்க என்று தனியான சட்டம் உண்டு. இந்தச் சட்டம் பொதுவான diplomatic immunity எனப்படும் இராசதந்திரக் காப்பிற்கு அப்பாற்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழேயே தேவ்யானி கைது செய்யப்பட்டார்.

முரண்பட்ட தகவல்கள்
தேவ்யானியின் கைது தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் இந்திய ஊட்கங்களில் இருந்து மான்ஹட்டன் சட்டப்ப்பிரிவிடம் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. தேவ்யானி அவரது பிள்ளைகளின் முன் கைவிலங்கிட்டுக் கைது செய்யப்பட்டார். மோசமாக நடத்தப்பட்டார் என்கின்றன இந்திய ஊடகங்கள். இவற்றை மான்ஹட்டன் சட்டப்பிரிவு மறுக்கின்றது. அவர் பிள்ளைகளின் முன் கைது செய்யப்படவுமில்லை, கைவிலங்கிடப்படவுமில்லை, அவருக்கு தொலைபேசி அழைப்புக்கள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது, காப்பி வழங்கப்பட்டது, சிறந்த உணவு வழங்கப்பட்டது என்கின்றது மான்ஹட்டன் சட்டப்பிரிவு. தேவ்யானி ஆடைகள் களையப்பட்டு சோதிக்கப்பட்டதை அவரகள் மறுக்கவில்லை. தேவ்யானி தனது பணிப்பெண் சங்கீதாவிற்கு அமெரிக்காவில் விசா எனப்படும் நுழைவு அனுமதி பெற பொய்யான தகவல்களைக் கொடுத்தார், தனது பணிப்பெண்ணுக்கு அமெரிக்கச் சட்டத்திற்கு விரோதமான முறையில் குறைந்த ஊதியம் கொடுத்தார். அதாவது ம்ணித்தியாலத்திற்கு 3.30 டொலர்கள். அதாவது இரண்டு பிரித்தானியப் பவுண்களிலும் குறைவான தொகை. நீண்ட நேரம் வேலை செய்யச் செய்தார் போன்ற குற்றச்சாட்டுக்கள் தேவ்யானிமீது சுமத்தப்பட்டுள்ளது. சங்கீதாவின் வழக்கறிஞரின் தகவலின்படி அவர் வாரம் ஒன்றிற்கு 90 மணித்தியாலங்கள் வேலைவாங்கப்பட்டார். அவருக்கு விடுமுறையோ காப்புறுதியோ வழங்கப்படவில்லை. தமது ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் கொடுத்ததாக அமெரிக்காவில் குற்றம் சாட்டப்படும் மூன்றாவது இராசதந்திரி தேவ்யானியாகும்.

பாஞ்சாலியான தேவ்யானி
தேவ்யானியை ஆடைகளைந்து சோதனை செய்தது இந்தியர்களை மிகவும் ஆத்திரப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கைதிகளை தடுப்புக்காவலில் வைக்க முன்னர் அவரை முழுமையாகச் சோதனை செய்வார்கள். அவர்களிடம் இருக்கும் ஏதாவது பொருளை வைத்து அவர்கள் தற்கொலை செய்வதைத் தடுக்க இந்த ஏற்பாடாம். ஆனால் இந்தியர்கள் பாஞ்சாலியின் துகிலுரிந்ததால் பாரதப் போர் நடந்தது போல் தேவ்யானியைத் துகிலுரிந்ததிற்கும் போர் வேண்டும் என முழங்குகின்றனர். இந்தியாவில் உள்ள இடதுசாரிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள். இந்தியாவில் உள்ள அமெரிக்க பிட்சா நிறுவனமான டொமினோ பிட்சா தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்க ஊடகங்கள் இந்தியர்கள் இதைத் தேவையில்லாமல் பெரிது படுத்துகிறார்கள் என்கின்றன.

பாக்கிஸ்த்தானிய ஊடகங்களின் ஆதங்கம்
பாக்கிஸ்த்தானிய இராசதந்திரிகளும் அமெரிக்காவில் கடுமையாக நடாத்தப்பட்டதுண்டு. ஆனால் பாக்கிஸ்த்தான் அரசு அமெரிக்காவிற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. பாக்கிஸ்த்தானிய ஆட்சியாளர்கள் இந்திய அரசின் கடுமையான நிலைப்பாட்டை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என பாக்கிஸ்த்தானியப் பத்திரிகைகள் கூறுகின்றன.

மிரட்டப்படும் சங்கீதா குடும்பம்
தேவ்யானியின் பணிப்பெண் சங்கீதாவின் கணவர் தனது பிள்ளையுடன் இந்தியாவில் ஒரு மிதிவண்டியில் போய்க் கொண்டிருக்கும் போது ஒரு மர்ம நபர் அவரை வழிமறித்து துப்பாக்கியைக் காட்டி உனது மனைவியை உடனடியாக இந்தியா வரச்சொல்லு என்று மிரட்டினார். இது போன்ற பல மிரட்டல்கள் பணிப்பெண் சங்கிதாவின் குடும்பத்தினருக்கு எதிராக இந்தியாவில் நடந்து கொண்டிருக்கின்றது என்கிறது நியூயோர்க் ரைம்ஸ். இதைத் தடுக்கும் முகமாக அமெரிக்க அரசத் துறை பணிப்பெண் சங்கீதாவின் குடும்பத்தினரை அமெரிக்காவிற்கு கொண்டு சென்றுள்ளனர்.  தேவ்யானியின் தந்தை பலமுறை சங்கீதாவின் கணவருடன் தொடர்பு கொண்டு உடனடியாக சங்கீதாவை இந்தியாவிற்கு அழைக்கும்படி மிரட்டினார் என்றும் சொல்கிறது நியூயோர்க் ரைம்ஸ். சங்கீதா குடும்பத்தினரை அமெரிக்கா அழைத்தது குடியகல்வு ஊழல் என்கிறது இந்திய அரசு.

இராசதந்திர முறுகல்
தேவ்யானி விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரியுடன் தொடர்பு கொண்ட இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் சிவ் சங்கர் மேனன் தனது கண்டனத்தைத் தெரிவித்தார் அத்துடன் தேவ்யானியின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். ஜோன் கெரி நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். சிவ் சங்கர் மேனன் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் அத்துடன் தேவ்யானியின் மீதான வழக்கு எந்தவித நிபந்தனையுமின்றி திரும்பப்பெறப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மன்னிப்புப் கேட்கப்போவதுமில்லை வழக்கைத் திரும்பப் பெறப்போவதுமில்லை என்கிறது அமெரிக்க அரசு. தேவ்யானிக்கு அதிக இராசதந்திரக் காப்பு வழங்கும் முகமாக அவரை ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதுவரகத்திற்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். தேவ்யானியின் கைதைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதுவரகங்களின் முன் இருந்த காப்பரண்கள் இந்திய அரசால் விலக்கப்பட்டன. இந்தியாவில் உள்ள அமெரிக்கத் இராசதந்திரிகளிற்கு வழங்கப்பட்ட பல முன்னுரிமைகள் இரத்துச் செய்யப்பட்டன. சங்கீதாவின் வேலையமர்வு இந்திய அரசுடன் சம்பந்தப்பட்டது தனிப்பட்ட ரீதியில் தேவ்யானியின் உடையது அல்ல என்கிறது இந்திய அரசு. ஐநா இராசதந்திரிகளுக்கு முழுமையான இராசதந்திரப் பாதுகாப்பு உண்டு. ஆனால் இதை பின்னோக்கி அமூலாக்க வேண்டும். அதாவது retroactive immunity. இதற்கு முன்னர் சவுதி இளவரசர் ஒருவர்மீது ஒரு பெண்ணை வீட்டிற்குள் பூட்டி வைத்திருந்த குற்றம் சுமத்தப்பட்டது. பின்னர் அவர் ஒரு இராசதந்திரியாக்கப்பட்டர். அந்த இராசதந்திரிக்கு உரிய இராசதந்திர காப்பு retroactive immunity ஆக்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார். தேவ்யானி விவகாரத்திலும் திரைக்குப் பின்னால் இப்படியான முயற்ச்சிகள் நடக்கின்றன.

தேவ்யானியின் ஊழல்

இந்தியாவில் வீடு ஒதுக்கிட்டில் ஊழல் செய்ததாக தேவ்யானியின் மீதும் அவரது தந்தை மீதும் குற்றச் சாட்டுக்கள் உள்ளன. இந்தியாவில் வீட்டுப்பணியாளர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் மிக மோசமாக வேலைவாங்கப்பட்டும் மிக மோசமாக நடத்தப்படுகின்றனர் என்பது இந்திய அரசின் ஆய்விலேயே வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழர்க்கு வேறு நீதி
இலங்கியில் தமிழர்களைக் கொல்ல இந்தியா உதவி செய்தமையை சீனப் பூச்சாண்டி மூலம் நியாயப் படுத்தும் இந்தியா அமெரிக்காவுட்னான உறவைப் பற்றிக் கவலைப்படாமல் தேவ்யானியைப் பாதுகாக்க இந்தியா முயல்கிறது

இந்திய அரசின் கேவலமான் பாராபட்சம்
தேவ்யானி, சங்கீதா ஆகிய இருவருமே இந்தியக் குடிமக்கள். ஆனால் தேவ்யானியைப் பாதுகாக்க எல்லா வகையிலும் முயற்ச்சி செய்யும் இந்திய அரசு சங்கீதாவைக் கேவலப்படுத்துகிறது. இதுதான் இந்தியாவின் மனுதர்ம நீதியா?

Wednesday, 18 December 2013

பிரித்தானியாவில் கதிரையில் சாய்ந்து இருந்து கொண்டு ஆப்கானில் தலிபான்கள் மீது தாக்குதல்

பிரித்தானியாவில் கணனித் திரைகளுக்கு முன்னர் "கூலாக" இருந்து கொண்டு எண்ணாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஆப்கானிஸ்த்தானில் செயற்படும் தலிபான் உறுப்பினர்கள் மீது பிரித்தானியப் படையினர் தாக்குதல் நடத்துகிறார்கள்.

பிரித்தானியாவில் இருந்து ஆளில்லாப் போர் விமானங்களை அனுப்புவதும் உண்டு. அதே வேலை ஆப்கானில் கந்தகாரில் உள்ள விமானப் படைத்தளத்தில் இருக்கும் ஆளில்லா விமானங்களை பிரிந்தானியாவில் இருந்து செயற்படச் செய்து தாக்குதல்கல் நடத்துவதும் உண்டு.

பிரித்தானிய் விமானப்படையான RAFஇன் XIII Squadron என்னும் படைப்பிரிவினர் ஆளில்லாப் போர் விமானங்கள் மூலம் இந்தத் தாக்குதல்களை நடாத்துகின்றனர். இதனால் பல முக்கிய தலிபான் மற்றும் அல் கெய்தாப் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

பிரித்தானிய் விமானப்படையான RAFஇன் XIII Squadron படைப்பிரிவினர் செயற்பாடுகள் பற்றிய தகவல்களை டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவின் வரிங்டன் நகரில் பிரித்தானிய் விமானப்படையான RAFஇன் ஆளில்லா விமானப்படைத் தளம் அமைந்துள்ளது. பிரித்தானியா தாக்குதல் ஆளில்லாப் போர் விமானத்தை பாவிப்பதற்கு எதிரான ஆர்ப்பாட்டம் 27-04-2013-ம் திகதி வரிங்டனில் இடம்பெற்றது. அமெரிக்கா கண்டனத்துக்குரிய ஆளில்லாப் போர் விமானத் தாக்குதலகளை ஆப்கானிஸ்த்தானிலும் யேமனிலும் மேற் கொண்டது. இதில் அப்பாவிகளும் கொல்லப்பட்டனர். முக்கிய இசுலாமியப் போராளித் தலைவர்களை அமெரிக்கா பெருமிதம் கொள்கிறது. ஆப்கானிஸ்த்தானில் அல் கெய்தாவிற்கும் தலிபானுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியதுடன் அவர்களின் நடமாட்டத்தை அமெரிக்கா தனது ஆளில்லாப் போர் விமானங்களினூடாக தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு பெருமளவு கட்டுப்படுத்தியது. Drone என்று பொதுவாக அழைக்கப்படும் unmanned aerial vehicle (UAV)களிற்கு பிரித்தானியா "Remotely Piloted Air Systems" (RPAS) என்று பெயர் சூட்டியுள்ளது.





பிரித்தானிய ஆளில்லாப் போர் விமானங்களில் MQ-9 REAPER விமானங்கள் முக்கியமானவை. இவை உள(intelligence), கடுங்கண்காணிப்பு (surveillance), reconnaissance (புலங்காணல்),  நெருங்கிய ஆதரவு (close air support), தாக்குதல் (combat) தேடுதலும் விடுவித்தலும் ( search and rescue), துல்லியமாகத் தாக்குதல் (precision strike),உடன் லேசர் (buddy-laser) உட்படப் பலவிதமான சேவைகளைப் புரியக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த விமானங்களை கழற்றி மடித்து வேறு விமானங்களில் பொதிகளாக வேறு நாடுகளுக்கு அனுப்பி அங்கு திறந்து பொருத்தித் தாக்குதல் செய்யக் கூடிவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.  பிரித்தானியா பல பில்லியன்களைச் செலவழித்து மேலும் புதிய வகையான ஆளில்லா விமானங்களை அடுத்த பத்து ஆண்டுகளில் உருவாக்கவிருக்கிறது. 


Tuesday, 17 December 2013

யஸ்வந்த் சின்ஹா: ஈழம் தொலைவில் இல்லையா அல்லது தேர்தல் தொலைவில் இல்லையா?

தமிழ் ஈழம் தொலைவில் இல்லை என இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் யஸ்வந்த் சின்ஹா தனது பாரதிய ஜனதாக் கட்சியின்  சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் புதனன்று தெரிவித்துள்ளார். இப்படி ஒரு செய்தி 14/12/2013இல் இருந்து அடிபடுகின்றது. இதைப் பார்த்தவுடன் ஈழ விடிவிற்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.

மேற்படி செய்தி டிசம்பர் 14-ம் திகதி ஒரு ஆங்கில இணையத் தளத்தில் வெளிவந்திருந்தது. இதைத் தொடர்ந்து பல இணையத் தளங்களில் அது வந்தது. பின்னர் அதன் தமிழாக்கம் ஒரு தமிழ் இணையத் தளங்களில் வந்தது. வழமை போல பல இணையத் தளங்கள் அதை பிரதி பண்ணி விட்டன. வாழ்க கொப்பி அண்ட் பேஸ்ட். பல சமூக வலைத்தளங்களில் இந்தச் செய்து பகிரப்பட்டது. பல தமிழர்கள் இந்தச் செய்தியைப் பார்த்து தமிழீழப் போராட்டத்திற்கு இது ஒரு பெரு வெற்றி என்றும் கூறினார்கள்.

இந்தச் செய்தியின் மூலத்தைத் தேடிப் போவது நதி மூலத்தைத் தேடிப்போவது போல இருந்தது. ஒரு இணையத்தளம் செய்தி மூலம் டெக்கான் ஹேரால்ட் எனச் செய்தியின் அடியில் போட்டிருந்தது. பொதுவாக பல இணையத் தளங்கள் இப்படிச் செய்வதில்லை. ஏதோ தாமே நேரில் நின்று பார்த்து அறிக்கை கொடுப்பது போல எழுதுவார்கள்.

ஜஸ்வந்த் சிங் புதன்கிழமை இப்படித் தெரிவித்திருந்தார் என்று இணையத் தளங்கள் செய்தி போட்டிருந்தன. அச்சு ஊடகங்கள் செய்தி வெளியிடும் போது செய்தித் தலைப்பின் கீழ் திகதியையும் செய்தி கிடைத்த இடத்தையும் முதல் போடுவார்கள். செய்திக்குள் நேற்று சொன்னார் என்று இருந்தால் நீங்கள் வாசிக்கும் திகதிக்கு முதல் நாள் என்று நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. செய்தித் தலைப்பின் கீழ் உள்ள திகதிக்கு முதல் நாள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இது அச்சு ஊடகங்களில் ஒரு அடிப்படை விதி. ஜஸ்வந்த் சிங் சொன்ன செய்தியை மொழி பெயர்த்து வெளிவிட்ட ஊடகங்கள் செய்தி மூலத்தின் திகதியை வெளிவிடவில்லை. சில இணையத் தளங்கள் ஜஸ்வந்த் சிங் என்றும் குறிப்பிட்டிருந்தன. சில ஜஸ்வந்த் சின்ஹா என்றன.

டெக்கான் ஹெரால்டில் தேடிப்போனால் யஸ்வந்த் சின்ஹா சென்னையில் ஒரு திருமண மண்டபத்தில் 2013 ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி புதன்கிழமை நடந்த கூட்டத்தில் இப்படிப் பேசியிருந்தார் யஸ்வந்த் சின்ஹா. அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசில் டிசம்பர் 1998இல் இருந்து ஜூன் 2002 வரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் ஜஸ்வந்த் சிங்.  இவரைத் தொடர்ந்து 2002-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து 2004-ம் ஆண்டு மே மாதம் வரை  அடல் பிஹாரி வாஜ்பாயின் அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் யஸ்வந்த் சின்ஹா. தமிழ் ஈழம் தொலைவில் இல்லை எனக் கூறியவர் இரண்டாமவரான யஸ்வந்த் சின்ஹா.

பல பழைய தமிழ்ப்பாடல்களை மீள்கலவை(ரீமிக்ஸ்) என்று சொல்லி திரும்பவும் தமிழ்த் திரைப்படங்களில் இப்போது வெளிவிடுகின்றார்கள். அரசியலிலும் பழைய செய்திகளை மீள்பதிவு செய்து விடுகின்றார்களா? ஏப்ரில் மாதம் யஸ்வந்த் சின்ஹா ஆற்றிய உரை மீண்டும் இப்போது வெளிவிடுவது ஏன்? அதுவும் ஏதோ நேற்றுக் கூறிய மாதிரி செய்திகள் விடுவது ஏன்?

யஸ்வந்த் சின்ஹா இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போதுதான் விடுதலைப் புலிகளிடம் ரணில் விக்கிரமசிங்க இடைக்காலத் தன்னாட்சி சபையை வழங்கப் போகிறார் என்று கொழும்பிற்கு அப்போது இந்தியத் தூதுவராக இருந்த நிருபாமா ராவ் துரிதமாகச் செயற்பட்டு ரணிலின் அமைச்சரவையைக் கலைத்தார். சந்திரிகாவையும் ஜேவிபியையும் இணைத்து கூட்டணி அமைக்கப்பட்டது. இதற்கு முன்னின்று உழைத்தவர் நிருபாமா என்று சொல்லப்பட்டது. 2004இல் ஒரு இடைக்கால தன்னாட்சி அதிகார சபையையே தமிழர்களுக்கு கொடுக்கக் கூடாது என வரிந்து கட்டிக் கொண்டு நின்றவர்கள் இப்போது தமிழீழம் பற்றிக் கதைத்ததை மீண்டும் செய்திப்படுத்துவது ஏன்?

தேர்தல்தான் வெகு தொலைவில் இல்லை
இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல் வெகு தொலைவில் இல்லை என்பதால்தான் இப்படிப் பட்ட செய்திகள் மீளப் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. இது ஒரு முன்னோட்டம் மட்டுமே. இன்னும் பல இணைய வெளித் தாக்குதல்கள் தமிழர்களைத் திசை திருப்பும் நோக்கத்துடன் நடத்தப்படலாம். இந்தியாவின் அடுத்த பொதுத் தேர்தலில் பாரத ஜனதாக் கட்சியினரின் தலைமை அமைச்சர் வேட்பாளரான நரேந்திர மோடி தனக்கு ஆதரவான பிரச்சாரத்திற்கு என ஓர் இணைய வெளிப் படையை உருவாக்கியுள்ளார். இருபதிற்கும் முப்பதிற்கும் இடைப்பட்ட வயதைக் கொண்ட தகவற் தொழில் நுட்ப்பம் படித்த இளைஞர்கள் பல்லாயிரக் கணக்கானவர்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளனர். இணையவெளி இந்துக்கள் அதாவது சைபர் ஹிண்டூஸ் என்றழைக்கப்படும் இவர்கள் சமூக வலைத்தளங்களான டுவிட்டர் பேஸ்புக் மூலம் திரட்டப்படுகின்றனர். இவர்கள் மாதம் ஒரு முறை ஒன்று கூடி அடுத்த தேர்தலில் செய்ய வேண்டியவை இந்துத்துவக் கொள்கையை எப்படி நிலை நிறுத்துதல், இந்தியாவின் தற்போதைய நிலைமை, இந்தியாவின் எதிர்காலம், போன்றவற்றைப்பற்றி கலந்து உரையாடுகின்றார்கள். உள்ளூரிலும் இவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள்.

இணைய வெளி இந்துக்கள் பாரதிய ஜனதாக் கட்சி சார்பாகச் செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் குஜராத்தில் மோடியின் ஆட்சியைப் பற்றி மிகைப்படுத்தப் பட்ட தகவல்களைப்பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.  மோடியின் பொதுமக்கள் தொடர்புக் கட்டமைப்பு என்றும் உறங்குவதில்லை அது தேர்தல் நெருங்க நெருங்க மிகவும் அதிகமாகச் செயற்படுகின்றது என்பதை காங்கிரசுக் கட்சியினரும் உணர்ந்துள்ளனர். இமயமலையை ஒட்டிய உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி இருந்த பதினையாயிரம் குஜராத்திரியர்களை மோடி போய் மீட்டுக் கொண்டு வந்தார் என்ற பொய்ச் செய்தி கூட திட்டமிடப்பட்டுப் பரவ விடப்பட்டது. ஆனால் இந்தியத் தேர்தலில் பொய்யான செய்திகள் பெரும் தாக்கத்தை விளைவிக்கும் என்பதை 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கருணாநிதியின் உண்ணாவிரத நாடகத்தின் மூலம் நாம் நன்கு அறிந்து கொண்டோம்.  பாரதிய ஜனதாக் கட்சியினரும் தமிழர்களை நோக்கி பல உணர்ச்சி மிக்க பொய்ச் செய்திகளை பரப்பலாம்.

2013 ஏப்ரல் மாதம் சென்னையில் உரையாற்றிய யஸ்வந்த் சின்ஹா தனிய ஈழத்துடன் மட்டும் நின்று விடவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காங்கிரசுக் கட்சியின் மேலும் இரு பலவீன மையங்களான கச்சதிவையும் மீனவர் பிரச்சனையையும் பற்றியும் கருத்துத் தெரிவித்திருந்தார். கச்சதீவை இந்தியா மீடக வேணும் என்றார். "கச்­ச­தீவை நாம் மீளப்­பெற்றால் எமது மீன­வர்கள் பாதிக்­கப்­பட மாட்­டார்கள். இதன்­மூலம் இந்­தியக் கடற்­ப­ரப்பை நாங்கள் கட்­டுப்­ப­டுத்த முடியும்".

இப்படிப்பட்ட வாசகங்களை இவர்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் கூறுவார்கள். ஆனால் இந்துத்துவாக் கொள்கைப்படி சிங்களமும் தமிழும் சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்த மொழிகள். இரண்டையும் நாம் எம் பிள்ளைகள் போல் பார்க்க வேண்டும். தமிழர்கள் இராவணனின் வழித் தோன்றல்கள். சிங்களவர் இராமருக்கு உதவிய வானரங்களின் வழித் தோன்றல்கள்.

சென்னைக்கு 2013 ஏப்ரலில் பயணம் மேற்கொண்ட யஸ்வந்த் சின்ஹா தனி ஈழத்துடன் நிற்கவில்லை. இலங்கை தொடர்பாக பாரதிய ஜனதாக் கட்சி தனது கொள்கையை மாற்றும் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் கட்சியின் உயர் பீடம் கூடி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஈழம் தொலைவில் இல்லை என்று சொல்வதில் இருந்து தெரிவது தேர்தல் தொலைவில் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. நெடு மாறன் ஐயா போல் ஒருவர் இந்தியாவின் உள்த்துறை அமைச்சராகவும் வைக்கோ ஐயா போன்ற ஒருவர் இந்திய வெளிநாட்டுத் துறை அமைச்சராகவும் தோழர் சீமான் அல்லது தோழர் திருமுருகன் காந்தி போன்ற ஒருவர் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் வந்து மூன்று ஆண்டுகளின் பின்னர் தான் தமிழர்களுக்கு சார்ப்பாக் இந்தியா செயற்படும். அதுவரை இந்திய அள்ளி வைப்புக்கள் தொடரும். 2014இல் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்து அதில் சுப்பிர மணிய சுவாமி என்னும் தமிழின விரோதி வெளிநாட்டமைச்சில் ஏதாவது பதவி பெற்றால் ஈழத்தில் தமிழர்களை இந்தியா முற்றாக அழித்துவிடும்.
http://www.deccanchronicle.com/130404/news-politics/article/tamil-eelam-not-far-away-yashwant-sinha

Saturday, 14 December 2013

தேசக்குரல் இன்றிருந்தால்

மாவீரர் நாளில் கண்ணீர் சிந்தி
சிந்தை கலங்கி நாம் நிற்கையிலே
தன் குத்து வசனங்களால்
எம்மைச் சிரிக்க வைத்து
சிந்திக்க்கவும் வைத்து
கொள்கை விளக்கம்
கொடுப்பார் எங்கள் தேசத்தின் குரல்

இன்றிருந்தால்

இரகசியமாய் மரக் கன்று நடவும்
மாட்டுக்கு நலமடிக்கவும்தான்
மாகாணசபைக்கு அதிகாரம்  உண்டென்று
கொள்கை விளக்கம்
கொடுப்பார் எங்கள் தேசக் குரல்
இன்றிருந்தால்

குங்குமப் பொட்டுக்காரனை
குண்டம்மாவும் வரவேண்டாம்
என ஒதுக்கினாள்
எனக் கிண்டலடிப்பார்
எங்கள் தேசத்தின் குரல் இன்றிருந்தால்

மக்களைக் கண்டதும் சம்பந்தரின்
கார் பின்னோக்கிப் போகின்றது
சம்பந்தரின் கார் மட்டுமல்ல
TNAயும்தான் ரிவேர்ஸில் போகின்றது
இப்படியே சம்பந்தர் போனால்
சொப்பன சுந்தரியின் கார் போல்
ஆவார் சம்பந்தர்
TNAஐ வைச்சிருந்த சம்பந்தரை
இப்ப ஆர் வைச்சிருக்கின என்ற
கேள்வி நாளைக்கு வ்ரும்
எனக் கிண்டலடிப்பார்
எங்கள் தேசத்தின் குரல் இன்றிருந்தால்

குங்குமப் பொட்டுக்காரன்
சாப்பிட்ட கை கழுவப் போறதுக்கும்
சிங்களப் படை ஆளுனரின்
அனுமதிப் பெற்றுத்தான் கழுவ வேண்டும்
என நகைச்சுவையாகப் பேசுவார்

எங்கள் தேசத்தின் குரல் இன்றிருந்தால்

இத்தாலி அக்காவிற்கு ஏதோ வருத்தமாம்
அடிக்கடி அமெரிக்கா போறா
என்ன வருத்தம் என்று சொல்றா இல்லை
அது என்ன சொல்லக் கூடாத வருத்தமா-இல்லை

சொல்லக் கூடாத இடத்தில் வருத்தமா
எனக் கேட்டுக் கிண்டலடிப்பார்
எங்கள் தேசத்தின் குரல் இன்றிருந்தால்

ஜெர்மனி பிறேமன் நகரில்
மக்களின் நிரந்தர தீர்ப்பாயம்
திரைப்படமல்ல திரைப்பட விளம்பரமே
உண்மையான திரைப்படம் இனித்தான் வரும்
என்று இனிதாக விளக்கம் கொடுப்பார்

எங்கள் தேசத்தின் குரல் இன்றிருந்தால்


நெறிகாட்டி வழிகாட்டி
குறிகாட்டி குணம் காட்டி
அறிவூட்டி தலைவன் செயலிற்கு
பொருள் கூட்டிப் பரப்புரை செய்ததனால்
தேசக் குரலானார் எங்கள் பாலா அண்ணா

அருமருந்தான கருத்துக்களை
நகைச்சுவைத் தேனூட்டி
எம் சிந்தனை நாவில் தடவும்
அறிவுப் பாட்டியாக் கிடைத்தவர்
எங்கள் தேசக் குரல் பாலா அண்ணா

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...