அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்தியப் பயணம் சீனாவை உலுப்பியுள்ளது. உலகில் அதிக மக்கள் தொகை, துரித வளர்ச்சியடையும் பொருளாதாரம், உலகில் இரண்டாவது ( சில கணிபீடுகளின் படி முதலாவது) பெரிய பொருளாதாரம், உறுதியான அரசு, உலகிலேயா அதிக அளவு வெளிநாட்டுச் செல்வாணிக் கையிருப்பு, உலகிலேயே அதிக எண்ணிக்கையான படையினர், நீண்ட வரலாறு, உயர்ந்த கலாச்சாரம் ஆகிய சிறப்பு அம்சங்களைக் கொண்ட சீனா உலக அமைதிக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் என்ன பங்களிப்பைச் செய்கின்றது? சீனாவில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் உலகப் பொருளாதாரத்தில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.
அயலவர்களை அமெரிக்காவை நோக்கி நகர்த்தும் சீனா
சீனா உலகப் பெரு வல்லரசாக உருவெடுத்து மற்ற வல்லரசு நாடுகளை ஓரம் கட்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அன்று சோவியத் ஒன்றியம் மேற்கு நாடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டு படைக்கல உற்பத்தியைச் செய்து வீழ்ச்சியடைந்ததை சீனா நன்கு அறியும். இன்று மேற்கு நாடுகளுடன் மோதி விளடிமீர் புட்டீனின் இரசியா பெரும் பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதையும் சீனா நன்கு அவதானித்துக் கொண்டிருக்கின்றது. இரசியாவைப் போல் பொருளாதாரத்தை நெருக்கடிக்குக் கொண்டு செல்ல சீனா விரும்பவில்லை. இதனால் சீனா தனது வளர்ச்சியை அமைதியான எழுச்சி எனப்பெயரிட்டுள்ளது. ஆனால் சீனாவின் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியும் படைவலுப் பெருக்கலும் அதன் அயல் நாடுகளைக் கலவரமடைய வைத்தன. சீனா தனது கடல் எல்லைகளையும் தரை எல்லைகளையும் மற்ற நாடுகள் ஏற்காத வகையில் விரிவு படுத்த முயல்வது இந்த அச்சத்தை மேலும் மோசமாக்கியது. இவை தமது துணைக்கு ஐக்கிய அமெரிக்காவை நாடின. இதன் விளைவாக தென் கொரியா ஜப்பான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் சீனாவிற்கு சவால் விடுக்கக் கூடிய அளவில் அமெரிக்கப் படைத்தளங்கள் உருவாகின. கியூபாவில் இரசியா விட்ட வெற்றிடத்தை சீனா நிரப்ப எந்த முயற்ச்சியும் மேற் கொள்ளவில்லை எனச் சொல்லலாம். அமெரிக்காவின் அயல் நாடுகளுடன் அமெரிக்காவுடன் முரண்பாடுகள் ஏற்படும் போதெல்லாம் சீனா நடு நிலையே வகுத்தது. அமெரிக்காவிற்கு எதிரான ஈரானின் நிலைப்பாட்டிற்கு சீனா பெரும் உதவிகள் எதையும் செய்யாதது ஈரானை சீனாவின் மீது அதிருப்தி கொள்ள வைத்தது.
இரு அம்ச வெளியுறவும் மூன்று திட்ட வர்த்தகமும்
சீனா தனது வெளிநாட்டுக் கொள்கையில் இரு முக்கிய அம்சங்களைக் கடைப்பிடிக்கின்றது. முதலாவது உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்தாது இருத்தல் இரண்டாவது அமெரிக்காவுடனான உறவிற்கு முக்கியத்துவம் கொடுத்தல். அத்துடன் மூன்று கேந்திரோபாயங்களையும் சீனா வெளிப்படையாகச் சொல்லியுள்ளது. 1 மத்திய ஆசியாவுடனான புதிய பட்டுப்பாதை 2. தென்கிழக்காசியாவூடாகச் செல்லும் கடல்வழிப்பட்டுப்பாதை. 3. இந்தியா, மியன்மார், பங்களாதேசம் ஆகியவற்றினூடான வர்த்தகப்பாதை. இவை சீனாவின் பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்ட கேந்திரோபாயமாகும். இவற்றிற்கு ஒரு ஆதாரமாக மியன்மாரின் சிட்வே, பங்களாதேசத்தின் சிட்டகொங், இலங்கையின் அம்பாந்தோட்டை, பாக்கிஸ்த்தானின் குவாடர் ஆகிய துறைமுகங்களைக் கொண்ட முத்து மாலைத் திட்டமாகும். நீண்ட கால அடிப்படையில் இவை இந்தியாவைக் கட்டுப்படுத்தும் சீனக் கடற்படைத் துறை முகங்களாக மாற்றப்படும் அபாயம் உண்டு.
அமெரிக்காவும் சீனாவும்
அமெரிக்காவின் உலக ஆதிக்கத்துக்கு சவால் விடுவதோ அல்லது தான் உலகின் முதல்தர ஆதிக்க நாடாக இருப்பதோ சீனாவின் கொள்கை அல்ல என சீனத் தலைவர்கள் வெளிப்படையாகச் சொல்லியிருக்கின்றனர். அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஏற்றுமதி செய்யாமல் சீனாவின் பொருளாதாரம் தாக்குப் பிடிக்காது. சீனாவின் கடன் அமெரிக்க அரசிற்கு மிகவும் அவசியம். ஆனால் 1989-ம் ஆண்டில் இருந்தே சீனாவும் அமெரிக்காவும் ஒன்றை ஒன்று ஐயத்துடனேயே அணுகிவருகின்றன. இந்த ஐய நிலை இன்னும் பல ஆண்டுகள் தொடரும். அமெரிக்காவினதும் சீனாவினதும் நலன்கள் பல ஒன்றுபட்டனவாயும், பல ஒன்றிற்கு ஒன்று தேவையானவையாகவும் இருக்கும் வேளையில் பல ஒன்றுடன் ஒன்று முரண்பட்டனவாயும் இருக்கின்றன. அமெரிக்காவுடனான வர்த்தகம் சீனாவிற்கு அவசியம். ஆனால் சீனா அமெரிக்காவில் இருந்து தனது இறக்குமதியை அதிகரிக்க வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கின்றது. சீனா அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான இரகசியங்களை சீனா இணைய வெளியூடாகத் திருடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது, பதினாறு ஆண்டுகள் தொடர்ந்து அமெரிக்காவும் சீனாவும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு இரு நாடுகளும் தமது பெரிய படை நடவடிக்கைகள் தொடர்பாக மற்ற நாட்டுக்கு அறிவிப்பதாக 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒத்துக் கொண்டுள்ளன. அதைத் தொடர்ந்து கடற்பரப்பில் எதிர்பாராத மோதல்களைத் தவிர்பதற்கான ஒரு ஒழுக்கக் கோவை ஒன்றையும் இரு நாடுகளும் உருவாக்கியுள்ளன.
உலக வங்கியை மீறிய சீன வங்கிகள்
சீன அரச வங்கிகள் உலக வங்கியிலும் பார்க்க அதிக அளவு கடன்களை அபிவிருத்தியடையும் நாடுகளுக்கு வழங்குகின்றன. சீனா இந்த நிலையை 2010-ம் ஆண்டிலேயே அடைந்து விட்டது. 2009-10 ஆண்டுக் காலப் பகுதியில் சீன அரச வங்கிகள் அபிவிருந்தியடையும் நாட்டு அரசுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் 110 பில்லியன் டொலர்களை கடனாக வழங்கியிருந்தன. அதே காலப்பகுதியில் உலக வங்கி நூறு பில்லியன் டொலர்களை மட்டுமே கடனாக வழங்கியிருந்தது. 2014-ம் ஆண்டு எரிபொருள் விலை வீழ்ச்சியால் நிதி நெருக்கடியைச் சந்தித்த இரசியாவிற்கும் வெனிசுவேலாவிற்கும் கடன் வழங்கி அவை பன்னாட்டு நாணய நிதியத்தில் நிபந்தனைகளுடன் கூடிய கடன்களை வாங்குவதில் இருந்து பாதுகாத்தது.
சீனாவின் புதிய குடியேற்ற (நவ காலனித்துவ) நாடுகள்?
1990களில் இருந்து ஆபிரிக்கக் கண்டங்களில் உள்ள நாடுகளில் உள்ள மூல வளங்கள் சீனாவின் அபிவிருத்திக்கு அவசியம் தேவைப் பட்டபோது சீனா பல ஆபிரிக்க நாடுகளுடன் தனது பொருளாதார ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொண்டது. 2012-ம் ஆண்டு ஆபிரிக்க நாடுகளின் புதிய குடியேற்ற மேலாளராக சீனா உருவெடுக்கின்றது என்ற குற்றச்சாட்டுப் பரவலாக முன்வைக்கப்பட்டது. இது சீனப் பொதுவுடமைவாதிகளுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியது. இதை அவர்கள் வன்மையாக மறுத்ததுடன் ஆபிரிக்க நாடுகளின் எண்ணெய் வளம், கனிம வளம், மற்றும் விவசாய உற்பத்திகளுக்கு சீனா சிறந்த சந்தையாக விளங்குகின்றது என்றனர். மேலும் அவர்கள் சீனர்களும் ஆபிரிக்கர்களும் ஒருவரை ஒருவர் சம நிலை நண்பர்களாக இருப்பதுடன் என்றும் சிறந்த பங்காளர்களாகவும், அன்பான சகோதரர்களாகவும் இப்போம் என்றனர். சீனா ஆபிரிக்காவில் (2012வரை) நூற்றுக்கு மேற்பட்ட பாடசாலைகளையும், முப்பதிற்கு மேற்பட்ட மருத்துவ மனைகளையும் முப்பதிற்கு மேற்பட்ட மலேரியாத் தடுப்பு நிலையங்களையும், இருபதிற்கு மேற்பட்ட விவசாய தொழில்நுட்ப வழிகாட்டல் நிலையங்களையும் உருவாக்கியுள்ளதுடன் 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முன்னுரிமைக் கடனையும் வழங்கியுள்ளது எனப் பட்டியலிட்டனர் சீனப் பொதுவுடமைவாதிகள். இவற்றுடன் நிற்கவில்லை சீனா நாற்பதினாயிரம் ஆபிரிக்கர்களுக்குப் பயிற்ச்சி வழங்கியதுடன் இருபதினாயிரம் ஆபிரிக்கர்களுக்கு புலமைப் பரிசில்களையும் வழங்கியுள்ளது. ஆனால் ஆபிரிக்க நாடுகளில் முதலிட்ட சீனா அங்கு வேலை செய்ய தனது நாட்டில் இருந்து தொழிலாளர்களை அனுப்பியது பல ஆபிரிக்கர்களைச் சிந்திக்க வைத்தது. சில ஆபிரிக்கநாடுகளின் தலைவர்கள் இதற்கு எதிராகக் குரல் கொடுத்து சீனா பல ஆபிரிக்க நாடுகளைத் தனது காலனித்துவ நாடுகளாக்கிக் கொண்டு வருகின்றது என்ற குற்றச் சாட்டையும் முன்வைத்தனர். சீனா மேற்கத்திய நாடுகளைப்போல் எந்த ஒரு நாட்டையும் தனது காலனித்துவ நாடாக மாற்றாது எனச் சீனத் தலைவர்கள் மறுத்தனர்.
அயோக்கிய ஆட்சியாளர்களும் சீனாவும்
சீனா பல நாடுகளுக்கு வழங்கும் நிபந்தனையற்ற கடன்கள் ஊழல் மற்றும் மக்கள் மீது அட்டூழியம் செய்யும் அயோக்கிய ஆட்சியாளர்களைப் பதவியில் வைத்திருக்க உதவி செய்கின்றன. அந்த அயோக்கிய ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை கிளர்ச்சி செய்யும் நடவடிக்கைகளை மேற்கத்தைய நாடுகள் இலகுவாக மேற்கொள்ள கூடியதாக இருக்கின்றது. 2013-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆபிரிக்க நாடுகளுக்கு மேற்கொண்ட பயணமும் அதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வாஷிங்டனில் ஐம்பது ஆபிரிக்க நாட்டுத் தலைவர்களை அழைத்து ஒரு மாநாடு நடத்தியமையும் ஐக்கிய அமெரிக்கா ஆபிரிகாவில் சீனா ஆதிக்கத்தை தணிக்கவும் ஆபிரிக்க நாடுகளுடன் அமெரிக்காவின் உறவை வளர்க்கவும் எடுத்த நடவடிக்கைகளே. உலகின் வேகமாக வளரும் முதற் பத்து நாடுகளில் ஆறு ஆபிரிகாவில் உள்ளன. இதனால் ஐக்கிய அமெரிக்கா ஆபிரிக்காவில் அதிக அக்கறை காட்டுவது தவிர்க்க முடியாதது. ஒபாமா ஆபிரிக்க நாடுகளுடன் மாநாடு நடாத்தும் போது அங்கு அழைக்கப்பட்ட கினியா, கம்பியா, எதியோப்பியா ஆகிய நாடுகளின் அடக்கு முறை ஆட்சியாளர்களுக்கு எதிராக பலர் ஆர்ப்பாட்டம் நடாத்தினர்.
சீனா தனது வெளியுறவுக் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
சீனா சொல்வது போல் மற்ற நாடுகளுடன் பங்காண்மையை வளர்க்க வேண்டுமாயின் அந்த நாடுகளில் நல்லாட்சியை உறுதி செய்ய வேண்டும். அல்லது அங்கு படைத்துறைப் புரட்சி, அரசுக்கு எதிரான கிளர்ச்சி, அல்லது பெரும் பணம் செலவழித்துப் பல அரசியல்வாதிகளைக் கட்சி மாறச் செய்தல் போன்றவற்றால் அங்கு சீனாவிற்கு சார்பற்றவர்களை மேற்கு நாடுகளால் ஆட்சி மாற்றம் செய்ய முடியும். இப்படிப்பட்ட ஆட்சி மாற்றங்களால் சீனா பெரும் முதலீடுகளால் உருவாக்கும் தனக்குச் சார்பான ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்து இலகுவாகத் தூக்கி எறிவதைத் தடுக்க தனது வெளியுறவுக் கொள்கையில் பெரு மாற்றங்கள் செய்ய வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment