Sunday, 18 May 2014

எரிபொருள் அரசியலின் கருப்பொருளும் அமெரிக்காவின் கரிப்பொருளும்

கடந்த நூறு ஆண்டுகளாக எரிபொருள் பிரச்சனை பெரும் பிரச்சனையாகத் தொடர்கின்றது. மசகு எண்ணெய்க்கான மாற்று வழிக்கான தேடலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. எண்ணெய் இன்றி வயல்கள் உழ முடியாது. விளைபொருட்களை எடுத்துச் செல்ல முடியாது. தொழிற்சாலகளில் பொறிகள் இயங்காது. மக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாது. இது எங்கும் தேவைப்படுவது. தட்டுப்பாடானது. மாற்றீடு பெருமளவில் இல்லாதது. உலகம் உடல் என்றால் எரிபொருள் குருதி போன்றது. அதன் தங்கு தடையற்ற ஓட்டம் உலகத்திற்கு அவசியம்.

எரிபொருள் பாதுகாப்புக் கையிருப்பு
அமெரிக்காவில் மட்டும் நாளொன்றிற்கு இரண்டு கோடி பீப்பாய் எண்ணெய்கள் பாவிக்கப்படுகின்றன. உலகில் எண்ணெயின் இருப்பு, உற்பத்தி, விநியோகம் ஆகியவை முக்கியமானதாகும். ஐக்கிய அமெரிக்கா, ஒஸ்ரேலியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடன் மேலும் 24 ஐரோப்பிய நாடுகள் இணைந்து உலக எரிபொருள் திட்டம் ஒன்றை உருவாக்கி 90 நாட்களுக்குத் தேவையான எரிபொரளை எப்போதும் ஒரு பாதுகாப்புக் கையிருப்பாக வைத்திருக்க ஒத்துக் கொன்டன. மற்ற ஆசிய நாடுகள் இதில் இணையவில்லை. சீனா தனக்கென ஒரு கையிருப்பை ஏற்படுத்திக் கொன்டது. வேகமாக வளரும் இந்தியா இதில் கவனம் செலுத்தவில்லை.

எரிபொருள் இல்லாமல் வல்லரசுகள் இல்லை. பன்னாட்டு வாணிபமும் இல்லை.1900ம் ஆண்டு உலக எரிபொருள் தேவையின் 55விழுக்காட்டை நிலக்கரி உற்பத்தி திருப்தி செய்தது. எண்ணெயும் எரிவாயுவும் அப்போது 3 விழுக்காடு பாவனைதான். நூறு ஆண்டுகள் கழித்து உலக எரிபொருள் பாவனையில் நிலக்கரி 25விழுக்காடு, இயற்கை வாயு 23 விழுக்காடு, எண்ணெய் நாற்பது விழுக்காடு. 2000ம் ஆன்டு நாளொன்றுக்கு ஏழரைக்கோடி பீப்பாய்களாக இருந்த உலக எண்ணெய்க் கொள்வனவு 2030ம் ஆண்டு இருமடங்காகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எரிபொருள் உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து.
தற்போது உலகெங்கும் உள்ள அரசியல் பிரச்சனைகளால் நாளொன்றிற்கு முப்பத்தைந்து இலட்சம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டின் நடுப்பகுதியில் லிபியாவின் எண்ணெய் உற்பத்தியில் எண்பது விழுக்காடு பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானிற்கு எதிரான பொருளாதாரத் தடையால் ஈரானின் பெரும்பகுதி எண்ணெய் சந்தைக்குப் போவதில்லை. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி நாளொன்றிகு 15 இலட்சம் பீப்பாய்களால் குறைந்துள்ளது. நைஜீரியாவில் உள்ள அரசியல் பிரச்சனைகளாலும் அங்கு நடக்கும் திருட்டுக்களாலும் நாளொன்றிற்கு மூன்று இலட்சம் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக அளவு எண்ணெய் இருப்பைக் கொண்ட வெனிசுவேலாவில் எண்ணெய் உற்பத்தியில் சரியான முதலீடு இன்றி சரியாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. உலகிலேயே அதிக அளவு எரிவாயுவையும் எண்ணெயையும் உற்பத்தி செய்யும் இரசியாவிற்கு எதிராக ஈரானில் மீது விதிக்கப்பட்டது போன்ற மிக இறுக்கமான பொருளாதாரத் தடையை ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் விதிக்கும் அபாயம் உண்டு.

எண்ணெய் விநியோகம்: கவலைப்படும் சீனாவும் கருத்தில் கொள்ளாத இந்தியாவும்!
உலகின் எரிபொருள் விநியோகம் தடையின்றி நடப்பதற்கு பலநாடுகளும் தமது பாதுகாப்புச் செலவில் பெரும்பகுதியை ஒதுக்கியுள்ளன. உலகிலேயே அதிக அளவு கடற்படைக்கப்பல்கள் நடமாடும் பகுதியாக மத்திய தரைக்கடல் இருக்கின்றது ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய அமெரிக்காவும் தமக்கான எரிபொருள் விநியோகம் தடையின்றி நடப்பதை உறுதி செய்துள்ளன. உலகிலேயே எரிபொருள் விநியோகத் தடையால் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக ஆசிய நாடுகள் இருக்கின்றன. எரிபொருள் பாவனையைப் பொறுத்த வரை சீனா உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாகும். சீனாவின் இருப்பிற்கு தடையற்ற எரி பொருள் வழங்கல் முக்கிய மாகும். சீனா தனக்கான எரிபொருள் வழங்கு பாதையை பல மாற்றீடு வழிகள் மூலம் பூர்த்தி செய்ய முயற்சிக்கிறது. மலாக்கா நீரிணை, ஹோமஸ் நீரிணை, செங்கடல் ஆகிய கடற்பிராந்தியங்களில் வைத்து சீனாவிற்கான எரிபொருள் விநியோகங்கள் தடை செய்யப் படலாம். இதற்கு மாற்றீடாக சீனா மியன்மார்(பர்மா) ஊடாக ஒரு தரைவழி எரிபொருள் விநியோகம் செய்யும் வழியைத் திறக்க முயல்கிறது. அடுத்த மாற்றீடாக பாக்கிஸ்த்தானின் குவாடர் துறைமுகத்தில் இருந்து பாக்கிஸ்த்தானூடாக ஒரு தரைவழி எரிபொருள் விநியோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த பாக்கிஸ்தானூடான விநியோகத்தில் இன்னும் ஒரு மாற்றீடாக ஆப்கானிஸ்தானூடான இன்னும் ஓர் எரிபொருள் விநியோகப் பாதையை சீனா உருவாக்க விரும்புகிறது. ஆப்கானிஸ்த்தானின் அமு தர்யா பள்ளத்தாக்கில் எரிபொருள் ஆய்வுப் பணியையும் சீனாவின் China National Petroleum Corp நிறுவனம் செய்கிறது.  சீனா பொருளாதார ரீதியில் ஆப்கானைச் சுரண்டுவதை அமெரிக்கா விரும்புகிறது. சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் அது அமெரிக்காவிற்கும் நன்மையாகும். சீனா அமெரிக்காவின் மூன்றாவது பெரிய சந்தையாகும். இதனால் சீனப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் அமெரிக்காவின் உற்பத்தித் துறை, விவசாயத் துறை, சேவைத் துறை ஆகியவற்றின் சீனாவிற்கான ஏற்றுமதி அதிகரிக்கும். ஆசியாவிற்கான எரிபொருள் விநியோகத்தில் 40 விழுக்காடு ஹோமஸ் நீரிணையூடாக நடைபெறுகின்றது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அமெரிக்கா தனது ஐந்தாவது கடற்படைப் பிரிவை அங்கு நிலைகொள்ளச் செய்வதுடன் பல நாடுகளுடன் இணைந்து அங்கு அடிக்கடி படை ஒத்திகையும் செய்யும். தனக்கான எரிபொருள் தொடர் விநியோகத்தை உறுதி செய்ய இந்தியா எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

எண்ணெய் விலையைச்சரிக்கும் அமெரிக்காவின் கரிப்பொருள்
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து உலக எரிபொருள் விலையில் சீனாவினதும் இந்தியாவினதும் கொள்வனவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. 2008ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார நெருக்கடிக்கு இதுவும் ஒரு காரணியாக அமைந்தது. ஈரான், இரசியா, நைஜீரியா, வெனிசுவேலா, ஆகிய நாடுகளில் பிரச்சனை ஏற்பட்ட போதும் அண்மைக்காலங்களாக எரிபொருள் விலை வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக உறுதியாக இருந்த எண்ணெய் விலை 2014ம் ஆண்டு ஏப்ரம் மாதம் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 110 டொலர்களாக இருந்து  மே மாதம் 6ம் திகதி 107 டொலர்களாகக் குறைந்தது. இது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. இதன் பின்னணிச் சூத்திரதாரியாக அமெரிக்கா இருக்கின்றது. 2011ம் ஆண்டு அரபு வசந்தம் ஆரம்பித்ததில் இருந்து அமெரிக்கா தன்னிடம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஷேல் என்னும் திண்ம எரிவாயு உற்பத்தியையும் ஏற்றுமதியையும் சடுதியாக அதிகரித்தது.  அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள ஷேல் என்னும் கரிப்பொருள் இப்போது உலகச் சந்தையில் எரி பொருள் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக எரிபொருள் விலையை அமெரிக்கா உலகச் சந்தையில் உறுதியாக வைத்திருந்தது. சீனாவினதும் இந்தியாவினதும் அதிகரித்த எரிபொருள் கொள்வனவால் உலகில் எரிபொருள் விலை அதிகரித்த போது இரசியாவே பெரிதும் பயனடைந்தது. தன் ஏற்றுமதி வருமானத்தை வைத்து உலக அரங்கில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் வலிமையை இரசியா பெற்றது. அது உக்ரேனில் வாலாட்டத் தொடங்கியவுடன் அமெரிக்கா தனது காய்களை நகர்தத் தொடங்கியது. ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 120 டொலர்களுக்கு மேல் இருப்பது இரசியாவிற்குப் பெரிதும் வாய்ப்பாகும். இதை விழுத்த அமெரிக்காவும் கனடாவும் தமது திண்ம எரிவாயு உற்பத்தியை அதிகரித்தன. உக்ரேனில் நிலைமை உக்கிரமடைந்தால் உலகச் சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் ஏறும் அபாயம் உண்டு. பின்னர் எண்ணெய் விலை 70 டொலர்கள்வரை குறையலாம். இது இரசியாவின் முதுகெலும்பிற்கே ஆபத்தாக அமையலாம்.





என்ன இந்த ஷேல் எரிவாயு?
ஷேல் எரிவாயு என்பது ஷேல் எனப்படும்  களிமண் பாறைகளிடையே காணப்படும் (பெரும்பாலும் மீதேன்) வாயுவாகும். மற்ற வாயுக்கள் துளைக்கக் கூடிய பாறைகளுக்குள் இருந்து எடுக்கப்படும் வாயுவாகும். ஷேல் வாயு துளைக்கக் கடினமான பாறைகளுக்கிடையில் இருக்கும். நீர் மூலம் துளையிடல் (hydraulic fracturing) என்னும் முறைமையைப் பயன்படுத்தி பாறைகளைத் துளைத்து ஷேல் வாயு அகழ்ந்து எடுக்கப்படும். 

ஷேல் வாயு அரசியல்
இரசியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு உக்ரேனூடாக செய்யப்படும் எரிவாயு விநியோகத்தைக் குழப்பி ஐரோப்பாவிற்கு அமெரிக்காவில் இருந்து ஷேல் வாயுவை ஐரோப்பாவிற்கு விநியோகிக்க அமெரிக்க ஷேல் வாயு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் முயல்கின்றன. இதனால் உருவானதுதான் உக்ரேன் பிரச்சனை என்கின்றது இரசிய ஊடகம் ஒன்று. அமெரிக்கத் துணைக் குடியரசுத் தலைவரின் மகன் ஹண்டர் பிடன் உக்ரேனின் தனியார் எரிவாயு நிறுவனமான பரிஸ்மா ஹோல்டிங் இன்   இயக்குனர் சபைக்கு அண்மையில் நியமிக்கப்பட்டதை ஆதாரமாக அந்த இரசிய ஊடகம் குறிப்பிடுகின்றது. அத்துடன் துணை அதிபர் ஹண்டர் பிடனுக்கும் அமெரிக்க அரசத் துறைச் செயலர் ஜோன் கெரியின் பெறா மகனுக்கும் உள்ள தொழில் முறைத் தொடர்புகளை அம்பலப்படுத்தியுள்ளது பிரித்தானிய கார்டியன் பத்திரிகை. இரசியாவிற்கும் உக்ரேனிற்கும் இடையிலான பிரச்சனையால் உக்ரேனில் எரிபொருள் விலை கடும் அதிகரிப்பைக் கண்டது. இதனால் உள் நாட்டில் எரிபொருள் வாயு உற்பத்தி செய்யும்  பரிஸ்மா ஹோல்டிங் நிறுவனம் பெரும் இலாபம் ஈட்டுகின்றது.

மூச்சாகி நின்றோர்க்கு வீச்சாகி நிற்போம்

இரத்த ஆறு கடந்து  
கண்ணீர்க் கடல் நீந்தி
தீயாகத் தீயில் கருகி
துரோகச் சூறவளியில் சுழன்று
இளமை துறந்து
உறவு இழந்து
குடும்ப இனிமை இழந்து
பள்ளி பிரிந்து
நட்பு மறந்து
விடுதலை வேள்வியில்
மூச்சாகி நின்றோர்க்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி

கத்தும் கடல் அலையாடி
வேகப் படகுகள் பல ஓட்டி
சுற்றும் பகை விரட்டி
தாயக் கடல் தமிழன் ஆள
விடுதலை வேள்வியில்
மூச்சாகி நின்றோர்க்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி

குண்டு மழையிடை முன்னோடி
செங்குருதிப் புனலாடி
பிஞ்சுக் கால்களுடன்
கட்டாந்தரை நடந்து
தாயக மண் காக்க
விடுதலை வேள்வியில்
மூச்சாகி நின்றோர்க்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி

துணையென வந்து
கால்வாரிய 
துரோகிகள் மத்தியிலே
காக்கவென வந்து 
கழுத்தறுத்த இந்தியாவிற்கு
எதிராகக் களமாடி
இனமானம் காக்க
விடுதலை வேள்வியில்
மூச்சாகி நின்றோர்க்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி

சாட்சியமில்லா வதைகள்
சரணடையவந்தோர் கொலைகள்
போரில் தப்பியோர் உயிருடன் புதையல்
இத்தனை கொடுமைகள் மத்தியில்
பிஞ்சுத்தோள் கொடுது
தாயக விடுதலைக்காக
மூச்சாகி நின்றோர்க்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி

பல கோடி செலவழித்து
பல்லாயிரம் சாகடித்து
பாலர்களைச் சிதறடித்து
பாவியர் செய்த போரில்
உணவின்றி உறக்கமின்றி
உரிய மருந்தின்றி
தேசிய உணர்வோடு களமாடி
மூச்சாகி நின்றோர்க்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி

பூகம்பத்துள் பூவென
சூறாவளிக்குள் சுடரென
புயலிடைப் பறவையேன
துயரங்கள் பல சுமந்து
தம் தாகம் என்றும்
தமிழீழத் தாயகம் என முழங்கி
மூச்சாகி நின்றோர்க்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி


யாரோ எவனோ தன் 
ஒரு தாலி அறுத்தமைக்கு
ஒரு இலட்சம் தாலி பறித்தெடுத்த
சேலையணிந்த இத்தாலி முசோலினியின்
சதியை எதிர்த்து எமக்காக
மூச்சாகி நின்றோர்க்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி

சைட்டிஸ்ஸுக்கும் வழியில்லாதவன்
விஸ்கிக்கு ஆசைப்பட்டதுபோல்
இறந்தவர்க்கு அழக்கூட உரிமையில்லா
தேசியக் கூட்டமைப்பு
குடியரசு வேட்பாளர் 
விக்கி ஐயா என்கின்றது
இந்த மாயவாதிகளை நம்பாமல்
மூச்சாகி நின்றோர்க்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி

கைப்பேசிக்காரர்கள் கைகளில் ஊடகங்கள் இப்போ
பூடகமாகப் பொய்யுரைக்கும் ஊடகங்களை நம்பாமல்
தாயகம் தேசியம் தன்னாட்சி
என்னும் மும்மணிக்காய் 
மூச்சாகி நின்ற கணமணிகளுக்கு
வீச்சாகி நிற்போம்
தொடர்வோம் அவர் பணி

Saturday, 17 May 2014

நந்திக்கடல் எம் அந்திக் கடலல்ல‌

குப்புற விழுந்தாலும்
உன் நகர்வு
முன் நோக்கியதே
பின்புறம் விழுந்தாலும்
உன் பார்வை மேல் நோக்கியதே
தளராத மனத்தின்
பணியாத துணிவு
குலையாத ஒற்றுமையின்
ஓயாத போராட்டம்
கருகிய சாம்பலிலும்
உரம் தேடும்

சிறுவிதையின் தனிவேர்
பாறையையும் பிளக்கும்
பாதையையும் வகுக்கும்
அன்று சாம்பல் மேட்டில்
விடுதலை உயிர்க்கும்
கிட்டும் எங்கள் தேசியம்
எட்டும் எங்கள் தாயகம்
மொட்டாக மலரும் தன்னாட்சி
                                                                                 
பூவும் கருக பிஞ்சும் கருக
பாதகர் திரள பாவியர் கூட
தாழ்ந்தோம் வீழ்ந்தோம் - ஆனால்
தளரோம் துவளோம்
குனியோம் எழுவோம்
பூந்ததோட்டம் ஒன்று
அன்று சாம்பல் மேடானாது

முதுவேனில் காலத்தில்
விழுந்த வித்துக்களுக்கு
இலை உதிர்காலத்தில்
விழுந்த இலைகள் உரங்களாக‌
இளவேனிலில் மீண்டும்
விதைகள் முளைத்தெழும்
சாம்பல் மேட்டில்
தளராத் தொடர் முயற்ச்சிகள்
மழைத்துளிகளாய்ப் பொழிய‌
மீண்டும் உயிர்த்தெழும் விடுதலைப் போர்
கிட்டும் எங்கள் தேசியம்
எட்டும் எங்கள் தாயகம்
மொட்டாக மலரும் தன்னாட்சி
 
வீழ்ந்தோமா தாழ்ந்தோமா
சரிந்தோமா சலித்தோமா
இறைப்பவன் இருக்கும்வரை
வாய்க்கால்கள் வற்றுவதில்லை
முயற்ச்சிகள் தொடரும்வரை
விடுதலை வேட்கை தணியாதவரை
கிட்டும் எங்கள் தேசியம்
எட்டும் எங்கள் தாயகம்
மொட்டாக மலரும் தன்னாட்சி
 
நந்திக்கடல் எம் அந்திக் கடலல்ல‌
முள்ளிவாய்க்கால் எம் கொள்ளிக்காடல்ல‌
நெஞ்சகம் தட்டுவோம்
வஞ்சகம் வெல்வோம்
உண்மைகள் வெளிக்கொணர்வோம்
பாவியரைத் தண்டிப்போம்
பணியோம் குனியோம்
துணிவோம் எழுவோம்
சாம்பல் மேட்டிலிருந்து
சாதனைகள் தொடர்வோம்
கிட்டும் எங்கள் தேசியம்
எட்டும் எங்க்ள் தாயகம்
மொட்டாக மலரும் தன்னாட்சி 
 
தளைகள் உடைப்போம்
களைகள் அழிப்போம்
களமது புகுவோம்
நிலமது மீட்போம்
சாம்பல் மேட்டை
சாதனை மேடாக்குவோம்
முள்ளிவாய்க்காலை
முதற்கால் ஆக்குவோம்
கிட்டும் எங்கள் தேசியம்
எட்டும் எங்க்ள் தாயகம்
மொட்டாக மலரும் தன்னாட்சி 

Tuesday, 13 May 2014

இளம் பெண்கள் படிக்கக் கூடாது என்று அவர்களைக் கடத்திய பொக்கோ ஹரம்

புனித இசுலாமிய மதத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நைஜீரியாவில் பொக்கோ ஹரம் என்னும் அமைப்பு செயற்படுகின்றது. சுனி முஸ்லிம்களின் ஒரு பிரிவாகக் கருதப்படும் இந்த அமைப்பு தம்மை மிகவும் மரபுவழி இசுலாமியர்கள் என்றும் இசுலாமிய விதிகளைக் கடுமையாகக் கடைப்பிடிப்பவர்கள் என்றும் தூய்மையானவர்கள் என்றும் அடிப்படைவாதிகள் என்றும் பல அடைமொழிகளால் அழைக்கின்றார்கள். நைஜீரியா முழுவதும் இசுலாமிய ஷரியா சட்டம் நடைமுறைப்படுத்தப் பட வேண்டும் என இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

உலகப் பொருளாதார மாநாடு\
எண்ணெய் வளம் மிக்க நைஜிரியாவில் உலகப் பொருளாதார மாநாடு நடக்கும் வேளையில் அங்கு இளம் பெண் பிள்ளைகள் இருநூற்றுக்கு மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். நைஜீரிய அரசு கடத்தப்பட்ட பெண் பிள்ளைகளிலும் பார்க்க பொருளாதார மாநாட்டில் அதிக கவனம் செலுத்துவதாக வட நைஜீரிய மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். உலகம் தொலைந்து போன மலேசிய விமானத்தைத் தேடுவதில் காட்டும் அக்கறை கடத்தப்பட்ட பெண்பிள்ளைகளை மீட்பதில் காட்டவில்லை. முன்னூறு மக்கள் கொல்லப்பட்ட தென் கொரிய படகு விபத்திற்காக தலைமை அமைச்சர் பதவி விலக முன்வந்தார். நைஜீரியாவில் அப்படி எதுவும் நடக்கவில்லை. நைஜீரய அதிபர் தனது நாடு ஆபிரிக்காவிலேயே பொருளாதார வலுமிக்க நாடு என உலகிற்குக் காட்ட முயல்கின்றார்.

வேறு பெயர்.
நைஜீரியாவின் வடக்குப் பகுதிகளில் வாழ்பவர்கள் இவர்களை பொக்கோ ஹரம் என அழைக்கின்றனர். ஆனால் இவர்களின் அமைப்பின் உண்மையான பெயர் "புனிதப் போரையும் இறைதூதுவரின் போதனைகளையும் பரப்புரை செய்யும் மக்கள்" என்பதாகும். பொக்கோ ஹரம் என்பது போலித் தடை எனப் பொருள்படும். தாம் போலிகள் எனக் கருதுபவற்றைத் தடை செய்யும் அமைப்பு இது. வட நைஜீரியா, தென் கமரூன், நிகர் ஆகிய நாடுகளில் இவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அபுபக்கர் ஷெகௌ (Abubakar Shekau) இந்த அமைப்பின் தலைவர் எனச் சொல்லப்படுகின்றது. இவர்களுக்குத் தேவையான நிதியை இவர்கள் வங்கிக் கொள்ளைகள் மூலம் பெற்றதாகச் சொல்லப்படுகின்றது. சுனி முஸ்லிம்கள் வாழும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து இவர்களுக்கு நிதி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

நவீனம் வேண்டாம்.
பொக்கோ ஹரம் அமைப்பினர் பல இசுலாமியர்களையும் கிறித்தவர்களையும் கண்டபடி கொல்கின்றனர். நவீனமான எதுவும் இவர்களுக்குப் பிடிப்பதில்லை. மத சார்பின்மை என்ற சொல்லைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். அல்லாவின் போதனைகளை மீறி நடப்பவர்கள் எல்லை மீறியவர்களாகும் என்ற குரான் வாசகம் இவர்களின் தாரக மந்திரமாக உள்ளது. கார் குண்டு வெடிப்புக்கள், தற்கொடைக் குண்டு வெடிப்புக்கள் போன்றவற்றை நிறையச் செய்கின்றார்கள். 2014-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 1,500இற்கு மேற்பட்டவர்களை கொன்றுள்ளனர். ஆசியாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நைஜீரியாவில் பொக்கோ ஹரம் அமைப்பினர் மிகவும் அச்சத்தை உருவாக்கியுள்ளார்கள்.

12 வயதுக்கு மேல் படிக்கக் கூடாது.
நைஜீரிய அரசு இசுலாமிய விதிகளுக்கு எதிராகச் செயற்படுவதாக பொக்கோ ஹரம் அமைப்பினர் ஆத்திரம் அடைந்துள்ளார்கள். இவர்கள்  மேற்கத்தைய கலாச்சாரம், சமூக முறைமை போன்றவை தடைசெய்யப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.  பெண்கள் 12 வயதிற்குப் பிறகு பாடசாலைக்குச் செல்லக் கூடாது என்ற கொள்கையால் உந்தப்பட்டு பொக்கோ ஹரம் அமைப்பினர் அவர்களைக் கடத்திச் சென்று கட்டாயட் திருமணம் செய்து வைக்கிறார்கள்.


பொக்கோ ஹரம் அமைப்பின் வரலாறு
2002-ம் ஆண்டு மொஹமட் யூசுப் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட பொக்கோ ஹரம் அமைப்பு ஆரம்பத்தில் இசுலாமிய மத போதனையை ஏழைப் பிள்ளைகளுக்கு செய்து வந்தது. பின்னர் இது இசுலாமிய அரசு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் மத்தியில் பரப்புரை செய்தது.  பின்னர் 2009-ம் ஆண்டு படைக்கலன்கள் ஏந்திய போராட்டத்தை ஆரம்பித்தது. மோட்டார் சைக்கிளில் துப்பாக்கியுடன் சென்று தாக்குதல் நடத்துவதை இவர்கள் வழமையாகக் கொண்டிருந்தனர். பல காவல் நிலையங்கள் மீது தாக்குதல்கல் நடத்தியது. 2009 ஆண்டு நைஜீரியப் படையினர் இந்த அமைப்பின் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடாத்தி அதன் தலைவரைக் கொன்றதுடன் பலரைக் கைதும் செய்தனர். கொல்லப்பட்ட தலைவர் மொஹமட் யூசுப்பின் உடலின் படத்தை தொலைக்காட்சியில் காட்டிய நைஜீரிய அரசு பொக்கோ ஹரம் அமைப்பு ஒழித்துக் கட்டப்பட்டது என மக்களுக்கு அறிவித்தனர்.  2010-ம் ஆண்டு இவர்கள் மீண்டும் அபுபக்கர் செக்கௌ தலைமையின் கீழ் திரண்டு எழுந்தனர். சிறைச் சாலையின் மீது தாக்குதல் நடாத்தி தமது அமைப்பின் உறுப்பினர்களை விடுவித்தனர். 2010-ம் ஆண்டு புத்தாண்டு தினத்திலும் 2011 நத்தார் தினத்திலும் இவர்கள் கிறித்தவர்கள் மீது தாக்குதல்கள் நடாத்திப் பலரைக் கொன்றனர். தம்மீது நடாத்திய தாக்குதல்களுக்கு அவை பழிவாங்கல்கள் என்றனர் பொக்கோ ஹரம் அமைப்பினர். 2011-ம் ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்க வெளியுறவுத் துறை பொக்கோ ஹரம் அமைப்பு தமக்கு எதிரானது என அறிவித்தனர். அத்துடன் பொக்கோ ஹரம் அமைப்பிற்கும் அல் கெய்தாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும் அமெரிக்க அரசு கருத்து வெளியிட்டது. 2013-ம் ஆண்டு ஒரு இசுலாமிய வழிபாட்டு நிலையம் மீது தற்கொடைக் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டனர். பல இசுலாமிய மத போதகர்களையும் தலைவர்களையும் இலக்கு வைத்துப் பல தாக்குதல்கள் 2012, 2013-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது. 2013-ம் ஆண்டில் கமரூன் நாட்டில் இவர்கள் தமது முதல் தாக்குதலை மேற்கொண்டனர்.

பொக்கோ ஹரம் ஓய்வதில்லை
2013-ம் ஆண்டு மே மாதம் நைஜீரியாவின் பாமா நகரில் பொக்கோ ஹரம் உறுப்பினர்கள் நைஜீரிய அரச படை முகாம், காவல் நிலையம், சிறைச்சாலை ஆகியவற்றின் மீது பெரும் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டனர். நைஜீரியப் படையினரின் மனைவிகளையும் பிள்ளைகளையும் இதில் பொக்கோ ஹரம் அமைப்பினர் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். தமது உறுப்பினர்களின் மனைவிகள் பிள்ளைகளைப் படையினர் கைது செய்வதற்கு தாம் பழிவாங்குவதாகத் தெரிவித்தனர். இத்தாக்குதல் பொக்கோ ஹரம் அமைப்பினர் தமது தாக்குதிறன், படைக்கலன் போன்றவற்றை அதிகரித்துள்ளனர் என்பதைக் காட்டியது. நைஜீரிய அரசிடம் இருந்து முன்று மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பணத்தைப் பெற்றுக் கொண்டு தம்மிடமிருந்த கைதிகளை விடுதலை செய்தனர். மாலியில் பிரெஞ்சுப் படையினர் தலையிட்டதற்குப் பழிவாங்க ஒரு பிரெஞ்சுக் குடும்பத்தையும் பொக்கோ ஹரம் அமைப்பினர் கைப்பற்றி பின்னர் ஒரு மாதத்தின் பின்னர் விடுதலை செய்தனர்.

மேற்கத்தையக் கல்வி முறைமைக்கு எதிரான போர்
கடந்த சில மாதங்களாக பொக்கோ ஹரம் அமைப்பினர் மேற்கத்தையக் கல்வி முறைமைக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கி உள்ளனர். மேற்கத்தைய கல்வி முறைமையை ஒழித்து இசுலாமியக் கல்வி முறைமை நாட்டில் அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அதிலும் பெண்கள் கல்வியை நிறுத்திவிட்டு போய் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பொக்கோ ஹரம் அமைப்பினர் மிரட்டுவதாக மேற்கத்தைய ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன. ஏப்ரல் மாதம் 16-ம் திகதி இருநூற்றிற்கும் மேற்பட்ட 12இற்கும் 15இற்கும் இடைப்பட்ட வயதுப் பெண் பிள்ளைகளை பொக்கோ ஹரம் அமைப்பினர் நைஜீரிய சிபோக் நகரப் பாடசாலைகளில் இருந்து கடத்திச் சென்றதாகச் சொல்லப்படுகின்றது. அதற்கு முன்னர் 59 பாடசானை ஆண் மாணவர்களை பொக்கோ ஹரம் அமைப்பினர் கொன்றாதாகவும் செய்திகள் வெளி வந்தன. கடத்தப்பட்ட பெண்களை தாம் மீட்டதாக முதலில் நைஜீரிய அரசு செய்தி வெளிவிட்டது. பின்னர் அது உண்மையல்ல எனச் செய்திகள் வெளியாகின. ஒன்பது வயதுச் சிறுமிகள் கூடக் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

பெண்கள் விற்பனைக்கு
பொக்கோ ஹரம் அமைப்பினர் தம்மிடம் உள்ள 276 இளம் பெண்களை விற்பனை செய்யப் போவதாக காணொளி மூலம் தெரிவித்ததாக  ஏஎஃப்பி செய்தி நிறுவனம் செய்தி வெளியுட்டுள்ளது. மே மாதம 6-ம் திகதி மேலும் 14 இளம் பெண்கள் கடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன. தம்மிடம் உள்ள பிள்ளைகளை விற்கும்படி அல்லா தமக்கு உத்தரவிட்டுள்ளதாக பொக்கோ ஹரம் அமைப்பினர் தெரிவித்ததாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கடத்தப் பட்ட பல பெண்கள் பொக்கோ ஹரம் அமைப்பின் உறுப்பினர்களை வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்துள்ளனர் என சிபிசி நியூஸ் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் அச்செய்தியில் ஐம்பது இளம் பெண்கள் தப்பி ஓடிவிட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது. நைஜீரிய அதிபர் ஜோனார்த்தன் குட்லக் கிறித்தவர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட தென் நைஜீரியாவில் வாழ்கின்றார் வட நைஜீரியர்கள் அடக்கு முறைகளின் கீழ் அல்லல் படுவதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை என வட நைஜீரியர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள். பெண்பிள்ளைகளைக் கடத்தி வைத்திருக்கும் இடங்கள் நைஜீரியப் படையினர் செல்வதற்கும் கடினமான பெரிய காட்டுப் பகுதியாகும். கடத்தப்பட்ட பெண்கள் பன்னிரண்டு அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்படுகின்றார்கள். சாட், கமரூன் நாடுகளில் விற்பனை நடக்கிறதாம்.

கல்லாத சாத்தான் சொல்லும் குரான்
பொக்கோ ஹரம் அமைப்பின் தலைவர் அபூபக்கர் ஷெக்கௌ படித்தவரல்லர். அவர் இசுலாமிய மார்க்கத்தைப் பற்றி கற்றவரும் அல்லர். உணர்ந்தவரும் அல்லர். அந்தப் புனித மார்க்கத்திற்கோ அல்லது அதன் போதனைகளுக்கோ  வியாக்கியானக் கொடுக்கும் அருகதை அற்றவர் அபூபக்கர். நைஜீரியாவின் வட கிழக்குப் பகுதியில் கமரூன் நாட்டு எல்லையில் இருக்கும் கம்போரு அங்காலா நகரில் உள்ள சந்தைப் பகுதியில் பொது மக்கள் மீது பொக்கோ ஹரம் அமைப்பினர் தாக்குதல் நடத்தி முன்னூற்றிற்கு மேற்பட்டவர்களைக் கொன்றனர். கம்போரு அங்கால நகரில் இருந்த படையினர் கடத்தப்பட்ட பெண்களைத் தேடும் பணிக்கு அனுப்பப்பட்டதால் நகரம் பாதுகாப்பின்றி இருந்தது. கடத்தப்பட்ட பெண்களில் இருந்த கிருத்தவர்கள் இசுலாமிய மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.


கைதிகள் பரிமாற்றம்
நைஜீரியா கைது செய்து வைத்திருக்கும் தமது அமைப்பின் உறுப்பினர்களை விடுவித்தால் தம்மிடம் இருக்கும் பெண்களை விடுதலை செய்வதாக பொக்கோ ஹரம் அமைப்புத் தெரிவித்தது. இது பற்றி கருத்துத் தெரிவித்த நைஜீரிய அரசு தாம் பெண்களை விடுவிக்க எல்லா வழிவகைகளையும் பின்பற்றுவோம் என்றது.

தலையிடும் அமெரிக்கா
நைஜீரியாவில் அரச படைகளுக்கு ஆலோசனை வழங்க தனது படைத்துறை நிபுணர்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. அமெரிக்க விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன . கடத்தப்பட்ட பெண் பிள்ளை விடுவிக்க தன்னாலான எல்லா உதவிகளையும்செய்வதாக பராக் ஒபாமா அறிவித்துள்ளார். என்கெங்கு எண்ணெய் வளம் உண்டோ அங்கெல்லாம் அநியாயம் நடந்தால் (சிலசமயம் அநியாயம் திட்டமிட்டு உருவாக்கப்படும்) அங்கு சென்று நியாயத்தைஅமெரிக்கா நிலைநாட்டும். 

Monday, 12 May 2014

மோடியின் பிரச்சாரக் குழு பொய்களை அவிழ்த்து விட்டதா?

பாரதிய ஜனதாக் கட்சியின் மக்களவைத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சுஸ்மா சுவராஜ், மாநிலங்களவையின் எதிர்க் கட்சித் தலைவர்  அருண் ஜெட்லி, நரேந்திர மோடியின் வலது கரமான அமித் ஷா. பாஜகவின் தலைமைப் பேச்சாளர் சுதன்ஷு திரிவேதி ஆகியோர் தலைமையில் உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் பயின்ற விற்பன்னர்கள் நாற்பது பேர் கொண்ட ஒரு குழு மோடியின் தேர்தல் பரப்புரையைச் செய்தது. இந்தக் குழுவின் கீழ் இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் 19 குழுக்களாக சமூக வலைத்தளங்கள் உட்படப் பல முனைகளில் தமது பரப்புரைகளைச் செய்தனர்.

இந்தியத் தேர்தலில் முதல் முறையாக சமூக வலைத்தளங்களும் இலத்திரனிய ஊடகங்களும் நவீன தொழில் நுட்பங்களும் 2014-ம் ஆண்டு தேர்தலில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. மோடியின் பரப்புரைப் பொறி இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கின்றது.மோடியே ஒரு நவீன மயமானவர். இந்தியாவில் முதல் இலத்திரனியல் நாட்குறிப்பைப் பாவித்த அரசியல்வாதி மோடி எனப்படுகின்றது.  பராக ஒபாமாவின் தேர்தல் உத்திகளை மோடியின் பரப்புரைக் குழுவினர் பின்பற்றுகின்றனர்.

பியுஷ் கோயல், அஜய் சிங் ஆகிய இரு நிபுணர்கள் கட்சியின் creative and media strategy இற்குப் பொறுப்பாக இருக்கின்றனர். மோடியின் பரப்புரைக் குழுவினர் ஒராண்டுக்கு முன்னரே நன்கு திட்டமிட்டு பல நிலைகளாக தமது பரப்புரையை வகுத்து மோடியைச் "சந்தைப்படுத்தினர்". இவர்களுக்கான தேர்வுக் களமாக ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல்கள் அமைந்தன. அவற்றில் பெற்ற வெற்றிகளையும் தோல்விகளையும் நன்கு மீளாய்வு செய்து தமது பரப்புரையை மேலும் சீர் செய்தனர்.

கவித்துவ மோடி
Minimum government. Maximum governance போன்ற கவர்ச்சிகரமான வாசகங்கள் உருவாக்கப்பட்டன. மோடியின் கவித்துவமும் நாவன்மையும் மேலதிக பரப்புரைக் கருவிகளாகின. கிராமங்களுக்கு பட்டி தொட்டிய் எல்லாம் சென்று பரப்புரை செய்ய ஜீ.பி.எஸ் வழிகாட்டிகள் பொருத்தப்பட்ட வண்டிகள் பல பயன்படுத்தப்பட்டன. ராகுல் காந்தி உட்பட காங்கிரசுப் பிரமுகர்கள் கூட்டங்களில் ஆற்றும் உரையின் முக்கிய பகுதிகள் மோடி வானில் பறந்து கொண்டிருக்கும் போது கூட அனுப்பப்பட்டன.

Virtual Modi
மோடி ஒரு இடத்தில் ஆற்றும் உரை மாநிலத்தின் வேறு இடங்களில் இருக்கும் மக்கள் 3Dயில் பார்க்கக் கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தொலைக்காட்சி விவாதத்தில் காங்கிரசுக் கட்சியினர் வறிய மக்கள் வாழும் இந்தியாவில் மோடி பல கோடிகளைச் செலவழித்து தேர்தல் பரப்புரை செய்கின்றார் என்றால் அதற்குப் பதிலடியாக பாஜகவினர் காங்கிரசின் ஆட்சியால் இந்தியாவின் மக்கள் வறுமையால் இருக்கின்றார்கள் எனப் பதிலடி கொடுப்பார்கள்.

பேஸ்புக்கில் நரேந்திர மோடியின் பக்கத்தை 14 மில்லியன் பேர் விரும்பியுள்ளனர். இது நரேந்திர மோடியின்  தகவல் தொழிநுட்ப நிபுணர்களால் போலியாக உருவாக்கப்பட்டது என கோப்ரா போஸ்ட் என்னும் புலனாய்வு ஊடகம் அம்பலப்படுத்தியுள்ளது.

நமோ என்பது வடமொழியில் ஒரு புனித சொல். மந்திரங்களில் அதிகம் இடம்பெறும் சொல். நரேந்திர மோடியின் பெயரை நமோ எனச் சுருக்கி அதை ஒரு விற்பன உருவாக (brand) மோடியின் பரப்புரைக் குழுவினர் மாற்றிவிட்டனர்.

மோடி தேர்தல் மேடைகளில் உரையாற்றும் போது, ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கும் போது பின்னணியில் என்ன தெரிய வேண்டும் என்பது நன்கு திட்டமிடப்பட்டு இருந்தது. மோடியின் மார்பின் எப்போதும் அவரது தாமரைச் சின்னம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

குஜராத்தை இந்தியாவின் முன்னணி மாநிலமாக மோடி மாற்றினார் என மோடியின் பரப்புரைக் குழுவினர் பரப்புரை செய்தனர். குஜராத்தை மாற்றிய மோடியை இந்தியாவை மாற்ற அனுமதியுங்கள் என்பது அவர்களின் முக்கிய பரப்புரை வாசகமாக இருந்தது. ஆனால் இந்தியப் புள்ளி விபரங்களை வைத்து இதை உறுதி செய்ய முடியவில்லை. பிரித்தானியாவைச் சேர்ந்த இரு பொருளாதார நிபுணர்கள் குஜராத்திலும் பார்க்க மும்பாயைத் தலைநகராகக் கொண்ட மகராஸ்ட்ராவும் தமிழ்நாடும் பொருளாதாரத்தீல் சிறப்பாகச் செயற்படுகின்றன என்கின்றனர். குஜராத் வறுமை ஒழிப்பில் மிகவும் பின்தங்கி இருக்கிறது. பழங்குடியினர், இஸ்லாமிய சமுதாயத்தினர் மிகவும் வறியவர்களாக இருக்கின்றனர். குழந்தைகள் இறப்பு விகிதம் குஜராத்தில் அதிகமாக இருக்கிறது, கிராமப்புறத்தில் 67 விழுக்காடு மக்களுக்கு கழிப்பிட வசதிகள் இல்லை. குஜராத்தில் தொழிலாளர்களுக்கான ஊதியமும் கீழ் நிலையில் இருக்கின்றது

மோடியும் பாரதிய ஜனதாக் கட்சியும் ஊழலற்றவர்கள் எனப் பரப்புரை செய்யப்படுகின்றது. பாரதிய ஜனதா கட்சித் தலைவராக 2001-ம் ஆண்டு பங்காரு லஷ்மண் பதவி வகித்தார். அப்போது தெஹல்கா ஊடகமானது இங்கிலாந்து ஆயுத கம்பெனி பிரதிநிதிகள் போல பங்காரு லஷ்மணைச் சந்தித்து ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கான பேரத்தை நடத்தியது. அதை அப்படியே வீடியோவாகவும் படம் பிடித்தது. அதில் டெகல்கா குழு கொடுத்த ரூ1 லட்சம் லஞ்சப் பணத்தை பங்காரு லஷ்மண் வாங்கும் காட்சியும் இடம்பெற்றிருந்தது. பாஜகவின் பாபு போக்கிரியா லைம்டோன் சுரங்க வழக்கில் 54 கோடி கொள்ளையடித்த குற்றச்சாட்டும் உண்டு.

விக்கிலீக்ஸையும் விட்டு வைக்க வில்லை. 
மோடி ஊழற்றவர்.இந்தியாவில் நேர்மையான ஒரே அரசியல்வாதி’ என அமெரிக்கத் தூதுவர் அமெரிக்க அரசுக்கு செய்தி அனுப்பியதாக விக்கிலீக்ஸ் வெளிவிட்ட செய்தி என மோடியின் பரப்புரை குழு ஒரு செய்தி வெளிவிட்டது பின்னர் விக்கிலீக்ஸ் தாம் அப்படி எதையும் வெளிவிடவில்லை என மறுத்தது

வட இந்திய மாநிலமான உத்தரகாண்டில் பெரு வெள்ளம் ஏற்பட்ட போது மோடி அங்கு சென்று வெள்ளத்தில் மாட்டியவர்களை மீட்டார் என ஒரு பொய்ச் செய்தி வெளிவந்தமைக்கு மோடியின் பொய்ப் பரப்புரைக் குழுவினர் காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தியத் தேர்தலில் பரப்புரைகளின் உண்மைத் தன்மையை அல் ஜசீராவின் செய்தித் தலைப்பு படம் பிடித்துக் காட்டுகின்றது:
Paid news clouds India elections  - விலைகொடுத்த செய்திகள் இந்தியத் தேர்தலை மூடுகின்றன.

Saturday, 10 May 2014

என்ன இந்த மோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்?

இந்தியப் பொதுத் தேர்தலின் போது சாதி, தனிப்பட்ட தாக்குதல் என்பவற்றுடன் அதிகமாக அடிபட்ட சொற்தொடர் குஜராத் மாடல் பொருளாதாரம் ஆகும். நரேந்திர மோடி தான் முதலமைச்சராக இருந்த போது குஜராத் பொருளாதாரம் பெரு வளர்ச்சி கண்டதாகப் பரப்புரை செய்தார். மோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம் என்பது அடானி நிறுவனத்திற்கு ஒரு சதுட மீட்டர் நிலத்தை ஒரு ரூபாவிற்கு விற்பது என காங்கிரசுக் கட்சியினர் பரப்புரை செய்தனர்.

புளுகு மூட்டை என்கின்றார் முலாயம் சிங்
குஜராத் மாடல் வளர்ச்சி என்பது வெறும்  புளுகு மூட்டை. உத்தரப்பிரதேசத்துடன் (உ. பி) ஒப்பிடுகையிலும் எல்லா வகையிலும் குஜராத்  பின்தங்கிய மாநிலமாகவே உள்ளது. உ.பியை விட குஜராத்தில்தான்  அதிக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். டீசல், காஸ்  விலை உயர்வு, வே¬யில்லாத் திண்டாட்டம் குஜராத்தில் அதிகம் இப்படி மோடியின் குஜராத் மாடலை கடுமையாக விமர்சித்தார் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ். இவரின் மகன் உ. பியில் முதலமைச்சராக இருக்கின்றார்.

1960-ம் ஆண்டு உருவாக்கப்பட குஜராத் மாநிலத்தில் முப்பது ஆண்டுகளுக்கு மேல் காங்கிரசுக் கட்சியின் ஆட்சிதான் நடந்தது  1996-ம் ஆண்டில் இருந்து இன்றுவரை பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சி நடக்கின்றது. குஜராத் மக்கள் கடின உழைப்பாளிகள். அபிவிருத்தி அவர்களின் இரத்தத்தில் ஊறிய ஒன்று.

மற்ற மாநிலங்களுடன் குஜராத்தை ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா?
 மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு,  குஜராத் ஆகிய மாநிலங்கள் சிறப்பாகச் பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளன. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பையுடன் மற்ற மாநிலங்களை ஒப்பிடக் கூடாது என்றாலும். தமிழ்நாடும் குஜராத்தும் மஹாராஸ்ராவிலும் பார்க்க சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளன.
 முன்னணி மாநிலங்களில் குஜராத்தின் தனிநபர் வருமானம் சிறப்பாக இருக்கின்றது.









சிசுக்கள் இறப்பு விகிதம் தமிழ்நாட்டுடன் ஒப்பிடுகையில் மோசமானதாக் இருக்கின்றது







மோடியின் குஜராத்துடன் ஒப்பிடுகையில் நிதிஷ் குமாரின் பிஹார் சிறப்பான பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது. மோடிக்கு முன்னரே குஜராத் ஒரு சிறந்த பொருளாதார வளர்ச்சி  உடைய ஒரு மாநிலமாக இருந்தது.  ஆனால் பிஹார் இந்தியாவில் ஒரு பின் தங்கிய மாநிலமாக இருந்தது. மோடியின் பொருளாதாரக் கொள்கை சந்தைக்கு உகந்ததாக இருக்கின்றது. அதாவது முதலீடு செய்யும் முதலாளிகளுக்கு நல்ல வாய்ப்பைக் கொடுக்கின்ற பொருளாதார நிர்வாகம் மோடியினுடையது. ஆனால் நிதிஷ் குமாரின் நிர்வாகம் சமூக நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்கின்றது 1991-ம் ஆண்டிற்கும் 2001-ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் பிஹார் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 2.7% ஆக இருந்தது. இதை நிதிஷ் குமார் மூன்று மடங்காக உயர்த்தினார். அதே வேளை ஏற்கனவே ஒரு நல்ல வளர்ச்சி விழுக்காடான 7.5ஐக் கொண்டிருத குஜராத்தின் பொருளாதார வளர்ச்சியை மோடி 10.2 ஆக உயர்த்தினார்.  மோடியின் பொருளாதார வளர்ச்சி தேசிய வளர்ச்சியிலும் பார்க்க 1.4 விழுக்காடு மட்டுமே அதிகம் ஆனால் நிதிஷ் குமாரின் பொருளாதார வளர்ச்சி தேசியப் பொருளாதார வளர்ச்சியிலும் பார்க்க 2.5 விழுக்காடு அதிகமாக இருக்கின்றது



நிதிஷ் குமார் ஒரு மதசார்பற்ற முற்போக்கு சிந்தனை உடையவர். இருவரும் பெரிய அளவில் ஊழல் செய்யாதவர்கள் எனச் சொல்லலாம்

மோடியின் இரகசியம் என்ன?
டாட்டா நிறுவனம் தனது சிறிய ரக நனோ கார்களை முதல் மேற்கு வங்கத்தில் உற்பத்தி செய்யத் தொடங்கியது. அங்கு நிலப்பிரச்சனை ஊதியப் பிரச்சனையால் அதை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. ரதான் டாட்டவிற்கு மோடி தனது கைப்பேசியில் ஒரு குறுந்தகவல் அனுப்பினர்: குஜராத் உங்களை வரவேற்கின்றது என்று. இந்த இரண்டு சொற்களும் குஜராத்திற்கு அதிக அளவில் முதலீடுகளைக் கொண்டு வந்தன. முதலில் டாடா வர அதைத் தொடர்ந்து  போர்ட், பேர்ஜோ, மாருது சுசுக்கி போன்றமுன்னணிக் கார் உற்பத்தி நிறுவனங்கள் குஜாராதில் தமது உற்பத்திகளைத் தொடங்கினார். ரதான் டாட்டாவிற்குத் தேவையான காணியை மோடி ஒரு சில தினங்களுக்குள் ஒதுக்கிக் கொடுத்தார். முதலீட்டாளர்களுக்கு சிவப்பு நாடா இல்லை சிவப்புக் கம்பளமே இதுதான் மோடியின் தாரக மந்திரமாக இருந்தது இதுதான் மோடியின் இரகசியம்.மோடி தலைமை அமைச்சராக வரும் வாய்ப்பு உள்ளது என்றவுடன் இந்தியாவிற்கு முதலீடுகள் ஏற்கனவே பாயத் தொடங்கிவிட்டன. இந்திய ரூபாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. இந்தியப் பங்குச் சந்தைச் சுட்டேண் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

மோடியின் பொருளாதார ஆலோசகராக  அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர் அரவிந்த பரகாரியா அமர்த்தப் படலாம என எதிர் பார்க்கப்படுகின்றது.

மோடி தனது பொருளாதாரக் கொள்கைக்கும் முகாமைத்த்துவத்திற்கும் முன்னாள் பிரித்தானியத் தலைமை அமைச்சர் மார்கரெட் தட்சரையும் முன்னாள் சிங்கப்பூர் தலைமை அமைச்சர் லீ குவான்யூவையும் கொள்கின்றார். மோடி தட்சர் போல் ஒரு மோசமான வலதுசாரியாகத் திகழ்வரா என்பது ஒரு பெரும் கேள்வியாகும். ஆனால் மோடி குஜராத்தில் செய்த பல பொருளாதாரத் திட்டங்கள் மத்திய தர வர்க்கத்தினரின் நலன்களை மையப்படுத்தியதாகவே இருந்தன.

இந்தியாவில் மாநில அரசின் முகாமை வேறு மைய அரசின் முகாமை வேறு. உலகிலேயே மோசமான சிவப்பு நாடாவைக் கொண்ட அரசு இந்திய அரசாகும்.  இதை மோடி எப்படிச் சமாளிப்பார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Tuesday, 6 May 2014

நரேந்திர மோடி பற்றி சில தகவல்கள்

நரேந்திர தமோதரதாஸ் மோடி 13 வயதாக இருக்கும் போது அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு 17 வயதாக இருக்கும் போது அவருக்கு திருமணம் செய்யப்பட்டது. மனைவியின் பெயர் ஜசோதா பென். மூன்று ஆண்டுகளின் பின்னர் மனைவியைப் பிரிந்து இமயமலைக்குச் சென்ற மோடி பின்னர் மனைவியிடம் திரும்பிவரவில்லை.

மோடி தாய்மீது மிகுந்த பற்றுள்ளவர்.

மோடி பிறந்த திகதி 17-09-1950. அவரது நட்சத்திரம் அனுசம். அவருக்கு இப்போது ஏழரைச் சனி நடக்கின்றது.  ஆறு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் மோடி மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார். பிறந்த இடம் மேஷானா மாவட்டத்தில் வத்நகர் என்னும் இடத்தில். அப்போது இந்த மாவட்டம் மஹாராஸ்ட்ரா மாநிலத்துடன் இணைந்திருந்த குஜாராத்தில் இருந்தது.

இளவயதில் மோடிக்கு சந்நியாசிகளையும் சந்நியாசத்தையும் பிடிக்கும்.வயதில் தொடரூந்து நிலையத்தில் தேநீர் விற்றவர் மோடி. இமயமலையில் இருந்து திரும்பிய பின்னர் தனது சகோதரருடன் இணைந்து அஹமதாபாத்தில் அரச பேரூந்துப் பணிமனையில் ஒரு தேநீர் கடை நடாத்தினார் மோடி.

மோடி மாமிசம் உண்பதில்லை. மது அருந்துவதில்லை. புகைப்பிடிப்பதில்லை. நவராத்திரியின்போது ஒன்பது நாளும் மோடி விரதம் இருப்பார். அப்போது ஒருநாளில் ஒரு பழம் மட்டுமே சாப்பிடுவார்.

1965-ம் ஆண்டு நடந்த இந்திய பாக்கிஸ்த்தான் போரின் போது 15வயதாக இருந்த மோடி தன்னை இந்தியப் படையின் தொண்டராகப் பதிவு செய்து கொண்டார்.

இந்திரா காந்தியின் அவசர நிலைப் பிரகடனத்தின் போது ஜெயப்பிரகாஸ் நாராயணனுடன் இணைந்து செயற்பட்டார். அப்போது அவர் கைது செய்யப்படுவதில் இருந்து தப்ப தலைமறைவாக இருந்தார்.

2009-ம் ஆண்டு நடந்த தேர்தல் வேட்பாளர் மனுப்பத்திரத்தில் தன்னை திருமணமாகாதவர் எனக் குறிப்பிட்ட மோடி 2014-ம் ஆண்டு தேர்தல் பத்திரத்தில் தன்னை திருமணமானவர் எனக் குறிப்பிட்டார். மனைவியின் சொத்துப் பற்றிய கேள்விக்கு அவர் பதில் எழுதவில்லை.

மோடியின் சாதி OBC(other backward class) மற்றத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் எனப்படுகின்றது.

மோடிக்கு சுவாமி விவேகாநந்தரை மிகவும் பிடிக்கும். 

மோடி ஒரு கவிஞர்.  சிறந்த பேச்சாளர். நிறைய நகைச்சுவை உணர்வுள்ளவர். மோடி ஒரு புகைப்படக் கலைஞர். ஒரு புகைப்படக் கண்காட்சி கூட மோடி நடாத்தியுள்ளார். குஜராத் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவனாக முதுமானிப் பட்டம் பெற்றவர் மோடி, அவர் கடின உழைப்பாளி. நாளொன்றிற்கு நான்கு மணித்தியாலம் மட்டுமே அவர் தூங்குவார்.

2001-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மோடி குஜராத் மாநில முதலமைச்சரானார். இன்றுவரை அப்பதவியிலேயே இருக்கின்றார்.

மோடியை பாரதிய ஜனதாக் கட்சியின் இணை அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஸத் அமைப்பினருக்கு பிடிக்காது. 

2002-ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கொலை குஜராத்தில் நடந்தது.  மம்தா பனர்ஜீயின் கட்சியினர் மோடியை குஜராத்தின் கசாப்புக்கடைக்காரர் என்றனர். 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த இனக்கொலையைத் தொடர்ந்து மோடி பதவி விலகவேண்டும் என்றார் கருணாநிதி.

தனது உருவத்திலும் தோற்றத்திலும் மோடி அதிக கவனம் செலுத்துவார். இதன் இரகசியம் மோடி அமெரிக்காவில் மூன்று மாதம் Public relations and Image management என்னும் கற்கை நெறி பயின்றவர்.மோடியின் தோற்றத்தில் பல நடுத்தர  பெண்களுக்கு விருப்பம் உண்டு எனப்படுகின்றது. 

மோடி தனது தேர்தல் பரப்புரையை மிகவும் நவீனமயபப்டுத்தியுள்ளார். அவரது கட்சியினர் பல்லாயிரம் பேர் கடந்த சில ஆண்டுகளாக இணையவெளியில் மோடி பற்றி சிறந்த பரப்புரை செய்து வருகின்றனர். மோடியின் பர்ப்புரைப் பொறு உறங்குவதில்லை. இவர்கள் பல பொய்ப்பரப்புரைகளும் செய்வதுண்டு எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. உத்தரகாந்த் மாநிலத்தில் 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அகப்பட்ட 15000குஜராத்தியர்களை மோடி சென்று மீட்டு வந்ததாகப் பொய்ப்பரப்புரை செய்ததாக குற்றம் சாட்டப்படுகின்றது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...