Monday 30 December 2013

2013-ம் ஆண்டு: ஒரு மீள் பார்வை

ஆர்ப்பாட்டக்காரர் அடக்க வந்தவரை முத்தமிடுகின்றார்.

இரசியக் கப்பல்கள் சிரியாவை நோக்கி நகர்கின்ற அச்சத்தில் இருந்தும் மாயன் கலண்டரின்படி உலகம் அழியும் என்ற அச்சத்தில் இருந்தும் உலக மக்கள் மீண்டிருக்கையில் 2013-ம் ஆண்டு பிறந்தது. 2008இல் ஆரம்பமான உலகப் பொருளாதாரப் பிரச்சனை 2013வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.  2013-ம் ஆண்டு இரசிய அதிபர் விளாடிமீர் புட்டீனின் ஆண்டாகவும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு ஒரு மோசமான ஆண்டாகவும் அமைந்தது.


பிலிப்பைன்ஸின் முள்ளிவாய்க்கால்

இயற்கை அனர்த்தங்கள்
பிலிப்பைன்ஸை ஹையான் சூறாவளி மணிக்கு 235மைல் வேகத்தில் தாக்கியதில் பல கரையோர நகரங்களின் குடிசார் கட்டமைப்புக்கள் முற்றாக அழிக்கப்பட்டன. இதுவரை வந்த சூறாவளிகளில் இது நான்காவது பெரியதாகும். ஆறாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
ஐக்கிய அமெரிக்கா இருபது மில்லியன் டொலர்களும் ஜப்பான் பத்து மில்லியன் டொலர்களும் பிலிப்பைன்ஸிற்கு உதவ முன்வந்த போது சீனா இரண்டு மில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவியை மட்டுமே செய்தது. இது சீனாவின் மனிதாபிமானமற்ற கஞ்சத்தனம் என விமர்சிக்கப்படது. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைத் தாக்கிய ஃபைலின் புயலின் போது இந்திய அரசின் நிவாரண ஏற்பாடுகள் இதற்கு முந்திய இயற்கை அனர்த்தங்களுடன் ஒப்பிடுகையில் சிறப்பாக அமைந்திருந்தன என்ற பாராட்டு பல தரப்பினரிடமிருந்து இந்தியாவிற்குக் கிடைத்தன. அமெரிக்க ஒக்லோஹாம நகரம் சுழல்காற்றாலும், மெக்சிக்கோ சூறாவளியாலும் பிலிப்பைன்ஸ் விசியாஸ் நகரம் நிலநடுக்கத்தாலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின.
சிரியாவில் வேதியியல் குண்டுத் தாக்குதல்

சிரியா
2013இல் உலக அரங்கில் முக்கிய இடம் பிடித்தது சிரியாவே. 2012இல் சிரிய அதிபரி பாஷார் அல் அசாத்தின் ஆட்சி கவிழும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2013இன் இறுதியில் அவர் உறுதியுடன் பதவியில் தொடர்கின்றார். ஆனால் சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் பலவீனமடையவில்லை ஆனால் அமெரிக்க ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்கள் பலத்த இழப்புக்களுடன் பலவீனமடைந்துள்ளார்கள். 2011இல் இருந்து இதுவரை சிரியாவில் கொல்லப்பட்டவர்களில் அரைவாசிப்பேர் 2013இல் கொல்லப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட சிரியாவிற்கான சமாதானத் தூதுவர் என்ன செய்கின்றார் என்பதே பெரிய கேள்வி. அவர் ஐநாவின் செலவில் பல நாடுகளுக்குப் பயணம் செய்து கொண்டிருக்கிறார். அவர் ஜெனிவாவில் 2014 ஜனவரியில் கூட்டவிருக்கும் சிரிய சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈரான் பங்கேற்கக் கூடாது என ஐக்கிய அமெரிக்கா தடை செய்துள்ளது.

ஈரானிய அமெரிக்க பேச்சுவார்த்தை
ஈரான்
2013இல் சிறப்பாக ஒரு தேர்தலை நடாத்திய ஈரானை இஸ்ரேலோ அல்லது அமெரிக்காவோ அல்லது இரண்டும் இணைந்தோ தாக்கி அதன் அணுக்குண்டு உற்பத்தி செய்யும் கனவைத் தகர்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2013இன் இறுதியில் அமெரிக்காவும் ஈரானும் நெருங்க இஸ்ரேல் முகம் சுழித்துக் கொண்டிருக்கிறது. ஈரானிற்கும் அமெரிக்காவிற்கும் தற்போது ஒன்றிற்கு ஒன்று அதிகம் தேவைப்படுகின்றது. ஈரானின் யூரேனியப் பதப்படுத்தலுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடை ஈரானைப் பெரிதும் பாதித்துக் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈரான் மீது விதித்திருந்த பொருளாதாரத் தடையால் 2013இன் முற்பகுதியில் ஈரானியப் பொருளாதாரம் சிதறும் ஆபத்து உள்ளது என பல பொருளாதார நிபுணர்கள் 2012இல் எச்சரித்திருந்தனர். ஆனால் 2013 இன் பிற்பகுதி வரை ஈரான் பொருளாதரத் தடைக்கு எதிராகத்தாக்குப் பிடித்துக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் இந்தப் பொருளாதாரத் தடையில் இருந்து விடுபட்டால் ஈரானிய மக்கள் பெரிய சுமையில் இருந்து விடுபடுவார்கள். ஈரானியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லும். இதற்காக சில விட்டுக் கொட்டுப்புக்களைச் செய்து ஈரான் அமெரிக்காவுடன் உறவை வளர்க்க ஈரான் விரும்புகிறது. ஆனாலும் அமெரிக்காவிற்கு பெருமளவில் விட்டுக் கொடுத்தால் அல்லது பணிந்தால் அது ஈரானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக ஈரானி உள்ள தீவிரப் போக்கு உடையவர்களை கிளர்ந்து எழச்செய்யும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் அமெரிக்க ஈரானியப் பேச்சு வார்த்தையில் இழுபறி தொடர்கின்றது.

நைரோபியில் அல் கெய்தா ஆதரவுக் குழு கடைத் தொகுதியில் தாக்குதல் செய்த போது தப்பி ஓடும் சிறுமி
அடங்க மறுக்கும் இசுலாமியப் போராளிகள்
பல தலைவர்களை அமெரிக்காவில் ஆளில்லாப் போர்விமானங்களின் தாக்குதல்களுக்கும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கும் பலை கொடுத்தாலும் இசுலாமியப் போராளி அமைப்புக்களான தலிபான், அல் கெய்தா, ஹிஸ்புல்லா, ஹமாஸ் போன்றவை 2013-ம் ஆண்டு தமது வலிமையை நிலை நிறுத்திக் கொண்டன. தாம் நினைத்த இடத்தில் நினைத்த படி தம்மால் தாக்குதல் நடாத்துவது மட்டுமல்ல தம்மால் பல நாடுகளில் கணிசமான பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்றும் இசுலாமியப் போராளி இயக்கங்கள் 2013இலும் நிரூபித்துள்ளன. தலிபான்களால் சுடப்பட்ட பாக்கிஸ்த்தானியச் சுட்டிப் பெண் மலாலாவை மேற்கு நாடுகள் உலக அரங்கில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான பரப்புரைக் கருவியாக வெற்றிகரமாக திட்டமிட்டு மாற்றினார்கள். வட மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் நடந்த பிரிவினைப் போராட்டத்தில் அல் கெய்தா இயக்கத்தினர் ஊடுருவி அங்கு பெரும் நிலப்பரப்பை தம்வசமாக்கினார். ஒரு பெரும் நிலப்பரப்பு அல் கெய்தாவின் வசமானதால் பிரான்ஸ் அங்கு படைகளை அனுப்பி அல் கெய்தாவினரிடம் இருந்து மாலியை மீட்டது.

சிரியாவில் பாதிக்கப்பட்ட குழந்தை
திசை மாறிய அரபு வசந்தம்
துனிசியாவில் பழவியாபாரம் செய்து கொண்டிருந்த இளைஞனின் தீக்குளிப்புடன் உருவான அரபு வசந்தம் எகிப்து, லிபியா, சூடான் ஆகிய நாடுகளில் ஆட்சியாளர்களை மாற்றியது. சிரியாவில் ஒரு மோசமான உள்நாட்டுப் போரை உருவாக்கியது. ஆனால் எகிப்தில் அரபு வசந்தத்திற்கு முன்  இருந்த நிலையிலும் மொசமான நிலை இப்போது உருவாகிக் கொண்டிருக்கின்றது. துனிசியாவில் நினைத்த இலக்கு இன்னும் அடையப்படவில்லை. லிபியா பல படைக்கலன் ஏந்திய ஒன்றிற்கு ஒன்று முரண்பட்ட குழுக்களின் கைகளில் சிக்கித் தவிக்கிறது.
முடிக்குரியவர்

தென் கொரியா
2013இன் குழப்படிகாரனாக அமைந்த நாடு வட கொரியாவாகும். ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களையும் மீறி தனது அணுப் படைக்கலனகளை உற்பத்தி செய்யப் போவதாக வட கொரியா அறிவித்தது. பல தொலைதூர ஏவுகணைகளையும் வட கொரியா பரிசோதனை செய்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது ஏவுகணைகளை இடைமறிக்கும் ஏவுகணைகளை தனது நட்பு நாடான தென் கொரியாவில் நிறுவியது. வட கொரிய அதிபர் கிம் ஜொங் ஒரு கொலை முயற்ச்சியில் இருந்து தப்பினார். வட கொரிய அதிபரின் மாமனாரும் அதிகாரத்தில் இரண்டாம் நிலையில் இருந்தவரான ஜான் சங்க் தாய்க்கிற்கு தேசத் துரோகக் குற்றத்திற்காக கொலைத் தண்டனை வழங்கப்பட்டது. இவர் தனது நாட்டில் தனது அதிகாரப்பிடியாக அதிகரிக்க முயற்ச்சித்தார் எனப்படுகின்றது. இவரது கொலை வட கொரியாவின் நட்பு நாடுகளான இரசியாவையும் சீனாவையும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

 இரசியா
 2013 இரசியாவினதும் அதன் அதிபர் விளாடிமீர் புட்டீனதும் ஆண்டாகும். உலகிலேயே அதிகாரம் மிக்க தலைவர்களின் பட்டியலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி விட்டு புட்டீன் முதலாம் இடத்தைப் பிடித்துக் கொண்டார். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இரசியாவை ஒரு தோற்கடிக்கப்பட்ட நாடாக மேற்கு நாடுகள் இதுவரை காலமும் நடாத்தி வந்தன. உலக அரங்கில் இரசியாவின் செல்வாக்கை நிலை நிறுத்த வேண்டிய எல்லா இராசதந்திரக் காய் நகர்த்தல்களையும் புட்டீன் வெற்றீகரமாகச் செய்து வருகின்றார். ஐரோப்பிய ஒன்றியம் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளைத் தன்னுடன் இணைத்து தன்னை விரிவாக்கிக் கொண்டு வருவதற்கு உக்ரேயினில் வைத்து விளடிமீர் புட்டீன் ஒரு முற்றுப் புள்ளி வைத்தார்.

ஐக்கிய அமெரிக்கா

அமெரிக்காவையும் அதிபர் பராக் ஒபாமாவையும் பொறுத்தவரை 2013 ஒரு மிக மோசமான ஆண்டாகும். எட்வேர்ட் ஸ்னோடன் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு முகவரகம் உலக நாடுகளையும் உலகத் தலைவர்களையும் அமெரிக்க மக்களையும் தீவிரமாக உளவு பார்த்ததை அம்பலப் படுத்தினார். சோமாலியக் கடற்கரையில் அமெரிக்காவின் பிரபல சீல் படைப்பிரிவினர் செய்ய முயன்ற தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது. எகிப்தும் சவுதி அரேபியாவும் அமெரிக்காவிடமிருந்து விலகிச் செல்கின்றன. சிரியாவில் அமெரிக்க ஆதரவு கிளர்ச்சிக்காரர்கள் படுதோல்வியைச் சந்திக்கின்றனர். ஆப்கானிஸ்த்தானில் இருந்து ஒரு கௌரவ வெளியேற்றம் கேள்விக் குறியாகிக் கொண்டிருக்கின்றது. ஈரானின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யும் திட்டம் இன்னும் வெற்றியளிக்கவில்லை. இஸ்ரேல் அமெரிக்காவின் மத்திய கிழக்குக் கொள்கையி கடும் அதிருப்தி அடைந்துள்ளது. சிரியாவில் இரசியா தலையிட்டு அமெரிக்காவின் சிரிய வேதியியல் குண்டு பாவித்தமைக்கு எதிரான தாக்குதலை நிறுத்தியது. நிதி நெருக்கடியால் அமெரிக்க அரச பணிமனைகள் இரண்டு வாரங்கள் இழுத்து மூடப்பட்டன. ஒபாமாகெயார் எனப்படும் பராக் ஒபாமாவின் மருத்துவக் காப்புறுதித் திட்டம் பல நிர்வாக நெருக்கடிகளை எதிர் கொண்டு ஒபாமா நிர்வாகத்தின் மானத்தைக் கப்பல் ஏற்றிக் கொண்டிருக்கின்றது. அமெரிக்கக் கடற்படைக் கப்பலான கௌப்பென்னை தென் சீனக் கடலில் வைத்து சீனக் கடற்படைக் கப்பல் நிறுத்து என உத்தரவிட்டு கௌப்பென்னுடன் மோதும் நிலையை உருவாக்கியது. கௌப்பென் விலகிச் சென்றது. உலகின் வலிமை மிக்க கடற்படையைக் கொண்ட அமெரிக்காவிற்கு இது ஒரு முகத்தில் கரி பூசிய நிகழ்வாகும். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை இந்தியாவும் தேவ்யானி விவகாரத்தில் சோதனைக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கின்றது.

பொங்கி வரும் அலையை படம் பிடிக்கும் சீனர்கள் முகப்புத்தகத்தில் போடுவதற்கு????
சீனா
தனது பொருளாதாரத்தை நிதானமாகவும் நன்கு திட்டமிட்டும் சீர்திருத்தம் செய்து வரும் சீனாவிற்கு 2013 ஒரு மைல்கல்லாகும். உலகப் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தனது பொருளாதாரத்தில் மேலும் சில சீர்திருத்தம் செய்யும் முடிவுகளை சீனா அறிவித்தது. தென் சீனக் கடலையும் கிழக்குச் சீனக் கடலையும் இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்தையும் குறிவைத்த தனது விரிவாக்கற் கொள்கையை சீனா 2013இல் மேலும் உறுதி செய்து கொண்டுள்ளது. தனது நாணயத்தை உலக நாணயமாக்கும் நகர்வையும் சீனா ஆரம்பித்து வைத்துள்ளது.


இந்தியா
பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட பின்னடைவு வீழ்ச்சியடைந்த நாணயப் பெறுமதி ஆகியவற்றின் மத்தியில் இந்தியா தனது பொருளாதாரத்தை 2013இல் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஊழல் பெண்களுக்கு எதிரான வன்முறை போன்றவற்றால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது. படைத்துறையிலும் விண்வெளி ஆய்விலும் தனது திறைமையை இந்தியா மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஆளும் காங்கிரசுக் கட்சியைப் பொறுத்தவரை 2013 ஒரு மோசமான ஆண்டாக இருந்தாலும் 2014இன்னும் மோசமாக அமையலாம்.

இலங்கை
உலக அரங்கில் பயங்கரவாதத்தை ஒழித்த நாடு என்று புகழப்பட்ட இலங்கை தனது புகழை இழந்து ஒரு மோசமான மனித உரிமை மீறல் செய்யும் நாடு என்ற பெயரை 2013இல் பெற்று விட்டது. பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு பிள்ளையார் பிடிக்கப் போன கதையாகிவிட்டது. 2013 மாகாண சபையிலும் 13-ம் திருத்தத்திலும் ஒன்றும் இல்லை என்பதை நடை முறை ரீதியாக நிரூபிக்கும் ஆண்டாக அமைந்தது.

2013இல் நிகழ்ந்து கொண்டிருக்கும் மோசமான நிலமைகள் சீரடையும் அறிகுறி எங்கும் இல்லை.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...