Sunday, 18 May 2014

எரிபொருள் அரசியலின் கருப்பொருளும் அமெரிக்காவின் கரிப்பொருளும்

கடந்த நூறு ஆண்டுகளாக எரிபொருள் பிரச்சனை பெரும் பிரச்சனையாகத் தொடர்கின்றது. மசகு எண்ணெய்க்கான மாற்று வழிக்கான தேடலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. எண்ணெய் இன்றி வயல்கள் உழ முடியாது. விளைபொருட்களை எடுத்துச் செல்ல முடியாது. தொழிற்சாலகளில் பொறிகள் இயங்காது. மக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாது. இது எங்கும் தேவைப்படுவது. தட்டுப்பாடானது. மாற்றீடு பெருமளவில் இல்லாதது. உலகம் உடல் என்றால் எரிபொருள் குருதி போன்றது. அதன் தங்கு தடையற்ற ஓட்டம் உலகத்திற்கு அவசியம்.

எரிபொருள் பாதுகாப்புக் கையிருப்பு
அமெரிக்காவில் மட்டும் நாளொன்றிற்கு இரண்டு கோடி பீப்பாய் எண்ணெய்கள் பாவிக்கப்படுகின்றன. உலகில் எண்ணெயின் இருப்பு, உற்பத்தி, விநியோகம் ஆகியவை முக்கியமானதாகும். ஐக்கிய அமெரிக்கா, ஒஸ்ரேலியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடன் மேலும் 24 ஐரோப்பிய நாடுகள் இணைந்து உலக எரிபொருள் திட்டம் ஒன்றை உருவாக்கி 90 நாட்களுக்குத் தேவையான எரிபொரளை எப்போதும் ஒரு பாதுகாப்புக் கையிருப்பாக வைத்திருக்க ஒத்துக் கொன்டன. மற்ற ஆசிய நாடுகள் இதில் இணையவில்லை. சீனா தனக்கென ஒரு கையிருப்பை ஏற்படுத்திக் கொன்டது. வேகமாக வளரும் இந்தியா இதில் கவனம் செலுத்தவில்லை.

எரிபொருள் இல்லாமல் வல்லரசுகள் இல்லை. பன்னாட்டு வாணிபமும் இல்லை.1900ம் ஆண்டு உலக எரிபொருள் தேவையின் 55விழுக்காட்டை நிலக்கரி உற்பத்தி திருப்தி செய்தது. எண்ணெயும் எரிவாயுவும் அப்போது 3 விழுக்காடு பாவனைதான். நூறு ஆண்டுகள் கழித்து உலக எரிபொருள் பாவனையில் நிலக்கரி 25விழுக்காடு, இயற்கை வாயு 23 விழுக்காடு, எண்ணெய் நாற்பது விழுக்காடு. 2000ம் ஆன்டு நாளொன்றுக்கு ஏழரைக்கோடி பீப்பாய்களாக இருந்த உலக எண்ணெய்க் கொள்வனவு 2030ம் ஆண்டு இருமடங்காகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எரிபொருள் உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து.
தற்போது உலகெங்கும் உள்ள அரசியல் பிரச்சனைகளால் நாளொன்றிற்கு முப்பத்தைந்து இலட்சம் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டின் நடுப்பகுதியில் லிபியாவின் எண்ணெய் உற்பத்தியில் எண்பது விழுக்காடு பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானிற்கு எதிரான பொருளாதாரத் தடையால் ஈரானின் பெரும்பகுதி எண்ணெய் சந்தைக்குப் போவதில்லை. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி நாளொன்றிகு 15 இலட்சம் பீப்பாய்களால் குறைந்துள்ளது. நைஜீரியாவில் உள்ள அரசியல் பிரச்சனைகளாலும் அங்கு நடக்கும் திருட்டுக்களாலும் நாளொன்றிற்கு மூன்று இலட்சம் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக அளவு எண்ணெய் இருப்பைக் கொண்ட வெனிசுவேலாவில் எண்ணெய் உற்பத்தியில் சரியான முதலீடு இன்றி சரியாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. உலகிலேயே அதிக அளவு எரிவாயுவையும் எண்ணெயையும் உற்பத்தி செய்யும் இரசியாவிற்கு எதிராக ஈரானில் மீது விதிக்கப்பட்டது போன்ற மிக இறுக்கமான பொருளாதாரத் தடையை ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் விதிக்கும் அபாயம் உண்டு.

எண்ணெய் விநியோகம்: கவலைப்படும் சீனாவும் கருத்தில் கொள்ளாத இந்தியாவும்!
உலகின் எரிபொருள் விநியோகம் தடையின்றி நடப்பதற்கு பலநாடுகளும் தமது பாதுகாப்புச் செலவில் பெரும்பகுதியை ஒதுக்கியுள்ளன. உலகிலேயே அதிக அளவு கடற்படைக்கப்பல்கள் நடமாடும் பகுதியாக மத்திய தரைக்கடல் இருக்கின்றது ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய அமெரிக்காவும் தமக்கான எரிபொருள் விநியோகம் தடையின்றி நடப்பதை உறுதி செய்துள்ளன. உலகிலேயே எரிபொருள் விநியோகத் தடையால் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக ஆசிய நாடுகள் இருக்கின்றன. எரிபொருள் பாவனையைப் பொறுத்த வரை சீனா உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாகும். சீனாவின் இருப்பிற்கு தடையற்ற எரி பொருள் வழங்கல் முக்கிய மாகும். சீனா தனக்கான எரிபொருள் வழங்கு பாதையை பல மாற்றீடு வழிகள் மூலம் பூர்த்தி செய்ய முயற்சிக்கிறது. மலாக்கா நீரிணை, ஹோமஸ் நீரிணை, செங்கடல் ஆகிய கடற்பிராந்தியங்களில் வைத்து சீனாவிற்கான எரிபொருள் விநியோகங்கள் தடை செய்யப் படலாம். இதற்கு மாற்றீடாக சீனா மியன்மார்(பர்மா) ஊடாக ஒரு தரைவழி எரிபொருள் விநியோகம் செய்யும் வழியைத் திறக்க முயல்கிறது. அடுத்த மாற்றீடாக பாக்கிஸ்த்தானின் குவாடர் துறைமுகத்தில் இருந்து பாக்கிஸ்த்தானூடாக ஒரு தரைவழி எரிபொருள் விநியோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த பாக்கிஸ்தானூடான விநியோகத்தில் இன்னும் ஒரு மாற்றீடாக ஆப்கானிஸ்தானூடான இன்னும் ஓர் எரிபொருள் விநியோகப் பாதையை சீனா உருவாக்க விரும்புகிறது. ஆப்கானிஸ்த்தானின் அமு தர்யா பள்ளத்தாக்கில் எரிபொருள் ஆய்வுப் பணியையும் சீனாவின் China National Petroleum Corp நிறுவனம் செய்கிறது.  சீனா பொருளாதார ரீதியில் ஆப்கானைச் சுரண்டுவதை அமெரிக்கா விரும்புகிறது. சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் அது அமெரிக்காவிற்கும் நன்மையாகும். சீனா அமெரிக்காவின் மூன்றாவது பெரிய சந்தையாகும். இதனால் சீனப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் அமெரிக்காவின் உற்பத்தித் துறை, விவசாயத் துறை, சேவைத் துறை ஆகியவற்றின் சீனாவிற்கான ஏற்றுமதி அதிகரிக்கும். ஆசியாவிற்கான எரிபொருள் விநியோகத்தில் 40 விழுக்காடு ஹோமஸ் நீரிணையூடாக நடைபெறுகின்றது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அமெரிக்கா தனது ஐந்தாவது கடற்படைப் பிரிவை அங்கு நிலைகொள்ளச் செய்வதுடன் பல நாடுகளுடன் இணைந்து அங்கு அடிக்கடி படை ஒத்திகையும் செய்யும். தனக்கான எரிபொருள் தொடர் விநியோகத்தை உறுதி செய்ய இந்தியா எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

எண்ணெய் விலையைச்சரிக்கும் அமெரிக்காவின் கரிப்பொருள்
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து உலக எரிபொருள் விலையில் சீனாவினதும் இந்தியாவினதும் கொள்வனவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. 2008ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார நெருக்கடிக்கு இதுவும் ஒரு காரணியாக அமைந்தது. ஈரான், இரசியா, நைஜீரியா, வெனிசுவேலா, ஆகிய நாடுகளில் பிரச்சனை ஏற்பட்ட போதும் அண்மைக்காலங்களாக எரிபொருள் விலை வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக உறுதியாக இருந்த எண்ணெய் விலை 2014ம் ஆண்டு ஏப்ரம் மாதம் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 110 டொலர்களாக இருந்து  மே மாதம் 6ம் திகதி 107 டொலர்களாகக் குறைந்தது. இது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. இதன் பின்னணிச் சூத்திரதாரியாக அமெரிக்கா இருக்கின்றது. 2011ம் ஆண்டு அரபு வசந்தம் ஆரம்பித்ததில் இருந்து அமெரிக்கா தன்னிடம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஷேல் என்னும் திண்ம எரிவாயு உற்பத்தியையும் ஏற்றுமதியையும் சடுதியாக அதிகரித்தது.  அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள ஷேல் என்னும் கரிப்பொருள் இப்போது உலகச் சந்தையில் எரி பொருள் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக எரிபொருள் விலையை அமெரிக்கா உலகச் சந்தையில் உறுதியாக வைத்திருந்தது. சீனாவினதும் இந்தியாவினதும் அதிகரித்த எரிபொருள் கொள்வனவால் உலகில் எரிபொருள் விலை அதிகரித்த போது இரசியாவே பெரிதும் பயனடைந்தது. தன் ஏற்றுமதி வருமானத்தை வைத்து உலக அரங்கில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் வலிமையை இரசியா பெற்றது. அது உக்ரேனில் வாலாட்டத் தொடங்கியவுடன் அமெரிக்கா தனது காய்களை நகர்தத் தொடங்கியது. ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 120 டொலர்களுக்கு மேல் இருப்பது இரசியாவிற்குப் பெரிதும் வாய்ப்பாகும். இதை விழுத்த அமெரிக்காவும் கனடாவும் தமது திண்ம எரிவாயு உற்பத்தியை அதிகரித்தன. உக்ரேனில் நிலைமை உக்கிரமடைந்தால் உலகச் சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் ஏறும் அபாயம் உண்டு. பின்னர் எண்ணெய் விலை 70 டொலர்கள்வரை குறையலாம். இது இரசியாவின் முதுகெலும்பிற்கே ஆபத்தாக அமையலாம்.





என்ன இந்த ஷேல் எரிவாயு?
ஷேல் எரிவாயு என்பது ஷேல் எனப்படும்  களிமண் பாறைகளிடையே காணப்படும் (பெரும்பாலும் மீதேன்) வாயுவாகும். மற்ற வாயுக்கள் துளைக்கக் கூடிய பாறைகளுக்குள் இருந்து எடுக்கப்படும் வாயுவாகும். ஷேல் வாயு துளைக்கக் கடினமான பாறைகளுக்கிடையில் இருக்கும். நீர் மூலம் துளையிடல் (hydraulic fracturing) என்னும் முறைமையைப் பயன்படுத்தி பாறைகளைத் துளைத்து ஷேல் வாயு அகழ்ந்து எடுக்கப்படும். 

ஷேல் வாயு அரசியல்
இரசியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு உக்ரேனூடாக செய்யப்படும் எரிவாயு விநியோகத்தைக் குழப்பி ஐரோப்பாவிற்கு அமெரிக்காவில் இருந்து ஷேல் வாயுவை ஐரோப்பாவிற்கு விநியோகிக்க அமெரிக்க ஷேல் வாயு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் முயல்கின்றன. இதனால் உருவானதுதான் உக்ரேன் பிரச்சனை என்கின்றது இரசிய ஊடகம் ஒன்று. அமெரிக்கத் துணைக் குடியரசுத் தலைவரின் மகன் ஹண்டர் பிடன் உக்ரேனின் தனியார் எரிவாயு நிறுவனமான பரிஸ்மா ஹோல்டிங் இன்   இயக்குனர் சபைக்கு அண்மையில் நியமிக்கப்பட்டதை ஆதாரமாக அந்த இரசிய ஊடகம் குறிப்பிடுகின்றது. அத்துடன் துணை அதிபர் ஹண்டர் பிடனுக்கும் அமெரிக்க அரசத் துறைச் செயலர் ஜோன் கெரியின் பெறா மகனுக்கும் உள்ள தொழில் முறைத் தொடர்புகளை அம்பலப்படுத்தியுள்ளது பிரித்தானிய கார்டியன் பத்திரிகை. இரசியாவிற்கும் உக்ரேனிற்கும் இடையிலான பிரச்சனையால் உக்ரேனில் எரிபொருள் விலை கடும் அதிகரிப்பைக் கண்டது. இதனால் உள் நாட்டில் எரிபொருள் வாயு உற்பத்தி செய்யும்  பரிஸ்மா ஹோல்டிங் நிறுவனம் பெரும் இலாபம் ஈட்டுகின்றது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...