Saturday, 31 January 2015

வேட்டியை மடிச்சுக் கட்டும் இரசியா

உக்ரேனின் கிறிமியாவை தன்னுடன் இணைத்தைத் தொடர்ந்து மேற்கு நாடுகள் இரசியாவிற்கு எதிராக கொண்டுவந்த பொருளாதாரத் தடையால் பொருளாதாரப் பிரச்சனைய இரசியா எதிர் கொள்கின்றது ஆனாலும் இரசியா அடங்கியதாகத் தெரியவில்லை. உக்ரேனின் இரசியர்கள் பெரும்பான்மையாக வாழும் அதன் கிழக்குப் பிராந்தியத்தைத் தன்னுடன் இணைக்க இரசியா பெரும் முயற்ச்சி எடுத்துக் கொண்டிருக்கின்றது.

இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையை இரசியாவிற்கு எதிரான இரண்டாம் பொருளாதாரப் போர் என்றுதான் சொல்ல வேண்டும். இரசியாவிற்கு எதிரான முதலாம் பொருளாதாரப் போர் சோவியட் ஒன்றியத்தை வீழ்த்தியது. இரண்டாம் பொருளாதாரப் போர் இரசிய அதிபரி விளடீமீர் புட்டீனின் கொட்டம் அடக்க நடக்கின்றது. 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ம் திகதி இரசிய நாணயமான ரூபிளின் பெறுமதி பெரு விழ்ச்சியை அடைய இரசியா தனது வட்டி விழுக்காட்டை 10.5இல் இருந்து 17 ஆக உயர்த்தியது. இது பற்றி மேற்கத்தைய ஊடகங்கள் வெற்றிக்களிப்புடன் எழுதித் தள்ளின. ஆனால் ரூபிளின் பெறுமதி வீழ்ச்சி இரசியப் பொருளாதாரத்திற்குப் பல நன்மைகளைச் செய்துள்ளது. இரசிய மக்கள்  உள் நாட்டுப் பொருட்களைக் கொள்வனவு செய்வது அதிகரித்துள்ளது. இதனால் 2015 ஜவனரி மாத இறுதியில் இரசியா தனது வட்டி விழுக்காட்டை 17இல் இருந்து 15 ஆகக் குறைத்தது. இது இரசிய வங்கிகளிற்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.

2015 ஜனவரி இரசியாவில் எடுத்த கருத்துக் கணிப்புக்களின் படி இரசிய மக்களில் 55 விழுக்காட்டினர் இரசியா சரியான பாதையில் செல்வதாகக் கருதுகின்றனர். இது புட்டீன் இப்போதும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கின்றார் என்பதைக் காட்டுகின்றது. 2014-ம் ஆண்டு இந்த மாதிரியான கருத்துக் கணிப்புச் செய்த போது 66 விழுக்காட்டினர் இரசியா சரியான பாதையில் செல்வதாக நம்பினர். மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடையால் இரசியாவில் பணவிக்கம் பத்துக்கும் மேல் இருப்பதை இரசிய மக்கள் பொறுத்துக் கொண்டிருக்கின்றனர். இரசிய அன்னை மீது அந்நியர்கள் நடத்தும் தாக்குதலில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என மக்கள் கருதுகின்றனர்.

இரசிய அதிபர் புட்டீனின் தற்போதைய நிலை மூலையில் முடக்கப்பட்ட புலியின் நிலையாகும். ஒன்றில் அவர் அடங்கிப் போகவேண்டும் அல்லது தனது இறுதிப் பாய்ச்சலை மேற்கொண்டு தப்பி ஓட வேண்டும் அல்லது பிடிபடவேண்டும். பொருளாதாரத் தடையாலும் எரிபொருள் விலை வீழ்ச்சியாலும் முடக்கப்பட்ட புட்டீன் அடங்கிப்போவதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. கிறிமியாவை இரசியாவுடன் இணைத்தமை புட்டீனின் செல்வாக்கை இரசியாவில் பெருமளவில் உயர்த்தியுள்ளது. உக்ரேனில் அவர் மேற்குலக நாடுகளுக்குப் பாடம் படிப்பிப்பதாக இரசிய மக்கள் கருதுகின்றனர். அதற்கு ஏற்ப இரசிய ஊடகங்களும் மேற்குலகுக நாடுகளுக்கு எதிராகவும் புட்டீனுக்கு ஆதரவாகவும் பெரும் பரப்புரை செய்கின்றன. இதனால் பொருளாதாரப் பிரச்சனையால் மக்கள் தன்னை வெறுக்க மாட்டார்கள் எனப் புட்டீன் நம்புகின்றார். இது இன்னும் எத்தனை நாட்கள் போகிறது பார்ப்போம் என மேற்குலக நாடுகள் காத்திருக்கின்றன. ஆனால் புட்டீன் தனது பரப்புரைகள் மூலம் உக்ரேனிய மக்களை தற்போது உள்ள மேற்குலகு சார்பான நாடுகளுக்கு எதிராகத் திருப்ப முயல்கின்றார்.


அமெரிக்கா உட்பட நேட்டோ நாடுகளின் எல்லைகளை நோக்கி தனது போர் விமானங்களை அனுப்பி அந்த நாடுகளின் குடிசார் விமானப் போக்கு வரத்திற்கு அச்சுறுத்தல்களை இரசியா ஏற்படுத்துகின்றது. கடைசியாக 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ம் திகதி இரசியாவின் நான்கு இயந்தரங்கள் கொண்ட Tu-95 Bear H bombers என்னும் இரு போர் விமானங்கள் பிரித்தானிய வான் எல்லைக்கு 25 மைல்கள் வெளியில் பறப்புக்களில் ஈடுபட்டிருந்தன.  அவற்றை பிரித்தானிய Eurofighter Typhoon போர் விமானங்கள் கண்காணித்து அவற்றின் அலைவரிசையைக் குழப்பும் வேலைகளில் ஈடுபட்டன. இருதரப்பினருக்கும் இடையிலான விண் கிளித்தட்டு விளையயட்டு 12 மணித்தியாலங்கள் தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து இலண்டனுக்கான இரசியத் தூதுவரை பிரித்தானிய வெளியுறவுத் துறை அழைத்து விளக்கம் கேட்டது. அதற்குப் பதிலளித்த இரசியத் தூதுவர் தமது Tu-95 Bear H bombers செய்த பறப்புக்கள் ஒரு வழமையான ரோந்துப் பறப்புக்கள் என்றும் அவை எந்த விதத்திலும் அச்சுறுத்தல்களாக அமையாது என்றும் கூறினார்.
உக்ரேன் விவகாரத்தைத் தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோக் கூட்டமைப்பு இரசியாவிற்கு எதிராக தமது வலுவை அதிகரித்தன. இரசியாவின் அடுத்த படையெடுப்பு நடக்கலாம் என்னும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் நேட்டோ தனது படைகளை அதிகரித்தது. இரசியாவின் அச்சுறுத்தலைச் சமாளிக்க ஒரு துரித பதிலடிப் படைக்குழுவையும் நேட்டோக் கூட்டமைப்பு அமைத்தது.

நேட்டோவின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் இருக்க இரசியா தனது படைவலுவைக் கூட்டும் திட்டத்தை அதிரடியாக அறிவித்துள்ளது. 2020-ம் ஆண்டு இரசியா தனது அணுக்குண்டு இருப்பைப் பெருமளவில் அதிகரிக்கவுள்ளது என்றார் இரசியாவின் முப்படைத் தளபதி வலெரி ஜெரசிமோவ். அத்துடன் இந்த ஆண்டு இரசியா ஐம்பது கண்டம் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அணுக்குண்டு கொண்ட ஏவுகணைகளைத் தனது படைக்கு இணைக்கவிருக்கின்றது. அமெரிக்காவின் படைவலு மேலாண்மை இரசியாமீது ஆதிக்கம் செலுத்த முடியாதவகையில் நாம் எமது படைவலுவை அதிகரிப்போம் எனச் சூளுரைத்துள்ளார் இரசியாவின் முப்படைத் தளபதி வலெரி ஜெரசிமோவ்.
இருபது ரில்லியன் ரூபிள் அதாவது 287 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான படைத்துறை புதுப்பிக்கும் ஐந்தாண்டுத் திட்டத்தை இரசியா அறிவித்துள்ளது. அத்துடன் அடுத்த பத்து ஆண்டுகளில் இரசியாவின் படைத்துறையில் முழுமையாகப் புதுப்பிக்கப்படும் என்றும் இரசியா அறிவித்துள்ளது. இத்திட்டங்களை இரசியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷேர்கி ஷொய்குவும் உறுதி செய்துள்ளார்.
இரசியாவிடம் தற்போது 8500 அணுக்குண்டுகள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது அமெரிக்காவிடம் இருக்கும் குண்டுகளின் எண்ணிக்கையிலும் பார்க்க ஆயிரம் அதிகமானதுமாகும்.
ஏற்கனவே இரசியாவிடம் 3082 போர் விமானங்கள், 15550 போர்த் தாங்கிகள். ஒரு விமானம் தாங்கிக் கப்பல், 352 போர்க்கப்பல்கள் இருக்கின்றன.
2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் திகதி ஐரோப்பாவிற்கான பாதுகாப்பிற்கும் ஒத்துழைப்புக்குமான நிறுவனத்தில் உரையாற்றிய இரசியப் பிரதிநிதி உக்ரேனிற்கு மேற்கு நாடுகள் படைத்துறை ரீதியில் ஆதரவு வழங்கினால் அது பெரும் அழிவில் முடியும் என எச்சரித்திருந்தார்.
கிரேக்க நாட்டில் புதிதாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தீவிர இடது சாரிகளுக்கு இரசியா நட்புக்கரம் நீட்டியுள்ளது ஐரோப்பியப் பாதுகாப்புத்துறை நிபுணர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதே வேளை கிரேக்கத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய அலெக்ஸிச் திஸ்பிராஸ் இரசியாவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவர இருக்கும் புதிய பொருளாதாரத் தடைகளுக்குத் தன் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார்.

சில அரசியல் விமசரகர்கள் உக்ரேனின் தற்போதைய நிலை இரண்டாம் உலகப் போரின் முன்னர் போலாந்து இருந்த நிலை போன்றது என்கின்றனர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...