Monday, 9 February 2015

ஐரோப்பிய ஒன்றியத்தைக் கலங்கடிக்கும் கிரேக்கம்

ஐரோப்பாவின் ஒரு புறம் லித்துவேனிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலும் யூரோ நாணயக் கட்டமைப்பிலும் இணைவதை கொண்டாடிக் கொண்டிருக்கையில் மறுபுறம் கிரேக்க மக்கள் அவ்விரு கூட்டமைப்புக்களினதும் சிக்கன நடவடிக்கை நிபந்தனைக்கு எதிராக வாக்களித்தனர். நான்கு ஆண்டுகள் அரச சிக்கன நடவடிக்கைகளால் சலிப்படைந்த கிரேக்க மக்கள் அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் தலைமையிலான தீவிர இடதுசாரிக் கட்சியான சிரிஸாவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். பாராளமனத்தில் அறுதிப் பெரும்பான்மைக்கு இரண்டு இடங்கள் பற்றாக்குறை என்றபடியால் சிக்கன நடவடிக்கைக்கு எதிரான கொள்கை கொண்ட வலதுசாரிக் கட்சியான சுதந்திர கிரேக்கக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து சிரிஸா ஆட்சியைக் அமைத்துக் கொண்டது. இது ஐரோப்பாவில்  பெரும் அதிர்வலையை உருவாக்கியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரியண்ணன் ஜேர்மனியுடன் கடன் பிரச்சனையில் மோதிக் கொன்டிருக்கும் கிரேக்கத்தின் தலமை அமைச்சர் பதவியை ஏற்றவுடன் அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் முதல் செய்த வேலை இரண்டாம் உலகப் போரின்போது ஜேர்மனியர்களால் கொல்லப்பட்டவர்களின் நினைவுச் சின்னத்திற்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தியமையே. அத்துடன் அவர் இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைக்கு எதிராகக் குரல் கொடுத்தமை ஐரோப்பாவின் பல நாடுகளின் பாதுகாப்புத் துறையினரை அதிர வைத்துள்ளது. கிரேக்கத்தில் அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் தலைமையிலான சிரிஸா கட்சி வெற்றி பெற்றது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைக்கு ஏற்ப சிக்கன நடவடிக்கைகளைச் செய்து கொண்டிருக்கும் பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாட்டில் உள்ள தீவிர இடதுசாரிக் கட்சிகளுக்கு ஆதரவு பெருகியதுடன் அக் கட்சிகளும் புதிய உத்வேகம் பெற்றுள்ளன.

நாணயமில்லா நாணயக் கூட்டமைப்பு
கடந்த எட்டு ஆண்டுகளாக கிரேக்கம் தொடர்ந்து பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இக்காலகட்டத்தில் மூன்று பொருளாதார வீழ்ச்சிகளை அது சந்தித்துள்ளதுடன் அதன் கடன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 175 விழுக்காடு அதிகரித்துள்ளது. கிரேக்கத்தில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை 35 விழுக்காடு அதிகரித்துள்ளது.  ஜேர்மனியின் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப வகுத்துக் கொண்ட யூரோ நாணய மதிப்பும் யூரோ வலய வட்டி வீதமும் யூரோ நாணயத்தைத் தமது நாணயமாகக் கொண்டகிரேக்கம், வட அயர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, போர்த்துக்கல் போன்ற நாடுகளுக்கு ஒத்து வரவில்லை. இவற்றின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு அங்கு நிறுவனங்கள் மூடப்பட்டு வங்கிகள் வங்குரோத்து நிலையடைந்து, அரசுகள் நிதி நெருக்கடியில் தவிக்கின்றன.  இவற்றில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடு கிரேக்கம்.

 ஜேர்மனிக்குப் பிடிக்காதது கிரேக்கத்திற்குப் பிடித்தது.
அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் கிரேக்கத்தின் கடனை இல்லாமல் செய்து, அரச செலவீனங்களை அதிகரித்து கீன்சியக் கொள்கையின் படி பொருளாதாரம் வளர உந்து வலு கொடுக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர். 2014ம் ஆண்டு 25 விழுக்காடு பொருளாதார விழ்ச்சியைக் கண்ட கிரேக்கம் 25 விழுக்காடு வேலையற்றவர்களையும் கொண்டுள்ளது. இதற்கு பொருளாதார நிபுணர் கீன்ஸின் கொள்கைப்படி அரச செலவை அதிகரித்து உந்து வலு கொடுக்க வேண்டும் என்பதில் அலெக்ஸிஸ் ஸிப்ராள் நம்பிக்கை கொண்டுள்ளார் ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தாம் நினைத்தபடி அரச செலவீனங்களை அதிகரிக்க முடியாது. அதற்கு உரிய கடனை அவர் எங்கிருந்து பெறுவார் என்பது பெரிய ஒரு கேள்வியாகும். ஜேர்மனியப் பொருளாதர நிபுணர்களுக்கு கீன்சியப் பொருளாதாரக் கொள்கை பிடிக்காத ஒன்றாகும்.

ஆட்சிக்கு ஓடிவந்தவரை நாடி நிற்கும் தொல்லைகள்
கிரேக்க அரசு 2015 மார்ச் மாதம் 4.3 பில்லியன் யூரோ பெறுமதியான கடனை மீளளிக்க வேண்டிய  நிலையில் அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். புதிதாகப் பதவி ஏற்ற அரசுக்குப் பல தெரிவுகள் இருக்கவில்லை. சிக்கன நடவடிக்கைகளை இல்லாமல் செய்வதாயின் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் யூரோ நாணயக் கட்டமைப்பில் இருந்தும் வெளியேற வேண்டும் அல்லது அதற்குக் கடன் வழங்கிய பன்னாட்டு நாணய நிதியம், ஐரோப்பிய மைய வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிடம் கிரேக்க அரசுக்கு வழங்கிய கடனை முழுமையாக அல்லது ஒரு பகுதியைத் தள்ளுபடி செய்யச் சம்மதிக்க வைக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளின் படி யூரோ நாணயக் கட்டமைப்பில் இருந்து விலகுவதாயின் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் விலக வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஒரு நாடு விலகுவதானால் அது முதலில்  விலகுவதற்கான நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.  ஆனால், ஏற்கனவே பெருமளவு கடன் கொடுத்தோம், அதன் வட்டியைக் குறைத்தோம், கடன் மீளளிப்பிற்கான கால எல்லையை நீடித்தோம், கிரேக்க அரசுடன் ஒத்துழைப்பதாக வாக்குறுதியளித்தோம் ஆனால் நாம் விதித்த நிபந்தனைகளுக்கு அமைய கிரேக்க அரசு நடக்கவில்லை என ஜேர்மனியில் இருந்து ஆத்திரக் குரல்கள் அலெக்ஸிஸ் ஸிப்ராஸின் சிரிஸாக் கட்சி வெற்றி பெற்றவுடன் எழுந்தன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை நிபந்தனைகளுக்கு ஏற்ப அயலாந்தும் போர்த்துக்கலும் தமது நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாக சீரமைத்துள்ளன. சைப்பிரஸ் தேசமும் இவ்வாறே தேறிக் கொண்டிக்கின்றது. 

வலுமிக்க ஐரோப்பிய ஒன்றியம்
 சில கிழக்கு ஐரோப்பிய நாடுகள் உட்பட 28 நாடுகள் இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளன. இவையாவற்றையும் ஒன்றிணைத்தால் மொத்த தேசிய உற்பத்தி ரீதியில் ஐரோப்பிய ஒன்றியம் உலக பொருளாதாரத்தில் முதலிடம் வகிக்கிறது. பொருளாதார ரீதியில் ஒன்றிணைந்த 28 நாடுகளும் தமது அதிகாரங்களை விட்டுக் கொடுத்து ஒரு மத்திய அரசுக்குக் கீழ் கட்டுப்பட்டு நடக்க தயக்கம் காட்டுகின்றன. பதின் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு என்று யூரோ என்ற தனி நாணயம் உருவாக்கப்பட்டபோது 17 நாடுகள் மட்டுமே அதில் இணைந்து கொண்டன. தற்போது 18 நாடுகள் யூரோ வலயத்தில் இருக்கின்றன.  எல்லா நாடுகளும் இணையாதது ஐக்கிய ஐரோப்பிய அரசு உருவாக்கத்திற்கு ஒரு பின்னடைவே. அடுத்த பெரும் பின்னடைவு ஒரு நாணயத்தை ஏற்றுக் கொண்ட 18 நாடுகளும் ஒரு நாட்டுப் பொருளாதரத்துக்குரிய கட்டுப் பாடுகளை இறுக்கமாகக் கடைப் பிடிக்காமல் தமது தேர்தல் அரசியலுக்கு ஏற்ப ஒவ்வொரு நாடுகளும் தமது பொருளாதாரக் கொள்கைகளைக் கடைப்பிடித்தன. சில நாடுகள் மக்களுக்கு பெரும் பணச் செலவில் அதிக சமூக நன்மைகளைச் செய்தும் சிலநாடுகள் தமது அரச செலவீனங்களை குறைத்தும் செயற்பட்டன. ஆனால் நாணய ஒன்றியமானது ஒரு சிறந்த பொருளாதாரக் கட்டுப்பாடுன் இருக்க வேண்டும். பொருளியலாளர்கள் கூறுகிறார்கள்: Currency union should go hand in hand with fiscal policy union. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விரும்பும் நாடுகளின் பொருளாதாரம் சிறந்த நிலையில் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நாடுகளின் பணவீக்கம், பாதீட்டுக் குறைபாடு போன்றவை கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும். 1981-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த கிரேக்கம் 2001-ம் ஆண்டு யூரோ நாணயக் கட்டமைப்பில் இணையும் போது தனது தொடர்பாகப் பொய்யான தகவல்களைக் கொடுத்ததாகச் சொல்லப்படுகின்றது. கிரேக்கம் தனது கடனை மீளளிப்புச் செய்ய முடியாமல் போனால் ஜேர்மனிக்கு 56.5 பில்லியன் யூரோ இழப்பீடு ஏற்படும். அதே போல பிரான்ஸிற்கு 42.4 பில்லியன் யூரோக்கள் இத்தாலிக்கு 37.3 பில்லியன் யூரோக்கள், ஸ்பெயினிற்கு 24.8 பில்லியன் யூரோக்கள், நெதர்லாந்திற்கு 11.9 பில்லியன் யூரோக்கள், பெல்ஜியத்திற்கு 7.2 பில்லியன் யூரோக்கள், ஒஸ்ரியாவிற்கு 5.8 பில்லியன் யூரோக்கள், போர்த்துகல்லிற்கு 1.1 பில்லியன் யூரோக்கள், அயர்லாந்திற்கு 300மில்லியன் யூரோக்கள் இழப்பீடு ஏற்படும். கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த உற்பத்தியும் அதன் வரியற்ற சந்தை வாய்ப்பும் குறையும். இதனால் ஒன்றியத்தின் நிதிச் சந்தையில் பெரும் களேபரம் ஏற்பட வாய்ப்புண்டு.  2012ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடயே ஏற்பட்ட பொருளாதார மற்றும் கடன் நெருக்கடிகளைத் தொடர்ந்து உறுப்பு நாடு ஒன்றில் ஏற்படும் பொருளாதார நடவடிக்கைகளைச் சமாளிக்கும் அனுபவத்தையும் திறனையும் பெற்ற ஒன்றியம் European Stability Mechanism என்னும்  பொறி முறையையும் உருவாக்கி அதற்கு உரிய நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது. கிரேக்கம் விலகினாலும் அல்லது தொடர்ந்து உறுப்பினராக இருந்து கொண்டு மேலும் பொருளாதார நெருக்கடியை எதிர் நோக்கினாலும் அதைச் சமாளிக்கக் கூடிய நிலையில் ஒன்றியம் இருக்கின்றது.

டொமினோ வீழ்ச்சி அல்ல சங்கிலி வலு

2012ம் ஆண்டு கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக அதைத் தொடர்ந்து பல நாடுகள் விலக ஒரு டொமினோ விழ்ச்சி ஒன்றியத்தில் உருவாகி ஐரோப்பிய ஒன்றியமே கலைந்து போகும் என்ற அச்ச நிஅலை இருந்தது. ஆனால் இப்போது ஒரு சங்கிலியின் வலுவிழந்த பகுதி கழற்றுப் பட வலுவுள்ள பகுதிகள் இணைந்து சங்கிலி வலுப்பெறுவது போல வலுவிழந்த நாடுகளின் விலகல் ஐரோப்பிய ஒன்றியத்தை வலுவுடையதாக்கும் என்ற நிலை வந்துவிட்டது.  கிரேக்கம், அயர்லாந்து, போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளின் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் 440பில்லியன் யூரோக்களுடன் ஐரோப்பிய நிதி நிலைப்பாட்டு வசதியகம் என்ற ஒரு நிதியத்தை ஆரம்பித்தது. இந்தத் தொகை போதாமற் போக அது ஒரு ரில்லியன் யூரோக்களாக அதிகரிக்கப் பட்டது. 2011-ம் ஆண்டு யூரோ நாணய வலய நாடுகளும் பன்னாட்டு நாணய நிதியமும் கிரேக்கத்திற்கு கடன் கொடுத்த வங்கிகளும் மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கூடி கிரேக்கத்தை அதன் அரச செலவுகளைக் குறைக்க நிபந்தனை விதித்து அதனைக் கடன் நெருக்கடியில் இருந்து மீட்க நிதி உதவி செய்தன. கிரேக்கத்தின் அரச கடனில் 50%ஐ கடன் கொடுத்தோர் "வெட்டி எறிவதாகவும்" உடன்பாடு செய்யப்பட்டது. இப்போது மீண்டும் கிரேக்க நாடு தனது கடன்களை வெட்டி எறியும்படி அடம்பிடிக்கின்றது. புதிதாக ஆட்சிக்கு வந்த அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் தான் அரசின் சிக்கன நடவடிக்கைகளை இடை நிறுத்தி தனது தேர்தல் வாக்குறுதிகளான 1. நாட்டின் குறைந்த அளவு ஊதியத்தை அதிகரித்தல், 2. பதவி நிக்கம் செய்யப்பட்ட அரச ஊழியர்களை மீண்டும் சேவையில் அமர்த்தல் 3. ஓய்வூதியங்களை அதிகரித்தல் ஆகியவற்றை நிறைவேற்றப்போவதாகச் சூழுரைத்துள்ளார். தனக்கு ஒரு இடைநிரப்புக் கடன் (bridging loan) மட்டுமே தேவைப்படுவதாக அறிவித்தும் உள்ளார்.


எடு அல்லது விடு (take it or leave it) என்பதல்ல இராசதந்திரம்
நாடுகளுக்கு இடையிலான பேச்சு வார்த்தைகளில் எடு அல்லது விடு என்ற நிலைப்பாடு கடைப்பிடிக்கப்படுவதில்லை. இருதரப்பினரும் விட்டுக் கொடுத்து இருவருக்கும் வெற்றி என்ற நிலையில் பேச்சு வார்த்தையை முடிப்பதுதான் தற்போது பொதுவாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கிரேக்கம் விலகினால் அது  மோசமான பொருளாதார நடவடிக்கையைச் சந்திக்க வேண்டி இருக்கும். புதிதாக அது உருவாக்கும் நாணயத்திற்கு உலக நிதிச் சந்தை என்ன பெறுமதியைக் கொடுக்கும் என்பது எதிர்வு கூற முடியாதது. கடன் பளு மிக்க ஒரு நாட்டின் நாணயம் நிச்சயம் ஒரு தாழ்வான நிலையைத்தான் பெறும். இதனால் விலைவாசி அதிகரிப்புப் பெருமளவில் ஏற்படும். அதே வேளை கிரேக்கத்திற்கு கடன் கொடுத்தவர்கள் கொடுத்த கடனைத் திருப்பிப் பெற முடியாத நிலை ஏற்படும். கடன் பட்ட கிரேக்கமும் அதற்குக் கொடுத்தவர்களும் இழப்பீடுகளைச் சந்திப்பர்.

நிலையை மாற்றிய கிரேக்கத்தின் புதிய ஆட்சியாளர்கள்
கிரேக்கத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் ஆரம்பத்தில் ஒரு இரசிய ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தாலும் பின்னர் தனது நிலையை மாற்றிக் கொண்டார். இரசியாவும் புதிய ஆட்சியாளர்களுக்கு தான் கடன் தருவதாக நட்புக்கரமும் நீட்டியது. ஆனால் இரசியாவிடம் தான் கடன் பெறுவது தனது திட்டத்தில் இல்லை என பரிஸ், இலண்டன், பரிஸ் ஆகிய நகரங்களுக்குப் பயணம் மேற்கொண்ட கிரேக்க நிதி அமைச்சர் சொல்லி விட்டார். கிரேக்க வாக்காளர்களின் தீர்ப்பை தாம் கருத்தில் கொள்ள வேண்டும் என மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாட்டுத் தலைவர்கள் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கியும் விட்டனர். கிரேக்கத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் உள்ள பிரச்சனை சுமூகமாகத் தீர்க்கப் படவேண்டும் என அமெரிக்கா கருதுவது போல் தெரிகின்றது. கிரேக்கம் இரசியாவிடமிருந்தோ சீனாவிடமிருந்தோ கடன் பெறுவதை ஐக்கிய அமெரிக்காவோ மேற்கு ஐரோப்பாவோ விரும்பவில்லை. இதனால் சிக்கன நடவடிக்கையை வெறுக்கும் கிரேக்கத்திற்கும் அதற்குக் கடன் கொடுட்துக் கலங்கும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பன்னாட்டு நாணய நிதியம் ஆகியவற்றிக்கு இடையிலான பிரச்சனை தீர்க்கப்பட வாய்ப்புண்டு.

Friday, 6 February 2015

நகைச்சுவைக் கதை: பூனூல் போட்ட பூதம்

சவுதி அரேபியாவில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு தமிழ் இளைஞன் ஒரு நாள் பாலைவனத்தில் பாதையைத் தொலைத்து விட்டு நீண்ட தூரம் நடந்து களைப்பும் தாகமும் அடைந்தான் அவன் தனக்குத் தெரிந்த காயத்திரி மந்திரம், லிங்காஷ்டகம், விநாயகர் அஷ்டகம், கந்தசஷ்டிக் கவசம் எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டே நடந்தான். கடைசியில் களைத்துப் போய் சகல சக்தியையும் இழந்து ஓர் இடத்தில் சுடு மணலில் பதை பதைத்து உட்கார்ந்தான். அவன் கையில் சுடு மணலுக்குள் ஏதோ ஒன்று தட்டுப் படுவதைப் போல் உணர்ந்தான். மணலைக் கிளறிப் பார்த்தபோது ஒரு புட்டி இருப்பதை கண்டான். அதற்குள் குடிக்க ஏதாவது இருக்கலாம் என்று அவசரமாக அப்புட்டியைத் திறந்தான் என்ன ஆச்சரியம் அதனுள் இருந்து ஒரு பூதம் வெளிவந்தது.

புட்டிக்குள் இருந்து வெளிவந்த பூதம் நன்றி மனிடா மிக்க நன்றி இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தப் புட்டிக்குள் அடைப்பட்டுக் கிடந்த என்னை மீட்டெடுத்தாய். உனக்கு வேண்டிய மூன்று வரங்களைக் கேள் என்றது. அவ்விளைஞன் எனது தாகம் தீர்க்கத் தண்ணீர் கொடு என்றான். உடனே அவனுக்கு குடிக்க தண்ணீரைப் பூதம் கொடுத்தது.

அடுத்துப் பூதம் உனது இரண்டாவது வேண்டுதல் என்ன என்றது. அதற்கு இளைஞன் எனக்கு இந்த இடத்தில் ஒரு பாலைவனச் சோலை மாளிகை ஒன்றுடன் வேண்டும் என்றது. உடனே அங்கு ஒரு பாலைவனச் சோலையும் மாளிகையும் தோன்றியது.

இப்போது பூதம் உனது மூன்றாவது வேண்டுதல் என்ன சொல் மானிட நண்பனே என்றது. அப்போதுதான் அந்த இளைஞனுக்கு தனது வறுமையான குடும்பம் நினைவுக்கு வந்தது. தனது குடும்பத்தை நல்லாக்க வேண்டும் என்று நினைத்த இளைஞன் திடீரென தன் குடும்பம் மட்டுமா வாழச் சிரமப் படுகிறது, முழுத் தமிழினமுமே வாழச் சிரமப்படுகிறதல்லவா என்று எண்ணினான். பூதத்தைப் பார்த்து உலகெங்கும் தமிழர்கள் இனியாவது நிம்மதியாக வாழ வேண்டும் என்றது.  உடனே பூதம் கோரமாக ஆத்திரத்துடன் சிரித்தது. உடனே இளைஞன் கையில் இருந்த தண்ணீர் மறைந்தது. இளைஞன் ஆச்சரியப்பட்டு நிற்க பாலைவனச்சோலையும் மாளிகையும் மறைந்தது. பூதம் அவனை எட்டி உதைத்து விட்டுச் சென்றது. அதன் திறந்த முதுகைப் பார்க்கும் போது பூதத்தின் தோளில் பூனூல் தொங்குவதை அவதானித்தான்.

இந்தக் கதையின் நீதி: பூதம் துக்ளக் சோவைப் போலவோ, இந்து ராமைப் போலவோ அல்லது சுப்பிரமணி சுவாமியைப் போலவோ இருக்கலாம்.

Thursday, 5 February 2015

IT Expert கணவனுடன் மனைவி படும் பாடு




வேலை முடிந்து வீடு திரும்பிய IT expert கணவன்: Honey, I logged in.

மனைவி: ஏதாவது சாப்பிடுறீங்களா?
கணவன்: no darling, the disk is full.

மனைவி: உங்கள் சம்பள உயர்வு கிடைத்ததா?
கணவன்: Access not allowed.

மனைவி: வரும்போது பட்டுப் புடைவை வாங்கிவரச் சொன்னேன். வாங்கினீங்களா?
கணவன்: Bad command or file name

மனைவி: நானே வாங்கிக்கிறேன் பணத்தைக் கொடுங்க....
கணவன்: erroneous syntext

மனைவி: உங்க கிரெடிட் கார்ட்டையாவது தாருங்க....நான் வான்கிக்கிறேன்.
கணவன்: access denied

மனைவி: நேற்று உன்னை ஒருத்தியுடன் கண்டாதாக அடுத்தவீட்டுப் பெண் சொன்னாள். யாரது?
கணவன்: wrong password

மனைவி: உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டேன்
கணவன்: data mismatch

மனைவி: உன் தொழில் புத்தி உன்னை விட்டுப் போகாது
கணவன்: by default

மனைவி: மவனே, என்னை யாரென்று எண்ணிக் கொண்டாய்
கணவன்: virus detedted

மனைவி: நான் சொல்வது ஏதாவது உன் மண்டையில் ஏறுகிறதா?
கணவன்: too many parameters

மனைவி: உன்னை விட்டுத் தொலைந்தால் தான் எனக்கு நிம்மதி
கணவன்: press contl, alt & del

மனைவி: நான் அப்பா வீட்டுக்குப் போகிறன்.
கணவன்: illegal operation, system shuts down

மனைவி: நான் தொலஞ்சு போறன்.
கணவன்: reboot

மனைவி: நான் இல்லாட்டித்தான் உனக்கு என் அருமை புரியும்
கணவன்: change user

Monday, 2 February 2015

ஒபாமாவின் இந்தியப் பயணமும் இரு முக்கோணக்காதல்களும்

தற்போது உலக நாடுகளுக்கிடையிலான உறவுகள் பல முக்கோணங்களைக் கொண்டதாக இருக்கின்றது. பல முக்கோணங்களில் முக்கிய புள்ளியாக ஐக்கிய அமெரிக்கா திகழ்கின்றது. இரசியா, சினா, அமெரிக்க உளவுகள் ஒரு முக்கிய முக்கோணமாக இருந்தது போய் இப்போது அமெரிக்கா, சீனா, இந்தியா இடையிலான முக்கோண உறவு முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த முக்கோணத்தை ஒட்டி அமெரிக்க, சீன, பாக்கிஸ்த்தானிய உறவு இன்னொரு முக்கோணமாக அமைகின்றது. ஜப்பானியட் தலைமை அமைச்சர் அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் இணைந்து சீனாவிற்கு ஆப்பு வைக்கும் ஒரு முக்கோண் உறவை வளர்க்க விரும்புகின்றார். எல்லா முக்கோணங்களிலும் ஒன்றை ஒன்று நம்பாமைதான் பொதுவானதாக இருக்கின்றது.

இந்தியாவிற்கு ஜப்பானியத் தலைமை அமைச்சர் சினே அபே, சீன அதிபர் ஜீ சின்பிங் ஆகியோர் மேற்கொண்ட பயணங்களைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் இந்தியா சென்றார். மற்ற இருவர்களின் பயணத்துடன் ஒப்பிடுகையில் ஒபாமாவின் பயணம் அதிக முக்கியத்துவம் பெற்றதாகும். இந்தியாவின் குடியரசு தின விழாவில் ஒபாமாவும் பங்கேற்றது மிக முக்கியமானது என உலகெங்கும் உள்ள ஊடகங்கள் தெரிவித்தன.  ஒபாமாவின் இந்தியப் பயணம் இரு நாட்டுகளிடையான உறவில் ஒரு திருப்பு முனை என்றனர் அரசியல் விமர்சகர்கள்.

கவர்ச்சிகரமான இந்தியா சிவப்பு நாடா கழற்றுகின்றது
உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை,மூன்றாவது பெரிய பொருளாதாரம், உலகிலேயே வேகமாக வளரப் போகும் பொருளாதாரம், உலகிலேயே அதிக அளவு மத்திய தர வர்க்கம், உலகிலேயே அதிக அளவு படைக்கலன் கொள்வனவு, 2020-ம் ஆண்டு  உலகிலேயே மிக இளமையான சராசரி மக்கள் தொகைக்கட்டமைப்பு ஆகியன உலக அரங்கில் இந்தியாவின் கவர்ச்சிகரமான அம்சங்களாகும்.  இந்தியாவின் இந்த அம்சங்கள் பல நாடுகளை இந்தியாவுடன் நல்லுறவை வளர்த்து இந்தியாவுடனான வர்த்தகங்களை விருத்தி செய்ய விரும்புகின்றன. போதாக் குறைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சிவப்பு நாடா இல்லை சிவப்புக் கம்பளம் உண்டு என்று வரவேற்புப்பா பாடிவருகின்றார்.

அமெரிக்க இந்திய முறுகல் ஒரு தொடர்கதை.
ஐக்கிய அமெரிக்காவும் இந்தியாவும் ஐக்கிய இராச்சியத்துடன் போராடித் தமது சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்ட நாடுகள். இப்படிப்பட்ட ஒற்றுமையுடன் உருவான இந்த இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு சீரான உறவு இருததில்லை. பாக்கிஸ்த்தானை இரசியா அல்லது இரண்டும் இணைந்து ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சம் அமெரிக்காவை ஆட்டிப்படைத்தது. இதனால் 1954-ம் ஆண்டு பாக்கிஸ்த்தானிற்கு பெரும் படைக்கலன்களை ஐக்கிய அமெரிக்கா உதவியாக வழங்கியது. இவை கஷ்மீரில் இந்தியாவிற்கு எதிராகப் அப் படைக்கலன்கள் பாவிக்கப்படமாட்டாது என்ற உத்தரவாதத்துடன் வழங்குவதாக அமெரிக்கா சொன்னது. ஆனால் அதை அப்போதைய இந்தியத் தலைமை அமைச்சர் ஜவகர்லால் நேரு ஏற்றுக் கொள்ளவில்லை. இது இந்திய அமெரிக்க உறவில் முறுகலை உருவாக்கியது. பின்னர் சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் தமது அணிகளில் இந்தியாவை இணைக்க பெரு முயற்ச்சி எடுத்தன. ஆனால் நேரு இந்தோனேசியா, எகிப்து ஆகிய நாடுகளுடன் இணைந்து கூட்டுச் சேரா நாடுகள் அமைப்பை 1961-இல் உருவாகினார். இந்த அமைப்பு சோவியத் ஒன்றியத்துடன் நட்புறவை வளர்த்தமை அமெரிக்க இந்திய உறவைப் பாதித்தது. அமெரிக்க இந்திய உறவு சீனாவும் அமெரிக்காவும் ஒன்றை ஒன்று பாதுகாத்துக் கொள்ளும் உடனபடிக்கையை ரிச்சட் நிக்சன் அதிபராக இருந்த போது மோசமடைந்தது. இத உடன்படிக்கைக்குப் பதிலடியாக இந்தியாவும் சோவியத் ஒன்றியமும் பாதுகாப்பு உடன்படிக்கையைச் செய்து கொண்டன. அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் உறவு மிக மோசமான நிலையை அடைந்தது பங்களாதேசப் போரின் போதே. அப்போது இந்தியா பங்களாதேசத்தைப் பிரிப்பதைத் தடுக்க சீனப் படைகளை இந்திய எல்லையை நோக்கி நகர்த்தும் படி சீனாவை அமெரிக்கா வலியுறுத்தியது. அப்போது அமைதியான எழுச்சியை தனது கொள்கையாகக் கொண்ட சீனா இந்திரா காந்தியின் உறுதிப்பாட்டை உணர்ந்து கொண்டு அமெரிகாவின் வேண்டுதலை நிராகரித்து விட்டது. பின்னர் அமெரிக்க இந்திய உறவு மன்மோஹன் சிங் - சோனியா காந்தியின் ஆட்சியில் சீரமைக்கப்பட்டது.


இந்திய சீன உறவும் பஞ்சாகிப் போன பஞ்சசீலக் கொள்கையும்

இந்தியத் தலைமை அமைச்சர் ஜவகர்லால் நேருவினது பொருளாதாரக் கொள்கையில் இந்திய முதலாளிகளை மேற்கு நாட்டு முதலாளிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பது ஒரு முன்னணி அம்சமாகும். இதை மனதில் கொண்ட நேரு அமெரிக்காவிற்கு 1949-இல் மேற் கொண்ட பயணம் இருதரப்பினருக்கும் திருப்திகரமாக இருக்கவில்லை. சீனப் பொதுவுடமைப் புரட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்ற அமெரிக்காவின் வேண்டு கோளை நேரு ஏற்றுக் கொள்ளவில்லை. செஞ்சீனாவை அங்கீகரித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. செஞ்சீனாவிற்கு ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை வழங்க வேண்டும் என்பதையும் நேரு வலியுறுத்தினார். 2014-ம் ஆண்டு இலண்டனில் நடந்த நேரு நினவுப் பேருரையில் எஸ் மேனன் அவர்கள் நேரு சீனாவை உலக ஒழுங்கில் இணைப்பதன் மூலம் அதனிடம் இருந்து பொறுப்பான நடத்தையைப் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம் என நேரு கருதியிருந்தார் என்றார். நேருவின் சீனா தொடர்பான கொள்கை இந்தியாவிலும் உலக அரங்கிலும் கண்டனங்களுக்கு உள்ளானது. இருந்து நேரு சீனாவுடனும் பர்மாவுடனும் பஞ்ச சீலக் கொள்கை அடிப்படையில் உறவை வளர்க்க விரும்பினார். 1954-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பஞ்ச சீலக் கொள்கை:
1. ஒரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறைமையையும் மற்ற நாடுகள் மதித்தல்.
2. ஒரு நாட்டை மற்ற நாடுகள் ஆக்கிரமிக்காதிருத்தல்
3. ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் மற்றைய நாடுகள் தலையிடாதிருத்தல்.
4. சமத்துவமும் இருதரப்பிற்கும் நன்மையளிக்கக் கூடிய ஒத்துழைப்பும்.
5. அமைதியாக ஒத்திருத்தல்.
ஆனால் 1962ம் ஆண்டு சீனா இந்தியா மீது படையெடுத்தது.


புதிய இந்திய அமெரிக்க உறவு – காசேதான் கடவுளடா!
2016-  ம் ஆண்டு உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா அமையும் எனப் பன்னாட்டு நாணய நிதியம் எதிர்வு கூறியுள்ளது.  இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நடக்கும் நூறு பில்லியன் டொலர்கள் பெறுமதியான வர்த்தகத்தை ஐநூறு பில்லியன் டொலர்களாக உயர்த்த மோடியும் ஒபாமாவும் ஒத்துக் கொண்டுள்ளனர். ஒபாமா இந்தியாவிற்கு நான்கு பில்லியன் டொலர்கள் கடன் வழங்க உறுதியளித்தார்.   ஒபாமாவைப் பொறுத்தவரை உலகிலேயே மூன்றாவது பெரிய அளவில் சூழல்  அசுத்தம்  செய்யும் இந்தியாவை சூழல் பாதுகாப்பு தொடர்பாக உடன்பட வைத்தமை பெரு வெற்றியாகும். இந்தியாவிற்கு அதிக படைக்கலன் விற்கும் நாடாக இருந்த இரசியாவை இரண்டாம் இடத்திற்கு அமெரிக்கா தள்ளி விட்டது. தற்போது அமெரிக்கா இந்தியாவிற்கு இரண்டு பில்லியன் டொலர்களுக்கு  படைக்கலன்களை ஏற்றுமதி செய்கின்றது. இப்போது இரு நாடுகளும் தமது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பத்து ஆண்டுகள் நீடித்துள்ளன. 2006-ம் ஆண்டு இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் இந்தியத் தலைமை அமைச்சர் சிங்குடன் இணைந்து இரு நாடுகளும் கேந்திரோபாய பங்காண்மையை வளர்ப்பதாகக் கூட்டறிக்கை வெளியிட்டனர். தொடர்ந்து அமெரிக்கப் பாரளமன்றத்தின் மக்களவையில் இந்தியாவுடன் அணுவலு ஒத்துழைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க இந்திய அணுவலு ஒத்துழைப்பில் அமெரிக்கா இந்தியாவிற்கும் வழங்கும் யூரேனியத்தை இந்தியா அணுக்குண்டு உற்பத்திக்குப் பாவிக்காமல் இருக்க அமெரிக்கா இந்தியாவில் அதன் பாவனையை கண்காணிக்கும் உரிமை அமெரிக்காவிற்கு வழங்கப்பட வேண்டும் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடாக இருந்தது. இது இந்தியாவின் உள்விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு என இந்தியாவில் எதிர்ப்புக் கிளம்பி இது இந்தியப் பாராளமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய இடது சாரிக் கட்சிகள் வலியுறுத்தின. 2007-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அமெரிக்க இந்திய அணுவலு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இது தொடர்பான அறிக்கையை மன்மோகன் சிங் இந்தியப் பாராளமன்றத்தில் வாசித்த போது இடதுசாரிக் கட்சிகள் தேன்நிலவு முடிந்து விட்டது இப்போது திருமண அறிவிப்பா எனக் கேள்வி எழுப்பின. போபால் நச்சு வாயுக் கசிவு போல் மீண்டும் நடக்காமல் இருக்க உத்தரவாதம் இந்தியாவின் பலதரப்பினரிடமிருந்தும் எழுந்தது. இதற்கு மாற்றீடாக பராக் ஒபாமாவும் மோடியும் 122மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஒரு காப்பீட்டுத் திட்டம் ஒன்றை உருவாக்க ஒத்துக் கொண்டனர். அத்துடன் யூரேனியத்தை கண்காணிக்கும் விவகாரத்திலும் அமெரிக்கா விட்டுக் கொடுத்தது.

வெளியேற்றப்பட்ட இந்திய வெளியுறவுத் துறைச் செயலர்
அமெரிக்க இந்திய உறவில் ஒரு நீண்டகாலப் பிரச்சனையாக பாக்கிஸ்த்தான் இருக்கின்றது என்றால் குறுங்காலப் பிரச்சனையாக உக்ரேன் விவகாரமும் அமெரிக்காவில் பணியாற்றிய தேவ்யானி விவகாரமும் அமைந்தன. உக்ரேன் விவகாரத்தில் இந்தியா எந்த ஒரு மாற்றத்தையும் வெளிப்படுத்தவில்லை. அமெரிக்க அரசனை நம்பி இரசியப் புருசனை அவசரப்பட்டு இந்தியா கைவிடத் தயாரில்லையா என்ற கேள்வி இன்னும் உயிருடன் இருக்கின்றது.  இது இந்திய, இரசிய, அமெரிக்க முக்கோணத்தின் கோணல் நிலை. ஆனால் தேவ்யானி விவகாரத்தை கையாண்டு அமெரிக்காவின் அதிருப்தியைச் சம்பாதித்த இந்திய வெள்யுறவுத் துறைச் செயலர் ஒபாமாவின் இந்தியப் பயணம் முடிந்த கையோடு பதவியில் இருந்து விரட்டப்பட்டார். அவரது இடத்திற்கு நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தையும் ஒபமாவின் இந்தியப் பயணத்தையும் ஒழுங்கு செய்தவரும் அமெரிக்காவிற்கான இந்தியத் தூதுவராக இருந்தவருமான எஸ் ஜெய்சங்கர் வெளியுறவுத் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். முக்கோணத்தின் மற்ற முனை சும்மா இருக்கவில்லை. புதிய வெளியுறவுத் துறைச் செயலரை அழத்து முதலில் சந்திப்பு நடாத்திய நாடு சீனாவாகும். இச் சந்திப்பைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் சுஸ்மா சுவராஜ் சீனாவிற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கின்றார்.

பாக்கிஸ்த்தானுடன் அமெரிக்காவும் சீனாவும் வைக்கும் உறவு
ஒபாமா புதி டில்லியில் இருக்கும் போது பாக்கிஸ்த்தானியப் படைத்தளபதி ரஹீல் ஷரிஃப் சீனாவிற்குப் பயணம் செய்தார். இந்திய அமெரிக்க உறவிற்குப் போட்டியாக சீன பாக்கிஸ்த்தானிய உறவு வளருமா என்பதும் ஒரு நியாயமான கேள்வியே! இந்தியாவின் பொருளாதாரம் 1.25பில்லியன் டொலர் பெறுமதியானது. பாக்கிஸ்த்தானின் பொருளாதாரம் 190மில்லியன் டொலர்கள் மட்டுமே. பாக்கிஸ்த்தானின் ஆட்சியாளர்கள் இந்தியா ஆட்சியாளர்களிலும் மோசமானவர்கள்.  இந்தியாவிலும் மிக மோசமான ஊழல் பாக்கிஸ்த்தானில் தலைவிரித்தாடுகின்றது. இரு நாடுகளிடமும் அணுக் குண்டுகள் இருக்கின்றன என்பதைத் தவிர வேறு எத வகையிலும் இந்தியாவிற்கு கிட்டவும் பாக்கிஸ்த்தானால் நிற்க முடியாது.  ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்காவுடன் பல வகையிலும் கடந்த பல ஆண்டுகளாக இரகசியமாகவும் பகிரங்கமாகவும் ஒத்துழைத்த பாக்கிஸ்த்தானுடன் அமெரிக்கா செய்ய முடியாத அணுவலு உற்பத்தி உடன்பட்டை அமெரிக்கா இந்தியாவுடன் செய்வது பாக்கிஸ்த்தானியர்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தியாவை ஆப்கானிஸ்த்தானுக்குள் அமெரிக்கா இழுப்பதைப் பாக்கிஸ்த்தான் விரும்பவில்லை. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது பதவிக்காலத்தில் இரண்டு தடவைகள் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டமை பாக்கிஸ்த்தானில் பல தரப்பினரையும் எரிச்சல் பட வைத்துள்ளது. இதற்கு முன்னர் டுவைற் ஐஸ்ன்ஹோவர், லிண்டன் ஜோன்சன், ரிச்சர்ட் நிக்சன் பில் கிளின்டன் ஜோர்ஜ் டப்ளியூ புஷ் ஆகிய அமெரிக்க அதிபர்கள் பாக்கிஸ்த்தானிற்குப் பயணம் மேற்கொண்டார்கள். பாக்கிஸ்த்தானில் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஆட்சியில் இருக்கும் போது எந்த ஓர் அமெரிக்க அதிபரும் பாக்கிஸ்த்தானிற்குப் பயணம் செய்யவில்லை. சர்வாதிகார இராணுவ அதிகாரிகள் பாக்கிஸ்த்தானை ஆட்சி செய்யும் போது மட்டும் அமெரிக்க அதிபர்கள் பாக்கிஸ்த்தானிற்குப் பயணம் மேற்கொண்டனர். பாக்கிஸ்த்தானில் மக்களாட்சியில் அக்கறை கொள்வதிலும் பார்க்க பாக்கிஸ்த்தானை பொதுவுடமைவாதத்தின் விரிவாக்கத்திற்கு எதிராகப் பயன்படுத்துவதில் அமெரிக்கா அதிக அக்கறை காட்டியது. பனிப்போர் முடிந்த பின்னர் ஆப்கானிஸ்த்தானில் உருவான இசுலாமியத் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாக்கிஸ்த்தானை அமெரிக்காவிற்கு அதிகம் தேவைப்பட்டது. இந்தியாவுடன் சீனா தனது வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்ள விரும்புகின்றது. அது சீனாவிற்கு அவசியமான ஒன்றும் கூட. அதே வேளை பாக்கிஸ்த்தானும் இந்தியாவும் தமக்கிடையிலான வர்த்தகத்தைப் பெருக்குவதில் அதிக முனைப்புக் காட்டுகின்றன.

ஆறுதல் அடைந்த சீனா
2015ம் ஆண்டின் சீனாவிற்கான முதல் அடியாக இலங்கையில் சீனாவிற்கு உகந்த ஆட்சியாளர் பதவியில் இருந்து விரட்டப்பட்டார். இரண்டாவது அடியாக இந்திய அமெரிக்க உறவு பராக் ஒபாமாவின் பயணத்தால் விழுமா என்ற எதிர்பார்ப்பு சீனாவில் இருந்தது. அமெரிக்காவிற்கும் இடையில் படைத்துறையில் ஒத்துழைப்பு மேம்படுத்தப்பட்டாலும் காத்திரமான படைத்துறைக் கூட்டமைப்பு உருவாகியதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்பதால் சீனா ஆறுதல் அடைந்ததாக சீன ஊடகங்களில் வெளிவந்த கருத்துரைகள் தெரிவிக்கின்றன.

Saturday, 31 January 2015

வேட்டியை மடிச்சுக் கட்டும் இரசியா

உக்ரேனின் கிறிமியாவை தன்னுடன் இணைத்தைத் தொடர்ந்து மேற்கு நாடுகள் இரசியாவிற்கு எதிராக கொண்டுவந்த பொருளாதாரத் தடையால் பொருளாதாரப் பிரச்சனைய இரசியா எதிர் கொள்கின்றது ஆனாலும் இரசியா அடங்கியதாகத் தெரியவில்லை. உக்ரேனின் இரசியர்கள் பெரும்பான்மையாக வாழும் அதன் கிழக்குப் பிராந்தியத்தைத் தன்னுடன் இணைக்க இரசியா பெரும் முயற்ச்சி எடுத்துக் கொண்டிருக்கின்றது.

இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை இரசியாவிற்கு எதிரான இரண்டாம் பொருளாதாரப் போர் என்றுதான் சொல்ல வேண்டும். இரசியாவிற்கு எதிரான முதலாம் பொருளாதாரப் போர் சோவியட் ஒன்றியத்தை வீழ்த்தியது. இரண்டாம் பொருளாதாரப் போர் இரசிய அதிபரி விளடீமீர் புட்டீனின் கொட்டம் அடக்க நடக்கின்றது. 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் திகதி இரசிய நாணயமான ரூபிளின் பெறுமதி பெரு விழ்ச்சியை அடைய இரசியா தனது வட்டி விழுக்காட்டை 10.5இல் இருந்து 17 ஆக உயர்த்தியது. இது பற்றி மேற்கத்தைய ஊடகங்கள் வெற்றிக்களிப்புடன் எழுதித் தள்ளின. ஆனால் ரூபிளின் பெறுமதி வீழ்ச்சி இரசியப் பொருளாதாரத்திற்குப் பல நன்மைகளைச் செய்துள்ளது. இரசிய மக்கள்  உள் நாட்டுப் பொருட்களைக் கொள்வனவு செய்வது அதிகரித்துள்ளது. இதனால் 2015 ஜவனரி மாத இறுதியில் இரசியா தனது வட்டி விழுக்காட்டை 17இல் இருந்து 15 ஆகக் குறைத்தது. இது இரசிய வங்கிகளிற்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.

2015 ஜனவரி இரசியாவில் எடுத்த கருத்துக் கணிப்புக்களின் படி இரசிய மக்களில் 55 விழுக்காட்டினர் இரசியா சரியான பாதையில் செல்வதாகக் கருதுகின்றனர். இது புட்டீன் இப்போதும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கின்றார் என்பதைக் காட்டுகின்றது. 2014-ம் ஆண்டு இந்த மாதிரியான கருத்துக் கணிப்புச் செய்த போது 66 விழுக்காட்டினர் இரசியா சரியான பாதையில் செல்வதாக நம்பினர். மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடையால் இரசியாவில் பணவிக்கம் பத்துக்கும் மேல் இருப்பதை இரசிய மக்கள் பொறுத்துக் கொண்டிருக்கின்றனர். இரசிய அன்னை மீது அந்நியர்கள் நடத்தும் தாக்குதலில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என மக்கள் கருதுகின்றனர்.

இரசிய அதிபர் புட்டீனின் தற்போதைய நிலை மூலையில் முடக்கப்பட்ட புலியின் நிலையாகும். ஒன்றில் அவர் அடங்கிப் போகவேண்டும் அல்லது தனது இறுதிப் பாய்ச்சலை மேற்கொண்டு தப்பி ஓட வேண்டும் அல்லது பிடிபடவேண்டும். பொருளாதாரத் தடையாலும் எரிபொருள் விலை வீழ்ச்சியாலும் முடக்கப்பட்ட புட்டீன் அடங்கிப்போவதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. கிறிமியாவை இரசியாவுடன் இணைத்தமை புட்டீனின் செல்வாக்கை இரசியாவில் பெருமளவில் உயர்த்தியுள்ளது. உக்ரேனில் அவர் மேற்குலக நாடுகளுக்குப் பாடம் படிப்பிப்பதாக இரசிய மக்கள் கருதுகின்றனர். அதற்கு ஏற்ப இரசிய ஊடகங்களும் மேற்குலகுக நாடுகளுக்கு எதிராகவும் புட்டீனுக்கு ஆதரவாகவும் பெரும் பரப்புரை செய்கின்றன. இதனால் பொருளாதாரப் பிரச்சனையால் மக்கள் தன்னை வெறுக்க மாட்டார்கள் எனப் புட்டீன் நம்புகின்றார். இது இன்னும் எத்தனை நாட்கள் போகிறது பார்ப்போம் என மேற்குலக நாடுகள் காத்திருக்கின்றன. ஆனால் புட்டீன் தனது பரப்புரைகள் மூலம் உக்ரேனிய மக்களை தற்போது உள்ள மேற்குலகு சார்பான நாடுகளுக்கு எதிராகத் திருப்ப முயல்கின்றார்.


அமெரிக்கா உட்பட நேட்டோ நாடுகளின் எல்லைகளை நோக்கி தனது போர் விமானங்களை அனுப்பி அந்த நாடுகளின் குடிசார் விமானப் போக்கு வரத்திற்கு அச்சுறுத்தல்களை இரசியா ஏற்படுத்துகின்றது. கடைசியாக 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ம் திகதி இரசியாவின் நான்கு இயந்தரங்கள் கொண்ட Tu-95 Bear H bombers என்னும் இரு போர் விமானங்கள் பிரித்தானிய வான் எல்லைக்கு 25 மைல்கள் வெளியில் பறப்புக்களில் ஈடுபட்டிருந்தன.  அவற்றை பிரித்தானிய Eurofighter Typhoon போர் விமானங்கள் கண்காணித்து அவற்றின் அலைவரிசையைக் குழப்பும் வேலைகளில் ஈடுபட்டன. இருதரப்பினருக்கும் இடையிலான விண் கிளித்தட்டு விளையயட்டு 12 மணித்தியாலங்கள் தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து இலண்டனுக்கான இரசியத் தூதுவரை பிரித்தானிய வெளியுறவுத் துறை அழைத்து விளக்கம் கேட்டது. அதற்குப் பதிலளித்த இரசியத் தூதுவர் தமது Tu-95 Bear H bombers செய்த பறப்புக்கள் ஒரு வழமையான ரோந்துப் பறப்புக்கள் என்றும் அவை எந்த விதத்திலும் அச்சுறுத்தல்களாக அமையாது என்றும் கூறினார்.
உக்ரேன் விவகாரத்தைத் தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோக் கூட்டமைப்பு இரசியாவிற்கு எதிராக தமது வலுவை அதிகரித்தன. இரசியாவின் அடுத்த படையெடுப்பு நடக்கலாம் என்னும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் நேட்டோ தனது படைகளை அதிகரித்தது. இரசியாவின் அச்சுறுத்தலைச் சமாளிக்க ஒரு துரித பதிலடிப் படைக்குழுவையும் நேட்டோக் கூட்டமைப்பு அமைத்தது.

நேட்டோவின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் இருக்க இரசியா தனது படைவலுவைக் கூட்டும் திட்டத்தை அதிரடியாக அறிவித்துள்ளது. 2020-ம் ஆண்டு இரசியா தனது அணுக்குண்டு இருப்பைப் பெருமளவில் அதிகரிக்கவுள்ளது என்றார் இரசியாவின் முப்படைத் தளபதி வலெரி ஜெரசிமோவ். அத்துடன் இந்த ஆண்டு இரசியா ஐம்பது கண்டம் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அணுக்குண்டு கொண்ட ஏவுகணைகளைத் தனது படைக்கு இணைக்கவிருக்கின்றது. அமெரிக்காவின் படைவலு மேலாண்மை இரசியாமீது ஆதிக்கம் செலுத்த முடியாதவகையில் நாம் எமது படைவலுவை அதிகரிப்போம் எனச் சூளுரைத்துள்ளார் இரசியாவின் முப்படைத் தளபதி வலெரி ஜெரசிமோவ்.
இருபது ரில்லியன் ரூபிள் அதாவது 287 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான படைத்துறை புதுப்பிக்கும் ஐந்தாண்டுத் திட்டத்தை இரசியா அறிவித்துள்ளது. அத்துடன் அடுத்த பத்து ஆண்டுகளில் இரசியாவின் படைத்துறையில் முழுமையாகப் புதுப்பிக்கப்படும் என்றும் இரசியா அறிவித்துள்ளது. இத்திட்டங்களை இரசியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷேர்கி ஷொய்குவும் உறுதி செய்துள்ளார்.
இரசியாவிடம் தற்போது 8500 அணுக்குண்டுகள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது அமெரிக்காவிடம் இருக்கும் குண்டுகளின் எண்ணிக்கையிலும் பார்க்க ஆயிரம் அதிகமானதுமாகும்.
ஏற்கனவே இரசியாவிடம் 3082 போர் விமானங்கள், 15550 போர்த் தாங்கிகள். ஒரு விமானம் தாங்கிக் கப்பல், 352 போர்க்கப்பல்கள் இருக்கின்றன.
2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் திகதி ஐரோப்பாவிற்கான பாதுகாப்பிற்கும் ஒத்துழைப்புக்குமான நிறுவனத்தில் உரையாற்றிய இரசியப் பிரதிநிதி உக்ரேனிற்கு மேற்கு நாடுகள் படைத்துறை ரீதியில் ஆதரவு வழங்கினால் அது பெரும் அழிவில் முடியும் என எச்சரித்திருந்தார்.
கிரேக்க நாட்டில் புதிதாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தீவிர இடது சாரிகளுக்கு இரசியா நட்புக்கரம் நீட்டியுள்ளது ஐரோப்பியப் பாதுகாப்புத்துறை நிபுணர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதே வேளை கிரேக்கத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய அலெக்ஸிச் திஸ்பிராஸ் இரசியாவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவர இருக்கும் புதிய பொருளாதாரத் தடைகளுக்குத் தன் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார்.

சில அரசியல் விமசரகர்கள் உக்ரேனின் தற்போதைய நிலை இரண்டாம் உலகப் போரின் முன்னர் போலாந்து இருந்த நிலை போன்றது என்கின்றனர்.

Tuesday, 27 January 2015

சீனாவின் அமைதியான எழுச்சியும் அமெரிக்காவை நாடும் அமைதி இழந்த அயல் நாடுகளும்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்தியப் பயணம் சீனாவை உலுப்பியுள்ளது. உலகில் அதிக மக்கள் தொகை, துரித வளர்ச்சியடையும் பொருளாதாரம், உலகில் இரண்டாவது ( சில கணிபீடுகளின் படி முதலாவது) பெரிய பொருளாதாரம், உறுதியான அரசு, உலகிலேயா அதிக அளவு வெளிநாட்டுச் செல்வாணிக் கையிருப்பு, உலகிலேயே அதிக எண்ணிக்கையான படையினர், நீண்ட வரலாறு, உயர்ந்த கலாச்சாரம் ஆகிய சிறப்பு அம்சங்களைக் கொண்ட சீனா உலக அமைதிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் என்ன பங்களிப்பைச் செய்கின்றது? சீனாவில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் உலகப் பொருளாதாரத்தில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.

அயலவர்களை அமெரிக்காவை நோக்கி நகர்த்தும் சீனா
சீனா உலகப் பெரு வல்லரசாக உருவெடுத்து மற்ற வல்லரசு நாடுகளை ஓரம் கட்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அன்று சோவியத் ஒன்றியம் மேற்கு நாடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டு படைக்கல உற்பத்தியைச் செய்து வீழ்ச்சியடைந்ததை சீனா நன்கு அறியும். இன்று மேற்கு நாடுகளுடன் மோதி விளடிமீர் புட்டீனின் இரசியா பெரும் பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதையும் சீனா நன்கு அவதானித்துக் கொண்டிருக்கின்றது. இரசியாவைப் போல் பொருளாதாரத்தை நெருக்கடிக்குக் கொண்டு செல்ல சீனா விரும்பவில்லை. இதனால் சீனா தனது வளர்ச்சியை அமைதியான எழுச்சி எனப்பெயரிட்டுள்ளது. ஆனால் சீனாவின் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியும் படைவலுப் பெருக்கலும் அதன் அயல் நாடுகளைக் கலவரமடைய வைத்தன. சீனா தனது கடல் எல்லைகளையும் தரை எல்லைகளையும் மற்ற நாடுகள் ஏற்காத வகையில் விரிவு படுத்த முயல்வது இந்த அச்சத்தை மேலும் மோசமாக்கியது. இவை தமது துணைக்கு ஐக்கிய அமெரிக்காவை நாடின. இதன் விளைவாக தென் கொரியா ஜப்பான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் சீனாவிற்கு சவால் விடுக்கக் கூடிய அளவில் அமெரிக்கப் படைத்தளங்கள் உருவாகின. கியூபாவில் இரசியா விட்ட வெற்றிடத்தை சீனா நிரப்ப எந்த முயற்ச்சியும் மேற் கொள்ளவில்லை எனச் சொல்லலாம். அமெரிக்காவின் அயல் நாடுகளுடன் அமெரிக்காவுடன் முரண்பாடுகள் ஏற்படும் போதெல்லாம் சீனா நடு நிலையே வகுத்தது. அமெரிக்காவிற்கு எதிரான ஈரானின் நிலைப்பாட்டிற்கு சீனா பெரும் உதவிகள் எதையும் செய்யாதது ஈரானை சீனாவின் மீது அதிருப்தி கொள்ள வைத்தது.

இரு அம்ச வெளியுறவும் மூன்று திட்ட வர்த்தகமும்
சீனா தனது வெளிநாட்டுக் கொள்கையில் இரு முக்கிய அம்சங்களைக் கடைப்பிடிக்கின்றது. முதலாவது உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்தாது இருத்தல் இரண்டாவது அமெரிக்காவுடனான உறவிற்கு முக்கியத்துவம் கொடுத்தல். அத்துடன் மூன்று கேந்திரோபாயங்களையும் சீனா வெளிப்படையாகச் சொல்லியுள்ளது. 1 மத்திய ஆசியாவுடனான புதிய பட்டுப்பாதை 2. தென்கிழக்காசியாவூடாகச் செல்லும் கடல்வழிப்பட்டுப்பாதை. 3. இந்தியா, மியன்மார், பங்களாதேசம் ஆகியவற்றினூடான வர்த்தகப்பாதை. இவை சீனாவின் பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்ட கேந்திரோபாயமாகும். இவற்றிற்கு ஒரு ஆதாரமாக மியன்மாரின் சிட்வே, பங்களாதேசத்தின் சிட்டகொங், இலங்கையின் அம்பாந்தோட்டை, பாக்கிஸ்த்தானின் குவாடர் ஆகிய துறைமுகங்களைக் கொண்ட முத்து மாலைத் திட்டமாகும். நீண்ட கால அடிப்படையில் இவை இந்தியாவைக் கட்டுப்படுத்தும் சீனக் கடற்படைத் துறை முகங்களாக மாற்றப்படும் அபாயம் உண்டு.

அமெரிக்காவும் சீனாவும்
அமெரிக்காவின் உலக ஆதிக்கத்துக்கு சவால் விடுவதோ அல்லது தான் உலகின் முதல்தர ஆதிக்க நாடாக இருப்பதோ சீனாவின் கொள்கை அல்ல என சீனத் தலைவர்கள் வெளிப்படையாகச் சொல்லியிருக்கின்றனர். அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும்  ஏற்றுமதி செய்யாமல் சீனாவின் பொருளாதாரம் தாக்குப் பிடிக்காது. சீனாவின் கடன் அமெரிக்க அரசிற்கு மிகவும் அவசியம். ஆனால் 1989-ம் ஆண்டில் இருந்தே சீனாவும் அமெரிக்காவும் ஒன்றை ஒன்று ஐயத்துடனேயே அணுகிவருகின்றன. இந்த ஐய நிலை இன்னும் பல ஆண்டுகள் தொடரும்.  அமெரிக்காவினதும் சீனாவினதும் நலன்கள் பல ஒன்றுபட்டனவாயும், பல ஒன்றிற்கு ஒன்று தேவையானவையாகவும் இருக்கும் வேளையில் பல ஒன்றுடன் ஒன்று முரண்பட்டனவாயும் இருக்கின்றன. அமெரிக்காவுடனான வர்த்தகம் சீனாவிற்கு அவசியம். ஆனால் சீனா அமெரிக்காவில் இருந்து தனது இறக்குமதியை அதிகரிக்க வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கின்றது. சீனா அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான இரகசியங்களை சீனா இணைய வெளியூடாகத் திருடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது, பதினாறு ஆண்டுகள் தொடர்ந்து அமெரிக்காவும் சீனாவும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு இரு நாடுகளும் தமது பெரிய படை நடவடிக்கைகள் தொடர்பாக மற்ற நாட்டுக்கு அறிவிப்பதாக 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒத்துக் கொண்டுள்ளன. அதைத் தொடர்ந்து கடற்பரப்பில் எதிர்பாராத மோதல்களைத் தவிர்பதற்கான ஒரு ஒழுக்கக் கோவை ஒன்றையும் இரு நாடுகளும் உருவாக்கியுள்ளன.

உலக வங்கியை மீறிய சீன வங்கிகள்
சீன அரச வங்கிகள் உலக வங்கியிலும் பார்க்க அதிக அளவு கடன்களை அபிவிருத்தியடையும் நாடுகளுக்கு வழங்குகின்றன. சீனா இந்த நிலையை 2010-ம் ஆண்டிலேயே அடைந்து விட்டது. 2009-10 ஆண்டுக் காலப் பகுதியில் சீன அரச வங்கிகள் அபிவிருந்தியடையும் நாட்டு அரசுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் 110 பில்லியன் டொலர்களை கடனாக வழங்கியிருந்தன. அதே காலப்பகுதியில் உலக வங்கி நூறு பில்லியன் டொலர்களை மட்டுமே கடனாக வழங்கியிருந்தது. 2014-ம் ஆண்டு எரிபொருள் விலை வீழ்ச்சியால் நிதி நெருக்கடியைச் சந்தித்த இரசியாவிற்கும் வெனிசுவேலாவிற்கும் கடன் வழங்கி அவை பன்னாட்டு நாணய நிதியத்தில் நிபந்தனைகளுடன் கூடிய கடன்களை வாங்குவதில் இருந்து பாதுகாத்தது.

சீனாவின் புதிய குடியேற்ற (நவ காலனித்துவ) நாடுகள்?
1990களில் இருந்து ஆபிரிக்கக் கண்டங்களில் உள்ள நாடுகளில் உள்ள மூல வளங்கள் சீனாவின் அபிவிருத்திக்கு அவசியம் தேவைப் பட்டபோது சீனா பல ஆபிரிக்க நாடுகளுடன் தனது பொருளாதார ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொண்டது. 2012-ம் ஆண்டு ஆபிரிக்க நாடுகளின் புதிய குடியேற்ற மேலாளராக சீனா உருவெடுக்கின்றது என்ற குற்றச்சாட்டுப் பரவலாக முன்வைக்கப்பட்டது. இது சீனப் பொதுவுடமைவாதிகளுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியது. இதை அவர்கள் வன்மையாக மறுத்ததுடன் ஆபிரிக்க நாடுகளின் எண்ணெய் வளம், கனிம வளம், மற்றும் விவசாய உற்பத்திகளுக்கு சீனா சிறந்த சந்தையாக விளங்குகின்றது என்றனர். மேலும் அவர்கள் சீனர்களும் ஆபிரிக்கர்களும் ஒருவரை ஒருவர் சம நிலை நண்பர்களாக இருப்பதுடன் என்றும் சிறந்த பங்காளர்களாகவும், அன்பான சகோதரர்களாகவும் இப்போம் என்றனர். சீனா ஆபிரிக்காவில் (2012வரை) நூற்றுக்கு மேற்பட்ட பாடசாலைகளையும், முப்பதிற்கு மேற்பட்ட மருத்துவ மனைகளையும் முப்பதிற்கு மேற்பட்ட மலேரியாத் தடுப்பு நிலையங்களையும், இருபதிற்கு மேற்பட்ட விவசாய தொழில்நுட்ப வழிகாட்டல் நிலையங்களையும் உருவாக்கியுள்ளதுடன் 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முன்னுரிமைக் கடனையும் வழங்கியுள்ளது எனப் பட்டியலிட்டனர் சீனப் பொதுவுடமைவாதிகள். இவற்றுடன் நிற்கவில்லை சீனா நாற்பதினாயிரம் ஆபிரிக்கர்களுக்குப் பயிற்ச்சி வழங்கியதுடன் இருபதினாயிரம் ஆபிரிக்கர்களுக்கு புலமைப் பரிசில்களையும் வழங்கியுள்ளது. ஆனால் ஆபிரிக்க நாடுகளில் முதலிட்ட சீனா அங்கு வேலை செய்ய தனது நாட்டில் இருந்து தொழிலாளர்களை அனுப்பியது பல ஆபிரிக்கர்களைச் சிந்திக்க வைத்தது. சில ஆபிரிக்கநாடுகளின் தலைவர்கள் இதற்கு எதிராகக் குரல் கொடுத்து சீனா பல ஆபிரிக்க நாடுகளைத் தனது காலனித்துவ நாடுகளாக்கிக் கொண்டு வருகின்றது என்ற குற்றச் சாட்டையும் முன்வைத்தனர். சீனா மேற்கத்திய நாடுகளைப்போல் எந்த ஒரு நாட்டையும் தனது காலனித்துவ நாடாக மாற்றாது எனச் சீனத் தலைவர்கள் மறுத்தனர்.

அயோக்கிய ஆட்சியாளர்களும் சீனாவும்

சீனா பல நாடுகளுக்கு வழங்கும் நிபந்தனையற்ற கடன்கள் ஊழல் மற்றும் மக்கள் மீது அட்டூழியம் செய்யும் அயோக்கிய ஆட்சியாளர்களைப் பதவியில் வைத்திருக்க உதவி செய்கின்றன. அந்த அயோக்கிய ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை கிளர்ச்சி செய்யும் நடவடிக்கைகளை மேற்கத்தைய நாடுகள் இலகுவாக மேற்கொள்ள கூடியதாக இருக்கின்றது. 2013-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆபிரிக்க நாடுகளுக்கு மேற்கொண்ட பயணமும் அதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வாஷிங்டனில் ஐம்பது ஆபிரிக்க நாட்டுத் தலைவர்களை அழைத்து ஒரு மாநாடு நடத்தியமையும் ஐக்கிய அமெரிக்கா ஆபிரிகாவில் சீனா ஆதிக்கத்தை தணிக்கவும் ஆபிரிக்க நாடுகளுடன் அமெரிக்காவின் உறவை வளர்க்கவும் எடுத்த நடவடிக்கைகளே. உலகின் வேகமாக வளரும் முதற் பத்து நாடுகளில் ஆறு ஆபிரிகாவில் உள்ளன. இதனால் ஐக்கிய அமெரிக்கா ஆபிரிக்காவில் அதிக அக்கறை காட்டுவது தவிர்க்க முடியாதது. ஒபாமா ஆபிரிக்க நாடுகளுடன் மாநாடு நடாத்தும் போது அங்கு அழைக்கப்பட்ட கினியா, கம்பியா, எதியோப்பியா ஆகிய நாடுகளின் அடக்கு முறை ஆட்சியாளர்களுக்கு எதிராக பலர் ஆர்ப்பாட்டம் நடாத்தினர்.
சீனா தனது வெளியுறவுக் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
சீனா சொல்வது போல் மற்ற நாடுகளுடன் பங்காண்மையை வளர்க்க வேண்டுமாயின் அந்த நாடுகளில் நல்லாட்சியை உறுதி செய்ய வேண்டும். அல்லது  அங்கு படைத்துறைப் புரட்சி, அரசுக்கு எதிரான கிளர்ச்சி, அல்லது பெரும் பணம் செலவழித்துப் பல அரசியல்வாதிகளைக் கட்சி மாறச் செய்தல் போன்றவற்றால் அங்கு சீனாவிற்கு சார்பற்றவர்களை மேற்கு நாடுகளால் ஆட்சி மாற்றம் செய்ய முடியும். இப்படிப்பட்ட ஆட்சி மாற்றங்களால் சீனா பெரும் முதலீடுகளால் உருவாக்கும் தனக்குச் சார்பான ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்து இலகுவாகத் தூக்கி எறிவதைத் தடுக்க தனது வெளியுறவுக் கொள்கையில் பெரு மாற்றங்கள் செய்ய வேண்டும்.

Sunday, 25 January 2015

அமெரிக்காவின் நீர்மூழ்கி அழிப்பு உலங்கு வானூர்திகள்

அமெரிக்கா தனது கடற்படைக்கு SH-2G Super Seasprite என்னும் நீர் மூழ்கி அழிப்பு உலங்கு வானூர்திகளை உற்பத்தி செய்துள்ளது. இவை நீர் மூழ்கிகளை அழிப்பதுடன் கடல் மேற்பரப்பில் உள்ள கலன்களை அழித்தல், கடற் கண்ணிவெடிகளை செயலிழக்கச் செய்தல்,  தொடுவானத்தில்(horizon) இலக்கு வைத்தல், வேவுபார்த்தல், மீட்புப் பணி, தேடிவிடுவித்தல், இரகசிய நடவடிக்கைகள் போன்றவற்றையும் செய்யக் கூடியன.

SH-2G Super Seasprite என்னும் நீர் மூழ்கி அழிப்பு உலங்கு வானூர்திகள் இரு விமானிகளையும் ஒரு உணரி இயக்குனரையும் (sensor operator) கொண்டது. ஒரு விமானியாலும் இதை இயக்க முடியும். இதில் உள்ள ஒன்றிணைக்கப்பட்ட integrated tactical avionics system (ITAS)மிகவும் இசைவிணக்கம் (flexible)உடையதாகும்.
விமானப் பறப்பியக்கம் (avionics) என்பது இலத்திரனியல் மூலம் விமானம், செய்மதி போன்றவற்றை இயக்கும் முறைமையாகும். இதில் தொடர்பாடல், வழிகாட்டல், காட்சி, பல் முறைமை முகாமை போன்ற நூற்றுக் கணக்கான செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
Avionics are the electronic systems used on aircraft, artificial satellites, and spacecraft. Avionic systems include communications, navigation, the display and management of multiple systems, and the hundreds of systems that are fitted to aircraft to perform individual functions.

SH-2G Super Seaspriteஇல் உள்ள கண்ணாடியிலான cockpit நான்கு நிறங்களில் காட்சிப்படுத்தக் கூடியது. இவற்றில் உள்ளடக்கக் கூடிய படைக்கலன்கள்:
Raytheon AGM-65

1. Raytheon AGM-65 Maverick infrared imaging or TV-guided
2. Penguin infrared imaging.
3. Radar-guided Improved Sea Skua
4. Laser-designated Hellfire missiles.

SH-2G Super Seasprite உலங்கு வானூர்தியில் பொருத்தப்பட்டிருக்கும் LN-66HP multi-mode radar மூலம் கடற்கப்பல்களை வேவுபார்த்தலும் இலக்குப் பார்த்தலும் செய்ய முடியும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...