ஐரோப்பாவின் ஒரு புறம் லித்துவேனிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலும் யூரோ நாணயக் கட்டமைப்பிலும் இணைவதை கொண்டாடிக் கொண்டிருக்கையில் மறுபுறம் கிரேக்க மக்கள் அவ்விரு கூட்டமைப்புக்களினதும் சிக்கன நடவடிக்கை நிபந்தனைக்கு எதிராக வாக்களித்தனர். நான்கு ஆண்டுகள் அரச சிக்கன நடவடிக்கைகளால் சலிப்படைந்த கிரேக்க மக்கள் அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் தலைமையிலான தீவிர இடதுசாரிக் கட்சியான சிரிஸாவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். பாராளமனத்தில் அறுதிப் பெரும்பான்மைக்கு இரண்டு இடங்கள் பற்றாக்குறை என்றபடியால் சிக்கன நடவடிக்கைக்கு எதிரான கொள்கை கொண்ட வலதுசாரிக் கட்சியான சுதந்திர கிரேக்கக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து சிரிஸா ஆட்சியைக் அமைத்துக் கொண்டது. இது ஐரோப்பாவில் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரியண்ணன் ஜேர்மனியுடன் கடன் பிரச்சனையில் மோதிக் கொன்டிருக்கும் கிரேக்கத்தின் தலமை அமைச்சர் பதவியை ஏற்றவுடன் அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் முதல் செய்த வேலை இரண்டாம் உலகப் போரின்போது ஜேர்மனியர்களால் கொல்லப்பட்டவர்களின் நினைவுச் சின்னத்திற்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தியமையே. அத்துடன் அவர் இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைக்கு எதிராகக் குரல் கொடுத்தமை ஐரோப்பாவின் பல நாடுகளின் பாதுகாப்புத் துறையினரை அதிர வைத்துள்ளது. கிரேக்கத்தில் அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் தலைமையிலான சிரிஸா கட்சி வெற்றி பெற்றது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைக்கு ஏற்ப சிக்கன நடவடிக்கைகளைச் செய்து கொண்டிருக்கும் பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாட்டில் உள்ள தீவிர இடதுசாரிக் கட்சிகளுக்கு ஆதரவு பெருகியதுடன் அக் கட்சிகளும் புதிய உத்வேகம் பெற்றுள்ளன.
நாணயமில்லா நாணயக் கூட்டமைப்பு
கடந்த எட்டு ஆண்டுகளாக கிரேக்கம் தொடர்ந்து பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இக்காலகட்டத்தில் மூன்று பொருளாதார வீழ்ச்சிகளை அது சந்தித்துள்ளதுடன் அதன் கடன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 175 விழுக்காடு அதிகரித்துள்ளது. கிரேக்கத்தில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை 35 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஜேர்மனியின் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப வகுத்துக் கொண்ட யூரோ நாணய மதிப்பும் யூரோ வலய வட்டி வீதமும் யூரோ நாணயத்தைத் தமது நாணயமாகக் கொண்டகிரேக்கம், வட அயர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, போர்த்துக்கல் போன்ற நாடுகளுக்கு ஒத்து வரவில்லை. இவற்றின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு அங்கு நிறுவனங்கள் மூடப்பட்டு வங்கிகள் வங்குரோத்து நிலையடைந்து, அரசுகள் நிதி நெருக்கடியில் தவிக்கின்றன. இவற்றில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடு கிரேக்கம்.
ஜேர்மனிக்குப் பிடிக்காதது கிரேக்கத்திற்குப் பிடித்தது.
அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் கிரேக்கத்தின் கடனை இல்லாமல் செய்து, அரச செலவீனங்களை அதிகரித்து கீன்சியக் கொள்கையின் படி பொருளாதாரம் வளர உந்து வலு கொடுக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர். 2014ம் ஆண்டு 25 விழுக்காடு பொருளாதார விழ்ச்சியைக் கண்ட கிரேக்கம் 25 விழுக்காடு வேலையற்றவர்களையும் கொண்டுள்ளது. இதற்கு பொருளாதார நிபுணர் கீன்ஸின் கொள்கைப்படி அரச செலவை அதிகரித்து உந்து வலு கொடுக்க வேண்டும் என்பதில் அலெக்ஸிஸ் ஸிப்ராள் நம்பிக்கை கொண்டுள்ளார் ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தாம் நினைத்தபடி அரச செலவீனங்களை அதிகரிக்க முடியாது. அதற்கு உரிய கடனை அவர் எங்கிருந்து பெறுவார் என்பது பெரிய ஒரு கேள்வியாகும். ஜேர்மனியப் பொருளாதர நிபுணர்களுக்கு கீன்சியப் பொருளாதாரக் கொள்கை பிடிக்காத ஒன்றாகும்.
ஆட்சிக்கு ஓடிவந்தவரை நாடி நிற்கும் தொல்லைகள்
கிரேக்க அரசு 2015 மார்ச் மாதம் 4.3 பில்லியன் யூரோ பெறுமதியான கடனை மீளளிக்க வேண்டிய நிலையில் அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். புதிதாகப் பதவி ஏற்ற அரசுக்குப் பல தெரிவுகள் இருக்கவில்லை. சிக்கன நடவடிக்கைகளை இல்லாமல் செய்வதாயின் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் யூரோ நாணயக் கட்டமைப்பில் இருந்தும் வெளியேற வேண்டும் அல்லது அதற்குக் கடன் வழங்கிய பன்னாட்டு நாணய நிதியம், ஐரோப்பிய மைய வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிடம் கிரேக்க அரசுக்கு வழங்கிய கடனை முழுமையாக அல்லது ஒரு பகுதியைத் தள்ளுபடி செய்யச் சம்மதிக்க வைக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளின் படி யூரோ நாணயக் கட்டமைப்பில் இருந்து விலகுவதாயின் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் விலக வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஒரு நாடு விலகுவதானால் அது முதலில் விலகுவதற்கான நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், ஏற்கனவே பெருமளவு கடன் கொடுத்தோம், அதன் வட்டியைக் குறைத்தோம், கடன் மீளளிப்பிற்கான கால எல்லையை நீடித்தோம், கிரேக்க அரசுடன் ஒத்துழைப்பதாக வாக்குறுதியளித்தோம் ஆனால் நாம் விதித்த நிபந்தனைகளுக்கு அமைய கிரேக்க அரசு நடக்கவில்லை என ஜேர்மனியில் இருந்து ஆத்திரக் குரல்கள் அலெக்ஸிஸ் ஸிப்ராஸின் சிரிஸாக் கட்சி வெற்றி பெற்றவுடன் எழுந்தன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை நிபந்தனைகளுக்கு ஏற்ப அயலாந்தும் போர்த்துக்கலும் தமது நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாக சீரமைத்துள்ளன. சைப்பிரஸ் தேசமும் இவ்வாறே தேறிக் கொண்டிக்கின்றது.
வலுமிக்க ஐரோப்பிய ஒன்றியம்
சில கிழக்கு ஐரோப்பிய நாடுகள் உட்பட 28 நாடுகள் இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளன. இவையாவற்றையும் ஒன்றிணைத்தால் மொத்த தேசிய உற்பத்தி ரீதியில் ஐரோப்பிய ஒன்றியம் உலக பொருளாதாரத்தில் முதலிடம் வகிக்கிறது. பொருளாதார ரீதியில் ஒன்றிணைந்த 28 நாடுகளும் தமது அதிகாரங்களை விட்டுக் கொடுத்து ஒரு மத்திய அரசுக்குக் கீழ் கட்டுப்பட்டு நடக்க தயக்கம் காட்டுகின்றன. பதின் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு என்று யூரோ என்ற தனி நாணயம் உருவாக்கப்பட்டபோது 17 நாடுகள் மட்டுமே அதில் இணைந்து கொண்டன. தற்போது 18 நாடுகள் யூரோ வலயத்தில் இருக்கின்றன. எல்லா நாடுகளும் இணையாதது ஐக்கிய ஐரோப்பிய அரசு உருவாக்கத்திற்கு ஒரு பின்னடைவே. அடுத்த பெரும் பின்னடைவு ஒரு நாணயத்தை ஏற்றுக் கொண்ட 18 நாடுகளும் ஒரு நாட்டுப் பொருளாதரத்துக்குரிய கட்டுப் பாடுகளை இறுக்கமாகக் கடைப் பிடிக்காமல் தமது தேர்தல் அரசியலுக்கு ஏற்ப ஒவ்வொரு நாடுகளும் தமது பொருளாதாரக் கொள்கைகளைக் கடைப்பிடித்தன. சில நாடுகள் மக்களுக்கு பெரும் பணச் செலவில் அதிக சமூக நன்மைகளைச் செய்தும் சிலநாடுகள் தமது அரச செலவீனங்களை குறைத்தும் செயற்பட்டன. ஆனால் நாணய ஒன்றியமானது ஒரு சிறந்த பொருளாதாரக் கட்டுப்பாடுன் இருக்க வேண்டும். பொருளியலாளர்கள் கூறுகிறார்கள்: Currency union should go hand in hand with fiscal policy union. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விரும்பும் நாடுகளின் பொருளாதாரம் சிறந்த நிலையில் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நாடுகளின் பணவீக்கம், பாதீட்டுக் குறைபாடு போன்றவை கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும். 1981-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த கிரேக்கம் 2001-ம் ஆண்டு யூரோ நாணயக் கட்டமைப்பில் இணையும் போது தனது தொடர்பாகப் பொய்யான தகவல்களைக் கொடுத்ததாகச் சொல்லப்படுகின்றது. கிரேக்கம் தனது கடனை மீளளிப்புச் செய்ய முடியாமல் போனால் ஜேர்மனிக்கு 56.5 பில்லியன் யூரோ இழப்பீடு ஏற்படும். அதே போல பிரான்ஸிற்கு 42.4 பில்லியன் யூரோக்கள் இத்தாலிக்கு 37.3 பில்லியன் யூரோக்கள், ஸ்பெயினிற்கு 24.8 பில்லியன் யூரோக்கள், நெதர்லாந்திற்கு 11.9 பில்லியன் யூரோக்கள், பெல்ஜியத்திற்கு 7.2 பில்லியன் யூரோக்கள், ஒஸ்ரியாவிற்கு 5.8 பில்லியன் யூரோக்கள், போர்த்துகல்லிற்கு 1.1 பில்லியன் யூரோக்கள், அயர்லாந்திற்கு 300மில்லியன் யூரோக்கள் இழப்பீடு ஏற்படும். கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த உற்பத்தியும் அதன் வரியற்ற சந்தை வாய்ப்பும் குறையும். இதனால் ஒன்றியத்தின் நிதிச் சந்தையில் பெரும் களேபரம் ஏற்பட வாய்ப்புண்டு. 2012ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடயே ஏற்பட்ட பொருளாதார மற்றும் கடன் நெருக்கடிகளைத் தொடர்ந்து உறுப்பு நாடு ஒன்றில் ஏற்படும் பொருளாதார நடவடிக்கைகளைச் சமாளிக்கும் அனுபவத்தையும் திறனையும் பெற்ற ஒன்றியம் European Stability Mechanism என்னும் பொறி முறையையும் உருவாக்கி அதற்கு உரிய நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது. கிரேக்கம் விலகினாலும் அல்லது தொடர்ந்து உறுப்பினராக இருந்து கொண்டு மேலும் பொருளாதார நெருக்கடியை எதிர் நோக்கினாலும் அதைச் சமாளிக்கக் கூடிய நிலையில் ஒன்றியம் இருக்கின்றது.
டொமினோ வீழ்ச்சி அல்ல சங்கிலி வலு
2012ம் ஆண்டு கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக அதைத் தொடர்ந்து பல நாடுகள் விலக ஒரு டொமினோ விழ்ச்சி ஒன்றியத்தில் உருவாகி ஐரோப்பிய ஒன்றியமே கலைந்து போகும் என்ற அச்ச நிஅலை இருந்தது. ஆனால் இப்போது ஒரு சங்கிலியின் வலுவிழந்த பகுதி கழற்றுப் பட வலுவுள்ள பகுதிகள் இணைந்து சங்கிலி வலுப்பெறுவது போல வலுவிழந்த நாடுகளின் விலகல் ஐரோப்பிய ஒன்றியத்தை வலுவுடையதாக்கும் என்ற நிலை வந்துவிட்டது. கிரேக்கம், அயர்லாந்து, போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளின் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் 440பில்லியன் யூரோக்களுடன் ஐரோப்பிய நிதி நிலைப்பாட்டு வசதியகம் என்ற ஒரு நிதியத்தை ஆரம்பித்தது. இந்தத் தொகை போதாமற் போக அது ஒரு ரில்லியன் யூரோக்களாக அதிகரிக்கப் பட்டது. 2011-ம் ஆண்டு யூரோ நாணய வலய நாடுகளும் பன்னாட்டு நாணய நிதியமும் கிரேக்கத்திற்கு கடன் கொடுத்த வங்கிகளும் மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கூடி கிரேக்கத்தை அதன் அரச செலவுகளைக் குறைக்க நிபந்தனை விதித்து அதனைக் கடன் நெருக்கடியில் இருந்து மீட்க நிதி உதவி செய்தன. கிரேக்கத்தின் அரச கடனில் 50%ஐ கடன் கொடுத்தோர் "வெட்டி எறிவதாகவும்" உடன்பாடு செய்யப்பட்டது. இப்போது மீண்டும் கிரேக்க நாடு தனது கடன்களை வெட்டி எறியும்படி அடம்பிடிக்கின்றது. புதிதாக ஆட்சிக்கு வந்த அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் தான் அரசின் சிக்கன நடவடிக்கைகளை இடை நிறுத்தி தனது தேர்தல் வாக்குறுதிகளான 1. நாட்டின் குறைந்த அளவு ஊதியத்தை அதிகரித்தல், 2. பதவி நிக்கம் செய்யப்பட்ட அரச ஊழியர்களை மீண்டும் சேவையில் அமர்த்தல் 3. ஓய்வூதியங்களை அதிகரித்தல் ஆகியவற்றை நிறைவேற்றப்போவதாகச் சூழுரைத்துள்ளார். தனக்கு ஒரு இடைநிரப்புக் கடன் (bridging loan) மட்டுமே தேவைப்படுவதாக அறிவித்தும் உள்ளார்.
எடு அல்லது விடு (take it or leave it) என்பதல்ல இராசதந்திரம்
நாடுகளுக்கு இடையிலான பேச்சு வார்த்தைகளில் எடு அல்லது விடு என்ற நிலைப்பாடு கடைப்பிடிக்கப்படுவதில்லை. இருதரப்பினரும் விட்டுக் கொடுத்து இருவருக்கும் வெற்றி என்ற நிலையில் பேச்சு வார்த்தையை முடிப்பதுதான் தற்போது பொதுவாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கிரேக்கம் விலகினால் அது மோசமான பொருளாதார நடவடிக்கையைச் சந்திக்க வேண்டி இருக்கும். புதிதாக அது உருவாக்கும் நாணயத்திற்கு உலக நிதிச் சந்தை என்ன பெறுமதியைக் கொடுக்கும் என்பது எதிர்வு கூற முடியாதது. கடன் பளு மிக்க ஒரு நாட்டின் நாணயம் நிச்சயம் ஒரு தாழ்வான நிலையைத்தான் பெறும். இதனால் விலைவாசி அதிகரிப்புப் பெருமளவில் ஏற்படும். அதே வேளை கிரேக்கத்திற்கு கடன் கொடுத்தவர்கள் கொடுத்த கடனைத் திருப்பிப் பெற முடியாத நிலை ஏற்படும். கடன் பட்ட கிரேக்கமும் அதற்குக் கொடுத்தவர்களும் இழப்பீடுகளைச் சந்திப்பர்.
நிலையை மாற்றிய கிரேக்கத்தின் புதிய ஆட்சியாளர்கள்
கிரேக்கத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் ஆரம்பத்தில் ஒரு இரசிய ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தாலும் பின்னர் தனது நிலையை மாற்றிக் கொண்டார். இரசியாவும் புதிய ஆட்சியாளர்களுக்கு தான் கடன் தருவதாக நட்புக்கரமும் நீட்டியது. ஆனால் இரசியாவிடம் தான் கடன் பெறுவது தனது திட்டத்தில் இல்லை என பரிஸ், இலண்டன், பரிஸ் ஆகிய நகரங்களுக்குப் பயணம் மேற்கொண்ட கிரேக்க நிதி அமைச்சர் சொல்லி விட்டார். கிரேக்க வாக்காளர்களின் தீர்ப்பை தாம் கருத்தில் கொள்ள வேண்டும் என மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாட்டுத் தலைவர்கள் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கியும் விட்டனர். கிரேக்கத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் உள்ள பிரச்சனை சுமூகமாகத் தீர்க்கப் படவேண்டும் என அமெரிக்கா கருதுவது போல் தெரிகின்றது. கிரேக்கம் இரசியாவிடமிருந்தோ சீனாவிடமிருந்தோ கடன் பெறுவதை ஐக்கிய அமெரிக்காவோ மேற்கு ஐரோப்பாவோ விரும்பவில்லை. இதனால் சிக்கன நடவடிக்கையை வெறுக்கும் கிரேக்கத்திற்கும் அதற்குக் கடன் கொடுட்துக் கலங்கும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பன்னாட்டு நாணய நிதியம் ஆகியவற்றிக்கு இடையிலான பிரச்சனை தீர்க்கப்பட வாய்ப்புண்டு.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment