Friday, 20 December 2013

தேவ்யானி விவகாரமும் தேவையான இந்திய அமெரிக்க உறவும்


சீன விரிவாக்கம் பெரும் முன்னெடுப்புடன் ஆரம்பித்திருக்கும் இந்த நூற்றாண்டில் இந்திய அமெரிக்க  நல்லுறவு மிகவும் தேவையான ஒன்றாக இருக்கிறது. ஆனால் தேவ்யானி விவகாரம் இந்திய அமெரிக்க உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்துமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

தேவ்யானி விவாகரத்தில் இந்திய மண்ணில் பிறந்த மூன்று பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். ஒருவர் தேவ்யானி கொப்ரகடெ என்ற இந்திய வெளியுறவுச் சேவை அதிகாரி, இரண்டாமவர் அவரது பணிப்பெண்ணான சங்கீதா ரிச்சர்ட், மூன்றாமவர் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் படித்து அங்கு குடியுரிமை பெற்று மான்ஹட்டன் வழக்குத் தொடுனராகப் பணிபுரியும் பிரீட் பராரா. இதில் சங்கீதா ரிச்சட் தென் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது இங்கு முக்கியமான விடயமாகும்.

பட்டம் பெற்ற மருத்துவரான தேவ்யானி மருத்துவத் தொழிலை விட்டு தனது மாமனாரின் பாதையில் இந்திய வெளியுறவுச் சேவையில் இணைந்தார்.

2013 ஜூன் மாதம் 23-ம் திகதி தேவ்யானி தனது பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்டைக் காணவில்லை என அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டுத் தூதுவரகங்களுக்குப் பொறுப்பான அதிகாரியிடம் முறையிட்டார். நியூயோர்க் நகரக் காவற்துறையினரிடம் முறையிடும்படி அவரிடம் சொல்லப்பட்டது. காவற்துறையினரிடம் முறையிட தேவ்யானி சென்றபோது காணமற் போனவரின் குடும்பத்தவர் மட்டுமே முறையிடலாம் என அவரிடம் கூறப்பட்டது. ஜூலை முதலாம் திகதி பெயர் கூறாத பெண் ஒருத்தி தேவ்யானிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து உரிய இழப்பீடு வழங்கினால் தேவ்யானிக்கு எதிராக வழக்குத் தொடரப்படமாட்டாது எனத் தெரிவித்தார். இதுபற்றி அமெரிக்க அரசுக்கும் காவற்துறைக்கும் தேவ்யானி முறையிட்டார். பின்னர் மீண்டும் ஜூலை 5-ம் திகதி தனக்கு தொலைபேசி மிரட்டல்கள் வருவதாக தேவ்யானி முறையிட்டார். தொடர்ந்து ஜூலை 8-ம் திகதி பணிப்பெண் சங்கீதாமீது திருட்டுக் குற்றச்சாட்டை காவற்துறையில் பதிவு செய்த தேவ்யானி, சங்கீதா தனது கடவுச் சீட்டு தொடர்பாக பேரம் பேசியதாகவும் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து சங்கீதாவின் கடவுச்சீட்டை இந்திய அரசு இராசதந்திரிகளுக்கு உரிய நிலையை நீக்கி சாதாரண கடவுச்சீட்டாக்கியது. இதனால் சங்கீதா அமெரிக்காவில் ஒரு வதிவிட உரிமையற்றவராகினார். ஜூலை 30-ம் திகதி சங்கீதா நியூயோர்க் நகரக் காவற்துறையினரின் பாதுகாப்பில் இருப்பதாக புது டில்லியில் சங்கீதாவின் கணவன் முறையிட்டுள்ளதாக இந்தியத் தூதுவரக அதிகாரிகள் அமெரிக்க வெளியுறவுத் துறையிடம் முறையிட்டனர். இது அமெரிக்க அரசிற்குப் பாரதூரமான விடயம் என பதில் கூறப்பட்டது. அதற்குப் பதில் கூறிய இந்தியத் தூதுவரகம் அப்பெண் தனது குடியுரிமைக்கும் இழப்பீட்டுக்கும் அலைகிறார் இது அமெரிக்க அரசுக்குத் தேவையற்ற விடயம் என்றது. செப்டம்பர் 20-ம் திகதி டில்லி உயர் நீதிமன்றம் சங்கீதா தேவ்யானிக்கு எதிராக எந்த நாட்டிலும் எந்த வழக்கும் தொடர்க் கூடாது என்று தடையுத்தரவு வழங்கியது. பின்னர் டில்லி நீதிமன்றம் சங்கீதாவிற்கு எதிராக பிணையற்ற பிடியாணை பிறப்பித்தது. இது அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு சங்கீதாவை நாடு கடத்தும்படி கோரப்பட்டது. டிசம்பர் 10-ம் திகதி சங்கீதாவின் கணவரும் இரு பிள்ளைகளும் அமெரிக்கா சென்றனர். டிசம்பர் 12-ம் திகதி தேவ்யானி தனது பிள்ளைகளைப் பாடசாலையில் கொண்டு போய் விடும் வேளையில் கைது செய்யப்பட்டார்

பணிப்பெண் சங்கீதா தரப்பு நியாயம் சொல்ல எவரும் இல்லை
இந்திய அரசும் முக்கிய ஊடகங்களும் சங்கீதாவை ஒரு இந்தியக் குடிமகள் போல நடாத்துவதாகத் தெரியவில்லை. அவரது தரப்பு நியாயங்களை யாரும் வெளிக்கொணரவில்லை. இந்தியாவில் வீட்டுப் பணியாளர்கள் மோசமாக நடாத்தப்படுவதை இந்திய அரசு செய்த ஆய்வுகளே சுட்டிக் காட்டி இருக்கின்றன.

பிரீட் பராரா: புகழ்வேட்டையா குற்ற வேட்டையா

நியூயோர்க் தென்பிராந்திய வழக்குத் தொடுனரான பிரீட் பராரா அமெரிக்க நிதிச் சந்தையைக் கலங்கடித்தவர் அங்கு ஊழல் புரிபவர்களை தேடித் தேடி நீதி முன் நிறுத்தித் தண்டித்தவர். ஈழத்துச் செல்வந்தரான ராஜ் ராஜரத்தினத்தைச் சிறைக்கு அனுப்பினவரும் இவரே. பல இரசியர்களையும் இவர் சிறைக்கு அனுப்பியுள்ளார். இந்தியாவில் நடிகர்கள் இலகுவாக அரசியலுக்குள் நுழைவது போல் அமெரிக்காவில் சிறநநத வழக்குத் தொடுனர்கள் அரசியலுக்கு நுழைவதுண்டு. அப்படி ஒரு நோக்கத்துடன்  பீரீட் பராரா செயற்படுகின்றார் என இந்திய ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன.

Diplomatic immunity எனப்படும் இராசதந்திரக் காப்பு
பன்னாட்டு இராசதந்திரிகளுக்கு என ஒரு வியன்னா உடன்படிக்கை உண்டு. அதன்படி ஒரு நாட்டு இராசதந்திரி இன்னொரு நாட்டில் செயற்படும்போது செய்யும் குற்றங்களுக்கு அந்த இராசதந்திரியின் சொந்த நாட்டிலேயே விசாரிக்கப்படவேண்டும். இதைத்தான் diplomatic immunity எனப்படும் இராசதந்திரக் காப்பு என்பர். அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு ராசதந்திரிகளின் பணியாளர்களைப் பாதுகாக்க என்று தனியான சட்டம் உண்டு. இந்தச் சட்டம் பொதுவான diplomatic immunity எனப்படும் இராசதந்திரக் காப்பிற்கு அப்பாற்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழேயே தேவ்யானி கைது செய்யப்பட்டார்.

முரண்பட்ட தகவல்கள்
தேவ்யானியின் கைது தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் இந்திய ஊட்கங்களில் இருந்து மான்ஹட்டன் சட்டப்ப்பிரிவிடம் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. தேவ்யானி அவரது பிள்ளைகளின் முன் கைவிலங்கிட்டுக் கைது செய்யப்பட்டார். மோசமாக நடத்தப்பட்டார் என்கின்றன இந்திய ஊடகங்கள். இவற்றை மான்ஹட்டன் சட்டப்பிரிவு மறுக்கின்றது. அவர் பிள்ளைகளின் முன் கைது செய்யப்படவுமில்லை, கைவிலங்கிடப்படவுமில்லை, அவருக்கு தொலைபேசி அழைப்புக்கள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது, காப்பி வழங்கப்பட்டது, சிறந்த உணவு வழங்கப்பட்டது என்கின்றது மான்ஹட்டன் சட்டப்பிரிவு. தேவ்யானி ஆடைகள் களையப்பட்டு சோதிக்கப்பட்டதை அவரகள் மறுக்கவில்லை. தேவ்யானி தனது பணிப்பெண் சங்கீதாவிற்கு அமெரிக்காவில் விசா எனப்படும் நுழைவு அனுமதி பெற பொய்யான தகவல்களைக் கொடுத்தார், தனது பணிப்பெண்ணுக்கு அமெரிக்கச் சட்டத்திற்கு விரோதமான முறையில் குறைந்த ஊதியம் கொடுத்தார். அதாவது ம்ணித்தியாலத்திற்கு 3.30 டொலர்கள். அதாவது இரண்டு பிரித்தானியப் பவுண்களிலும் குறைவான தொகை. நீண்ட நேரம் வேலை செய்யச் செய்தார் போன்ற குற்றச்சாட்டுக்கள் தேவ்யானிமீது சுமத்தப்பட்டுள்ளது. சங்கீதாவின் வழக்கறிஞரின் தகவலின்படி அவர் வாரம் ஒன்றிற்கு 90 மணித்தியாலங்கள் வேலைவாங்கப்பட்டார். அவருக்கு விடுமுறையோ காப்புறுதியோ வழங்கப்படவில்லை. தமது ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் கொடுத்ததாக அமெரிக்காவில் குற்றம் சாட்டப்படும் மூன்றாவது இராசதந்திரி தேவ்யானியாகும்.

பாஞ்சாலியான தேவ்யானி
தேவ்யானியை ஆடைகளைந்து சோதனை செய்தது இந்தியர்களை மிகவும் ஆத்திரப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கைதிகளை தடுப்புக்காவலில் வைக்க முன்னர் அவரை முழுமையாகச் சோதனை செய்வார்கள். அவர்களிடம் இருக்கும் ஏதாவது பொருளை வைத்து அவர்கள் தற்கொலை செய்வதைத் தடுக்க இந்த ஏற்பாடாம். ஆனால் இந்தியர்கள் பாஞ்சாலியின் துகிலுரிந்ததால் பாரதப் போர் நடந்தது போல் தேவ்யானியைத் துகிலுரிந்ததிற்கும் போர் வேண்டும் என முழங்குகின்றனர். இந்தியாவில் உள்ள இடதுசாரிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள். இந்தியாவில் உள்ள அமெரிக்க பிட்சா நிறுவனமான டொமினோ பிட்சா தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்க ஊடகங்கள் இந்தியர்கள் இதைத் தேவையில்லாமல் பெரிது படுத்துகிறார்கள் என்கின்றன.

பாக்கிஸ்த்தானிய ஊடகங்களின் ஆதங்கம்
பாக்கிஸ்த்தானிய இராசதந்திரிகளும் அமெரிக்காவில் கடுமையாக நடாத்தப்பட்டதுண்டு. ஆனால் பாக்கிஸ்த்தான் அரசு அமெரிக்காவிற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. பாக்கிஸ்த்தானிய ஆட்சியாளர்கள் இந்திய அரசின் கடுமையான நிலைப்பாட்டை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என பாக்கிஸ்த்தானியப் பத்திரிகைகள் கூறுகின்றன.

மிரட்டப்படும் சங்கீதா குடும்பம்
தேவ்யானியின் பணிப்பெண் சங்கீதாவின் கணவர் தனது பிள்ளையுடன் இந்தியாவில் ஒரு மிதிவண்டியில் போய்க் கொண்டிருக்கும் போது ஒரு மர்ம நபர் அவரை வழிமறித்து துப்பாக்கியைக் காட்டி உனது மனைவியை உடனடியாக இந்தியா வரச்சொல்லு என்று மிரட்டினார். இது போன்ற பல மிரட்டல்கள் பணிப்பெண் சங்கிதாவின் குடும்பத்தினருக்கு எதிராக இந்தியாவில் நடந்து கொண்டிருக்கின்றது என்கிறது நியூயோர்க் ரைம்ஸ். இதைத் தடுக்கும் முகமாக அமெரிக்க அரசத் துறை பணிப்பெண் சங்கீதாவின் குடும்பத்தினரை அமெரிக்காவிற்கு கொண்டு சென்றுள்ளனர்.  தேவ்யானியின் தந்தை பலமுறை சங்கீதாவின் கணவருடன் தொடர்பு கொண்டு உடனடியாக சங்கீதாவை இந்தியாவிற்கு அழைக்கும்படி மிரட்டினார் என்றும் சொல்கிறது நியூயோர்க் ரைம்ஸ். சங்கீதா குடும்பத்தினரை அமெரிக்கா அழைத்தது குடியகல்வு ஊழல் என்கிறது இந்திய அரசு.

இராசதந்திர முறுகல்
தேவ்யானி விவகாரம் தொடர்பாக அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரியுடன் தொடர்பு கொண்ட இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் சிவ் சங்கர் மேனன் தனது கண்டனத்தைத் தெரிவித்தார் அத்துடன் தேவ்யானியின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். ஜோன் கெரி நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். சிவ் சங்கர் மேனன் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் அத்துடன் தேவ்யானியின் மீதான வழக்கு எந்தவித நிபந்தனையுமின்றி திரும்பப்பெறப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மன்னிப்புப் கேட்கப்போவதுமில்லை வழக்கைத் திரும்பப் பெறப்போவதுமில்லை என்கிறது அமெரிக்க அரசு. தேவ்யானிக்கு அதிக இராசதந்திரக் காப்பு வழங்கும் முகமாக அவரை ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதுவரகத்திற்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். தேவ்யானியின் கைதைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதுவரகங்களின் முன் இருந்த காப்பரண்கள் இந்திய அரசால் விலக்கப்பட்டன. இந்தியாவில் உள்ள அமெரிக்கத் இராசதந்திரிகளிற்கு வழங்கப்பட்ட பல முன்னுரிமைகள் இரத்துச் செய்யப்பட்டன. சங்கீதாவின் வேலையமர்வு இந்திய அரசுடன் சம்பந்தப்பட்டது தனிப்பட்ட ரீதியில் தேவ்யானியின் உடையது அல்ல என்கிறது இந்திய அரசு. ஐநா இராசதந்திரிகளுக்கு முழுமையான இராசதந்திரப் பாதுகாப்பு உண்டு. ஆனால் இதை பின்னோக்கி அமூலாக்க வேண்டும். அதாவது retroactive immunity. இதற்கு முன்னர் சவுதி இளவரசர் ஒருவர்மீது ஒரு பெண்ணை வீட்டிற்குள் பூட்டி வைத்திருந்த குற்றம் சுமத்தப்பட்டது. பின்னர் அவர் ஒரு இராசதந்திரியாக்கப்பட்டர். அந்த இராசதந்திரிக்கு உரிய இராசதந்திர காப்பு retroactive immunity ஆக்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார். தேவ்யானி விவகாரத்திலும் திரைக்குப் பின்னால் இப்படியான முயற்ச்சிகள் நடக்கின்றன.

தேவ்யானியின் ஊழல்

இந்தியாவில் வீடு ஒதுக்கிட்டில் ஊழல் செய்ததாக தேவ்யானியின் மீதும் அவரது தந்தை மீதும் குற்றச் சாட்டுக்கள் உள்ளன. இந்தியாவில் வீட்டுப்பணியாளர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் மிக மோசமாக வேலைவாங்கப்பட்டும் மிக மோசமாக நடத்தப்படுகின்றனர் என்பது இந்திய அரசின் ஆய்விலேயே வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழர்க்கு வேறு நீதி
இலங்கியில் தமிழர்களைக் கொல்ல இந்தியா உதவி செய்தமையை சீனப் பூச்சாண்டி மூலம் நியாயப் படுத்தும் இந்தியா அமெரிக்காவுட்னான உறவைப் பற்றிக் கவலைப்படாமல் தேவ்யானியைப் பாதுகாக்க இந்தியா முயல்கிறது

இந்திய அரசின் கேவலமான் பாராபட்சம்
தேவ்யானி, சங்கீதா ஆகிய இருவருமே இந்தியக் குடிமக்கள். ஆனால் தேவ்யானியைப் பாதுகாக்க எல்லா வகையிலும் முயற்ச்சி செய்யும் இந்திய அரசு சங்கீதாவைக் கேவலப்படுத்துகிறது. இதுதான் இந்தியாவின் மனுதர்ம நீதியா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...